முகூர்த்தம் 25

 

இன்னும் இரண்டு நாட்களே இருந்தது ப்ராஜெக்ட் சப்மிட் செய்வதற்கு. மைவிழி காலையிலிருந்து போன் அடித்துக் கொண்டிருக்கிறாள் தன் தோழியருக்கு. இருவருமே எடுத்தபாடில்லை.

இதற்கு மேலும் காத்திருந்தால் சரிவராது என முடிவு செய்ட்தவள் பேருந்தில் ஏறியிருந்தாள். குளித்தலையிலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து செல்லும் அந்த பேருந்து காவேரிப்பாலத்தை தாண்டும் போது இவளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

கலை, பவி இருவரும் வர இயலாத சூழ்நிலை என்றும் வானதி இன்று மைவிழியுடன் ப்ராஜெக்ட் செண்டருக்கு வந்து விடுவாள் என்றும் இருந்தது.

பார்த்ததும் கோபம் வந்தது மைவிழிக்கு. ‘இதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன…? நான் என்ன வேல பொழப்பில்லாமயா கால் பண்றேன், ச்சே…’ என்று எண்ணியவள், வானதியாவது வந்தாளே என்றிருந்தது.

இவர்கள் நால்வரும் தான் ப்ராஜெக்ட் பேட்ச். வானதி அதிகம் பேசமாட்டாள். எதிலும் அமைதி நிதானம், சிப்பு பொத்துக்கொண்டு வரும் காமெடிக்கு கூட, லேசக உதடு வளைப்பாள் அவ்வளவே. கலை, பவி, மைவிழி மூவரும் ஒன்று கூடினால், அங்கே எப்போதும் சிரிப்பும் கேலியும் மகிழ்ச்சியுமே கூத்தாடும். வானதியும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை இப்படி இருந்தவள் தான். ஸ்வாதியின் மரணம் அவளை இப்படி மாற்றும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

கோபமோ, மகிழ்ச்சியோ, துக்கமோ, துயரமோ உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். அப்படி வெளிப்படுத்தாமல் இருக்கும் அசாதாரணமான சூழ்நிலையை மாற்றி அவர்களை இயல்புக்கு கொண்டுவருவது மிகவும் சிரமம். சிரமம் பாராமல் வானதியின் இயல்பை மீட்டிடவே மைவிழி அவளிடம் அதிகம் பேசத் துவங்கினாள்.

பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் கூட, நம்பிக்கையை விடாமல் இருந்தாள் மைவிழி.  இன்று தனியாக தன்னுடன் வரப்போகும் வானதியிடம் நிறைய பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

அதே நேரம் சரியாக வானதி அழைக்க, “எங்க இருக்க வானதி…? நானும் பஸ்ல இருந்து இறங்க போறேன்…”

“செண்டர் வாசல் ல இருக்கேன் மைவிழி…”

“அப்படியா இன்னும் அஞ்சு நிமிஷம் நானும் வந்திடுவேன்…” என்று சொல்லி போனை வைத்த மைவிழி சொன்னது போல் நின்றிருந்தாள்.

இருவரும் சென்று ஃபைனல் ப்ராஜெக்ட்டைப் பெற்றுக் கொண்டு ப்ராஜெக்ட் பற்றிய தங்களின் சந்தேகங்களையும் கேட்டுக்கொண்டு கிளம்ப அடுத்த இரண்டு மணிநேரம் பிடித்தது.

கடைசி நிமிடத்தில் இவர்களின் ப்ராஜெக்ட் மொபைலில் இன்ஸ்டால் ஆகாமல் போகவும் மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றது.

அவர்களின் ப்ராஜெக்ட் டெவலப்பர் இன்று விடுமுறை எடுத்திருந்ததால் வேறு யாராலும் வந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்ல இயலவில்லை.

இவர்கள் இருவரும் இன்று ப்ராஜெக்டை கையில் வாங்காமல் செல்ல மாட்டோம் என பிடிவாதமாய் அமர்ந்துவிட, வேறு வழியின்றி, அந்த நபரை வரவைத்து முடித்துக் கொடுக்கிறோம் ஆனால் மாலை ஆறு மணி ஆகும் என்றுவிட்டனர்.

என்ன செய்யலாம் என்று யோசித்து மணியைப் பார்த்தால் அது மதியம் 1.30ஐக் காட்ட, இருவருமாக உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.

உச்சி வெயிலை நிலாவெளிச்சமாக எண்ணி காலார நடந்து சென்றவர்கள், அடிவாரத்திலிருந்த பிள்ளையார் கோவிலில் வணங்கி விட்டு படியேறியவர்கள் தாயுமானவர் சன்னதியின் சித்திரங்களை கண்டுவிட்டு செல்ல மனமில்லாமல் அங்கேயே அமர்ந்துவிட்டனர்.

கோவிலில் அமர்ந்திருந்த வானதி இதயம் எந்த சஞ்சலமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. அந்த நேரம் எந்த தூண்டுதலும் இன்றி ஸ்வாதியைப் பற்றி தான் கண்ட காட்சியைப் பற்றி அதன் பின் தனக்கே தெரியாமல் தன் கைப்பையிலிருந்த டைரியைப் பற்றி, அதிலிருந்த ரணங்களைப்பற்றி, மைவிழி கேட்காமலே சொல்லிமுடித்திருந்தாள்.

தன் மனதிலிருந்த பெரிய பாரத்தை இறக்கி வைத்ததுபோல் மனம் லேசாகியிருந்தது அவளுக்கு. ஆனால் இன்றோடு ஸ்வாதியும் அவளது விசயங்களும் அவளை விட்டு விலகிப் போகப்போவதில்லை என்பதை அறியாமல் தற்காலிகமாய் அவள் மனம் நிம்மதியாயிருந்தது.

அத்தணையும் கேட்டுக் கொண்டிருந்த மைவிழியின் முகம் கடினமாகி கோபத்தில் சிவந்திருந்தது. ”எந்த காலத்தில இருந்தா அவ படிச்ச பொண்ணுதான அவளோட பிரச்சனைகளை யார்கிட்டயாச்சும் பகிர்ந்துகிட்டாளா, அவளா போராடி உதவின்னு நெனச்சு நம்பி போய் நாசமாயிருக்கா, அதுக்கப்பரமாச்சும் நம்ம யார்கிட்டயாச்சும் இப்படின்னு சொல்லிருந்தா இதுக்கு காரணமானவங்களுக்கு கண்டிப்ப தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கமாட்டோமா…

போராடனும் டி, வாழ்க்கையில எதுவும் ஈசியா கிடைச்சிடாது, ஒரு பருக்கை சோறுன்னு நெனச்சி சாப்பிடும் போது சிந்தினா கவலப்படுறது இல்லை, அதே அது வெதையா இருந்ததுல பாத்தா தான் அந்த பருக்கை உருவானதுல அந்த விவசாயியோட கஷ்டம் என்னன்னு தெரியும்.

சிந்தின அவ கண்ணீருக்கு விலை என்னன்னு அவளுக்கே தெரியாமப்போச்சு, ஆனா நமக்கு தெரியும், அவனுக்கும் தெரிய வைக்கணும்…” என்றவள் தன் மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.

வானதியிடமும் இதைப்பற்றி வேறு யாரிடமும் தான் சொல்லும் வரைபகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று கூறியவள். அதன் பின் அடுத்த ஆறுமாதத்தில் வேலைக்குச் செல்லாமல் சொந்த தொழில் செய்வதென்று முடிவு செய்து களத்தில் இறங்கினாள்.

பாக்குமட்டை தட்டுகள் தயாரித்து விற்பனை செய்யும் அவளது தொழிலோடு, கல்லூரி மாணவிகளுக்கான கணித டியுசனும் இலவசமாக எடுக்கத் துவங்கினாள்.

அதன் மூலம் நிறைய கல்லூரி மாணவிகளின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. மைவிழியின் துணிச்சலும், தொழில் நடத்தும் திறனும், எளியான கற்பிக்கும் திறன், மாணவிகள் அனைவரையும் தன் தோழியராய் நினைத்து அரவணைத்து செல்லும் மனப்பாங்கும் மனதிற்கு மிகவும் நெருக்கமாக்கி இருந்தது.

நாட்கள் செல்ல அவர்கள் மூலமாக அந்த வட்டாரத்தில் இருக்கும் கல்லூரிகளில் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது தெரியவந்தது.

இதனால் சில இளம்பெண்கள் தற்கொலை செய்திருந்தனர். சில புத்தி பேதலிக்கப்பட்டு நடைபிணமாய் இருந்தனர். சிலர் தங்கள் குடும்ப வறுமையை எண்ணி உடலையும் நதையும் கல்லாக்கிக் கொண்டு உயிரோடும் இருந்தனர். அவர்கள் அனைவரிம் விபரங்களை சேகரித்தவள், அவர்களையும், அவர்களின் உறவினர்களையும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து விபரங்கள் வீடியோ ஆதாரமாக பதிவி செய்யத்துவங்கினாள்.

சிலர் மறுத்தனர், சிலர் பயந்தனர், சிலர் கோபப்பட்டு ”நீ யார் அவனின் கையாளா, வீடியோ பதிந்து எங்களையும் மிரட்டப்பாக்கிறனா” என்று அடிக்கக்கூட வந்தனர்.

அவர்களை சமாதானப்படுத்தி புரியவைத்து, இதன் மூலமாக நியாயம் பெற்றிட முடியும் என்று அவர்களுக்கு தெம்பூட்டினாள்.

ஆவணப்படம் போல் அனவரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்தாள். மதுராபுரி வேந்தனுக்கு எதிரான எல்லா ஆதாரங்களை மிச்சமின்றி திரட்டினாள்.

பாக்குமட்டை தொழில் ஊர் உலகத்திற்கு இவளுக்கான கவசமாகிப் போனது. அதன் பின்புலத்தில் இந்த வேலைகளை சத்தமின்றி செய்து கொண்டிருந்தாள்.

தனக்கு தேவையான ஆதாரங்களை திரட்டிவிட்டோம். இப்போது இதை உலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றால் சரியாக இருக்கும் என எண்ணும் நேரத்தில் அவள் எதிர்பார்க்காதவகையில், மதுராபுரி வேந்தனின் அண்ணனும் மிகப்பெரிய அரசியல் புள்ளியுமான ராமய்யாவிடமிருந்து அவளி நேரில் வரச்சொல்லி அழைப்பு வந்தது.

இதைப்பற்றி யாரிடமும் இதுவரையில் சொல்லியிராத மைவிழிக்கு இத்தணை நாள் இல்லாமல் அவரைச் சென்று சந்திக்க சற்று தயக்கமாகவே இருந்தது.

ஒரு வாரம் கழித்தே சந்திக்க வேண்டிய நாள் இருந்ததால் மனதுக்குள் பலவாறு சிந்தித்துக் கொண்டே இருந்தாள். செல்லாமா வேண்டாமா என்றெல்லாம். எப்படி எதிர்கொள்வது என்று..!

அந்த நாளும் வந்தது. தனிபங்களா, தோப்புவீடு என எங்கயாவது தனிப்பட்ட இடத்திற்கு அழைப்பார் என்று எதிர்பார்த்தவளுக்கு அவரது வீட்டிற்கு வரச்சொல்லவுமே ஆச்சர்யம் தான்.

யாரையும் துணைக்கு அழைக்காமல் வரும் மைவிழிப்பார்க்கவும் ராமய்யா மெச்சுதலான பார்வையுடன் எதிர்கொண்டார்.

“வாம்மா மைவிழிச்செல்வி…” என்று அவரே வரவேற்றார்.

அவரின் எளிமையும், கண்களில் தெரியும் கண்ணியமும் அவளை தன்னைப்போல கைகூப்பச்செய்திருந்தது.

”வணக்கம்ங்க ஐயா…”என்றாள் மரியாதையுடன்.

“நீ எதுவோ யார்கிட்டயோ சொல்லனும்னு முடிவு செஞ்சிருக்க, அதை என்கிட்ட சொல்லு, உனக்கு என்ன நியாயம் வேணுமோ அதை நான் கிடைக்க வைக்கிறேன்.”

“ஐயா, அதுவந்து…”

“தயங்காம சொல்லுமா…”

”அப்படி சொன்னா, நியாயம் கிடைக்குதா இல்லையான்னு பாக்கக்கூட நான் இருக்கமாட்டேன்னு எனக்கு தெரியுங்கய்யா…”

“அப்படியெல்லா நெனக்காதம்மா, உன் வயசுல எனக்கும் பொண்ணு இருக்கு, ஒரு பொண்ணு இவ்ளோ டிடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணனும்னா எவ்ளோ ரிஸ்க் இருக்கும் எனக்கு தெரியும், உனக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன், சொல்லுமா…”

“உங்ககிட்ட சொல்றதுனால என்ன நடக்கப்போகுது சொல்லுங்க, எங்கிட்ட ஆதாரத்தை வாங்கீட்டு என்ன அனுப்பிடுவீங்க, என்ன வீட்டுக்கா, இல்ல சொர்க்கத்துக்கான்னு தான் தெரியாது….”

“நீ சொல்லப்போறது என் தம்பியைப் பத்தினதுன்னு எனக்கு நல்லாத்தெரியும், உங்கிட்ட என்ன ஆதாரம் இருக்கோ அதெல்லாம் என்கிட்டயும் இருக்குமா… என்ன செய்யணும்னு நான் முடிவு செஞ்சிட்டேன் உன்கிட்ட சொல்லி உன்னை இனிமேல் இந்த விசயத்துல தலையிட வேண்டாம்னு சொல்லத்தான் கூப்பீட்டேன், நம்பலைன்னா இங்க பாரு..” என்று அவர் மொபைலை நீட்ட அதில் ஓடிய காணொளிய் கண்டவளுக்கு அவர் சொல்வது உண்மை என்று புரிந்தது.

அவர் சொன்னபடி அனைத்து ஆதாரங்களையும் அவரிடம் ஒப்படைத்தவள், அவரிடம் உண்மை இருக்கிறது என்று நம்பியபடி அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் வெளியே கிளம்பவும், ஸ்ரீராம் உள்ளே செல்லவும் சரியாக இருந்தது.

அவனை வரவேற்ற ராமய்யா, ”உன்னைத்தான் எதிர்பார்த்திட்டு இருந்தேன் இங்க வா…” என்று அழைத்தவர்,

“உன்னை எந்த விவரங்களை சேகரிக்க சொல்லி அப்பாயிண்ட் பண்னேனோ, அதெல்லாம் இப்ப என்கைக்கு வந்தாச்சு… இதை ஆதாரமா வச்சு நடவடிக்கை எடுக்க ஆரம்பிங்க…”

அதே நேரம் அவரின் அழைபேசி ஒலிக்கத்துவங்கியது. எதிர்முனையில் பேசிய நபர் என்ன சொன்னாரோ, ”சரி நீவை நானே சொல்ரேன் என்ன செய்யலாம்னு…” என்று வைத்தவர், ஸ்ரீராம் ஏதோ கேட்க வரும் முன்,

“நீ நாளைக்கு நான் சொல்லும் போது வந்து என்னைப் பாரு…” என்று அனுப்பி வைத்துவிட்டார்.

ஸ்ரீராம் சென்றபின் தன் தனியறைக்குச் சென்று கதவைத் தாழிட்டவர் சற்று அழைப்பு வந்த அதே எண்ணுக்கு அழைத்திருந்தார்.

“என்னடா இப்ப சொல்லு…”

“அய்யா, நம்ம சின்னய்யாவை யாரோ கடத்தி கொண்டு போய் செம அடி அடிச்சு, காவேரியில போட்டிருக்காங்கயா… இப்பத் தான் கரை சேர்த்தோம், உயிரிருக்குங்கய்யா, ஆஸ்பத்திரி கொண்டு போகவாய்யா…”

“ஆஸ்பத்திரிலா ஒண்ணும் வேணா நான் சொல்றபடி செய்…”

“அய்யா சொல்லுங்கய்யா…”

அதன்பின் அவர்களுக்கு செய்யவேண்டியதை சொன்னவர் கண்களை இறுக மூடி அந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார்.

அடுத்த ஒருமணினேரத்தில்  அவர் சொன்னதை செய்து முடித்து அவரது ஆட்கள் அழைப்பு விடுக்க, “இனிமே நீங்க யாரும் அங்க இருக்க வேணாம், அவங்கவங்க வீட்டுக்கு போயிடுங்க…யாரும் கால் பண்ணவேணாம் உங்களுக்குள்ள கூட சந்திச்சுக்கக்கூட வேண்டாம்…”

“சரிங்கய்யா…” என்று போனை வைத்தவர்கள், வேந்தனின் சடலத்தை கரையோரத்தில் போட்டுவிட்டு கிளம்பியிருந்தனர்.

அதற்கு அடுத்த நாள் காலை நாளிதழலில் “நதிக்கரையோரம் மர்ம பிணம்…” என்று செய்தி வந்திருந்தது.