“மிஸ் மம்தா… அதான் நான் வந்துட்டேன்ல நீங்க கிளம்புங்க”
விக்ரம் மயங்கி விழுந்ததும் மம்தா தான் மருத்துவமனையில் அனுமதித்திருந்தாள். விசயமறிந்து ஓடோடி வந்த ரகுராம் அவளை அங்கிருந்து அனுப்ப முயல, “நான் செல்ல மாட்டேன். விக்ரம் கூடத்தான் இருப்பேன்” என்று அடம்பிடிக்கலானாள்.
ரகுராம் தன்மையாக சொல்லிப் பார்த்தும் அகலாதவளை மிரட்டலானான். “விக்ரமோட அப்பா வந்துகிட்டு இருக்காரு. அவர் மட்டும் உன்ன பார்த்தாரு, உன் கேரியர் காலியாகும். ஏற்கனவே நீ இவனுக்கு தொல்லை கொடுக்கிறதா அவர் காதுக்கு போய் உன் கான்ட்ராக்ட்ட கேன்சல் பண்ண சொன்னாரு. நான் தான் பேசி சரிக்கட்டினேன். உனக்கு உன் கேரியரை விட விக்ரம் தான் முக்கியம் என்றா இரு. இல்லையா போய்கிட்டே இரு”
“இல்ல என்னால எந்தப் பிரச்சினையும் வேணாம். நான் கிளம்புறேன்” என்றவள் விறுவிறுவென இடத்தை காலி செய்தாள்.
தனக்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக, தன்னால் பிரச்சினை ஏற்படாது என்று பேசிவிட்டு செல்பவளை முறைக்கலானான் ரகுராம்.
படப்பிடிப்புக்கு வந்த முதல் நாள் ரகுராமின் அழகை பார்த்து அவன் பின்னால் சுற்றிய மம்தா, அழகோடு, பணமும் சேர்ந்திருக்கும் விக்ரமை பார்த்ததும் அவன் பின்னால் அலையலானாள்.
சமூகத்தில் பெயரும், புகழும், பணமும் வேண்டும் என்ற ஒளியை தேடி பறக்கும் விட்டில் பூச்சி மம்தா. விக்ரமை காதலிக்கிறேன் என்று சொன்னாலும், அவனை விட பிரகாசமான ஒளியாக இன்னொருவன் வந்தால் அதை நோக்கி பறக்கும் ரகம். அந்த ஒளி சூரியனை போல் சுட்டெரிக்குமா? நிலவை போல் குளிர வைக்குமா? என்றெல்லாம் யோசிக்க மாட்டாள்.
இந்த துறையில் நடக்கும் அவலங்களை பற்றி அறிவில்லாதவள். அவள் செய்யும் அலப்பறைகளை ரகுராமும், விக்ரமும் நிலவொளியாக முகம் காட்டுவதால் முழு சமூகமே இவர்களை போன்று தான் என்று கணித்து வைத்திருப்பவள் சூரியனிடம் மாட்டிக் கொண்டு அனுபவப்பட்டால் தான் புத்தி தெளியும் போலும்.
“இந்நேரத்துக்கு மிஸ்டர் ஆளவந்தானுக்கு தகவல் போய் சேர்ந்திருக்கும். அவரை வேற பேஸ் பண்ணனும். அவர் கூட சரோஜா தேவி வேற வருவாங்க. அவங்க என்ன அலப்பறை பண்ண போறாங்களோ, அவங்கள வேற சமாளிக்கணும்.
இவங்கள சமாளிக்கிறது விட மோகனாவ சமாளிக்கிறது தான் பெரும் தலைவலி. போன் மேல போன் போட்டுக்கிட்டே இருந்தா, மம்தா இருந்ததனால் எடுக்கல. அதுக்கு வேற திட்டுவா. எடுத்திருந்தது மம்தா வாய்ஸ் கேட்டு அதுக்கு சம்பந்தம், சம்பந்தம் இல்லாம திட்டுவா. வாங்கிக் கட்டிக்கணும்” புலம்பியவாறே அமர்ந்திருந்தான் ரகுராம்.
“எதுக்குடா இப்படி புலம்புற. தலைவலிக்குது” கண் விழித்த விக்ரம் தான் எங்கே இருக்கின்றோம் என்று பார்க்க, உச்சக்கொட்டியவாறே அவனருகில் வந்தான் ரகுராம்.
“என்னாச்சு?” என்று எழுந்தமர முயன்ற விக்ரமை
“என்னாச்சு என்று நீதான் சொல்லணும்” என்றவாறே அமர்த்தினான் ரகுராம்.
என்ன நடந்தது என்று ஞாபகத்தில் வரவே “டேய் பாரதிக்கு கல்யாணம்மாகிருச்சுடா… மூணு வயசுல ஒரு குழந்தை வேற இருக்கு” சொல்லும் பொழுதே தன் இதயம் ஏன் இவ்வளவு கனமாக இருக்கிறதே, கண்களால் பார்த்த பின்னும் தான் உயிரோடு இருப்பது அதிசயம் என்று எண்ணலானான் விக்ரம்.
“அன்னைக்கும் அவனை சம்பந்தப்படுத்தித்தான் நீ அவளை உன் வாழ்க்கைல இருந்து விலக்கி வச்ச. இன்னைக்கும் விதி உன் வாழ்க்கைல இப்படி விளையாடுது” மனதுக்குள்ளேயே நொந்த ரகுராம் “அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு அவ சொன்னாளா?” அமைதியாகத்தான் கேட்டான்.
“நான் தான் பார்த்தேனே….”
“என்னத்த பார்த்தியோ, நீ பாக்குறப்போ மட்டும் தப்பா தெரியுது” தனக்குள் முணுமுணுத்தவன். “கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்று தெரியாதா?”
“இப்போ நீ என்ன சொல்லவர?” கடுப்பானான் விக்ரம்.
“கார்த்திகேயன் அவ அக்கா ஹஸ்பண்ட். அது அவ அக்கா குழந்தை….”
“அக்கா பொண்ணு எதுக்கு இவள அம்மான்னு கூப்பிடனும்? அதுவும் இவ எதுக்கு அவன ஹக் பண்ணனும்?” பொறாமையில் கோபமும் சேர்ந்து கொதிக்கலானான் விக்ரம்.
“பாரதியும் அவ அக்காவும் டுவின்ஸ். சின்ன வயசுல இருந்தே உடம்பு முடியாம இருந்த அவ அக்காவ ஸ்கூல் போறப்போவே கார்த்திகேயன் லவ் பண்ணி கல்யாணமும் பண்ணிகிட்டான். பாரதியும், கார்த்திகேயனும் ப்ரெண்ட்ஸ். அக்கா ஹாஸ்பிடல்ல படுத்தப்படுக்கைல இருக்கா. அம்மா மாதிரியே இருக்குற பாரதிய பார்த்து கொழந்த அம்மான்னு கூப்பிடுறது வாஸ்தவம் தானே”
“ஓஹ்…. ஆமா… உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?” என்ன இவன் என்னை விட பாரதியை அறிந்து வைத்திருக்கின்றானே என்ற பொறாமை தான் விக்ரமுக்குள் எரிந்தது.
“எனக்கு எப்பவோ தெரியும்டா… மடையா” உள்ளுக்குள் விக்ரமை திட்டினாலும், “அவளை வேலைக்கு சேர்க்க சொன்னதே நான்தான். அவளை பத்தி தேடி பார்காமலையா சேர்த்தேன்” சமாளித்தான்.
பாரதியை பற்றி தனக்கு எதுவுமே தெரியாதே. தான் ஏன் அவளை பற்றி எதையும் அறிந்துகொள்ள முயலவில்லை என்று சோகமாக யோசித்த விக்ரமுக்கு, அவளை பார்த்தாலே தான் தன்னையே மறந்து விடுவதை உணரலானான்.
என் இதயத்தை
என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து
தொலைத்துவிட்டேன்
உன் விழியினில் உன்
விழியினில் அதனை
இப்போது கண்டு பிடித்து
விட்டேன் இதுவரை
எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன்
புன்னகையில் வாழ்கிறேன்
நான் உன் மூச்சிலே
முன் பனியா
முதல் மழையா என்
மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
ஹோ புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே
“இப்போ எதுக்கு இங்க வந்து நிக்குறீங்க?” ஆளவந்தான் உள்ளே வந்ததும் எரிந்து விழுந்தான் விக்ரம்.
“அதானே என்ன பார்த்தா மட்டும் முறைப்பாரு. சரோஜா தேவியை காணோமே. வந்திருந்தா நல்ல பைஸ்க்கோப் பார்த்திருக்கலாம்” உள்ளுக்குள் சிரிக்கலானான் ரகுராம்.
விக்ரமோடு ரகுராம் இருப்பது ஆளவந்தானுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சிறைக்கு சென்ற ஆதியப்பன் மாரடைப்பால் சிறையிலையே இறந்து விட, ரகுராமின் பொறுப்புக்களை கைவிடலாமா என்று யோசித்தாலும் மனைவி பேசி விட்டு சென்றது முள்ளாய் குத்தியதால் போனால் போகட்டும் என்று செல்வு செய்ய, தன் மகனின் நண்பனாய் ரகுராம் வந்து நின்றதும் சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்ததுதான் இன்றுவரை தொடர்கிறது.
“நீங்க என்ன டாக்டரா? நான் எப்படி இருக்கேன்னு செக் பண்ண? என்ன பார்க்க வந்த நேரத்துல எத்தனை கோடி உங்களுக்கு நஷ்டமோ? அத சரிக்கட்ட யார் தலையை அடமானம் வைக்கணும் என்று வேற யோசிப்பீங்க. என்னால உங்களுக்கு அந்த சிரமம் வேணாமே”
ரகுராமின் தந்தை ஆதியப்பனை பலியாடாக்கியது போதாதென்று கொஞ்சமும் மனசாட்ச்சியில்லாமல் ரகுராமை வேறு மாட்டிவிடத் துணிந்தாரே என்ற கோபம் விக்ரமுக்குள் இன்னும் இருக்கவே தந்தையை பார்த்தாலே முகம் சுளிப்பவன், இவ்வாறுதான் பேசி வைப்பான்.
“நீதான் இவருக்கு தகவல் சொன்னியா?” என்று ரகுராமை முறைத்தான் விக்ரம்.
ரகுராம் விக்ரமின் நண்பனாக்கி விட்டான் என்றதும் விக்ரம் எந்த தப்பும் பண்ணிடக் கூடாதென்று சொந்தமகனையே வேவு பார்க்க சொன்னவன் ஆளவந்தான்.
மகன் மீது அக்கறை இருப்பது புரிந்தாலும் தன்னை மிரட்டி காரியம் சாதிக்கப் பார்த்தது பிடிக்காமல் ரகுராம் விக்ரமிடம் விஷயத்தை போட்டுடைத்தான். இதனால் இருவரின் நட்பும் பலப்பட்டது மட்டுமல்லாது விக்ரம் ரகுராமின் மேல் திடமான நம்பிக்கையும், அன்பும் வைக்கலானான்.
கல்லூரி வாழ்க்கை முடிந்த கையேடு ஆளவந்தானோடு எந்த கொடுக்கல், வங்களையும் வைத்துக் கொள்ளாதவன் ரகுராம். அப்படியிருக்க நிச்சயமாக ஆளவந்தானுக்கு தன்னை பற்றிய எந்த தகவலும் அவன் மூலம் போய் சேராது என்றறிந்தே நண்பனை சாடினான் விக்ரம்.
“நானா?.. ஆமாம்…. ஆமாம்” ஆளவந்தாரின் கண் மறைவில் ஆள்காட்டிவிரல் கொண்டு தன்னையே காட்டி தலையை மேலும், கீழும் அசைத்து விக்ரமுக்கு பலிப்புக் காட்டலானான் ரகுராம்.
தந்தைக்கு யார் வேவு பார்க்கிறார்கள் என்று விக்ரமுக்கு தெரியாமலில்லை. தான் எந்த தப்பும் செய்யவில்லை. செய்யப் போவதுமில்லை. தன் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருக்கிறார் என்பதற்காக மட்டுமே ஆளவந்தானை கண்டு கொள்ளாமல் விட்டு வைத்திருக்கின்றான்.
“நீங்க என்ன வேவு பாக்குறீங்களா? நீங்க என்னென்ன செய்யிறீங்க என்று எனக்கும் தெரியும்” என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டத்தான் ரகுராம்தான் தகவல் சொல்லியிருப்பானென்று வெறுப்பேத்தலானான்.
“டேய் அண்ணா என்னடா ஆச்சு? எதுக்கு மயங்கி விழுந்த? அண்ணியோட அழகுல மயங்கி விழுந்தியா?” என்றவாறே உள்ளே வந்த மோகனா ஆளவந்தானை பார்த்ததும் அதிர்ந்தவள், அப்படி ஒரு மனிதன் அங்கே இல்லை என்பது போல் “மயங்கி மடில விழுந்தா சரி மாடியிலிருந்து விழுந்தா என்னவாகியிருக்கும்? நீ மயங்கி விழாதபடி உனக்கு நான் பொண்ணு பாக்குறேண்டா” என்று சிரித்தாள்
விக்ரமின் பார்வை பாரதியின் மேல் படர்வதை மோகனாவின் கண்களுக்கு புலப்படத்தான் செய்தது. கூடவே ராகுராம் வேறு பாரதியையும், விக்ரமையும் பார்த்து வைப்பதையும் மோகனா பார்த்து விட,
“என்ன இவன் ரெண்டு பேரையும் தின்கிறது போல பாக்குறான். ஒருவேளை இவனுக்கு டிசைனர் மேல ஒரு கண்ணோ? அண்ணாக்கு புடிச்ச பொண்ணு என்று தெரிஞ்சி பீலிங் ஆப் இந்தியனா மாறிட்டானா?” என்று ரகுராமை கவனிக்கலானாள்.
பாரதி ரகுராமை “ராம்” என்று அழைப்பதையும், விக்ரமை “மிஸ்டர்” என்று அழைப்பதையும் பார்த்து “போரப்போக்கப் பார்த்த இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துடுவாங்க போலயே. இப்படி நடக்கக் கூடாதே” என்று ரகுராமின் மனதில் என்ன இருக்கிறது என்று அறிய முயன்றாள்.
விக்ரம் வீட்டில் இல்லை. ரகுராம் மட்டும் தான் இருக்கின்றான் என்று அறிந்துகொண்டு வீட்டுக்குள் சென்றவள் திரைப்படமொன்றை ஓடவிட்டு பார்கலானாள்.
சத்தம் கேட்டு “விக்ரம் வந்துட்டியா?” என்றவாறே அறையிலிருந்து வெளியே வந்த ரகுராம் “நீ இங்க என்ன பண்ணுற? வீட்டுச் சாவி உன்கிட்ட எப்படி வந்தது” எனக் கேட்டு அலறினான்.
“நீ வீட்டுலதான் இருக்குறியா? இது தெரியாம சிப்ஸ், கூல் ட்ரின்க்ஸ்ஸோட படம் பார்க்க வந்துட்டேன்” நீ இருப்பது எனக்கு சத்தியமாக தெரியாது என்பதை போல் முகபாவனையை கொடுக்கலானாள்.
“அதான் தெரிஞ்சிருச்சே கிளம்பு… கிளம்பு…” அவளை துரத்துவதில்லையே குறியாக நினறான்.
“நீ என்ன தூங்கிகிட்டு இருந்தியா? ஹையோ… சாரி. சரி நீ போய் தூங்கு. நான் நிம்மதியா படத்த பார்த்துட்டு போறேன். இது என்னோட பேவரிட். ஹேய் நாம தியேட்டர் போய் பார்த்தோமே ஞாபகம் இருக்கா?” அறியா பிள்ளை போல் கேட்க,
திரையில் ஓடிய படத்தின் பெயரை பார்த்ததும் ஓடிவந்த ரகுராம் மோகனாவின் அருகில் அமர்ந்தவாறு படத்தில் மூழ்கினான்.
படத்தை பார்த்தவாறு மோகனா கொண்டு வந்திருந்த சிப்ஸ்ஸையும், கூல் ட்ரிங்க்ஸையும் காலி செய்யலானான்.
அவனுக்கு பிடித்தமான படத்தை போட்டால் அவன் அவனையே மறந்து விடுவானென்று அறிந்தே கூல் ட்ரின்க்ஸில் மதுபானத்தை கலந்து கொண்டுவந்திருந்தாள்.
அது தெரியாமல் கூல் ட்ரிங்க்ஸை அருந்தி விட்டு போதையில் ரகுராம் உளற ஆரம்பிக்க, பாரதிக்கும் அவனுக்குமிடையில் என்ன உறவு என்று விசாரிக்கலானாள் மோகனா.
அனைத்தையும் கேட்ட மோகனா சோகத்தை மறைத்துக் கொண்டு “ஓஹ்… நீ ப்ரோக்கரா?” என்று சிரித்தாள்.
அவனை இழுக்காத குறையாக தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தியவள் மூச்சு வாங்கியவாறே நிமிர, “என்ன நடக்குது இங்க?” வீட்டுக்குள் வந்த விக்ரம் தங்கையிடம் புரியாமல் கேட்டான்.
“உன் ப்ரெண்ட குடிக்க வச்சி உண்மைய கறந்துட்டேன்”
“எந்த உண்மைய?” என்ன சொல்கிறாள் இவள் என்று தங்கையை நோக்கினான்.
“உனக்கும், பாரதிக்கும் நடுவுல என்ன நடக்குது என்று தெரிஞ்சிகிட்டேன்”
“அதுக்கு எதுக்கு அவனை குடிச்ச வச்ச? அவன் பியர் அடிச்சாவே குப்புற கவுந்து விழுவான். என்கிட்ட கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பேன்”
“அது எனக்குத் தெரியாதா? இவனுக்கும், அண்ணிக்கும் என்ன உறவு என்று தெரிஞ்சிக்கத்தானே குடிக்க வச்சேன். அத சொன்னா, நீ இவன எதுக்கு சந்தேகப்படுற என்று கேட்டிருக்க மாட்டியா? அப்பொறம் என் லவ் மேட்டர் லீக் ஆகிடுமே” மனதுக்குள்ளேயே பேசிக் கொண்டவள் “சரி நீயும் சொல்லு கேப்போம்” என்று விக்ரமை இழுத்துச் சென்று அமர்ந்து கொண்டாள்.
கனவில் வந்த பாரதியின் மேல் காதல் கொண்டது முதல், பாரதி நேரில் வந்து அவனை இம்சை செய்வதுவரை எல்லாவற்றையும் கூறி முடித்தான் விக்ரம்.
ரகுராம் சொன்னவைகள்தான். ஆனாலும் பொறுமையாக கேட்டிருந்தாள் மோகனா.
பாரதியை மோகனா அண்ணனின் கம்பனியில் வேலை செய்யும் ஸ்டாப்பாக மட்டும் பார்த்தனால் அவளிடம் நெருங்கிப் பழக எண்ணவில்லை. உண்மையை அறிந்துக் கொண்ட நொடியே “அண்ணி” என்று அழைத்திருந்தாள்.
தன்னால் என்ன உதவி செய்ய முடியும் என்று மோகனா யோசிக்க, “உதவி செய்யிறேன்னு நீ எந்த உபத்திரமும் செய்யாமலிருந்தாலே போதும்” என்று விக்ரம் மோகனாவை சீண்டினான்.
“வேணாட்டி போ…” பொய்யாக முறைத்தவள் ரகுராமோடு மேற்கொண்டு பேச வேண்டும் என்றெண்ணியவாறு அண்ணனிடமிருந்து விடைபெறறாள்.
அதற்குள் விக்ரம் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவனை பார்க்க வந்த மோகனா பேச்சு வாக்கில் “அண்ணி” என்றவள் தந்தையை பார்த்ததும் பேச்சை மாற்றினாள்.
இன்னும் அண்ணன் காதலை சொல்லவே இல்லை. இவருக்கு தெரிந்தால் பாரதிக்கு என்னவாகுமோ என்ற அச்சம்தான்.
அது விக்ரமுக்கு புரிய மேற்கொண்டு வேலையை பற்றி மட்டும் பேச, தன்னை ஒதுக்குகிறார்கள் என்று புரிந்ததும் ஆளவந்தான் “நான் கிளம்புறேன்” என்று கோபமாக வெளியேறினான்.
ஆளவந்தானை பார்க்கையில் ரகுராமுக்கு பாவமாக இருந்தது. தன் தந்தையை சிறைக்கு அனுப்பியதாக ஆளவந்தானின் மேல் கோபம் கொண்டாலும், பழிதீர்க்க ரகுராம் எண்ணவில்லை. தந்தைக்கும், ஆளவந்தானுக்கும் இடையில் நடந்த ஒப்பந்தத்தின் பெயரில் தானே தன்னால் படிக்க முடிந்தது.
ஆளவந்தான் தன்னுடைய தந்தையை பலவந்தமாக சிறைக்கு அனுப்பவில்லையே. தன்னுடைய தந்தை அன்று சிறைக்கு செல்ல ஒப்புக்கொள்ளவில்லையாயின் சிறையில் அவர் இறந்திருக்கவும் மாட்டார். தன்னுடைய தந்தையின் நிலைமைக்கு அவர் மட்டும் தான் காரணம் என்பது தான் ரகுராமன் கருத்து.
பெற்றபிள்ளைகளே ஒதுக்குவதால் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட ஆளவந்தானை பார்க்கையில் ரகுராமுக்கு பரிதாம் தான் வரும். பழிதீர்க்க எண்ணவில்லை.
“எதுக்குடா உங்கப்பாவை இப்படி இம்ச பண்ணுற?”
“எதுக்குன்னு உனக்குத் தெரியாதா?” விக்ரம் முறைக்க,
“காலம் போன காலத்துல தேவைதான் அவருக்கு” என்றாள் மோகனா.
இவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லையென்று அமைதியானான் ரகுராம்.
கதவை திறந்துக் கொண்டு புயல் போல் உள்ளே நுழைந்த பாரதி வேக எட்டெடுத்து வைத்து விக்ரமை நெருங்கி கண்களில் கண்ணீரோடு “என்னாச்சு?” என்றவாறே விக்ரமின் கன்னங்களை தடவலானாள்.
அதிர்ச்சியில் ஆச்சரியமாக அவளை பார்த்த விக்ரமுக்கு பேச்சே வரவில்லை.
“ஒண்ணுமில்ல, வர்க் டென்ஷன்” உடனடியாக பதில் ரகுராமிடமிருந்து வந்தது.
“உடம்ப பார்த்துக்க மாட்டியா? உன் வேலைய பார்க்கத்தானே உன் தங்கச்சி கூடவே வச்சிருக்க. கூட ராம் வேற. அதென்ன உன் கிட்ட கேள்விக்கு கேட்டா ராம் பதில் சொல்லுறான்” விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றான் என்று பாரதிக்கு தகவல் தெரிவித்து தான் மோகனா வந்திருந்தாள்.
பாரதியின் உரிமையான, ஒருமை பேச்சு ரகுராமுக்கும், மோகனாவுக்கும் புதிதல்ல. ரகுராமை கையசைத்து வெளியே செல்லலாமென்ற மோகனா அவனோடு வெளியேறியிருந்தாள்.
தன்னை “மிஸ்டர் விக்ரம்” என்று அழைத்து ஒதுக்கி வைத்தவள் பதட்டத்தோடு உள்ளே வந்ததுமில்லாமல், தன்னை ஒருமையில் பேசியதும் உள்ளம் குளிர்ந்த விக்ரம் அவளையே பார்த்திருந்தான்.
“என்ன?…. என்ன பிரச்சினை உனக்கு? பேசு…” விக்ரம் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் என்று அறிந்ததும், பாரதியின் மனம் பதை பதைத்து துடிக்கலானது.
அக்கணம் அவன் அவளை பேசிய வார்த்தைகளும் ஞாபகத்தில் வரவில்லை. அவளுக்கு அவன் மீது இருக்கும் கோபமும் ஞாபகத்தில் வரவில்லை. அவனுக்கு என்னவாயிற்று என்ற அச்சம். எதுவும் ஆகிடக் கூடாதே என்ற வேண்டுதலோடுதான் ஓடோடி வந்திருந்தாள்.
அவனை பார்த்த உடன் அவனை தவிர வேறு சிந்தனை அவளுக்கு எழவே இல்லை. ரகுராமும், மோகனாவும் கண்களில் பட்டாலும், கண்டுகொள்ள மனமில்லை.
“உண்மையிலயே உனக்கு ஒண்ணுமில்லையே” கட்டிலில் அமர்ந்தவாறே அவன் முகம் பார்த்தவள் அவன் அமைதியாக இருக்கவும் அழ ஆரம்பித்தாள்.
பாரதி அழவும் விக்ரமின் மௌனம் உடைந்தது. அவளை அணைத்துக் கொண்டவன் “எனக்கு ஒண்ணுமில்ல” அவளை சமாதானப்படுத்தியவனுக்கு காண்பது கனவா? நனவா? என்று குழப்பமாக இருந்தது.
கனவில் நெருக்கம் காட்டியவள் நேரில் ஒதுக்கம் காட்டவும் அவளை நெருங்க முடியாமல் தவித்ததால், நெருங்கி வந்தவளை விலக விடக் கூடாதென்ற எண்ணம் மட்டும் தான் தோன்றியது. “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” சட்டென்று கேட்டு விட்டான்.
அதிர்ந்து விழித்த பாரதி அவனையே பார்கலானாள்.
அவள் தன்னை ஒதுக்குகிறாள் என்று மறுக்கியவனுக்கு அதிரடியாக அவள் நெருங்கியதும் வேறு வார்த்தை வரவில்லை. அவளை அருகில் நிறுத்த திருமணத்தை தவிர வேறு வழியில்லை என்றறிந்தே கேட்டான்.