மணிப்புறாவும் மாடப்புறாவும்-11

அத்தியாயம் 11

சுப்ரியா காலையில் ஜாகிங் முடித்துவிட்டு வீட்டுக்கு வெளியில் இருந்த பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள். காபி கலந்து எடுத்துவந்து அதை பருகிக்கொண்டே தி ட்ரூத் பத்திரிக்கையில் அன்று அவள் எழுதியிருந்த கட்டுரையை படித்துக்கொண்டிருந்தாள்.

காவல்துறை அதிகாரிகளின் வரம்புமீறிய அட்டகாசம் பற்றி எழுதப்பட்ட கட்டுரை அது. சென்னையில் இருந்த ஒரு நகரில் குடி தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டிருக்க, தடியடி நடத்தி போலீசார் அந்த கூட்டத்தை கலைத்து அப்புறப்படுத்தினர். ஏழை மக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட அராஜகம் செய்யும் போலீஸ் அதிகாரிகளால் நிராகரிக்கப்படுகின்றன என எழுதியிருந்தாள். இந்த சம்பவத்திற்கு சரவணபாண்டியன் ஐபிஎஸ் தான் பொறுப்பு எனவும் குறிப்பிட்டிருந்தாள். அந்த அதிகாரி வயதான பெண்மணி ஒருவரை அடிக்கும் காட்சியும் படத்துடன் போடப்பட்டிருந்தது.

அழைப்பு மணி ஒலிக்க, கதவைத் திறந்தாள். கையில் தி ட்ரூத் தினசரியுடன் ஆடவன் ஒருவன் நின்றிருந்தான். அவனுடைய ஹேர்ஸ்டைலை வைத்து போலீஸ் என்று சுப்ரியா அறிந்துகொண்டாள். புருவம் சுருக்கி உற்றுநோக்க, அவன் யார் என்று தெரிந்தது. சரவண பாண்டியன் ஐபிஎஸ்.

“என்ன வேண்டும்?” எனக் கேட்டாள் சுப்ரியா.

அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான். வந்தவன் தினசரியை அவள் முன்பு விசிறி அடித்தான்.

“என்ன இது?” என கேட்டான்.

“என்ன இது…? இதை நான் தான் கேட்கணும். நீங்க எதா இருந்தாலும் ஆஃபீஸ்ல வந்து பேசுங்க. உங்க அராஜகத்தை என் வீட்டிலேயும் வந்து காட்டாதீங்க” என்றாள்.

“ஆடி அசைஞ்சு 10 மணிக்கு நீ ஆஃபீஸ் போவ. எனக்கு அதுவரை பொறுமையா இருக்க முடியாது. என்ன நியூஸ் இது?”

“ஏன் உங்களுக்கு படிக்க தெரியாதா? உண்மைதானே எழுதி இருக்கேன்”

“என்ன உண்மை? பெர்மிஷன் வாங்காம திடீர்னு ரோட்டில் உட்கார்ந்து மறியல் பண்ணினா….? சென்னையிலே எவ்ளோ ட்ராஃபிக் ஆகும்னு தெரியும்தானே? பேசிப் பார்த்தும் யாரும் கலைஞ்சு போகலை. அதனால லேசா தடியடி நடத்த வேண்டியதா போச்சு. அங்க வயலன்ஸ் எதுவும் நடக்கலை. அவங்களை சும்மா மிரட்டுறதுக்காக நடந்தது. அதை பெரிய விஷயம் மாதிரி எழுதி இருக்க?” எனக் கேட்டான்.

“முதல்ல நீங்க என்னை நீ வா போன்னு பேசுறதை நிறுத்துங்க. தண்ணி வரலைன்னு கஷ்டத்துல இருக்கிறவங்க மனு கொடுத்து பெர்மிஷன் வாங்கி அப்புறம் எல்லாம் போராட்டம் நடத்த முடியாது. அவங்க கஷ்டம் அவங்களுக்குதான் தெரியும். அப்படி செய்ய போய்தானே இப்போ ப்ராப்ளம் இல்லாம தண்ணி கிடைக்குது”

“அப்புறம் லேசா தடியடி நடத்துனீங்களா? நானும் பலமான தடியடி நடந்ததா எழுதலையே…? தடியடி நடந்துச்சுன்னு தானே எழுதி இருந்தேன். நீங்க அடிச்சீங்களே அந்த அம்மா… அவங்களுக்கு என்ன வயசு இருக்கும் தெரியுமா?”

“நான் அவங்களை அடிக்க எல்லாம் இல்லை. ஓவரா பேசுனாங்க. போகலைனா அடிப்பேன்னு சொல்லி மிரட்ட தான் செஞ்சேன். அடிக்கலை, வேணும்னா அந்த அம்மாகிட்ட போய் விசாரி. அந்த அம்மாவை மிரட்ட கை ஓங்கினத போட்டோ எடுத்துப் போட்டு நான் அடிச்சிட்டதா எழுதுவியா?” என்றான்.

“ஓ… அப்போ கை ஓங்கினா தப்பில்லையா? போலீஸ் யூனிஃபார்ம் போட்டா நீங்க உடனே பெரிய கிங் ஆகிடுவீங்களா? 50 வயசு அம்மா. தண்ணி இல்லாம அவங்க பட்ட கஷ்டம் என்னவோ? ஆதங்கத்தில் ரெண்டு வார்த்தை பேசினா கை ஓங்குவீங்களா? உங்க அம்மாகிட்ட யாராவது அப்படி செஞ்சா..?” என சுப்ரியா கேட்க, சரவணனுக்கு சுர்ரென்று கோவம் தலைக்கேறியது.

“என் அம்மாவை பத்தி பேசின செவுளு கிழிஞ்சிடும்” என அவளை பார்த்து கை ஓங்கினான். சுப்ரியாவுக்கும் ஆத்திரம் அதிகமானது.

“நீ எல்லாம் போலீசா? ஆ.. ஊ ன்னா கை நீட்டுற? உன் அம்மான்னா கோவம் வருது. அடுத்தவங்க அம்மான்னா சும்மாவா? எல்லாரும் ஒன்னுதான். அந்த அம்மாவுக்கு எவ்வளவு மன உளைச்சல் இருந்திருக்கும். அவங்க எளிமையானவங்க அப்படிங்கறதால உங்க வீரத்தை அங்க காட்டுனீங்க. இதே பெரிய வீட்டு குடும்பத்தை சேர்ந்த பெண்கள் யாராவது ரெண்டு வார்த்தை என்ன… பத்து வார்த்தை பேசினா கூட பொறுத்துக்கிட்டு போவீங்கதானே…? வந்துட்டாரு தனியா இருக்கிற பொண்ணுகிட்ட வீரத்தைக் காட்ட” என்றாள்.

“தனியா இருக்கியா… ஏன் உன் பேரண்ட்ஸ் எங்கே?” என கேட்டான்.

“முதல்ல வெளியில போங்க, இல்லைனா போலீசை கூப்பிடுவேன்” என்றவள் எரிச்சலுற்று “வெளியில போங்க” என்றாள்.

சுப்ரியா போலீசை கூப்பிடுவேன் என்று அவசரத்தில் சொல்லியதையும், பின்பு எரிச்சல் பட்டதையும் ரசித்தவன் வெளியே செல்ல திரும்பி நடந்தான். கதவு வரை சென்றவன், நின்று திரும்பிப் பார்த்து “சாரி” என்றான்.

“உண்மையிலேயே பண்ணினது தப்புன்னு தெரிஞ்சா அந்த அம்மா கிட்ட போய் சாரி கேளுங்க” என்றாள். அவன் வெளியே சென்று விட்டான்.

“காலையிலேயே என் மூடை கெடுக்க கிளம்பி வந்துட்டான்” என புலம்பிக்கொண்டே அலுவலகம் செல்ல தயாராக ஆரம்பித்தாள்.

அன்று அஜந்தா கெமிக்கல் தொழிற்சாலை வழக்கு நீதிமன்றத்தில் நடக்க இருந்தது. தயாராகி செல்வதற்காக வெளியில் வந்தான் இன்பா. செடிகளுக்கு ஹோஸ் பைப் மூலம் நீர் பாய்ச்சி கொண்டிருந்தாள் தர்ஷினி. அவளைப் பார்த்து ஆசையாக சிரித்தான் இன்பா. என்ன அதிசயம்? பதிலுக்கு அவளும் ஆசையாக சிரிக்க, ஒரு நொடி கிறங்கித்தான் போனான். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தி விட்டு, இன்பாவை குளிப்பாட்டினாள்.

தயாராகி இருந்தவன் முழுவதும் நனைந்தான். “கோவம் வந்து என்னை திட்டனும் போல இருக்கா இன்பா? அப்படி இருந்தா திட்டிடு” என்றாள்.

அவள் அருகில் வந்தவன், முகத்தில் இருந்த தண்ணீரை வழித்து அவள் முகத்தில் தெளித்தான். “நீ என்ன பிளான் பண்றேன்னு தெரியாத அளவுக்கு முட்டாளாடி நான்? இப்படி எல்லாம் பண்ணி இன்னைக்கு என்னை கேஸ் அட்டெண்ட் பண்ண விடாம செய்யணும். நான் கோவப்பட்டு உன்னை கத்தணும். நம்ம ரெண்டு பேருக்கும் சண்டை வந்து, இன்னைக்கு நைட்டு ஒன்னும் நடக்காமல் போகணும். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா”

தர்ஷினி அவனை பார்த்து சிரித்துக்கொண்டே நின்றிருந்தாள். பதில் எதுவும் கூறவில்லை. “நீ எத்தனை கல்லு விட்டெறிஞ்சாலும், எந்த மங்காவும் விழப் போறது இல்லை” என்றான்.

“ஐயையோ… ரொம்ப கஷ்டமா இருக்கே லாயர் சார்… இப்ப என்ன பண்றது?” என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள். இன்பா சுற்றுமுற்றும் பார்க்க, அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை உணர்ந்து கொண்டவள், சரியாக அவன் நெருங்கி வரும் பொழுது, சட்டென நகர்ந்தாள். தர்ஷினிக்கு முத்தமிட வந்து, அவள் நகர்ந்து விடவும், பேலன்ஸ் தவறி விழப் பார்த்து, கடைசி நொடியில் சுதாரித்ததால் விழாமல் நின்றான். அவள் கையில் இருந்த ஹோஸ் பைப்பை பிடுங்கி அவளை முழுவதும் நனைத்தான்.

தர்ஷினியோ கோவம் கொள்வதற்கு பதிலாக, கைகளை விரித்து உற்சாகமாக நனைந்தாள்.

வெளியே வந்த லட்சுமி, “போர்ல தண்ணி ரெண்டடி கீழ போயிட்டாம். இப்படியே போச்சுன்னா தண்ணி வருமா வராதான்னா தெரியல. இதுல எவ்வளவு தண்ணிய ரெண்டு பேரும் வேஸ்ட் பண்றீங்க?” என கத்திக் கொண்டே மோட்டார் சுவிட்ச்சை ஆஃப் செய்தார்.

மீண்டும் தயாராக இருவரும் உள்ளே சென்றனர். இன்பாவின் அறையில் மட்டும்தான் அட்டாச்டு பாத்ரூம் இருக்கும். அதைத் தவிர, பின்கட்டில் இன்னொரு குளியலறையும் கழிவறையும் இருந்தது. இன்பாவுக்கு முன்னால் அறையிலிருந்த குளியலறைக்கு சென்று கதவை அடைத்துக்கொண்டாள் தர்ஷினி. மற்றொரு குளியலறையில் சாரங்கபாணி குளித்துக் கொண்டிருந்தார்.

“செய்டி செய். நாள் முழுக்க என்ன பாத்ரூமிலேயே உட்கார்ந்து இருக்க போறியா என்ன?” என சத்தமிட்டான். அதற்குள் இன்பாவின் தந்தை குளித்து வந்துவிட, அங்கு போய், நன்றாக தண்ணீரை உடலில் ஊற்றிக்கொண்டு, அறைக்கு வந்து உடை மாற்றிக் கொண்டான்.

“இன்னும் குளிக்கலையாடி நீ? நீ குளிச்சிட்டு வர்றதுக்குள்ள நான் கோர்ட்டுக்கு போய்டுவேன் போல. ரொம்ப நேரம் தண்ணியில நிக்காத… ஜன்னி வந்திட போகுது. என்னோட நைட் பிளான் எல்லாம் கெட்டு போயிடும். சீக்கிரம் வா” என குரல் கொடுத்தான்.

முடிந்தவரை நேரத்தை இழுத்து, மெதுவாகவே குளித்து முடித்தாள். இன்பாவிற்கு முன் குளியலறை செல்ல வேண்டுமென வேகமாக வந்தவள், துண்டை எடுத்து வர மறந்ததிருந்தாள்.

“டவல் எடுத்துட்டு வர மறந்துட்டேன், ப்ளீஸ் கொஞ்சம் என் டவலும், நைட்டியும் எடுத்து கொடேன்” என கேட்க,

‘மாட்டினியா….’ என நினைத்து கொண்டே இரண்டையும் எடுத்தவன் குளியலறை கதவை தட்டினான். லேசாக கதவு திறந்து கையை மட்டும் வெளியே நீட்டினாள். துண்டை மட்டும் கையில் கொடுத்தான். வாங்கிக் கொண்டவள், “நைட்டி எங்கடா?” என கேட்டாள்.

“கதவை நல்லா திற, தரேன்” என்றான்.

கதவைத் திறந்தவள், பட்டென அவன் கண்களை தன் கை கொண்டு மூடி, நைட்டியை பிடுங்கிக் கொண்டு, கதவை சாத்தினாள். மின்னல் வேகத்தில் நடந்திருந்தது. இன்பா என்ன நடந்தது என யோசித்தான். அவளை பார்த்த மாதிரியும் இருந்தது… பார்க்காத மாதிரியும் இருந்தது. ஒன்றும் விளங்கவில்லை.

“படத்துல வர்ற ஹீரோயின் எல்லாம், இப்படி சீன் வந்தா வெட்கப்பட்டுகிட்டு அவங்க கண்ணை மூடிக்குவாங்க. இது எவ்ளோ விவரமா என் கண்ணை மூடுது பாரு” என புலம்பியவன், ‘மரியாதையா அவள் வெளியில் வரதுக்கு முன்னாடி ஜுட் விட்டுடு. இல்லைனா வேற ஏதாவது பண்ணுவா’ என்ற தன் மனசாட்சியின் எச்சரிக்கைக்கு செவிமடுத்து விரைவாக வீட்டிலிருந்து கிளம்பினான்.

பிரபஞ்சன் வீட்டிற்கு சென்றான். “எத்தனை மணிக்கு வர சொன்னா எத்தனை மணிக்குடா வரடா…?” என கடிந்து கொண்டே, அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கோப்பு ஒன்றை நீட்டினார். அந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலை மூடப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தொழிற்சாலையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து எழுதி கையெழுத்திட்டு இருந்த கோப்பு அது.

“ஃபர்ஸ்ட் கேஸே இதுதான். ஒரு பத்து நிமிஷம் இருக்கியா? என்னோட கார்லேயே போய்டலாம்” என கேட்டார்.

“இல்லை மாமா. நான் முன்னாடி போயிடுறேன்” என கூறிவிட்டு, அந்தக் கோப்பையும் எடுத்துக்கொண்டு வண்டியில் நீதிமன்றம் கிளம்பினான். இன்பா நீதிமன்றத்தை நெருங்கிக் கொண்டிருக்க, அவனுடைய கைப்பேசி அழைத்தது. வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு எடுத்துப் பார்த்தான். தர்ஷினியின் எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

‘என்னடா இது அதிசயமா எனக்கு கால் பண்றா?’ என எண்ணிக்கொண்டே அழைப்பை ஏற்றான்.

“சார் இந்த ஃபோன் வச்சிருக்கிற பொண்ணுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு. பூந்தமல்லியில் இருக்க ஜி ஹெச் ல அட்மிட் பண்ணியிருக்கோம். சீக்கிரம் வாங்க” என்று ஒரு ஆண் குரல் ஒலித்தது.

இவன் “ஹலோ ஹலோ” என மீண்டும் பேச முனைய, அழைப்பு முடிந்திருந்தது. மீண்டும் தர்ஷினியின் எண்ணுக்கு தொடர்பு கொள்ள, அணைக்கப்பட்டு இருப்பதாக செய்தி வந்தது.

‘தர்ஷினி விளையாடுறாளா…? இல்லை உண்மையிலேயே ஏதாவது ஆகி இருக்குமா?’ என குழம்பிப் போனான்.

அம்மாவுக்கு பேச தர்ஷினி கிளம்பி விட்டதாக கூறினார். நசீருக்கு அழைத்து பேசினான். தர்ஷினி இன்னும் அலுவலகம் வரவில்லை என கூறினானன். இன்பாவுக்கு பதட்டமானது. அவள் கோர்ட் செல்லவிடாமல் தடுக்க இவ்வாறு செய்கிறாள் என சந்தேகம் இருந்தாலும், அப்படியே விட்டுவிட மனமில்லை. வண்டியை திருப்பிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். காலை நேர சென்னை டிராஃபிக்கில் முடிந்த அளவு விரைவாக வண்டியை செலுத்தி மருத்துவமனைக்கு வந்து விட்டான். அவசர சிகிச்சை பிரிவில் சென்று விசாரித்தான்.

“ஆமாங்க… காலையிலேயே ஒரு ஆக்சிடெண்ட் கேஸ். யாரு என்னன்னு தெரியலை. ஸ்பாட் அவுட். மார்ச்சுவரியில் பாடி இருக்கும் போய் பாருங்க” என விவரம் கூற, இன்பாவுக்கு உடம்பில் இரத்தம் எல்லாம் வடிந்தது போன்று இருந்தது.

‘அவளாக இருக்காது. இருக்கக்கூடாது’ என மனதிற்குள் அரற்றியவன் தள்ளாடும் தன் கால்களை சமாளித்து பிணவறையை நோக்கி நடந்தான். அவனுடைய கைப்பேசிக்கு அழைப்பு வர, கையில் எடுத்துப் பார்த்தான். பிரபஞ்சன்தான் அழைத்துக் கொண்டிருந்தார். அழைப்பை துண்டித்து விட்டு, பயந்துபோய் பிணவறையை நெருங்கிக் கொண்டிருக்க,

திடீரென அவன் முன்னால் தோன்றிய தர்ஷினி “ரொம்ப பயந்துட்டியா டா. இந்தா தண்ணி குடி” என தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.

அவள் தோள்களைப் பற்றியவன், “உனக்கு ஒன்னும் ஆகலையே…?” எனக் கேட்டான்.

“இதுவரைக்கும் ஒன்னும் ஆகலை. ஆனா உன்னோட பாவக்கணக்கு ஏறிக்கிட்டே போச்சுன்னா… சொல்ல முடியாது. உன் பொண்டாட்டிக்கு என்ன வேணா ஆகலாம்” என்றாள்.

முகத்தை அழுந்தத் துடைத்து கொண்டவன், பொது இடம் என்றும் பாராமல் தர்ஷினியின் கன்னத்தில் ஒரு அறை வைத்தான்.

நொடி கூட தாமதியாமல் திருப்பி கொடுத்த அறையால் இன்பாவின் கண்ணிலும் பூச்சி பறக்க வைத்தாள் தர்ஷினி. அடி விழுந்த கன்னத்தை பற்றிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான் இன்பா. கூட்டம் அதிகம் இல்லை என்றாலும், அங்கிருந்த ஓரிருவர் இவர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவள் கையை பிடித்து இழுத்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

“அறிவு இருக்காடி உனக்கு? உனக்கு என்னச்சோன்னு பயந்துபோய் எவ்வளவு ஸ்பீடா வந்தேன் தெரியுமா? எனக்கு எதுவும் ஆயிருந்தா என்ன பண்ணி இருப்ப?”

“ஹெல்மெட் போட்டுக்கிட்டுதானே வந்த? ஒண்ணும் ஆகி இருக்காது. கை கால் அடி பட்டிருக்கலாம். அப்படி எதுவும் ஆகியிருந்தா வீட்டோட வச்சு உன்னை நல்லா பார்த்துக்குவேன்” என்றாள்.

சிவந்து போயிருந்த அவளது கன்னத்தை பற்றியவன் “சாரி” என்றான்.

“இன்னொரு தடவை அடிச்சீன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன்” என விரல் நீட்டி மிரட்டினாள்.

அவனது கன்னத்தை அவளிடம் காட்டியவன், “நீ ரொம்ப ஒழுங்கு மாதிரி பேசாதடி” என்றான். அவள் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி குடித்தான்.

“என்ன இன்பா…? இப்பவாவது அந்தக் கேஸ்ல இருந்து விலகிக்குறேன்னு சொல்லு. இல்லன்னா இப்படித்தான் ஏதாவது பண்ணுவேன்” என்றாள். அவளை முறைத்துக் கொண்டே நேரத்தை பார்த்தான்.

“என்னடி நான் இல்லைன்னா கேஸ் நடக்காதா? இந்நேரம் மாமா அட்டெண்ட் பண்ணி இருப்பாரு” என்றான்.

“ஆமாம் உன் மாமாவே எல்லா பாவத்தையும் பண்ணட்டும். உன்னை செய்ய விடாம தடுத்தேன்தானே?” எனக் கேட்டாள்.

அவளைப் பார்த்து சிரித்த இன்பா, “ஒருதடவை ஏமாந்துட்டேன். திருப்பி திருப்பி உன்கிட்ட ஏமாற மாட்டேன்” என்றான்.

“அதையும் பார்ப்போம்” என்றாள் தர்ஷினி.

“நல்லா பாரு” எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான் இன்பா.

பிரபஞ்சன் நன்றாக திட்டினார். எதுவும் சொல்லாமல் திட்டுக்களை வாங்கிக் கொண்டான். பிரபஞ்சனே வாதாடி வாய்தா வாங்கி இருந்தார்.

பஷீரிடம் நடந்ததை சொல்ல, “தர்ஷினி இவ்வளவு பிடிவாதமா இருந்தா நீ தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்தா என்னடா? உன் மாமாகிட்ட பிரச்சினையை சொன்னா அவர் ஏத்துக்க மாட்டாரா?” எனக் கேட்டான்.

“அவ இதுல தலையிடறதே எனக்கு பிடிக்கலை. அவளை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்” என்று கூறினான்.

அன்று இரவு, சிறியவர்களை பத்மினியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் லட்சுமி. சிராஜ்நிஷா தர்ஷினிக்கு அலங்காரம் செய்துவிட்டாள். இன்பாவையும், தர்ஷினியையும் பூஜையறையில் சாமி கும்பிட செய்தனர்.

இருவரை மட்டும் விட்டுவிட்டு, லட்சுமி, சாரங்கபாணி இருவரும் கூட பத்மினியின் வீட்டிற்கு சென்று விட்டனர்.

தர்ஷினி இன்பாவின் அறைக்குள் சென்றாள். பலமுறை அந்த அறைக்கு சென்று இருக்கிறாள். இன்று வித்தியாசமாக உணர்ந்தாள். அவளைப் பார்த்ததும் அமர்ந்திருந்த இன்பா எழுந்து கொண்டான். வசீகரமாக சிரித்துக் கொண்டே அவளை நெருங்கி வர, அவனை நேராக நிமிர்ந்து பார்த்த தர்ஷினி, பால் சொம்பை அவனிடம் நீட்டி, “மொத்தத்தையும் நீயே குடிச்சிட்டு ஒழுங்கு மரியாதையா குப்புறப் படுத்து தூங்கு” என்றாள்.

“நான் குப்புற படுத்து தூங்கவா இவ்ளோ அலங்காரத்தோடு வந்திருக்க?” என கேட்டுக்கொண்டே தான் அணிந்திருந்த பட்டு வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இன்னும் நெருங்கினான்.

“கிட்ட வராதடா” என்றாள் தர்ஷினி.

“வந்தா என்னடி பண்ணுவ…? கத்தி ஊரைக் கூட்டுவியா?” எனக்கேட்டு இன்னும் நெருங்கினான்.

“இந்த மல்லி வாசம் ஆளை கும்முன்னு தூக்குதே” என மூச்சை உள்ளிழுத்து வாசம் பிடித்தான். தர்ஷினி எரிச்சலுடன் அவனைப் பார்த்து இருக்க, காதலுடன் தர்ஷினியை அணைத்தான்.

“ஐ லவ் ஃபெலிஸ்” என்றாள் தர்ஷினி.

“உன் மாடப்புறா தானே…? ஒருநாள் அதை பிரியாணி போட்டு சாப்பிடுறேன் பாரு. இப்போ ஐ லவ் இன்பான்னு சொல்லு” கூறிக்கொண்டே அணைப்பை இறுக்கினான்.

அவனை வலுக்கட்டாயமாக தன்னிடமிருந்து பிரித்து தள்ளியவள், “நான் ஃபெலிஸைதான் காதலிச்சேன். காதலிக்கிறேன். அவன் நினைவாதான் மாடப்புறாவுக்கு ஃபெலிஸ்ன்னு பேர் வச்சேன். அத்தைக்கு உடம்பு முடியாம போகவும் அவங்களுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்றாள்.

“பொய் சொல்ற” என்றான்.

“இது பொய் இல்லை, ஐ லவ் ஃபெலிஸ்” என்றாள்.

“எவண்டி அவன் எனக்கு தெரியாம? அப்படி எல்லாம் யாரும் இல்லை, நீ பொய் சொல்ற” என மீண்டும் கூறினான்.

“ஏன் எனக்கு தெரிஞ்ச எல்லாரையும் உனக்கு தெரியுமா?” எனக் கேட்டாள்.

“உன் மனசுல நான்தான் இருக்கேன்”

“அப்படின்னு நீயே நினைச்சுக்கிட்டா…? என் மனசுல என் ஃபெலிஸ்தான் இருக்கான்” என சட்டமாக நின்றுகொண்டு தர்ஷினி கூற, அவளை பிடித்து தள்ளினான். படுக்கையில் போய் விழுந்தாள் தர்ஷினி.

“நான் உன் புருஷன்டி. என்ன தைரியம் இருந்தா என்கிட்டயே இப்படி சொல்லுவ?”

“இதை உன்கிட்ட இருந்து மறைச்சாதான் தப்பு” என்றாள்.

“யார் அவன்?”

“கண்டிப்பா சொல்லனுமா?”

பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான் இன்பா.

“நீ அந்த ஃபேக்டரி கேஸ்ல இருந்து விலகிடு. நான் ஃபெலிஸ் யாருன்னு சொல்றேன். உனக்கு தெரிஞ்சுக்க வேண்டாம்னாலும் பரவாயில்லை. நான் என் ஃபெலிஸ நினைச்சுக்கிட்டே உன் கூட குடும்பம் நடத்துறேன்” என்றாள்.

“என்னடி பிளாக்மெயில் பண்றியா? இப்படி பேச வெட்கமா இல்லை?”

“இல்லையே..” என கூறி சிரித்தாள் தர்ஷினி.

தர்ஷினியின் மனதில் தான்தான் இருக்கிறோம் என்பது இன்பாவுக்கு வெகு நிச்சயம். ஆனால் இப்போது தர்ஷினி பொய் சொல்வது போலவும் அவனுக்கு தெரியவில்லை.

“ஒன்னும் அவசரம் இல்லை. நீ யோசிச்சு நாளைக்கு உன் முடிவை சொல்லு. எனக்கு தூக்கம் வருது” என்றவள் கட்டியிருந்த அதே பட்டுப்புடவையின் படுக்கையில் படுத்து விட்டாள். அவளை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் இன்பா.

வெறும் தரையில் படுத்துக் கொண்டு தூக்கம் வராமல் இன்பா புரள ஆரம்பிக்க, நன்றாக உறங்கிவிட்ட தர்ஷினி, உறக்கத்தில் அந்த பெரிய படுக்கையில் நன்றாக உருண்டு கொண்டிருந்தாள்.

அறையில் செய்யப்பட்டிருந்த அலங்காரம் அவனை பார்த்து சிரிப்பது போல இருந்தது.