மணிப்புறாவும் மாடப்புறாவும்-8

அத்தியாயம் 8

வீட்டுக்கு வெளியில் இருந்த தோட்டத்தில், மொட்டு விட்டிருந்த மஞ்சள் நிற ரோஜா செடிக்கு அருகில் நின்றிருந்தான் இன்பசாகரன். உள்ளே அமர பிடிக்காமல் வெளியே வந்த தர்ஷினி, அங்கே இன்பாவை கண்டதும் திரும்பி சென்று விடலாமா என யோசித்தாள். உள்ளே செல்லவும் மனமின்றி சத்தமில்லாமல் மாடிப்படிகளில் ஏறினாள்.

மாடியில் காய்ந்த துணிகள் கொடிகளில் பறக்க, க்ளிப்புகளை நீக்கிவிட்டு துணிகளை எடுக்க ஆரம்பித்தாள். காய்ந்த துணிகள் அதிகமாக இருக்க பாதிக்குமேல் எடுக்க முடியாமல் சிரமப்பட்டாள். கீழே வைத்து விட்டு மீண்டும் வந்து எடுக்கலாம் என்றெண்ணி கீழே செல்ல திரும்ப, அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் இன்பா.

“என்னடி… என் அம்மா ஆபரேஷனுக்கு ஒத்துக்கலைன்னு அவங்களுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டியோ?” எனக் கேட்டான்.

பதில் கூறாமல் தர்ஷினி அவனைக் கடந்து செல்ல முற்பட “பதில் சொல்லிட்டு போடி” என்றான்.

“ஆமாம்… இப்போ என்னாங்குற?” எனக் கேட்டாள் தர்ஷினி.

“என் அம்மாவுக்கு உடம்பு நல்லா இருந்தா இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டிருந்திருக்க மாட்ட… அப்படித்தான?”

“ஆமாம்”

“நான் உன் மனசுல இல்லை…?”

“இல்லை” என எங்கேயோ பார்த்துக்கொண்டு கூறினாள்.

“என்னை பாத்து சொல்லுடி” என்றான்.

“உன் மூஞ்சிய பார்க்க பிடிக்காமதான் வேற எங்கேயோ பார்த்துகிட்டு சொல்றேன். இப்போ என்ன உன்னை நேருக்கு நேரா பார்த்து சொன்னாதான் நம்புவியா? எத்தனை தடவ சொல்லணும்..? சொல்றேன் கேட்டுக்கோ” என்றவள் அவனது முகத்தை நேருக்கு நேராக பார்த்தாள்.

“தப்புக்கு துணை போற நீ என் மனசுல இல்லை” என்றாள்.

“நான் தப்பு எதுவும் செய்யலடி”

“சரி… செய்றது தப்புன்னு கூட தெரியாத நீ என் மனசுல இல்லை” என்றாள்.

“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் அந்த ஃபேக்டரியில் பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை. எல்லாத்தையும் சரி பண்ணிடுவாங்க. கோர்ட் அந்த ஃபேக்டரி ஓபன் பண்ண அனுமதித்தாலும் கொஞ்ச நாள்ல திருப்பி மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்ஸ்பெக்ட் பண்ணுவாங்க. எதுவும் சரியில்லைன்னா திருப்பி க்ளோஸ் பண்ணிடுவாங்க”

“திருப்பி இன்ஸ்பெக்ட் பண்ணும்போது ஃபேக்டரிக்கு சாதகமாதான் எல்லாம் இருக்கும். பணம்தான் பாதாளம் வரை பாயுமே” என்றாள்.

“தர்ஷினி இந்த கேஸை நான் எடுத்து நடத்தலைன்னாலும் இதுதான் நடக்கும்”

“எனக்கு தெரியும் இன்பா. நீ சொல்லித்தான் தெரியனும்னு இல்லை. எவனோ ஒருத்தன் தப்பு செய்யறத்துக்கு நானே செஞ்சுட்டு போறேன்னு நீ சொல்றியா?” எனக் கேட்டாள்.

“நீ அப்படியே வச்சுக்க” என்றான்.

“அப்போ இந்த தப்பு செய்ற நீ என் மனசுல எப்படி இருக்க முடியும்?” எனக் கேட்டாள்.

“பிராக்டிகலா பேசு”

“நீ இந்த கேஸ்ல இருந்து விலகிடு”

“முடியாது”

“நீ எடுத்து நடத்து. இது நடக்காமல் இருக்க நான் எதிர்த்து நிற்பேன்” என்றாள்.

“ரொம்ப ஈசியா சொல்ற”

“தப்புக்கு துணை நின்னு வாழ்றதை காட்டிலும் உண்மைக்கு துணைநின்னு செத்துப்போறது எவ்வளவோ மேல்”

“ஹேய்… லூசு மாதிரி பேசாத. நான்தான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவாங்கன்னு திருப்பி திருப்பி சொல்றேன். நீயும் திருப்பி திருப்பி சொன்னதையே சொல்ற”

“அங்க எதையும் சரி பண்ண முடியாது இன்பா. சத்ரியனோட ஆய்வுக் கட்டுரையை படிச்சுப் பாரு”

“சத்ரியன்னு பெயர் வச்சவன் எல்லாம் உண்மை சொல்லிட மாட்டான். அந்தாளு இதை வச்சி பணம் பண்ண பார்க்கிறாரா இருக்கும்”

“உன்கிட்ட பேச முடியாது. நல்லவங்க எல்லாம் உன் கண்ணுக்கு கெட்டவங்களா தெரிவாங்க. கெட்டவங்க எல்லாம் நல்லவங்களா தெரியுறாங்க. நீ வழிவிடு நான் கீழே போகணும்” என்றாள்.

விலகி நின்ற இன்பா “போடி போ… கல்யாணத்துக்கு அப்புறம் என்ன செய்றேன்னு பார்க்கலாம்” என்றான்.

“அத்தைக்காக மட்டும் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலை. கல்யாணம் பண்ணி உனன்னை திருத்தி இந்த கேஸ்ல இருந்து விலக வைக்கல…. நான் தர்ஷினி இல்லடா” என்றாள்.

“நீ திருத்துற அளவுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன்?”

“உன்னை சீக்கிரம் உணர வைக்கிறேன்” என்றாள்.

“வக்கீலுக்கு பொண்டாட்டி ஆகப் போறதால நீயும் வாய்க்கு வாய் இப்படி பேசணும்னு இல்லடி” என்றான்.

“ஆனா நேர்மையான பத்திரிக்கைகாரி புருஷனாக போற நீ நேர்மையா இருக்கனும்” என்றாள்.

“வேண்டாண்டி. நான் வக்கீலும் இல்லை, நீ பத்திரிக்கைகாரியும் இல்லை. நான் உன் செல்ல காட்டுப்பூச்சி. நீ என்னோட ஆசை தர்பூசணி. அப்படியே இருப்போமே” என இதுவரை இருந்த கடினத்தன்மையை விட்டு மிகவும் மென்மையாக அவளிடம் கூறினான்.

“காட்டுப்பூச்சியா இருந்தாலும் எனக்கு நேர்மையான காட்டுப்பூச்சிதான் வேணும்” எனக்கூறி கீழே சென்றாள் தர்ஷினி.

“பாதி துணிய மட்டும் எடுத்துட்டு போற.. மீதிய யார் எடுப்பா?” எனக் கேட்டான் இன்பா.

“ஏன் நல்லா கொட்டிக்க தெரியுதுல்ல? நீயே எடுத்துட்டு வா” என சத்தமிட்டு கொண்டே சென்றுவிட்டாள்.

“ஒன்னு பேசாம மூஞ்சிய திருப்பிக்கிட்டு போவா. இல்லைன்னா ஓவரா பேசுவா. இருடி கல்யாணம் நடக்கட்டும். உன்னை இன்பா… இன்பா…ன்னு புலம்ப வைக்கல… நான் இன்பாவே இல்லை” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு மீதி துணிகளை எடுக்க ஆரம்பித்தான்.

கூடத்தில் பெரியவர்கள் இன்னும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ரம்யாவின் அறையில் அமர்ந்து துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி. துணிகளுடன் கூடத்தைக் கடந்து அறைக்கு சென்று கட்டிலில் துணிகளை போட்டான் இன்பா.

“அக்கா உங்களுக்கு ஒரு நாளாவது உதவி செஞ்சிருப்பானா? பாருங்க பொண்டாட்டிக்கு மட்டும் வேலை செய்றதை” என்றார் நூர்ஜஹான்.

“பின்ன என் பேட்டிய பத்தி என்ன நினைச்சுகிட்ட..? அடங்காத காளையை எப்படி அடக்கப் போறான்னு பாரு” என்றார் ரஹீம்.

தர்ஷினி துணிகளை மடித்து வைக்க, அமைதியாக இன்பாவும் மடிக்க ஆரம்பித்தான். ஏனோ தானோவென அவன் துணிகளை மடிக்க, அவன் கையிலிருந்த துணியை வெடுக்கென பிடுங்கிய தர்ஷினி “இப்படித்தான் மடிப்பாங்களா?” எனக் கேட்டாள்.

“சொல்லித்தா கத்துக்கிறேன்” என்றான்.

“எனக்கு வேற வேலை இல்லை பாரு. வக்கீலுக்கு படிச்சிருக்கதானே… துணி மடிக்க தெரியாதா?” என சீறினாள் தர்ஷினி.

“லா படிச்சேன்தாண்டி. ஒரு க்ளாஸ்ல கூட துணி மடிக்கிறத பத்தி சொல்லித் தரலையே. ஒருவேளை நீ ஜர்னலிசம் படிக்கும்போது சொல்லித் தந்துருப்பாங்களோ?” எனக் கேட்டான்.

“எரிச்சல் ஏற்படுத்தாம இங்கிருந்து கிளம்பி போடா”

“ஷ்… ஹப்பா… ஒரே அனல் காத்தா அடிக்குதே…?” என கூறிக் கொண்டே அங்கிருந்து வெளியே வந்தான் இன்பா.

“இன்பா வர்ற புதன்கிழமை காலையில் அம்மன் கோயில்ல கல்யாணம்” என்றார் சாரங்கபாணி.

“அப்போ வியாழக்கிழமை அம்மாவுக்கு ஆபரேஷன் வச்சுக்கலாமா?” எனக் கேட்டான் இன்பா.

“டேய் அடுத்தநாளேவா? ஒரு வாரம் போகட்டும்டா” என்றார் லட்சுமி.

“இந்த கல்யாணமே நீ ஆபரேஷனுக்கு ஒத்துக்கனும்னுதான் அவசர அவசரமா நடக்குது. நானாவது அடுத்த நாள்னு சொல்றேன். அங்க உள்ள உட்கார்ந்திருக்கிறவ விட்டா கல்யாணம் முடிஞ்ச கையோட உனக்கு ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லுவா. அவளுக்கு நான் பரவாயில்லை” என்றான்.

மற்றவர்களும் தள்ளிப்போட வேண்டாம் எனக் கூற புதன்கிழமை திருமணம் வியாழக்கிழமை லட்சுமிக்கு அறுவைசிகிச்சை என முடிவானது.

இரவு உணவை நூர்ஜஹானும் பத்மினியும் சேர்ந்து செய்து வைத்து விட்டு சென்றனர். லட்சுமியை சாப்பிட வைத்து மற்றவர்களுடன் தானும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் தர்ஷினி.

தர்ஷினி அவளது வீட்டிற்கு நடந்து செல்ல, அவளுடன் சேர்ந்து நடந்தான் இன்பா.

“இங்க இருக்குற வீட்டுக்கு எனக்கு தனியா போய்க்க தெரியாதா? ரொம்ப சீனு போடாத” என்றாள் தர்ஷினி.

“ஏய் சீனு கீனுன்னு பேசுன… பல்லை தட்டிடுவேன்” என்றான்.

தர்ஷினி சீன் என்பதைதான் சீனு என விளையாட்டாக கூறினாள். அவள் அத்தை பையனின் பெயர் சீனு என்பதால் இன்பாவுக்கு கோவம் வந்துவிட்டது. இன்பா கோவப்பட்ட பிறகுதான் அவன் ஏன் கோவப்படுகிறான் என்பதையே புரிந்துகொண்டாள் தர்ஷினி.

அங்கேயே நின்று தன் கைப்பேசியை எடுத்து சீனுவுக்கு அழைத்தாள். அவனிடம் நலம் விசாரித்துவிட்டு புதன்கிழமை நடக்கவிருக்கும் கல்யாணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறினாள். இவளுக்கு முன்னரே முருகேசன் அழைப்பு விடுத்திருக்க அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அவன் என்ன பதில் சொன்னான் என்று தெரியவில்லை.

“ஃபீல் பண்ணாத சீனு. உனக்குன்னு ஒரு நல்ல பொண்ணு கண்டிப்பா கிடைக்கும். நாம ஒண்ணு நினைச்சா விதி ஒண்ணு நினைக்குது. என்ன பண்றது?” என்றாள் தர்ஷினி.

இறுதியாக “உன்னை ரொம்ப எதிர்பார்ப்பேன். கண்டிப்பா வரணும்” எனக் கூறி விட்டே வைத்தாள்.

இன்பா அவளது கைப்பேசியை பிடுங்கி சீனுவின் எண்ணை நீக்கினான். சிரித்த தர்ஷினி, அவனுடைய எண்ணை மனப்பாடமாக கூறினாள். உண்மையில் தர்ஷினிக்கு சீனுவின் எண் தெரியாது. அவளது அப்பாவின் எண்களைதான் கடைசி மூன்று எழுத்துக்களை மாற்றி கூறியிருந்தாள். ஆனால் அது இன்பாவுக்கு தெரியவில்லை.

கோவம் கொண்ட இன்பா, அவனது வலது கையால் தர்ஷினியின் கன்னங்களை அழுந்தப் பற்றி, “இனி அவன்கிட்ட இருந்து உனக்கு ஃபோனே வரக்கூடாது. வந்தாலும் நீ பேசக்கூடாது” என்றான்.

தர்ஷினி அவளது வலது கையை கத்தி போல் நீட்டி தன் கன்னத்தை பற்றியிருந்த இன்பாவின் கையின் மணிக்கட்டில் அடித்தாள். வலி பொறுக்க முடியாமல் கையை அவள் கன்னத்தில் இருந்து எடுத்து “ஆ….” என அவஸ்தையுடன் உதறிக் கொண்டான்.

“யாருகிட்ட டா…? யார் கிட்ட பேசணும் பேசக்கூடாது அதெல்லாம் நீ சொல்லக் கூடாது. இந்த கண்டிசன் போடுற வேலை எல்லாம் என்கிட்ட வெச்சுக்காதே. தொலைச்சிடுவேன். இன்னொருமுறை இத மாதிரி பண்ணுன அடி பலமா இருக்கும்” என மிரட்டல் தொனியில் கூறிவிட்டு, இன்பாவின் இடது கையில் இருந்த அவளது கைப்பேசியை பறித்துக்கொண்டு வேகமாக நடந்தாள்.

“ராட்சசி” என்றான் இன்பா.

“நான் ராடசசின்னா நீ பூதம்டா… சாதா பூதம் இல்லை… காட்டுபூதம், காட்டேரி பூதம், கருப்பு கோட் போட்ட பூதம்” என சொல்லிக்கொண்டே அவன் கண் பார்வையிலிருந்து மறைந்தாள்.

பெருமூச்சு விட்ட இன்பா, “உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும்போது, இவளைப் போய் ஏண்டா இன்பா லவ் பண்ணி தொலைச்ச?” என தனக்குத்தானே புலம்பிக் கொண்டு திரும்பி நடந்தான்.

திருமணத்திற்கு ஐந்து தினங்களே இருந்த நிலையில், லட்சுமியை முழு ஓய்வு எடுக்க சொல்லி விட்டு, நூர்ஜஹானும் பத்மினியுமே எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டனர். இன்பா எப்பொழுதும் போல அவனது வேலையை கவனித்துக் கொண்டிருக்க, பத்மினியின் புலம்பல் தாங்கமுடியாமல் தர்ஷினி மட்டும் திங்கள் கிழமையிலிருந்து ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டாள்.

திங்கள் கிழமை மாலையில் சுப்ரியா தர்ஷினியை சந்திக்க வந்திருந்தாள்.

“என்னடி… கல்யாண பொண்ணு சந்தோஷமா இல்லாம உம்முன்னு இருக்க? லட்சுமி ஆண்ட்டி ஹெல்த் நினைச்சு பயப்படுறியா? யூட்ரஸ் ரிமூவ் பண்றது எல்லாம் இப்ப சாதாரணமா நடக்குதடி, பயப்பட ஒன்னுமில்லை” என்றாள் சுப்ரியா.

“அவங்க நல்லாயிடுவாங்கன்னு எனக்கு தெரியும்”

“அப்புறம் என்னடி?”

“இவன் பண்றது எனக்கு எதுவும் பிடிக்கலை” என்றாள்.

“இன்பா ஒன்னும் கெட்டவர் கிடையாது தர்ஷினி. அவரோட தாட்ஸ் வேற மாதிரி இருக்கு. நீ இப்படி முறைச்சுக்கிட்டு இல்லாம சொல்லி புரிய வை. அவருக்கு தப்புன்னு தெரிஞ்சிட்டா பண்ண மாட்டார்” என்றாள் சுப்ரியா.

“அவன் என்ன சின்ன குழந்தையா? சிலசமயம் கோவத்தை தாண்டி வெறுப்பா இருக்கு” என்றாள்.

அவளது தோளை ஆதரவாக பற்றிய சுப்ரியா, “இன்பா உன்னை ரொம்ப லவ் பண்றார் தர்ஷினி. ரொம்ப வருஷமாவே லவ் பண்றார் போல. கண்டிப்பா நீ கொஞ்சம் பொறுமையா எடுத்து சொன்னா கேட்டுப்பார். கல்யாணமே ஆகலை அதுக்குள்ள வெறுப்புன்னு எல்லாம் பேசாத” என்றாள்.

“அவன் என்னை ரொம்ப வருஷமா லவ் பண்றான்ங்கிறது எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?”

“நீ எப்படி எடுத்துபண்ணு தெரியலை. நான் இன்பாவை ப்ரொபோஸ் பண்ணினேன் அப்போ சொன்னாரு” என்றாள்.

“இது எப்ப நடந்தது?” எனக் கேட்டாள்.

“லாஸ்ட் டைம் நான் இங்க வந்திருந்தேனே அப்போ” என்றாள்.

“நீ என்கிட்ட இதை சொல்லவே இல்லை” என்றாள் தர்ஷினி.

“அது அப்ப தோணிச்சி… உடனே அவர்கிட்ட கேட்டுட்டேன். ஆச்சுவலி இந்த ஃபேமிலி செட்டப் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. என்னமோ… ரொம்ப யோசிக்காம பட்டுனு கேட்டுட்டேன். அவரும் ரொம்ப டீசண்டா அவரோட மனசுல வேற பொண்ணு இருக்கிறதா சொல்லிட்டார். இதை என்னமோ உன்கிட்ட சொல்லாம இருக்கிறது கில்டியா இருந்துச்சு. அதான் சொல்லிட்டேன். என்னை நீ தப்பா நினைக்கலைல்ல?” என்றாள்.

“ச்சீ… உன்னை போய் தப்பா நினைப்பேனாடி?” என்ற தர்ஷினி சுப்ரியாவை பாவமாய் பார்த்தாள்.

“ஏய் இந்த ல ல ல ல…… சோக கீதம் எல்லாம் வேண்டாம். நீ ஒழுங்கா கல்யாண பொண்ணாட்டம் சிரிச்சுகிட்டு சந்தோஷமா இரு” என்றாள். பின்னர் சிறிது நேரம் தர்ஷினியுடன் பேசியிருந்துவிட்டு அவளது வீட்டிற்கு கிளம்பி விட்டாள் சுப்ரியா.

வீட்டிற்கு வந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, இரவு உணவு சமைத்து விட்டு, சிறிது நேரம் பால்கனியில் நின்று இருந்தாள். திடீரென இருளில் யாரோ தூரமாக தூக்கில் தொங்குவது போல இருந்தது. கலங்கலாக இருந்த அந்த காட்சி கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவடைய, நகைச்சுவை நடிகர் லிங்கேஷ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான். சுப்ரியா கண்சிமிட்டி மீண்டும் அந்த காட்சியை காண முற்பட அது மறைந்து போயிருந்தது. அந்த காட்சியின் தாக்கம் அவளது தொண்டை வலிப்பது போல் இருக்க, அனிச்சையாய் அவள் கைகள் அவளது கழுத்தை தடவிக் கொண்டன.

தொண்டை வறட்சியாக இருக்க குளிர்சாதன பெட்டியில் இருந்த குளிர்ந்த நீரை குடித்தாள். தன் பெற்றோர் மரணம் போல இதுவும் நடந்து விடுமா? என அவளுக்கு அவளே கேள்வி கேட்க அவளுடைய முதுகுத்தண்டில் குளிர் பரவியது. சாப்பிடப் பிடிக்காமல் படுக்கையில் படுத்துக்கொண்டாள்.

‘லிங்கேஷ் சூசைட் பண்ணிக்க போறாரா? இதை தடுக்க முடியுமா? எப்படி முடியும்? இல்லைனா இதெல்லாம் என்னோட மனப் பிரமையா?’ என பலவித கேள்விகளுடன் சுப்ரியா உறங்கிப் போனாள்.

நடிகர் லிங்கேஷ் தனக்கிருந்த மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து வெளிவர அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள அமெரிக்கா பயணமாகிக் கொண்டிருந்தான்.