நீ நான் 32

“அம்மா” விக்ரம் அழைக்க, வேகமாக எழுந்து வெளியே தலையை நீட்டி பார்த்தாள் கீர்த்தனா.

“எங்க போற? சாப்பிட தான..நாங்க செஞ்சிட்டோம்..வழிய விட்டு நில்லுடா” வாம்மா என நட்சத்திராவையும் அழைத்தார். சிம்மாவும் அவன் பிள்ளைகளுடன் வந்தான்.

சங்கடமாக பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

“கீர்த்து எங்க?” சாதாரணமாக நட்சத்திரா கேட்க, “உங்களுக்கு எங்க மேல கோபம் இல்லையா?”

இல்லவே இல்லை. இத்தனை வருசமா என் பிள்ளை நல்லா இருக்க காரணம் கீர்த்தனா தான. அவளும் இனி என்னோட பொண்ணு தான். படிப்பு முடியட்டும். உன்னை விட்டு நான் அவளை தேனீக்கு கூட்டிட்டு போயிருவேன்.

ஹா..முடியவே முடியாது. அவ இங்க தான் என்னோட தான் இருப்பா. நாங்க பேசிப்போம். ஒரே இடத்தில் தங்கியதில்லை. அவளோட மேரேஜ் வரையும் என்னுடன் தா இருப்பா விக்ரம் சொல்ல, அவன் அம்மா அன்னத்திடம் சண்டைக்கு நின்றான்.

தலையை நீட்டி பார்த்துக் கொண்டிருந்தவள் அவளாகவே அவர்கள் முன் வந்தாள்.

ஆமா, நான் அண்ணாவுடன் தான் இருப்பேன். ஒரு நாள் கூட அண்ணாவை தனியே விட்டு வர மாட்டேன்.

இருந்தால் உங்களை போல இருக்கணும் என பெரு மூச்சுடன். எனக்கும் இருக்கான் பாரு அண்ணன்னு ஜடம் மாதிரி ஒரு கால் கூட போட மாட்டேங்கிறான் என நட்சத்திரா உதிரனை பொரிந்து தள்ளினாள்.

மகிழன் அண்ணாவை நான் பார்க்கவேயில்லை கீர்த்தனா அப்பளத்தை கொறித்தவாறு கேட்டாள்.

ரித்துவுக்கு ஐ. வி.எஃப் டிரீட்மென்ட் போய்ட்டு இருக்கு. அதான் பேபி இல்லாமல் எல்லாரும் ரொம்ப பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதான்..

ஓ…அப்படியா? அம்மா..நீங்க உங்க பொண்ணை பார்க்க போகலை?

ஆமா..உன்னோட அண்ணனுக மூஞ்சிய பார்த்தேல்ல. இப்படியே எப்படி விட்டு போறது? அவள அவ மாமியார் பார்த்துக்கிறேன்னு சொல்லீட்டாங்க. எங்க அம்மாவும் இருக்காங்கல்ல.. பார்த்துப்பாங்க.

விக்ரம் அண்ணா, இப்படியா பொறுப்பில்லாம இருப்ப? தங்கச்சியை பார்க்க போகலையா? கீர்த்தனா அவனை இழுத்தாள்.

இவளை பார்த்தால் அமைதியான பொண்ணாகவா இருக்கு?

இருந்தேன் அண்ணி. எப்போதும் ஒரே மாதிரி இருக்க போரா இருக்கு. அதான் மாறினேன். பேசிட்டு இருந்தா தான் இரவு நல்லா தூங்க முடியுது பேச்சு வாக்கில் கீர்த்தனா சொல்லி விட, உனக்கு தூக்கம் வரலைன்னா..இனி அம்மாகிட்ட வந்திரு அன்னம் சொல்ல, இல்ல..இல்ல..நானே பார்த்துப்பேன் முந்திக் கொண்டு சொன்னான் விக்ரம்.

சரிடா, சும்மா சும்மா சண்டைக்கு வராத. முதல்ல சாப்பிடுங்க..என கீர்த்தனாவிற்கு எடுத்து வைத்து அவரே ஊட்டி விட்டார்.

அப்பா எங்க?

போச்சு..அப்பாவை மறந்துட்டோம்..

சிம்மா..அழைச்சிட்டு வா..

கிங் தாத்தாவை அழைச்சிட்டு வாங்க..

அப்பா சாப்பிட்டுட்டு இருக்கேன்ல்ல. தொந்தரவு பண்ணாதீங்க என்றான் சிம்மாவின் குட்டி கிங் அர்சலன்..

அனைவரும் சிரிக்க, சிம்மா எழ..மாமா..சாப்பிடுங்க. மாமாவை நான் அழைச்சிட்டு வாரேன் என நட்சத்திரா சென்றாள்.

எதுக்கு விட்டு வந்தீங்க? என்ன பண்றார்?

தூங்கிட்டு இருக்கார்ம்மா. வந்திருவார். நீ அம்மா, அப்பான்னு கூப்பிடு. அம்மா கூட தங்கணும்ன்னா வந்துரு அன்னம் மீண்டும் சொல்ல, விக்ரம் எழுந்தான்.

சிம்மா சிரித்துக் கொண்டு, “உட்காருடா. இதுக்கெல்லாம் பொறாமையா? என கீர்த்தனாவை பார்த்து, நானும் உன்னை கீர்த்துன்னு அழைக்கலாம்ல்ல?” சிம்மா கேட்டான்.

“என்னோட அண்ணா எனக்கு வச்ச பேர் எனக்கு ஸ்பெசல்” என அவள் முகம் வாடியது.

“கீர்த்தனா என எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா? நீ கீர்த்து தான். விக்ரமின் தங்கை கீர்த்து நீ தான்..நீ மட்டும் தான்.”

“வா…நாம போஸ்ட் போடலாம்” என சிம்மா அவளை தன் பக்கம் அமர வைத்து “மை பேமிலி” என குடும்பத்துடன் புகைப்படம், வீடியோக்களை எடுத்து அவளது குரூப்பிற்கு அனுப்பினான்.

இங்க பாரு கீர்த்து “செம்ம ரெஸ்பான்ஸ்” சிம்மா சொல்ல, கீர்த்தனா புன்னகைத்தாள். இருவரின் அலைபேசியை பிடுங்கிய நட்சத்திரா, குழம்பு கரண்டியை தோளில் வைத்து போஸ் கொடுத்தாள். இருவரும் பாவம் போல அவளை பார்த்து வைத்தனர். மற்றவர்கள் சிரித்தனர்.

ம்ம்…சாப்பிடும் போது என்ன அலைபேசி? யாரும் எடுக்கக்கூடாது..

சரி..சரி..என அனைவரும் சாப்பிட்டார்கள். கீர்த்தனாவுடன் அன்று அனைவரும் இருந்தனர். அவர்களுடன் நன்றாக ஒன்றிக் கொண்டாள். அவளுக்கும் புதியதாக குடும்பம் கிடைத்ததில் பெரிய மகிழ்ச்சி..

விகாஸ் மாலை எழுந்து வெளியே சென்றான். யார் பேச்சும் கேட்காமல் வெளியே சென்று சுற்றி வந்தான். ஆனால் அன்று குடிக்கவில்லை. அனைவரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர்.

சுவாதி அவனை நிறுத்தி, “நீ காதலித்த கீர்த்தனா உனக்கு எந்த கிஃப்ட்டும் கொடுத்ததேயில்லையா?” எனக் கேட்டாள்.

இல்லை. எனக்கும் தேவைப்படலை..

“தேவைப்படலயா?”

ஆமா, நம்மிடம் தான் பணம் இருக்குல்ல..அப்புறம் என்ன கிஃப்ட்?

பொண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் ஏதாவது பொருளை பார்க்கும் போது இது அவருக்கு நல்லா இருக்குமேன்னு வாங்கித் தருவாங்க..அதே போல் உனக்கும் அவளுக்கும் தோணலையா?

நான் வாங்கிக் கொடுத்திருக்கேன் பட் பொருட்களை பார்த்தால் எனக்கு தான் நான் தேர்வு செய்வேன்..

டேய் லூசு, “அப்புறம் எப்படி காதல்ன்னு சொல்ற? இதுல..ஹப்பா….என்னையும் என்னம்மா படுத்தி எடுத்துட்ட?”

“லவ் இல்லையா?”

ஆமா..அழகான ஒரு பொண்ணுக்கான ஆடையை பார்த்தால் உடனே அவள் எண்ணம் தானாக உனக்கு வரணும். அப்ப தான் நீ காதலிக்கிறன்னு அர்த்தம். அது கூட இல்லாமல்..சுவாதி கோபமாக கேட்டாள்.

“என்ன சுவா? உன்னோட அண்ணன் இப்படி இருக்கான்?” பொண்ணுங்களுடன் சுத்தியதால் சரியாக கணிச்சான்னு நாங்க நினைச்சோம்.

“அப்ப அந்த பொண்ணு மேல காதலே இல்லாமல் தான் இப்படி படுத்துனியா?”

இல்ல..எனக்கு அவளை பிடித்ததால் தான் அன்று அந்த நிலையில் அவளை பார்த்து கதறினேன்.

“உன்னுடன் நன்றாக பழகிய பொண்ணு அந்த இடத்துல்ல இருந்தால் என்ன செய்வ?”

எக்ஸாம்பில்லுக்கு..உன்னோட முதல் தோழி சாணக்கியா..என கேட்க, தொட்டவன் கையை வெட்டி போட்டுருப்பேன் என விகாஸ் கத்தினான்.

எஸ், இதையே தான் கீதாஞ்சலி விசயத்துல்ல பண்ணி இருக்க? திலீப் கோபமாக கத்தினான்.

“என்னடா சொல்ற?” அனைவரும் பதறினர்.

அதை விடுங்க. அவளை நீ காதலிச்சியான்னு முதல்ல யோசித்து பாரு.  எப்ப காதல் வந்தது? என அனைவர் முன்னும் திலீப் கேட்டான்.

முதல் முறையாக அவள் வகுப்பு மாணவன் வந்து ஆசிட் போலுள்ள திரவத்தை கொட்டினானே! அவளாக என்னை கட்டிப் பிடித்தாள். எனக்கு ஹாப்பியா இருந்தது..

“அப்புறம்?”

அப்புறம் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்.

டேய் கட்டிப்புடிச்சா காதலா? ராஜா கோபமாக கேட்டான்.

ஆமாடா, அடுத்து அவளை பார்க்கணும் போல இருக்கும் தமிழண்ணா வீட்டுக்கு வருவேன்.

அய்யோ..அது இன்பேக்சுவேசன் டா..

மத்த பொண்ணுங்க மாதிரி இல்லாம சரியா நடிச்சிருக்கா..

ஆமா..நடிச்சிருக்கா? இது காதல் இல்லை..ஏமாத்திட்டா..

மெண்டல் மாமா..உன்னிதும் காதல் இல்லை. புதுவிதமா ஒரு பொண்ணோட பழகி இருக்க. அந்த அமைதி..பொறுப்பு.. பாசம்..இதை வைத்து வந்தது காதல் இல்லைடா..

“அது எப்படி சொல்றது?” என சுருதி மேசை மீது ஏறி, அவங்க பார்க்கும் பார்வையில வயித்துல்ல பட்டாம்பூச்சி படபடன்னு அடிக்கும். அப்புறம் ஹார்ட் பீட் அதிகமா கேட்கும். அவங்க நம்மை பார்க்கலைம்ன்னா..ஏன் பார்க்கலை..நாம அழகா இல்லையோன்னு கண்ணாடி முன்னாடி நம்மை நாம பார்க்க வைக்கும்.

“கட்டி பிடிச்சாளாம் காதல் வந்துச்சாம்” என அவள் சொல்லி எல்லாரையும் பார்க்க, பெரியவர்கள் அவளை முறைக்க, சிறியவர்கள் புன்னகைத்தனர்.

இல்ல, டச் பண்ணாமல் தான் காதல் முதலில் தொடங்கும். அதான்..அதை தான் சொன்னேன் என வேகமாக இறங்கி தமிழ் பின்னே மறைந்து கொண்டாள்.

அவள் வெட்கத்தை பார்த்து, முதல்ல இவளுக்கு கல்யாணம் பண்ணி வையுங்க இல்லை கண்ணால் காதல், புடலங்கா காதல்ன்னு கதை அளப்பா..ரகசியன் அப்பா சிரித்தார்

“ஏன்டி, எங்க மானத்தை வாங்குற? இரு முதல்ல உன்னை பேக் பண்ணி அனுப்புகிறேன்” அவள் அம்மா சொல்ல, “அனுப்பீட்டா போச்சு” நேகனும் கிண்டல் செய்தான்.

வீ..உன்னோடது காதலே இல்லை. முதல்ல காதல்ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கோ. எல்லாம் காதல் கல்யாணமா செஞ்சிட்டு இவனுக்கு மட்டும் காதல்ன்னா என்னன்னே தெரியாம இப்படி கொண்டு வந்து நிறுத்திடுச்சு..சுவாதி சொன்னாள்.

“ஹூக்கூம் அங்க மட்டும் என்ன வாழுதாம்?” என ஹரிணி கேலி செய்ய சுவாதி முகம் வாடியது. அவள் வேகமாக அறைக்கு சென்று விட்டாள்.

“எல்லாரும் சும்மா இருங்க” என தமிழ் அவள் பின் ஓடினான்.

பாட்டி, உங்க மாப்பிள்ளைகிட்ட அந்த பொண்ணை நான் காதலிக்கவேயில்லைன்னு சொல்லீடுங்க..

அதை நீயே சொல்லு. எனக்கு வேலையிருக்கு அவர் நகர, அனைவரும் அவனை பார்த்துக் கொண்டே விலகி ஓடினர்.

அவன் அம்மா அவனை பார்த்து, உன்னோட முடிவு இம்முறை தெளிவாக இருக்கும்ன்னு நம்புகிறேன் என சொல்லி சென்றார். அவன் அமைதியாக இருந்தான்.

அதிகாலையிலே எழுந்த விகாஸ் வேகமாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவன் அம்மா அவனை பார்த்தும் தடுக்கவில்லை. நேராக விக்ரம் குடியிருப்புக்கு வந்து காரை தள்ளி நிறுத்தி விட்டு கீழே இறங்கினான்.

“அண்ணா, சீக்கிரம் வா” என சொல்லிக் கொண்டே டாப், ஜீனுடன் கூந்தலை ஒதுக்கிக் கொண்டே வந்தாள் கீர்த்தனா.

“எதுக்கு அவசரம்?” என்று விக்ரமும் அவள் பின்னே வந்தான்.

“பவர் நில்லு” ஷூ லேஷ் கழன்று இருக்கு. பார்க்காமல் நடக்குற என அவளுக்கு விக்ரம் போட்டு விட்டான். அவர்கள் முன் வந்து கையை கட்டி முறைத்துக் கொண்டிருந்தார் அன்னம்.

அம்மா..விக்ரம் அழைக்க, பிள்ளைக்கு இப்ப தான் ஆப்ரேசன் முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள ஜாகிங் தேவையா?

அம்மா, இயற்கை காற்றை நான் சுவாசிக்கணும்ன்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க.

அப்படியா? வா..இங்க உட்காரலாம். நன்றாக காற்று வரும்.

“இங்கேயா?” என அன்னம் அருகே வந்து, இதே இடத்துல்ல நேற்று கருப்பாக கண்ணு சிவப்பா ஏதோ பார்த்தேன். வேகமாக சன்னலை சாத்திட்டு தூங்கிட்டேன். இங்கே உட்கார போறீங்கலாம்மா? எனக் கேட்டாள்.

கண்களை விரித்து அன்னம் பார்த்தார்.

ம்ம்..இப்ப நீங்க பார்க்குறீங்களே இதே போல தான் பார்த்தேன். கண்டிப்பாக அது கோஸ்ட் தான். பயத்துடன் அன்னம் சுற்றும் முற்றும் பார்த்தார்.

விக்ரம் தலையில் அடிக்க, “வா அண்ணா” என அவன் கையை பிடித்து கேட்டருகே வரவும், “அம்மா..பயப்படாம வீட்டுக்கு போங்க. நான் கோஸ்ட் எதையும் பார்க்கலை. நாங்க போயிட்டு வாரோம்” என அவனை இழுத்து சென்றாள்.

“நில்லுங்க” என அன்னம் கேட்டருகே வந்து, “ஆத்தாடி சின்னபுள்ளைன்னு பார்த்தால் இப்படி பயமுறுத்திடுச்சே. பயந்தே போயிட்டேன்” என புலம்பிக் கொண்டே உள்ளே சென்றார்.

விகாஸ் புன்னகையுடன் காருக்கு சென்று வெள்ளைநிற தொப்பியை அவன் முகத்தை மறைக்குமாறு போட்டுக் கொண்டு, விக்ரம் கீர்த்தனாவை பின் தொடர்ந்தான்.

கீர்த்தனாவிற்கு மூச்சிறைக்கவும், அவளுக்கு தண்ணீரை கொடுத்து அமர வைத்தான்.

வலிக்குதாடா?

“லைட்டா அண்ணா” என குடித்து விட்டு அவனையே பார்த்தாள்.

“என்ன?” அவன் புருவத்தை உயர்த்தினான்.

“அண்ணிய பத்தியே நினைச்சுட்டு இருக்க போல?” விக்ரமிடம் அமைதி நிலவியது.

“மூஞ்சிய ஏன்டா இப்படி வச்சிருக்க?” ஆன்ட்டி ஒத்துப்பாங்களான்னு எனக்கு உறுதியா தெரியல. ஆனால் அண்ணி கண்டிப்பா உன்னிடம் வந்துருவாங்க.

“வந்துருவால்ல?” விக்ரம் பாவமாக கீர்த்தனாவை பார்த்தான்.

விட்டா அழுதுருவ போல..

ஏற்கனவே அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா? அதான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க ஒத்துப்பாளோன்னு பயமா இருக்கு.

இல்லண்ணா, அண்ணி உன்னை எவ்வளவு காதலித்தால் அந்த நிலைக்கு போயிருப்பாங்க. எனக்கே கஷ்டமா இருந்தது. நீ தான் ஆன்ட்டிக்கு நம்பிக்கை வரும் படி ஏதாவது செய்யணும்.

ம்ம்..

“நீ வீ விசயத்துல்ல என்ன செய்யப் போற?”

என்ன அண்ணா செய்ய முடியும்? அவ்வளவு தான்..அதை விடுங்க.

ம்ம்..மாலை கிளாஸ் முடியவும் சொல்லு. நான் அழைத்து செல்கிறேன்.

சரி அண்ணா..

“டான்ஸ் கிளாஸ் கொஞ்ச நாளைக்கு வேண்டாமே!”

அண்ணா..என கோபமாக எழுந்து, உனக்கே தெரியும்ல்ல..வேற யாரும் வருவதற்குள் அந்த இடத்தை நான் தக்க வச்சிக்கணும் இல்லை எனக்கு வேலை இருக்காது.

இனி நான் இருக்கேன்ல்ல. நீ போகணுமா?

அண்ணா, எனக்கு அதுல சந்தோசம் இருக்கு..

அதுக்கில்லைம்மா, உடல்நிலை சரியில்லாமல் இருக்குல்ல.

ப்ளீஸ் அண்ணா, கோவில்ல பிரோகிராம் இருக்கு..

இதோட எப்படி டான்ஸ்லாம்..

ப்ளீஸ் அண்ணா..

பார்க்கலாம்.

“வா கிளம்பலாம் நேரமாகுது” என இருவரும் கிளம்பினர். அவர்களுக்கு பின் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்த விகாஸ் இருவரும் செல்வதை பார்த்து விட்டு வீட்டிற்கு கிளம்பினான்.

மாலை நேரம் சட்டக் கல்லூரியில் பைக்கை நிறுத்தினான் விக்ரம். தன் நண்பர்களிடம் கையசைத்து விட்டு கீர்த்தனா விக்ரம் பைக்கில் ஏறினாள். அவளை அவளது நாட்டியப் பள்ளியில் விட்டு அவன் சென்று விட்டான். விக்ரம் செல்வதை பார்த்து விட்டு விகாஸ் காரில் வந்து அதை நிறுத்தி விட்டு உள்ளே வந்தான். குழந்தைகளுக்கு பரதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. தூரத்தில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கிளாஸ் முடியவும் அவளுக்கான பரத ஆடையுடன் அவள் வகுப்பிற்குள் சென்று நன்றாக ஆடியவள் மயங்கி விட்டாள். சற்று நேரத்தில் அனைவரும் வெளியே வந்தனர். எல்லாரும் அவளை பார்த்துக் கொண்டே சென்றனர்.

ஆடையை மாற்றி விட்டு எப்பொழுதும் அமரும் அதே மரத்தின் கீழிழுள்ள கல் இருக்கையில் அமர்ந்தாள். யோசனையில் இருந்தாள்.

தொண்டையை செருமினார் அவளது மேம்.

மேம், எழுந்தாள்.

இந்த முறை நீ போக வேண்டாம். முதல்ல உன்னோட உடல்நிலையை பாரு..

மேம், எனக்கு ஒன்றுமில்லை..

“அப்புறம் எதுக்கு மயக்கம் வந்தது? நீ சமாளிக்க தான செய்த? நீ இப்படி பண்ணுவன்னு நினைக்கலை”.

“மேம், என்ன சொல்றீங்க?” அவர்கள் பேசிக் கொண்டிருக்க, கீர்த்தனா கண்ணீருடன் இருப்பதை பார்த்து புரியாமல் இருவரையும் பார்த்தான். விக்ரம் பைக் சத்தம் கேட்டது. ஓடிச் சென்று ஒளிந்து கொண்டான் விகாஸ்.

விகாஸ் காரை பார்த்து, “இங்க என்ன செய்றான்?” என யோசனையுடன் வந்த விக்ரம் ,கீர்த்தனா அழுவதை பார்த்து அவளருகே ஓடி வந்தான். விகாஸூம் மறைந்து மறைந்து அவர்களருகே வந்து மறைந்து நின்றான். அவர்கள் பேசுவது அவனுக்கு நன்றாக கேட்டது.

“பவர், எதுக்கு அழுற?” விக்ரம் குரலை கேட்டு, சார் உங்க சிஸ்டர் இந்த மாதம் பிரோகிராமுக்கு வர வேண்டாம்ன்னு சொல்லுங்க. அடுத்த முறை வரட்டும். உடல்நலமில்லாமல் இருக்கா. பார்த்துக்கோங்க என்று அவர் சென்றார்.

“விகாஸ் அவள் அழுவதை பார்த்து, போன முறை வந்த போது இவர் முன் தான அவளை பப்பிற்கு வரச் சொன்னோம் அதை வைத்து ஏதாவது சொல்லி இருப்பங்களோ?” என எண்ணினான்.

“வா பவர். பார்த்துக்கலாம்” என அவளை விக்ரம் பைக் அருகே நிறுத்தி விட்டு, இங்கேயே இரு. வந்திடுறேன்.

“அண்ணா, எங்க போற?” பதட்டமானாள்.

“யாரோ நம்மை பின் தொடர்வது போல இருக்கு” என விகாஸ் எண்ணமுடன் “இப்ப வர்றேன்” என அவனை தேடினான்.

விகாஸ் இவர்கள் கிளம்பவும் அந்த மேம்மிடம் பேச சென்றான். அவர் அவனை பார்க்கவும் முகத்தை சுருக்கினார்.

“அவ கிட்ட என்ன சொன்னீங்க?”

எவகிட்ட?

கீர்த்தனா…

அவ உங்க கூட தான பப்பிற்கு கம்பெனி கொடுக்க வந்தாள். அவளுக்கு மயக்கம் வந்தது போல இருந்தது. எதுக்கும் அவள் கர்ப்பமா இருக்காலான்னு செக் பண்ணுங்க.

“வாட்?” என அதிர்ந்த விகாஸ், அவள் ப்ரெண்டுடன் சேர்த்து தான் என்னுடன் பப்பிற்கு வந்தாள். எங்களுக்குள்ள எதுவும் நடக்கலை. அவளுக்கு ஹார்ட் சர்ஜரி பண்ணியிருக்கு.

அவனுக்கு மேல் மேம் அதிர்ந்து, “என்ன சொல்றீங்க? இது தெரியாமல் அவளை கஷ்டப்படுத்திட்டேனே!”

“என்ன சொன்னீங்க?” விகாஸ் சினமுடன் கேட்டான்.

உங்களிடம் கேட்டதை தான் சொன்னேன்.

“செட், என்ன பேசி வச்சிருக்கீங்க?” விகாஸ் கத்தினான். விக்ரம் இவர்கள் பேசியதை கேட்டு உறைந்திருந்தான்.

“அவள பத்தி உங்களுக்கு தெரியதா? எத்தனை வருசமா உங்களிடம் தான பரதம் கத்துக்கிட்டா..சொல்லுங்க?” விக்ரம் சீறினான்.

“இனி அவள் இங்கே வர மாட்டாள்” என அவன் வெளியேற, “மாம்ஸ்” என அவன் பின்னே விகாஸூம் ஓடி வந்தான்.

பைக் அருகே கீர்த்தனா இல்லாததை பார்த்து, “பவர்..எங்க போன?” எனக் கத்தினான். இருவரும் அவளை தேடினார்கள். அவள் ஓரிடத்தில் இருக்கையின் பின் சாய்ந்து கண்ணை மூடி அமர்ந்திருந்தாள்.

விகாஸ் அவள் முன் வந்து, கீ..கீ..கீர்த்தனா அழைத்தான். அவளிடம் பதிலில்லை.

“கீர்த்து” அழைத்தான். மீண்டும் பதில் இல்லாமல் போக, அவளது தோளை தொட பக்கவாட்டில் அவன் மேல் சாய்ந்தாள்.

“கீர்த்து, என்னாச்சு?” அவன் பதறிக் கொண்டே விக்ரமை அலைபேசியில் அழைத்தான். விக்ரம் வந்து அவளை இழுத்து, “வீ தண்ணீர் எடுத்துட்டு வா” என சொல்ல, காரிலிருந்து எடுத்து வந்து நீரை தெளித்தான். அவள் மயக்கம் தெளிந்து கண்களை பிரித்தாள்.

“பவர், நீ நல்லா தான இருக்க?” என அவன் அவளை தன்னுள் புதைத்துக் கொண்டு அழுதான்.

“அண்ணா, நான் நல்லா இருக்கேன்” சோர்வுடன் அவள் சொல்ல, விகாஸ் அவள் முன் வந்து சாரி கீர்த்து, உன்னை பற்றி அவங்க பேச நானும் காரணமாகிட்டேன்.

“போ..இங்கிருந்து” விக்ரம் கத்தினான். விகாஸ் அவளை பார்த்துக் கொண்டே சென்றான். அவளும் அவனை பார்த்தாள்.

விகாஸ் நேராக அவன் வீட்டிற்கு விரைந்து சுவாதியை அழைத்துக் கொண்டே அவளறைக்கு சென்றான். அவன் பெற்றோர் அவன் பின் சென்றனர்.

சுவாதி எழுந்து அவன் அழைப்பில் வந்தாள்.

சுவாதி..வா என்னோட..

“எங்க?”

விக்ரம் மாமா வீட்டுக்கு..

“எதுக்கு?”

ப்ளீஸ் இந்த உதவி மட்டும் செய்.

“உதவியா? என்னடா செஞ்ச?” அவன் அப்பா சத்தமிட்டார். அவன் விசயத்தை சொல்ல, “உன்னால எங்காவது பிரச்சனையாகிட்டு தான் இருக்கு” என அவன் அம்மா கோபமாக கத்தினார்.

“சாரி மாம்” கண்ணீருடன் அவன் சொல்ல, “வா..போகலாம்” சுவாதி சொல்ல, “நானும் வாரேன்” என்றார் அவன் அம்மா.

வேண்டாம்மா. நீங்க அனுமதிக்காம விக்ரமிடம் எந்த தேவையில்லாத பேச்சும் வச்சுக்க மாட்டேன் என்றாள்.

“போயிட்டு வாங்க. பிரச்சனையை முடிச்சிட்டு வாங்க” என இருவரையும் அனுப்பினார். அவன் அப்பா அவன் அம்மாவை பார்த்துக் கொண்டே நின்றார்.

விக்ரம் வீட்டிற்கு வரவும் அவனறைக்கு சென்று கதவை அடைத்தான். கீர்த்தனா அழைப்பதை கூட கண்டுகொள்ளாமல் உள்ளே இருந்தான்.

அர்சுக் குட்டி அவர்கள் வீட்டிற்கு வந்து, “யாரு உள்ள இருக்கா? எதுக்கு கதவை தட்டிறீங்க?” என கேள்விகளை அடுக்கினான்.

“சித்தாவை கூப்பிடு அர்சு” அவள் சொல்ல, “சித்தா, அத்தை அழுறாங்க. கதவை திறங்க” அவன் சொல்லும் போது, சுவாதி, விகாஸ் வந்தனர்.

“விக்ரம் கதவை திறங்க” சுவாதி குரல் கேட்க, கதவை திறந்தான். அவளை பார்த்து விட்டு விகாஸை பார்க்கவும் கொந்தளித்தான்.

“எதுக்குடா வந்த? போடா” என விகாஸை அடிக்க பாய்ந்து கொண்டு விக்ரம் வந்தான்.

“அண்ணா” கீர்த்தனாவும், “விக்ரம்” சுவாதியும் அவனை தடுத்துக் கொண்டிருந்தார்கள்.

“என்னடா அங்க சத்தம்?” அன்னம் கேட்டுக் கொண்டே வந்தார்.

“அடிச்சிட்டு இருக்காங்க பாட்டி” என்ற அர்சுவை பார்த்து விக்ரம் முறைத்தான். அவன் வாயில் கை வைத்து நகர்ந்து நின்றான்.

கீர்த்து, அர்சுவை அறைக்குள்ள அடைச்சுட்டு அவனோட நீயும் உள்ள இரு..

“அண்ணா, சண்டை போடாத”

“சரி, நீ போ” விக்ரம் சொல்லவும் விகாஸ், சுவாதியை பார்த்துக் கொண்டே அர்சலனுடன் உள்ளே சென்றாள்.

“எதுக்குடா எங்களை பாலோ பண்ண?” விக்ரம் அவன் சட்டையை பிடிக்க, சுவாதி அவர்களை விட்டு தள்ளி சோபாவில் வந்து அமர்ந்தாள். விகாஸ் அவளை பார்த்தான். அன்னம் இருவரையும் பார்த்து, “வாங்க” என விகாஸ் விக்ரமை பார்த்து விழித்துக் கொண்டிருந்தார்.

“என்னை எதுக்குடா பாக்குற? அவரையும் அவர் தங்கச்சியையும் எதுக்கு பாலோ பண்ண? கேட்கிறார்ல்ல. சொல்லு?” என கேட்டாள் சுவாதி. அவர்களை பார்த்துக் கொண்டே அன்னம் சுவாதி அருகே வந்து அனைவரையும் விசாரித்தார்.

ஆமா, மாம்ஸ் பாலோ பண்ணேன்.

“அதான் எதுக்கு?”

“உங்க கீர்த்துவை பற்றி தெரிஞ்சுக்க?”

“அவள பத்தி நீ எதுக்கு தெரிஞ்சுக்கணும்?”

நான் அவளை காதலிக்கிறேனான்னு தெரியணும்..

“வாட்?” என விக்ரம் அவன் சட்டையை விட்டான்.

நான் கீதாஞ்சலியை காதலிக்கலைன்னு இப்ப தான் தெரிஞ்சது. அதான் இவளை தான் காதலிக்கிறேனான்னு கவனிக்க வந்தேன்.

பல்லை கடித்துக் கொண்டு விக்ரம் அவனை அடிக்க கையை ஓங்க, அவங்க வீட்ல எல்லாரும் கேட்டதையும் விகாஸ் சொன்னதையும் கேட்டு விக்ரம் குழம்பினான்.

“நீ நிஜமாகவே அவளை காதலிக்கலையா?”

சுயர் மாம்ஸ். ஒரு வேலை இவளது குணம் ஈர்த்திருக்குமோன்னு பார்க்க வந்தேன்.

இவள் அந்த குணத்துக்கு எதிர்மாறா இருக்கா..

ம்ம்..என விக்ரம், “உட்காரு” என அவனையும் அமர வைத்து விக்ரமும் அமர்ந்தான்.

முதல்ல அப்படிதான் இருந்தாள். உலகம் தெரியாது. எப்பவாது அந்த கீதாவுக்கு தெரியாமல் வெளிய அழைச்சிட்டு போவேன். இந்த இரு வருசமா அவ அக்கா மோனிஷாவோட இருந்த போது அவளை மொத்தமாக மாத்தி இருக்கா. இப்படி பாலோ பண்றது அவளுக்கு தெரிந்தால் தேவையில்லாமல் அவள் எண்ணம் போகும்.

யாராக இருந்தாலும் உங்களுக்கு எங்க மேல கோபம் இல்லைன்னா சாதாரணமா பேசுங்க. பாலோ பண்ண வேண்டாம்.

நீ சுத்திட்டு அவ மேல காதல் இல்லைன்னு போயிட்டா. இன்னும் அவ கஷ்டப்படுவா. அதனால முதல்ல உங்க அம்மா எங்களை ஏத்துக்கட்டும். அப்புறம் பார்க்கலாம். அவங்க விருப்பத்தோட நீங்க பேச வாங்க. இப்ப கிளம்புங்க விக்ரம் சொல்ல, “வந்த பிள்ளைகளை விரட்டுற?” அன்னம் விக்ரமை திட்டினார்.

அம்மா, அவங்க அம்மா பற்றி தெரிந்தும்.. பேசாதீங்க. ஒன்று அவங்கள திட்டுவாங்க இல்லை நம்மை திட்டுவாங்க. இது தேவையா? எனக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனை போதும். உங்களுக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன் என விக்ரம் சொல்ல, சுவாதி ஏதும் பேசாமல் செல்ல, விகாஸ் விக்ரமை பார்த்துக் கொண்டே சென்றான்.

“கீர்த்து” விக்ரம் கதவை தட்டினான்.

கதவை திறந்து வந்த கீர்த்தனா, “அண்ணா அண்ணியும் மாமாவும் எங்க?”

அவங்கள வர வேண்டாம்ன்னு உன்னோட அண்ணன் தன் சொல்லீட்டான்.

“அண்ணா” என வேகமாக கீழே ஓடினாள் கீர்த்தனா.

“கீர்த்து நில்லு” விக்ரம் அழைக்க, அவள் கீழே சென்றாள். விக்ரமும் அன்னமும் அவள் பின்னே வந்தனர்.

விகாஸ் காரை எடுக்க, முன்னே வந்து நின்றாள் கீர்த்தனா.

அண்ணி, “நீங்க வாங்க. அண்ணா இருக்கான்” என கீர்த்தனா அழைக்க, இல்ல கீர்த்து விக்ரம் சொன்னது தான் சரி. அம்மா பர்மிசனோட வாரேன்.

ஆன்ட்டி, பர்மிசன் தர மாட்டாங்க.. நீங்க வாங்க. நான் அண்ணாவை பார்த்துக்கிறேன்..

இல்ல, “மானு சொல்லவா? கீர்த்து சொல்லவா?” அவள் சிந்தனைக்குள் செல்ல, விகாஸ் கீர்த்தனாவையே பார்த்தான்.

“என்ன யோசிக்கிறாங்க?” அவள் சுவாதியை பார்த்துக் கொண்டே நிற்க, “உனக்கு புரியலையா பவர்? அவங்களுக்கு உன்னை எப்படி அழைக்கிறதுன்னு தெரியாம யோசிக்கிறாங்க” என்றான் விக்ரம்.

கதவை படாரென திறந்த சுவாதி, “அப்படியெல்லாம் இல்லை கீர்த்து. அம்மா விருப்பப்படும் போது வாரேன். நீ நல்லா படி. உடம்ப பார்த்துக்கோ. அண்ணா காரை எடு” என கோபமாக காரில் சுவாதி ஏறினாள்.

விக்ரம் புன்னகைத்தான். சுவாதி அவன் புன்னகையை பார்த்து காரிலிருந்து தலையை நீட்டி, உதட்டை கோணிக் காட்ட, அவன் வெளிப்படையாக சிரிக்க, அவளும் புன்னகைத்தாள் சீட்டில் சாய்ந்து கொண்டு..

விகாஸ் இவர்களை பார்த்துக் கொண்டே காரை எடுத்தான். சுவாதி காரிலிருந்து கையை வெளியே காட்டி கையசைத்தாள்.

“பை அண்ணி. டைம் இருந்தா காலேஜ் வாங்க. மீட் பண்ணலாம்” என்றாள். அன்னமோ இடுப்பில் கை வைத்து விக்ரமை அனலாக முறைத்தார்.

“வாங்க போகலாம்” என இருவரையும் விக்ரம் உள்ளே அழைத்து சென்றான்.

சாரி சுவா, மாம்ஸ்ல்ல பாதி கூட நான் உன்னை பார்த்துக்கலை.

அதெல்லாம் ஒன்றுமில்லை. நீ எதையும் யோசிக்காமல் உன்னோட எதிர்காலத்தை பற்றி யோசி. கீர்த்து..இப்ப தான் முதல் வருடம் படிக்கிறா. டைம் எடுத்துக்கோ..

ம்ம்..என அவன் காரை செலுத்தினான்.

அடிக்கடி விகாஸ் கீர்த்துவை அவளுக்கு தெரியாமல் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். இதில் அவன் அவன் வீட்டினருக்கு ஆர்டரும் கொடுத்திருக்கான். எல்லாரும் அவளை கீர்த்தனா என்று தான் அழைக்கணுமாம்.. இறந்தவள் கீதாஞ்சலி என மனதில் பதிய வைக்க சொல்லியும் ஆர்டர் போட்டான்.

“யெப்பா, நீ முதல்ல நினைவுல்ல வச்சுக்கோ” என்றான் ரகசியன்.

நான் வச்சுப்பேன்.

“என்ன வச்சிப்ப?” ராஜா கேலியுடன் கேட்க, “தேவையானதை நினைவில் வச்சுப்பேன்” என நகர்ந்து தப்பி விட்டான் விகாஸ்.

இப்படியே நாட்கள் நகர்ந்தது.

விக்ரம் கீர்த்தனாவிற்கு நிறைய பயிற்சிகள் கற்றுக் கொடுத்தான். விகாஸ் எப்போதும் போல் இவர்களை மறைந்து நின்று பார்த்து வந்தான்.

ஒரு நாள் கீர்த்தனா தன் நண்பர்களுடன் பீச் சென்று மணலில் அமர்ந்து கடலலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளருகே வந்த நண்பன் சத்யா, “மானூ, என்ன பிரச்சனை?”

அண்ணா, அண்ணி மேரேஜ் பற்றி தான்..

“ஆன்ட்டி, ஒத்துக்க மாட்டேங்கிறாங்களா?” அவன் கேட்க, அங்கிருந்து விலகி தனியே வந்து படகின் பக்கம் அமர்ந்தாள்.

“என்ன வந்துட்ட?” ரோஸ் கேட்டாள்.

ஏதாவது சீக்கிரம் செய்து அண்ணா, அண்ணி மேரேஜை ஒத்துக்க வைக்கணும்.

“நீ அண்ணியோட அம்மாகிட்ட பேசலாம்ல்ல?”

“என்ன பேசுறது? எங்க மேல தப்ப வச்சுட்டு அவங்கள ஃபேஸ் பண்ணவே முடியாது. இதில் பேசணுமா?”

சரி, உன்னோட காதல்?

அண்ணாவையே அவங்க ஏத்துக்கல. இதுல எனக்கு வேற..

“அவங்க ஒத்துக் கொண்டாலும் இனி என்னால வீ மாமா கூடவெல்லாம் இருக்க முடியாது” என கீர்த்தனா சொல்ல, “என்னடி சொல்ற?”

ம்ம்..முடியாது. நான் இங்கே இருப்பது சரியில்லை. அண்ணா, அண்ணி மேரேஜ் முடிஞ்சதும் நேகன் அண்ணாகிட்ட பேசி பாரின்ல்ல செட்டில் ஆகப் போறேன்.

“ஏய், என்ன சொல்ற?” நண்பர்கள் அதிர்ந்து அவளை பார்த்தனர்.

கீர்த்தனா கூறியதை கேட்ட படகின் அடுத்த பக்கத்தில் எதார்த்தமாக அமர்ந்திருந்த விகாஸ் அதிர்ந்தான்.

“இவ என்ன சொல்றா?” அவன் கண்கள் கலங்கியது. விகாஸிற்கு விக்ரமின் பவர் மீது காதல் வந்து விட்டது.

“எத்தனை வருசமா காதலிக்கிற? எதுக்கு இப்ப பாரின்னு சொல்ற?” இல்லை..நீ எதையோ எங்களிடம் மறைக்கிற..

இல்ல, நான் எதையும் மறைக்கலை..

“பொய் சொல்லாத. என்னன்னு சொல்லு?’ சத்யா சத்தமிட்டான்.

கீர்த்தனா அழுதாள்.

“எதுக்குடி அழுற?”

இல்ல, நான் போகணும்..

“சொல்லுடி, என்ன செஞ்ச?”

நான் எதுவும் செய்யல..

“இப்ப நீ சொல்லலைன்னா நான் உன்னோட அண்ணிக்கு கால் பண்றேன்” ரோஸ் சொல்ல, “வேண்டாம் வேண்டாம் சொல்றேன்” என அழுது கொண்டே அவளது அலைபேசியை காட்டினாள்.

“அலைபேசியில் என்ன இருக்கு?” ரோஜித் கேட்டான்.

விகாஸ் எழுந்தான்.

வீடியோவை அவர்கள் ஆன் செய்ய, அவர்களருகே சினமுடன் வந்த விகாஸ் அலைபேசியை பிடுங்கினான்.

“மாமா” என அதிர்ந்த கீர்த்தனா, “பார்க்காதீங்க” என அவனிடம் வந்து அலைபேசியை பிடுங்க வந்தாள். அவள் கையை பிடித்த விகாஸ் அவளை தனியே இழுத்து சென்று அவளை நிறுத்த அவள் மீண்டும் அலைபேசியை பிடுங்க வந்தாள். அவளை இழுத்து அணைத்து அமைதியாக்கி விட்டு வீடியோவை பார்த்தான்.

எல்லாரும் அதிர்ச்சியுடன் விகாஸை பார்த்தனர்.  கீர்த்துவோ அதிர்ந்து அசையாமல் நின்றாள்.

பின் அவனிடம் வந்து எல்லாரும் வீடியோவை பார்த்து திகைத்தனர்.

விகாஸ் அவளை நகர்த்தி, “என்ன செஞ்சிருக்க தெரியுதா?” சீற்றமுடன் கேட்டான்.

சுயம் வந்த கீர்த்தனா, “நீங்க செய்ததை தான் நானும் செய்தேன்” என்று அவள் சொல்ல, எல்லாரும் அதிர்ந்து விகாஸை பார்த்தனர்.

“கொலை செய்ததை சாதாரணமா சொல்ற?” சத்யா சினமுடன் கேட்டான்.

“உன்னோட அண்ணனுக்கு தெரியுமா?”

தெரியும். எனக்கு அண்ணாக்கள் எல்லாரும் கெல்ப் பண்ணாங்க.

எனக்கு தெரியாமல் விக்ரம் மாமா..

இல்ல. விக்ரம் அண்ணா இல்லை..அஜய் அண்ணா, கார்த்திக் அண்ணா..என நண்பர் கூட்டத்தை அவள் சொன்னாள்.

“இன்னும் எத்தனை பேரை கொன்ன?” விகாஸ் அவளை முறைத்துக் கொண்டு கேட்டான்.

ஒவ்வொரு விரலாக காட்டி..மூன்று விரலை காட்ட, ரோஸ் மயங்கி விழுந்தாள்.

அய்யோ..ரோஸ்..ரோஸ் அவள் பதறினாள்.

நண்பர்களில் ஒருவன் ஓடிச் சென்று தண்ணீரை அவள் மீது தெளிக்க, ரோஸ் எழுந்தாள்.

ராம்..அவனையும் என அவள் சொல்ல, ரோஸ் எழுந்து கீர்த்தனாவை “பளார் பளார்” என கன்னத்தில் மாறி மாறி அடித்தாள். நண்பர்கள் அவளை இழுத்தனர்.

“போயும் போயும் அந்த கீதாஞ்சலிக்காக கொலை பண்ணீட்டு வந்து உன் வாழ்க்கையை இழக்க போற?” எனக் கத்தினாள்.

“ரோஸ்” என கீர்த்தனா அழுது கொண்டே அவளிடம் வந்தாள்.

“வராதடி நில்லு”.அவ உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தினாளோ அதுக்கான தண்டனையை அவ அனுபவிச்சு இருக்கா. ஆனால் அவளுக்காக நீ கொலை செய்து பாவத்தை நீயே ஏத்துக்கிட்ட. பைத்தியமாடி நீ?

திரும்ப திரும்ப அப்படி சொல்லாத ரோஸ். அவள் சுயநலமா யோசித்தாள். மத்தபடி அவள் நல்லவள் தான். என்னோட சேர்ந்து வளர்ந்தவ. என்னால எப்படி இதை தாங்கிக்க முடியும்?

கூட வளர்ந்தால் போதுமா? உனக்கு ஆசை இருக்கும்ல்ல. கொஞ்சம் கூட பற்றி சிந்திக்காமல் என்னவெல்லாம் செய்தாள். ச்சே..என ரோஸ் சொல்ல, விகாஸ் ரோஸை பார்ப்பதை கவனித்து, “ரோஸ் போதும்” எனக் கத்தினாள்.

“எதுக்கு இப்ப கத்துற? அவ என்ன தப்பா கேட்டுட்டா? உன்னோட ப்ரெண்டு இந்த பொண்ணு போல இருக்கணும். உன் வாழ்க்கையை அழித்தவளுக்காக எதுக்கு இப்படி சப்போர்ட் பண்ணுற?” விகாஸ் கோபமாக கேட்டான்.

“மாமா, அவ யாரை சொல்றான்னு உங்களுக்கு புரியலையா?”

புரியுது.  கீதாஞ்சலியை தான சொல்றா? எனக்கு அடுத்துவங்கள சந்தோசமா பார்த்துக்கிறவங்கள தான் பிடிக்கும். மத்தவங்க வாழ்க்கையை அழிக்கிறவங்கல்ல பிடிக்காது. அதை விடு..

“நீ கொலை செய்வதை யாரு வீடியோ எடுத்தா?” விகாஸ் பாய்ண்டை பிடிக்க, தவித்து அவனை பார்த்தாள் கீர்த்தனா.

“ஆமா, யாருடி?” ரோஸ் கேட்க, “என்னிடம் ஏதும் கேட்காதீங்க” என சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

“யாரு உன்னை மிரட்டுறது?” விகாஸ் நேரடியாக கேட்டான்.

யாரும் மிரட்டலை மாமா.

“அப்ப இந்த வீடியோ யாரு உன்னோட கீதுவா எடுத்தா?” சீற்றமுடன் கேட்டான்.

மாமா..

சொல்லு..

வேண்டாம் மாமா..

சார், இவளை விடாதீங்க. இவளுக்கும் குடும்பத்தோட வாழணும்ன்னு ஆசை. ஆனால் திடீர்ன்னு பாரின் போகணும்ன்னு சொல்றா?

“சொல்லு?” விகாஸ் கத்தி கேட்க, விக்கித்து பயந்து விழித்தாள்.

விகாஸ் அவளை மீண்டும் அணைத்து, நான் உன்னை புரிஞ்சுக்கிட்டேன். உன்னோட என் வாழ்க்கை பயணம் நகரணும். சொல்லு? நான் இருக்கேன்..

“மாமா” அவள் அவனை கட்டிக் கொண்டு அழுதாள். அவள் நண்பர்களுக்கு கொஞ்சம் நிம்மதியானது. அவள் முதுகை தடவியவாறு, நீங்க யாரும் இதை பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. “கிளம்புங்க. இதுல நீங்க தலையிட்டால் உங்களுக்கும் பிரச்சனையாகும்”.

“இல்ல, நாங்களும் உதவுகிறோம்” சத்யா சொல்ல, புரிஞ்சுக்கோங்க. உங்களுக்கும் ஏதாவது ஆனால் இவளும் தாங்கிக்க மாட்டா. உங்களுக்கும் குடும்பம் இருக்கு. இதை நான் பார்த்துக்கிறேன் என அவர்களை அனுப்பினான்.

கீர்த்தனா விகாஸை விட்டு விலகி நின்றாள்.

“மாமா, இதை விட்ருங்க”

“யாரு சொல்லு?”

“மாமா, உங்களுக்கு ஏதாவது ஆனால்?”

“உனக்கு ஏதாவது ஆனால் என்னாலும் தாங்க முடியாது” என அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.

சொல்லுடா கீர்த்து..ப்ளீஸ்..

மாமா, அந்த ரத்தன் ஷெட்டி தான். யாருக்கும் சொல்லக் கூடாது. சொன்னால் அவங்கள கொன்றுவோம்ன்னு சொன்னான்.

“வேற யாரிடமும் சொன்னீயா?”

அண்ணாவுக்கு கூட தெரியாது. அந்த ஷெட்டியை பிடிக்க, போலீஸ் ஆட்கள், அஜய், கார்த்திக் அண்ணா எல்லாரும் முயற்சி செய்றாங்க.

“ஓ இது வேறையா? இதுக்கு தான் அவனை அஜய் சார் மிரட்டுனாறா?”

“வா போகலாம்” என அழைத்தான்.

மாமா..

“ஆமா” என்று அலைபேசியை எடுத்து சிம்மா, விக்ரம், அஜய்யை அவர்கள் இடத்திற்கு வர சொல்லி இவனும் கீர்த்தனாவுடன் சென்றான். அனைவரும் சென்றனர்.