அந்த இரவு வேளையில் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது இரண்டு உருவங்கள். யார் என்று உற்று பார்த்ததில் தெரிந்தது அது தடாகை மற்றும் வழுதியின் நட்பு கூட்டணி என்று.
வழுதி கொடுத்த யோசனை இதுதான் “தடாகை இரவு நேரம் அனைவரும் துயில் கொண்ட பிறகு, நாம் யாருக்கும் தெரியாது பட்டறைக்கு செல்லலாம். அன்றைய நாள் எனக்கு கற்பிக்கப்பட்ட அனைத்து வித்தைகளையும் நான் கற்றுக் கொண்டு வந்து உனக்கு கற்பிக்கிறேன்.
நீ வாள்வீச கற்று கொள்ளலாம், அதே போல் நாம் இருவரும் சிறிது நேரம் எப்போதும் போல் விளையாடவும் செய்யலாம். அதன்பின்னர் நீ உன் மாளிகைக்கும் நான் என் மாளிகைக்கும் சென்றுவிடலாம்” என்றிருந்தான்.
அந்த யோசனையின்படி இருவரும் இன்று முதல் நாள் யாரும் அறியாது பட்டறைக்கு செல்ல, நிலா முற்றத்தில் நின்றிருந்த தழலேந்தி இரு உருவங்கள் மாளிகையில் இருந்து பதுங்கி செல்வதை கவனித்து விட்டான். பின்னே பொதுவாக பயிற்சி பட்டறையை சுற்றி நன்கு வெளிச்சமாகவே இருக்கும்.
இதில் அங்கே இருவரும் போய் தங்கள் பயிற்சியை தொடரலாம் என முடிவெடுத்த இருவரின் மூளையையும் என்ன செய்வது. “இந்த நேரத்தில் யார் பட்டறையின் பக்கம் செல்வது?” என குழம்பிய தழலேந்தி வேகமாக தன் வாளை எடுத்துக் கொண்டு வந்தான்.
“வழுதி யாரேனும் நம்மை பார்த்துவிட்டால் என்ன செய்வது?”
“நீ ஒன்றும் ஐயம் கொள்ள வேண்டாம். நாம் வருவதை யாரும் பார்க்கவில்லை”
திடீரென வழுதியின் குரலோடு ஒரு பெண்ணின் குரல் கேட்கவும் அங்கே வந்து தழலேந்தி குழம்பினான். ‘யாராக இருக்கும்?’ என மறைந்து நின்று பார்க்க அந்த பெண்ணின் பின்புறம் தான் தெரிந்தது.
‘உள்ளே சென்று பார்க்கலாமா வேண்டாமா?’ என அவன் யோசித்து நின்றிருக்க
“நமது பயிற்சியை துவங்கலாமா தடாகை?” என்று வழுதியின் கேள்வியில் தழலேந்திக்கு புரிந்தது அங்கிருப்பது தடாகைக்குழலி என்று. அதன்பின் தான் புரிந்தது நண்பர்கள் இருவரும் இங்கு பயிற்சிக்கு வந்திருப்பது. சிறிது நேரம் அவர்கள் பயிற்சி செய்வதை நின்று ரசித்து பார்த்திருந்த தழல் அதன் பின்னர் சிரிப்புடன் அவன் அறைக்கு சென்றுவிட்டான்.
“தடாகை… அஹ் நான் மிகவும் களைத்துப்போய் விட்டேன். காலை முழுவதும் பயிற்சி இப்போதும் பயிற்சி என இன்று சற்று அதிகமாகவே வேலை செய்துவிட்டேன் அல்லவா அதான்”
ஓய்ந்து போய் அமர்ந்த வழுதி இப்படி கூற அவனை பாவமாய் பார்த்து வைத்த தடாகை “இது எல்லாம் என்னால் தானே. நான் உன்னிடம் உதவி என்று கோரது இருந்திருந்தால் இப்பொழுது நீயும் ஓய்வில் இருந்திருப்பாய். என்னை மன்னித்து விடு வழுதி” என சோகமாய் கூறினாள்.
அவள் சோகத்தை பார்த்த வழுதி சட்டென்று தன் முகத்தை மாற்றி “அதெல்லாம் ஒன்றுமில்லை தடாகை. இன்று முதல் நாள் என்பதால் இப்படி இருக்கிறது போக போக பழகிவிடும். அதுவும் நான் கடந்த இரண்டு நாட்களாய் பயின்ற வித்தை அனைத்தையும் சில நிமிடங்களிலே நீ பயின்று விட்டாயே. அதனால் கவலை வேண்டாம் தடாகை” என சமாதானம் செய்தான்.
அதில் தானும் புன்னகை புரிந்த தடாகை “சரி இன்று வேறென்ன சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தது” என மற்ற கதைகளை பேச ஆரம்பித்து விட நண்பர்களின் நேரம் அதன்பின் வேகமாக நகர்ந்து விட்டது.
அரசி வேறு தடாகைக்கு காலை நேரம் ஓவிய பயிற்சிக்கு ஆட்களை ஏற்பாடு செய்திருக்க ஓவியம் வரைவது பிடித்துப் போன தடாகை காலை ஓவிய பயிற்சியில் முழுதாய் தன்னை மூழ்கடித்து விடுவாள். அவளின் ஓவிய திறனும் அபாரமாகவே இருந்தது.
அங்கு அவளுக்கு வஞ்சிக்கொடி என்ற ஒரு நல்ல தோழியும் கிடைத்திட காலை வேளை வஞ்சிக்கொடியுடன் செல்ல இரவு வேளை இளவழுதியுடன் என செல்லும் அவளது நாட்கள்.
வருடங்கள் சில இப்படியே கடக்க நண்பர்கள் இருவரும் இப்படி நடு இரவில் வந்து பயிற்சி செய்து விளையாட அங்குள்ள புள் பூண்டு முதற்கொண்டு இவர்கள் செய்யும் வேலையை கண்டுக் கொண்டுதான் இருந்தது. அவர்கள் பயிற்சி செய்வது அரண்மனையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் என்று அந்த இரண்டு நபர்களுக்குமே தெரிந்துதான் இருந்தது.
எனவே இப்போது பதுங்கி பதுங்கி எல்லாம் வருவதில்லை இருவரும் மாறாக எல்லோரும் உபயோகப்படுத்தும் அதே பாதையில் சவாதமாக பேசி சிரித்துக் கொண்டே போவது.
தடாகை இப்போது ஐந்தரை அடியில் குண்டு விழிகள் கூர் நாசி செப்பு இதழ்கள் வழவழப்பான நீண்ட கூந்தல் என நன்கு வளர்ந்து பார்ப்போர் கண்களை கவரும் அழகிய பருவ மங்கையாக நிற்கிறாள்.
முதலில் பயிற்சி என்னவோ தடாகைக்கு என்றே ஆரம்பித்திருக்க ஆனால் நடந்தது என்னவோ முற்றிலும் மாறாகதான் இருந்தது. ஆம் பதினைந்து ஆண்டுகள் பயிற்சி பட்டறையிலே காலம் கழித்திருந்த தடாகையின் நுணுக்கங்களை முற்று முதலாக கற்று தேர்ந்தான் வழுதி.
மொத்தத்தில் நண்பர்களின் கூட்டு பயிற்சி மிகவும் சுவாரசியமாக இருக்கும். தடாகை வாள் சுழற்றுவது அம்பு எய்வது என இரண்டிலுமே நன்றாக தேறி வந்திட வழுதிக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. இதில் சில நாட்கள் தளபதியே அவர் மகளின் பயிற்சியை மறைந்து நின்று காண வந்திடுவார்.
இந்த சில வருடங்களில் அந்த அரண்மனையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இளந்திரையனிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசிய வசந்தவள்ளி அந்த தடாகபுரி ராஜ்ஜியம் அவனது என்றும் அதன் அடுத்த மன்னனாக முடிச்சூடி வர வேண்டியது இளந்திரையன் என்றும் அவன் மனதில் ஏற்றியபடியே இருந்தாள்.
அவள் சொற்கள் பசுமரத்தாணி போல் அவன் மனதில் ஏறியபடிதான் இருந்தது. இதன் நடுவே ஒரு விந்தையான சங்கதியும் நிகழ்ந்தது. அது என்னவென்றால் இளந்திரையனுக்கு தழலேந்தியின் மீது ஏதோ ஒரு சொல்லொன்னா பாசம் உருவாகி இருந்தது.
இருவரும் சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்ததாலா இல்லை தன்னை போலே அவன் இளந்திரையனையும் நடத்துவதாலா என எந்த காரணத்தால் அவனை பிடித்தது என்று தெரியவில்லை. ஆனால் பிடித்தது தன் உடன்பிறந்த சகோதரன் இளவழுதியை விட பிடித்தது.
ஒருநாள் இளந்திரையன் விளையாட்டாக சென்று தழலிடம் கேட்டான். “தழலேந்தி ஒருவேளை இந்த தடாகபுரி ராஜ்ஜியம் வேண்டும் என்று நான் கேட்டால் என்ன செய்வாய்?”
அதற்கு சற்றும் யோசிக்காத தழல் “உன்னிடமே தந்துவிடுவேன் இளந்திரையா. நீ என் நண்பன் மட்டும் அல்ல என் உடன்பிறவா சகோதரனும் கூட. உனக்கு என் ராஜ்ஜியத்தை என்ன என் உயிரையும் கூட தருவேன் நண்பா” என பேசி சென்ற தழலேந்தியை வியப்பாய்தான் பார்த்து வைத்தான்.
தழலேந்தி அவன் ஏதோ விளையாட்டுதனமாய் கேட்பதாய் நினைத்து இப்படி கூறி செல்ல இளந்திரையனோ அது உண்மை என்றே நினைத்திருக்க அப்படி நடக்காத பட்சத்தில் இளந்திரையன் என்ன செய்வானோ அதை அவன் மட்டுமே அறிவான்.
சேந்தன் தழலேந்தியோ இப்போது நன்கு வீரமான ஆண்மகனாக வளர்ந்து விட்டான். பயிற்சி பட்டறையில் எல்லா பயிற்சியையும் பெற்று முடித்தவன் தற்போது தடாகபுரி நாட்டிற்கான காவல் பணியில் ஈடுபட்டு வருகிறான். அவனே இளவரசன் அடுத்த அரசன் என இன்னும் பலருக்கு தெரியாதது அவனுக்கு சாதகமாய் போனது. எனவே சுதந்திரமாய் தடாகபுரி நகரில் காவல் பணி புரிந்தபடி சுற்றி வருவதோடு மக்கள் நலன் பற்றியும் அறிந்து வருகிறான்.
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் வளர்ந்து நிற்க இதற்காகத்தான் நானும் காத்துக் கொண்டிருந்தேன் என தன் வேளையை போட்டுக் காட்ட காத்திருந்தது அவர்களின் விதி!
அன்று காலை நேரத்தில் தடாகையை காண வந்திருந்தான் இளவழுதி. “என்ன வழுதி இன்றைக்கு இவ்வளவு காலை வேளையிலே என்னை காண வந்திருக்கிறாய். என்ன சங்கதி?”
தோரணையாய் கேட்டு நின்ற தோழியை பொய்யாய் முறைத்த வழுதி “இப்போதெல்லாம் உன் வாள் கொண்ட கைப்போல் வாயும் மிகவும் நீண்டுவிட்டது தடாகை. இன்று நான் ஏதோ மகிழ்வான மனநிலையில் இருப்பதால் பிழைத்து போகிறாய் என விடுகிறேன்” என்றான் அவனும் விளையாட்டாய்.
அவன் பதிலில் சிரித்த தடாகை இவ்வாறு கேட்டாள் “சரி அப்படி என்ன மகிழ்ச்சி நிலை. சொல் நானும் தெரிந்து கொள்கிறேன்”
“சொல்லவேண்டுமா?” என்று அவன் வம்பு பேசி தடாகையின் முறைப்பை வாங்கிக்கொண்டவன்
“சரி சரி முறைக்காதே என் அன்பு தோழியே! நானே கூறுகிறேன். நம் தடாகபுரி நகரின் வடக்கே காந்தாரி காடு இருக்கிறது அல்லவா. அங்கே இருக்கும் அருவியில் நானும் எனது தோழர்களும் நீராட செல்கிறோம்”
காட்டு அருவியில் நீராட செல்வதை மகிழ்வுடன் சொல்லி சென்றான் வழுதி. அவன் சொல்லி சென்ற பின்னர் அதை பற்றியேதான் நினைத்தபடி இருந்தாள் தடாகை. ‘காட்டு அருவியா இத்தனை நாட்கள் இந்த தடாகபுரியில் இருந்தும் அந்த காட்டு அருவிக்கு செல்ல தோன்றவில்லையே. நம்மால் அங்கே போக முடியுமா?’
வழுதி எப்போது அந்த காடு மற்றும் காட்டு அருவி பற்றி சொல்லி சென்றானே அதிலிருந்து அதை பற்றியே நினைக்க ஆரம்பித்துவிட்டாள். அன்றைய ஓவிய பயிற்சி அறையிலும் தடாகை அதே யோசனையில் இருக்க சில நிமிடங்களிலே அவள் மாற்றத்தை கண்டுக் கொண்டாள் வஞ்சிக் கொடி.
தடாகைக்கு எப்படி இளவழுதி ஒரு நல்ல நண்பனோ அதேபோல் வஞ்சிக்கொடியும் பழகிய சில நாட்களிலே நல்ல தோழியாகி போனாள். அதுவும் சில நேரங்களில் இளவழுதியிடம் பகிர முடியாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் சிறந்த தோழியும் ஆகிப்போனாள் என்றால் அது மிகையல்ல.
அதனால் அவள் முகத்தை வைத்தே அவள் கவனம் இங்கில்லை என்பதை புரிந்து அவள் அருகே வந்த கொடி “தடாகை… தடாகை” என அவள் கரத்தை பிடித்து அழைத்தாள்.
அந்த தொடுகையில் தன் எண்ணத்திலிருந்து வெளியே வந்த தடாகை “என்னடி கொடி? எதற்கு அழைத்தாய்?” என்று ஒன்றும் புரியாமல் கேட்க
“எதற்கா நீதான் வந்ததில் இருந்து ஏதோ கனவு உலகத்தில் இருக்கிறாயே. அதான் என்னவென்று கேட்க உன்னை அழைத்தேன்” என்றாள் கொடி.
“அதுவா.. உன்னிடம் சொல்வதற்கு என்ன கொடி. இன்று காலை என்னை காண என் தோழன் வழுதி வந்திருந்தான்” என துவங்கியவுடன்
“அவனை தான் நீ அனுதினமும் பார்க்கிறாயே. அப்புறம் என்ன அவனை ஏதோ கண்டே பல வருடம் ஆகி மீண்டும் பார்த்ததை போல் கூறுகிறாய்” என இடைப்புகுந்தாள்.
“அடியே கொடி என்னை முழுதாய் கூறவிடு” என்றவள் காந்தாரி காட்டை பற்றியும் அதில் ஓடும் அருவியை பற்றியும் கூறியவள்
“வழுதி கூறியபோதே என் மனதிற்குள்ளும் ஆசை துளிர்விட்டு விட்டதடி கொடி. நான் இதுவரை இந்த அரண்மனையை தாண்டி சென்றதில்லை. ஆனால் வழுதி இன்று அவ்வளவு மகிழ்வுடன் சொல்லி சென்றது என் கண்ணிற்குள் அப்படியே நிற்கிறது” என ஒரு பெருமூச்சுடன் சொல்லி முடித்தாள்.
“அதற்கு நாம் என்ன செய்ய முடியும் தடாகை. நானாவது ஒரு சாதாரண வணிகர் குடும்பத்து பெண் ஆனால் நீயோ இந்நாட்டின் தளபதியின் மகள் நாம் எப்படி காந்தாரி காட்டிற்கு செல்வது. அதுவும் தடாகபுரியின் வடக்கு திசையின் முடிவில் உள்ளது அந்தகாடு. பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருக்கும் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே இருக்கும் அருவிக்கு நாம் செல்வதென்பது இன்றைய பிறவியில் நடக்கூடியது இல்லையடி தடாகை. எனவே வீண் கணவை காணாது நீ துவங்கிய ஓவியத்தை முடிக்கும் வழியை பார்”
வஞ்சிக்கொடி நிதர்சனத்தை கூறி செல்ல அதை ஏற்கமுடியா தடாகையோ உதட்டை சுழித்துக் கொண்டு மனதில் பொறுமலுடன் அமர்ந்திருந்தாள். ஆனால் எப்படியாவது அந்த அருவியில் ஒருமுறையாவது நீராடி விளையாட வேண்டும் என்ற அவா மட்டும் அவள் மனதில் வலுப்பெற்ற அப்போதுதான் அந்த எண்ணம் சட்டென்று அவள் மனதிற்குள் வந்துப் போனது.