அத்தியாயம் -19(2)
“எப்போ ண்ணி வீட்டுக்கு வருவீங்க?” எனக் கேட்டான்.
“நாளைக்கும் எக்ஸாம் இருக்கு ஜனா, இப்போ கிளம்பினாதான் சரியா இருக்கும். வரட்டுமா?” எனக் கேட்டாள்.
ஜனா முறைக்க, “நல்லா வரணும் நீ. எவ்ளோ உயரம் போனாலும் இந்த அண்ணிய மறந்திடாத” என்றவள் தன் கலக்கத்தை மறைத்து புன்னகை செய்தாள்.
“இப்படி சொல்றதுக்கு என்னை ரெண்டு அடி அடிச்சிடலாம் அண்ணி” என கோவமாக சொன்னான்.
அவள் கிளம்பி விட, “அண்ணனுக்கு எவ்ளோ ஈகோன்னு தெரியாதா அண்ணி உங்களுக்கு? ஒரு முறை வீட்டுக்கு வாங்களேன், உங்க கையை புடிச்சுக்குவார், விடவே மாட்டார் உங்களை” என்றான்.
“அப்படி நானா வந்து உங்க அண்ணா என் கையை புடிச்சிக்கணும்னு எனக்கு ஆசை இல்லை ஜனா. நான் வர்றேன்” என்றவள் புறப்பட்டு விட்டாள்.
வீணாக போவது உன் வாழ்க்கைதான், நீயாகத்தான் வந்தாய், நீயே போயேன் என ஜோதியும் மகளிடம் சொன்னார்.
“மனசுக்குள்ள எல்லாருக்கும் ஒரு நெருப்பு இருக்கும் மா, அது அணையாத வரைக்கும்தான் நிமிந்து நடமாட முடியும். புரியலை… அதான் சூடு சொரணைன்னு சொல்வாங்களே அதை சொன்னேன். அத விட்டுட்டு அவர்கிட்ட போற அளவுக்கு என் எலும்பு வளைஞ்சு போயிடல” என சொல்லி விட்டாள் ஸ்ரீ.
ஜெய், ஸ்ரீ இருவரும் மனது வைத்தால் அன்றி அவர்கள் இணைந்து வாழ்வது சாத்தியமில்லை என அனைவருக்குமே தெரிகிறது. எப்போது மனது வைப்பார்கள் என காத்திருக்க ஆரம்பித்தனர்.
ஸ்ரீயின் தேர்வுகள் முடிந்து விட்டன. ஆன்லைன் வகுப்பில் ஏதோ கோர்ஸ் படித்தாள். மற்ற நேரங்களில் அம்மாவுக்கு உதவி செய்து கொண்டு வீட்டில்தான் இருந்தாள். தேர்வு முடிவுகளும் வெளியாகி விட்டன. நல்ல விழுக்காட்டில் தேர்ச்சி அடைந்திருந்தாள்.
ஜெய்யை தவிர மற்ற புகுந்த வீட்டினர் நேரில் வந்து அவளை பாராட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு சென்றனர். அன்றைய இரவில் பாட்டி ஜெய்யிடம் விஷயத்தை சொன்ன போது, தெரியாதவரை பற்றிய செய்தி போல கடந்து சென்று விட்டான்.
ஜெய் இப்போது பெரிய இடம் வாங்கி பத்து வீடுகள் கட்டும் யோசனையிலிருக்கிறான். ஐம்பது சதவீதம் வங்கிக் கடன். பணி முடிந்த பிறகு லாபம் வைத்து விற்பனை செய்து விடும் திட்டம். அந்த வேலையில் பிஸியாக இருக்கிறான்.
அதை தவிர அவன் ஏற்றுக்கொண்ட மற்ற கான்ட்ராக்ட் பணிகளும் அதிகம். அவனிடம் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையையும் கணிசமாக உயர்த்த யோசித்து வருகிறான்.
சியாமளனோடு அடிக்கடி வெளியில் சென்று வந்தாள் ஸ்ரீ. இரண்டு முறை சென்னை போய் வந்தாள். கேட்டதற்கு தோழியை பார்க்க சென்றதாக சொன்னாள்.
“ஜெய் தம்பிக்கு தெரிஞ்சா கோவப்படும், சியாமோட போகாத” என எச்சரிக்கை சொன்னார் ஜோதி.
“அவன் என் ஃப்ரெண்ட், இந்த டைம்ல எனக்கு ஹெல்ப் பண்றது அவன் மட்டும்தான். யாருக்கு தெரிஞ்சாலும் எனக்கொன்னும் இல்லை” என பட்டென சொன்ன மகளை ஜோதியால் முறைக்க மட்டும்தான் முடிந்தது.
மன விரக்தியில் இருந்த சுரேகா தற்கொலை செய்ய முயன்று மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தாள். ஜெய்யும் துளசியும் பார்க்க சென்றிருந்தனர்.
சுரேகாவின் கணவன் திருமணமான அன்றைய இரவே மோசமாக நடந்து கொண்டிருக்கிறான். அவனது இயலாமையை மறைக்க அவளை வெகுவாக துன்பறுத்தி இருக்கிறான். வெளியில் சொல்ல தயங்கி அவளும் பொறுத்து போயிருக்கிறாள்.
அவனது கொடுமை அதிகமாகவே அவளது மாமியாரிடம் சொல்லியிருக்கிறாள். தங்கள் மகனின் விஷயம் அவர்களுக்கு முன்னரே தெரியும், தெரிந்தேதான் சுரேகாவின் வாழ்க்கையை கெடுத்திருக்கிறார்கள். அவர்களும் சேர்ந்து கொண்டு அவளை இம்சை செய்யவும்தான் பொறுத்துக் கொள்ள முடியாமல் வீட்டில் சொல்லியிருக்கிறாள்.
பின்னர்தான் சுரேகாவின் பெற்றோர் அவளை அங்கிருந்து அழைத்து வந்து விவாகரத்து வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.
இந்த விஷயத்தை எல்லாம் வெளி உலகில் அத்தனை பகிங்கரமாக சொல்லிக் கொள்ள முடியாதே. அக்கம் பக்கத்தினரும் மற்ற உறவுகளும் சுரேகாவைதான் தவறாக பேசினார்கள்.
மகளுக்கு இரண்டாவது திருமணத்துக்கு பார்க்க துவங்கினார்கள் சுரேகாவின் பெற்றோர். வந்தவர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் சுரேகாவால் சகிக்க முடியவில்லை. எதுவும் சரியாக தகையவும் இல்லை.
மன அழுத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த மகளை எப்படி மீட்பது என யோசிக்காமல் தினம் அழுது கரைந்தனர் அவளின் பெற்றோர். உயிரை விடும் முடிவுக்கு வந்து விட்டாள் சுரேகா.
ஜெய்யை கண்டதும் சுரேகா அப்படியொரு அழுகை.
“என்னை மன்னிச்சிடுங்க அத்தான், உங்களை நோகடிச்ச பாவத்துக்குதான் எனக்கு இந்த தண்டனை” என புலம்பினாள்.
ஜெய்யின் மாமாவும் மாமியும் கூட ஜெய்யின் கையை பிடித்துக்கொண்டு அழுதனர். எங்கள் மகள் உயிரோடு இருந்து பழைய படி சிரித்து பேசி இயல்பாக இருந்தால் போதும் என்றார்கள்.
சுரேகா அக்கவுண்ட்ஸ் படித்திருக்கிறாள். ஜெய்தான் சில காலம் இடம் மாறி இருந்தால் சுரேகா நன்றாக உணர்வாள், திருச்சிக்கு வரட்டும், ஜனாவின் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கட்டும் என யோசனை சொன்னான்.
சுரேகா டிஸ்சார்ஜ் ஆகி நேராக ஜெய் வீட்டிற்குத்தான் வந்தாள். அண்ணன் மகளை தேற்றி நல்ல படியாக்கி அண்ணனிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்தார் துளசி.
கரு கலைந்த பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஃபாலோ அப்’க்காக செல்வாள் ஸ்ரீ. இன்று செல்லலாம் என இருந்தாள். ஜோதி உடன் வருவதாகத்தான் இருந்தது. இறுதி நேரத்தில் அவருக்கு வேலை வந்து விட, வேறு ஏற்பாடுகளும் செய்ய முடியாத சூழல்.
“சாதாரண செக் அப்தானே, நானே போயிக்கிறேன்” என சொல்லி அவள் மட்டும் தனியாக கிளம்பினாள்.
சுரேகாவுக்கு கவுன்சிலிங் சென்று கொண்டிருந்தது. அதற்கெல்லாம் துளசிதான் உடன் அழைத்து வருவார், செல்வார். அன்று அவருக்கு உடல் சுகமில்லாத காரணத்தால் ஜனாவும் வேறு வேலையாக இருந்ததால் ஜெய் அழைத்து வந்திருந்தான்.
அந்த பெரிய மருத்துவமனையின் பேஸ்மெண்டில் மருத்துவர்களின் கலந்தாலோசனை அறைகள் இருக்கும். அறைகளுக்கு வெளியில் நோயாளிகள் காத்திருப்பார்கள்.
மகளிர் நல மருத்துவரின் அறைக்கு வெளியில் காத்திருந்தாள் ஸ்ரீ. வேடிக்கை பார்க்கும் போது அவளுக்கு எதிர்ப்பக்கத்தில் சற்றே தள்ளி ஜெய் அமர்ந்திருந்தான்.
எத்தனை மாதங்களுக்கு பின் அவனை காண்கிறாள். அவனது தோற்றம் இளக செய்தது அவளை. உணர்ச்சி மிகுதியில் கலங்கிய கண்களை சமாளித்துக் கொண்டாள். தனக்காகத்தான் இங்கு வந்திருக்கிறான் என்றே நம்பினாள்.
‘அவனை பற்றித்தான் உனக்கு தெரியுமே, போ போய் ஒரு வார்த்தை பேசு, அட பேசக்கூட வேண்டாம் அவனருகில் போய் அமர்ந்து கொள், இன்னும் வீம்பு பாராட்டாதே. நீ போட்டு வைத்திருக்கும் திட்டங்கள் தேவையற்றவை, இருக்கின்ற ஒரு வாழ்க்கையை பிடித்தவனோடு கழித்து விடு. ஈகோதானே தவிர அவனுக்கு உன் மேல் அன்பில்லாமல் இல்லை’ சில நிமிடங்களில் அவளது மனம் ஆற்றோ ஆற்றோ என சொற்பொழிவாற்றி விட்டது.
ஸ்ரீ தயக்கத்தோடு எழுந்து நின்றாள். ஜெய் அருகில் சுரேகா. அவளோடு ஸ்ரீக்கு அத்தனை பழக்கம் இல்லை. இவர்களின் திருமணத்துக்கும் சுரேகா வந்ததில்லை. ஆனால் இவளை பற்றியும் அண்ணன் மகளை ஜெய்க்கு மணமுடிக்க ஆசை பட்டேன், நடக்கவில்லை எனவும் துளசி சொல்லியிருக்கிறார்.
சுரேகா இவனை மறுத்து விட்ட கதையை மேலோட்டமாக சொல்லியிருக்கிறார் பாட்டி. அன்று ஜெய்யிடம் கேட்கவும் செய்தாள். அவனும் மறைக்காமல் அவர்களுக்கு இடையே என்ன என்பதை தெளிவாக சொல்லிவிட்டான்.
“உங்க எக்ஸா அவ? எவ்ளோ நாள் கழிச்சு… அதுவும் நானா கேட்டு சொல்றீங்க?” என அவள் கேட்டு இரண்டு நாட்கள் ஊடல், அதன் பின் கூடல் எனவும் சில பல சம்பவங்கள் அவர்களுக்குள் நடந்திருக்கிறது.
சுரேகாவை புகைப்படத்தில் பார்த்திருக்கிறாள் ஸ்ரீ. அவளின் அதீத சுருள் முடியும் உருண்டை முகமும் ஸ்ரீக்கு நன்றாக நினைவிருந்தது.
சுரேகா ஜெய்யின் காதில் ஏதோ சொன்னாள். அவளின் கையை ஆதரவாக பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் ஜெய். அவளுக்கு பருக தண்ணீர் கொடுத்தான்.
ஸ்ரீக்கு பொறாமை என சொல்ல முடியாது, ஆதங்கமாக இருந்தது. கட்டிய மனைவி இக்கட்டில் இருந்த போது பாட்டியின் பொறுப்பில் விட்டு இரவிலும் வீடு வராதவனின் செயலை நினைத்த போதே கண்ணீர் வந்து விட்டது.
மாதங்கள் கடந்தும் தன்னை பார்க்க வராதவன், தன்னிடம் பேசக்கூட முயலாதவன், தன் இறுதி தேர்வின் போது கூட தள்ளியே இருந்தவன் இன்னொரு பெண்ணிடம் அக்கறையாக நடந்து கொள்வதை சாதாரணமாக கடக்க ஸ்ரீ ஒன்றும் முற்றும் துறந்த சாது இல்லையே.
மற்றவர்கள் பார்த்து விடாத படிக்கு கண்களை துடைத்துக் கொண்டவள் இருக்கையில் அமர்ந்து விட்டாள்.
‘மிஸஸ் தன்யஸ்ரீ ஜெயவர்தன்’ என்ற பெயரை யாரோ சத்தமாக அழைக்கவும்தான் ஜெய் சுற்றிலும் பார்த்தான். ஸ்ரீ மருத்துவரின் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். அந்த சில நொடி தரிசனத்திலேயே அவளின் இளைத்து போன தோற்றம் அவனது கருத்தில் பதிந்து போனது. அடைத்த நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்.