தளபதிக்கு தன் ஆசை மகளிடம் அவள் நிலையை எப்படி எடுத்து சொல்வது என்று புரியவில்லை. அதற்கு தான் பெண் பிள்ளைகளுக்கு தாய் என்று ஒருத்தியின் துணை இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் போலும் என்பதை உணர்ந்தார் கமலந்தன்.
ஆனால் இப்பொழுது தடாகையின் உடல் மாற்றத்தை எப்படி எடுத்து கூறுவது என்று யோசித்த தளபதி “தடாகை நீ இங்கேயே இரு அம்மா. தந்தை இப்போது வந்துவிடுகிறேன்” என்க
அவர் முகத்தில் இதுவரை கண்டிராத பதட்டத்தை கண்ட தடாகைக்கு என்ன தோன்றியதோ சரி என்று தலையசைத்தாள்.
அவள் தலை அசைத்தவுடன் அறையிலிருந்து வெளியேறி அங்கிருந்த பணிப் பெண் ஒருவரை அழைத்து வந்து அறைக்குள் அனுப்பினார்.
திடீரென தளபதி வந்து அழைத்ததும் என்னவென்று புரியாமல் வந்த அந்த சேடிப்பெண் உள்ளே சென்று தடாகையின் நிலையை பார்த்து அதிர்ந்துவிட்டாள். கால் வழியே குருதி வழிய ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்த தடாகையை காணும் போது தளபதி எதற்கு அவ்வளவு பதட்டத்துடன் வந்து தன்னை அழைத்து வந்தார் என்று புரிந்தது.
“தடாகை பயப்படாதீர்கள் தாயே. இது ஒன்றும் இல்லை எல்லா பெண்களுக்கு நடக்கும் இயற்கையான ஒரு நிகழ்வுதான் இது” என ஆரம்பித்து சிலபல தேவையான அறிவுரைகளை கூறி அவளை குளிக்க அனுப்பி வைத்தாள்.
தடாகை குளிக்க சென்றபின் அவளுக்கு தேவையானதை எடுத்து தந்து அந்த இடத்தையும் சுத்தம் செய்து விட்டு வெளியே சென்றாள் தளபதியை காண.
“என்னவாயிற்று? என் பிள்ளை எப்படி இருக்கிறாள்? என்ன செய்கிறாள்?”
படபடப்புடன் கேட்டு நின்ற தளபதியை காணும் போது சற்று வருத்தமாய் போனது அச்சேடி பெண்ணிற்கு.
“தாங்கள் ஒன்றும் ஐயப்பட வேண்டாம் தளபதி அவர்களே. தங்கள் மகள் தடாகை நீராட சென்றிருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்” என கூறி மரியாதையாக நகர்ந்துவிட்டார்.
போர் என்றால் முதலில் நின்று நாட்டிற்கு ஆபத்தான எந்த சூழ்நிலை வந்தாலும் தளராது கையாண்ட அந்த தளபதிக்கு அதன்பின்னர் என்ன செய்யவேண்டும் என புரியாது போக அப்படியே தளர்ந்து போய் அமர்ந்துவிட்டார். அங்கே இருந்து சென்ற சேடிப்பெணோ நேராக சென்று நின்றது அரசியின் அறை முன்பே.
“ஊர்மிளை அரசி அவர்களை தற்போது காண முடியுமா? ஒரு முக்கியமான சங்கதியை அவரிடம் கூற வேண்டும். இது தளபதி அவர்களின் புதல்வி தடாகையை பற்றிய சங்கதி”
அரசியின் சேடிப்பெண்ணிடம் இவள் வேண்டி நிற்க அந்த பெண் தடாகையின் பெயரை கேட்டதும் உடனே அரசியிடன் சென்று சம்மதம் வாங்கி வந்தாள்.
“வா பெண்ணே! தடாகைக்கு என்ன ஆனது எதற்கு இவ்வளவு பதட்டமாக வந்திருக்கிறாய். தடாகை நலம்தானே?” வரகுணசுந்தரியும் சற்று பதறிப்போய் கேட்க
“பதற்றம் வேண்டாம் அரசி. தடாகைக்குழலி நலமாகவே உள்ளார். அவருக்கு தவறாக எதுவும் நிகழவில்லை நல்ல சங்கதி தான் நிகழ்ந்துள்ளது அரசி அவர்களே. அதை தங்களிடம் தெரியப்படுத்தவே நான் இவ்விடம் வந்தது” என்று நிறுத்தினாள் சேடிப்பெண்.
“நல்ல சங்கதியா? அப்படி என்ன நிகழ்ந்தது. எதுவாக இருந்தாலும் வேகமாக சொல் பெண்ணே”
“அரசி அவர்களே தளபதியின் மகள் தடாகை வயதிற்கு வந்துவிட்டார்” சேடிப்பெண் கூறியதை கேட்டு அகமகிழ்ந்த அரசி “அப்படியா? எப்போழுது இது நிகழ்ந்தது? தடாகை இப்பொழுது எங்கிருக்கிறாள்?” என வரிசையாய் கேள்விகளை தொடுத்தார்.
“சற்று முன்னர் தான் அரசியாரே! தடாகையை நீராட அனுப்பி வைத்துவிட்டு தங்களிடம் இந்த தகவலை பகிர வந்தேன் அரசி”
“நல்லது பெண்ணே! நீ இப்போது செல்லலாம்” என அந்த பெண்ணை அனுப்பி வைத்துவிட்டு தன் பணிப்பெண்களுக்கு சில உத்திரவுகளை பிறப்பித்தார் அரசி வரகுண சுந்தரி. அவர்கள் அதை செய்து முடித்தவுடன் சிறிது நேரத்திலே தளபதியின் அரண்மனை நோக்கி பயணப்பட்டார் அரசி.
“தளபதியாரே நான் உள்ளே வரலாமா?” என கேட்டபடி புன்னகையுடன் உள்ளே வந்த அரசி அங்கு ஏதோபோல் அமர்ந்திருந்த தளபதியின் நிலை கண்டு அது எதனால் என அறிந்ததில் மனம் வேதனை கொண்டார். ஆனால் தளபதி பார்க்கும்முன் தன் முகத்தை மாற்றிக் கொண்டவர்
“என்ன தளபதியார் அவர்களே! பெற்ற மகள் வயதிற்கு வந்ததும் தங்களுக்கும் வயது ஏறுகிறது என்பதை உணர்ந்து ஐயம் கொண்டதால் சோர்ந்து போய் இப்படி அமர்ந்திருக்கிறீர்களா?” விளையாட்டாய் வினவி தளபதியின் தயக்கம் நீக்கினார் அரசி.
“வரவேண்டும் அரசியாரே! நான் ஏன் என் மூப்பை குறித்து ஐயம் கொள்ள போகிறேன். என் தடாகை பெரிய பெண்ணாகிவிட்டாள். இனி அவளுக்கு எவ்வளவு பார்க்க வேண்டி உள்ளது. அதற்குள் சோர்ந்து போகமாட்டான் இந்த கமலந்தன் தாயே”
கமலந்தனும் சூழல் உணர்ந்து அரசிக்கு ஏற்றவாறு பதில் உரைத்து புன்னகைத்தார். அவர் பேசியதில் தானும் சிரித்த அரசி “அப்படியானால் மகிழ்ச்சி தான் தளபதியாரே. ஆம் தடாகை எங்கிருக்கிறாள்?” என வினிவினார்.
“அறையின் உள்ளேதான் இருக்கிறாள் அரசியாரே!”
“மிகவும் நல்லது தளபதியாரே! நான் சென்று தடாகையை பார்க்கிறேன். சில சடங்குகள் செய்ய வேண்டி உள்ளது. அதையெல்லாம் செய்ய வேண்டும் அல்லவா. எனவே தாங்கள் இங்கேயே கொஞ்ச நேரம் காத்திருங்கள் தேவையானவற்றை தயார் செய்தபின் நானே தங்களை அழைக்கிறேன்”
இவ்வாறு கூறிய வரகுணசுந்தரி தடாகை இருந்த அறைக்குள் நுழைந்து பார்க்க ஏதும் அறியா குழந்தை போல் பயந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள். அவளை கண்டு ஒரு பெண்ணாய் அவள் அச்சம் புரிந்து கொண்டாள் வரகுணசுந்தரி.
“தடாகை!” அவள் புறம் நின்று அழைத்து மெதுவாக அவள் தலையை தடவிக் கொடுத்தாள். வரகுணசுத்தரியின் குரல் கேட்டதும் “அரசியாரே!” என தாவி அணைத்துக் கொண்டாள்.
“என் செல்லப்பிள்ளை தடாகையே என்ன பயந்து விட்டாயா செல்லமே ம்ம்? எப்போதும் வீரத்தோடு வாள் ஏந்தும் என் வீரப்பிள்ளைக்கு இன்று என்ன பயம்? இது ஒன்றும் பயங்கொள்ள வேண்டிய விஷயமில்லை தாயே. உலகில் உள்ள எல்லா பெண்களுக்கும் நடக்கும் பொதுவான ஒரு மாற்றமே”
பயந்துபோய் இருந்த தடாகைக்கு அரசியின் ஆறுதலான பேச்சு கொஞ்சம் தெம்பை தந்தது. பெண் குழந்தை இல்லாத அரசிக்கு தாய் இல்லா பிள்ளையான தடாகைமேல் சொல்லொன்னா பாசம் எப்போதும் இருக்கும். அவள் பெறாத பிள்ளையாகவே நினைப்பாள்.
அப்படிபட்ட பிள்ளையான தடாகைக்கு ஒரு நல்லது நடந்தது அவருக்கு அப்படி ஒரு மகிழ்வை தந்திருந்தது. அது அவரின் ஒவ்வொரு செயலிலும் தெரிய அடுத்து தடாகைக்கு நடக்க வேண்டிய சடங்குகளை நடத்தினார்.
அடுத்த நாளே அவள் பெரிய பெண்ணாய் ஆனதற்கு அரண்மனைக்குள் பெரிய விழாவையே ஏற்பாடு செய்துவிட்டாள் அந்த அரசி. நடந்த ஒவ்வொன்றும் புதியதாக இருக்க தடாகைக்கு நாட்கள் கொண்டாட்டம்தான்.
அனைத்து கொண்டாட்டங்களும் முடிந்த பின்னரே ஆரம்பமானது தடாகைக்கு தலைவலி. முதலில் தடாகை பயிற்சி பட்டறைக்கு போக தடைவிதிக்கப்பட்டது. மேலும் அவள் வீட்டை விட்டு வெளியே செல்ல பல தடைகள் போடப்பட நொந்துப்போனாள் தடாகை.
தந்தையிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் ஒரே வார்த்தையில் “இது அரசியின் உத்திரவு மகளே. அதை என்னால் மீற முடியாது. வேண்டுமானால் அரசியிடம் கேட்டுப்பார் அவர் அனுமதி அளித்தால் நீ எப்பொழுதும் போல் பயிற்சிக்கு வரலாம்” என்று சொல்லி சென்றார்.
அரசியிடம் சென்று கேட்டால் “நீ பெரிய பெண் ஆகிவிட்டாய் தடாகை. அதனால் நீ அங்கே ஆண்கள் இருக்கும் இடத்திற்கு செல்லக்கூடாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம் உனக்கு பொழுது போவற்கு உனக்கு வேறு பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்கிறேன்” என்றிட
அரசியை எதிர்த்தும் பேசமுடியாது தவித்துதான் போனாள் தடாகை. இங்கே இப்படி என்றால் பயிற்சி பட்டறைக்கு தினமும் வரும் இளவழுதியின் நிலை மிகவும் மோசமானது.
இளந்திரையனுக்கு சொல்லவே வேண்டாம் தடாகை என்றால் வேப்பங்காய் என்பதால் அவள் வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன எனக்கு ஒன்றும் இல்லை என அதை ஒரு பொருட்டாகவும் எடுக்கவில்லை.
தழலேந்திக்கு தடாகை பெரிய பெண் ஆனதில் மிகவும் மகிழ்ச்சியே. சிறு வயதில் இருந்து தன்னுடன் வளரும் பெண் அடுத்த நிலையை அடைந்து விட்டாள். இது அவளது வாழ்க்கை எப்படியும் அவள் மகிழ்வுடன் இருந்தால் அது போதும் என எண்ணி நின்றுக் கொண்டான்.
ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக தன்னுடன் வாய்க்கு வாய் கைக்கு கை சண்டையிட்டு அவனுடனே நகமும் சதையுமாய் இருந்த தடாகை இல்லாதது இளவழுதிக்குதான் ஒரு கையே இழந்தது போல் இருந்தது. அவனும் தடாகையை காண வேண்டும் என யார்யாரிடமோ கேட்டு பார்த்துவிட்டான்.
இளவழுதி எவ்வளவு முயற்சி செய்தும் யாரும் அவனை தடாகை இருக்கும் பக்கம் கூட அனுமதிக்கவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த இளவழுதி அன்று எப்படியேனும் தடாகையை பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து தக்க நேரத்திற்காய் காத்திருந்தான்.
இரவு நேரம் நிலவுமகள் அன்றென பார்த்து வான்வீதியில் நன்றாகவே உலா போனாள். அது வழுதிக்கு நல்ல நேரமாய் போய்விட யாரும் அறியாது தடாகை இருக்கும் மாளிகையின் புறம் பதுங்கி பதுங்கி சென்றுவிட்டான். அங்கே சென்றுவிட்டானே தவிர எப்படி எங்கே வைத்து தடாகையை காண்பது என முழித்துபடி நின்றிருந்தான்.
அதேநேரம் சோகமே உருவாக அந்த மாளிகையின் தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் தடாகை. எதேர்ச்சையாக அங்கிருந்த தன் தோழியை பார்த்த வழுதிக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாக வேகமாக அவளிடம் ஓடிவிட்டான்.
“தடாகை… தடாகை..” மகிழ்ச்சியாக அவள் முன் வந்து நின்ற வழுதியை கண்டு தானும் அகமகிழ்ந்து போனாள் தடாகை.
“வழுதி நீ.. நீ எப்படி இங்கு வந்தாய்?” என்றவள் யாராவது வருகிறார்களா என பார்த்துவிட்டு “நீ என்னுடன் வா வழுதி” என அவனை இழுத்துக் கொண்டு சற்றே வெளிச்சம் குறைவான இடத்திற்கு சென்றாள்.
“நீ எப்படி இருக்கிறாய் தடாகை. ஆமாம் நீ பெரிய பெண்ணாகி விட்டாயாமே தழல் கூறினான். அதனால் இனி பட்டறைக்கு பயிற்சிக்கு வரமாட்டாய் என்று அவன் கூறினான். ஏன் தடாகை இனி நீ என்னுடன் விளையாட வரமாட்டாயா?” பாவமாய் வழுதி கேட்டு நிற்க
“உண்மை தான் வழுதி. நானும் என் தந்தையார் மற்றும் அரசி என இருவரிடமும் எவ்வளவோ கெஞ்சி கேட்டுவிட்டேன். முடியாது என்று தீட்சண்யமாக மறுத்துவிட்டனர். எனக்கும் இங்கே நீ இல்லாது தனியாய் இருக்க மிகவும் கடினமாய் இருக்கிறது” அவளும் பாவம் போல் முடித்தாள்.
“அப்படி என்றால் என்னுடன் இனி விளையாட நீ வரவே மாட்டாயா தடாகை. வாள் வீசாது உன்னால் அந்த நாளை கழிக்க முடியுமா” அவன் கேள்விக்கு இல்லை என்று தலையசைத்த தோழியை எதுவும் செய்ய இயலா நிலையில் பார்த்து வைத்த வழுதி சில நிமிடம் அவளுடனே அமைதியாய் அமர்ந்திருந்தான்.
திடீரென எதோ தோன்ற துள்ளி எழுந்த வழுதி “தடாகை எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் உனக்கு சம்மதம் என்றால் கூறு நாம் எப்போதும் போல் மீண்டும் வாள் பயிற்சியில் ஈடுபடலாம்” என்க
“என்ன வழுதி? கூறு நான் வாள் வீச எப்படிபட்ட யோசனையாய் இருந்தாலும் அதை நான் செய்கிறேன்” தடாகையோ சத்தியம் செய்யாத குறையாக ஒப்புக் கொண்டாள். அப்படியே அவன் கூறியதை கேட்டு கண்கள் இரண்டும் மின்ன “இந்த யோசனையை கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இது நடக்குமா?” என கேட்டிட
அந்த விழிகளில் தெரிந்த ஆசை ஏக்கத்தை கண்டு அதை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற முடிவையே எடுத்துவிட்டான் வழுதி. அதன்படி அடுத்தநாள் என்னென்ன செய்யவேண்டுமென பேசி தடாகையின் சிரிப்பை பார்த்தப் பின்னரே தன் மாளிகையை நோக்கி நகர்ந்தான் வழுதி.