புதிய உதயம் -1

அத்தியாயம் -1(1)

திருச்சி மாநகரத்தின் முக்கிய வீதியில் அந்த அதிகாலைப் பொழுது ஏதோ ஒரு பெண்ணின் உச்ச பட்ச அலறல் சத்தம் கேட்டு பரபரப்படைந்தது.

சத்தம் கேட்டுக் கொண்டிருந்த நீல நிற பெயிண்ட் அடித்த அந்த மாடி வீட்டின் முன்பாக அக்கம் பக்கத்து வீட்டினர் கூடி விட்டனர்.

ஆறாவது படிக்கும் தன்யஸ்ரீயின் உறக்கமும் அந்த சத்தம் கேட்டுத்தான் கலைந்தது. சில வினாடிகளிலேயே அந்த அழுகுரல் துளசி அத்தையுடையது என அறிந்தவளுக்கு நெஞ்சம் திக் என்றானது.

அருகில் படுத்துக் கிடந்த ஐந்து வயது தங்கை மஹதிக்கு போர்வையை இழுத்து போர்த்தி விட்டவள் அறையை விட்டு வெளி வந்தாள்.

அம்மாவை காணவில்லை, வீட்டின் கதவு வெறுமனே சாத்தப் பட்டிருக்க திறந்துப் பார்த்தாள்.

அவள் வீட்டிற்கு எதிரிலிருந்த துளசி அத்தையின் வீட்டின் முன்பு கூட்டம் கூடியிருந்ததை கண்டவள் இன்னும் அத்தையின் அழுகுரல் ஓயாததில் கலவரம் அடைந்து வெளியில் ஓடி வந்தாள்.

அந்தக் கூட்டத்தில் புகுந்து அத்தையின் வீட்டிற்குள் செல்ல முடியாத படி அவளுக்கு அந்த சூழல் மிரட்சியை உண்டாக்கியது.

ஒரு வாரமாகவே அத்தையின் வீட்டிற்கு செல்ல இவளுக்கு தடை விதிக்க பட்டிருந்தது. காரணம் சொல்லாமல் எரிந்து விழுந்தார் அவளின் அம்மா நாகஜோதி. வெளியூர் சென்றிருக்கும் அப்பாவும் இன்னும் திரும்பியிருக்கவில்லை.

தன் முன்னால் அழா விட்டாலும் அம்மாவிடம் அழுகையின் தடத்தை பார்த்திருந்த தன்யஸ்ரீக்கு என்னவோ சரியில்லை என்ற அளவில் புரிந்திருந்தது.

இவள் படிக்கும் பள்ளியில்தான் துளசி அத்தையின் மகன்கள் ஜெயவர்தன் மற்றும் ஜனார்த்தனன் இருவரும் படிக்கின்றனர். ஜெய் பனிரெண்டாம் வகுப்பு, பெரிதாக இவளுடன் பேச மாட்டான். அத்தை வீட்டுக்கு செல்லும் போது சகோதரிகள் இருவரும் ஜனா மற்றும் அவனுடைய நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவார்கள்.

சத்தம் போட்டால் படிக்க தொல்லையாக இருக்கிறது என திட்டுவான் ஜெய், சிறார்களை முறைத்தும் பார்ப்பான். துளசி அத்தைதான் ஏதாவது சமாதானம் சொல்லி அவனை அறைக்குள் அனுப்பி வைத்து விட்டு சத்தம் போடாமல் விளையாடுங்கள் என சின்ன பிள்ளைகளிடம் கனிவாக சொல்வார்.

நெடு நெடு என உயரமாக ஒல்லியாக இருக்கும் ஜெய்யை கண்டால் ஸ்ரீக்கு கொஞ்சம் பயம். அவனிருந்தாலே அந்த வீட்டில் சத்தம் போடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பாள். அவன் இல்லாத நேரம்தான் தன்னை மறந்து விளையாடுவாள்.

ஒரு முறை கேரம் விளையாடுகிறோம் என ஜெய்யினுடைய கேரம் போர்டை எடுத்து வைத்துக்கொண்டு சின்னதுகள் ஏதேதோ செய்து கொண்டிருந்தனர். ஜனா பவுடர் எடுத்து விளையாட்டு போல தேய்க்க, காய்களை வைத்து விளையாடாமல் பவுடர் போடுவதையே விளையாட்டாக மாற்றி சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தனர்.

டியூசன் சென்று விட்டு வீடு திரும்பிய ஜெய் கண்டது பயத்தில் வெளிறிப் போயிருந்த ஸ்ரீயைதான். ஐயோ திட்டு விழப் போகிறது என கண்களை இறுகி மூடிக் கொண்டாள் ஸ்ரீ.

ஜெய்க்கு அவனுடைய அம்மா அடிக்கடி, “பாவம், சொந்தம்னு யாருமில்ல, அமைதியான பசங்க, திட்டாதடா அவங்களை” என சொன்னது நினைவு வந்தது. தன்னிடம் பயம் கொள்ளும் அந்த சின்ன பெண் மீது இரக்கம் உண்டானது.

அனைத்தையும் விட அன்று ஏதோ நல்ல மன நிலையில் இருந்திருப்பான் போலும். யாரையும் திட்டவில்லை, மாறாக அவர்களுடன் அமர்ந்து கேரம் விளையாட சொல்லிக் கொடுத்தான்.

எல்லாரும் அவனை ‘அண்ணா’ என்றே அழைக்க ஸ்ரீ அவனுடன் ஏதும் பேசினால்தானே அவனை முறை சொல்லி அழைக்க. அதுதான் அவன் அவர்களுடன் அமர்ந்து விளையாடிய கடைசி தருணம், அதன் பின் அவர்களுடன் விளையாடியது இல்லையென்றாலும் திட்டுவதை பெருமளவில் குறைத்துக் கொண்டான்.

ஸ்ரீயை தன் வீட்டிலும் வெளியில் எங்காவதும் காண நேர்ந்தால் புன்னகை செய்வான். பதிலுக்கு ஸ்ரீயும் சிரிப்பாள். நல்ல அண்ணாதான் எனவும் மனதிற்குள் சொல்லிக் கொள்வாள். ஜனாவும் மற்றவர்களும் பயந்து நடுங்கும் அந்த பெரிய அண்ணன் தன்னிடம் கோவம் கொள்வதில்லை என்பதில் அவளுக்கு பெருமை வேறு.

ஆனாலும் புன்னகையை தாண்டி இருவரும் பேசிக் கொண்டதே இல்லை.

நான்காம் வகுப்பு பயிலும் ஜனா அண்ணனுக்கு நேர்மாறு, எல்லாரிடமும் நன்றாக பேசுவான், விளையாடுவான். அவனிடம்தான் என்ன பிரச்சனை என கேட்டுப் பார்க்கலாம் என நினைத்திருந்தாள் ஸ்ரீ. ஆனால் அவனை பள்ளியில் பார்க்க முடியவில்லை.

ஜனாவுக்கு காய்ச்சல் என அவனுடைய பாட்டி பக்கத்து வீட்டு பெண்ணிடம் புலம்பிக் கொண்டிருக்கையில் கேட்டிருந்தாள் ஸ்ரீ. அவன் பள்ளிக்கு வரும் நாளுக்காக காத்திருக்கிறாள்.

இதோ அத்தை வீட்டின் மாடியிலிருந்து தலையில் அடித்துக் கொண்டே அழுகையும் வேதனையுமாக கீழே இறங்கி வருகிறார் ஜோதி. அம்மாவை அப்படி பார்க்கவும் தன்யஸ்ரீக்கும் அழுகை வருகிறது.

தரை தளம் வந்து விட்ட ஜோதிக்கு கூட்டம் விலகி வழி விடுகிறது. தேம்பிக் கொண்டு நின்றிருந்த மகளை கண்டு பெருங்குரல் எடுத்து சத்தமிடுகிறார் ஜோதி.

 அந்த தெருவிலிருக்கும் ஒரு வயதான பெண்மணி, “குழந்தையை பயப்படுத்தாத” என்கிறார்.

தன்னை கட்டியணைத்துக் கொண்ட அம்மாவின் அழுகை அதிகமாகிறதே ஒழிய குறையவில்லை.

பார்வையை கண்ணீர் மறைக்க, காட்சி சரியாக தெரியவில்லை. மாடியிலிருந்து படிகளில் யார் யாரோ இறங்கி வருவது அரை குறையாக தெரிய கண்களை துடைத்துக் கொண்டு பார்த்தாள் தன்யஸ்ரீ.

இந்த தெருவிலிருக்கும் இரண்டு ஆடவர்கள் யாரையோ தூக்கிக் கொண்டு வருகிறார்கள். அம்மாவின் அணைப்பிலிருந்து திமிறிக் கொண்டு யாரென எட்டி பார்க்கிறாள் தன்யஸ்ரீ. அவளுக்கு பார்க்க அவகாசம் அளிக்காமல் வீட்டின் உள்ளே அழைத்து சென்று விட்டார் ஜோதி.

ஜெயவர்தனுக்கு அழுகையை அடக்கவே முடியவில்லை. நேற்றிரவு தலை கோதிக் கொடுத்து இரவு வணக்கம் சொன்ன அப்பா உயிரோடில்லை என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் நடப்பது நிஜம்தான் என அறிவு சொல்லிக் கொண்டே இருக்கிறது.

வயதான காலத்தில் தன் பெரிய மகன் வாசுதேவனை இழந்து விட்ட ஜெய்யின் பாட்டி ராஜாம்பாள் ஒரு புறம் அழ, உச்ச ஸ்தாயில் கதறிக் கொண்டிருந்தார் கணவரை பறி கொடுத்த துளசி. இப்போதுதான் உடல் நலம் தேறியிருந்த ஜனா வாய் விட்டு சத்தமாக அழுதான்.

மூவரில் யாரை பார்க்கவென ஜெய்க்கு தெரியவில்லை. அவனுடைய அப்பாவின் உடலை இருவர் தூக்கிக் கொண்டு கீழே சென்றனர்.

உயிர் இருக்கலாம் என்ற நப்பாசையில் துளசிதான் மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும் என அடம் செய்தார். ஆம்புலன்சிற்கு சொல்லப் பட்டிருந்தது.

பாட்டி கீழே வரவில்லை, ஜனாவை மடியில் இருத்திக் கொண்டு அங்கேயே இருந்தார். மகனின் உயிரற்ற சடலத்தை இதற்கு மேல் பார்க்கும் தைரியம் அவரிடம் இல்லை.

துளசி கீழே விரைய, அம்மாவின் பின்னால் ஜெய்யும் சேர்ந்து ஓடினான்.

ஆம்புலன்ஸ் வந்தது. மருத்துவர் பரிசோதனை செய்வதற்காக வாசுவின் டி ஷர்ட்டை உயர்த்தினார், ஏதோ காகிதம் அகப்பட்டது.

அதை துளசியின் கையில் தராமல் படித்துப் பார்த்த மருத்துவர் ஆம்புலன்ஸ் டிரைவரின் கையில் ஒப்படைத்தார். வாசுவின் இறப்பை உறுதி செய்த மருத்துவர் காவல் நிலையத்துக்கு தகவல் தந்தார்.

மரணத்தை மருத்துவர் உறுதி செய்ததில் கொஞ்ச நஞ்சம் மீதமிருந்த நம்பிக்கையும் காற்றில் கரைந்திருக்க ஆவேஷம் எடுத்து சத்தமிட்டார் துளசி. அணிந்திருந்த புடவை விலகுவது, உமிழ்நீர் வழிவது, கூந்தல் அலங்கோலமாவது என எதுவுமே தெரியாமல் ஏதேதோ சொல்லி அழுதார்.

இந்த வயதில் ஜெய் பார்க்க கூடாத காட்சி, அனுபவிக்க கூடாத நிகழ்வு, தாங்க முடியாத பாரம்.

அவர்களின் சொந்த வீடுதான், கீழ் வீட்டை வாடகைக்கு விட்டு மேல் வீட்டில் குடியிருந்தனர். அம்மாவை, தன்னை, தன் உயிரற்ற அப்பாவை அனைவரும் வேடிக்கை பார்ப்பதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

கீழ் வீட்டில் இருந்தவர்களிடம் தண்ணீர் வாங்கி அம்மாவை தன் தோளில் சாய்த்து புகட்டினான். அவரது ஆடையை சரி செய்து, முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டான்.

“கண்ணா… போயிட்டார்டா அப்பா போயிட்டார்டா, இனிமே என்னடா செய்வோம்? நம்மள நினைச்சு பார்க்காத போயிட்டாரே… ஐயோ…” அரற்றிய அம்மாவை அணைத்துக் கொண்டான்.

வாசுதேவன் அன்பானவர், குடும்பத்தின் மீது அத்தனை பாசம் கொண்டவர், மனைவி மக்களை கண்களுக்குள் வைத்து பார்த்துக் கொண்டவர். துளசியால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும், அவரின் அழுகை நிற்கவே இல்லை.

அம்மாவை வலுகட்டாயமாக எழுப்பி நிறுத்திய ஜெய் மாடிக்கு செல்ல திருப்பினான். மறுத்து விட்டவர் கணவரின் பக்கத்திலேயே மீண்டும் அமர்ந்து கொண்டார்.

காவலதிகாரிகள் வந்தனர். விசாரணை நடந்தது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், பார்ட்னர் துரைசாமி ஏமாற்றி விட்டார், ஆதலால் தற்கொலை செய்து கொண்டார் என எழுதிக் கொண்டது.

ஜோதியின் வீட்டிற்கு வந்த போலீஸ் அவரிடமும் துரைசாமி பற்றி விசாரணை செய்தனர்.

பிரேத பரிசோதனை செய்யப் பட வாசுவின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அம்மாவை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றான் ஜெய்.

 அரசு மருத்துவமனைக்கு வாசுவின் உறவினர் யாராவது வரவேண்டும் என சொல்லப் பட, கீழ் வீட்டில் குடியிருந்தவரின் துணையோடு புறப்பட்டான் ஜெய்.

அவனது மாமாக்கள் மற்றும் சித்தப்பா வெளியூர்களில் இருக்கின்றனர். இப்போதுதான் அவர்களுக்கு விவரம் சொல்லப் பட்டிருக்கிறது, அவர்கள் கிளம்பி வர தாமதமாகும் என்பதால் அவனே சென்றான்.

“சின்ன பையனா இருக்கானே, இவனை எதுக்கு அழைச்சிட்டு வர்றீங்க?” தயக்கமாக கேட்டார் கான்ஸ்டபிள்.

அவரிடம் தெரிந்த பச்சாதாபத்தில் ஜெய்யின் கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டன.

“பார்த்தீங்களா ஸார், இந்த பையன விட்டுட்டு நீங்க மட்டும் வாங்க. பி எம் முடிஞ்சு பாடி கைக்கு கிடைக்க எப்படியும் மதியம் மேலாகிடும், வேற ஆம்பளை ஆளுங்க பெரியவங்களாம் ஊர்லேருந்து வர்றதா சொல்றீங்களே, அவங்க வந்தப்புறம் அவங்க பார்த்துப்பாங்க. புள்ளைய இங்கேயே விட்டுட்டு வாங்க” என்றார் கான்ஸ்டபிள்.

வேகமாக கண்களை துடைத்துக் கொண்ட ஜெய், மொத்த அழுகையையும் தொண்டை வழியே விழுங்கினான்.

“நான் வர்றேன் ஸார், என் அப்பா கூட நான் இருக்கணும்” அழுகையை அடக்கிக் கொண்ட குரலில் அவன் சொல்லவும், அதற்கு மேல் கான்ஸ்டபிள் மறுக்கவில்லை.

எதிர் வீட்டு மாமாவும் ஜெய்யும் பைக்கில் செல்வதை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தாள் தன்யஸ்ரீ. இன்று பள்ளிக்கு செல்ல வேண்டாம் என அவளிடம் அம்மா சொன்னதோடு சரி, அதன் பின் படுக்கையில் சுருண்டு கொண்டு மௌனமாக அழ ஆரம்பித்து விட்டார்.

அப்பாவும் அம்மாவும் காதல் திருமணம் செய்தவர்கள், சொந்தங்கள் என யாருமில்லை என்ற அளவில் மட்டுமே ஸ்ரீக்கு தெரியும். நான்கு வருடங்களுக்கு முன்புதான் இங்கு வந்தனர், அப்போதிலிருந்து வாசு மாமா, துளசி அத்தை, ராஜாம்பாள் பாட்டி இவர்கள்தான் சொந்தங்கள்.

மஹதி எழுந்து கொண்டாள். பள்ளிக்கு செல்ல வேண்டாம் எனவும் உற்சாகமாகி விட்டாள்.

“இன்னிக்காவது அத்தை வீட்டுக்கு போலாமா?” எனக் கேட்ட சின்ன மகளை வெற்றுப் பார்வை பார்த்து திரும்பிக் கொண்டார் ஜோதி.

“அம்மா அழறாங்களா க்கா?” சோகமாக கேட்ட தங்கையின் கை பிடித்து அழைத்து சென்று ஓய்வறையில் விட்டாள் ஸ்ரீ.