சில ஆண்டுகளுக்கு முன்…
தடாகபுரி நகரம். நன்கு பரந்து விரிந்து காணப்படும் ஒரு அழகிய நகரம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய வனம் அதிலிருந்து சலசலவென எந்த நேரமும் ஒடும் சிற்றோடை என இயற்கை அதன் ராஜ்ஜியத்தை நடத்தும் நகரம். காணும் இடம் யாவும் பச்சைப்பசேல் என இருப்பதை வைத்தே கூறலாம் அந்த நகரில் பஞ்சம் என்ற சொல்லுக்கு பலருக்கு அர்த்தமே தெரியாதென.
தடாகபுரி என்ற பெயருக்கு ஏற்றார் போல் அந்த நகரம் அதன் தடாகங்கள் அதாவது பல்வேறு நீர் நிலைகளை கொண்டதொரு இடம். அதிலும் அந்த அனைத்து தடாகங்களிலும் பூக்கும் தாமரை மலர்கள் மிக பிரசித்தி பெற்றது.
என்னதான் கடலுக்கு அருகில் இந்நகர் இல்லாமல் போனாலும் வணிகர்கள் பலர் விரும்பி வந்து சேரும் நகர் இந்த தடாகபுரி. இப்படிபட்ட நாட்டை இத்தனை வருடங்கள் ஆட்சி புரியும் அரசர் அரசியும் மிகுந்த நல் உள்ளம் கொண்டவர்களே.
அரசர் விபிஷவேந்தன் மற்றும் அரசி கமலநாச்சியார். இவர்கள் ஆட்சியில் இருந்த வரை அவ்வளவு செல்வ செழிப்புடம் திகழ்ந்தது தடாகபுரி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் லிங்கவேந்தன் மற்றும் வசந்தவள்ளி.
தங்கள் இரண்டு பிள்ளைகள் மேலும் அரசர் அரசி உயிரையே வைத்திருக்க அவர்களை அவ்வளவு செல்லமாக வளர்த்து வந்தனர். சில வருடங்களில் வசந்தவள்ளிக்கு திருமண வயது வர
பல நாட்டின் இளவரசர்களை தங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளையாக பார்க்க வசந்தவள்ளியோ தங்கள் ராஜ்ஜியத்தின் இருந்த ஒரு சிற்றூரின் இளவரசனான இளமாறனை தான் காதலிப்பாய் அவனை மட்டுமே மணம் செய்து கொள்வதாய் கூறி அடம்பிடிக்கலானாள்.
விபிஷன் மற்றும் நாச்சியாரும் தங்கள் பிள்ளையின் ஆசைக்கு வழிவிட்டு அந்த இளவரசனுக்கு அவளை திருமணம் செய்து வைத்தனர். அப்படி அவள் திருமணத்தின் போது இளமாறனின் தங்கையான வரகுணசுந்தரியை பார்த்தான் இளவரசன் லிங்கவேந்தன்.
வரகுண சுந்தரி அவள் பெயருக்கு ஏற்றார் போல் நல் குணத்தை வாய்க்கப்பட்டவள். அவள் வசந்தவள்ளியிடம் நடந்து கொண்ட முறையிலே இளம்வயது லிங்கவேந்தன் கவரபட்டுவிட்டான்.
அங்கேயே வைத்து அவனுடைய விருப்பத்தை அவன் பெற்றோரிடம் கூறிட வரகுண சுந்தரியின் நற்குணம் பிடித்து போனதால் வசந்தவள்ளியின் திருமணத்தோடு லிங்கவேந்தன் மற்றும் வரகுண சுந்தரியின் திருமணத்தையும் நடந்திவிட்டனர் அந்த அன்பு பெற்றோர்.
திருமணம் முடிந்து வந்த ஒரு வருடத்திலேயே அழகானதொரு ஆண் மகவை பெற்றொடுத்தாள் வரகுணசுந்தரி. தடாகபுரி நகரே அவன் பிறப்பை கோலாகலமாக கொண்டாட அவர்கள் மகவுக்கு சேந்தன் தழலேந்தி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். அதோடு லிங்கவேந்தனுக்கும் அரசனாய் முடிசூட்டு விழா அமோகமாக தடந்தோறியது.
இதையெல்லாம் பார்த்த வசந்தவள்ளிக்கு மனம் எப்போதும் போல் கொதிகலன் ஆனது. இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தில் பிறந்த தான் ஒரு சிற்றூரின் அரசியாய் இருக்க இங்கே வரகுணசுந்தரியோ ஒரு சிற்றூரிலிருந்து வந்து தடாகபுரி நகரின் அரசி ஆகிவிட்டாள் என்று ஆரம்பத்தில் இருந்தே வசந்தவள்ளி மனதில் ஒரு எண்ணம் இருந்து வந்தது.
ஆனால் அவள் கணவன் காட்டிய பாசத்தில் காதலில் இதுவரை அமைதி காத்து வருகிறாள். வசந்தவள்ளியும் தற்போது கருவுற்று இருக்க பெற்றோர்கள் கணவன் வீட்டார் தாங்கியதில் சற்று மனம் அமைதி அடைந்திருக்கிறாள்.
லிங்கவேந்தன் அரியணை ஏறிய பின் அவன் தந்தை செய்த பணியை தானும் திறம்பட நடத்தி வருகிறான். இப்படியே சில மாதங்கள் கடக்க ஒரு நாள் தடாகபுரியின் தளபதியாக புதிதாக பதிவி ஏற்றிருந்த கமலந்தன் ஒரு பெண்ணோடு அரசவை வந்தான்.
“அரசருக்கு என் வணக்கங்கள்”
“வாருங்கள் தளபதியாரே. என்ன இன்று அரசவை வரை வந்து இருக்கிறீர்கள். ஏதேனும் அவசர காரியமா? ஆம் உங்கள் அருகில் இருக்கும் பெண் யார்?” லிங்கவேந்தன் கேட்டு நிறுத்த
“அரசே! இவள் பெயர் பூங்கொடி. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம் அரசே. ஆனால் இவள் சாதாரண வணிக குலத்து பெண் என என் தந்தை எங்கள் காதலுக்கு தடை விதிக்க பார்க்கிறார். அதனால் தாங்கள் ஒரு நல்ல முடிவை கூறுவீர்கள் என உங்களை தேடி வந்தோம்” என்று முடித்தார் கமலந்தன்.
கமலந்தன் பார்ப்பதற்கு நான்கு தூண்களை சேர்த்து வைத்தது போல் இருப்பார். அவ்வளவு திடகாத்திரமானவர். முகம் பாறை போல் எப்போதும் இருகியே காணப்படும். அவரை காணுவோர் மரியாதையோடு பயத்தில் வணங்கி செல்வர். அப்படிபட்டவர் காதலில் விழுந்தாரா என்பதே லிங்கவேந்தனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
அதுவும் விட்டால் இப்போதே பத்து நபரை அடித்து வீழ்த்த தயார் என்பது போல் நின்று கொண்டு தன் காதலை கூறிய கமலந்தனை காண சிரிப்பாகவும் வந்தது லிங்கவேந்தனுக்கு. தன் அரியணையில் இருந்து இறங்கி
“கமலா அரசனாக அல்லாது உன் நண்பனாக கேட்கிறேன். பூங்கொடியை திருமணம் செய்ய என்னிடம் அனுமதி கேட்க இங்கு அழைத்து வந்தாயா? அல்லது தகவல் கொடுக்க அழைத்து வந்தாயா?” இவ்வாறு கேட்டான் அரசனவன்.
அதில் கொஞ்சமாக சிரிப்பை சிந்திய கமலந்தன் “நண்பன்
வேந்தனிடம் தகவல் கூறத்தான் அழைத்து வந்தேன்” என்றார் மேலும் சிரிப்புடன்.
இவர்கள் இருவரின் நட்பை பற்றி நன்கு அறிந்த வரகுணசுந்தரி “இவர்கள் இருவரும் இப்படித்தான். நீ வா பூங்கொடி நாம் உள்ளே சென்று பேசுவோம்” என்று பயந்தபடி நின்றிருந்த பூங்கொடியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
கமலந்தனின் தந்தைதான் இதற்கு முன்னால் இருந்த படைதளபதி. எனவே லிங்கவேந்தனும் கமலந்தனும் சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். இப்போது லிங்கவேந்தன் ஆட்சிக்கு வந்த பின் அவர் மகன் கமலந்தனுக்கு பொறுப்பை விடுத்து ஓய்வில் உள்ளார் அவர் தந்தை.
“வா வெளியே சென்று பேசலாம்” என கமலந்தனை வெளியே அழைத்து சென்ற வேந்தன் பேசினார்.
“என்ன ஆயிற்று கமலா. தளபதியார் என்ன கூறினார். நீ வரும்போது உன் முகம் கோபத்தை அல்லவா பிரதிபலித்தது”
“பின் என்ன வேந்தா. நானும் பூங்கொடியும் எத்தனை நாட்களாக விரும்புகிறோம் என உனக்கு தெரியாதா. ஏன் அவளை மணந்து கொண்டு வந்து நிற்க எனக்கு தெரியாதா. இவரை மதித்து தானே அவர் சம்மதம் வேண்டி வந்து நின்றோம்.
இவர் என்னவென்றால் இனம் குலம் என்று வாய்க்கு வந்ததை பேசுகிறார். என் விருப்பம் என்பது அவருக்கு ஒன்றும் இல்லையா”
கமலந்தன் பொறிந்து தள்ள அவர் தோளை தட்டிக் கொடுத்த வேந்தன் “என்னிடம் சொல்லிவிட்டாய்யல்லவா இனி கவலையை விடு கமலா நான் பார்த்துக் கொள்கிறேன்” என சமாதானம் செய்தார்.
லிங்கவேந்தன் கூறியதை போலவே தன் தந்தை விபிஷவேந்தனை விட்டு கமலந்தனின் தந்தையின் சம்மதம் பெற்றான். அதே கையோடு அரண்மணையிலே கமலந்தனுக்கு கோலாகலமாக திருமணத்தை நிகழ்த்தியும் வைத்தார்.
அதன்பின் கமலந்தனின் வாழ்வு மேன்மேலும் முன்னேற்றமே கண்டது. அவர் சென்ற போர்கள் அனைத்திலும் வெற்றி வாகையே சூடி வந்தார்.
வருடங்களும் ஐந்து கடக்க அனைவரின் வாழ்வும் சில மாற்றம் கண்டிருந்தது. வசந்தவள்ளிக்கு தற்போது இரண்டு மகன்கள் இளந்திரையன் இளவழுதி பிறந்துவிட்டனர்.
கமலந்தன் வாழ்வு பூங்கொடியுடன் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்க பூங்கொடிக்கு மட்டும் மனதில் சிறு சோகம் இருந்தது. அது என்னவென்றால் திருமணம் முடிந்த இந்த ஐந்து ஆண்டில் இவர்கள் இருவருக்கும் இன்னும் குழந்தை இல்லை என்பதுதான்.
இந்த ஐந்து ஆண்டுகள் அவள் மனநிம்மதிக்கு காரணம் கமலந்தன் மட்டும் அல்ல தழலேந்தியும் தான். குழந்தை இல்லாது வருத்தம் கொண்ட பூங்கொடியை பார்த்து தன் மகனை அவளிடம் தந்து செல்வாள் வரகுணசுந்தரி.
இப்படி இருக்கும் போதுதான் பூங்கொடியும் ஒருநாள் கருவுற்றாள். அவளை பரிசோதித்த அரண்மனை மருத்துவர் அதை உறுதி செய்தார். பலநாட்கள் தவத்தின் பலனாக பத்து மாதம் சென்று பிறந்தாள் கமலந்தன் பூங்கொடியின் செல்வ சிட்டு.
அந்த தடாகபுரி நகரின் தாமரை மொட்டுப் போல் இருந்த அந்த சின்ன சிட்டு பார்ப்போர் மனதை கவர்ந்துதான் விட்டது. அவள் முகம் மட்டும் அழகாய் இருக்கவில்லை. பிறந்த போதே கருகருவென முடியும் நிறைய இருக்க அந்த நாட்டின் பெயரான தடாகையை சேர்த்து தடாகைக்குழலி என்று பெயரிட்டு அன்போடு வளர்த்தனர்.
ஆறு வயதான இளவரசன் தழலேந்தி ஒற்றை பிள்ளையாய் வளர்ந்த காரணத்தால் தற்போது இன்னொரு குழந்தை வந்து சேர்ந்ததில் மிகவும் மகிழ்ந்துதான் போனான்.
காலை ஒருமுறை மாலை ஒருமுறை என அவளை பார்க்க ஓடிவந்து விடுவான் தழல் “குழலி.. குழலி” என கொஞ்சி தீர்ப்பான்.
இதே போல் நாட்கள் செல்ல குழந்தை தடாகை ஆரோக்கியமாக வளர அதற்கு மாறாக பூங்கொடியின் உடல்நிலையோ நலிந்து கொண்டே வந்தது.
ஏன் எப்படி என்ற காரணம் தெரியாது பல நாடுகளின் மருத்துவர்களை அழைத்து வந்து பார்த்தார் தளபதி கமலந்தன். ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான். அவரின் உடலுக்கு என்னவென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பூங்கொடியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
கொஞ்ச நாளிலே படுத்தபடுக்கை என்றானது அவள் நிலை. இதில் சிறு குழந்தையை வைத்துக் கொண்டு மனைவியையும் பராமரித்து என மனதளவில் மிகவும் சோர்ந்து போனான் தளபதி.
அதற்கு மேல் அவருக்கு பாராமாய் இருக்க விரும்பவில்லை போலும் பூங்கொடி. தடாகைக்கு ஒரு வயது நெருங்கிய போது இறைவனடி சென்று சேர்ந்தார். ஒரே நாளில் மொத்த வாழ்க்கையாய் இருந்த தன் காதல் மனைவியை பறிகொடுத்த தளபதி மிகவும் ஓய்ந்து போனார்.
ஆனால் அதற்கு எல்லாம் சேர்த்து வைத்தது போல் அவரையே உரித்து வைத்திருந்த மகளை கண்ட கமலந்தனுக்கு வாழ்வின் மீது ஒரு பிடிப்பு வந்தது.
அவர் தந்தை ஏன் அரசன் வேந்தன் முதற்கொண்டு அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ள சொல்ல ஒரேயடியாக மறுத்துவிட்டார் தளபதி.
“என் மனைவி பூங்கொடி அவள் உயிரை என் பிள்ளையின் உருவில் தந்து சென்றிருக்கிறாள் வேந்தா. எனக்கு என் பிள்ளை தடாகையும் இந்த தடாகபுரியுமே போதும் வேந்தா”
இவ்வாறு கூறிய அவர் நண்பனை கண்ட போது கமலந்தனின் நண்பன் என்று சொல்லவே பெருமிதம் கொண்டார் அரசர் லிங்கவேந்தன்.
அதன்பின்னர் பயிற்சிக்கு செல்லும் போதெல்லாம் தன் மகளையும் தூக்கிக் கொண்டு போய்விடுவார் தளபதி. தான் பார்த்துக் கொள்வதாய் அரசி கூறியும் தன் மகளை தானே வளர்ப்பதாய் தூக்கி செல்வார்.
வீரர்களின் பயிற்சி பட்டறையில் அந்த வாள்கள் வேல்களின் ஓங்கார சத்தத்தில் நிம்மதியான துயில் கொண்டு வளர்ந்தாள் தடாகை. அவளை காணவே அதுவரை அந்த பக்கம் எட்டிக் கூட பார்க்காத தழல் அதன்பின் பயிற்சி அறையே கதி என கிடந்தான்.
அதன் பின் வந்த மூன்று வருடங்கள் தழல் மற்றும் அவள் தந்தை தான் தடாகைக்கு உலகமே என்றானது. இதில் தடாகையின் விளையாட்டு பொருள் என்னவென்றால் அது வாள்தான். அதிலும் அவள் அந்த குட்டி வாளை வைத்து சுற்ற தெரியாது சுற்ற
“குழல் இப்படி அல்ல. வாளை என்னை போல் பிடித்து சுற்று. ஆம் அப்படித்தான்” என சொல்லித்தருவது தழலுடைய வேலை. “இளவரசருக்கே இன்னும் வாள் பிடிக்க வரவில்லை இதில் தடாகைக்கு வேறு பயிற்றுவிக்கிறார்” என அரசரே கிண்டல் செய்தாலும் கண்டுக் கொள்மாட்டான்.
இப்படி இருந்த இவர்களின் வாழ்வில் நடுவே வந்து குதித்தனர் இருவர். அது வேறு யாரும் இல்லை வசந்தவள்ளியின் இரு புதல்வர்களே. வசந்தவள்ளியின் கணவன் இளமாறன் துரதிஷ்டவசமாக இறந்துவிட தன் இரு மகன்களையும் அழைத்து வந்து தந்தை வீட்டில் தஞ்சம் புகுந்தாள் வசந்தவள்ளி.