அவன் பேசி வைத்தவன், “இதை தானே நானும் சொன்னேன்” என்றான் புரியாமல்.
பாட்டி வேலையை காட்டிவிட்டாரா? “கிளம்பி வா. பாஸ்ட்” என்றான் வில்வநாதன்.
மீனலோக்ஷ்னி இதற்கு மேல் மறுக்க முடியாமல் கிளம்பி வர, அவர்கள் பயணம் ஆரம்பமானது.
“நம்ம ஆபிஸ்ல ஒரு சின்ன மீட்டிங் முடிச்சுட்டு போயிடலாம்” என்றான் பெண்ணிடம்.
அவள் தலையசைக்க, நேரே கார் அவர்கள் அலுவலகத்திற்கு சென்றது. மிகப்பெரிய வளாகம். வில்வநாதன் கார் நுழையவும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.
மீனலோக்ஷ்னி நடையை குறைத்து அவனிடம் இருந்து பின் தங்க, “என்னாச்சு?” என்று நின்று கேட்டான்.
எதுவும் இல்லை என, அவளின் முகத்தில் என்ன கண்டானோ? “இவங்களை என் ரூம்ல உட்கார வைங்க” என்று ஒருவரிடம் சொன்னான்.
மீனலோக்ஷ்னி அவனின் அறைக்குள் நுழைந்தவள், அங்கிருந்த செழுமையில் மிரட்சியுடன் அமர்ந்து கொண்டாள்.
‘பணக்காரர்கள் என்று தெரியும். இந்தளவு என்பது தெரியாது’
அரவிந்தன் சொல்வதை மூளையில் ஏற்றி கொண்டதில்லை. அறிவழகன் எதனால் இவர்களிடம் இருந்து தள்ளி இருக்கிறார் என்பதும் புரிந்தது.
நான் இவரை வர சொல்லியிருக்க கூடாதோ? அட்வான்டேஜ் எடுத்துகிட்டேனா? என்ன நினைச்சிருப்பார் என்னை? ஏதேதோ யோசனை.
வில்வநாதன் கதவு திறந்து வர பெண் எழுந்து கொண்டாள். “சிட், சிட்” என்றவன் உடன் வந்தவரிடம் ஏதோ சொல்லி கொண்டிருந்தான்.
இதுவரை தெரியாத அவன் மேல்தட்டு பழக்கம், நடை உடை பாவனை எல்லாம் பெண்ணை கவனிக்க வைத்தது.
அவன் கையில் மின்னிய வாட்சை கூகிள் பார்த்து அதன் விலையில் மிரண்டு போனாள். எங்க மொத்த சொத்துமே அவ்வளவு தான்.
“ஏன் எதுவும் குடிக்கலை?” என்று இவளிடம் கேட்டான்.
“வேணாம். நாம கிளம்பலாமா?” என்று கேட்டுவிட்டாள்.
வில்வநாதன் அவளை உற்று பார்க்க, “சாரி. உங்களுக்கு வேலை இருக்கும்” என்றாள் உள்ளே போன குரலில்.
“முடிஞ்சது. போலாம்” என்றவன் அவளுடன் கிளம்ப ஆட்கள் வழியனுப்ப உடன் வந்தனர்.
“நோ நீட். ஒர்க்கை பாருங்க” என்று தடுத்து பெண்ணுடன் காருக்கு வந்தான்.
அந்த வளாகத்தை விட்டு வெளியே வந்த பின்தான் மூச்சு சீரானது. வில்வநாதன் அவளையே கவனித்திருந்தவன், “ஆபிஸ்ன்னா இவ்வளவு பயமா?” என்று கேட்டான்.
“அது உங்க ஆபிஸ்ங்கிறது தான் பயமா இருக்கு” என்று முணுமுணுக்க,
“எங்க ஆபிஸா இருக்கிறதுல மேடம்க்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.
கார் சிறிதும் சத்தமில்லாமல் செல்ல, அவள் முணுமுணுப்பும் அவனுக்கு தெளிவாக கேட்டு தொலைத்தது.
மீனலோக்ஷ்னி முழித்து, “அது. அது அப்படி இல்லை. ரொம்ப அமைதியா இருந்தது. அதான்” என்றாள்.
“நான் இருக்கிற வரை மட்டும் தான் அப்படி இருக்கும். வீட்ல பேசிட்டியா?” என்று கேட்டான்.
“இல்லை” என,
“நான் பேசிட்டேன்”
“நீங்க எதுவும் சொல்லிடலை தானே”
“சொல்லிட்டேன்”
“ஏன் சொன்னீங்க?” என்று அவளின் குணம் வந்துவிட்டது.
“சொல்ல கூடாதுன்னு நீ என்கிட்ட சொல்லலையே? அவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்” என்றான்.
பின் இருக்கையில் இருவர் மட்டும் இருக்க, அவன் புறம் நன்றாக திரும்பி அமர்ந்தவள், குரலை தாழ்த்தி, “நானே கண்டிப்பா சொல்லியிருப்பேன். ஆனா இப்போ நாம போறவரை அவங்க பயந்துட்டு தான் இருப்பாங்க. யார் கண்டா இந்நேரத்துக்கு மாப்பிள்ளையை பிடிச்சு கூட வைச்சிருப்பாங்க” என்றாள் சலிப்பாய்.
வில்வநாதனுக்கு புன்னகையில் உதடுகள் விரிந்தது. “ஏன் சிரிக்கிறீங்க? என் இடத்துல இருந்து பார்த்தா தான் என் கஷ்டம் தெரியும்” என்றாள்.
“சரி. அங்கிள்கிட்ட நான் பேசுறேன்” என,
“உண்மையாவா?”
“இப்போவே பாட்டிகிட்ட சொல்லி பேச சொல்லவா?”
“நோ, நோ நீங்க பேசுங்க. அவங்க வேண்டாம். நாம சொல்றதுக்கு ஆப்போசிட்டா தான் செய்வாங்க” என்றாள்.
“என் பாட்டியை என்கிட்டேயே குறை சொல்ற” அவன் புருவம் தூக்க,
“இது வேறயா? எனக்கு டையர்டா இருக்கு. நான் தூங்கிக்கட்டுமா?” என்று கேட்டாள்.
“ஏர்போர்ட் வந்திடுச்சு” என்றான் அவன்.
இருவரும் நடைமுறை எல்லாம் முடித்து சரியான நேரத்துக்கு விமானத்தில் அருகருகே அமர்ந்துவிட்டனர். பெண்ணுக்கு விமான பயணம் புதிது இல்லை என்பது புரிந்து வில்வநாதன் போனில் மூழ்க, மீனலோக்ஷ்னி கண்களை மூடி கொண்டாள்.
மீனலோக்ஷ்னிக்கு இது மிக நீண்ட நாள். அவளின் வயதிற்கு, அதிகமான சோர்வை உணர, உடனே தூங்கிவிட்டாள்.
இவனை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல், ஆடாமல், அசையாமல் அவளின் இருக்கையிலே நன்றாக தூங்கி கொண்டிருந்தவளை, வில்வநாதன் ஆச்சரியமாக பார்த்தவன், குடிக்க என்று எதற்கும் அவளை தொந்தரவு செய்யவில்லை.
விமானம் தரையிறங்கும் நேரம் தான் அவள் தோள் தட்டி எழுப்பினான். உடனே விழித்து கொண்டவள், கண்களை தேய்த்து விட்டு கொண்டாள்.
விமான நிலையத்தின் ஓய்வறைக்கு சென்று வர, “காபி குடிக்கலாமா?” என்று கேட்டான்.
“நீங்க குடிங்க. எனக்கு இங்க செட் ஆகாது” என்றாள்.
“ஓகே கிளம்பலாம்” என்று வெளியே வர கார் தயாராக இருந்தது.