அத்தியாயம் -21(2)

உறங்காமல் அறைக்கு வெளியில் நடை போட்டுக் கொண்டிருந்த ஜெய்யிடம் பால் கிளாசை நீட்டினான் ஜனா.

வழக்கம் போல சீறி விடாமல் அதை வாங்கிக் கொண்ட ஜெய், “அன்னைக்கு அவளுக்கு கால் பண்ணினேன், எடுத்திட்டு… கால் கட் பண்ணிட்டா” என்றான்.

“ஏதாச்சும் பேசினியா நீ?” எனக் கேட்டான் ஜனா.

இல்லை என ஜெய் தலையாட்ட, “திருப்பி கால் பண்ணேன் ண்ணா” என்றான்.

தம்பியை முறைத்தவன், “அவ ஏன் டா போனா? என்ன நினைப்புல இருக்கா அவ? நான் இல்லாம இருக்க முடியுதுல்ல, அப்புறம் ஏன் டா அவகிட்டேயே தொங்கணும் நான்? உன் கல்யாணம் முடியட்டும் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்” என காட்டமாக சொல்லி விட்டு பால் அருந்தினான்.

ஜனாவுக்கு பகீர் என இருந்தது. தற்காலிக பிரிவு அண்ணியின் வருகையின் பின் நிரந்தர பிரிவாகிப் போகுமோ என பயந்து விட்டான்.

காலி கிளாசை தம்பியிடம் கொடுத்த ஜெய், “என்ன சொல்றா, வர்றாளா இல்லியா?” எனக் கேட்டான்.

“எங்கேஜ்மெண்ட்க்கு டேட் ஃபிக்ஸ் ஆனதும் டிக்கெட் போட்ருவாங்களாம்” என்றான் ஜனா.

ஏதோ யோசனையோடே தலையாட்டிக் கொண்ட ஜெய் அறைக்கு சென்று விட்டான்.

மஹதிக்கு அழைத்த ஜனா அண்ணனின் பேச்சை மேலோட்டமாக சொன்னான்.

ஜோதி அவரின் அறையிலிருந்து ஓய்வறை செல்வதற்காக மகளை கடந்து சென்றார். அம்மா போகும் வரை அமைதி காத்தவள், “ஐயையோ அப்போ மாமா டிவோர்ஸ் பண்ண பார்க்கிறாரா?” என பயத்தோடு கேட்டாள்.

“அவர் என்ன நினைக்கிறார்னு தெரியலை, பேசுறத வச்சு என்னால எதுவும் புரிஞ்சுக்க முடியலை, ஆனா இப்படி நினைக்கிறாரோன்னு டவுட்டா இருக்கு, அண்ணி வர்றாங்கதானே?”

“கண்டிப்பா அக்கா வருவா. இந்த டிவோர்ஸ் விஷயம் எல்லாம் அக்கா காதுக்கு போனா ரொம்ப சிக்கல் ஆகிடும். பேச்சு வாக்குல கூட அக்காட்ட சொல்லிடாதீங்க. என் அக்கா லைஃப் சரியாகணும், நாமதான் ஏதாவது பண்ணனும்” என்றாள் மஹதி.

ஓய்வறையிலிருந்து வந்த ஜோதி, “சீக்கிரம் பேசிட்டு நேரத்தோடு படு மஹதி” என சொல்லிக் கொண்டே அலமாரியில் வைத்து விட்டு சென்ற கைப்பேசியை எடுத்து காதில் வைத்துக்கொண்டார்.

“சொல்லு ஸ்ரீ, இப்போல்லாம் இப்படித்தான் ராத்திரில அடிக்கடி பாத்ரூம் போறேன். சுகர் கண்ட்ரோல்ல இருந்தாலும் ரொம்ப தொந்தரவு பண்ணுது” பேசிக் கொண்டே அறைக்குள் நுழைந்து விட்டார் ஜோதி.

பேயை கண்டது போல விழித்த மஹதி பேசாமல் இருக்க, “மஹதி… மஹதி…” என அழைத்தான் ஜனா.

மஹதி விவரத்தை சொல்ல, “இப்படியா சுத்தி என்ன நடக்குதுன்னு பார்க்காம இருப்ப, அண்ணன் என்ன சொன்னாருன்னு எனக்கே சரியா புரியலை, இதுல அண்ணி காதுல என்ன விழுந்துச்சு என்ன புரிஞ்சுக்கிட்டாங்கன்னு தெரியலையே” என்றான் ஜனா.

“நான் வேணும்னா அக்காக்கு ஃபோன் பண்ணி கரெக்ட்டா எக்ஸ்பிளைன் பண்ணிடவா?”

“உனக்கு இவ்ளோ அறிவு பொறந்ததிலேருந்தே இருக்கா, இல்லை இப்போதான் முளை விட்டுச்சா?”

“என்ன நக்கலா?”

“பின்ன? அண்ணிக்கு தெரிஞ்சுதா என்னன்னு தெரியாம நீ போட்டு குட்டைய குழப்பி விட்றாத. முதல்ல அவங்க வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்” என சொல்லி விட்டான் ஜனா.

பெண் பார்க்கும் நாளன்று தன் நண்பன் சியாமளனை உதவிக்கு என அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் ஸ்ரீ. திருச்சியிலேயே ஒரு கல்லூரியில் துணை பேராசிரியராக பணி புரியும் சியாமளன் அடிக்கடி ஜோதியை பார்த்து செல்வான்தான்.

அவன் செய்வதற்கென பெரிய உதவிகள் இருப்பதில்லை, ஜெய் நேரில் வரா விட்டாலும் ஜனாவை கொண்டே மாமியாரின் தேவைகளை கவனித்துக் கொள்வான். ஸ்ரீ இங்கிருந்து செல்வதற்கு முன்னரே ஜனா, சியாமளன் இருவரிடமும் தன் பிறந்த வீட்டை பார்த்துக் கொள்ளும் படி கேட்டிருந்தாள்.

ஜனாவும் தன் வார்த்தைக்காக செய்கிறான் என நினைத்துக் கொண்டாள். அவனுடன் அவள் பேசும் போது அவனாகவே, “அத்தைய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன் அண்ணி, எனக்கு முன்னாடி அண்ணா ஞாபக படுத்தினார்” என அண்ணன் பற்றியும் ஜனா சொல்வான்தான்.

ஜனா எப்போதும் அவனாகவே இப்படி ஏதாவது கூடுதலாக சொல்வான் என்பதால் இது போன்ற பேச்சையும் அப்படியே நினைத்து விட்டாள்.

இப்போது ஜனாதான் மாப்பிள்ளை பையன் என்பதால் ஜெய்யே மாமியாருக்கு அழைத்து என்ன வேண்டும் என எல்லாம் கேட்டுக் கொண்டான். காலையில் அனைத்தும் வீடு வந்து சேருமாறு பார்த்துக் கொண்டான்.

இரவில் மகளிடம் பேசும் போது கூட, “ஜெய் தம்பி ஃபோன் போட்டு கேட்டுச்சு, என்னை அலைய வேணாம் பார்த்துக்கிறேன்னு சொல்லிடுச்சு” என சொல்லவும் செய்திருந்தார் ஜோதி.

நேற்று வரை அனைத்தையும் ஜனாதானே பார்த்துக் கொண்டான், இப்போதைய திடீர் அக்கறை எதனால்? தம்பியின் திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டுமென்றுதான் இதெல்லாமோ என நினைத்துக் கொண்டாள் ஸ்ரீ.

அனைவரும் வரும் நேரம் அம்மாவுக்கு உதவ ஆள் வேண்டும் என்பதால் தோழனை அனுப்பி வைத்து விட்டாள்.

காருக்குள் இருந்த வரை மாப்பிள்ளை வீட்டு பக்க ஆளாக இருந்த ஜெய் இறங்கும் போதே எடுத்து செய்ய ஆள் இல்லாத மாமியார் வீட்டு ஆளாகத்தான் தன்னை நினைத்துக்கொண்டான்.

அனைவருக்கும் முன் வீட்டு வாசலுக்கு சென்று தன் மாமாக்கள் சித்தப்பா குடும்பங்களை வரவேற்கவும் செய்தான்.

“எல்லாரும் வந்திட்டாங்க ம்மா” என குரல் கொடுத்த சியாமளனின் குரலில் ஒரு வித எரிச்சல் படர திரும்பினான் ஜெய்.

“வாங்க ஸார் வாங்க…” இன் முகத்தோடு வரவேற்று சந்தனம் குங்குமம் இருந்த சின்ன தாம்பாளத்தை நீட்டினான் சியாமளன்.

‘என் மாமியார் வீட்டுல என்னைய வரவேற்க நீ யாருடா?’ மனதில் கறுவிய ஜெய் உர் என நின்றிருக்க சியாமளனின் முகமும் சுருங்கியது.

 அதற்குள் மற்றவர்கள் வந்து விட்டனர். சியாமளனை கடந்து ஜெய் உள்ளே செல்ல, மனம் சுணங்கினாலும் வந்தவர்களை வரவேற்றான் சியாமளன்.

“என்ன பாஸ் எப்படி இருக்கீங்க பார்த்து ரொம்ப நாளாச்சு? இன்னிக்கு உங்களை பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை. பொண்ணு வீட்டு ஆளா நீங்க? அதெல்லாம் ஒத்துக்க முடியாது, நம்ம சைட்தான் நீங்க” தோளில் கை போட்டு இயல்பாக பேசினான் ஜனா.

ஜனாவின் நிதி நிறுவனத்தில் சீட்டு போட்டிருக்கிறார் சியாமளனின் அம்மா, அதனால் இப்போதும் அவர்களிடம் நல்ல ஆரோக்கிய நட்பு தொடர்கிறது.

“அதெல்லாம் முடியாது, பொண்ணு சைட் ஆள்தான் நான், நேத்து ஒரு தடவ, இன்னிக்கு காலைல ரெண்டு தடவன்னு பேசிட்டா ஸ்ரீ” என்றான் சியாமளன்.

இதைக் கேட்ட ஜெய்யின் காதுகளில் புகை.

டீ காபியோடு இனிப்பு கார வகைகள் கொடுக்கவும் ஏற்பாடாகியிருந்தது. வீட்டு மனிதன் போல தட்டுக்களில் எல்லாம் எடுத்து வைத்து ஜோதிக்கு உதவினான் சியாமளன். அவனது அம்மாவுக்கு பெண் பிள்ளைகள் இல்லாத காரணத்தால் சிறு வயதிலிருந்தே அவருக்கு உதவிகள் செய்து வளர்ந்தவன். ஆகவே ஜோதி தடுத்தும் கேட்கவில்லை.

எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஜெய்யின் முகம் இறுக்கமாகிக் கொண்டே சென்றது.

பாட்டி ஓய்வறை செல்ல வேண்டும் என எழுந்தார். இன்று சஷ்டி இல்லா விட்டாலும் காலையில் சாப்பிடாமல் விஷேஷ விரதம் இருக்கும் பாட்டியை தனியே விடாமல் அவரின் கை பிடித்துக் கொண்டான் ஜனா.

தம்பியை உட்கார செய்த ஜெய் அவனே பாட்டியை அழைத்துக் கொண்டு சென்றான்.

பின் பக்கத்தில் தங்கையுடன் காணொளி அழைப்பில் இருந்தாள் ஸ்ரீ. அக்காவிடம் தன்னை காட்டி, “நான் ஓகே வா?” எனக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அவ்ளோ அழகா இருக்கடா” என்ற ஸ்ரீ காதில் அணிந்திருந்த தொங்கலை கழட்டி விட்டு ஜிமிக்கி மாற்றிக் கொள்ள சொன்னாள்.

சியாமளனை அழைத்து அவனது கையில் கைப்பேசியை கொடுத்த மஹதி, “அக்காட்ட பேசிட்டு இருங்க ண்ணா, நான் ஜிமிக்கி மாத்திட்டு வந்திடுறேன், அக்கா இரு வந்திடுறேன்” என சொல்லி அறைக்கு சென்றாள்.

பாட்டியோடு அங்கு வந்தான் ஜெய். “நீ இல்லாம மஹதிக்கு கஷ்டம் பாரு, நல்ல அக்காவா அழகா இங்க இல்லாம கண்டம் விட்டு கண்டம் போய் காண்டாக்கி விடுற எல்லாரையும். அவ உன்னை ரொம்ப மிஸ் பண்றா” என ஸ்ரீயிடம் பேசிக் கொண்டிருந்தான் சியாமளன்.

ஸ்ரீ பதிலே பேசாமல் கைப்பேசி திரையை வெறித்துக் கொண்டிருந்தாள்.

ஜெய் அங்கு வந்ததை சியாமளன் கவனித்திருக்கவில்லை.

வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்ட ஜெய் சட்டையின் கையையும் ஏற்றி விட்டுக் கொண்டே சியாமளனை உக்கிரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

ஸ்ரீயின் முக மாற்றத்தை கவனித்த சியாமளன் பின்னால் திரும்பி பார்த்தான். ஜெய்யின் பார்வையில் என்ன பேச எனத் தெரியாமல் விழித்தான்.

அங்கே என்ன நேரம் இப்போது என மனக் கணக்கு போட்ட ஜெய், அவனை பார்த்து நக்கலாக சிரித்து ‘பேசு’ என்பது போல சைகை செய்தான். ‘நீ பேசுடா, பேசிப் பாருடா!’ என மிரட்டுவது போலிருந்தது அவனின் செய்கை.

ஓய்வறையிலிருந்து வந்த பாட்டி சியாமளனின் சங்கட நிலையிலிருந்து அவனை காப்பாற்றி விட்டார்.

மஹதி வந்து கைப்பேசியை பறித்து தன் ஜிமிக்கியை அக்காவிடம் காட்டினாள். ஜெய் அங்கிருந்ததால் வெட்கப்பட்டவள் கண்களாலேயே ஓகேவா என அக்காவிடம் கேட்டு அதற்கு மேல் இலகுவாக பேச முடியாமல் பாட்டியின் கையில் கைப்பேசியை தந்து உள்ளே சென்று விட்டாள்.

விட்டால் போதுமென சியாமளனும் மஹதியின் பின்னால் ஓடி விட்டான்.

“என்னடி ஆந்தை கணக்கா இந்நேரம் முழிச்சிட்டு இருக்க?” என ஸ்ரீயிடம் கேட்ட பாட்டி, “இந்தாடா உன்னைத்தான்… என் தங்கத்தை வுடாம நீயே கூட்டியாந்தியே, ஆறு கிலோ மீட்டர் தள்ளிப் போய் நிக்கிற, வா வந்து என் கையை புடிடா” என ஜெய்யிடம் சொன்னார்.

பாட்டியை பார்த்து பல்லை கடித்துக் கொண்டே அவரருகில் வந்தவன் கைப்பேசி கேமராவில் தன் உருவம் விழாத படி தள்ளி நின்றே அவரின் கையை பிடித்தான்.

“அது பாட்டி… மஹதிதான் கால் பண்ணினா, நல்லா இருக்கீங்களா பாட்டி?” எனக் கேட்டாள் ஸ்ரீ.

“எனக்கென்னடி நல்லாதான் இருக்கேன், நீதான் என் பேரனை இந்தா தண்டி தாடி வளர்க்க வுட்டுட்டு…” என்றவர் “என்னடி முடிய வெட்டி விட்டுட்டியா?” அவளின் கூந்தலின் நீளம் வெகுவாக குறைந்திருப்பதை கண்டு விட்டு வியப்பாக கேட்டார்.

“மெயின்டெயின் பண்ண முடியலை பாட்டி” அவள் சொல்லிக் கொண்டிருக்க, எல்லாம் காதில் வாங்கிக் கொண்டுதான் இருந்தான் ஜெய்.

“இங்க எல்லாம் நல்லாதான் பார்த்துகிட்ட, என்னமோ போ ஆளே மாறி போயிட்ட. நீ கட் பண்ணிட்ட அத இவன் வளக்கிறான். பாரு உம்புருஷன் மூஞ்சை” என்ற பாட்டி ஜெய்யை ஸ்ரீக்கு காட்டினார்.

எதிர்பார்க்காத ஜெய் தன் பாட்டியை முறைத்தான். அவனது கையிலேயே கைப்பேசியை திணித்தவர், “மஹதியோட ஃபோன் பத்திரமா புடிச்சு பேசு” என சொல்லி உள்ளே சென்று விட்டார்.

ஜெய்யின் கையில் கைப்பேசி இருக்க, பார்வையோ வேறெங்கோ இருந்தது. மனமெல்லாம் பட படப்பு. அது வெளியில் தெரியாமல் நின்றிருந்தான்.

ஜெய்யை பார்த்த ஸ்ரீக்கு கண்கள் கலங்கியது. விவாகரத்து பற்றி தங்கை பேசியது நினைவில் வரவும், “நடு ராத்திரில கால் வரவும் என்னவோ ஏதோன்னு நினைச்சிட்டேன். அப்புறம்தான் எத பத்தி பேச கால் பண்ணியிருந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்” என்றாள்.

சட்டென அவனது பார்வை திரையில் குவிந்தது. ஆள் மாறித்தான் போயிருந்தாள். தோள் தொட்ட முடி, சற்றே சதை பிடிப்போடிருந்த கன்னங்கள் என அளவிட்டான் அவளை.

அவனது நேர்ப் பார்வையில் தடுமாறியவள், “உங்க முடிவுக்கு நானும் சம்மதிக்கிறேன். ஆனா மஹதி ஜனா கல்யாணம் முடிஞ்ச பிறகுதான்…” என்றவளுக்கு தொண்டை அடைத்தது.

அவன் கண்களை சுருக்கிக் கொண்டு அவளை பார்த்தான். அவளும் புருவங்களை நெறித்தாள்.

“என்ன… என்ன முடிவு, கல்யாணத்துக்கு அப்புறம் என்ன செய்யணும்?” கடினமாக கேட்டான்.

எனக்கென்ன பயம் என்பது போல பார்த்தவள், “டிவோர்ஸ்” என்றாள்.

வான் நோக்கியியிருந்த வில்லின் விசையிலிருந்து விடுபட்ட அம்பு போல அவனது கோவம் மேலே ஏறி சீறியது.

“வந்து சேருடி முதல்ல!” பற்கள் அரை பட அத்தனை சீற்றமாக சொன்னவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

“மாறவே மாட்டார், திருந்தவே மாட்டார். பேச்சை பாரு! அங்க போயி வேற இந்தாளு மூஞ்சுல முழிக்கணுமா நான்? ஹையோ!” நெற்றியை பிடித்துக்கொண்டு வாய் விட்டு புலம்பினாள் ஸ்ரீ.