“நீ முதல்ல சேட்டையை குறைச்சுட்டு நல்ல பிள்ளையா இரு” கல்பனா சொல்ல, சின்னவள் கலரிங் செட் கிடைத்த மகிழ்ச்சியில் வீட்டுக்கு ஓடிவிட்டாள்.
அடுத்தடுத்த நாட்களில் இறுதி தேர்வு நெருங்கிவிட பிள்ளைகள் படிப்பில் கவனம் வைத்தனர். தாரணி, அஜய் இணைந்து படிக்க, ஜீவிதாவும் அவர்களுடன் தான் படிப்பாள்.
தாரணி வீடு அஜய் அதிகம் செல்ல மாட்டான் என்பதால், அவன் வீட்டில் தான் படித்தனர். கணிதத்துடன் ஜீவிதா மல்லு கட்ட, அவளுடன் இவர்கள் இருவரும் மல்லு கட்டினர்.
“ஹப்பா ஒருவழியாய் உன் தங்கச்சிக்கு எக்ஸாம் முடிஞ்சது” அஜய் பெரிதாக ஆசுவாசப்பட்டான்.
பெரியவர்களுக்கு அடுத்து பத்தாவது என்பதால் ஸ்பெஷல் வகுப்புகள் நடந்தது. ஜீவிதாவோ, “ஹேய் நான் ஊருக்கு போறேனே” என்று அவர்களை வெறுப்பேற்றி குஷியுடன் பாட்டி வீடு கிளம்பிவிட்டாள்.
கடைசி சில நாட்கள் இவர்களுக்கும் விடுமுறை கிடைக்க, சொந்த ஊர் சென்று வந்தனர்.
தாரணி, அஜய்க்கு அந்த வருடம் கொஞ்சம் கடினமாகவே கடந்தது. பள்ளியில் பெண்டு நிமிர்த்தினர். காலை, மாலை ஸ்பெஷல் வகுப்புகள் நடக்க, வேனில் அஜய் கண்டிப்பு இல்லாமல் ஜீவிதாவிற்கு ஒரே கொண்டாட்டம் தான்.
இன்றும் ஜீவிதா வேனில் ஏறிய உடனே அங்கும் இங்கும் செல்ல ஆரம்பித்துவிட்டாள்.
“பாப்பா உட்காரு. வண்டி கிளம்ப போகுது” என்று அட்டண்டர் அக்கா சொல்லி பார்த்து அமைதியாகிவிட்டார்.
எடுத்த வேன் திடீரென சடன் பிரேக் போட்டு நிற்க, ஜீவிதா பேலன்ஸ் இல்லாமல் முன் புறமாக விழுந்து வைத்தாள்.
“ஆஆஆ” என்று முழங்கையை தேய்த்து கொண்டு நிமிர அஜய், தாரணி அவள் முன் நின்றனர்.
“என்ன ஜீவி இது?” என்று தாரணி தங்கை கை பிடித்து எழுப்ப போக, “நீ இரு” என்ற அஜய், அவள் முழங்கை பிடித்து தூக்கி நிறுத்தினான்.
“விழுந்துட்டியா? இதுக்கு தான் சொன்னேன் பாப்பா” என்ற அட்டண்டர் அக்கா, “நீங்க இல்லாம ரொம்ப ஆட்டம். என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியறதில்லை” என்று பெரியவர்களிடம் சொன்னார்.
அஜய் அவள் தலையில் கொட்டி விட்டவன், “ஒழுங்கா உன் பிளேஸ்ல போய் உட்காரு போ” என்றான்.
சின்னவளுக்கு கண்கள் கலங்கி போனது. நீண்ட நாட்கள் கழித்து கொட்டிவிட்டான். “உன் ப்ரெண்டை நான் கம்பளைண்ட் பண்ண போறேன் பாரு” என்று விசும்பி கொண்டே அக்காவிடம் மெல்லிய குரலில் மிரட்டி கொண்டிருந்தாள்.
“நான் மாட்டினாலும் பரவாயில்லை. அவனை மாட்ட வைக்காம விட மாட்டேன்” என்று மூக்கு உறிஞ்சினாள்.
“என்ன அவளை டார்ச்சர் பண்ணிட்டு இருக்க?” என்று சின்னவளின் காதை பிடித்திழுந்தான் அஜய்.
“நீ மட்டும் நிக்கிற?” ஜீவிதா கேட்டுவிட,
கொட்டு விழுந்ததுடன், “மரியாதையை ஒவ்வொரு முறையும் சொல்லி கொடுக்கணுமா என்ன?” என்று கேட்டான்.
“சரிரிரி.. நீங்க மட்டும் நிக்கிறீங்க?” அழுத்தி கேட்டாள்.
“ஆட்டக்காரி.. உன்னை மாறி ஆட நான் வரலை” என்றபடி அவளின் ரிப்பனை இழுத்துவிட்டவன், “தாரணி உன் ரிக்கார்ட் கொடு, நான் படம் வரைஞ்சு கொடுத்தனுப்புறேன்” என்று வாங்கி கொண்டு சென்றான்.
ரிப்பனை கழட்டி கையில் சுருட்டி கொண்டு பெண், வீட்டுக்கு வந்து தாரணியிடம் ஆடினாள். “ப்ளீஸ் ஜீவி. என்னை விடு” என்று அக்கா சோர்ந்து படுத்துவிட்டாள்.
தாரணிக்கு அன்று மன்த்லி ப்ராபளம் என்பது அப்புறம் தான் தங்கைக்கு தெரிந்தது. “சரி இன்னைக்கு ஒரு நாள் விடுறேன். இன்னொரு முறை உன் பிரெண்ட் என்னை அடிச்சா கம்பளைண்ட் கம்பளைண்ட் தான். பார்த்துக்கோ” என்று பெரிய மனதுடன் விட்டாள்.
அதன் பின் தாரணிக்கு சிறு சிறு உதவிகள் செய்தாள். சண்டை, கத்தல் எல்லாம் பெருமளவு குறைந்து போனது.
“க்கும். தாரணிக்கு இவகிட்ட மல்லு கட்ட டைம் இல்லை. அதான் வாலை சுருட்டிட்டு இருக்கா” என்று சென்றான் அஜய்.
இருவரும் வெற்றிகரமாக பத்தாம் வகுப்பை முடித்து, ரிசல்ட்டுக்காக காத்திருந்தனர். நல்ல மதிப்பெண் கிடைத்திருக்க, முதல் குரூப் எடுத்தனர்.
வருடம் ஓட சங்கர், பலராம் இருவருக்கும் முன்பின்னாக மேனேஜர் பதவி கிடைத்திருந்தது.
உடன்பிறப்புகள் விடுமுறை நாளில் டிவி பார்த்து கொண்டிருக்க, சகுந்தலா வீட்டிற்கு வந்தார் கல்பனா. சகுந்தலா சாப்பிட எடுக்க செல்ல, “எனக்கு சாப்பிட எல்லாம் எதுவும் வேண்டாம். நீ என்னோட உட்காரு” என்று அவர் கை பிடித்து அமர வைத்து கொண்டார் கல்பனா.
நொடிகளில் கல்பனா கண்கள் கலங்கிவிட, “என்னாச்சு” என்று பதறி போய் கேட்டார் சகுந்தலா.
“மாமியார், நாத்தனார் போன் பண்ணியிருந்தாங்க. சின்னவ இன்னும் வயசுக்கு வராததை குத்தி பேசுறாங்க. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போன்னு ஒரே தொல்லை” என்றார் கல்பனா கண்ணீருடன்.
“விடு கல்பனா அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான். இதெல்லாம் இயற்கை கையில இருக்கு நாம என்ன பண்ண? இப்போ என்ன ஒன்பதாவது தானே படிக்கிறா. வந்திடுவா” என்றார் சகுந்தலா ஆதரவாக.
“எனக்கும் கொஞ்சம் பயமா இருக்கு. பேசாம டாக்டரை பார்த்துடலாமா?”
“இந்த வருஷம் போகட்டும் இரு. பார்க்கலாம். சின்னவளை நாம பயமுறுத்த கூடாது இல்லை”
“ஆமா அந்த கழுதை ஆட்டமா ஆடிட்டு இருக்கு. நமக்கு தான் இந்த வேதனை எல்லாம்”
“சின்ன பொண்ணு கல்பனா. சந்தோஷமா இருந்துட்டு போகட்டும். சீக்கிரம் பெரிய பெண்ணாகி நம்மளை மாதிரி அவளும் படணுமா?”
“ம்ம். அவங்க அப்பாவும் ஹாஸ்பிடல் எல்லாம் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. பார்ப்போம்” என்று பேச, அஜய் உள்ளே சங்கடத்துடன் அமர்ந்திருந்தான்.
மகன் பனிரெண்டாவது படிப்பதால் வீட்டை எப்போதும் அமைதியாக வைத்திருப்பார் சகுந்தலா. அதனாலே இவர்கள் பேச்சு முழுதும் அவன் காதில் விழுந்தது.
உடன் ஜீவிதா ஏன் பெரிய பெண்ணாக வேண்டும். அவ குட்டி பொண்ணா இருந்தா தான் நல்லா இருக்கும் என்றும் நினைத்து கொண்டான்.