வில்வநாதன் புன்னகையில் தனபாலனும் அவரின் ஆசையில் இருந்து வெளி வந்தவர், “போதும் லட்சுமி. புள்ளைக்கு குடிக்க எதாவது கொடுப்போம்” என்றார்.
“ஆஹா. அதை மறந்துட்டேன். இதோ கொண்டு வர சொல்றேன்” என்று கஜலக்ஷ்மி போன் எடுக்க,
“பாட்டி. டின்னரே முடிச்சிடுவோம்” என்றான் பேரன்.
“அதுவும் சரிதான் அலைஞ்சது பசிக்கும். மீனா பொண்ணே நீ அந்த ரூம்ல போய் ரிப்ரெஷ் பண்ணிட்டு வா” என்று விருந்தினர் அறையை காட்டினார்.
மீனலோக்ஷ்னி விட்டால் போதுமென அந்த அறைக்கு ஓடிவிட, மூவரின் முகத்திலும் புன்னகை சாயல்.
“பைவ் மினிட்ஸ்” என்று வில்வாவும் அவன் அறைக்கு செல்ல, கஜலக்ஷ்மி உணவு எடுத்து வைக்க சொன்னார்.
மீனலோக்ஷ்னிக்கு குளித்தால் தேவலாம் போலிருக்க, அந்த அறைக்கு அவளின் உடமைகளும் வந்துவிட்டது. ‘நல்லதா போச்சு’ என்று குளியறை சென்றவள், அங்கிருந்த ஆடம்பரத்தில் மனதை செலுத்தாமல் வேலையை முடித்து கொண்டு வந்தாள்.
“வந்துட்டியா. இந்த பூவை வைச்சுக்கோ” என்று மல்லியை அவள் கையில் கொடுத்தார் கஜலக்ஷ்மி.
மறுக்காமல் தலையில் வைத்து கொள்ள, வில்வநாதனும் வந்துவிட்டவன், “பாட்டி அவருக்கு?” என்று கேட்க,
“இதோ கொடுத்துவிட போறேன்” என்ற கஜலக்ஷ்மி, தயாளனுக்கு உணவை கொடுக்க சொன்னார்.
“பாட்டி” என்றழைத்தாள் பெண். “நான் மாமாவோட சாரி, சாரோட அங்க போய் சாப்பிட்டுக்கவா?” என்று கேட்க, மற்றவர்கள் முகம் பார்த்து கொண்டனர்.
“ஏன் எங்களோட சாப்பிட வேண்டாமா?” என்று பாட்டி கேட்க, மீனலோக்ஷ்னிக்கு இவர்களுடன் சாப்பிடுவது விட தயாளனுடன் இருப்பது சவுகரியமாக இருக்கும் என்று தோன்றியது.
உடன் பயணிப்பது, ஒன்றாக அமர்ந்து உண்பது எல்லாம் தயக்கமே. அப்பாவே தள்ளி இருக்கும் போது, நானும் என்னோட லிமிட்ல தான் இருக்கணும் என்று நினைத்து கொண்டாள்.
உதவி கேட்டு, உறவாடவதில் சங்கடம் கொண்டவளை, பாத்துக்கோங்க என்பதாய் பாட்டிக்கு கண் காட்டினான் வில்வநாதன்.
கஜலக்ஷ்மி அவளை அப்படி எல்லாம் விட முடியாது என்று நினைத்து கொண்டவர், “இன்னைக்கு ஒரு நாள் எங்களோட உட்கார்ந்து சாப்பிட்டா என்ன?” என்று கேட்டார்.
“மாமா தனியா சாப்பிடுவார் இல்லை. அதான்” என,
“கவலைப்படாத. உன் தாத்தா அவரோட தான் சாப்பிட போவார். அப்படி எல்லாம் உன் மாமாவை, சாரி. உங்க சாரை நாங்க தனியா விட்டுட மாட்டோம்” என்றார் அவளை போலவே.
பெண் அவரை கொஞ்சம் உர்ரென்று பார்க்க, “ஓய் பாண்டி நாட்டு மீனம்மா என்ன?” என்று வில்வநாதன் கேட்டான்.
தனபாலன் தான், “விடு லட்சுமி. அவ எங்களோட சாப்பிடட்டும். இப்போ என்ன?” என்று சமாளித்தார்.
மீனலோக்ஷ்னி முகம் மலர்ந்து போக, கஜலக்ஷ்மி நொடி மருமகனை மனதில் வைத்து யோசித்தவர், “குடில்ல எல்லோருக்கும் டேபிள் ரெடி பண்ணலாம்” என்றார்.
“பாட்டி. நோ” என்று பேரன் மறுத்தான்.
“ராஜா. இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடுவோம்” என்று பாட்டி கேட்க,
“நீங்க சாப்பிடுங்க. எனக்கு இங்க தான்” என்றான்.
“பாட்டி அவருக்கு விருப்பமில்லைன்னா வேண்டாம். ஆனா அந்த குடில் ரொம்ப அழகா இருந்தது” என்று பெண் முகத்தை பாவமாக வைத்து கொண்டாள்.
வில்வநாதன் அவளை கண்கள் இடுங்க பார்க்க, “சரி. நான் மாப்பிள்ளையை உடனே அங்க வர சொல்லிடுறேன்” என்று தனபாலன் கிடைத்த வாய்ப்பை விடாமல் மகிழ்ச்சியுடன் போன் எடுத்தார்.
வில்வநாதன் பெண்ணை தான் முறைக்க, அவனை பார்க்காதது போல் பாட்டியின் பின் சென்றுவிட்டாள். ‘ஒரு நாள் அப்பாவோட உட்கார்ந்து சாப்பிட்டா என்னவாம்?’
வீட்டுக்குள்ள வந்த கொஞ்ச நேரத்துல என்ன வேலை பார்க்கிறா பாரு? வில்வநாதன் கடுப்பாகிவிட்டான்.
தனபாலன் மகளுக்கும் அழைத்து பேசி வைக்க, டேபிளும் தயாராக ஆரம்பித்தது.
இரு வீட்டுக்கும் இடையில் உள்ள இடத்தில், அந்த குடிலை அமைத்திருந்தான் வில்வநாதன். சுற்றி அலங்கார விளக்குகள், நீர் வீழ்ச்சி, வாசம் வீசும் பூந்தோட்டம் என்று மிகுந்த ரசனைக்குரிய இடம் அது.
குடும்பத்தினர் அவ்வப்போது அமர்ந்து பேசுவர், டீ, காபி குடிப்பதுண்டு என்றாலும் இதுபோல் ஒன்றாக இருந்து உணவு உட்கொண்டதில்லை.
தனபாலன் அந்த உற்சாகத்தில் நடையின் வேகத்தை கூட்ட, “தாத்தா” என்று பேரன் அவரை நிறுத்தி அவரின் கையை பிடித்து கொண்டான்.
“மெல்ல போங்க. நைட் நேரம்” என்று அவருடன் செல்ல, அவர்களுக்கு பின்னால் கஜலக்ஷ்மியும், மீனலோக்ஷ்னியும் வந்தனர்.
மிதமான குளிர் காற்று, ரம்மியான சூழல் பெண்ணின் உற்சாகத்தை மீட்டுத்தந்தது. அன்றைய நாளின் பாரம் தீர்ந்த நிம்மதி அவளின் முகத்தில் பிரகாசத்தை கொண்டு வந்தது.
“நல்லா இருக்கு பாட்டி” என்றாள் மனம்விட்டு.
“என் பேரனோட ஐடியா அப்படி தான் இருக்கும்” என்று பாட்டி பெருமை கொள்ள,
க்கும் என்று நொடித்து கொண்டவளை சரியாக திரும்பி பார்த்து வைத்தான் வில்வநாதன்.
“நீ இதை தான் பண்ணுவன்னு தோணுச்சு” என்று சொல்ல,
“நான், நான் என்ன பண்ணேன்” என்று வேறெங்கோ பார்த்தாள்.
பெரியவர்கள் சிரித்து குடிலுக்குள் சென்றனர். உணவு எல்லாம் தயாராக இருக்க, தயாளன் வந்தார். நம்பிக்கை இல்லாமல் தான் வந்தவர் மகனை பார்த்து ஆச்சரியம் கொண்டார்.
“வாங்க, வாங்க மாப்பிள்ளை” என்று அவருக்கு இருக்கை காட்டி, பெரியவர்கள் எதிரில் இருந்த மூன்று இருக்கையில் இரண்டில் அமர்ந்து கொண்டனர்.
மீனலோக்ஷ்னி பாட்டி பக்கத்தில் அமர போக, “ஓய் நீ இங்க வா” என்று தயாளனுக்கு அருகில் உள்ள இருக்கையை காட்டினான்.
அவள் முகத்தை தூக்கி வைத்து அமர, அவளுக்கு இரு புறத்திலும் அப்பாவும், மகனும் அமர்ந்தனர்.
பானுமதி அருகில் வந்துவிட்டதாக சொல்ல, “வெய்ட் பண்ணுவோமா?” என்று மீனலோக்ஷ்னியிடம் கேட்டனர்.
“ம்ம்” என்று அவள் தலையசைக்க, “எல்லாம் நல்லபடியா செட்டில் ஆகிடுச்சாமா?” என்று இவளிடம் விசாரித்தார் தயாளன்.
“முடிஞ்சது மாமா” என,
“பாட்டி நானே உங்ககிட்ட சொல்லணும்ன்னு இருந்தேன். மேடம்க்கு சமூக சேவைன்னா ரொம்ப பிடிக்குது. இனி கிளப் ஆகிட்டிவிட்டீஸ்க்கு இவங்களை கூட்டிட்டு போங்க” என்றான் வில்வநாதன் சீண்டலாக.
பெண்ணின் மூக்கு விடைக்க, “ஊர்விட்டு ஊர் போன இடத்துல இந்தளவு உஷாரா இருப்பாங்கன்னு எனக்கு தெரியாம போச்சு. இல்லைன்னா நான் அந்த ஐடியாவே கொடுத்திருக்க மாட்டேன்” என்று மேலும் சொல்ல,
“எனக்கென்ன தெரியும் அவங்க இவ்வளவு மோசம்ன்னு. நானே அதை நினைச்சு நொந்து போய் தான் இருக்கேன்” என்று படபடவென சொன்னாள்.
“இனி யாருக்கும் சஜஷன் கொடுக்கணுமான்னு என்னை யோசிக்க வைச்சுட்ட நீ”
“ரொம்ப நல்ல முடிவு. யோசிக்க எல்லாம் வேண்டாம். கொடுக்காதீங்க”
“பின்ன உன்னை மாதிரி ஆளுங்களை வைச்சுட்டு அதை தானே பண்ண முடியும்”
“தனியா இருக்கிற பொண்ணுக்கு டிராப் வைச்சவனை விட நான் தான் தப்புன்னு சொல்றீங்களா?”
“டிராப் வைக்கிற அளவு நீ ஏன் வீக்கா இருக்க?”
“இனி சிக்ஸ் பேக் எல்லாம் வைச்சு பல்க்கா இருந்துகிறேன் போதுமா?”
“அந்தளவு எல்லாம் வேண்டாம். உன் மூளையை கொஞ்சம் பயன்படுத்தினா போதும்”
“அப்போ எனக்கு அறிவில்லைன்னு சொல்றீங்களா?”
“அது அந்த மோகனை தான் கேட்கணும்”
“அவன் பேரை என் முன்னாடி சொல்லாதீங்க. கடுப்பாகிடுவேன்”
“இப்போ ரொம்ப அமைதியா இருக்கிறதா நினைப்பா?”
“நீங்க தான் என்னை பேச வைக்கிறீங்க”
“ஹேய் ஸ்டாப். என்ன நடக்குது இங்க?” என்று பானுமதியின் குரல் கேட்க, மீனலோக்ஷ்னி அப்போது தான் சூழ்நிலை உரைத்து பட்டென எழுந்து நின்றாள்.
தயாளனும், பெரியவர்களும் இவர்களை சுவாரசியமாக பார்த்திருக்க, “ஹாய் மாம்” என்றான் மகன்.
பானுமதியிடம் என்ன சொல்லி பேசுவது என்று புரியாமல் திருதிருவென விழித்தவள், “வணக்கம் மேடம்” என்று கை குவித்தாள்.
சிறு பெண்ணாக இருந்த நேரம் அவருடன் பேசியது. இப்போது பேசுவது என்பதை தாண்டி, இவர் பேசினதுல, நானும் கொஞ்சம் அதிகமா பேசிட்டனா என்ற சங்கடம்.
“நீ உட்காரு மீனம்மா” என்று தயாளன் சொல்ல, பட்டென அமர்ந்து கொண்டவள், பின் அதே வேகத்தில் எழுந்து கொண்டாள்.
“என்ன மியூசிக்கல் சேர் விளையாடுறோமா என்ன?” என்று வில்வநாதன் கிண்டலாக கேட்க,
பெண்ணுக்கு திரும்ப மூக்கு விடைக்க பார்த்தது. கட்டுப்படுத்தி கொண்டவள், “இல்லை அவங்க இங்க” என்று தன் இருக்கையை காட்ட,
கணவனுக்கும், மகனுக்கும் இடையில் உள்ள இடம் என்பது பானுமதியின் மனதை தொட்டது. எத்தனை வருட இடைவெளி அது. நாகரீகம் பார்த்து, “இருக்கட்டும். நீ உட்காரு” என்றார் அவர்.
“நான் பாட்டி பக்கத்துல இருந்துகிறேன்” என்று கஜலக்ஷ்மிக்கு அருகில் சென்று அமர்ந்தும் கொண்டாள்.
பானுமதி நெகிழ்ச்சியுடன் இருவருக்கும் இடையில் அமர்ந்தவருக்கு, கண்கள் கலங்கும் போலானது. கணவனும், மகனும் பிரிந்திருப்பது என்னால் தானே என்ற அவரின் குற்ற உணர்ச்சி, அந்த நொடியில் அவரின் ஏக்கத்தையும் அவருக்கே எடுத்து சொல்லியது.
ஆளுக்கொரு பக்கம் என்றில்லாமல், இருவரும் அவரின் பக்கத்திலே இருக்க, விம்மிய நெஞ்சத்தை தண்ணீர் குடித்து சமாளித்தார்.