அத்தியாயம் -15(2)

எதுவும் பேசிக் கொள்ளாமலே இயல்பாக இருவரும் விளையாட ஆரம்பித்தனர். விட்டுக் கொடுக்கும் எண்ணமில்லாமல் தீவிரமாக விளையாடினார்கள். இருட்ட தொடங்கி விட்டது. மின் விளக்கு போடாமல் அவர்களை சூழ்ந்திருந்த வெளிச்சம் போதுமென நினைத்து விளையாடினார்கள்.

 ஸ்ரீயிடமிருந்து நழுவ ஆரம்பித்தது விளையாட்டு. அவள் சலித்துக் கொள்ள, “நீயே ஜெயிச்சுக்கோ, எனக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது லஞ்சம் கொடுத்து” என்றவன் அவளை நெருக்கிக் கொண்டு அமர்ந்தான்.

“லஞ்சம் கொடுக்கிறதும் வாங்குறதும் தப்பு” என்றாள்.

“புருஷன் பொண்டாட்டிக்குள்ள மட்டும் அந்த கொடுக்கல் வாங்கல் வச்சுக்கலாம்” என்றான்.

“அதான் நல்லா கொடுக்குறீங்களே…” எனக் கேட்ட ஸ்ரீயின் முகம் சிவந்திருந்தது.

“கொடுக்கல் மட்டும்தானே, வாங்கல் எதுவும் இல்லையே” என சொல்லி உதடுகள் பிதுக்கினான்.

அவள் வெட்கப்பட, “ரொம்ப காய போடுற, நான் தர்ற அளவுக்கு தாராளமா வேணாம், கொஞ்சூண்டு கருணை காட்ட கூடாதா? கண்ணு காது மூக்கு கன்னம்னு எதுவுமே உன் ஈரம் படாம காஞ்சு போய் கெடக்கு ஸ்ரீ”

“என் படிப்பு முடியற வரை மனசை கலைக்க மாட்டேன்னு வசனம் பேசிட்டு என்ன செஞ்சிட்டு இருக்கீங்க நீங்க?”

“நீதான் பெரிய படிப்பாளி ஆச்சே, எல்லா செமஸ்டர் எக்ஸாம்ஸையும் உடனே வைக்க சொல்லி சீக்கிரம் படிப்ப முடிச்சிடு” என்றான்.

“உங்க மாமனார்தான் யூனிவர்சிட்டில கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமிநேஷன்ஸ். நீங்களே அவர்கிட்ட பேசி எக்ஸாம்ஸ்லாம் உடனே வைக்க சொல்லுங்க” என்றாள்.

சட்டென ஜெய்யின் முகம் மாறி விட்டது. அவளை ஒட்டி உரசி அமர்ந்திருந்தவன் தள்ளி அமர்ந்தான்.

பேச்சு வாக்கில் தன் அப்பாவை இழுத்து விட்டதை நினைத்து நொந்தாள் ஸ்ரீ.

“தெரியாம… ஒரு ஃப்ளோல…” ஸ்ரீ சமாதான படுத்த ஆரம்பித்திருக்க, “அதெப்படி தெரியாம அந்தாளு பேச்சை இழுப்ப?” எனக் கோவமாக கேட்டான்.

“இல்லைங்க, பொதுவா இப்படி சொல்ல மாட்டாங்களா… அப்படித்தான்… அவர் என் நினைவுலேயே இல்லை”

எதுவும் பேசாமல் இரண்டு நிமிடங்களை கழித்தவன், “சரி படிக்கிறதா இருந்தா லைட் போட்டுக்கிட்டு படி, குளிர ஆரம்பிச்சிட்டா ரூம் போயிடு” என சொல்லி எழுந்தான்.

“நீங்க?”

“வெளில வேலை இருக்கு”

“எல்லாம் முடிச்சிட்டுதானே வந்தீங்க, நான் உங்களை மூட் ஆஃப் பண்ணிட்டேன்னு புரியுது. ஸாரி, இருங்க” என்றாள்.

“வந்திடுறேன் ஸ்ரீ, இப்போ உன் கூட இருந்தா…” என்றவன் அவள் முகத்தை பார்க்க திரும்பி, “நமக்குள்ள சண்டை வந்திடுமோன்னு பயமா இருக்கு” என்றான்.

“என்னை பெத்தவரால நாங்களும் பாதிக்க பட்டிருக்கோம். அவர் மேல உங்களை விட அதிகமான கோவம் எனக்கிருக்கு. உங்க இழப்புக்கு கொஞ்சமும் குறைஞ்சது இல்லை நாங்க பட்டது அனுபவிச்சது எல்லாம். அதை மட்டும் எப்பவும் ஞாபகம் வச்சுக்கோங்க” என்றவள் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்து விட்டாள்.

ஜெய் அங்கேயே அந்த இருளிலேயே அமர்ந்து விட்டான். ஒரு மணி நேரம் சென்று அங்கு வந்த ஸ்ரீதான் மின் விளக்கை போட்டாள்.

வெறும் தரையில் அப்படியே உறங்கிப் போயிருந்தவனை தொட்டு எழுப்பி விட்டாள்.

விழித்துக் கொண்டவனிடம், “உள்ள வாங்க, குளிர் காத்து வீசுது” என்றாள்.

ஒன்றும் சொல்லாமல் அவளது கையை பிடித்தவன் புறங்கையில் முத்தமிட்டான்.

“இன்னும் எங்கேயோ உங்க மனசு ஓரத்துல அவரோட துரோகத்தையும் என்னையும் சம்பந்த படுத்தி பார்க்குறீங்கதானே நீங்க?” எனக் கேட்கும் போது அவளின் விழிகள் கலங்கிப் போய் விட்டன.

“சேச்ச…” உடனே மறுத்தான்.

அவள் நம்பாத பார்வை பார்த்தாள்.

“முன்னாடி இருந்திருக்கலாம் ஸ்ரீ, இப்போ அப்படி கிடையாது. ஆனா அந்த துரோகியோட பேச்சு வந்தா நான் நானா இருக்க மாட்டேங்குறேன் ஸ்ரீ. இப்ப இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்தேன்னு நினைக்கிற? ஸ்ரீ என் வைஃப், அவ என்னோட சொந்தம் மட்டும்தான், இனி அவளை ஹர்ட் பண்ணிட கூடாதுன்னு திரும்ப திரும்ப எனக்குள்ள சொல்லிட்டேதான்…” முடிக்காமல் நிறுத்தினான்.

“ம்ம்… சொல்லிட்டே தூங்கிட்டீங்களா?” என அவள் கேட்க, சிரித்தான்.

“இன்னொரு முறை இந்த பேச்சு நமக்குள்ள வராதுன்னு நம்புறேன்” என்றாள்.

சம்மதமாக தலையாட்டிக் கொண்டான். உண்டு உறங்க சென்றனர்.

“எனக்கு தூக்கம் வரலை, அந்த ரூம்ல புக்ஸ்லாம் அங்கங்க கிடக்கு, நான் ஒதுங்க வச்சிட்டு வர்றேன்” என சொல்லி எதிர் அறைக்கு சென்று விட்டாள் அவள். அவன் மட்டும் தனியே படுத்தான்.

ஸ்ரீ ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாலும் கவனமாக செய்ய முடியவில்லை, ஜெய்க்கும் உறக்கம் வரவில்லை.

தன்னைத் தேடிக் கொண்டு வந்தவனை கேள்வியாக பார்த்தாள் ஸ்ரீ.

“இன்னும் நமக்குள்ள… ஈவ்னிங் நடந்தது சரியாகாத ஃபீல், அதான்… தூக்கம் வர மாட்டேங்குது” என்றான் அவன்.

அவனிடம் வந்தவள் மெல்ல அவனை அணைத்துக் கொண்டாள்.

“எனக்கும் எதுவோ சரியில்லாத மாதிரிதான் இருந்துச்சு. நமக்கு எல்லாமே சரியா நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும்ல?” என்றாள்.

“முடிஞ்சத விடு, இப்போ எப்படி சரி செய்யலாம்னு யோசிப்போம்” என்றான்.

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “இன்னிக்கு சனிக்கிழமையா நினைச்சுக்கோங்க” என்றாள்.

அவன் செல்ல கிண்டல் பார்வையோடு சிரித்துக் கொண்டே, “உனக்கு லீவ் முடியற வரை எல்லா நாளும் சனிக்கிழமைதான் எனக்கு” என்றான். ஆனால் அவளின் முகத்தை நெருங்க முனையவில்லை.

முதல் முறையாக அவளே அவனை நெருங்கி வந்தாள்.

நாசிகள் தொட்டுக் கொள்ள, பார்வையும் சுவாசமும் கலந்து போக, கைகள் தம் துணையை தாங்கிப் பிடித்திருக்க, மேனிகள் தழுவியிருக்க, இதயம் எகிறித் துடித்தாலும் மனம் நிறைவாக இருக்க ‘முத்தம்’ இதழ்களுக்கு மட்டுமேயான உரையாடல் இல்லை என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

விலகியவள், “தூங்க போலாம்” என்றாள்.

“போ, வர்றேன்” என அவன் சொல்ல அவன் முகத்தை பார்க்க முடியாமல் படுக்கை அறைக்கு சென்று விட்டாள்.

இன்றைய இரவை உறங்கிக் கழிக்க முடியாது என ஜெய்க்கு உறுதியாக தெரிந்து விட்டது. படிப்பை முடிக்கும் வரை அவள் நேரம் கேட்டிருக்க, அதை மீறவும் சங்கடமாக இருந்தது. அரை மணி நேரத்தை அந்த அறையிலேயே நடை போட்டு கடத்தினான்.

படுத்த உடன் உறங்கி விடுபவளும் புரண்டு கொண்டே இருந்தாள். ஏன் இன்னும் வரவில்லை என அவனை பற்றிய சிந்தனைதான்.

மீண்டும் எதிர் அறைக்கு சென்றாள். அவளை கண்டதும், “தூங்காம என்ன பண்ற?” எனக் கேட்டான்.

“நீங்க என்ன செய்றீங்கன்னு பார்த்திட்டு இருக்கேன்” என்றாள்.

“நான் என்ன செய்ய? உன்னை எதுவும் செய்யாம இந்த ராத்திரிய எப்படி ஓட்டுறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றவன் அவளது பதிலுக்காக ஆவலாக பார்த்தான்.

மறுப்பாக எதுவும் சொல்லாதவள், “யோசிச்சிட்டே இருங்க, பதில் தெரிஞ்சா மறக்காம எங்கிட்டேயும் சொல்லுங்க. நான்…” என சொல்லி குரலை செருமி திணறலாக, “எனக்கும் தூக்கம் வரலை” என்றாள்.

இந்த மறைமுக பதில் அவனுக்கு போதுமானதாக இல்லை. தான் தவறாக புரிந்து கொண்டு ஏதாவது செய்து அவள் தவறாக எடுத்துக் கொள்வாளோ என தவித்தான்.

“எனக்கு உன்னால தூக்கம் வரலை, உனக்கு ஏன் தூக்கம் வரலை? பகல்ல தூங்கிட்டியா?” எனக் கேட்டான்.

வெட்கமும் முறைப்புமாக அவனை பார்த்தவள் அதற்கு மேல் அங்கு நில்லாமல் சென்று விட்டாள். அவளை தொடர்ந்து சென்றவன் படுக்கையறையின் வாயிலில் அவளது கையை பற்றி விட்டான்.

“நான் என்ன கேட்கிறேன்னு புரியலையா ஸ்ரீ?”

“உங்களுக்குதான் நான் என்ன சொல்றேன்னு புரியலை”

“பளிச்னு சொல்லு, படிக்கிற பொண்ண டிஸ்டர்ப் பண்றேனோன்னு நெருடலா இருக்கு”

“என் கிளாஸ்ல மூணு கேர்ல்ஸ் மேரேஜ் ஆனவங்க, அவங்கலாம் படிச்சிட்டுதான் இருக்காங்க”

“எவடி இவ? அவங்க என்ன எப்படின்னு நமக்கு என்ன தெரியும்?”

“எனக்கு தெரியும்?” என அடக்க பட்ட சிரிப்போடு சொன்னாள்.

பட்டென அவளின் கையை விட்டு விட்டவன், “என்ன சொல்ற நீ?” என மிரட்சியோடு கேட்டான்.

“ஹையோ ரொம்ப யோசிக்காதீங்க. லஞ்ச் டைம்ல நாங்க மட்டும் தனியா இருக்கும் போது பேசிப்பாங்க, மாமியார் பேசுறது மேரேஜ்க்கு அப்புறம் படிக்க என்னலாம் கஷ்டம் அப்படி டிஸ்கஸ் பண்ணுவாங்க, அப்ப குழந்தை வேணாம்னு ஜாக்கிரதையா இருக்கிறத சொல்வாங்க” என்றாள்.

“ஹ்ம்ம்… நீ என்ன சொல்லி வச்சிருக்க?”

“நான் கேட்கிறதோட சரி, எதுவும் சொல்ல மாட்டேன்”

“அப்படிலாம் விட மாட்டாங்களே, தோண்டி துருவியிருப்பாங்களே…”

“சொல்லக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேனா எப்படியும் எங்கிட்டருந்து விஷயத்தை வாங்க முடியாது. நிஜமா நான் எதுவும் சொல்லிக்க மாட்டேன், அதுக்காகவே என்னை அதிகமா ஓட்டுவாங்க, நான் கண்டுக்க மாட்டேன்”

“படிக்க அனுப்பினா என்னென்ன பேசிக்கிறீங்க!”

“நாங்க ஒழுங்காதான் படிக்கிறோம், எப்பவாவது நாங்க மட்டும் இருக்கப்பதான் இந்த பேச்செல்லாம்” ரோஷமாக சொன்னாள்.

“என்கிட்ட இதெல்லாம் சொன்னதே இல்லை நீ. பாவம் பச்ச புள்ள ராப்பகலா படிப்பே கதின்னு கிடக்குதேன்னு பாவப்பட்டுட்டு இருந்திருக்கேன்!” என அவன் கிண்டலாக சொல்ல, கோவம் கொண்டவள் படுக்க சென்று விட்டாள்.

சில நிமிடங்களில் மின் விளக்கு அணைக்க படுவதையும் அவளருகில் அவனும் படுத்துக் கொள்வதையும் உணர்ந்தவளுக்கு சங்கோஜமாக இருந்தது.

அவளை அணைத்துக் கொண்டவன் அவளின் காதில் ரகசியமாக, “நாமளும் ஜாக்கிரதையா இருந்துக்கலாம்” என்றான்.

அவன் பக்கமாக திரும்பி படுத்தவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

இல்லறப் புத்தகத்தின் இனிமையான அந்தரங்க பக்கங்களை கை கோர்த்து மெய் கோர்த்து வாசிக்க ஆரம்பித்தனர்.

தெரிந்த மொழியின் புரியாத வார்த்தைகள், இதுதான் என புரிந்த பின்பு ஏற்பட்ட சிலாகிப்பு, அவசரம் காட்டாமல் அர்த்தம் விளங்கிய பின் அதிலே லயித்து இன்பத்தை சுவைத்த நிமிடங்கள் என அவர்களின் முதல் அனுபவம் மகோன்னதமாக அமைந்தது.

விடிந்து வெகு நேரமாகி கண் விழித்த ஜெய் கையணைப்பில் உறங்கிக் கொண்டிருந்தவளை ஆசையாக பார்த்தான்.

திரை சீலை சற்றே விலக கசிந்த வெளிச்சம் அவளின் கண் இமைகளில் பட்டுத் தெறித்தது.

உறக்கம் சற்றே கலைய முகம் சுளித்து சிணுங்கினாள். தன் மார்பில் அவளது முகத்தை பதித்து வெளிச்சம் விழாமல் காத்தவன் அவளது வெற்று முதுகை மென்மையாக வருடிக் கொடுத்தான். ஜெய்யின் மேனி தந்த கத கதப்பின் இதத்தில் மீண்டும் சுகமாக உறங்கிப் போனாள் ஸ்ரீ.