தூறல் – 8
ஆர்ப்பரிக்கும் அலைக் கடலும் பெண்ணே,
அழகாய் அடங்கிடுதே உன் முன்னே;
ஆதுரமாய் சிரித்தாய் கண்ணே,
அலையில் கிடந்தேன் கரையேறாமல் தன்னே!
போலீசார் போன பின் பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட கௌதம் தற்போது தன் அருகில் இருந்த உருவத்தை கண்டான். இருளிர்க்கு பார்வை சற்று மெல்ல பழகியது.
அங்கே தலையில் முக்காடு இட்டிருந்த அந்த உருவத்தை பார்த்த உடன் கண்டு கொண்டான் கௌதம் அது யாரென்று. அங்கே ஆருத்ராவை பார்த்தவுடன் கோபத்தில் பல்லை கடித்தான் கௌதம்.
“நீ எதுக்கு இங்க வந்த. உன்னை தான் எதுலையும் தலையிட வேண்டாம்னு சொன்னேன்ல. அப்படி இருந்தும் அன்டைம்ல வந்திருக்க.
உனக்கு ஏதாவது பிரச்சினை வந்திருந்தா என்ன பண்ணுவ. இல்ல போலீஸ் கிட்ட மாட்டியிருந்தனா” என்றான் கோபத்தில் மரியாதை எல்லாம் விட்டவனாக.
“ஸ்ஸ்ஸ்” என வாயில் கை வைத்து காட்டி “மெல்ல பேசுங்க வெளிய கேக்க போகுது. நம்ம வெளியே போன அப்புறம் எல்லாம் பேசிக்கலாம். இப்ப வாங்க இந்த வீட்ல எதாவது க்ளூ கிடைக்கிதானு பார்க்கலாம்” என்றாள் ஆருத்ரா.
“இவளை” என கோபப்பட்டுவன், ‘சரி வெளியே போய் பேசிக்கலாம். இப்ப வந்த வேலையை பார்ப்போம்’ என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தான்.
படுக்கையறையை சல்லடை போட்டு துலவினார்கள் இருவரும். ஒன்றும் கிடைக்கவில்லை. கீழே சுவற்றில் ஓங்கி உதைத்தான் இயலாமையில் கௌதம்.
அவனிடம் வேகமாக வந்த ஆரு “டென்ஷன் ஆகாதிங்க ப்ளீஸ். கண்டிப்பா எதாவது கிடைக்கும். நல்லா பார்க்கலாம்” என்றாள் சமாதானமாக.
கௌதம் உதைத்ததில் சுவர் பேர்த்துக் கொண்டு வந்திருந்ததை ஆரு அப்போது தான் கவனித்தாள். ‘எப்படி ஒரே அடியில் சுவர் உடையும்’ என எண்ணிய ஆரு கீழே குனிந்து பார்த்தாள்.
உடைந்தது சுவர் அல்ல அதன் மேல் ஒட்டி இருந்த அட்டை. அதை கண்டு மெதுவாக அந்த அட்டையை நகர்த்தினாள். உள்ளே ஒரு மடிக்கணினி இருந்தது.
அதை கௌதமிடம் காட்ட, அப்போது அவனும் அதை பார்த்தான். அது சத்யாவின் மடிக்கணினி. திடீரென ஒரு துருப்பு சீட்டாக கிடைத்த மடிக்கணினி, அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஆருவை அணைத்து “சூப்பர் ருத்ரா. தேங்க்ஸ்” என்றான். மகிழ்ச்சியில் அவன் செய்கையை அவன் உணரக்கூட இல்லை.
ஆனால் அவனின் செய்கையில் ஆருத்ரா தான் உறைந்து போய் நின்றாள். தந்தை அன்றி அவள் உணரும் வேறு ஆண்மகனின் ஸ்பரிசம் அல்லவா.
அமைதியாக அறையை விட்டு வெளியேறி சோஃபாவில் அமர்ந்து தன்னை நிலைப்படுத்தும் முயற்சிக்கு சென்றாள். ஆனால் இதை எதையும் கவனியாத கௌதம், மடிக்கணினியுடன் அமர்ந்தான்.
படுக்கையில் அமர்ந்து மடிக்கணினியை எடுத்து திறந்தான். அது திறக்க கடவுச்சொல் கேட்டது. அவனும் அவனுக்கு தெரிந்த பழைய கடவுச்சொல்லை போட்டு பார்த்தான்.
ஆனால் திறக்கவில்லை. கௌதமிற்கு அவ்வளவு அதிர்ச்சி. சத்யாவின் கணினியின் கடவுச்சொல் அவன் அறிந்ததே. ஆனால் தற்போது மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.
‘இது யாரின் வேலையாக இருக்கும். கண்டிப்பாக சத்யா தான் மாற்றி அமைத்திருக்க வேண்டும். இல்லையெனில் இதை பத்திரப்படுத்தி சொல்ல என்ன காரணம்.
நிச்சயம் நமக்கு தேவையான ஏதோ ஒன்று இதில் இருக்க வாய்ப்பு உண்டு’ என எண்ணிக் கொண்டான். அதை மூடியவன் சிறிது யோசித்து பின் ‘சரி முதலில் இங்கிருந்து இதை எடுத்து செல்வோம். ஹேக்கர் யாரிடமாவது உதவி கேட்போம்’ என முடிவு எடுத்தான்.
பின் மீண்டும் அறையை ஒரு முறை பார்த்து விட்டு வெளியே வந்தான். அங்கே சோஃபாவில் ஏதோ போல் சுவற்றைப் பார்த்து அமர்ந்திருந்த ஆருவரிடம் சென்றான்.
“ருத்ரா என்ன சுவரை இப்படி வெறிச்சு பார்த்துக்கிட்டு இருக்க. வா கிளம்பலாம்” என்றான். அப்போது கொஞ்சம் தெளிந்திருந்த ஆரு நிமிர்ந்து கௌதமை பார்த்தாள்.
அவன் முகத்தில் எதுவும் தெரியவில்லை. அவள் மனதில் ‘உண்மையாவே இவன் நம்மல கட்டிப்பிடிச்சானா இல்லை நமக்கு தான் அப்படி தோனுதா’ என எண்ணிக் கொண்டு இருந்தாள்.
அவள் எங்கிருந்து அறியப் போகிறாள், அந்த நிமிட மகிழ்ச்சியில் ஆருவை அணைத்திருந்தான். அதை அவன் உணர்ந்திருக்கவே இல்லை எனும் போது எங்கிருந்து அவன் மனது ஆருவின் அமைதியை கணிக்கும்.
எனவே “ப்ச் வா ருத்ரா என்ன சாவகாசமா உக்காந்துட்டு இருக்க. போலீஸ் திரும்ப வந்தர போறாங்க. சீக்கிரம் வா கிளம்பலாம்” என அழைத்தவன் சிதறி இருந்த புத்தகங்களை பார்த்தான்.
அதை எல்லாம் சேகரித்த கௌதம், ஆருவின் கையில் கொடுத்தான். “இந்த புக்ஸ் எல்லாம் நீ வச்சுக்கோ உனக்கு புக்ஸ் பிடிக்கும்ல. சரி வா போகலாம்” என்றபடி அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.
இப்போது நன்கு தெளிந்த ஆருவும் அவன் கையை உதறிவிட்டு அவன் பின் சென்றாள். கௌதமும் இதை பெரிதாக எடுக்காது ஒரு சிறு தோல் குளுக்களோடு அவள் பின்னே சென்றான்.
இருவரும் மெதுவாக அந்த பால்கனியில் இருந்து வெளியேறி ஒருவழியாக கௌதம் வண்டி நிறுத்தியிருந்த இடத்தை அடைந்தனர்.
சிறிது தூரம் வண்டியை தள்ளி சென்றனர். அப்போது தான் ஞாபகம் வந்தவனாக “ஆமா நீ எப்படி வந்த. இந்த டைம்ல ஆட்டோலா கிடைச்சதா?” என்றான் நடந்துக் கொண்டே.
“அது ஆட்டோல தான். ஆனா டபுள் மடங்கு காசு வாங்கிட்டான்” என்றாள் சிரிப்புடன். அவளை முறைத்த கௌதம் “இது தேவையா இப்படி அன்டைம்ல, அந்த ஆட்டோக்காரன் உன்னை கடத்திட்டு ஏதும் போயிருந்தா என்ன பண்ணி இருப்ப.
எவ்ளோ நியூஸ் பாக்குற. தயவு செஞ்சு இனிமே இப்படி லூசு தனம் பண்ணாத. நான் பார்த்துப்பேன் புரியுதா” என்றான் சற்று காட்டமான குரலில்.
அவன் கூறுவது அனைத்தும் சரியே என புரிந்தாலும் “என்ன பார்த்துப்பீங்க நீங்க. அதான் பார்த்தேனே. கொஞ்சம் நான் சுதாரிச்ச இருக்கலைனா போலீஸ் உங்கள இழுத்துட்டு போய் இருப்பாங்க” என்றாள் ஆரு கிண்டலாக.
அவள் சொல்வதில் இருந்த உண்மை புரிந்தாலும் அவன் ஈகோ அதை ஒத்துக் கொள்ள விடவில்லை. பேச்சை மாற்றும் விதமாக “ஆமா எப்படி நீ மேல வந்த பைப் ஏறியா” என்றான் கௌதம்.
ஆம் என்னும் விதமாக தலை அசைத்த ஆரு “இங்க பாருங்க கௌதம், நான் கண்டிப்பா சத்யாவுக்கு நியாயம் கிடைக்க எதாவது பண்ணுவேன். ஏனா என்னால நிம்மதியா தூங்க கூட முடியல கௌதம்.
ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. நான் எதாவது ஒரு ஸ்டெப் எடுத்துருந்தா இன்னைக்கு ஒரு உயிர் போயிருக்காது இல்லை” என்றால் வேதனை நிறைந்த குரலில்.
அவள் கூறியதை கேட்ட கௌதம் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு “இங்க பாரு ருத்ரா, உன்னால எதுவும் செஞ்சிருக்க முடியாது. ஏனா நானும் அப்ப ரெண்டு நாள் ஊருல இல்லை.
கடைசியா சத்யா எனக்கு தான் போன் செஞ்சான். ஊருக்கு போற அவசரத்தில நான் அவனோட நிலைமைய அப்ப சரியா கவனிக்கல. அப்படி பார்த்தா எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்.
அப்புறம் தான் ஒன்னு புரிஞ்சுது, இதுல நம்மால எதுவும் செஞ்சு இருக்க முடியாதுனு. சோ நீ அத பத்தியே யோசிச்சு கில்டியா பீல் பண்ணாத என்ன” என்றான் ஆதூரமாய்.
“சரி ருத்ரா பர்ஸ்ட் உன் நம்பர எனக்கு குடு. ஏனா நீ இப்படி அர்த்த ராத்திரியில தனியாலாம் இனிமே கிளம்பக் கூடாது. துணைக்கு நானும் வருவேன் சரியா” என்றான் கௌதம் என்னென்று புரியாத குரலில்.
அவனின் முகத்தில் தெரிந்த பாவத்தில் அவள் முகத்தை திருப்பாது பார்த்திருந்தாள். இருவரும் எவ்வளவு நேரம் அப்படி பார்த்துக் கொண்டு இருந்தனரோ, அருகில் வண்டி வரும் சத்தம் கேட்கவே தம் நிலையில் இருந்து மீண்டனர்.
இதில் அவன் கேட்க வேண்டும் என நினைத்த பல கேள்விகளை மறந்து விட்டான். தன் குரலை செறுமிக் கொண்டு “வண்டில ஏறு ருத்ரா உன்னை வீட்டல விட்டுட்டு நான் போறேன்” என்றான் கௌதம்.
ஆருவும் தனக்கு புத்தகம் பிடிக்கும் என அவன் சரியாக சொன்னது எப்படி எனக் யோசிக்க மறந்தாள். அவன் குரலிலோ முகத்திலோ இருந்த ஏதோ ஒன்றால் அவள் அமைதியாக வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அந்த பயணத்தை இருவரும் அமைதியாக ரசித்து வந்தனர். ஆருவின் இருப்பிடம் வந்து சேர்ந்தார்கள். வண்டியில் இருந்து இறங்கி நின்ற ஆருவிடம் அவள் எண்ணை வாங்கியே சென்றான்.
செல்லும் அவனையே விழி எடுக்காது பார்த்தாள் ஆரு. அவன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டு இருந்த ஆரு பின் தன் அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தாள்.
அங்கே சாலையில் சென்ற கௌதமிற்கு காற்றில் பறப்பது போல் இருந்தது. ஆருவின் நினைவை மனதில் சுமந்தவாறு அவனின் இல்லம் வந்தடைந்தான் கௌதம்.
ஆனால் இருவரும் தங்கள் மனதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் புரிந்து கொள்ள முயலவில்லை.
வீட்டின் உள்ளே நுழைந்த ஆரு, சோஃபாவில் அமர்ந்து தன்னையே குறுகுறுவென பார்த்த மீராவின் பார்வையில் ‘ஐயோ’ என்றானது.
‘இவள எப்படி சமாளிக்க போறோம்னு தெரியலையே’ என எண்ணிக் கொண்டு எதுவும் நடவாதது போல் தன் அறையை நோக்கி நகர்ந்தாள்.
“மேடம் கொஞ்சம் நில்லுங்க. எங்க போய்ட்டு வரீங்கனு தெரிஞ்சுக்கலாமா” என்றாள் கோபத்தோடு. தன் தோழியை நோக்கிய ஆரு
“அது வந்து… அது ஆ நான் எனக்கு தூக்கம் வரலை. அதான் சும்மா வாக்கிங் போயிருந்தேன்” என திக்கி திணறி ஏதோ சொல்லி சமாளித்தாள். “ஏது நைட் இரண்டு மணிக்கு வாக்கிங். இத நான் நம்பனும்” என்றாள் நக்கலாக.
“நான் வாக்கிங் தான் போனேன். நம்புனா நம்பு நம்பாட்டி போ” என்றுவிட்டு அவசரமாக அறைக்கு வந்து ஆரு இழுத்து பிடித்த மூச்சை வெளிவிட்டாள்.
‘எப்போ எழுந்திருப்பா? நம்ம போறப்ப நல்லா தூங்கிட்டு தானே இருந்தா’ என எண்ணிய ஆரு ‘சரி தப்பிச்சு வந்தாச்சு காலைல பாத்துக்கலாம்’ என்று படுத்துவிட்டாள்.
‘என்கிட்டையே பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டியா ஆரு. நீ என்ன பண்றனு நான் சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன்’ என மனதில் சபதம் ஒன்றை எடுத்தாள் மீரா. பின் அவளும் சென்று படுத்துவிட்டாள்.
யாருக்கும் காத்திராமல் அடுத்த நாளும் அழகுற விடிந்தது. ஆனால் கௌதமிற்கும் ஆருத்ராவிற்கும் சற்றே வித்தியாசமாய்.
-தொடரும்