ஞாயிற்றுக் கிழமையாக இருந்த அன்று, சென்னை மாநகரத்தில் பெருங்குடியில் தன்னுடைய தோழி சுப்ரியாவை தன் ஆக்டிவாவில் பின்னால் அமர வைத்து வந்த பிரியதர்ஷினி, தன் வீட்டை தாண்டிச்சென்று பக்கத்து வீட்டின் முன் நிறுத்தினாள். அவர்களுக்காக காத்திருந்த நசீர் ஓடிவந்து கேட்டைத் திறந்து விட்டான்.
சுப்ரியா இறங்கிக் கொள்ள, வண்டியை கேட்டைத் தாண்டி உள்ளே விட்டு, ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, புறாக் கூண்டு பக்கம் சென்றாள் தர்ஷினி.
“என் அண்ணன் கல்யாணத்துக்கு வர முடியாம போய் அதுக்காக இன்னைக்கு நீ வரலையா? அவளோட ஃபெலிஸை பார்க்கத்தான் வந்தியா?” எனக் கேட்டான் நசீர்.
சுப்ரியா நசீரையும் தர்ஷினியையும் மாறி மாறிப் பார்க்க “அவன் கிடக்கிறான் நீ வாடி” என்றாள் தர்ஷினி.
சுப்பு சிரித்துக் கொண்டே புறாக்கூண்டு அருகே சென்றாள். கூண்டுக்கு வெளியில் இருந்த அந்த மாடப்புறா தர்ஷினியைப் பார்த்ததும் அவள் தோள் மேல் வந்தமர்ந்தது. அழகாய் தன் புறங்கையை காட்டி அதில் அமர வைத்துக் கொண்டவள் அருகில் இருந்த பாத்திரத்திலிருந்த தானியங்களை தன் மற்றொரு உள்ளங்கையில் வைத்து அதனிடம் நீட்ட, அது தர்ஷினிக்கு வலிக்காமல் கொத்தித் தின்ன ஆரம்பித்தது.
“சோ க்யூட் டி” என்றாள் சுப்பு.
“ஆமாம். என் ஃபெலிஸ்தான் இங்க உள்ள எல்லாரையும் விட ரொம்ப க்யூட் அண்ட் இன்டலிஜெண்ட்” என்றாள் தர்ஷினி.
அந்த வீட்டின் வெளியே பலவித கூண்டுகளில் பலவித புறாக்கள் இருந்தன. சில வான்கோழிகள் இருந்தன. சில முயல்கள், வெள்ளை எலிகள், வாத்துகள் ஆகியவையும் இருந்தன.
ஒரு முயலின் காதுகளைப் பிடித்து தூக்கிய நசீர் சுப்ரியாவிடம் எடுத்து வந்தான்.
“இவங்கதான் ரியா” என்றான். சிரித்த சுப்பு “உன் பெயரை தர்ஷினி யாருக்கும் வைக்கலையா?” எனக் கேட்டாள். நசீரின் முகம் கோவமாக தர்ஷினியைப் பார்க்க, சிரித்த தர்ஷினி “அதோ அந்த வாத்தோட பேரு நஸ்” என்றாள். சுப்ரியா சத்தமாக சிரித்தாள்.
கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்த புதிவனைக் கண்டதும் சுப்ரியா சிரிப்பதை நிறுத்திக்கொள்ள, தர்ஷினி அவனை பார்த்து விட்டு அலட்சியமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“என்னடா நசீர் பாய்… உன் வீட்ல இன்னைக்கு மட்டன் பிரியாணியும் சிக்கன் சுக்காவும்தான?” என தர்ஷினியை பார்த்துக் கொண்டே கேட்டான் இன்பசாகரன். சுருக்கமாக இன்பா.
“ஆமாண்ணா. எப்படி கரெக்டா சொல்றீங்க?” எனக் கேட்டான் நசீர்.
“பின்ன தர்பூசணி இங்க வந்திருக்கே?” என தர்ஷினியை கிண்டல் செய்ய, நசீர் வாய்விட்டு சிரிக்க, சுப்ரியாவுக்கும் சிரிப்பு வந்தது. தர்ஷினியின் முறைப்பை பார்த்துவிட்டு அடக்கிக் கொண்டாள்.
“என்னை அப்படி சொல்லாதன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றதுடா?” என விரல் நீட்டி கோவமாக தர்ஷினி கேட்டாள்.
அவளது நீட்டிய விரலை அழுத்தமாய் பிடித்துக் கொண்டே, “உன்னை விட மூணு வயசு பெரியவன் நான். வாடா போடான்னு பேசாதன்னு உனக்கு எத்தனை தடவ சொல்றதுடி?” என இன்பாவும் கோவமாக அவளிடம் எகிறினான்.
மிக லாவகமாய் அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள் “நீதான் என்கிட்ட வந்து வம்பு செய்த. நான் பதிலுக்கு வாடா போடான்னு பேசினேன்” என்றாள்.
“நேத்து எனக்குன்னு எங்கம்மா எடுத்து வச்சிருந்த காளான் பிரியாணியை முழுசா முழுங்கிட்டு என்னை வெறும் சோறு சாப்பிட வச்சல்ல…?” என்றான் இன்பா.
“நீ நேரத்துக்கு வந்திருந்தா உன் அம்மா உனக்கு பிரியாணி போட்டிருப்பாங்க. நேரங்கெட்ட நேரத்துல வந்தா…? என்னைக் கேட்டா அந்த வெறும் சோறு கூட உனக்கு போடக் கூடாது” என்றாள் தர்ஷினி.
சுப்ரியாவும் நசீரும் இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க, வெளியே வந்தான் நசீரின் அண்ணன் பஷீர். இன்பசாகரனின் நண்பன்.
“வந்ததும் வராததுமா என்னடா ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து?” எனக் கேட்டான் பஷீர்.
“இவங்க பஞ்சாயத்தை கேட்க ஆரம்பிச்சா இன்னைக்கு நாள் முழுசும் அதிலேயே போயிடும். நீ அதை மட்டும் கேட்காதே” என கூறிக்கொண்டே வந்தார் அப்துல் ரஹீம். பஷீர் மற்றும் நசீரின் தந்தை. இங்கிருக்கும் வளர்ப்பு பிராணிகளின் சொந்தக்காரர்.
“நீங்க பஞ்சாயத்தை கேட்டா மட்டும் எனக்கா சப்போர்ட் பண்ண போறீங்க…? அந்த தர்பூசணிக்குதானே சப்போர்ட் பண்ணுவீங்க?” என்ற இன்பா பஷீரை பார்த்து “டேய் உன்கிட்ட மாமா கொடுத்த கேஸ் ஃபைலை கொடுக்கிறியா… மாமா எடுத்துட்டு வரச்சொன்னார். கொஞ்சம் அர்ஜென்ட்” என்றான்.
“கொஞ்ச நேரம் இருந்தா அம்மாவை ஏலக்காய் டீ போட சொல்லி இருக்கேன் குடிச்சுட்டு போலாம்” என்றான் பஷீர்.
“அதென்ன வெறும் டீ மட்டும்? நீ சாப்பிட்டுட்டு போலாம்” என்றார் ரஹீம்.
“அதெல்லாம் வேண்டாம். இது கொஞ்சம் அர்ஜென்ட். நீ போய் எடுத்துட்டு வா” என இன்பா கூற பஷீர் உள்ளே சென்றான்.
பதில் வணக்கம் செய்த ரஹீம் பாய் “யார் பேட்டி இது? உங்க புது ஃப்ரெண்டா?” என தர்ஷினியிடம் கேட்டார்.
“புது ஃப்ரெண்ட் இல்லை வாப்பா. பழைய ஃப்ரெண்டுதான். டென்த் வரை எங்க கூடதான் படிச்சா. அப்புறம் பெங்களூர் போயிட்டா. போன மாசம்தான் திரும்ப மீட் பண்ணினோம். இவளும் எங்களை மாதிரியே மீடியால ஒர்க் பண்றா. ‘தி ட்ரூத்’ பத்திரிகையில ரிப்போர்ட்டர்” என அவளைப் பற்றி கூறினாள் தர்ஷினி.
“ஓ… தி ட்ரூத்…. உண்மையிலேயே உண்மையான நியூஸை போடுவாங்களே… அந்த பத்திரிகையா?” என இன்பா கேட்க,
“வாப்பா அவனை வாயை மூட சொல்லுங்க. திரும்பி வம்பு பண்றான், பாருங்க…” என்றாள் தர்ஷினி.
“நான் என்ன சொன்னேன்? தி ட்ருத் உண்மை நியூஸ் போடுவாங்கன்னுதானே சொன்னேன்” எனக் கேட்டான் இன்பா.
“அப்ப எங்க செங்கதிர் பத்திரிகையில மட்டும் என்ன பொய் நியூஸா போடுறோம்?”
“அது எனக்கு எப்படி தெரியும்? நான் எல்லாம் அதை படிக்கிறதே இல்லை. சொல்லப்போனா…. அப்படி ஒரு பத்திரிக்கை இருக்குன்னு என் ஞாபகத்திலேயே இல்லை” என்றான் இன்பா.
“பார்த்தீங்களா…. பார்த்தீங்களா வாப்பா… அவனை என்ன பண்றேன் பாருங்க…” என சண்டை கோழியாய் தர்ஷினி சிலிர்த்துக் கொள்ள, பஷீர் வந்து ஃபைலை இன்பாவின் கையில் கொடுக்க “எப்பப்பாரு மட்டன் பிரியாணியே போடாதடா. மாடப்புறால பிரியாணி போட சொல்லு அம்மாகிட்ட. வந்து ஒரு வெட்டு வெட்டுறேன்” என கூறிவிட்டு அங்கிருந்து இன்பா சென்றான்.
“டேய் காட்டுப்பூச்சி… என் ஃபெலிஸ் மேல கையை வச்சு பாருடா… உன் கை காலை உடைக்கிறேன்” என தர்ஷினி சத்தமிட, “போடி சூனியக்கார பொம்மை” என கத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் இன்பா.
“யாருடா இது?” என கிசுகிசுப்பாய் சுப்ரியா நசீரிடம் கேட்டாள்.
“இவங்க இன்பா அண்ணா. என் அண்ணன் பஷீரோட ஃப்ரெண்ட். பக்கத்து வீடுதான். இவங்க ரெண்டு பேருக்கும் சின்ன வயசிலிருந்தே ஆகாது” என்றான் நசீர்.
நினைவு வந்தவளாய் “ஓ… நாம ஸ்கூல் படிக்கும்போது தர்ஷினிய அடிக்கடி எதுலயாவது மாட்டி விடுவாரே…?” எனக் கேட்டாள் சுப்ரியா.
“அவரே இவர்” என்றான் நசீர்.
பின் சுப்ரியாவை பஷீரின் மனைவி சிராஜ்நிஷா அம்மா நூர்ஜஹான் அனைவருக்கும் அறிமுகம் செய்தான் நசீர். சுப்ரியா தான் வாங்கி வந்திருந்த பரிசை புதுமணத்தம்பதிகளிடம் கொடுத்தாள்.
அந்த தெருவில் வரிசையாக இருந்தன அந்த மூன்று வீடுகள். முதல் வீடு பிரியதர்ஷினியின் வீடு. அப்பா முருகேசன், அம்மா பத்மினி. முருகேசன் வெளிநாட்டில் பல வருடங்கள் வேலை பார்த்து சில வருடங்களுக்கு முன்புதான் இந்தியா வந்திருந்தார். குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். தர்ஷினிதான் மூத்த மகள். பிஏ ஜர்னலிஸம் படித்திருக்கிறாள். செங்கதிர் பத்திரிகையில் நிருபராக இருக்கிறாள். அவளுடைய தங்கை சுபாஷினி 12ஆம் வகுப்பு படிக்கிறாள்.
இவர்களின் பக்கத்து வீடு அப்துல் ரஹீம்னுடையது. இவரும் வெளிநாட்டில் வேலை பார்த்தவர்தான். சொந்தமாக ஐந்து கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். அதற்கடுத்த வீடு இன்பசாகரனுடையது.
பல ஆண்டுகளாக அதே தெருவில் வசித்து வரும் மூன்று குடும்பங்களும் குடும்ப நண்பர்களாக இருந்தனர். இன்பாவின் மாமா பிரபஞ்சன் மிகவும் பிரபலமான கிரிமினல் லாயர். அவரை தன் ரோல்மாடலாக எடுத்துக் கொண்ட இன்பா சட்டம் பயின்றான். அவனது ஆருயிர் தோழன் பஷீரும் இன்பாவுடன் சேர்ந்து சட்டம் பயின்றான். இருவரும் பிரபஞ்சனிடம் ஜூனியர் வக்கீல்களாக பணிபுரிகின்றனர்.
சென்ற வாரம்தான் பஷீருக்கு திருமணம் முடிந்திருந்தது. நசீர் மற்றும் தர்ஷினி இருவரும் ஒரே வயதுடையவர்கள். ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். நசீர் விஷுவல் ஆர்ட்ஸ் அண்ட் ஃபோட்டோகிராபி படித்துவிட்டு செங்கதிர் பத்திரிகை நிறுவனத்தில் புகைப்படக் கலைஞராக பணியாற்றுகிறான்.
சுப்ரியா பத்தாம் வகுப்புக்கு மேல் தன் பெற்றோருடன் பெங்களூர் சென்று விட்டாள். அவளும் ஜர்னலிஸம் படித்திருக்கிறாள். சென்றவருடம் ஒரு விபத்தில் தன் பெற்றோரை பறி கொடுத்தவள் சென்னையில் தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கிறாள்.
சென்ற மாதம்தான் சுப்ரியாவை இருவரும் மீண்டும் சந்தித்திருந்தனர். தங்களது நட்பை புதுப்பித்துக் கொண்டனர்.
தர்ஷினி அங்கிருந்த வளர்ப்பு பிராணிகளை சுப்ரியாவிற்கு அறிமுகப் படுத்த ஆரம்பித்தாள்.
“இந்த வெள்ளை எலி பேர் மினி. எங்க அம்மா பேரு பத்மினியிலிருந்து வச்சேன். இந்த புறா பேரு சாண்டல். இப்போ போனானே காட்டுப்பூச்சி… அவன் அம்மா பேரு சந்தானலட்சுமி அவங்க பேரிலிருந்து வச்சேன்” என்றாள் தர்ஷினி.
அந்தப் புறாவை தடவிக்கொண்டே, “லட்சுமி அத்தை ரொம்ப நல்லவங்க. இவனை மாதிரி கிடையாது” என்றாள்.
தர்ஷினி வீட்டில் இருந்தால் இங்கு வந்து விடுவாள். எல்லாப் பிராணிகளுக்கும் அவள்தான் பெயர் வைப்பாள்.
“எல்லாத்துக்கும் உன் ஃப்ரெண்ட்ஸ் சொந்தக்காரங்க பேரையே வச்சிருக்கியே… இந்த ஃபெலிஸ் யாரு?” எனக் கேட்டாள் சுப்ரியா.
“அதுவும் என் ஃப்ரெண்டோட பேருதான்” என்றாள் தர்ஷினி.
“எங்களுக்கு தெரியாம யார் ஃபெலிஸ்ன்னு உனக்கு ஃபிரெண்ட்” எனக் கேட்டாள் சுப்ரியா.
“அது ஸ்கூல் ஃப்ரெண்ட் இல்ல. இந்த ஃப்ரெண்ட் சில வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஹெல்ப் பண்ணினான். அதுக்கப்புறம் நான் அவனை பார்க்கல. அவன் நினைவாதான் இந்த மாடப்புறாவுக்கு ஃபெலிஸ்ன்னு பேரு வச்சி இருக்கேன்” என்றாள்.
நூர்ஜகான் சாப்பிட அழைக்க வீட்டின் உள்ளே சென்றனர். மட்டன் பிரியாணி, சிக்கன் சுக்கா, மீன் குழம்பு, மீன் வருவல், எலும்பு சூப் என விருந்து அமர்க்களப்பட, எல்லோரும் ஆசையாக ரசித்து சாப்பிட ஆரம்பித்தனர்.
“அம்மா குடல்ல கோலா உருண்டை போடலையா?” என தர்ஷினி உரிமையாய் கேட்க, “இதைப் பார்த்தீன்னா மத்தது எதையும் ஒழுங்கா சாப்பிட மாட்டியே… அதான் முன்னாடியே கொடுக்கல” என கூறிக் கொண்டே கோலா உருண்டைகள் இருந்த பாத்திரத்தை கொண்டுவந்து கொடுத்தார் நூர்ஜஹான்.
ஆசையாய் வாங்கிய தர்ஷினி அதையும் ஒரு கை பார்த்தாள்.
“உன்னை என் ஃப்ரெண்ட் தர்பூசணின்னு கிண்டல் பண்றான்னு கோவம் மட்டும் வருது. இப்படி சாப்பிட்டின்னா சீக்கிரம் உன்னை எல்லோருமே அப்படித்தான் கூப்பிடப் போறோம்” என்றான் பஷீர்.
“பஷீர் அண்ணா யூ டூ…” என தர்ஷினி கூற, “ஏன் பேட்டி இவனை எப்படி அண்ணான்னு அழகா, மரியாதையா கூப்பிடுற… இன்பாவும் இவன் வயசுதானே? அவனை மட்டும் மரியாதை இல்லாம வாடா போடான்னு சொல்றியே… அதான் அவன் உன்கிட்ட வம்பிழுத்துக்கிட்டே இருக்கான்” என்றார் ரஹீம் பாய்.
“அவன பத்தி பேசி என் கோவத்தை அதிகமாக்கிட்டீங்க… எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னு தெரியலையே” என தர்ஷினி கூற “நாலு கோலா உருண்டையை எடுத்து வாயில போட்டுக்க” என நசீர் கூறினான்.
“ஒரு கையில் கோலா உருண்டைகளை எடுத்து வாயில் போட்டு தர்ஷினி மென்று சாப்பிட ஆரம்பிக்க, பார்த்த மற்றவர்கள் வாய்விட்டு சிரித்தனர்.
“அவன் கூட எப்படி அண்ணா ஃப்ரெண்டா இருக்கீங்க? அவன் எல்லாம் ஒரு லாயரு…? என்னத்த வாதாடுவானோ…? நைட் ஆனா குடிச்சிட்டு நல்லா வேணா உளருவான். முதல்ல இவன் பேர்ல ஒரு நியூசென்ஸ் கேஸ போட்டு உள்ள தள்ளணும்” என தர்ஷினி பேசிக்கொண்டே போக, இன்பா அங்கு வந்ததை பஷீர் கவனித்து விட்டு கண்களால் எச்சரிக்கை செய்தான். அவனது எச்சரிக்கையை கவனிக்காமல் பேசிக் கொண்டே போனாள் தர்ஷினி.
அவள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு வாயிலில் நின்றிருந்தான் இன்பசாகரன்.