காதல் துளிர் 1:
“என்றென்றும் … என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பார்வையிலே
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ … என்னுயிரே
ஓ ஒ ஒ ஒ ஒ ஒ … என்னுயிரே
தீம் தீம் தனன , தீம் தனனன
ஓ ஒ ஒ வானமே எல்லையோ
தீம் தீம் தனன , தீம் தனனன
ஓ ஒ ஒ காதலே எல்லையோ!”
அலைபாயுதே மாதவன் போல ஒரு காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு சந்தோஷமாக பாடலை ரசித்து, பாட்டு பாடிய படி பைக் ஓட்டிச் சென்றான் நம் கதையின் நாயகன் ஷிவேந்தர்.
“ இந்த படத்தில் மேடி, ஷாலினியை எத்தனை அழகா லவ் செய்து கல்யாணம் செய்துப்பார். அதே போல நானும் ஒரு பெண்ணை லவ் செய்து கல்யாணம் செய்து கொள்ளனும். அப்படி நடக்குமா குணா?”
“பெண்ணை தான் கல்யாணம் செய்துக்க முடியும்! அப்படி தான் நடக்கணும். இல்லை என்றால் ஊர் உலகம் தப்பா பேசாது” என்று அவன் நண்பன் குணா பின்னால் முதுகில் ஒன்று கொடுத்து “டேய் எருமை, ஜெர்சி மாடு, அம்புலன்ஸ் கதறது கூட காதில் விழாம என்ன டிரீம்ஸ்! பெரிய மாதவன் நினைப்பா?
வழி விடு டா. உனக்கு புண்ணியமா போகட்டும். என் பெண்டாட்டிக்கு ஒரே புருஷன் டா. அதுவும் இப்ப தான் கல்யாணம் ஆகி இருக்கு. இன்னும் வாழ்க்கையில் எதையும் முழுதா என்ஜாய் செய்யல. என் வாழ்க்கையே உன் கையில் தான் இருக்கு செல்லம். பார்த்து ஒட்டு! நாம அதில் போவது போல செய்திடாத.”
“குணா, எனக்கு ஏற்ற ஷாலினியை எங்க கண்டு பிடிக்க. என் செல்லம் எப்படி இருப்பா? ஷாலினி மாதிரியே டாக்டரா? இல்லை டீச்சரா? இல்லை கணினி எஞ்சினீர்! where is my angel?”
நான் சொல்வதை காதில் வாங்கறானா பாரு! அவனுக்கு வர போகும் பெண்டாட்டி எப்படி இருப்பா என்ற கேள்வி வந்தவுடன் குணா “அதோ பாரு, ரோடு கூட்டும் ஆயா, இல்லை அவ பேத்தி தான் உனக்கு பெண்டாட்டியா வர போறா! பெர்பெக்ட் மாட்ச்! மரியாதையா ரோட்டை பார்த்து ஒழுங்கா ஒட்டு டா , என்னை டென்ஷன் செய்யாத! ஐயோ, இவன் கூப்பிட்டான் லல்லியை கூட கண்டுக்காம வந்தேனே! எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” ..
“எனக்கு ஏற்றவளை எங்க போய் தேட! ஐடியா கொடு குணா? கண்ணில் சிக்க மாடீங்கிறாலே! கண்டு பிடிக்கிறேன்.”
குணா “ஏன் டா இப்படி படுதற. நடு ரோட்டில் கேட்கும் கேள்வியா இது எல்லாம் . நட்டு கழண்டு போச்சு டா உனக்கு! கன்பார்ம். உனக்கு வர போறவ எப்படி இருக்கனும் ரூம் போட்டு யோசித்து சொல்லு! இப்ப ஒழுங்கா போ டா”
வண்டி வேகத்தை கூட்டி “எங்க டீ இருக்க ராசாத்தி? என் ராசாத்தியை கண்டு பிடிக்காம விட மாட்டேன்.
“வா டீ ராசாத்தி ….
வாடி ராசாத்தி,
புதுசா இலச ரவுசா போவோம்
வாடி ராசாத்தி”
என்று ஷிவேந்தர் பாடினவுடன் “முப்பது ஆறு வயது ஜோதிகா மாதிரி பெண் வேண்டுமா? இதை முதலிலே சொல்வதற்கு என்ன டா? இப்பவே நம்ம தேகி பாட்டியிடம் சொல்லிடறேன்.”
ஷிவேந்தர் ஒரு நிமிடம் கற்பனை செய்து, சிலிர்த்து பல்லைக் கடித்து ” டேய் குணா குண்டா …. ஏன் டா உனக்கு இந்த நல்ல எண்ணம். புத்தி போகுது பாரு ..ஜோ இப்போ ஆன்ட்டி. 18 வயதில் ஜோ எப்படி இருந்தாங்களோ அப்படி வேண்டும். முடிந்தால் கண்டு பிடித்து சொல்லு “
“டேய், நான் சின்ன வயதில் அமுல் பேபி மாதிரி குண்டா இருந்தேன் சொல்லு ஒத்துக்கிறேன் . இப்ப எத்தனை கட்சிதமா இருக்கேன். இப்பவும் இப்படி சொன்னால்” என்ற குணாவிடம் “பிலோவில் வந்திடுச்சு மச்சி! சாரி செல்லம் கோவிச்சுக்காத” என்று சிவா உடனே மன்னிப்பு வேண்டினான்.
” விடு டா ! பரவாயில்லை. நம்ம ஜோவை ஆன்ட்டி சொன்னதை சூர்யா கேட்கணும். நொந்திடுவாறு டா ,பாவம். நானே ஒத்துக்க மாட்டேன். என்ன அழகு …”
“உன்னை இப்படியே இந்த குளத்தில் தள்ளிவிட்டு போக போறேன். அப்ப தெரியும். என் புலம்பலுக்கு பதில் சொல்லாமல் ஜோவை புகழ்ந்து கொண்டு இருக்க .சும்மா இருந்தவனை, இந்த பச்சை மண்ணை இந்த கல்யான்-தாரா ஜோடி புலம்ப வைத்து விட்டார்களே குணா !”
கல்யான்- தாரா ஜோடி ஷிவேந்தருடன் ஒன்றாக படித்தவர்கள் . சமீபமா வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டார்கள் . அவர்கள் தனி குடுத்தனம் எப்படி நடத்தறாங்க பார்க்க தான் காலையிலே, மருத்துவமனையில் இருந்து நேரா அவங்க வீட்டுக்கு சென்று இருந்தான் .
அவர்கள் காதல் லீலைகளை கண்டு மேலும் அங்கு இருப்பது சரி வராது என்று என்ன சொல்லியும் ஓடி வராத குறையாக கிளம்பினான் . வர வழியில் குணா வீட்டுக்கு சென்றாலும் அங்கும் அதே கதை தான். இவர்கள் அன்னியோனத்தை எல்லாம் பார்த்து கண்டிப்பா காதல் கல்யாணம் தான் செய்து கொள்ளனும் உறுதி செய்துக் கொண்டான்.
“டேய் குணா, கல்யான் ஒரு பக்கம் என்றால் வீட்டில் புதிதாக கல்யாணம் செய்த சின்ன அண்ணா – அண்ணி ஜோடி ஒரு பக்கம் . சின்ன பையன் என்ன செய்வேன் சொல்லு! போதாகுறைக்கு நீயும் என்னை படுத்தற மச்சி. இப்படி எல்லா பக்கமும் இம்சை செய்தால்…………”
“டேய், நான் என்ன டா செய்தேன்” என்று பதறிய குணாவிடம் “பேசாத டா . நண்பன், அதுவும் உன் உயிர் நண்பன் , நான் கல்யாணம் செய்த பின், இல்லை நான் எப்போ கல்யாணம் செய்து கொள்வேனோ அப்ப செய்து இருக்கலாம் என்று உனக்கு தோணுச்சா? துரோகி! நீ செய்தது சரியே இல்லை சொல்லிட்டேன்”
குணா கடுப்பாகி ” போடா…….! என் வாயில் எதோ வந்திட போகுது. பார்த்த பெண்களுக்கு எல்லாம் கண் சரி இல்லை, காது சரி இல்லை, படித்து இருக்கவில்லை, அவங்க ஆயா சரி இல்லை , வாஸ்து படி அவங்க வீட்டு பாத்ரூம் சரி இல்ல தட்டி கழிச்சிட்டு இப்ப பேசும் வாயை கிழித்தால் தான் என்ன டா ? உனக்கு கல்யாணம் ஆன பின் எனக்கு கல்யாணம் என்றால் பாட்டியை தான் கல்யாணம் செய்து கொள்ளனும். இந்த ஆட்டத்துக்கு எல்லாம் நான் வரல .
என் பெண்டாட்டியை கொஞ்சுவது உனக்கு வெருப்ப இருக்கா? இனிமேல் அப்படி தான் டீ! இதை பார்த்தாவது சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்வாயா பார்க்கிறேன். எப்படியோ என்னை விட்டால் போதும் டா ”
ஷிவேந்தர் ” கோபிச்சுக்காத செல்லம். எனக்கு கல்யாணம் ஆனாலும் உன்னை கூட்டிகிட்டு தான் சுத்துவேன். உன் மீது சத்தியம்.”
” ஐயோ வேண்டாம் டா! இது எத்தனையாவது சத்தியம் நியாபகம் இருக்கா? உன் பெண்டாட்டி கூடவே சுத்து.”
“கழட்டி விடுவதிலே இரு டா. இந்த பிரேம் அப்படி தான் . கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆச்சு . இன்னும் என்ன டா? நேற்று முக்கியமான வேலை கூப்பிட்டேன் . எடுக்கவே இல்லை மச்சி. என் நம்பரை பார்த்து அழைப்பான் பார்த்தால் அதுவும் இல்லை. கல்யாணம் செய்தால் நண்பனை கழட்டி விடணுமா என்ன ? ஆளாளுக்கு கடுப்பு ஏத்தறீங்க சொல்லிட்டேன்.”
“கூல் செல்லம். யு டோன்ட் வரி மச்சி . பெண்டாட்டி இல்லாம கூட வாழ்ந்திடலாம், எவனும் நண்பன் இல்லாம வாழ்ந்ததா சரித்திரமே இல்லை தெரியுமா? அவனவன் கல்யாணம் ஆன புதிதில் தான் இப்படி இருப்பாங்க . அதுக்கு அப்புறம் நீ வடக்க இருந்தா அவங்க தெற்கில் இருப்பாங்க . நீ கேள்வி பட்டது இல்லை ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் .
இவங்களை எல்லாம் இன்னும் ஆறு மாதத்தில் பாரு டா, என்னையும் சேர்த்து தான் சொல்லறேன்! அப்புறம் கல்யாணம் செய்து கொள்ளும் ஆசையே விட்டிடுவ . இப்பவே ரெண்டு மாதத்திலே, ஏன் டா கல்யாணம் செய்து கொண்டேன் நிலைமை தான் சிவா என் நிலை . சில சமயம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்கு. எப்ப கோபம் வரும், சண்டை போடுவா தெரியாம , நான் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கும் போது ஐயோ கடவுளே! என் கஷ்டம் எனக்கு தான தெரியும். சொன்னா தெரியாது. நீ அனுபவித்தால் தான் புரியும். கூடிய சீக்கிரம் அனுபவிப்ப ”
ஷிவேந்தர் “ச ,ச நோ சான்ஸ். என் விஷயத்தில் அப்படி எல்லாம் நடக்காது டா. நானும் என் டார்லிங் காலம் முழுதும் ஒரே போல தான் இருப்போம். நீ வேண்டும் என்றால் பாரேன். எனக்கு கல்யாணம் ஆனா பின், என் பெயரையும், என் மனைவி பெயரையும் பேப்பர் அடியில் கார்பன் வைத்து எழுதி பார்த்தாய் என்றால்??????”
“ என்ன டா நீ பெரிய கொலம்பஸ் நினைப்பா? இது கூட எனக்கு தெரியாதா? இப்ப எதுக்கு பேப்பர், கார்பன் சொல்லிக்கிட்டு இருக்க?”
“சொல்வதை முழுதா சொல்ல விடு மச்சி ! அப்படி எழுதினா அதில் எங்கள் பெயருக்கு பதிலா, ஒற்றுமை, அன்பு , காதல் என்று தான் வரும். உனக்கே போக போக தெரியும் டா ! அப்போது புரிந்து கொள்வாய், எங்க லவ்ஸ் பத்தி” .
இவன் அலம்பலுக்கு அளவே இல்லாமல் போச்சே என்று குணா தலையில் அடித்துக் கொண்டு “டேய் கிராதகா! என்னிடம் மிதிபடாம தப்பிக்கணும் என்றால் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு அமைதியா வா . எப்படி? எப்படி? கார்பனில் எழுதினால் வருமா? என் வாயில் நல்லா வந்திட போகுது ! இப்படி சொன்னவங்க தான் எந்நேரமும் சண்டை போட்டுக் கொண்டு இருக்க போறாங்க ”
“ டேய் குணா, ஏற்கனவே வீட்டில் சுரேன் அண்ணா காதல் திருமணம் செய்ததுக்காக புலம்பல் . என் ஆசை நிறைவேறுமா டா.”
“பெரிய அண்ணி தங்கச்சி ப்ரியா, நல்லா தான இருக்கா. அவளையே லவ் செய்து கல்யாணம் செய்துக்க வேண்டியது தான..”
“ இருக்கா தான் டா, இருந்தாலும் அவளை பார்த்தவுடன் ஒரு பீல் வரமாடீங்குதே ! சொந்தம் இல்லாமல் வெளியே தான் காதலிக்க போறேன். இத்தனை வருடம் பார்த்த முகத்தை திரும்பி பார்க்கவே போர். அம்மா விசாலம், அக்கா ரஞ்சு, தேகி பாட்டியை எப்படியாவது சமாளிக்க வேண்டியது தான் .தேவை இல்லாமல் இவர்களிடம் இவங்க பார்த்து முடிவு செய்தால் தான் கல்யாணம் வீர வசனம் பேசி வைத்து இருக்கேனே ?”
“டேய், முதலில் காதல் செய்ய பெண்ணை பார்க்கணும், அப்புறம் பிடிக்கானும் , அப்புறம் அவங்களுக்கும் பிடிக்கணும் , அப்புறம் காதலிக்கனும், அப்புறம் தான் உங்க அம்மா, அக்கா, ஆயா எல்லாம் வருவாங்க டா . கண்ணா ,கொஞ்சம் வேகத்தை கம்மி செய்! என் லல்லி செய்த பொங்கல் வெளியே வந்திட போகுது . பார்த்து போடா, ஏற்கனவே காலையில் இருந்து பிரட்டிக் கொண்டு வருது ,வேண்டாம் என்றாலும் இன்னும் இன்னும் போட்டு ஒரு வழி செய்திட்டா “
ஷிவேந்தர் சிரித்த படி “வாந்தி வந்தாலும் உள்ளே தள்ளிடு .இல்லை என்றால் வேண்டும் என்றே செய்த என்று சிச்டரிடம் போட்டுக் கொடுத்திடுவேன் !”
“உனக்கு ஏன் டா இத்தனை நல்ல எண்ணம் கிராதகா. ஐயோ, செத்து போன எங்க ஆயா எல்லாம் கண்ணுக்கு தெரியறாங்க! லல்லி செல்லம், உன்னை இன்று பார்க்க முடியுமா தெரியலையே” என்று குணா புலம்பலைக் கேட்டு சிரித்து மேலும் வேகத்தை கூட்டினான்.
“ஒ ஒ ஒ ஒ என்னுயிரே
ஒ ஒ ஒ ஒ என்னுயிரே”
சொல்வதை கேட்பதா இல்லை என்று குணா புலம்பி, நல்ல நண்பனாக கையில் இருக்கும் ஹெல்மெட் ஷிவேந்தர் தலையில் மாட்டி விட்டான் ..
பூந்தமல்லி சாலை, புகழ் பெற்ற மருத்துவ கல்லூரி சிக்னலில் பச்சை மனிதன் ஒளிரும் முன்பே மக்கள் அனைவரும், பொறுமையில்லாமல் ரோட்டை கடந்து விட்டனர் . தூரத்தில் இருந்தே யாரையும் காணவில்லை என்று பச்சை மனிதன் மறையும் முன்பே ஷிவேந்தர் நிறுத்தாமல் வேகமெடுத்தான். அப்போது விளக்கை பார்த்து வேகமாக கிராஸ் செய்த பெண் மீது மோத இருந்தான் . வேகமாக பிரேக் அழுத்தியதால் கிரீச் என்ற சத்தத்துடன் அந்த பெண்ணை உரசி நின்றது .
குணா கண்ணை மூடிய படி ஐயோ, கொன்னுட்டானே! ஒரு உயிரை அநியாயமா கொன்னுட்டானே! நான் சொன்னதை கேட்டியா? யாரு பெத்த மகளோ !
“கத்தாத டா பன்னி! ” என்று ஷிவேந்தர் அவனை அடக்கி, நல்ல வேலை ஒன்னும் ஆகவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விடும் முன் ‘ வனி’ என்று அவள் தோழி அலறி , அருகில் ஓடி வந்து அவளை உலுக்கி “ஒன்றும் ஆகவில்லை தான வனி ?”
குணா பயத்தில் ” டேய் சிவா, நல்ல வேலை ! அவங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.. கூட்டம் சேர்ந்திட போகுது. நிற்காத ,உடனே கிளம்பு ,கிளம்பு” என்றதை காதில் வாங்காமல் நின்று கொண்டு இருந்தான் .
ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து நின்ற ஷிவானி சுற்றியும் உணர்ந்து, நல்ல வேலை சாகவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டு பயத்தில், கோபத்தில் எதிரில் பைக்கில் நின்றவனை பார்த்து படபட என்று பொரிய தொடங்கினாள்.
ஐயோ, நான் சொல்வதை கேட்காமல் ஏழரையை பனியனில் போட்டுக் கொண்டு அதனுடன் டூர் போவேன் சொல்லறானே! அதுவும் ஹனிமூன். இந்த பெண் நம்மளை கம்பி எண்ண வைக்காமல் விட மாட்டா போல என்று குணா புலம்புவதை ஷிவேந்தர் கேட்டால் தானே!
“இடியட்ஸ்! இந்த ரோட்டில் இத்தனை வேகம் அவசியமா? மருத்துவமனை இருக்கு தெரியாது? உங்க அப்பா வாங்கி போட்ட ரோடு நினைப்பா? மூளை என்பதை வீட்டில் கிளம்பும் போதே கழட்டி வைத்து தான் வருவீங்களா? பத்து லட்ச ரூபாய் பைக் வாங்கினால் மட்டும் பத்தாது, அதை விதிகளின் படி ரோட்டில் எப்படி ஓட்டனும் தெரிந்து கொள்ள வேண்டும் .. இப்ப எனக்கு எதாவது ஆகி இருந்தா ? உங்களுக்கு என்ன பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரியில் விட்டு உங்க வேலையை நோக்கி போய்டே இருக்க போறீங்க! நீங்க செய்த தப்புக்கு நான் தான வலி ,வேதனை அனுபவிக்கனும் ”
ஆஸ்பத்திரியில் விடுவான் என்ன நிச்சயம். அப்படியே ரோட்டிலே எப்படியோ போ, எனக்கு என்ன? என்று விட்டு போனாலும் போய்டுவான் ,எதையும் சொல்வதற்கு இல்லை குணா முனங்கினான். சிவா திரும்பி முறைக்கும் முன்பே குணா அவசரமாக அவன் கையில் இருக்கும் ஹெல்மட்டை மாட்டிக் கொண்டான்.
ஷிவேந்தர், அவள் திட்டும் போது அவள் கோபத்தை தான் ரசித்துக் கொண்டு இருந்தானே தவிர அவள் பேசியதை கேட்கவே இல்லை. இவளை எங்கயோ பார்த்து இருக்கிறேனே ? எங்கே என்று யோசிக்க விடாமல் ஷிவானி குரல் அவனை தடுத்தது.
“எருமை மாடு, இத்தனை திட்டறேன், சொரணை இல்லாமல் அப்படியே ஹெல்மெட் போட்டுக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம், பின்னால் இருக்கும் வேதாளமும் போட்டுக் கொண்டு இருக்கு, உங்களுக்கு எல்லாம் பைக் வாங்கி கொடுத்த ஆசாமியை சொல்லணும் . அப்பா காசில் ஓசி சாப்பாடு சாப்பிட்டு, ஊர் மேய்ந்து கொண்டு இருந்தால் இப்படி தான். பணத்தின் அருமை எங்க தெரிய போகுது.”
யாரை பார்த்து என்ன பேசறா, என்று கோபமான குணா கைகளை ஷிவேந்தர் பிடித்து தடுத்துக் கொண்டு இருந்தான் .
அவர்கள் மன்னிப்பு கேட்காதது ஷிவானிக்கு மேலும் கோபத்தை தூண்டியது .
ஷிவேந்தர் கண்ணில் கூலிங் கிளாஸ் மாட்டி இருந்ததால் ஹெல்மெட் கண்ணாடியை தூக்கி விட்டு அவளிடம் “நீங்க சொன்ன சாலை விதிகளை மதிக்கிறோம் அர்த்தம் எடுத்துக்கலாம்.”
“யு யு .. நீ விவரம் தான். நீ இடித்து அடுத்தவர்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் ஆகலாம், உனக்கு ஒன்றும் ஆகா கூடாது. அதுக்கு பாதுகாப்பாக ஹெல்மெட் மாட்டிக் கொண்டாய்! அப்படி தான?”
மதியம் ஒரு மணி என்பதால் அந்த இடத்தில் ஜன நடமாட்டம் அதிகமா இல்லை . இருந்தவர்கள் நமக்கு என்ன என்று தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
ஷிவேந்தர் போலி வியப்பாக “வாவ், வாட் எ கிரே ட் டிஸ்கவரி. எனக்கு அடி பட கூடாது ஹெல்மெட் மாட்டிக் கொண்டேன் சொல்லறீங்க ! அறிவு போங்க ” என்று சொன்னவுடன் கோபத்தில் அவள் முகம் கோவைப்பழம் போல சிவந்தது.
அச்சோ இந்த லூசு ‘தலை கவசம் உயிர் கவசம்’ படித்தது இல்லை போல! சிவா போகலாம் டா! ஒரே அழுத்து ! ப்ளீஸ் செல்லமா!
ஷிவேந்தருக்கு ஏனோ அவளிடம் மன்னிப்பு கேட்க தோணாமல் அவளை சீண்டி விளையாடும் எண்ணம் தான் தலை தூக்கி நின்றது.
ஷிவானி கோபம் குறையாமல் பல்லைக் கடித்த படி “உனக்கு எல்லாம் எவன் லைசென்ஸ் கொடுத்தான் .. அவன் மட்டும் கையில் கிடைத்தான் தொலைந்தான்.”
ஷிவேந்தர் கூலாக “நாளைக்கு இதே இடத்தில் சந்திக்கலாமா?”
குணா இப்பவே என்ன நடக்கும் தெரியவில்லை. இதில் நாளைக்குமா? பார்த்தா பெரிய இடத்து பெண் போல தெரியறா! திட்டுவது கூட லோகலா திட்டமா டீசெண்டா திட்டறா . இந்த பெண்ணிற்கு இருக்கும் கோபத்திற்கு எங்களை அடியாள் வைத்து அடிக்காம விட மாட்டா போல! இவனுடன் வண்டியில் வந்த பாவத்திற்கு எனக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை. சிவா முதுகை சுரண்டி “போகலாம் டா! எஸ்கேப் ஆகிடலாம் “
ஷிவேந்தர் சொன்னதை கேட்ட ஷிவானி கடுப்பாக “என்ன மிஸ்டர் கிண்டல் செய்யறீங்களா ? இன்று ஒரு நாள் என்னை ஏத்த வந்தது பத்தாதா ! ஒரு வேலை இன்று ஒத்திகையா ?”
“நீங்க தான எவன் எனக்கு லைசென்ஸ் கொடுத்தான் கேட்டீங்க ?அவரை எப்பாடுபட்டாவது நாளைக்கு கூட்டிக் கொண்டு வரலாம் பார்த்தேன். வேண்டும் என்றால் அவரிடமே நீங்களும் லைசென்ஸ் எடுத்துடுங்க ! என்ன? ஓகே வா !”
அவள் முறைப்பதை கண்டு “ஒ சாரி, உங்களுக்கு இன்னும் பதினெட்டு ஆகவில்லை போல?அது தான் கோபமா ?”
நீ எல்லாம் மனிதனே இல்லை, திருந்தாத ஜென்மம் என்பது போல கேவலமான லுக் விட்டு ,நடக்கும் போதும் இனி ஹெல்மட் மாட்டிக் கொண்டு போகணும் போல! பாட்டி சொன்னது போல இது தான் கலி காலம் ..இத்தனை திட்டறேன், கர்டசிகாகவாது சாரி ஒரு வார்தை சொல்லறானா பாரு! எருமை மாடு என்று முனங்கிக் கொண்டு அங்கு இருந்து நகர்ந்துவிட்டாள்.
அவள் தோழி சுவாதி “எதுக்கு நிவி இத்தனை டென்ஷன். நீ திட்டினவுடன் ஏதோ பலன் இருந்தால் தேவல? அவன் ஒரு வார்த்தைகாகவாது மன்னிப்பு கேட்டானா ? உன் தொண்டை தண்ணீர் வற்ற கத்தினது தான் வீண். பின்னால் வேற ஒரு எருமை உட்கார்ந்து கொண்டு இருந்தது. அது கூட வாயை திறக்கவில்லை ” .
“அது தான் சுவாதி கோபம் . எத்தனை திட்டினேன். அசைந்தானா பாரு ? வகுப்பறையில் அந்த ஹிட்லர் உயிரை வாங்கினான் என்று வெளியே வந்தால் இங்கேயும் ஒருத்தன். ரோட்டில் நிம்மதியா போக முடியுதா? அவசரமா போகணும் என்றால் எரோப்லனில் ஏறி போக வேண்டியது தான ? ”
பிரச்சினை இல்லாமல் சிவா கிளம்பிய சந்தோஷத்தில் குணா “நல்ல வேலை சிவா! இதோட விட்டாங்க . அங்க இருந்த போலிஸ் மாமா வேற நம்மளை நோக்கி வருவது போல இருந்தது. சரியா கிளம்பிட்ட! நண்பன் டா” என்று மூச்சு விடும் முன்பு ஷிவேந்தர் என்ன நினைத்தானோ திடீர் என்று அடுத்த திருப்பத்தில் ‘யு டர்ன்’ போட்டு ஷிவானியை நோக்கி சென்றான் .
“ஐயோ, ஐயோ இப்ப எதுக்கு டா மறுபடியும் அங்க போற! கட்டையை வைத்து அடிக்க போறா டா! யார் முகத்தில் விழித்தேனோ. ஆத்தா, மாரியாத்தா எங்களை நீ தான் காப்பாத்தணும் ” என்று அவன் முதுகில் ஒண்டிக் கொண்டான்.
ஷிவானியும், சுவாதியும் சிறிது தூரம் கூட சென்று இருக்க மாட்டார்கள். அவர்களை நோக்கி மெதுவாக வரும் ஷிவேந்தரை கண்டு மன்னிப்பு கேட்க வரானோ! திட்டினது இப்ப தான் உரைக்குதோ! ஒரு வேலை சண்டை போட வரானா? என்ன செய்திடுவான் பார்த்திடலாம் என்று வெளியே தைரியமாக காட்டிக் கொண்டாலும் பயத்தால் அருகில் இருந்த அவள் தோழி சுவாதி கைகளை இறுக பற்றிக் கொண்டாள்.
“நான் அப்பவே சொன்னேன் கேட்டியா? இனி என்ன செய்ய போறானோ ! நமக்கு இது எல்லாம் தேவையா வனி ” என்று சுவாதி புலம்பியதை கேட்டவுடன்
“சும்மா இரு டீ, நானே பயந்து கொண்டு இருக்கேன், நீயும் டென்ஷன் செய்யாத ! என்ன செய்திடுவான் பார்த்திடலாம்” என்று ஷிவானி வாய்க்குள் முனங்கினாள்.
ஷிவேந்தர் அவள் முன்னே சென்று ஹெல்மெட் கழட்டாமல் கூலிங் கிளாஸ் மட்டும் கழட்டி அவள் கண்களை பார்த்து “ நான் உண்மையா இதை உன்னிடம் சொல்ல கூடாது நினைத்தேன். ஆனாலும் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கண்டிப்பா சொல்லியே ஆகணும்”
ஷிவானி மனதில், கொஞ்சமாவா வாங்கின . என்னிடம் நீ சொல்லி தான ஆகணும் .சாரி சொல்ல இத்தனை பில்ட் அப் கொடுக்கறான். சொல்லு சீக்கிரம் சொல்லு . எனக்கு வேலை இருக்கு என்று கையில் உள்ள செல் போனில் மணியை பார்த்தாள் .
ஷிவேந்தர், அவள் எண்ண ஓட்டத்தை அறிந்து சிரித்துக் கொண்டு ரொம்ப உரிமை உள்ளவன் போல அவள் போட்டு இருக்கும் ஐ டி கார்ட் எடுத்து “ஷிவானி கண்ணன்” பெயரை படித்து கூல், நைஸ் மனதில் மெச்சி “ஷிவானி , எதுக்கு இத்தனை கோபம் பேபி. நான் உன்ன விரும்பல , உன் மேல் ஆசை படல , நீ அழகா இருக்கன்னு நெனக்கல , ஆனா , அதுதான் நடந்துடுமோன்னு பயமா இருக்கு! யோசித்து சொல்லு”. மெதுவாக ஒவ்வொரு வார்த்தையாக “ I love you. நீ ரொம்ப அழகா இருக்க சக்கர கட்டி! வெயலில் நின்று கரைந்து போய்ட போற ! வேண்டும் என்றால் டிராப் செய்யட்டுமா ?”
“யு இடியட்! முருகா! எனக்கு வந்த சோதனையை பாரேன் . இது அந்த மாதவன் பட டைலாக் தான. இவனுக்கு எல்லாம் இப்படியும் டயலாக் சொல்லணும் ஆசையா? சரியான பைத்தியக்காரன். லூசு ! மெண்டல் ஹாஸ்பிடல் இருந்து தப்பித்து வந்துவிட்டான் போல !” என்று முனங்கியதைக் கேட்ட குணா, ஹை சரியா சொல்லிட்டாலே! சிவா முகத்தில் அப்படி அப்பட்டமா தெரியுதா என்ன? என்று யோசித்துக் கொண்டு இருந்தான் .
ஷிவானி கையில் உள்ள செல் போனில் அவள் குடும்ப நண்பர் வர்மா போலிஸ் எண்ணை அழுத்தினாள். மனதில், இரு உன்னை அங்கிளிடம் சொல்லி என்ன செய்யறேன் பாரு .லைன் பிஸி வந்ததை கண்டு இது இருப்பதும் ஒன்று தான் இல்லாததும் ஒன்று தான் கோபமானாள் ..
அவள் நகர்வதை கண்டு “டிராப் வேண்டாமா? உங்க அப்பா திட்டுவானா, விடு ஸ்வீட்டி” என்று கண்ணடித்து, உதடு குவித்து முத்தம் கொடுத்து “சீக்கிரம் யோசித்து சொல்லு செல்லம். நீ சொல்லவில்லை என்றாலும் யஸ் சொல்லும் வரை விடுவதா இல்லை” .
தூரத்தில் இருந்த போலிஸ் இவர்கள் அருகில் வருவதை கண்டு சிவா “பாய் செல்லம்” பறந்து சென்றான் .
பைக் ஆசாமி என்ன சொன்னான் என்று புரியவே சில நிமிடங்கள் ஆனது.
“யு இடியட்..ஸ்டுபிட், இவன் I LOVE YOU சொன்னால் உடனே எஸ் சொல்லனுமா? நீ யாரு டா எனக்கு லிப்ட் கொடுக்க” என்று நடு ரோடு என்று பாராமல் கத்தினாள்.
ஷிவானி கத்துவதை கண்ட அவள் தோழி சுவாதி “வனி கூல் டி, கொஞ்சம் அடங்கு. மறுபடியும் வந்திட போறான்” .
அவள் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து “சரியான பக்கி பையன் சுவாதி ..வா நாம போகலாம். தைரியம் இருந்தால் ஹெல்மெட் கழட்டி சொல்லி இருக்கணும். முக மூடி போட்டு சொன்னால்? மறுபடியும் என் கண் முன் வந்தான் தொலைந்தான். பட வசனம் எல்லாம் நல்ல மனப்பாடம் செய்து வைத்து இருக்கு லூசு” .
சுவாதி கிண்டலாக “ஹெல்மெட் கழட்டி சொல்லி இருந்தால் மேடம் முதலில் I LOVE YOU சொல்லிடுவது போல! அவன் கண்கள் உண்மையை தான் சொல்லுச்சோ தோணுது வனி! சிரிக்கும் கண்கள். முகத்தை கட்டாமல் ஆட்டம் காட்டிவிட்டானே !”
“சுவாதி, கடுப்பை கிளறாதே ! போனவன் யாரு டீ! நமக்கு தெரிந்தவனா ? எவனாவது சீனியரா? பைக் நம்பரை கூட நோட் செய்யலையே ! நீ செய்தாயா ? தெரிந்து இருந்தால் வர்மா அங்கிளிடம் சொல்லி முட்டிக்கு முட்டி தட்ட சொல்லி இருப்பேன். இந்த நேரம் பார்த்து அவர் லைன் பிஸி”..
அவனை ஒன்றும் செய்ய முடியாத கோபத்தில் ஆஆஆ…………. அலறி ,காலை உதைத்து என்னிடம் மாட்டாமலா போவான் அப்ப இருக்கு அவனுக்கு . பின்னால் இருந்த குரங்கு முகத்தை கூட சரியா பார்க்கவில்லை ..
அந்த சம்பவத்திற்கு பிறகு கல்லூரி சாலை கடக்கும் போது எல்லாம் வனிக்கு அந்த ஹெல்மட் போட்ட முகம் மின்னி மறையும். அந்த உருவம், இல்லை, அவன் பைக் தென் படுதா என்று கண்களை சுழல விட்டு தான் செல்வாள். கையில் சிக்க மாடீன்கிறான், சிக்கினான் தொலைந்தான் என்று அவள் தேடுதலை விடவே இல்லை .
குருவி படத்தில் வர த்ரிஷா மாதிரி அந்த ஹெல்மெட் ஆசாமியை கண்டு பிடிக்க நானும் இன்னும் கொஞ்ச நாளில் கையில் ஹெல்மட் வைத்து அலைய போறேன். இது உறுதி என்று சிரித்துக் கொண்டாள்.
ஷிவேந்தருக்கு அவனை நினைத்து சிரிப்பாக இருந்தது .ரோட்டில் போற பெண்ணிடம் பொருக்கி தனமா நடந்து கொண்டதும் இல்லாமல் அவளை தினமும் பார்க்க கண்கள் துடிக்குதே ! கொஞ்ச நாள் பார்க்காமல் போனால் எல்லாம் சரியா போய்டும் என்று நினைத்ததுக்கு மாறாக ஷிவானி அவன் எண்ணத்தில் நிறைந்து இருந்தாள் .
எந்நேரமும் யோசனையிலே இருக்கும் ஷிவேந்தரை கண்ட குணா அவனிடம் “ஏன் டா மந்திரித்து விட்ட கோழி போல ஒரு மாதிரி இருக்க ! உடம்பிற்கு எதாவது?? காத்து, கருப்பு எதாவது அடிசிடுச்சா? இல்லை உன்னிடம் வந்த லூசு எதாவது அடிசிடுச்சா ?” என்றதற்கு சிரித்து மழுப்பினான்.
*******