அஜய் அவனோட கம்பெனியை தவிர எல்லாவற்றையும் அவங்க பெயருக்கு எழுதி கொடுத்துட்டான். அதனால் தான் அமைதியா இருக்காங்க. நம்ம ரதுகுட்டி விசயம் தெரிந்தால்..பாப்பா அஜய்யோட வாரிசு தான. அவன் வீட்டையும் மற்ற சொத்தை எழுதி வாங்கினாலும் கம்பெனியை பல மடங்காக்கி வச்சிருக்கான். அதுக்கு பாப்பா அடுத்த வாரிசு என்பதால் அவர்கள் கண் பாப்பா மீது தான் விழும் என சொல்ல, தியாவும் முக்தாவும் துடித்து போனார்கள்.
அங்கிள்..அதான் சொத்தை வாங்கிட்டாங்களே! அவங்ககிட்ட நிறை சொத்து பணம் இருக்கும்ல்ல? எதுக்கு அஜய் அண்ணாவை தொந்தரவு செய்றாங்க? முக்தா கேட்டாள்.
இருக்கு..நிறைய இருக்கு. ஆனால் அவங்களுக்கு மத்தவங்க சந்தோசமாக இருப்பது பிடிக்காதுடா. அவங்க அஜய்யை டார்கெட் பண்ணல. தனராஜை தான் பண்ணாங்க. அவர் எப்பொழுது சொத்தை தன் மகனுக்கு மாற்றினாரோ! அப்பவே அஜய்யை அவங்க பக்கம் இழுக்க தான் செஞ்சாங்க.
அஜய் ஹாஸ்பிட்டல் இருந்து வந்ததும் அந்த பொண்ணு திவ்யாவை கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்தாங்க. ஆனால் அப்பொழுது அஜய்க்காக சிம்மாவும் விக்ரமும் வந்தனர்.
போலீஸ் கேஸ்ஸில் இருந்து அவங்க வெளிய வர முடியும். ஆனால் அவங்க அமைதியா இருக்க காரணம். அவர்கள் செய்த தப்பிற்கான ஆதாரத்தை போலீஸ் ஆட்களே வச்சிருக்காங்க.
“வேறு யாரும் பார்க்கிறார்களா?” என கவனித்து விட்டு, அந்த ஆதாரம் முழுவதும் விக்ரமிடம் தான் இருக்கு. இது அவங்களுக்கு தெரிந்தால் அவருக்கு ஆபத்தாகும்ன்னு தான் சிம்மா ரகசியமாக வச்சிருக்கான்.
நம்மை தவிர அஜய்க்கு மட்டுமே இது தெரியும். யாருக்கும் இது தெரியக் கூடாது. அதை கொடுக்க வேண்டிய நேரம் கொடுக்க தான் பத்திரப்படுத்தி வச்சிருக்காங்க என்றார்.
ம்ம்..அதுமட்டுமல்லம்மா..அவள கல்யாணம் பண்ணனும்ன்னு கம்பெனி விசயத்திலும் ரொம்ப தொந்தரவு செய்தாங்க. அவர் தயக்கமுடன், நீங்க சேர்ந்து கவனித்த கம்பெனி இருக்குல்ல..அங்க அவங்களும் பாட்னர் என்றார் அவர்.
அப்பா..என்ன சொல்றீங்க? வினித் கோபமாக கேட்க, வினுப்பா..ரொம்ப கோபப்படாதப்பா. எல்லாம் நல்லதுக்கு தான். போனால் அந்த கம்பெனி மட்டும் போகட்டும் என்றார் அவர்.
இல்லப்பா, கண்டிப்பா அவங்க கையில நம்ம அஜூ கஷ்டப்பட்டு வளர்த்த அந்த கம்பெனி போகக்கூடாது என்ற தியா, வினு..நீ சொன்னது சரிதான். ஆனால் முன் போல நீ அந்த திவ்யாவை தான் ஏதாவது செய்யணும் என்றாள்.
“ஏதாவது பிளான் வச்சிருக்கியா தியா?” வினித் கேட்க, இப்ப வேண்டாம். ஒரு மாதம் ஆகட்டும். அப்புறம் சொல்றேன். அவ இப்ப சந்தோசமா இருந்துக்கட்டும். என்னோட அஜூவையும் மாமாவையும் இந்த நிலைக்கு ஆக்கியவளை சும்மா விடக் கூடாது என பல்லை கடித்தாள் தியா.
தியூ..முக்தா பயத்துடன் அவளை பார்க்க, வினு..யுகி, முகி கண்டிப்பா இங்க தான் இருக்கணுமா? தியா கேட்டாள்.
நான் போகமாட்டேன்ப்பா..என முந்திக் கொண்டு முக்தா சொல்ல, உன்னை அனுப்புவதாக எனக்கு எண்ணமில்லை என வினித் சொல்லி தியாவை பார்த்து, வேலா அஜூவோட இருக்கட்டும். நம்ம வீட்ல எப்போதும் பாதுகாப்பிற்கு நம்பிக்கையான ஆட்களை போடணும் என யுக்தா அறையை பார்த்தான்.
இங்க பாரு.. ஆர்வக்கோளாறு.. என வினித் முக்தாவை அழைக்க, ஆர்வக்கோளாறா? என சினமுடன் அவனை பார்த்தாள்.
ஓய், எதுக்கு முறைக்கிற? அவர் ஒன்றும் தவறாக சொல்லவில்லையே! ரோஹித் சொல்ல, அவனையும் முறைத்தாள் முக்தா.
யுக்தா, தியா, ரது உன் பொறுப்பு தான். எதுவும் பிரச்சனைன்னா என வினித் முக்தா அருகே வந்து அவள் அலைபேசியை பிடுங்கி அவன் நம்பரை அவளது அலைபேசியில் பதிவு செய்தான்.
“என்னோட பாஸ்வேர்டு எப்படி உங்களுக்கு?” என முக்தா திணற, ஆமா..பெரிய பசில் பாரு. “ஜூரோ பைவ் ஜூரோ டூ தான?” வினித் கேட்க, அவள் அதிர்ந்து அவனை பார்த்து முகத்தை மூடினாள்.
“அவ பாஸ்வேர்டு தெரியுமா உனக்கு?” தியா ஆராய்ச்சிக் கண்ணோடு அவனை நோக்க, “தெரியும்” என முக்தாவை பார்த்து “சொன்னது நினைவிருக்கட்டும்” என கோபமாக கூறுவது போல் கூறி ரோஹித்திடம் “சீக்கிரம் தயாராகி வா” என சொல்லி விட்டு புன்னகையுடன் சென்றான். மற்றவர் அறியாது புன்னகையை மறைத்த வினித்தை கண்ணம்மா கண்டு கொண்டார்.
இதுவரை அணியாத விதத்தில் பக்கா பிசினஸ் மேனாக கீழே வந்தவனை பார்த்து முக்தா மட்டுமல்ல அனைவரும் வியந்து பார்த்தனர்.
அப்பா, என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என அவர் காலில் விழுந்த வினித், அஜய்யிடம் பேசிட்டு நம்ம கம்பெனியை பார்க்கப் போறேன் என்றான்.
“ஓய்வெடுத்துட்டு இரு நாட்கள் கழித்து போகலாம்ல்லப்பா?” ராக வீரன் வருத்தமுடன் மகனை பார்க்க, இல்லப்பா..என்னோட மனது அமைதியா இருந்தா தான் ஓய்வெடுக்க முடியும் என்று தியாவிடம்..எல்லா பிரச்சனையும் சீக்கிரம் முடிஞ்சிரும் என்றான்.
ரோஹித்தை பார்த்த முக்தா, “ஆபிஸ் போற மாதிரியா டிரஸ் பண்ணியிருக்க? நீயும் உன் ஹூட்டியும்” என அவனது ஹூட்டியை பிடித்து இழுத்தாள்.
நானே கஷ்டப்பட்டு தலையை சரி செய்து கொண்டு வந்திருக்கேன். உலைச்சு விட்றாத என சொல்ல, “நீயெல்லாம் எப்படி நம்ம கம்பெனி பிசினஸை பார்த்துக்கப் போறீயோ?”
மேடமும் படிச்சிருக்கீங்கல்ல.. வாங்க நீங்களும் கத்துக்கோங்க முக்தாவை ரோஹித் அழைக்க, என்னால முடியாதுப்பா. நான் அக்கா, தியாண்ணி, ரதுவை பார்த்துக்கணும். இன்னும் கொஞ்ச நாள்ல்ல நம்ம வீட்டுக்கும் போயிடுவேன்ல்ல என்று வினித்தை பார்த்தாள்.
ஓ..”நீ எப்படி போறன்னு பார்க்கிறேன்” என வினித் எண்ணியவாறு முக்தாவை பார்த்தான். கண்ணம்மா அவர்களிடம் வந்து வினித், ரோஹித்திற்கு திருநீறு பூசி விட்டார்.
அது வந்துப்பா..அவங்க அஜய்க்கு ஏதும் ஆகிடக் கூடாதுன்னு தினமும் பூசி விடுவாங்க. அதான் உங்களுக்கும் ஏதும் ஆகக் கூடாதுன்னு பூசி விடுறாங்கன்னு சொல்ல, வினித் அவர் காலில் விழ, அவர் பதறி நகர்ந்தார்.
“நீங்க அஜய்யை மட்டும் தான் உங்க பையனா ஏத்துப்பீங்களா?” வினித் கேட்க, கண்ணம்மா கண்ணீருடன், அப்படியெல்லாம் இல்லப்பா. நான் உங்க வீட்ல வேலை செய்ற பொம்பள. அதான்..
“நாங்க நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிறீங்களே! எங்களுக்கு இதை விட என்ன வேணும்?” என வினித் அவரை அணைக்க, கண்ணம்மா கண்ணீருடன், நீங்களும் அஜய் தம்பியும் ஒண்ணு தான் என்று அவர் கண்ணீர் வடித்தார்.
கண்ணம்மா, “பிள்ளைங்க கிளம்பும் போது எதுக்கு அழுறீங்க?” ராகவீரன் கோபமாக கேட்க, வினித் அவன் அப்பாவையும் கண்ணம்மாவையும் பார்த்து, “நான் கிளம்புகிறேன்” என ரோஹித்துடன் காரில் ஏறினான்.
“முக்தா பாஸ்வேர்டு எப்படி மாமா உங்களுக்கு தெரியும்?” ரோஹித் கேட்க, சட்டென காரை நிறுத்தி அவனை பார்த்தான் வினித்.
“என் தங்கச்சியை கல்யாணம் பண்ணா மாமா தான?” ரோஹித் கேட்க, வினித் ஏதும் சொல்லாமல் காரை எடுத்தான். “சொல்லுங்க மாமா?” அவன் மேலும் மாமா போட..வினித் புன்னகையுடன், உன்னோட தங்கை எனக்கு தெளிவா புரிய வச்சுட்டா என்றான்.
“என்ன?”
பாஸ்வேர்ட்..எங்க இருவரின் பிறந்தநாளுக்கான மாதம். அவள் பிப்ரவரில்ல பிறந்தா. நான் மேல்ல பிறந்தேன். எனக்கு அவ சின்னப் பொண்ணா இருந்த போது பெரியதாக ஏதும் புரியவில்லை. ஆனால் எனக்கு கஷ்டம் வந்தால் அவள் புன்னகை தன்னாலே எனக்கு நினைவு வரும். இரு வருடத்திற்கு முன் கூட என்னால சரியாக புரிஞ்சுக்க முடியல.
வெகு வருடத்தின் பின் உங்க வீட்ல வச்சு அவளை பார்த்த போது, அவள் என்னிடம் கேட்ட ஒன்று தான் நினைவில் வந்து நானே அதிர்ந்தேன்.
நான் தியாவை காதலிப்பதாக எண்ணிய போது…தியூவுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லையாம். நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றாள் உன் தங்கை முக்தா.
“நீ சின்னப் பொண்ணு? நாம எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்”? என கேட்ட போது என சொல்லி புன்னகைத்த வினித் ரோஹித்தை பார்த்தான்.
“என்ன சொன்னா? என்ன சொன்னா?” என ஆர்வம் தாங்காமல் ரோஹித் கேட்க, நான் வளர்ந்து வரும் வரை காத்திரு. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா. அன்று நான் அவள் பேச்சில் சிரித்தேன். ஆனால் இன்று அது தான் நடக்குமோ என்னமோ?
வினித் விரக்தியுடன், என் வாழ்க்கையில் எனக்கு பிடிச்சவங்களுக்கு மட்டும் ஏதாவது பிரச்சனை வந்திரும். என் வாழ்க்கையில் வந்து சந்தோசமா இருக்கிறது முக்தா மட்டும் தான். எனக்கு அவகிட்ட போக பயமா தான் இருக்கு. அவளுக்கும் ஏதாவது ஆகி விட்டால்..என வினித் கண்கலங்க,
இல்ல, உண்மையாக தான் சொல்றேன். உங்களுக்கு ஏதும் ஆகாது. நான் சொந்தங்களை பார்த்திருக்கேன். என்ன தான் நெருங்கிய உறவானாலும் இந்த அளவிற்கு பாசமா இருக்க மாட்டாங்க. என்னோட அம்மா சொன்னது சரி தான்.
என்னோட தங்கை முகி உங்களுடன் இருந்தால் இப்பொழுதை விட சந்தோசமாக இருப்பாள். இதுக்கு மேல உங்க பக்கத்துலையும் அஜய் சார் பக்கத்திலயும் நான் இருப்பேன் என்றான்.
வினித் புன்னகையுடன் காரிலிருந்த வசதிகள் அடங்கிய பெட்டியில் கார்த்திக்கை அழைத்தான். ரோஹித் வினித்தை பார்த்தான்.
கார்த்திக் விஜய்யுடன் அஜய் கம்பெனிக்கு வா. நாம பேசணும் என்று அழைப்பை துண்டித்தான்.
தாத்தாவும் பாட்டியும் துளசி வீட்டிலேயே அவர்களுக்காக தங்கி விட்டனர். ரம்யாவும் அங்கே தான் இருந்தாள்.
இரவு முழுவதும் தூங்காமல் மருது அமர்ந்திருக்க, அவன் தோளில் சாய்ந்து துளசியும், மடியில் ரம்யாவும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
பாட்டி இவர்களை பார்த்து, ஏய்..எழுந்திருங்க..பிள்ளை இப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கார் என மருதுவுக்காக அவர் பேச, அவனோ..ஷ்..பாட்டி அவங்க ஓய்வெடுக்கட்டும் என்றான்.
தாத்தா அவனருகே வந்து ஸ்டேட்டஸ் பாராது தரையில் அமர்ந்து, எல்லாத்தையும் நீயே பார்க்கணும்ன்னு இல்லை. என் பேத்தி இனி எங்க பொறுப்பு. நீ உன்னோட பொண்டாட்டியோட சந்தோசமா இருக்கணும் என்று அவர் தலையை கோதினார். அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோட இரு பெண்களும் எழுந்து மருதுவின் கண்ணீரில் அவர்களும் அழுதனர்.
அவர்களை பார்த்து கண்ணை துடைத்து, எதையும் கடந்து தான் செல்லணும் என்றவன் இந்த வீட்டை விற்கணும். எனக்கு உதவுங்களேன் என தாத்தா கையை பிடித்தான் மருது.
ரம்யா அதிர்வுடன் “அண்ணா” என சத்தமிட்டாள்.
ஆமா ரம்யா, ஏற்கனவே ஊர்ல நம்மை பற்றிய பேச்சு தான். இனி அப்படி ஏதும் நடக்கக்கூடாது. என்னோட அம்மா, அப்பா கஷ்டப்பட்டு வாங்கி நம்மை வாழ வைத்த வீடு என்றாலும் இனி அவங்க நினைவில் இங்கேயே என்னாலும் இருக்க முடியாது.
மாமனார் வீட்டு காசுல வாழ்றான்னு என் மாமாவை எல்லாரும் தப்பா பேசுவாங்க. அதெல்லாம் கேட்டுட்டு என்னால சும்மா இருக்க முடியாது என்றாள் துளசி.
ஆனால் அண்ணி, “வேறெங்க போவீங்க?” ரம்யா கேட்க, என் மாமா வீடு போதும் என்றாள் துளசி.
ரம்யா கண்ணீருடன் துளசியை அணைத்தாள்.
யாரும் அழ வேண்டாம். இப்போதைக்கு வாடகை வீட்ல இருந்துக்கலாம் என மருது சொல்ல, இல்ல மாமா..நம்ம வீட்டுக்கே போகலாம்.
“சாரிடா துளசிம்மா” என மருது துளசியை கண்ணீருடன் அணைத்து, சீக்கிரமே பெரிய வீடாக கட்டலாம் என்றான்.
ம்ம்..ஆனால் எப்படி? துளசி கேட்க, நான் உரக்கடை வைக்கலாம்ன்னு இருக்கேன். அதை பற்றி முழுசா தெரிஞ்சுக்கணும் என தாத்தாவை பார்த்தான்.
எனக்கு தெரிந்தவர் இருக்கார். அவர் உங்களுக்கு இதை பற்றி விளக்குவார். கடை ஆரம்பிக்க பணம்? தாத்தா கேட்க, இருக்கு. எனக்கு அவர் நம்பரை மட்டும் தாங்க. மற்றதை நான் பார்த்துக்கிறேன் என்றான் மருது.
சரிப்பா, நான் அவரிடம் பேசிட்டு தாரேன் என்றார் தாத்தா.
அன்னம் காபியை தயா செய்து துளசி வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து விட்டார் விக்ரமிடம். அவனும் மற்றவர்களும் அங்கே வந்தனர்.
திலீப், சுருதி, மகிழ் மட்டும் இல்லாததை பார்த்து சுவாதி அப்பா கேட்க, “வருவாங்க” என்றார் திலீப் அம்மா.
அப்சராவை தேனீக்கு வர வைத்து அவளிடம் ஓரிடத்தில் அமர்ந்து பேசினர் மூவரும்.
அவள் பார்வை முழுவதும் மகிழ் மீதிருக்க, அவன் பாவமாக சுருதியை பார்த்தான்.
இங்க பாருங்க. நீங்க யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம். நீங்க இவரை காதலித்தால் மறந்திருங்க என்றாள் சுருதி சட்டென.
அப்சராவோ புன்னகையுடன், “உனக்கு பயமா இருக்கா?” அவள் கேட்க, மகிழ் கோபமாக..மாமா, “இவள் உதவி கண்டிப்பா வேணுமா?” எனக் கேட்டான்.
கோபப்படாத மகிழ். சும்மா தான் கேட்டேன். நேற்றே திலீப் சார் விசயத்தை சொன்னார். எனக்கு உன்னை பிடிக்கும். உனக்கு கஷ்டம் இருந்தாலும் உன்னை சுற்றி இருப்பவர்களை சந்தோசமா பார்த்துப்ப. அது என்னை ஈர்த்தது. அதுக்காக காதலிக்கிறவங்கல்ல பிரிக்கிற அளவிற்கு மோசமானவள் நானில்லை.
நான் என் அப்பாவுக்காகவும் தான் வந்தேன். அவரை உங்க டீன் ஏமாற்றி அவருடைய ஹாஸ்பிட்டலை தான் சனா ஹாஸ்பிட்டலாக்கி இருக்கார் என சொல்ல, அனைவரும் அதிர்ந்தனர்.
“என்ன சொல்ற?” திலீப் அதிர, என்னோட வேலை பாதியை முடிச்சுட்டேன். ஆனால் அவர் கேபின்ல்ல தான இந்த ஹாஸ்பிட்டல் என் அப்பாவுடையதுன்னு நிரூபிக்கும் ஆதாரம் இருக்கு. எங்க இருக்குன்னு தெரியாது. அவர் அறையை ரொம்ப பாதுகாப்பா வச்சிருக்கார். அதை எப்படி எடுக்கண்ணு தான் தெரியல என தலையை பிடித்தாள் அப்சரா.
“நிஜமாகவே அது உங்க ஹாஸ்பிட்டல் தானா?” மகிழ் கேட்க, எஸ்..அந்த சனாவும் பயங்கரமான ஆள் தான். நான் சின்னப் பொண்ணா இருக்கும் போதே இதெல்லாம் நடந்திருக்கு. நல்லவர் போல் என் அப்பாவை ஏமாற்றி குடிக்க வைத்து எழுதி மாத்தி இருக்கான். அந்த ஆதாரம் எல்லாம் அவன் வச்சிருக்கான். அதான் அந்த பென்டிரவ்.
திலீப் சார், இது உங்களால தான் முடியும் என்றாள் அப்சரா.
என்னால முடியாது என்றான் திலீப்.
சரி, அப்ப நீங்க உங்க ரம்யாவை மறந்துருங்க.
“என்ன?” மகிழன் கேட்க, ஆமா..இன்றிரவு ரம்யாவை கடத்தி கொல்லப் போறாங்க என்று சனாவும் அவள் அப்பாவும் பேசிய வீடியோவை காட்டினாள் அப்சரா.
யார் மேல..என கோபத்தில் திலீப் எழுந்தான்.
மாமா, அமைதியா இருங்க. இது யாருக்கும் தெரிய வேண்டாம் என்ற சுருதி ஒருவரை தவிர. சிம்மா மாமா ரம்யாவிற்கு பாதுகாப்பாக இன்று இரவு இங்க இருக்கட்டும்.
எப்படியும் அவங்க அந்த நேரம் ஹாஸ்பிட்டல்ல இருக்க மாட்டாங்க. மாமா நீங்களும் மகிழும் அந்த பென்டிரைவை எடுக்கப் போங்க என்றாள்.
“அதான் நான் இருக்கேன்ல்ல?” அப்சரா சொல்ல, ம்ம்..ஓ.கே என்றான் திலீப்.
அப்சரா..கிளம்பு. உன்னை பார்த்தால் மத்தவங்களுக்கு சந்தேகம் வந்திரும் என்றான் திலீப். அவள் சென்னை கிளம்ப, மற்றவர்கள் ரம்யாவை பார்க்க சென்றனர்.
துளசி வீட்டில் அனைவரும் மினிஸ்டர் மகன் விசயத்தில் அவர்களை விடக் கூடாது என பேசிக் கொண்டிருப்பதை பார்த்து சிம்மா கோபமானான்.
“எதற்காக இப்ப இந்த விசயத்தை இழுக்குறீங்க?” சிம்மா கோபமாக கேட்டான்.
ஏன் அண்ணா, “உனக்கு தெரிந்தும் அவர்களை சும்மா விட்ட?” விக்ரம் ஆவேசமாக கேட்டான்.
விக்ரம். இதை மேற்கொண்டு கொண்டு போனால் நம்ம ரம்யா வாழ்க்கை தான் பாழாகும்.
“என்ன பாழாகும் மாமா?” முதல் இடத்தை பிடிக்க இவ்வளவு கேவலமா நடந்த அவனை சும்மா விட்டா..இதே போல் எத்தன பேர கஷ்டப்படுத்துவான்? என ஆதங்கமுடன் விகாஸ் கேட்க, அவனை அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.
ஆமாப்பா..பாப்ஸூக்கும் ஒன்றுமில்லை. ஆனால் அந்த பொண்ணு நிலை? சம்பந்தமே இல்லாத அந்த பொண்ணு எதுக்கு பாதிக்கப்படணும்? ஏன் பாப்ஸ் நீ சொல்லு. அவனை சும்மா விடணுமா? விகாஸ் கத்தினான்.
வேகமாக எழுந்த ரம்யா, “உனக்கு என்னாச்சு? சுரேவை உனக்கு தெரியுமா?”
தெரியாது. ஆனால் என பேச முடியாமல் விகாஸ் கண்கள் கலங்கியது. சிம்மாவும் விக்ரமும் ஏதோ புரிந்தவர்களாக அவனை அணைத்து சமாதானப்படுத்தினர்.
“இப்ப என்ன உனக்கு? அவனை சும்மா விடக் கூடாது அவ்வளவு தான?” பிரச்சனையில்லாமல் நானே முடிக்க பார்க்கிறேன் என விகாஸை நிமிர்த்தினான் சிம்மா.
நாம இந்த உலகத்துல இருக்கிற மனுசங்க தான். கடவுள் இல்லை. இவனுகள மாதிரி பொறுக்கிகள் நல்லா வாழுறானுக. அவனுகள தொட நம்மால் முடியாதுன்னு இல்லை. அவனுகளுக்கான தண்டனை கிடைக்கும். உனக்காகவும் ரம்யாவுக்காகவும் நான் முயற்சிக்கிறேன் என்றான்.
அப்பொழுது திலீப், சுருதி, மகிழன் வந்தனர்.
ரம்யா சிம்மாவிடம், “அண்ணா நான் கேட்பதற்கு உண்மையான பதில் கிடைக்குமா?” எனக் கேட்டாள்.
மூவரும் நடப்பதை பார்த்துக் கொண்டே வந்து அமர்ந்தனர்.
“அந்த மினிஸ்டரை பார்க்க போன போது அவர் என்ன சொன்னார்?” நீங்க எனக்காக பேச முயற்சி செய்தீங்கன்னு கல்வி அமைச்சர் அன்றே என்னிடம் சொன்னார்.
சிம்மா தயக்கமுடன் ரம்யாவை பார்த்தான்.
“சொல்லுங்க அண்ணா?” அவள் கேட்க, “மருது எழுந்து மிரட்டினானுகளா?” எனக் கேட்டான்.
சிம்மா கண்கள் தானாக தன் மனைவியை ஏறிட்டது.
அதான பார்த்தேன். அண்ணா இவனுக கிட்ட பேசி இருக்கக் கூடாது. என்னால சுரேவுக்கு ஏதாவது ஆகிடும்மோன்னு தான் நான் அமைதியா இருந்தேன் என கோபமாக ரம்யா பேசினாள்.
என்னய்யா, “உன் பொண்டாட்டிய வச்சு மிரட்டுனானுகளா?” என தாத்தா சிம்மாவிடம் கேட்டார்.
ம்ம்..எங்க குடியிருப்புக்கு வெளியேயும் விக்ரம் வீட்டிற்கு வெளியேயும் ஆட்கள் இருந்தாங்க. என்னால அன்று ஏதும் செய்ய முடியல. இப்ப கூட அந்த பையன் கல்லூரியில் முதலாவதா இருக்கான்.
“யார அடிச்சு முதல் இடத்துல்ல இருக்கானோ!” என சுவாதி கூற, இன்று இரவு அவனே எல்லாத்தையும் ஒத்துக் கொள்வது போல செய்திடலாம் என சிம்மா சொல்ல, மூவரும் அதிர்வுடன் சிம்மாவை பார்த்தனர்.
அண்ணா, “நான் உன்னிடம் பேசணும்?” மகிழன் சொல்ல, சிம்மா புருவத்தை உயர்த்தினான். “அது வந்து” என மகிழன் திலீப், சுருதியை பார்க்க, சொல்லு என திலீப் தலையசைத்தான்.
ரம்யாவை கடத்தி கொல்ல சனாவும் அவள் அப்பா ஏற்பாடு செய்தது; அப்சரா அப்பாவை ஏமாற்றி தான் அந்த ஹாஸ்பிட்டலை பிடுங்கி நடத்துறாங்க என்றும் அந்த பென்டிரைவ் பற்றியும் மகிழன் கூறி முடிக்க அனைவரும் திகைத்து பார்த்தனர்.
“அந்த பொண்ணுக்கு என்ன திமிரு?” விகாஸ் அம்மா சினமாக, சிம்மா யோசனையுடன் இருக்க, விக்ரம் சிம்மாவிடம்..சிம்மா, நீ திலீப்புக்கு உதவு. நான் மினிஸ்டர் மகனை பார்த்துக்கிறேன்.
நோ..என்ற சிம்மா, அனைவரையும் பிரித்து விட்டான்.
வீ, ரகா, தமிழ்..ரம்யா அருகே இருந்து பார்த்துக்கோங்க. விக்ரம் நீ திலீப், மகிழுடன் போ..நான் மினிஸ்டர் மகனை பார்க்க போறேன். சுருதிம்மா..நீயும் ரம்யாவுடன் இரு.
“அப்சரா தனியா இருப்பாலே! அவளை யாராவது ஏதும் செஞ்சுட்டாங்கன்னா?” சுருதி கேட்டாள்.
அதுக்கு அஜய்யையும் அவன் நண்பர்களையும் ஏற்பாடு செய்கிறேன். அந்த பொண்ணுக்கு துணையாக அவங்க இருப்பாங்க
“அந்த பென்டிரைவ் இருக்கும் இடம் தெரியாமல் எப்படி எடுத்துட்டு வர்றது?” ராஜா கேட்டான்.
“பார்த்துக்கலாம்” என்ற திலீப், அவர் அவரது அறையில் எப்பொழுதும் கவனிப்பது அவருக்கு நேராக இருக்கும் அவரும் சனாவும் இருக்கும் புகைப்படம். அதில் இருக்க வாய்ப்பிருக்கு. நான் உள்ளே போகணும். பின் நானே கண்டுபிடிக்கிறேன் என சிந்தனையுடன் கூறினான் திலீப்.
ராஜா, நீ சிம்மாவோட போ..என்று தாத்தா சிம்மாவை பார்த்து, மினிஸ்டர் மகன் மீது நீங்க யாரும் கையை வைக்கக்கூடாது. நீங்க பேசுவதில் அவனாகவே ரம்யா பற்றி சொல்லணும். அந்த வீடியோவை எதிலும் போட வேண்டாம் என்றார் தாத்தா.
“என்ன தாத்தா?” வீ சினமுடன் கேட்டாள்.
பொறுமையா இருப்பா. நம்ம நேகன் பாரின்ல்ல இருந்து வருவான். அவனோட வக்கீல் லைசன்ஸ் வைத்து நான் அவனை நம்ம ரம்யாவுக்காக பேச வைக்கலாம். அதோட இந்த பென்டிரைவையும் பத்திரமா என்னிடம் கொடுத்திருங்க.
தாத்தா, சந்துரூன்னு எனக்கு தெரிஞ்ச வக்கீல்ல பார்க்கலாமே! நேகன் மாலை தான் வருவார். மறுநாள் எப்படி அவரால் கோர்ட் செல்ல முடியும்?
அதெல்லாம் செய்வான் என்ற தாத்தா, யாருக்கும் ஏதும் ஆகக்கூடாது பத்திரமா வேலைய முடிச்சிட்டு வாங்க என சொன்னார்.
மாலை எல்லாரும் கிளம்புங்க என்றார் தாத்தா.
ம்ம்..என அனைவரும் கூறி நகர்ந்தனர். ரம்யாவிற்கு விகாஸின் இவ்வாறான கோபம் சந்தேகமாக இருந்தது. இவன் எதுக்கு யாரோ ஒரு பொண்ணுக்காக கோபப்படணும்? இவன் இப்படி செய்ய மாட்டானே! என மனதினுள் சிந்தித்தாள்.
வினித்தும் ரோஹித்தும் அஜய் அறைக்குள் நுழைய, அங்கே விஜய்யும் கார்த்திக்கும் அஜய்யுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
வினித் அமைதியாக அமர்ந்து, ரோஹித்தையும் அமர சொன்னான். ரோஹித்திற்கு அஜய்யை பார்க்கவும் கோபம் வந்தாலும் அவன் நிலையையும் சிந்தித்து அமைதியாக அவனை பார்ப்பதை தவிர்த்து இருந்தான்.
ஆனால் அஜய் ரோஹித்தை பார்த்து, உன்னை அமர சொல்லவேயில்லை என்றான் வேண்டுமென்றே. ரோஹித் அஜய்யை முறைத்துக் கொண்டே எழ, அவனை இழுத்து வினித் அவனருகே அமர வைத்து, இவன் உன்னிடம் கத்துக்க தான் வந்திருக்கான்.
டேய், “யார்க்கிட்ட பேசுறன்னு தெரிஞ்சு பேசு?” அஜய் சொல்ல, “யாராக இருந்தால் எனக்கென்ன?” எனக்கு உங்களை மட்டும் தான தெரியும் என எழுந்து விஜய் சார், அது என்னம்மோ உங்க ப்ரெண்டை பார்த்தாலே எனக்கு பிடிக்கலை என பட்டென கூற, கார்த்திக்கிற்கோ கோபம் எகிறியது.
“இதுக்கு தான் வர சொன்னீயாடா?” என வினித்தை முறைத்தான் கார்த்திக். அஜய் அதிர்ந்து ரோஹித்தை பார்த்தான். விஜய்யோ மனதினுள், பய செம்ம கடுப்புல இருக்கான் போல. நம்ம கார்த்திக்கையே வச்சு செய்றான் என எண்ணினான்.
“சொல்றேன்” என வினித் பேசும் முன் விஜய் குறுக்கிட்டு, “யுகியை பார்த்தியா? இல்லையா? என்ன செய்றா? ஓ.கே தான?” எனக் கேட்க, கார்த்திக் மனம் பதறியது. அவன் வெளிக்காட்டாமல் இருந்தாலும் அவன் கண்ணின் அலைப்புறுதலை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
“எங்க?” கதவையே திறக்கலை. நாங்க கூட சின்ன அடிதான்னு நினைச்சோம். ஆனால் அஜய் சார் ஹாஸ்ப்பிட்டல் சேர்த்திருக்காங்க. ஹப்பா..இவ என்னோட அக்காவான்னு சந்தேகமாக இருக்கு. “ஆவி ஏதும் புகுந்திருச்சோ?” என ரோஹித் கிண்டலாக பேச, அஜய் அவனை பார்த்தான்.
ஆமாடா, அவ ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்தவுடன் அறைக்கு போனவள் தான். கதவை திறக்கவேயில்லையாம். ரொம்ப ஹர்ட் ஆகி இருக்கா. நானும் அவளை பார்க்கவேயில்லை. தியாவும் முக்தாவும் வருத்தப்பட்டாங்க. அவங்கள சமாதானப்படுத்திட்டு தான் வந்தோம்.
வினித்,” உனக்கு ஏதாவது தெரியுமா? தியாவை சொன்னால் யுக்தா எதுக்கு இவ்வளவு கோபப்படணும்?” அஜய் கேட்க, “பொறுக்க முடியாமல் என்ன நடந்தது?” என கலக்கத்தை மறைத்து தோற்று கேட்டான் கார்த்திக்.
அஜய் நடந்ததை சொல்ல, “காயம் ஆழமா பட்டிருக்கா?” என கார்த்திக் யுக்தாவின் காயத்தை பற்றியே கேட்க, எல்லாரும் மனதில் சிரித்துக் கொண்டனர். அஜய் அவனையே பார்த்துக் கொண்டு பதில் கூறினான்.
ஹா..இனி இந்த பிரச்சனை வரக் கூடாதுன்னு நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் என ரோஹித் சொல்ல, இல்லாத பிளானை இவன் என்ன சொல்லப் போறான் என வினித்தும் விஜய்யும் ரோஹித்தை பார்த்தனர்.
மாமா, “நீங்க ஏன் யுக்தாவை கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?” என வினித்தை பார்த்து ரோஹித் கேட்க, கார்த்திக்கிற்கு தூக்கி வாரி போட்டது. மற்றவர்களும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.
“மாமாவா?” அஜய் கேட்க, “ஆமா என்னோட அக்காவை உங்க வினித் கல்யாணம் பண்ணிக்கிட்டா மாமா தான?” அப்புறம் எப்படி கூப்பிடணும்? தியா இப்படி தான சொல்லி கொடுத்தா..
“தியா சொல்லி கொடுத்தாளா?” அஜய் கேட்க, இல்ல இல்ல.. கல்யாணம் பண்ணிக்கிறவங்க மாமா, மச்சான்னு கூப்பிடுவாங்களாமே! மாமா சரி தானா? இல்லை மச்சானா? வினித் மாமா என கன்னத்தில் கையை வைத்து வினித்தை பார்த்தான் ரோஹித்.
மாமா தான் ரோஹித் என விஜய் கூற, அடப்பாவிகளா சும்மாவே என் மேல காண்டுல இருந்தான் இந்த கார்த்திக். “இது வேறயா?” என வினித் கார்த்திக்கை பார்த்தான். அவனோ அதிர்ச்சியையும் மறைத்து அமர்ந்திருந்தான்.
“அழுத்தக்காரன்டா நீ?” என வினித் மனதினுள், இதை பத்தி அப்புறம் பேசலாம். முக்கியமான விசயம் பேச தான் வர வைத்தேன் என்றான் வினித். அனைவரும் அவனை கவனிக்க ஆரம்பித்தனர்.
“இதை பாருங்க” என அஜய்யின் பொருட்களை ஒதுக்கி விட்டு, சில புகைப்படங்களை மேசையில் ஒவ்வொன்றாக அடுக்கினான் வினித். மற்ற நால்வரும் எழுந்து பார்த்து அதிர்ந்தனர்.
இதெல்லாம் எனக்கு நாம டெல்லியில் சந்தித்த இரு நாட்களுக்கு முன் நடந்தது.
அஜய் வேண்டுமானால் தியா இருப்பது தெரியாமல் வந்திருக்கலாம். நான் தெரிந்து தான் வந்தேன். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவரை வைத்து தியாவை தேடினேன். அவர்கள் சொன்னவுடன் வர தான் எண்ணினேன். ஆனால் அங்கே யுக்தா, முக்தாவை பற்றி அறிந்து தான் நிம்மதியானது.
யுக்தா திருமண வேலையும் நடக்க, திருமணம் முடிந்த பின் அவளை அழைத்து வரலாம் என அவ்வீட்டை கண்காணிக்கவும் ஆட்களை வைத்தேன். அதில் கிடைத்த புகைப்படம் தான் இதெல்லாம் என வினித் ரோஹித்தை பார்த்தான்.
உங்க வீட்ல எல்லாரையும் கண்காணித்து இருக்காங்க. பார்த்தேல்ல என் ஆட்களுக்கு முன்னே யார் யாரோ உங்களது வீட்டின் முன் நடமாடிக் கொண்டு இருந்திருக்கிறார். “உனக்கு இவங்க யாரையாவது தெரியுமா?”
ரோஹித் அனைத்து புகைப்படத்தையும் பார்த்து, “இல்லையே! யாருமே எங்க ஏரியா ஆட்கள் இல்லை. யார் இவர்களெல்லாம்?”
அதை தான் கண்டுபிடிக்கணும். உங்க வீட்டுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தாச்சு. நீயும் முக்தாவும் செய்தீர்களே ரகளை! அன்றே நான் ராணியம்மாட்ட எல்லாத்தையும் சொன்னேன். அவங்க உங்களை இங்கே அனுப்பியதற்கு முக்கிய காரணம் இதுவும் தான்.
அப்புறம் யுகி வெளிய போகக் கூடாதுன்னு சொன்னாங்க. எனக்கு என்னமோ அவ கல்யாணம் பண்ண வீட்டினராக கூட இருக்கலாம்ன்னு தோணுது. இல்லை சீமாவுடன் பழகியவர்களாகவோ இல்லை தியாவை தேடி கூட யாராவது இங்கிருந்து சென்றிருக்கலாம் என வினித் அஜய்யை பார்த்தான்.
எனக்கு சரியாக தெரியல. முதல்ல இந்த புகைப்படத்துல இருக்கிறவனுக யாருன்னு கண்டுபிடித்தால் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று விஜய் கார்த்திக்கை பார்த்து, “உங்களுக்கு விதார்த் பற்றி தெரியும் தான?”
அவன் தான் இந்த விவரத்தை கண்டறிந்து கொடுத்தான். முதல்ல உங்கள் நினைவு தான் வந்தது. என்னை பற்றி உங்களுக்கு தெரிய வேண்டாம்ன்னு தான் மனோகர் சார்கிட்ட பிரபலமில்லாதவனாக கேட்டேன். ஆனால் அவர் அசிஸ்டென்ட்டையே அனுப்பீட்டார்.
இப்ப கூட விதார்த்தும் உங்களோட பொசிசனுக்கு வந்திருக்கான் போல. நானும் மனோகர் சார்கிட்ட கேட்டேன். எதுக்கு இவரை அனுப்புனீங்கன்னு கேட்டேன்.
உங்க வேலையை சரியா முடித்து கொடுப்பான்னு சொன்னார். அதே போல முடிச்சு கொடுத்துட்டார். இதுவரை விதார்த்தை நேரில் பார்த்து நான் பேசியதில்லை. “என்னை அவனுக்கு அறிமுகப்படுத்த முடியுமா?”
“எதுக்கு? அதான் இப்ப நாங்க இருக்கோம்ல்ல?” விஜய் கேட்க, நீங்க நான் சொன்ன வேலையை பாருங்க. அவனுக்கு வேற வேலை இருக்கு என்றான் வினித்.
மாமா..நானும் அவரை பார்க்கணும் ரோஹித் சொல்ல, நோ..நீ வந்த வேலையை சரியா பாரு. போதும்.
“வேற வேலை என்ன இருக்கு?” அஜய் கேட்க, அது என்னோட பர்சனல். “அது எதுக்கு உனக்கு?”
இவனுக யாருன்னு பார்த்துட்டு கால் பண்ணுங்க. எனக்கு வேலை இருக்கு என யார் பதிலையும் எதிர்பாராது வினித் எழுந்து வெளியேற, அஜய் சார் “ஒரு நிமிடம்” என மாமா நில்லுங்க என அவன் பின் ஓடினான் ரோஹித். அனைவரும் யோசனையுடன் அமர்ந்தனர்.
ஏன்டா அஜய், “இப்படி வினித்தையும் தியாவையும் காயப்படுத்துற?” ஒண்ணு மட்டும் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. தியா உன்னை நம்பலைன்னு தான் உனக்கு கோபம். ஆனால் நீ செய்வது அதை விட பெரிய தவறு. எனக்கே அவ அங்கேயே இருந்திருக்கலாம்ன்னு தோணுது என விஜய் பட்டென சொல்லி எழுந்தான்.
நீ இதை எடுத்துட்டு ஆபிஸ் போ. நான் யுக்தாவை பார்த்துட்டு வாரேன் என்று விஜய் நகர, “நானும் வாரேன்டா” என கார்த்திக் சொல்ல, தேவையில்லை கார்த்திக். நீ உன்னோட எதிர்காலத்தை பாரு. அவளை நாங்க பார்த்துக்கிறோம் என விஜய் பேசி விட்டு வெளியேறினான். அஜய்க்கு அப்பொழுது தான் கார்த்திக் யுக்தாவின் காதல் பற்றிய நினைவே வந்தது.
கார்த்திக், “யுக்தாவை எதுக்கு பிரேக் அப் பண்ண?” அஜய் கேட்க, பதிலளிக்காமல் கார்த்திக் வேகமாக வெளியேறினான்.