மருத்துவமனையில் இருந்து தான் வீடு வந்தும் பாரதி தன்னை வந்து பார்க்கவும் இல்லை. அலைபேசியிலாவது அழைக்கவும் இல்லை என்று நண்பனிடமும் தங்கையிடமும் புலம்பலானான் விக்ரம்.
அண்ணன் கவலை கொள்வதை பார்க்க முடியாமல் பாரதியிடம் சென்று பேசலாம் என்று ரகுராமை நச்சரிக்கலானாள் மோகனா.
“என்னென்னு போய் பேசுவ? உனக்கு பாரதிய பத்தி என்ன தெரியும்? உங்கண்ணன் பத்தி உண்மையை சொன்னா கண்டிப்பா அவ கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பா. ஒருநாள் இல்ல ஒருநாள் உங்கண்ணனுக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்தா, அவன் திரும்ப பாரதிய காயப்படுத்த மாட்டான் என்று என்ன நிச்சயம்?”
இன்று பாரதியிடம் தன் காதலை சொல்லப் போகிறேன் என்ற விக்ரம் அன்றிரவு நன்றாக குடித்து விட்டு பாரதியை திட்டித் தீர்க்கலானான்.
என்ன நடந்தது என்று கேட்டால் விக்ரம் பாரதியை என்னெவெல்லாம் பேசினான் என்று கூறுகின்றானே ஒழிய. ஏன் பேசினானென்று சொல்லவே இல்லை. அதன்பின் சொல்லும் நிலையிலும் அவன் இல்லை.
எல்லாம் மறந்தாலும் இன்றுவரை பாரதியை மட்டும் மறக்காமல் காதல் கொண்டிருப்பதன் ரகசியம் தான் என்னவென்று ரகுராமால் புரிந்துகொள்ள முடியவில்லை.
விக்ரம் எல்லாம் மறந்தாலும் பாரதி எதையும் மறக்கவில்லையே. அவளிடம் விக்ரமின் நிலையை கூறினால் அவனை கிண்டல் செய்தாலும் பிரச்சினை. அவன் முன் அழுது கரைந்தாலும் பிரச்சினை. நடந்தவைகள் அவனுக்கு தானாக ஞாபகம் வந்தால் பிரச்சினையில்லை. யாராவது சொன்னாலோ, ஞாபகப்படுத்த முயன்றால் தான் பிரச்சினை. நடந்தவைகளை அவ்வாறு அவன் மீண்டும் அறிந்துக் கொண்டால் அவன் உயிருக்கே ஆபத்தாகிடும் என்ற நிலையில் பாரதியிடம் உண்மையை கூறி அவளால் எந்த பிரச்சினையும் ஏற்படக் கூடாதே என்று அவளிடம் கூட சொல்ல முடியாமல் தவிக்கின்றான் ரகுராம்.
என்றோ ஒருநாள் விக்ரமின் மூலம் பாரதிக்கு உண்மை தெரிந்து விடும். அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து இருவரையும் சந்திக்க வைத்தான்.
பாரதியின் மேல் விக்ரம் வைத்திருக்கும் உண்மையான காதலால் இருவரும் சந்தித்துக் கொண்டால், மீண்டும் காதல் கொள்வார்கள் என்று தான் நினைத்தது தவறோ என்று எண்ணலானான் ரகுராம்.
விக்ரம் பாரதியின் மேல் வைத்திருக்கும் காதலால் பாராதிக்கு மீண்டும் விக்ரமின் மேல் காதல் வரும். அதன் பின் உண்மையை அறிந்து கொண்டால், புரிந்துக்கொள்வாள் என்று நினைக்க, அவன் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கேட்டும் அவள் பதில் கூறாமல் சென்றதில் அவளுக்கு விக்ரமின் மேல் காதல் இல்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது என்று மோகனாவிடம் புலம்பலானான்.
“உன்ன போல ஒரு பிரெண்டு கிடைக்க, எங்கண்ணன் கொடுத்து வச்சிருக்காண்டா” கிண்டல் செய்தவாறே அவனை சமாதானப்படுத்திய மோகனா “நீ கிடைக்க நானும் கொடுத்து வச்சிருக்கணும்” என்று முணுமுணுக்களானாள்.
{லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது
லேசா} (2)
லேசா லேசா நீண்டகால
உறவிது லேசா
காதல் தேவன்
கோயில் தேடி வருகிறதே
விரைவினிலே கலா் கலா்
கனவுகள் விழிகளிலே
உனக்கெனவே உலகினிலே
பிறந்தவளே
நான் தூங்கி
நாளாச்சு நாள் எல்லாம்
பாழாச்சு கொல்லாமல்
என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை
சிதைக்கிறதே
கண்ணெல்லாம்
கண்ணன் வண்ணம்
தொரிகிறதே விரிகிறதே
தனிமையில் இருக்கையில்
எாரிகிறதே பனி இரவும் அனல்
மழையை பொழிகிறதே
வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல நான்
வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும்
ரத்தம் எனதல்லவா நீ
என்றால் நான் தான் என்று
உறவறிய ஊரறிய
ஒருவாரியில் ஒருவாரின் உயிர்
கரைய உடனடியாய்
உதடுகளால் உயிலெழுது
விக்ரம் பாரதியிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதை மருத்துவமையிலிருந்து வீடு வந்த பார்கவி அறிந்த உடன் கோபத்தில் கொதித்தாலும் முகத்தில் காட்டாது, இன்முகமாக “அப்போ நீ எங்களை விட்டுடு இங்கயே இருக்கலாமென்று முடிவு செஞ்சிட்டியா? கவி தான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவா” என்றாள்.
முகத்தில் சந்தோஷத்தையும், குரலில் சோகத்தையும் காட்டி பார்கவி பேசினாலும், இனி என் குழந்தையின் நிலை என்ன? என்ற சுயலாம் கொட்டிக் கிடந்ததோடு, பாரதியை உணர்ச்சிபூர்வமாக மிரட்ட முயன்றாள்.
“இல்ல அக்கா இந்த ஜென்மத்துல என்னால அவன கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் வேலைய விடலாமென்று இருக்கேன். நாம திரும்ப ஆஸ்திரேலியாவுக்கே போய்டலாம்” என்றாள் பாரதி.
“நல்லா யோசிச்சுதான் முடிவெடுத்தியா?” ஒருதடவைக்கு இரண்டு தடவை கேட்கலானான் கார்த்திகேயன்.
“இவளே சொன்ன பின்னும் இந்த மாமா எதுக்கு இப்படி கேக்குறாரோ” கணவனை முறைக்கக் கூட முடியாமல் பார்த்தாள் பார்கவி.
“சரி உன் இஷ்டம். ஆனா ஆஸ்திரேலியா போன உடன் நீ கல்யாணம் பண்ணிக்கணும்” நான் உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்ற அர்த்தத்தில் கார்த்திகேயன் பேச,
எப்படியாவது தங்கையை கணவனுக்கு கட்டிவைக்க வேண்டும் என்ற சிந்தனையில் “ஆமா… ஆமா… போன உடனே கல்யாணம் பண்ணனும்” என்றாள் பார்கவி.
பாரதியை சம்மதிக்க வைப்பது ஒன்றும் அவளுக்கு சிரமமில்லை. கவியை பற்றி பேசி கொஞ்சம் அழுது, அன்னை தன்னை ஒதுக்கியதையும், தங்கையோடு இருக்க முடியவில்லையே என்று புலம்பி பாசமழையை பொழிந்தால் பாரதி ஒத்துக்கொள்வாள்.
கார்த்திகேயனை சம்மதிக்க வைப்பதுதான் சிரமம். அதையும் பாரதியின் மூலம் சாதித்துக் கொள்ளலாம் என்பது தான் பார்கவியின் எண்ணம். தான் நினைத்தது போல் நடக்கும் என்ற மமதையில் இருந்தாள் பார்கவி.
கம்பனிக்கு வந்த விக்ரமுக்கு பாரதியின் ராஜினாமா கடிதம் தான் கையில் கிடைத்தது.
“ஏன்? நான் என்ன தப்பு பண்ணேன்? கல்யாணம் பண்ணிக்கலாமென்று தானே கேட்டேன். முடியாது என்றா சொல்லிட்டே போய் இருக்கலாமே. ஏன் சொல்லாம போனா? ரெசிக்னேஷன் லெட்டரக் கூட நேரில் வந்து தர மாட்டாளா? என்ன பார்க்க கூடாதபடி நான் என்ன கேட்டுட்டேன்? கண்டிப்பா அவ எனக்கு பதில் சொல்லணும்” என்று ரகுராமிடம் அலைபேசியில் கத்தியவன் பாரதியின் அலைபேசிக்கு அழைக்கலானான்.
விக்ரம் பாரதியிடம் பொறுமையாக பேசுவானோ, கோபப்பட்டு பேசுவானோ, பாரதி கோபப்பட்டு நடந்த அனைத்தையும் கூறிவிட்டால், விக்ரமின் நிலை என்னவாகவும்? அவன் உயிருக்கே ஆபத்தாகி விடாதா? என்று படப்பிடிப்பை கைவிட்டு கம்பனிக்கு விரைந்தான் ரகுராம்.
ரகுராம் வந்து சேரும் பொழுது விக்ரம் கம்பனியிலிருந்து கிளம்பியிருந்தான். எங்கே சென்றிருப்பான் என்று புரியாமல் விக்ரமின் அலைபேசிக்கு அழைத்துக் கொண்டே இருந்தான்.
விக்ரம் வந்தது பாரதியை காணத்தான்.
ஒரு காபி ஷாப்பில் விக்ரம் பாரதிக்காக காத்திருக்க, வேர்க்க, விறுவிறுக்க வந்து சேர்ந்தவளை அமைதியாக வரவேற்றான் விக்ரம்.
வழமைக்கு மாறாக பாரதி சேலையில் வந்ததும் விக்ரமின் புருவங்கள் உயரத்தான் செய்தது. எதோ ஒரு மாற்றம் அவளுக்குள் இருப்பதாக உணர்ந்தாலும், அது என்னவென்று அவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆராயும் மனநிலையிலும் அவனில்லை. வெறிக்க, வெறிக்க அவளையே பார்த்திருந்தான்.
எதிரே அமர்ந்திருப்பவளை கொஞ்சம் உற்று நோக்கியிருந்தால் தன்னவளின் உதட்டோரம் வீற்றிருக்கும் மச்சம் காணாமல் போயிருப்பதை பார்த்து தன் முன்னால் அமர்ந்திருப்பது பாரதியல்ல அவள் சகோதரி என்று கண்டு கொண்டிருப்பான். குழப்பமான மனநிலையில் இருந்தவனின் கண்கள் எதையும் ஆராயவில்லை.
எப்படி ஆரம்பிப்பது என்று தான் இருவரும் யோசித்தார்கள் போலும் சற்று நேரம் மயான அமைதி.
“எதுக்கு என்ன வர சொன்ன? நான் தான் ரெசிக்னேஷன் லெட்டர் கொடுத்துட்டேனே” கடுமையான குரலில் கேட்டாள் பாரதியாக அமர்ந்திருந்த பார்கவி.
“எக்ரிமண்ட் சைன் பண்ணும் பொழுது ஒரு வருஷம் வேலை பார்க்கணும், இடையில வேலைய விட்டு போனா கம்பென்ஸேஷன் கொடுக்கணும் என்று தெரியாதா?” இவனும் கடுமையாகவே கூறினான்.
“மூணு மாசம் என்று தானே பாரதி சொன்னா?” என்று யோசிக்கலானாள் பார்கவி.
விக்ரம் அலைபேசி அழைப்பு விடுக்கும் பொழுது பாரதி குளித்துக் கொண்டிருந்தாள். அலைபேசி திரையில் விக்ரமின் பெயர் மின்னவும் எங்கே அழைப்புமணி பாரதியின் காதில் விழுந்து விடுமோ என்று உடனே எடுத்துப் பேசலானாள் பார்கவி.
உடனடியாக தன்னை வந்து பார்க்குமாறு விக்ரம் கூறியதும், பாரதி இவன் வேண்டாம் என்ற முடிவில் இருக்கின்றாள். இப்பொழுது இவள் இவனை சென்று பார்த்தால் மனம் மாறக் கூடும். அலைபேசி அழைப்பு வந்ததை பாரதியிடம் கூறாமல் மறைத்தால், இவன் மீண்டும் அழைப்பான். அதையும் தடுத்தால் வீடுவரை வந்து விடுவானென்று பாரதியாக பார்கவி வந்திருந்தாள்.
ஆடை மாற்றம் மட்டுமல்ல, உடல் உபாதையால் அவதிப்படும் பார்கவியின் முகத்தில் இருந்த அதீத சோர்வும் விக்ரமின் கண்களுக்கு தென்பட்டாலும், பாரதிக்கு அவளை போலவே ஒரு இரட்டை இருப்பதாக ரகுராம் கூறியது அக்கணம் மறந்துதான் போனான். தன் முன்னால் அமர்ந்திருப்பது பாரதியின் இரட்டையென்று அறியாமல் பாரதியிடம் பதில் கேட்பதாக பார்கவியிடம் பதில் வேண்டி நின்றான் விக்ரம்.
“என்ன யோசிக்கிற?” வழமையாக யார் வேலைக்கு சேர்ந்தாலும் மூணு மாத காலவரையறையில் தான் ஒப்பந்தம் போடுவான். பாரதி வேலைக்கு சேர்ந்த அன்று தன் கனவில் வந்தவளை நேரில் பார்த்த ஆனந்தத்தில் ஒப்பத்ததில் கையெழுத்து வாங்க மறந்தவன், அடுத்தநாள் கையெழுத்து வாங்கும் பொழுது ஒரு வருடத்திற்கான ஆவணத்தில் கையெழுத்து வாங்கியிருந்தான்.
ஒரு வருடமா? மூணு மாதமா? என்று பாரதிக்குத்தானே தெரியும். அதற்காக சண்டை போடவா வந்தேன்? “இப்போ என்ன கம்பென்ஸேஷன் கொடுக்கணும் அவ்வளவு தானே. எவ்வளவு கொடுக்கணும்? உன் அக்கவுண்ட் நம்பர் கொடு போட்டுவிடுறேன்” என்றாள் திமிராக.
“இவளுக்கு என்ன ஆச்சு? வார்த்தைக்கு வார்த்தை வாங்க, போங்க, மிஸ்டர் என்று அழைப்பாளே! இன்று ஏன் ஒருமையில் பேசுகிறாள்? திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டது அவ்வளவு பெரிய குற்றமா? அது ஒன்றும் தப்பான வார்த்தை அல்லவே. பாரதி என்ன நினைக்கின்றாள் என்று விக்ரமுக்கு சுத்தமாக புரியவில்லை.
அவளை அவன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்ற முடியாதே. அவள் மீது வைத்திருக்கும் அன்பு அவனை தடுத்தது. அவளிடம் அமைதியாக பேசுமாறு புத்தி சொன்னது.
“இங்க பாரு பாரதி எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. அதான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன். காதலிக்கிறேன்னு சொல்லாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டது உனக்கு தப்ப தெரிஞ்சா, ஊருக்கே, ஏன் உலகத்துக்கே நான் உன்ன காதலிக்கிறத தெரிவிக்கிறேன். அப்பொறம் கல்யாணம் பண்ணிக்கலாம்”
அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அறிந்தால் தானே ஒரு முடிவுக்கு வர முடியும். அவளிடம் கேட்டால் சொல்லமாட்டாள். எதற்கோ என் மேல் கோபமாக இருக்கின்றாள். அவளிடம் பேசினால் தானே என்னவென்று அறிய முடியும். அவள் வாய் திறக்க வேண்டுமானால் தான் என்ன நினைக்கின்றேன் என்பதை சொன்னால் மட்டும் தான் முடியும் என்றெண்ணியவன் பொறுமையாக பேசலானான்.
“வேலையை விட்டு போகிறேன் என்று கூறியும் காரணம் கேட்கின்றானே. உலகத்துக்கே சொல்வானா? உன் காதல் உனக்குள்ள மட்டும் இருக்கணும் என்று நான் நினைக்கிறன்” உள்ளுக்குள் கருவினாள் பார்கவி.
“எனக்கு உன் மேல எந்த லவ்வும் கிடையாது. எனக்கு கார்த்திக் மாமாவைத்தான் பிடிச்சிருக்கு. நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” முகத்தை இறுக்கமாக வைத்தவாறே கூறினாள் பார்கவி.
“நீ என்ன சொல்லுற? அவன் உன் அக்கா ஹஸ்பண்ட் இல்லையா?” ஒருநொடி குழம்பித்தான் போனான் விக்ரம்.
“ஓஹ்… இவனுக்கு நம்ம குடும்பத்தப் பத்தியும் தெரியுமா? பாரதி என்னென்ன சொல்லி வைத்திருக்கின்றாளோ” உள்ளுக்குள் கொஞ்சம் பார்கவி பதறினாலும், அமைதியாக நின்றாள்.
“உண்மைய சொல்லு உனக்கு என்னதான் பிரச்சினை? என்ன பிரச்சினையென்றாலும் நான் பார்த்துகிறேன். நீ சொல்ல மறுத்தா நான் கார்த்திகேயனை வந்து மீட் பண்ணுறேன்” வார்த்தைகளால் மிரட்ட முயன்றவனின் குரலோ அவளை நினைத்து கவலையில் கரகரத்தது.
விக்ரம் பாரதியை விடமாட்டனென்று அவனது பேச்சிலையே புரிந்துக்கொண்ட பார்கவி வெறுப்பை கக்கலானாள்.
“எங்கப்பா சாவுக்கே உங்கப்பாதான் காரணம். இதுல உன்ன கல்யாணம் பண்ணி, உன் வீட்டுல உங்கப்பாக்கு சேவை செய்யணுமா?” பெற்ற அன்னை சுப்பு லட்சுமியே தன்னை ஒதுக்கியதால் வெறுப்பை கக்கியவள் பார்கவி. கண்டே இராத தந்தையின் மேல் மட்டும் பாசம் வந்துவிடுமா? இவ்வாறு கூறினால் தானே விக்ரம் பாரதியின் வாழ்க்கையை விட்டு விலகுவான்.
“என்ன சொல்லுற நீ?”
“சொல்லுறாங்க…” இதற்கு மேல் என்ன சொல்ல? தன் தந்தையால் தான், தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியவில்லையென்று கோபத்தை ஆளவந்தானிடம் காட்டுவான். பெற்ற கடனுக்காக தந்தைக்காக பழிவாங்கியதாக இருக்கட்டும் என்று எழுந்து கொண்டாள்.
அவளை செல்ல விடாது அவள் கையை பிடித்து தடுத்த விக்ரம். “அப்போ நீ என்ன ஐ மீன் எங்க குடும்பத்தை பழிவாங்கத்தான் என்கிட்டே வேலைக்கு சேர்ந்தியா? இல்லையே நீ நல்லாதானே வேல பார்த்த. அப்போ தெரியாமத்தான் வந்தியா?” அவனாகவே கேள்வியும் கேட்டு பதிலையும் கூறிக் கொண்டான்.
“கண்டிப்பா உங்கப்பா இறப்புக்கு எங்கப்பா காரணமாக இருப்பார். அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. எங்கம்மா எங்களை விட்டுட்டு போனதிலிருந்து அப்பா கூட பெரிசா ஒட்ட மாட்டோம். நான் வீட்டை விட்டு வந்தே பல வருஷமாச்சு. உனக்காக எங்கப்பா கூட எந்த சகவாசமும் வச்சிக்க மாட்டேன். ப்ரோமிஸ் பண்ணா போதுமா? இல்ல உனக்கு எங்கப்பாவை பழிவாங்கணும் என்றா என்ன பயன்படுத்திக்க. எனக்கு ஓகே தான்” பாரதியின் மேல் வைத்திருந்த காதலால் குடும்பத்தையே தூக்கியெறிய துணிந்தான் விக்ரம்.
“சரியான மானம் கெட்ட குடும்பமா இல்ல இருக்கு” ஏளனமாக அவனை பார்த்த பார்கவிக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. அது விக்ரம் பாரதியின் மேல் வைத்திருக்கும் அளவுகடந்த காதல்.
தன் குடும்பத்தை பழிவாங்க தன்னையே பயன்படுத்திக் கொள்ளும்படி ஒருவன் கூறுகின்றானெனில் அவன் காதலையடைய அவன் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவன்.
தந்தையின் விஷயத்தை கூறினால் ஒதுங்குவானென்று பார்த்தால், விடாக்கொண்டனாக நிக்கின்றானே என்ன செய்வது என்று அவனை ஒருகணம் வெறித்தவள் அவனிடமிருந்து கையை உதறியவாறே
“உங்கப்பா பேசினத்துக்கு நீ பழிவாங்குவ. ஆனா நீ பேசினத்துக்கு யார் பழிவாங்குவா?” கணவனான கார்த்திகேயன் பாரதியின் வாழ்க்கையில் நடந்தவைகளை கூறியிருந்தமையால் தருணத்தில் போட்டுடைத்தாள்.
“நானா நான் என்ன பேசினேன்?” விக்ரமுக்கு அவள் என்ன பேசுகின்றாளென்று சுத்தமாக புரியவில்லை. அவனுக்குத்தான் நடந்த எதுவும் ஞாபகத்தில் இல்லையே.
“என்ன நடிக்கிறியா? காலேஜ்ல உன் பின்னாடி அலஞ்சேனே. அப்போ என்ன காதலிக்கிறதா காட்டிகிட்டு, நான் உன்கிட்ட காதலிக்கிறேன்னு சொன்னதும் நீ என்ன சொன்ன?”
“நீ என்ன பேசுறன்னே எனக்கு புரியல”
“பேசுறதையும் பேசிட்டு என்னமா நடிக்கிறான்” இவனையா பாரதி காதலித்தாள் என்று நினைக்கையில் தங்கையின் மீது பார்கவிக்கு கோபம் கூட வந்தது.
“உன்ன மாதிரி ஒரு அயோக்கியன நான் என் வாழ்க்கைல பார்த்ததே இல்ல. ஒரு பொண்ணு நெருங்கி வரான்னா அவ மனசுல என்ன இருக்குன்னு புரியாதா? பிடிக்கலைன்னா விட்டு விலகணும். பிடிச்சிருக்கு என்று நடிக்கக் கூடாது. நீ நடிச்சதுமில்லாம, லவ்வ சொல்வான்னு எதிர்பார்த்தா, என்னவெல்லாம் பேசிட்டே. உனக்கு காதல் ஒரு கேடா…” கோபத்தில் சீறினாள் பார்கவி.
ஒன்றும் புரியாமல் முழிக்கலானான் விக்ரம்.
“நான் என்ன பேசினேன்?” “என் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் மறந்து போனது தெரியும். நான் மறந்து போனதே இவளைத்தானா? காலேஜ் செல்லும் பொழுது நான் இவளை சந்தித்தேனா? அப்படியாயின் என் கனவில் அடிக்கடி இவள் வருவது நம் கடந்தாக காலமா?” விக்ரமின் தலை கனமாக வலிக்க ஆரம்பித்தது.
“ஓஹ்… அத என் வாயால வேற கேட்கணுமா? கேட்டுக்க, என்னையும் என் மாமாவையும் சேர்த்து வச்சி அசிங்கமாக பேசினியே. அத நான் உண்மையாக்க போறேன். நான் என் மாமாவையே கல்யாணம் பண்ணிப்பேன். போதுமா உனக்கு? சந்தோசமா? என் வாழ்க்கையில நான் உன்ன திரும்ப பார்க்கவே கூடாது” பார்கவி வாய்க்கு வந்ததெல்லாம் பேசலானாள்.