வெகு நாட்களுக்கு ஏன் வருடங்களுக்கு பின் அன்று அரசவை ஒரு வழக்கை விசாரிக்க கூடியிருந்தது. பொதுவாக வழக்குகளை சட்ட மந்திரி அரண்மனைக்கு வெளியே வைத்து முடித்துவிடுவார். இந்த வழக்கு சற்று சவாலாக போகவே அரசர் வரை கொண்டு வந்திருந்தார்.
அப்படி என்ன வழக்கு என்று நாம் பார்க்கும் முன்னர் அந்த அவையில் யார் யார் இருக்கிறார்கள் என்று சிறிய அறிமுகத்தை காணலாம். முதலில் அரசர் அரசிக்கென தேக்கு மரத்தால் செய்யப்பட்டு தங்க அணிமணிகளால் அலங்கரிக்கப்பட்ட ராஜ இருக்கைகள் மேடைமீது கம்பீரமாய் அவர்கள் வரவுக்காய் காத்திருந்தது.
அந்த இருகைக்களுக்கு வலது பக்கம் தடாகபுரி நாட்டின் ராஜகுரு மகிஷந்தன் அமர்ந்திருந்தார். மேலும் ஒன்பது மந்திரிகளை உள்ளடக்கி இருந்தது அந்த அவை. அதில் முக்கியமான மூன்று நபர்கள் மனுகேசரி, விஸ்வகன் மற்றும் அந்திரையன் ஆவர். அதோடு தளபதியும் அங்கிருந்தார்.
இவர்கள் அனைவரோடு சேர்ந்து அந்த வழக்கின் இரண்டு பக்க ஆட்களும் சில மக்களும் அங்கே கூடியிருந்தனர். இது ஒரு அவசர வழக்காதலால் இன்று அவை சற்று காலையிலே கூடிவிட அரசனும் அரசியும் அவசரமாக வந்து சேர்ந்தனர். ஏனெனில் இது தாமதிக்க கூடிய வழக்கும் அல்லவே.
அது என்ன அப்படி ஒரு விசித்திர வழக்கு என்று நீங்கள் எண்ணலாம். இதோ வழக்கு ஆரம்பமாகிவிட்டதே நாமும் சென்று அதை கவனிப்போம்.
“அரசர் அரசிக்கு என் பணிவான வணக்கங்கள்” அரசரை முதலில் வணங்கி ஆரம்பித்தார் மந்திரி மனுகேசரி
“வணக்கம் மந்திரி மனுகேசரியாரே! இன்று எதற்கு அரசவையை இவ்வளவு காலை நேரத்தில் கூட்டி இருக்கிறீர்கள்? விரைந்து கூறுங்கள்”
அரசர் கேட்டவுடன் தன் தலை தாழ்த்தி சரி என்ற சட்ட மந்திரி மனுகேசரி அவர் கொணர்ந்த வழக்கின் சாராம்சத்தை எடுத்துரைக்க துவங்கினார்.
“நான் இன்று காலை வேலையே அரசவையை கூட்ட காரணம் உண்டு அரசே. இங்கே உங்கள் முன்னால் நிற்கிறார்களே இவர்கள் இருவரும் சகோதரர்கள்” என முன்னால் நின்ற இருவரை சுட்டிக்காட்டிய மந்திரி தொடர்ந்தார்.
“இவர்களின் தந்தை அமுதனுக்கு பிறந்த மூத்த மகன் இவர் சாரங்கன் மற்றும் இவர் அவரின் இரண்டாவது மகன் குமரன். இவர்களை ஒன்று போல் வளர்த்து இருவருக்கும் சமமாக அவர்தன் நிலங்களை பகிர்ந்துக் கொடுத்தும் விட்டார்”
“சரி இதை எல்லாம் சரியாகதானே செய்திருக்கிறார். இதில் என்ன அவசர வழக்கு? என்று இடையில் கேட்டார் அரசர்.
“இதில் எந்த சிக்கலும் இல்லை அரசரே. இன்னும் சொல்லப்போனால் இவர்களின் சண்டையே இந்த சொத்தை சார்ந்து இல்லை” என மனுகேசரி தொடர்ந்தார்.
“இன்னும் சொல்ல போனால் இது உரிமை சார்ந்த வழக்கு அரசே. வழக்கு என்னவென்றால் சாரங்கன் அமுதனுக்கும் அவர் மனைவிக்கும் பிறந்த மகன். ஆனால் குமரன் அவரின் தத்துபிள்ளை. இதுவரை இந்த விஷயத்தில் எந்த வேறுபாடும் இருவருக்கிடையில் இல்லாமலே இருக்க நேற்று மாலை அமுதன் இயற்கை எய்திவிட்டார்.
இப்போது இவர்களுக்கு இடையேயான வழக்கு என்னவென்றால் ‘யார் அமுதனுக்கு இறுதி சடங்குகளை செய்வது?’ என்பதே. சாரங்கனோ தான் மட்டுமே அவரின் ரத்த உறவு என இறுதி சடங்கு செய்ய முன்வந்து நிற்க குமரனோ தானும் அவரின் பிள்ளை அதுவும் இளைய மகன் எனவே தானே இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்கிறார்.
இப்போது யார் இறந்த அமுதனுக்கு இறுதி சடங்கு செய்வது என்பதே இன்றைய வழக்கு அரசே. இவ்வழக்கில் எவ்வளவு விரைவாக தீர்ப்பு கிடைக்குமோ அதை பொறுத்தே அங்கு சடங்குகளும் நடைப்பெறும் அரசே”
மந்திரி மனுகேசரி கூறி முடிக்க இப்போது அங்கிருந்த அனைவருக்கும் அவை ஏன் அவசரமாய் கூட்டப்பட்டது என்று தெளிவாய் புரிந்தது.
அரசர் தற்போது இருவரையும் கண்டு தங்கள் தரப்பை கூற உத்திரவிட முதல் மகன் பேசினான்.
“வணக்கம் அரசே! நான் சாரங்கன். எனது தந்தை என் தம்பியென குமரனை அழைத்து வந்த போதும் சரி அவனுக்கு சமமாக நிலங்களை தந்தபோதும் சரி எனக்கு அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருந்ததில்லை அரசே. ஆனால் என் தந்தைக்கு இறுதி மரியாதை என வரும் போது என்னால் அதை விட்டு தரமுடியவில்லை அரசே”
பாவம் போல் சாரங்கன் பேசி முடிக்க அடுத்து குமரனுக்கு பேச அனுமதி அளிக்கப்பட்டது.
“அரசருக்கு என் வணக்கங்கள். அரசே நான் என் வீட்டின் தத்துப்பிள்ளை என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் என்னதான் தத்துபிள்ளையாய் இருந்தாலும் நானும் அவரின் பிள்ளைதானே அரசே. தாய்க்கு தலைமகன் தந்தைக்கு இளைய மகன் என்றொரு வாக்கு உண்டு. அதன்படி எனக்கு இந்த உரிமையை என் சகோதரனை விட்டுதர சொல்லுங்கள் அரசே” என்றான் கண்ணீரோடு இளைய மகன்.
இப்போது அரசருக்கே இருவரையும் பார்க்க பாவமாய் போய்விட என்ன தீர்ப்பை கூறுவது என புரியாது பார்த்து வைத்தார்.
“சரி கடைசியாக இத்துனை நாட்கள் யாருடன் உங்கள் தந்தை தன் காலத்தை கழித்தார்?” என அரசன் லிங்கவேந்தன் கேட்டிட “என்னுடன்தான் அரசே” என்றான் இளையமகன்.
அரசர் மேலும் பேசும் முன்னர் “அரசருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்” என்றவாறு வயதான ஒருவர் அந்த அரசவைக்குள் அவசரமாக நுழைந்தார்.
“இடையே வந்து இங்கே நடக்கும் வழக்கை தடை செய்வது போல் பேசுவதிற்கு என்னை மன்னிக்கவும் அரசே. ஆனால் இங்கு ஒரு முக்கியமான சாட்சியமாகவே நான் வந்துள்ளேன்” என்றார் அந்த வயோதிகர்.
“தாங்கள் யார் ஐயா? அதை முதலில் கூறிவிட்டு தாங்கள் கூற வேண்டியதை கூறுங்கள்” என்றார் அரசர்.
“என்னுடைய பெயர் ராக்கையன் அரசே. இறந்து போன அமுதனின் நெருங்கிய தோழன்” தன்னை அறிமுகம் செய்தபின் அரசர் மேலே சொல்லுங்கள் என்க தொடர்ந்தார் ராக்கையன்.
“அமுதன் என்னதான் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்த்திருந்தாலும், அவருக்கு இரண்டு பிள்ளைகளும் எப்போதும் ஒன்றுதான். அவன் சில நாட்களுக்கு முன்னால் என்னை அழைத்து தான் இறந்தால் யார் தனக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டும் என என்னிடம் கூறினான் அரசே.
அவன் மனைவி இறந்தபோது இதோ இந்த சாரங்கனே மூத்த மகனாக அவருக்கு எல்லா மரியாதையும் செய்தான். எனவே தான் இறந்தால் தன்னுடைய இளைய மகன்தான் தனக்கு எல்லா சடங்குகளையும் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தான்.
அப்போதே அவரின் இளைய மகனும் இந்த குடும்பத்தில் தான் வேறு ஆள் என்று எப்போதும் கொண்ட தாழ்வான எண்ணத்தை விடுவான் என்றார். அதற்காகவே தன்னுடைய கடைசி நாட்களை இளைய மகனுடன் கழித்தார்.
நான் ஒரு வேலை காரணமாக அசலூருக்கு செல்ல நேர்ந்ததால் அவர் இறந்த நேரத்திற்கு என்னால் அங்கு இருக்க முடியவில்லை. இதை கேள்வியுற்றவுடன் நானும் விரைந்து வந்தேன். அதற்குள் இவர்கள் இருவரும் இங்கே வந்து விட்டனர். அதை கூறவே நான் தங்கள் முன் வந்தேன் அரசே!” என்று முடித்தார்.
அங்கிருந்த அனைவரும் இதை எல்லாம் கேட்டபடியே இருக்க இப்போது அந்த மூத்த மகனுக்கு அவன் தந்தையின் நோக்கம் நன்றாக புரிய அழுதபடி
“இதுவே என் தந்தையின் விருப்பம் என்றால் நான் சொல்ல எதுவும் இல்லை அரசே. எனது சகோதரனே எல்லா சடங்குகளையும் நடத்தட்டும்” என்றுவிட்டான்.
இந்த வழக்கு சிக்கல் இல்லாது முடிய அதையே அரசரும் தீர்ப்பாய் கூறி அனைவரையும் அனுப்பி வைத்தார். இதன்மூலம் மீண்டும் தடாகபுரியில் என்றும் போல் நீதி மட்டும் அல்லாது நேசமும் வென்றது.
இங்கே இப்படி ஒரு வழக்கு நடந்து முடிய அதில் அனைவரும் அங்கு குழுமியிருந்ததை தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்ட தடாகையும் தன் ஆசையை நிறைவேற்ற வஞ்சிக்கொடியை ஏய்த்து அவளையும் உடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டாள்.
காலை ஒரு வழக்கு அவைக்கு வருகிறது என்ற செய்தி கேட்டதில் இருந்து அவள் மனதில் துளிர்விட்ட ஆசையை நிறைவேற்ற ஒரு சந்தர்ப்பம் அமைந்தது என வேகமாய் கிளம்பி சென்ற தளபதியின் முன் சென்று நின்றாள் தடாகை.
“தடாகை இன்று அவையில் ஒரு அவசர வழக்கிற்காய் தந்தை செல்கிறேன் மகளே” என்று துவங்கவே
“போய் வாருங்கள் தந்தையே. ஆனால் தாங்கள் செல்லும் முன் என் ஆசை ஒன்றை கூறுவேன். அதற்கு மறுக்காமல் தாங்கள் சம்மதம் சொல்ல வேண்டும்”
“என் செல்ல மகளுக்கு அப்படி என்ன ஆசை தங்கமே?”
“அது வந்து தந்தையே, என் தோழி வஞ்சிக்கொடி இருக்கிறாள் அல்லவா. அவள் என்னை அவள் இல்லத்திற்கு அழைத்து செல்ல விரும்புகிறாள். நெடுநாளாக கேட்டு வருகிறாள். இன்று நானும் அவளோடு சிறிது நாழிகை சென்று வரவா?”
கண்களில் ஆசையை தேக்கி வைத்து கேட்ட மகளின் ஆசையை நிராகரிக்கவும் மனம் வரவில்லை அந்த அன்பு தந்தைக்கு. ஆனால் மகளை அரண்மனையை விட்டு வெளியே தனியாக அனுப்ப மிகவும் தயங்கி நிற்க,
“தந்தையே தாங்கள் என் பாதுக்காப்பை குறித்து கவலை கொள்கிறீர்கள் என்றால் அது தேவையே இல்லை. ஏனெனில் நான் நம்முடைய காவலர்கள் சிலரை என் பாதுகாப்புக்கென என்னுடன் அழைத்து தான் செல்கிறேன் தந்தையே. மேலும் தங்கள் மகளின் வீரத்தை நன்கு அறிந்தவர் தாங்கள். எனவே பயங்கொள்ளாது எனக்கு உத்தரவு தாருங்கள் தந்தையே”
அது இதுவென பாசமாக கெஞ்சி தளபதியின் சம்மதம் பெற்ற பின்னரே அவரை அனுப்பி வைத்தாள் தடாகை. அதன் பின் சற்றும் தாமதிக்காது வஞ்சிக்கொடியிடம் தான் அவளுடன் அவள் இல்லத்திற்கு வரப் போகிறேன் என்று கூற ஆச்சரியத்தில் வாய் விட்டே கேட்டுவிட்டாள் வஞ்சிக்கொடி
“என்ன தடாகை நான் இதற்குமுன் எத்துனை முறை உன்னை என் இல்லத்திற்கு அழைத்தேனேடி. அப்போதெல்லாம் கூட பின்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தாயே. இன்று என்ன அதிசயம் நிகழ்ந்தது. என்னுடன் வருகிறேன் என்கிறாய்?” என்றாள்.
அதற்கு கொடியை செல்லமாக முறைத்த தடாகை “என்னடி கொடி உன் கவலை. முன்னே நான் உன் இல்லம் வரவில்லையென கோபித்துக் கொள்வாய். இப்போது நான் வருகிறேன் எனும் போது இத்துனை கேள்விகள் கேட்டால் என்னடி அர்த்தம். நானே என் தந்தையிடம் போராடி உன்னோடு வர சம்மதம் பெற்றிருக்கிறேன். தற்போது நான் வரவா வேண்டாமா?” என கேட்க
தன் உயிர் தோழி தன்னோடு வருவதே போதும் என்ற மகிழ்வில் உடனே மகிழ்வுடன் சரி என்றிருந்தாள் வஞ்சிக்கொடி. ஆனால் அவள் எதற்கு வருகிறாள் என்று தெரிந்தால் என் செய்வாளோ கொடி?
தடாகையோ மகிழ்வுடன் அந்த அரண்மனையை விட்டு முதல்முறை வெளியே வந்தாள். இதுவரை வாள் பயிற்சியில் இருத்த ஆர்வத்தில் அரண்மனையை விட்டு வெளியே எங்கும் போய்வர எண்ணியது கூட இல்லை தடாகை. ஆனால் தற்போது அவள் வாழ்வில் முதன்முறையாக சுதந்திரமான பரந்த பாரை காண கிளம்பி விட்டாள்.
அப்படி போகும் இடத்தில் அவள் பார்க்க போகும் நபராலே அவள் வாழ்வின் இடர் காலம் துவங்கும் என்று எண்ணியிருந்தாள் செல்ல யோசித்திருப்பாளோ!