நீ நான் 31

மறுநாள் அவர்கள் முன் சென்று நின்றேன். அவங்க சந்தோசப்பட்டாங்க. அக்கா தான் எனக்கு மானசான்னு பேர் வச்சா. எல்லாரும் என்னை மானசா..மானி..மானூ..மான்குட்டின்னு கூப்பிட்டாங்க. ஆனால் இப்ப அவ இல்லை.

பள்ளி, கல்லூரி முழுவதும் நான் கீர்த்தனா தான்.

என்னோட பெற்றோருக்கு தெரியாமல் தாத்தா தான் என்னை எங்கேயோ போட்டு வந்திருக்கார். என்னை மட்டுமல்ல அக்காவையும் தான். அவள போலீஸ் உதவியுடன் கண்டுபிடிச்சிட்டாங்க. விக்ரம் அண்ணா என்னை பற்றிய எதையும் போலீஸிடம் சொல்லவில்லை. அவரோட பவர்..எனர்ஜி..எல்லாமே நானுன்னு தான் வாழ்ந்தார்.

லட்சுமி அக்கா அடிக்கடி சொல்லுவாங்க. அண்ணா என்னை அவர் வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடுவார்ன்னு. ஆனால் அண்ணாவுடன் என்னால தான் போக முடியாம போச்சு.

ஆனால் அண்ணா.. அப்பாவுடனும் மோனூவுடனும் இந்த இரு வருடங்கள் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தேன். அதை கூட முழுதாக அனுபவிக்க என்னால முடியல என விக்ரமை பார்த்து கண்கலங்கினாள்.

அது என்னமோ உறவுகளுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கு. எனக்கு பிடிச்ச யாரும் என்னுடன் இருக்க மாட்டேங்கிறாங்க. “நீ இருப்பேல்ல அண்ணா” என விக்ரம் கையை பிடித்தாள்.

“கண்டிப்பா இருப்பேன்ம்மா” என அவள் கையை அழுத்தமாக பிடித்தான்.

என்ன சொன்ன? உனக்கு நம்பிக்கை இல்லைன்னு தான சொன்ன?

கீர்த்தனா..என்னோட தங்கை. இவள் தான்..இவள் தான் அமைதியான பொண்ணு. அடுத்தவங்க விசயத்துல்ல அதிகம் தலையிட மாட்டாள். ஆனால் அந்த கீதாஞ்சலியால் இவள் மாறும் நிலையாகிடுச்சு..

கீர்த்தனாவுக்கு கீது மேலுள்ள பாசத்தை பயன்படுத்தி, தற்கொலை பண்ணீடுவேன்னு சொல்லி மிரட்டி தான் கீர்த்தனா இறந்துட்டான்னு அனைவருக்கும் புரிய வச்சா.

நான் பள்ளி மாறி என்னுடைய அனைத்தையும் என் குடும்பத்துடன் இணைத்து தான் மானசாவாக வாழ்கிறேன்.

உங்களுடன் வாழ்ந்த கீர்த்தனா நல்லவலாக இருந்தாலும் சுயநலமானவள். அவளுக்காக நிறைய விட்டுக் கொடுத்திருக்கா என்னோட கீர்த்து. என்ன செஞ்சான்னு நான் சில விசயம் தான் சொன்னேன். கஷ்டப்பட்ட என்னோட தங்கையை இதுக்கு மேல நான் கஷ்டப்படுத்த விரும்பலை. அதனால..என விக்ரம் அனைவரையும் பார்த்து விட்டு, மானசாவான கீர்த்தனா அறைக்கு சென்று அவளது பொருட்களை எடுத்து வந்து, “நாங்க கிளம்புகிறோம்” என விக்ரம் கீர்த்தனா கையை பிடித்தான்.

அண்ணா, “ஒரு நிமிடம்” என கண்கலங்க விக்ரமை பார்த்தாள். அவன் கையை விட்டு விகாஸ் முன் வந்து, கீதுவுக்கு உங்க மேல காதல் வந்தது. ஆனால் நேரம் தாழ்ந்து வந்தது. அந்த..அந்த..என முகத்தை திருப்பி கண்ணீரை உள்ளிழுத்து, அந்த பொறுக்கிகளால் அவன் சிதைந்த போது அவளுக்காக அழுதீங்கல்ல..அப்ப தான் காதல் வந்தது.

சொன்னால்..சொல்ல தோன்றியது என சொல்லி விட்டு விக்ரமிடம் வந்து நின்றாள்.

விக்ரம் அவளது பையை திறந்து அதிலிருந்த புகைப்படங்களையும் அதிலிருந்த அலைபேசியை எடுத்தான்.

“அண்ணா, இதை காட்டி யாரும் நம்மை நம்பணும்ன்னு அவசியமில்லை” கீர்த்தனா சொல்ல, “உன்னை பத்தி கேவலமாக பேசுனவங்களுக்கு தெரியட்டும்மா” என அலைபேசியை எடுத்து விகாஸ் கையில் திணித்து, வீடியோ ஒன்றை ப்ளே செய்தான்.

மானசாவை இனி கீர்த்தனாவாக பார்க்கலாம் நண்பர்களே!

கீது, என்ன பேசுற?

என்னோட விசயத்துல்ல நீ தலையிடாத. நான் டார்கெட் பண்ணீட்டேன். அந்த விகாஸை வைத்து தான் அங்கேயே இருக்கப் போறேன்.

உனக்கு அவரை பிடிச்சிருந்தா சொல்லு. அதை விட்டு ஏமாத்தி போறதெல்லாம் தப்பு..

தப்பா? ஓ..நீ காதலிப்பவனை நான் எடுக்கிறேன்னு நினைக்கிறியா? நானும் அதுக்கு தான் டாக்டர் சாரை ட்ரை பண்ணேன். முடியல..நான் என்ன செய்றது?

கீது, இது விளையாட்டல்ல..

விளையாட்டை நன்றாக ஆரம்பித்து விட்டேன். நீ பார்த்தேல்ல அந்த கோவில்ல வச்சு என கீதாஞ்சலி கீர்த்தனாவை கேட்டாள்.

ம்ம்..என கீர்த்தனாவின் குரல் தாழ்ந்தது.

பார்த்தேல்ல..நான் அவனிடம் போகலை. அவன் சரியான முட்டாள்டி. அவனே வாரான் என அவனது பப்ளிம்மா சொல்லவதை வீடியோவாக பார்த்து அதிர்ந்த விகாஸ் கண்ணீருடன் தரையில் அமர்ந்தான்.

கீது..காதல் விளையாட்டு பொருள் கிடையாது. உன்னை பற்றி என்றாவது அவங்களுக்கு தெரிய வந்தால் கஷ்டம் உனக்கு மட்டுமல்ல மொத்த குடும்பத்திற்கும்..

“கீதுவா?” என கீர்த்தனாவை ஓங்கி அறைந்தாள் கீதாஞ்சலி. அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.

அக்கா கூப்பிடுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன். உனக்கு புதுசா அக்கா கிடைக்கவும் என்னை மறந்துட்டியாடி எனக் கேட்டாள்.

நீ செய்றது தப்புக்கா..

ஏய், எனக்கு அறிவுரை செய்றதை விட்டு உன் பின்னே சுற்றுபவனை கரெக்ட் பண்ணு..

“நீ என்ன பேசுற?”

ஏன், விகாஸிடம் வந்து நடந்ததை சொல்ல நினைக்கிறியாடி..

இல்லக்கா, ஆனால் உனக்கும் கஷ்டம் தான்..

என்னை நான் பார்த்துக்கிறேன். இத்தனை நாள் நீயா என்னை பார்த்துக்கிட்ட? என கோபமாக கேட்டாள்.

அக்கா, எனக்கு உன் மேல அக்கறை இருக்கு.

இருக்குல்ல..அப்ப நல்ல பிள்ளையா தள்ளி நிக்கணும். அவங்க யார் முன்னாவது வந்த உன்னை தொலைச்சிருவேன்.

அவங்கள விட்ரு. எனக்கு பதிலாக அண்ணா கூட அவர் தங்கையா நீ போய்க்கோ. நான் செத்தது செத்தாகவே இருக்கட்டும்.

ஆனால் நீ சாகலையே என்ற கீதாஞ்சலியின் கேள்வியில் மனமுடைந்து பேச முடியாமல் கண்ணீருடன் அவளை பார்த்தாள் கீர்த்தனா.

உனக்கு உன் அண்ணா எப்போதும் இருப்பார். எனக்கு அவங்க எல்லாருடனும் பிரின்சஸ் போல வாழணும். சரி..எங்க? என கீதாஞ்சலி கேட்க, கைகளை விரித்தாள் கீர்த்தனா.

“ஏய், உனக்கு பயம் விட்டு போச்சா?”

நான் உன்னை பார்ப்பேன்னு நினைக்கலை. அதான் எடுத்துட்டு வரலை. இப்ப செஞ்சுதா என உரிமையாக கேட்டாள்.

ம்ம்..என கண்ணை துடைத்து விட்டு, அங்கிருந்த பூக்களை பறித்து மனமுடைந்து வலியுடன் அவளுக்கு மலர்க்கீரிடத்தை செய்து கொடுத்தாள்.

உனக்கு?

வேண்டாம்.

உனக்கு தான பிடிக்கும். எனக்கு தான் பழகி போச்சு. எப்படி நீ அமைதியா இருக்க? ரொம்ப கஷ்டமா இருக்கு. உன்னை போல் நடிப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு..

உன் மேல் பாசம் வச்சிருக்கிறவங்க கிட்ட நடிக்கிறது..ஒரு நாள் இல்லை ஒரு நாள் உனக்கும் வலிக்கும்.

ஏய்..அதிகம் பேசாத..உனக்கு செய் என அதிலும் கீர்த்தனாவிடம் அதிகாரத்தை காட்டினாள். அவள் செய்து நீட்ட..அதை கீர்த்தனா தலையில் வைத்த கீதாஞ்சலி..க்யூட் என அவள் கன்னத்தை கிள்ளி விட்டு, இந்தா இது அவன் எனக்காக கொடுத்தது. எனக்கு இது பிடிக்கலை என கீர்த்தனாவிடம் கொடுத்தாள்.

கீர்த்தனா அதை பார்த்து, “இது அவரு உங்களுக்காக கொடுத்தது? எனக்கு எதுக்கு?”

எனக்கு பிடிக்கலை. நீ வச்சுக்கோ என அவளுக்கு காஸ்ட்லி ஸ்கார்ஃப் ஒன்றை போட்டு விட்டாள்.

அக்கா, “நீ வந்துறேன்” என அந்த ஸ்கார்ஃப்பை தடவியவாறு கீர்த்தனா சொல்ல, நான் சொல்லும் இடத்துக்கு மட்டும் வா. போதும்..என்று அனுப்பினாள்.

“என்ன வீ, நல்லா பார்த்தீயா? உன்னோட பப்ளிம்மாவை.. சோ..க்யூட்ல்ல” விக்ரம் கிண்டலாக கூற, “அண்ணா சும்மா இரு” என விக்ரமை இழுத்தாள் கீர்த்தனா.

“இதுல நிறைய இருக்கு” என விக்ரம் சொல்ல, மற்றொரு பையை விகாஸ் முன் வைத்த கீர்த்தனா. இது எல்லாமே நீங்க கீதுவுக்காக கொடுத்தது. அவள் எதையும் பயன்படுத்தலை. என்னிடம் கொடுத்திருவா.. எனக்கு பயன்படுத்த உரிமை இல்லை என்பதால் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன் என அதை திறந்து காட்டினாள்.

விகாஸ் மனம் சுக்கு நூறாய் உடைந்தது. அவன் கொடுத்த எல்லாம் இவள் கையில். அப்படின்னா என்னோட பப்ளிம்மா என்னை ஏமாத்தி இருக்கா. நான் முட்டாளாக இருந்திருக்கேன் என விகாஸ் கதறி அழுதான். எல்லாரும் அவனுக்கு ஆறுதலாக நிற்க, திலீப் கோபமாக விக்ரம் சட்டையை பிடித்து, ஒரு சின்னப் பொண்ணு பயமுறுத்தினால் இப்படி எங்க குடும்பத்தையே ஏமாத்துவீங்கல்லா? என கத்தினான்.

மாமா, “கையை எடுங்க” என கீர்த்தனா சினமுடன் திலீப் கையை தட்டி விட்டு, இத்தனை பேர் அவளுடன் ஆறு மாதம் பழகி இருக்கீங்க. “ஒருவருக்கு கூட அவளோட உண்மை முகம் தெரியலையா?” அவ யாருமில்லாதவள். அவள் ஆசைக்காக செய்திருக்காள். அவள் செய்தது பெரிய தப்பு தான்.

குடும்பமில்லாத அநாதைன்னு எத்தனை பேர் பேசுவாங்க தெரியுமா? அதை கடந்து வந்தால் இந்த பணக்கார பசங்க எல்லாரும் கேவலமாக பார்ப்பாங்க. நாங்க மனுசங்க தான..எங்களுக்கு ஆசை இருக்கக் கூடாதா?

உங்களுக்கு இன்னும் கீதுவை பற்றி தெரியல. விக்ரம் அண்ணாவோட நான் பழகக்கூடாதுன்னு சொல்லு கத்தியை அவள் கழுத்தில் அவளே வச்சுக்கிட்டா..கொஞ்சம் விட்ருந்தா செத்து போயிருப்பா..

அவ என்ன தான் என்னை கஷ்டப்படுத்தினாலும் நாங்க ஒன்றாக தான் வளர்ந்தோம். இவள் நடவடிக்கை மாறிய பின் ஆசிரமத்தில் எல்லாரும் அவளை ஒதுக்கியும் வச்சுட்டாங்க. அவள் நிலைமை..நான் யோசிப்பேன்ல்ல..

உங்க தம்பியும் குடும்பமும் கஷ்டப்படுற மாதிரி தான அவளும் கஷ்டப்பட்டா. ஆனால் அவளுக்கு காதல், உறவு, அன்பை கட்டாயப்படுத்தி வர வைக்க முடியாதுன்னு அவளுக்கு புரியலை. சொன்னால் கேட்கும் நிலையிலும் இல்லை.

“அண்ணா உங்களிடமும் சொல்ல முடியாமல் அவளையும் சமாளிக்க முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா?”

மோனூ அக்கா வீட்டுக்கு போன பின் நான் மகிழ்ச்சியாகவும் அமைதியை விட்டு நன்றாகவும் கலகலப்பாகவும் பேசி பழகினேன். அச்சூழ்நிலை எனக்கு இதமாக இருந்தது. என்னை நானே மாற்றிக் கொண்டேன். எல்லாவற்றிற்கும் அவளும் காரணம் தான்.

என்ன தான் அவள் விகாஸ் மாமாவை காதலிக்கலைன்னாலும் பாசம் இருந்தது. அவள் குணமே எப்போதும் எடுத்தெறிந்து பேசுவது தான். எங்களுக்கு பழகிடுச்சு. உங்களிடம் பழக ரொம்ப கஷ்டப்பட்டு என்னை போல மாறினாள். என்னிடமுள்ள எல்லாவற்றையும் காஃபி செய்து உங்களை ஏமாற்றினாள்.

தப்பு தான். தயவு செய்து அதை விட்டு உங்க தம்பியை அவளிடமிருந்து வெளிய கொண்டு வாங்க..

“எதுக்கு? நீயும் என்னை ஏமாற்றவா?” விகாஸ் கோபமாக எழுந்தான்.

ஆமா, ஏமாத்திட்டோம். அதுக்கு மன்னிப்பும் கேட்டுட்டோம். உன்னோட தங்கச்சிக்காக நீ என்னிடம் பேசுனேல்ல அது போல தான் கீது தவறான முடிவை எடுக்கக் கூடாதுன்னு நாங்களும் நடித்தோம் விக்ரம் கூற, விகாஸ் அவனை அடிக்க வந்தான்.

அவன் கையை பிடித்து தள்ளிய கீர்த்தனா, “என்னோட அண்ணா மேல யார் கையை வச்சாலும் எனக்கு பிடிக்காது. போயிருங்க” என கத்தி விட்டு, “ச்சே..இவங்கல்லாம் புரிஞ்சுக்கவே மாட்டாங்க” என சீற்றமுடன் விகாஸை முறைத்து விட்டு, “இனி ஒரு நிமிசம் கூட இங்க இருக்க மாட்டோம்..வா அண்ணா” என விக்ரமை அவள் இழுத்தாள்.

விக்ரம் அவள் கையை எடுத்து விட்டு, எங்களை மறுபடியும் மன்னிச்சிருங்க என கையை கூப்பி விட்டு, சுவாதியை பார்த்து மண்டியிட்டு, “உனக்காக நான் காத்திருப்பேன்” என தாலிச்செயினை பாக்கெட்டிலிருந்து எடுத்து அவளிடம் நீட்டினான்.

அன்னம், விக்ரமிடம் வந்து நின்றார். நட்சத்திரா, சிம்மா எல்லாரும் அவன் பக்கம் வந்தனர்.

சுவாதி செய்வதறியாது கண்ணீருடன் நிற்க, விகாஸ் அதை பிடித்து இழுத்து தூக்கி எறிய கையை தூக்கினான். அவன் கையை இழுத்து அவன் கையிலிருந்ததை பறித்து, “இது என்ன வெறும் கயிறா? வேண்டாம்ன்னா தூக்கி எறிய” என கீர்த்தனா அவனை முறைத்து விட்டு, விக்ரம் கையில் கொடுத்து, அண்ணா..நாம சொல்ல வேண்டியதை சொல்லீட்டோம். இனி அவங்க விருப்பம். என அன்னத்தை பார்த்து, நான் என் அண்ணா வீட்ல தான் இருப்பேன்.

வா..நாம சேர்ந்தே இருந்துக்கலாம் என அன்னம் சொல்ல,

வேண்டாம்மா. இனியும் யாரும் என்னோட கீர்த்துவை ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது. அதனால அவளை நானே என் வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன். நீங்க அண்ணாவுடன் இருங்க. முதல்ல எங்களுக்கு நேரம் வேண்டும் என்றான் விக்ரம்.

“சரிப்பா, எதிர் எதிர் வீடு தான?” பார்க்கலாம் என்றார் அன்னம்.

சுவாதி அண்ணி.. சொல்லலாமான்னு தெரியல. “ரொம்ப தேங்க்ஸ்” என ரம்யாவிடம் ஓடி அவளை அணைத்து விட்டு பாட்டி, தாத்தாவை ஏக்கமுடன் பார்த்துக் கொண்டே விக்ரமுடன் வெளியேறினாள்.

காற்றுடைந்த பலூனாக அனைவரும் மனமுடைந்து அமர்ந்திருந்தனர். விகாஸ் கீதாஞ்சலி புகைப்படத்தை பார்த்து, அதை தூக்கி விட்டு எறிய சென்றவனை தடுத்த ரகசியன் “பொறுமையா இருடா” என்று அதட்டினான்.

“எல்லாரும் எப்படி ஏமாத்திட்டாங்க? அதுவும் என்னோட பப்ளிம்மா..என்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டா” என விகாஸ் வெளியேற, குடிக்க போறீங்களா? என்ற குரலில் வீல் சேரில் வந்த பரணியை பார்த்து நின்றான் விகாஸ்.

“நீ எப்படி இங்க?” விகாஸ் கேட்க, “நான் வந்தது இருக்கட்டும். மானுவை பற்றி என்ன பேசுனீங்க? அவள பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” கோபமாக கேட்டான்.

அவள் மானுவே இல்லை கீர்த்தனா. எல்லாரையும் ஏமாத்தி இருக்கா..

“ஆமா..ஏமாத்தினா. அவள் எதுக்காக பண்ணா? அவ செஞ்சது தப்புன்னுன்னா நீங்க செஞ்சதும் தப்பு தான?”

“நான் என்ன செய்தேன்?”

உங்க தங்கச்சியை என்ன பேசுனீங்க? அவங்கள கஷ்டப்படுத்துனீங்க.

விக்ரம் சார் கூட நடிக்க தான் செய்திருக்கார். ஆனால் நீங்க உங்களது குடும்பத்தையே ஏமாற்றிய கீதாஞ்சலிக்காக உங்க தங்கை மேலையும் என விக்ரம் சாரோட பேசினீங்க.

ஆனால் மானூ தான உதவினாள்.

அவ உங்களை ஏமாத்தியது அவள் அக்காவாக எண்ணிய கீதாஞ்சலிக்காக. அதுவும் அவள் தற்கொலை செய்வேன்னு மிரட்டி இருக்கா. அதனால தான பண்ணா. நீங்க ஏமாந்துட்டு எல்லார் மேலும் கோபப்பட்டு என்ன பிரயோஜனம்?

மானூ தான் கீர்த்தனான்னு எனக்கு தெரியாது. கொஞ்ச நேரம் முன் தான் அவளோட ப்ரெண்ட்ஸ் என்னிடம் நடந்த எல்லாத்தையும் சொன்னாங்க. ஆனால் உங்களை போல் எதையும் புரிஞ்சுக்காத மனுசனை அவள் எப்படி காதலித்தால்ன்னு தான் புரியல..

“அதிகமா பேசாத” விகாஸ் சீற, ஆறு மாசமா அந்த கீதாஞ்சலியை உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. ஆனால் அவளிடம் எந்த தவறுமா தெரியல..

ம்ம்..எனக்கு சந்தேகம் லேசாக வந்தது. ஆனால் பெரியதாக எதுவும் தோணலை என ஹரிணி சொன்னாள்.

“சந்தேகமா? எப்ப?” ராஜா கேட்க, மாமா..அந்த ராம் விசயம் முடிந்து ஒரு வாரம் இருக்கும். யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். அப்பொழுது என்னோட ப்ரெண்டு கீதாவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

கீது,..என பேச்சு வாக்கில் கோபமாக அழைத்த போது, அவள் திரும்பினாள். முதலில் எதுவும் தோணவில்லை. அன்று அவள் நம்ம மாமா வீட்டுக்கு வந்தால்ல..அப்பொழுது அவளை நான் அழைக்கும் போது கீர்த்தனாவிடம் பதட்டம் தெரிந்தது.

“இதெல்லாம் சொல்லவேயில்லைம்மா?” ராஜாவின் அப்பா கேட்டார்.

மாமா, இது முதல்ல எனக்கு பெரியதாக தெரியவில்லை.

ரம்யாவோ அழுது கொண்டே கீதாஞ்சலி புகைப்படம் முன் வந்து நின்றாள்.

“நீ நடித்து ஏமாத்தியதை விட, என்ன சொல்லி அண்ணாவையும் மானுவையும் கஷ்டப்படுத்தி இருக்க? உன்னால நம்ம குடும்பமும் அவங்களும் எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு யோசித்தியா? அவள் தான் சொன்னால்ல.. கேட்டிருக்கலாம்ல்ல?” ரம்யா பேசிக் கொண்டிருந்தாள்.

“மாமா, உள்ள வா” சுருதி விகாஸை அழைக்க, எல்லாரும் உள்ளே வந்தனர். விகாஸ் அப்பா பரணியிடம் சென்று அவனது வீல் சேரை தள்ளிக் கொண்டு வந்தார்.

மாமா, ஏதோ கார்டு என சுருதி கீர்த்தனா வைத்து சென்று மற்றொரு பொருளடங்கிய பையிலிருந்து கார்ட்டை விகாஸிடம் கொடுத்தாள்.

இன்னும் இருக்கு என கிஃப்ட் பொருட்களை தனியே வைத்து விட்டு, சில கார்டுகளை எடுத்தாள். ஒவ்வொருவரும் அதை வாங்கி பார்த்தனர்.

வீ, “இது பர்த்டே கார்டு”. உன்னோட பர்த்டேவிற்கானது தமிழ் சொல்ல, இது என திலீப் அம்மா, காதலர் தினமன்று உனக்கு அவள் கொடுத்தது என ஒவ்வொருவரும் சொல்ல, விகாஸ் கையிலிருந்ததை பார்த்தான்.

காதலை கூறும் கடிதம்..

வார்த்தைகள் சிலதுமாய்..படங்கள் சிலதுமாய்..இருந்தது.

எல்லாரும் வைத்திருந்ததை பார்த்த மிருளாலினி. இது அவள் எழுதியதில்லை. கீர்த்து இல்லை..சாரி சாரி..கீதாஞ்சலி கையெழுத்து இல்லை என்று அடித்து கூறினாள்.

அதை பிடுங்கி பார்த்த பரணி புன்னகையுடன் இது மானு கையெழுத்து..

உங்களிடம் காதலை சொல்ல முடியாது என்பதால் இப்படி செய்திருக்காள். அவள் இதில் வைத்ததை மறந்து விட்டால்ன்னு நினைக்கிறேன். கண்டிப்பாக கொஞ்ச நேரத்துல்ல இதை எடுக்க வருவா.. என சொல்லவும் விக்ரமும் கீர்த்தனாவும் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

“மாமா, நீ இங்க என்ன பண்ற?” பரணியிடம் வந்தவள், அந்த பையையும் விகாஸூம் மற்றவர்களும் கையில் வைத்திருந்ததை பார்த்து, சினமுடன் எல்லாரிடமிருந்தும் பிடுங்கினாள். பின் அந்த பையை எடுத்தவள்…அவன் கீதாஞ்சலிக்காக கொடுத்த அனைத்தையும் ஓரிடத்தில் மொத்தமாக வைத்து விட்டு, அந்த பையில் அவள் அவனுக்காக வாங்கிய பொருட்களான, வாட்ச்..ப்ளாக் பிரேஸ்லெட்டும் மற்றும் சில பொருட்களையும், கார்டுகளையும் எடுத்து பையில் போட்டு, “இது என்னிது. அடுத்தவங்களுக்கு கொடுக்க முடியாது” என பரணியை பார்த்து விட்டு நகர்ந்தாள்.

ஏய் குட்டி, நில்லு..பரணி அழைக்க, பையை கீழே போட்டு அவளிடம் வந்து, உன்னிடம் எத்தனை முறை இப்படி அழைக்காதேன்னு சொல்லி இருக்கேன்..

எனக்கு அப்படி தான அழைக்க பிடிச்சிருக்கு..

அவனை முறைத்து, “இங்க என்ன பண்ற? தனியாவா வந்த?”

தாத்தாவோட வந்தேன்.

“நீ முதல்லவே சொல்லி இருக்கலாம்ல்ல?”

“என்ன சொல்லணும்?” என அவள் விக்ரமை பார்த்தான். அவன் வீட்டினுள் காலை கூட எடுத்து வைக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

தாத்தாவால தான் நீ ஆசிரமத்தில் வளர்ந்தன்னு…

“இல்லையே! நான் மோனூவுடன் தான் வளர்ந்தேன்” என அனைவரையும் பார்த்தாள்.

பொய் சொல்லாத. நீ இவங்களிடம் பேசிய எல்லாவற்றையும் கேட்டுட்டேன். அதுக்கு முன்னாடியே உன்னை பற்றி எனக்கு தெரிந்து விட்டது.

“மாமா” என அவனை பார்த்தாள்.

தாத்தா வந்தாருன்னு சொன்ன? என அவள் அவ்விடத்தை பார்த்துக் கொண்டே கேட்டாள். நீ பேசியதை கேட்டு, நீ பட்ட எல்லாத்துக்கும் தான் தான் காரணம்ன்னு அழுது கொண்டே கிளம்பீட்டார்.

கிளம்பீட்டார்ன்னு சாதாரணமா சொல்ற?

அதுக்கு அவர் பின்னாடியே ஓட சொல்றீயா? அவர் சொன்னது மெய் தான? அவர் தான் உன் வாழ்க்கை திசை மாறிப் போனதுக்கு காரணம்..

“லூசு மாமா…அவரை பார்க்க போகாமல் இங்க என்ன வெட்டி பேச்சு பேசிட்டு இருக்க?” என அவனை திட்டி விட்டு நகர, அவள் கையை பிடித்த பரணி, “உனக்கு கஷ்டமா இல்லையா? யாரிடமும் சொல்லாமல் எப்படி உன்னால சிரித்து பேச முடிந்தது?”

“அய்யோ, கையை விடு. அவருக்கு ஏதும் ஆகிடாமல்” என கீர்த்தனா சொல்ல, உன்னை எப்படி அழைக்கிறதுன்னு தெரியல. ஆனால் உன் இடத்தில் நான் இருந்தாலும் உன்னை போல் தான் நடந்திருப்பேன் என ரம்யா அவளருகே வந்தாள்.

சுவாதி, நீ பொண்ணு தான..இல்லை மரமா? கேட்டாள் சுவாதி.

“யாரும் என்னை பத்தி கவலைப்பட வேண்டாம். என்னை தனியே விட்ருங்க” என கத்தி விட்டு, “அண்ணா..தாத்தா” என அழுவது போல் கீர்த்தனா முகத்தை வைத்தாள். பரணியோ, என்னமோ தெரியல மானூ. உன்னோட கையை விட மனசே வர மாட்டேங்குது..

டேய், அரமெண்டல் தாத்தாவை நினைச்சு நான் பயந்துட்டு இருக்கேன். சினிமா டயலாக் பேசுற நேரமா? என அவன் கையை உதறி விட்டு வெளியே வந்தாள்.

சிம்மா அவளிடம், “வா..இங்க தான் இருக்காரு” என ஒரு தெரு தள்ளி அவளை அழைத்து சென்றான்.

தாத்தா ஓரிடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். போகிற, வருகிறவர்களெல்லாம் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றனர்.

அதை பார்த்து அவரிடம் ஓடி வந்து, “தாத்தா..என்ன பண்ணீட்டு இருக்கீங்க? எல்லாரும் வேடிக்கை பார்க்குறாங்க” என்று அவரை பார்க்க, அவர் அவள் காலை பிடித்தார்.

“தாத்தா” அதிர்ந்து விலகினாள்.

“மன்னிச்சிரும்மா. நான் அன்று என் மகளிடமிருந்து பிரிக்காமல் இருந்திருந்தால் நீ சந்தோசமா இருந்திருப்ப? உன் வாழ்க்கையையே நான் அழிச்சிட்டேன்” அவர் அழுதார்.

அவள் அழுது கொண்டு, எழுந்திருங்க.உங்க குடும்பம் உங்களை தேடுவாங்க. மாமாவிடம் உங்களை விட்டுடுறேன்.

நீ எங்களோட வந்திரும்மா?

“இல்ல தாத்தா, அம்மாவை தவறாக பேசிய இடத்தில் நான் இருக்க மாட்டேன்” என உறுதியாக சொல்லி விட்டு மீண்டும் சேகர் தாத்தா வீட்டிற்கே வந்தாள்.

“நீ யாராக இருந்தாலும் எனக்கு மானூ தான்” என்றான் பரணி.

சரி..வச்சுக்கோ..முதல்ல கிளம்பு. உன்னோட அம்மா என்னோட உன்னை பார்த்தாங்க குலையில்லாமல் சாமி ஆடுவாங்க. இந்த ஆட்டைக்கு நான் வரலை.

தாத்தா, நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். நான் ஆசிரமத்தில் இருந்தாலும் அநாதையாக நான் எண்ணியதேயில்லை. எனக்கு அண்ணா இருக்கான். நீங்க நிம்மதியா இருங்க என அவள் விக்ரமை பார்க்க, வாங்க உங்களை நான் டிராப் செய்கிறேன் என அழைத்து சென்றான்.

எல்லாரையும் பார்த்து விட்டு அவள் பையை எடுத்து கிளம்ப, “ஒரு நிமிசம்.. காதல் பத்தி நீ என்ன நினைக்கிற?” சுவாதி கேட்டாள்.

“ராமன் இருக்கும் இடம் தான சீதைக்கு அயோத்தி. ராமன் தன் மனைவியை சந்தேகித்தாலும் அவள் காதல் ராமன் தான? சரி தான பாட்டி?” என பெரியவர்கள் இருவரையும் பார்த்தாள். பாட்டியும் தாத்தாவும் புன்னகையுடன் அவளை பார்த்தனர்.

விகாஸ் அதிர்ச்சியுடன் அவளை பார்த்து, “இதுவும் நீ பேசியது தானா?” எனக் கேட்டான்.

அவனை பார்த்து விட்டு ஏதும் கூறாமல் கீதாஞ்சலி புகைப்படத்தையும் எல்லாரையும் பார்த்து விட்டு சென்றாள்.

விகாஸ் மனமுடைந்து அமர்ந்தான். எல்லாரும் அவனுக்கு ஆறுதலாக அமர்ந்தனர்.

கொஞ்ச நாளைக்கு எதற்காகவும் மானூ குட்டியை தொந்தரவு செய்யாதீங்க.  வேலையை பாருங்க தாத்தா கூறினான்.

“அப்பா, நம்மை சின்னப் பொண்ணு நடித்து ஏமாத்தி இருக்கா? உங்களுக்கு கோபம் வரலையா?” ரகசியன் தந்தை கேட்டார்.

“நம்மை ஏமாற்ற மட்டும் தான் செஞ்சிருக்கா? அவ மானூ குட்டிக்கு துரோகம் செய்திருக்கா. இருந்தும் அந்த பொண்ணு இன்னும் இவளை அக்கான்னு உரிமையா பேசுறா. ஏமாந்த நம் மீது தான் தவறு” என்று விகாஸை பார்த்தாள்.

தாத்தா, என்னால நம்பவே முடியல. மானூ எப்படி இப்படி பொறுமையா இருந்தா..ச்சே..இவளுக்காக நாம எப்படி துடிச்சு போயிட்டோம் சுருதி முகத்தை சுளித்து பேசினாள்.

தாத்தா கீதாஞ்சலி புகைப்படத்தை பார்த்து, இதில் முகம் சுளிக்க ஒன்றுமில்லை சுருதிம்மா .உலகத்திலே கொடுமையான விசயம் நிறைய இருக்கும்மா. அது இந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் நடந்திருக்கு.

கீதாஞ்சலி….ஆசைப்பட்ட வாழ்க்கைக்காக அடுத்தவர் அடையாளத்துடன் வாழ்ந்திருக்கா. அது சாதாரணமில்லை. இருவரும் சிறுவயதிலிருந்து பழகி இருந்திருக்காங்க. அவளுக்கும் குற்றவுணர்வு இருந்திருக்கும். அவள் அவளாக வாழாமல் குடும்பத்துடன் வாழணும்ன்னு தான் இவ்வளவு செய்திருக்கா. இதுக்கு காரணம் அவளை தனியே விட்ட அவளது பெற்றோர்கள்.

அடுத்தது மானசாவாக இருக்கும் கீர்த்தனா. சிறுவயதிலிருந்து அண்ணன் என்ற உறவில் இருந்த ஒருவனுடனான மகிழ்ச்சி கூட முழுதாக கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் தன் உறவை, அக்காவாக எண்ணிய கீதாஞ்சலிக்காக விட்டு விலகி இருந்திருக்காள். எல்லாவற்றையும் அண்ணாவையும் விட்டு கொடுத்த அந்த கீர்த்தனா தான் விரும்பியவனை அக்கா மீதுள்ள பாசத்தில் மொத்தமாக தெரிந்தே விட்டு கொடுத்திருக்காள்.

உன்னால முடியுமா சுருதிம்மா, “மகிழனிடம் சுவாதி கீதா போல் நடந்திருந்தால் மானூ போல பொறுத்து இருந்திருப்பாயா?”

“தனக்கென குடும்பமென உருவாக்க, நீ கீதா போல நடந்திருக்க மாட்டாயா?” எனக் கேட்டார்.

என்னால மகிழை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. அவர் என்னை காதலிக்காமல் இருந்தால் கூட என் காதலையும் கூறி சுவாதி காதலையும் கூறி, அவனை முடிவெடுக்க விட்டிருப்பேன்.

அப்புறம் கீதா பற்றி கேட்டீங்களே! தனக்காக அவள் அண்ணனை விட்டுக் கொடுத்தவளுக்காக அவள் காதலை கொடுத்திருப்பேன் என தெளிவாக பதிலளித்தாள்.

“என்ன இருந்தாலும் கீது, மானூ இருவர் மீதும் விக்ரம் அண்ணா மீதும் தப்பு இருக்கு” என்றாள் ரம்யா.

சிரித்த தாத்தா..நீ விக்ரம் மாப்பிள்ள இடத்துல்ல இருந்தா..யாருமில்லாமல் சொந்தங்களுடன் வாழ துடிக்கும் பொண்ணு சாகட்டும்ன்னு விட்ருவியா?

ரம்யா சிந்தனையில் ஆழ்ந்தாள்.

ஆமா..நாம ஏமாற மட்டும் தான் செய்தோம். ஆனால் விக்ரம் மச்சான் நிலைமை ரொம்ப கஷ்டம். மானூவுக்காக கீதாவையும் விட முடியாமல், கீதாவுக்காக மானூவையும் விட முடியாமல் கஷ்டப்பட்டிருக்கார் ராஜா வருத்தமாக சொன்னான்.

ம்ம்..சரி தான். மாப்பிள்ள செய்தது தவறாக எனக்கு தெரியல என விகாஸ் தந்தை மனைவியை ஏறிட்டார்.

“அதான் மாம்ஸ், அவளிடம் அதிகம் ஒட்டலையா?” விகாஸ் கேட்க, “ஒட்டலையா?” அவன் அம்மா கேட்டார்.

ஆமாம்மா, அவளிடம் பாசமாக அரவணைப்பார் தவிர மானசாவிற்கும் அவருக்கும் இடையே இருக்கும் நெருக்கம், உரிமை இவளிடம் இருக்காது என்றான் விகாஸ்.

“தாத்தா” என ரம்யா விழித்துக் கொண்டு, “இந்த கீதாஞ்சலி இறந்த போது மானூ அங்கே தான் இருந்திருப்பாளோ? அவள் அப்படி தான சொன்னா..வீ..உனக்கு நினைவிருக்கா? நீ தான் கீதாஞ்சலியை மடியில் போட்டிருந்த? ஏதும் வித்தியாசம் தெரிந்ததா? அவள் சொன்னாளே கீதாவை பற்றி ஏதும் தெரியக் கூடாதுன்னு சொன்னது ஏதோ…நான்கு பிராமிஸ்?”

“ஆமா, சாகும் போது கூட அவகிட்ட பிராமிஸ் வாங்கி இருக்கா பாரு” சுவாதி முகம் கடுப்பில் சுருங்கியது. தாத்தா அவள் நிலை என்னவாக இருந்தாலும் அடுத்தவங்க வாழ்க்கையை பாழாக்குவது தவறு தானே!

அவளுக்கு அது சரியா இருந்திருக்கு சுவாம்மா. எல்லார் எண்ணமும் மாறுபடுமே!

சுவாதிக்கோ முகம் கோபத்தில் சிவந்தது. அவள் வாழ்க்கையையும் பாழாக்கி அண்ணா, மானூ வாழ்க்கையையும் பாழாக்கிட்டு போயிட்டா என கோபத்தில் பொரிந்து தள்ளினாள்.

“அன்னிக்கு என்னமோ எகிறிட்டு வந்தீங்க சார்? இப்ப என்ன அமைதியா இருக்கீங்க?” ரசிகா விகாஸிடம் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள்.

“ரசிம்மா, உனக்கு முன்பே தெரியுமா?”

இல்லத்தை, எனக்கு மானூவை தெரியும். அண்ணா ஆசிரமத்திலிருந்து அவளையும் காப்பாற்றி இருக்காங்கன்னு தெரியும். ஆனால் நடந்த விசயத்தில் தான் எனக்கு சந்தேகம் வந்தது. அவளை இங்கே ரம்யா திருமணத்தில் உறுதி செய்து கொண்டேன்.

எல்லாரும் கீதாவை மறந்துட்டு உங்க வாழ்க்கையை பார்ப்பது தான் நல்லது ரசிகா சொன்னாள்.

மிருளாலினி வருத்தமுடன் அமர்ந்தாள்.

“வீ, நீ மானூவை ட்ரை பண்ணேன். அவள் உன்னை காதலிக்கிறால்ல?” ராஜா கேட்டான்.

விகாஸ் அவனை முறைக்க, சுருதிக்கும் இது சரியாகப்பட்டது. இவனிடம் போய் மாமா இப்படி கேட்குதே! என்று எண்ணியவள்..

“மாமா என்ன சொல்ற? வீ மாமாவுக்கெல்லாம் மானூ செட் ஆக மாட்டாள்” என அவன் ஈகோவை தூண்டி விட்டு, “அவளுக்கு பரணி தான் சரியா இருப்பான்..பார்த்தேல்ல என்னவொரு அக்கறை? க்யூட்ல்ல..” மோனூவை என எண்ணி மானூவை காதலித்தவனுக்கு இவளை பற்றி தெரியாமல் இருக்காது. இந்த சிரமத்திலும் அவளை பார்க்க வந்து விட்டான். அவன் தான் சரியாக இருப்பான்.. வேண்டுமென்றே நடித்தாள்.

ரசிகா அவள் எண்ணத்தை புரிந்து, “ஆமா சுருதி” சரியா சொன்ன. அவளுக்காக எதுவும் செய்வான். விக்ரம் அண்ணாவுக்கு தான் அவன் குடும்பத்தால் அவனை பிடிக்காது. ஆனால் இப்ப செட் ஆகும். அதுவும் விக்ரம் அண்ணா குணத்துக்கும் அவனுக்கும் சூப்பராக ஒத்துப் போகும் என்ற ரசிகா விகாஸை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு..

“நீயே பாரு. இருவரும் மாமன் மச்சானாக கட்டிக்கப் போறானுக” என தூண்டி விட்டாள். விகாஸ் சினமுடன் அவளை முறைத்து விட்டு உள்ளே சென்றான்.

பாட்டியும் தாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமுடன் புன்னகைத்துக் கொண்டனர்.

“என்ன சுவா? அமைதியா இருக்க?”

எனக்கு அண்ணா விருப்பம் தான் முக்கியம். நீங்க மானூவை மீட் பண்ணப் போனால் என்னையும் அழைச்சிட்டு போங்க. எனக்கு அவள் மீது கோபமில்லை என அவள் அன்னையை பார்த்தாள்.

விகாஸ் அம்மா சிந்தனையுடன் தன் மகன் சென்ற அறையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மாமா, உன்னோட பப்ளிம்மா கிஃப்ட்? என சுருதி வேண்டுமென்றே சொல்ல, “சினமுடம் அப்படி எவளையும் எனக்கு தெரியாது. எல்லாத்தையும் குப்பையில போடு” கத்தினான்.

“சும்மா இருடி” என சுவாதி அவளை அடக்கி விட்டு, அண்ணா கீர்த்தனா சாகலை. கீதாஞ்சலி தான் செத்துருக்கா. அவள் குணமே நம்மிடம் நடந்து கொண்டது இல்லை.

“நீ கீர்த்தனா என்று நடித்த கீதாஞ்சலி அழகுக்காக காதலித்தாயா? அவளின் அமைதியான குணத்திற்காக காதலித்தாயா?” எனக் கேட்டாள்.

“புடிச்சா பாரு பாயிண்ட” என ராஜா சொல்ல, விகாஸ் சிந்தனையும் பழைய நினைவுக்குள் சென்று.. அழகா..அழகுக்காக காதலித்து இருந்தால் இவளை விட அழகான பொண்ணுங்க நிறைய பேரை பார்த்திருக்கேன். அவளது குணம் தான் என்னை ஈர்த்திருக்கும்ன்னு நினைக்கிறேன்.

ம்ம்..புரியுது. பட் அந்த நீ காதலித்த குணத்தில் வளர்ந்தவள் தான மானூ. அவளை உனக்கு பிடிக்கலையா? அவளை பற்றி என்ன நினைக்கிற?

“சுவா, நீயுமா?”

நான் கேட்க தான் செய்தேன். உன் வாழ்க்கை உன் கையில். முன்பு போல சிந்திக்காமல் எதையும் செஞ்சிறாத “பார்த்து” என சொல்லி விட்டு சென்றாள். அவன் சிந்தனையுடன் கண்ணீருடன் படுத்தான். எல்லாரும் அவ்விடம் விட்டு அகன்றனர்.

விக்ரமும் கீர்த்தனாவும் நேராக விக்ரம் குடியிருப்பிற்குள் சென்றனர். சென்றவுடனே அறைக்கு சென்று பொத்தென படுக்கையில் விழுந்தாள் கீர்த்தனா.

“பவர், சாப்பிட்டு படுத்துக்கோ” விக்ரம் சொல்ல, “நீ நார்மலா இருக்கியா அண்ணா?”

ம்ம்..அதான் எனக்கு நீ இருக்கேல்ல.

நான் இருக்கேன். நான் உன்னை பத்தி கேட்டேன்.

“பொத்து பொத்துன்னு விழாத. ஆப்ரேசன் செஞ்சிருக்கு. மறந்துறாத” விக்ரம் கண்டிக்க, “எதுக்கு பேச்ச மாத்துற?”

“வேண்டாம் பவர்” விக்ரம் கண்கலங்கினான்.

கீர்த்தனா பயங்கரமாக சிரித்தாள். தலையணையை விக்ரம் அவள் மீது போட, “அண்ணா..அழுதுறாத..” எழுந்து படுக்கையில் அமர்ந்து, அண்ணிக்கு நேரம் கொடு. ஆன்ட்டி சொன்னாலும் கேட்க மாட்டாங்க. உன்னிடம் ஓடி வந்திருவாங்க என சிரித்தாள்.

“வருவாளா பவர்?” சோகமாக அவன் கேட்க, “மூஞ்சிய அப்படி வைக்காத.. சிரிப்பை அடக்க முடியலடா” என வயிற்றை பிடித்தாள்.

சட்டென முகத்தை மாற்றிய விக்ரம், “அதிகமாக சிரிக்காத..அழாத.. கவலைப்படாத..நார்மலா இருக்கணும்” என டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க.

“அதுக்கு, நான் சிரிக்கவே கூடாதா?” பாவமாக கேட்டாள்.

நீ சந்தோசமா இருக்கணும்ன்னு தான் உன்னை தனியே அழைச்சிட்டு வந்திருக்கேன். அம்மாகிட்ட..தயங்காம அம்மான்னு பேசு..

“எனக்கு பயமா இருக்கு அண்ணா” என அவள் கண்கலங்க, அவளருகே அமர்ந்தான்.

அவன் மடியில் படுத்துக் கொண்ட கீர்த்தனா, “எனக்கு பிடிச்ச யாருமே கூடவே இருக்க மாட்டிங்கிறாங்க” என அவள் கண்ணீர் அவன் மீது படவும் துடித்துப் போனான்.

யார் சொன்னா? உன்னை பார்த்த பின் தான் எனக்கு என் வாழ்க்கை தொடங்கியதுடா. நீ என்னோட செல்லம்டா. உன்னை தனியே விட்டு இருந்ததே இல்லை.

சாரிடா..நீ என்னோட பவர், எனர்ஜி..உன்னை விட்டு நான் போகலைல்ல.. இது அவங்க விதி. அதை மாற்ற நம்மால முடியல. அவ்வளவு தான். மோனூவை காப்பாற்றலைன்னு கோபமா இருக்கியா?

ம்ம்..இருந்தது. ஆனால் நீயும் மனுசன் தான. கீதுவுக்காக தான..விடு..என அவள் சொல்ல, ம்ம்..எனக்கு அவள் வலியில் கதறிய கதறல் இன்னும் கேட்குதும்மா.. அன்றிலிருந்து சரியான தூக்கமேயில்லை.

“அண்ணா, அண்ணியிடம் ஏன் அப்படி நடந்துக்கிட்ட?”

உண்மை தெரிந்தால் அவளும், அவளோட குடும்பமும் என்னை விட்ருவாங்கன்னு தான்..

அண்ணா..அண்ணி அப்படியெல்லாம் இல்லை.

ம்ம்..ஆனால் ஆன்ட்டி, உனக்கு அவங்கள பத்தி தெரியும் தான? விக்ரம் கேட்டான்.

உங்க காதலுக்கு அவங்க ஓ.கே சொன்னதே பெருசுதான். அண்ணி மட்டுமல்ல..ஆன்ட்டி புரிஞ்சுப்பாங்க. கீது சொன்ன மாதிரி பெரிய டெரர்ல்லாம் இல்லை. அவங்க பாசமா இருந்தாலும் அதிகமாக தான் இருக்காங்க.. ஒத்துப்பாங்க அண்ணா..

ம்ம்..இனி என்னிடம் சொல்லாமல் நீ எங்கும் போகக் கூடாது. என்ன செஞ்சு வச்சிருக்க எனக்கே உதறுது..

கீர்த்தனா புன்னகைத்தாள்.

“சிரிக்காத, சாப்பாடு வாங்கி வாரேன்” என அவன் செல்ல, வீட்டினுள் வந்தார் அன்னம்.