புதிய உதயம் -21

அத்தியாயம் -21(1)

உறங்கிக் கொண்டிருக்கும் பாட்டியை எழுப்பி விட்டான் ஜனா.

“கால் குடைச்சல்ல தூக்கமே வராம இப்போதான்டா கண்ணசந்தேன் கடங்காரா!” திட்டிக் கொண்டே எழுந்தார் பாட்டி.

அவரது காலடியில் அமர்ந்து கொண்டவன் அவரின் கால்களை மடியில் எடுத்துப்போட்டுக் கொண்டு அமுக்கி விட்டான்.

“பயமா இருக்குடா, என்ன பண்ணிட்டு வந்து கால பிடிக்கிற, உங்கம்மாள கூட சமாளிச்சிடலாம், அவன்கிட்ட நான் எதுவும் வக்காலத்து பேச மாட்டேன், எதுவா இருந்தாலும் நீயே பார்த்துக்க” என்றார்.

“அப்படிலாம் சொல்லக்கூடாதுடா ராஜாம்பா, எனக்கு இருக்கிறது நீ ஒருத்திதானே?” கொஞ்சலும் கெஞ்சலுமாக சொன்னவன் அவரது உள்ளங்காலில் கிச்சு கிச்சு மூட்டினான்.

“என்னை விட்ருடா” என சொல்லி பாவமாக பார்த்தார்.

கட கடவென விஷயத்தை அவன் சொல்லவும் எழுந்து அமர்ந்தவர் கேசத்தை அள்ளி உதறி கொண்டையிட்டுக் கொண்டே, “சரியா வருமாடா?” என்றார்.

“வேற ஏதாவது வழி இருந்தா சொல்லு”

“அதுக்காக கல்யாணம் வரை போவியா?”

“ஏன் எனக்கு கல்யாண வயசு ஆகலையா? பொண்ணு பார்த்து அலையற கஷ்டம் உனக்கு இல்லாம பண்ணிருக்கேன் நான்?” என்ற பேரனின் கன்னத்தில் இடித்து வைத்து சிரித்தார்.

“என்ன வேணா கூட குறைச்ச சொல்லிக்க, சீக்கிரம் டேட் ஃபிக்ஸ் பண்ணி அண்ணிய வர சொல்லி அவசர படுத்து” என சொல்லி சென்றான் ஜனா.

அடுத்து அனைத்தையும் பாட்டி பார்த்துக் கொண்டார். துளசிக்கும் ஜோதிக்கும் பெரிதான மறுப்புகள் இல்லை, ஆனால் சின்ன சின்ன தயக்கங்கள் இருந்தன. பேசி பேசியே சரி கட்டி விட்டார் பாட்டி.

ஜெய்யின் காதுக்கு விஷயம் சென்ற போது வியப்பாக பார்த்தான். ஜனாவை அழைத்து விசாரித்தான். அவன் ஆமாம் நாங்கள் விரும்புகிறோம் என சொல்லவும் அவன் முன்னிலையிலேயே மஹதியிடம் கைப்பேசியில் பேசினான். அவள் ஒத்துக் கொண்ட பிறகும் அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

“நீங்க ரெண்டு பேரும் அப்படி பழகி ஒண்ணும் பார்த்தது இல்லையே நான்” எனக் கேட்டான்.

“என்ன ண்ணா நீ? எல்லாம் நீ பார்க்கிற மாதிரியா பழகுவோம்?” என்றான் ஜனா.

“எவ்ளோ நாளாடா?”

“நாளா? அது இருக்கும் அறநூறு எழுநூறு நாளா”

“என்ன?”

“ரெண்டு வருஷத்துக்கும் மேலண்ணா. அப்பவே இந்த யோசனை இல்லாம போச்சு. அதான்… இந்த கல்யாணம் பண்ணிக்கிற யோசனை”

“ஏய் மஹதி படிச்சிட்டு இருந்தா அப்ப”

“ஏன் நீ மட்டும் அண்ணி படிச்சிட்டு இருக்கப்பதான் கல்யாணம் பண்ணிக்கிட்ட”

“கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு”

“ஹையோ அண்ணா! நீ கேட்டதுக்கான பதில்தான் ண்ணா அது”

“சரி போ, பெரியவங்க நாங்க பேசிட்டு எல்லாம் முடிவு பண்றோம்”

“பண்ணு பண்ணு, அப்படியே அண்ணிய வர சொல்லி பேசிடு” என்றான் ஜனா.

“உன்னை போலாம்னு சொல்லிட்டேன்”

“விளையாட்டு இல்ல ண்ணா, அதெப்படி அண்ணி இல்லாம நாங்க கல்யாணம் பண்ணிக்கிறது?”

“நீயே கூப்பிட்டுக்க”

“என் கல்யாணத்துக்கு நானே கூப்பிடுறதா? உன் கல்யாணம் அப்போ நீயா போய் அவங்கள கூப்பிட்ட? நானும் பாட்டியும்தான் அழைச்சிட்டு வந்தோம்”

“என்னடா இப்போ?”

“ஒழுங்கா அண்ணனா இருந்து உன் கடமையை செய்” என்ற ஜனா அண்ணனின் கைப்பேசியை எடுத்தான்.

அது லாக் ஆகி இருக்க ஜெய்யின் கட்டை விரலை தேய்த்து அன்லாக் செய்தான்.

ஸ்ரீயின் அமெரிக்க கைப்பேசி எண் அதில் சேமிக்கப் பட்டிருக்கவில்லை. அண்ணனை முறைத்துக் கொண்டே தன் கைப்பேசியிலிருந்து அவனது கைப்பேசிக்கு ஸ்ரீயின் எண்ணை அனுப்பி வைத்தான்.

ஜெய் ஏதோ யோசனையும் இறுக்கமுமாக இருந்தான். அண்ணிக்கு அழைப்பு விடுத்த ஜனா, “இப்போ அங்க நடு ராத்திரி, விடியற வரை அண்ணி ஃப்ரீதான்” என சொல்லி கைப்பேசியை அண்ணனின் கையில் திணித்து விட்டு ஓடிச் சென்று விட்டான்.

“அதிகப்பிரசங்கி எருமமாடு!” ஜனாவை திட்டிக் கொண்டே அழைப்பை துண்டிக்க போனான்.

ஸ்ரீ இன்னும் உறங்கியிருக்கவில்லை. மஹதியின் விஷயமாக ஜோதி பேசியிருக்க அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தாள். ஜெய்யின் எண் திரையில் மின்னவும் திடுக்கிட்டு போய் விட்டாள்.

ஜெய் அழைப்பை துண்டிக்கும் முன் அழைப்பை ஏற்றுக் கொண்டு விட்டாள். ஆனால் இரண்டு பக்கமும் அமைதியாக இருந்தது.

ஸ்ரீ ஹலோ கூட சொல்லவில்லை, அழைத்தவன்தான் பேச வேண்டும் என காத்திருந்தாள். அவளிடம் இப்படி பேச மனதளவில் தயாராக இல்லாதவனும் முதலில் ஓசை கொடுக்க முன் வரவில்லை.

முழுதாக இரண்டு நிமிடங்களுக்கு பிறகு குரலை செருமினாள் ஸ்ரீ. ஒரு கையால் தாடியை தடவிக் கொண்டே இன்னொரு கை விரலால் மேசையை தட்டிக் கொண்டிருந்தான். அத்தனை பதற்றம் அவனிடம்.

லைனில் இருக்கிறானா என கைப்பேசி திரையை பார்த்தாள். அவளின் உதடுகள் பிரிகின்றன, நாக்குதான் அசைய மறுக்கிறது.

பல மாதங்களுக்கு பின் ஸ்ரீக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ஸ்ரீயை அழைக்க சொல்லும் மூளையின் உத்தரவை நிறைவேற்றலாம் என அவன் முடிவெடுத்தான். அதே நொடியில் அவளுக்கு கேவல் பிறக்கும் அபாயம் ஏற்பட்டது, தன் அழுகையை அவனுக்கு காண்பித்துக் கொடுக்க விரும்பாதவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.

“ஸ்ரீ…” என அவன் அழைத்ததை அவள் கேட்டிருக்கவில்லை.

ஏமாற்றத்தோடு திரும்ப அழைப்பாளோ என சில நிமிடங்கள் கைப்பேசியை வெறித்துக் கொண்டு பார்த்திருந்தான். அது உறங்கிக் கொண்டே இருந்ததில் கடுப்பாகி, தனக்கு அழைக்காத ஸ்ரீயின் மீது கோவமாகி கைப்பேசியை சுவரை நோக்கி விட்டெறிந்தான்.

ஓய்வறை சென்று முகம் கழுவி வந்த ஸ்ரீ அவனுக்கு அழைப்பு விடுக்க, அந்த அழைப்பு சென்றடைய அவனது கைப்பேசி உயிரோடு இருக்க வேண்டுமே?

அண்ணன் பேசினாரா என்னானது என ஜெய்யின் முகத்தை பார்த்துக் கொண்டே திரிந்தான் ஜனா. பின்னர்தான் கைப்பேசி உடைந்து போனது அவனுக்கு தெரிய வந்தது. ‘பேசிவிட்டு உடைத்தாரா இல்லை அழைப்பு சென்று கொண்டிருக்கும் போதேவா?’ என அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இது பற்றி அண்ணியிடம் விசாரித்து அதனால் அவர்களின் மனஸ்தாபம் இன்னும் கூடிப் போகுமோ என்ற பயத்தில் ஸ்ரீயிடமும் பேசாமல் விட்டான்.

இரண்டு நாட்கள் கைப்பேசி இல்லாமலே திரிந்தான் ஜெய். வேலை சம்பந்தமாக அலுவலக அலைபேசியில் பேசிக் கொண்டான். அவனுடைய பெர்சனல் எண்ணுக்கு தொடர்பு கொள்ள இயலாதவர்கள் சசியை தொடர்பு கொண்டார்கள்.

“ஒரு அவசரத்துக்கு என்னடா பண்ணுவேன், ஒழுங்கா ஃபோன் வாங்கு” என துளசி திட்டிய பிறகுதான் புது கைப்பேசி வாங்கினான்.

இரு வீட்டிலும் ஜனா, மஹதி திருமணத்திற்கு சம்மதித்து விட்டனர். ஜெய்யின் திருமணம் அவசரமாக சில சம்பிரதாயங்கள் கடைப் பிடிக்க படாமல் நடந்தது. அவர்களின் வாழ்வும் இக்கட்டில் இருக்க ஜனாவின் திருமணத்தில் எந்தக் குறையும் வைக்க கூடாது, சொந்த பந்தங்களை அனுசரித்து எல்லாம் திருப்தியாக நடத்த வேண்டுமென முடிவெடுத்தார் துளசி.

ஆகவே அவரது சகோதரர்களின் குடும்பங்கள் கணவரின் தம்பி குடும்பம் ஆகியோரை அழைத்துக் கொண்டு முறையாக பெண் பார்க்கும் படலத்தை நடத்த திட்டமிட்டார்.

வசதியாக வேறு வீடு மாறுங்கள் என ஸ்ரீ சொல்லியும் ஜோதி கேட்டிருக்கவில்லை. இரண்டு பேருக்கு எதற்கு பெரிய வீடு, கடைக்கு செல்லவெல்லாம் இங்கேதான் வசதி படுகிறது, மஹதியின் திருமணத்தின் போது பார்த்துக் கொள்ளலாம் என சொல்லி விட்டார். சின்ன மகளுக்கு திடீரென திருமணம் முடிவாகும் என அவர் நினைத்திருக்கவில்லை.

சாப்பாடு போடவெல்லாம் மாமியாரின் வீடு வசதி படாது என ஜெய்க்கு தெரியும், எங்கே மாமியார் சங்கட படுவாரோ என நினைத்து வேண்டாமென அம்மாவிடம் சொன்னான்.

“நீ சும்மா ஏதாவது சொல்லாத, உன் வாழ்க்கை இப்படி ஆனதிலிருந்து பயமா இருக்கு. அரை மணி நேரத்துல டீயோ காபியோ குடிச்சிட்டு கிளம்ப போறோம். மொத்தமா பத்து பேர்தான். மஹதியோட அம்மாகிட்ட பேசியாச்சு, அவங்களும் சரின்னுட்டாங்க” என்றார் துளசி.

“எப்போலேருந்து ஸ்ரீயோட அம்மா மஹதியோட அம்மா ஆனாங்க ம்மா” எனக் கேட்டான் ஜெய்.

துளசியும் வேண்டுமென்றே சொல்லியிருக்கவில்லை. அந்த நொடி தானாக அப்படித்தான் அவர் வாயிலிருந்து வந்திருந்தது. மகன் கேட்கவும்தான் அவருக்கே அது விளங்கியது.

ஸ்ரீயை தூக்கி வைத்து பேசும் போது அமைதி காப்பவன் விட்டுக் கொடுத்தால் சிலிர்த்துக் கொள்கிறான் என்பதை சட்டென பற்றிக் கொண்டார்.

“ஏன் மஹதிக்கும் அவங்க அம்மாதானே? யார பத்தியும் கவல படாம போனவ பத்தி எதுக்கு பேசணும் நான்? இனிமே அவங்க மஹதி அம்மாதான்!” என மகனின் முகத்தில் அடித்தது போல சொல்லி சென்று விட்டார்.

ஜெய்க்கு திகு திகு என மனம் எரிந்தது. ஆனாலும் அம்மாவை எதுவும் சொல்லாமல் சென்று விட்டான்.

அடுத்த வந்த நாட்களில் வேண்டுமென்றே, ‘மஹதி அம்மா’ என்றே சுட்டிக் காட்டுவதை தொடர்ந்த துளசி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், “மஹதி வந்துதான் வீட்டுக்கு மகிழ்ச்சி வரணும், மஹதி வந்தாவது விடியட்டும், மஹதி வரப் போற பேச்சு எடுக்கவுமே வீட்டுக்கு ஒரு களை வந்திடுச்சு” என பேசி பேசி ஜெய்யை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்.

அன்றைய இரவு அண்ணனும் தம்பியும் சேர்ந்து சாப்பிட்டார்கள். பெரிய மகனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார் துளசி. ஜனா எல்லாம் பார்த்து தானே வைத்துக் கொள்வான், ஜெய்தான் சாப்பாட்டில் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. ஆகவே பெரிய மகனுக்கே கூடுதல் கவனம் கொடுத்தார்.

“என்னம்மா ஓரவஞ்சனை இது?” என விளையாட்டாக கேட்டான் ஜனா.

“உனக்கென்னடா உன்னை பார்த்துக்க ஆள் வரப் போறா, இவன் சேதி அப்படியா? அடங்காப்பிடாரி விட்டுட்டு போயிட்டா, நான் கவனிச்சாதான் உண்டு” என்றார்.

“அதுவும் சரிதான், பாவம் அந்த ஜடா முனி, அவரையே கவனி ம்மா” என்றான் ஜனா.

அம்மா ஸ்ரீயை பேசியதிலேயே சாப்பிடுவதை நிறுத்தி விட்டான் ஜெய், இப்போது தம்பி கிண்டலாக சொல்லவும் கோவம் வந்து விட்டது.

“நையாண்டி ***யெல்லாம் என்கிட்ட பேசாத, சாப்பிட மட்டும் வாய தொற போதும்” என தம்பியிடம் சீறினான்.

“தலைல மட்டுமில்லாம மூஞ்சிலேயும் உனக்கு நிறைய முடி இருக்கிறதால இப்படித்தான் ஜம்பமா பேச சொல்லும். வயசாகிட்டு வருதுண்ணா உனக்கு, ஃபோன் பேசுன்னு சொன்னா உடைச்சு போடுற, கொதிச்சிட்டிருக்க பிளட் சீக்கிரம் சுண்டிப் போயிடும், உடம்பு தோலும் சேர்ந்து சுருங்கிடும், அதுக்குள்ள நல்ல முடிவா எடு” என்றான் ஜனா.

“அவனை ஏன் டா பேசுற, அவளுக்கு திமிறு ஜாஸ்தி, அவ தங்கச்சி அவளை மாதிரி இருக்க மாட்டாங்கிற தைரியத்துலதான் மஹதிய உனக்கு கட்டி வக்க சம்மதிச்சேன். புருஷன விட்டுட்டு போனவள பத்தி…”

“வாய மூடும்மா!” சத்தமில்லாமல் கடிந்தான் ஜெய்.

துளசி மகனை நேர்ப்பார்வை பார்த்திருந்தார்.

“எங்க பிரச்சனை எங்களுக்குள்ள, ஒரு வார்த்தை அவளை யாராவது பேசினா…” என்ற ஜெய், சற்றே தணிந்து, “அவளை பேசாத ம்மா” என சொல்லி எழுந்து சென்று விட்டான்.

“டைம் பாமை பெத்து வளத்த மகராசியே! முக்கா மணி நேரத்துக்கு முன்ன கூட அண்ணியோட இந்த வாய்தானே பேசிச்சு, இந்த பல்லுதான ஈஈ ன்னு காட்டுச்சு, இரு எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணி அண்ணிக்கு அனுப்பி வைக்கிறேன்” என்றான் ஜனா.

“சரியா சாப்பிடாம போயிட்டான் பாரு, பால் கலந்து தர்றேன், சீக்கிரம் சாப்பிட்டு அவனுக்கு கொண்டு போய் கொடு” என்றார் துளசி.

“ஹை வோல்டேஜ்ல இருக்கிறவர் கூட கோர்த்து விடாதம்மா” என்றாலும் அம்மா சொன்னதை செய்தான் ஜனா.