துபாய் சென்ற சிவாவிற்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் உபாதைகள் வந்து விட காய்ச்சலில் படுத்து விட்டான்.
தனஞ்செயன் அவனை கவனித்துக் கொள்ள ஒரு வாரம் கழித்து தான் இயல்பாகியிருந்தான்.
“ஏன் டா தம்பி உடம்பு சரியில்லையா இளைச்சு தெரியிறியே , சரியா சாப்பிடுறியா இல்லையா ய்யா இருக்க முடியலைனா கிளம்பி வந்துடுய்யா… “என்று சித்திரை செல்வி மனம் தாளாது சொல்ல… அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தான் சிவா.
“ம்மா அதெல்லாம் ஒன்றும் இல்லை நல்லா தான் இருக்கேன்…. வீடியோவில் பார்க்கவும் உனக்கு அப்படி தெரியுது…. வேற ஒண்ணும் இல்ல.. நீ ஒழுங்கா சாப்பிடு என்ன…?, வேலை எல்லாம் பிடிச்சிருக்கு ,நீ பாட்டுக்கு உன் வூட்டுக்காரர் கிட்ட பொலம்பாத சரியா…. பாட்டன் என்ன பண்றாரு “என்று கேட்க .,”தூங்குறாரு டா, மலர் கிட்ட பேசுறியா குடுக்கவா “என்றார் ஆர்வமாக
“வேணாம் வேணாம் நான் அவ ஃபோனுக்கு கூப்பிட்டு பேசிக்கிறேன்”என இணைப்பை துண்டித்தான்.
“பொண்டாட்டி மூஞ்சியை பார்த்து பேசுவானா, இப்ப தான் அவ ஃபோனுல பேசுறானாம்…இவனை எல்லாம் என்ன செய்றது… நல்லப் புள்ளைங்கம்மா”என்று புலம்ப மலரின் கைபேசி அழைத்தது.
தனஞ்செயனும் சூரியகாந்தியிடம் தான் பேசிக் கொண்டிருந்தான்.
********
“டீச்சர் பாப்பா என்ன மாமாவை நினைச்சு அழுதழுது முகம் உங்க சித்தி மாதிரி வீங்கிடுச்சாம்”என்று கிண்டல் செய்தான்.
“நேர்ல இல்லைங்கிற தைரியமா சமூக சேவகரே …. அடி வாங்குவ … என்ன பண்ற?? உடம்பு எதுவும் சரி இல்லையா குரல் ஒரு மாதிரியா இருக்கு… கிளைமேட் ஒத்துக்கலையா…??”என்று வரிசையாக கேள்வி கேட்க
அவனோ சிரித்தபடியே .,”இதுக்கு உங்க அத்தையே பரவாயில்லை டீச்சரம்மா…. நீங்க உங்க பசங்க கிட்ட கேள்வி கேட்கிற மாதிரி இத்தனை கேள்வி கேட்கறிங்களே…?? நான் நல்லா தான் இருக்கேன்…!!நீ ஒழுங்கா சாப்பிடு…. ஏதாவது ஹெல்ப் வேணுன்னா வெற்றி இல்ல வீரமலை கிட்ட சொல்லு செஞ்சு தருவாங்க…. “என்றான்.
சரி என்றவள் அமைதியாக இருக்க
“என்ன டீச்சர் ஒரே அமைதி, பேசு டி அப்புறம் வேலைக்கு கிளம்பனும் ” என்றான்.
“ஆமா நம்ம பசங்க சொன்னானுக… ரெண்டுக்கும் சரியா இருக்கும் அவன் பொறுக்கி, இவ கிறுக்கி நல்ல ஜோடிப் பொருத்தம்” என்று சொல்ல மலர் அமைதியாகவே இருந்தாள்.
“என்ன பனி ஏன் சைலண்டா இருக்க?”
“இல்ல வடிவு கொஞ்சம் திமிர் பிடிச்சவ தான், இருந்தாலும் அவன் சரியான முரடன் நான் கிடைக்கலைன்ற கோவத்துல அவளை என்ன பண்ணுவானோன்னு கலக்கமா இருக்கு சக்தி அதான்…”
“நீ ஏன் அதைப் பற்றி யோசிக்கிற அவளுக்கெல்லாம் வேணும் சாதாரண ஆள் னு நினைச்சுடாத” என்று தனஞ்செயன் சூர்யாவிடம் நடந்து கொண்டதை விளக்கினான்.
“புரியுது சக்தி மென்டல் மாதிரி ஏதாவது பண்ணுவாளே தவிர அவனை சமாளிக்கிற அளவுக்கு எல்லாம் அறிவோ திறமையோ கிடையாது. அதை நினைச்சால் தான் பாவமாக இருக்கிறது” என்று சொல்ல சிவாவோ சிரித்தபடியே
“இப்ப என்ன உனக்கு அவளுக்கு ஏதாவது பிரச்சினை ன்னா நாம பார்த்துக்கனும் அவ்வளவு தானே நான் வந்த பிறகு அவனை ரெண்டு தட்டு தட்டி வைக்கிறேன் போதுமா?” என்று சிரித்தான்.
“சார் அவன் முரடன் நினைவிருக்கட்டும் உடன்குடி பஸ் ஸ்டாண்ட் ல அந்த அலப்பறை கூட்டுவான்”
“ஹலோ மேடம் குடிச்சிட்டு லந்தை கொடுக்கிற ஆளெல்லாம் நல்லா இருக்கும் போது ஒண்ணும் பண்ண மாட்டானுக, நாலு சாத்து சாத்தினா அடங்குறான் என்ன இருந்தாலும் கொழுந்தியாவாச்சே?” என்று முணுமுணுக்க
“டேய் உதை வாங்குவ”
“ஹாஹாஹா சும்மா டி அவ சுத்தி சுத்தி வரும் போதே திரும்பி பார்க்க மாட்டேன் இதுல இப்பவா பார்க்க போறேன் நீங்க பொறாமைப்படாதீங்க டீச்சர் “
“ஹலோ யாருக்கு பொறாமை? அதெல்லாம் சமூக சேவகர் என்னைத் தவிர வேற எவளையும் திரும்பி பார்க்க மாட்டார்னு எங்களுக்கும் தெரியும்.”
“அவ்வளவு நம்பிக்கையா டீச்சரே?”
“இல்லையா சேவகரே…” உதடு மடித்து சிரித்தாள்.
“நன்றி நன்றி நன்றியோ நன்றி மா”
“போடா “
“டா வா வர வர இந்த டீச்சர் ரொம்ப டா போடுறாங்க நான் வேற பக்கத்தில் இல்லையே.. ?”
“பக்கத்தில் இருந்தா என்ன பண்ணுவ..?”
“ஹேய் வேண்டாம் பனி” எனும் போதே தினகரன் வேலைக்கு நேரம் ஆகி விட்டது என்று கூறி விட்டுச் சென்றான்.
“பனி டைம் ஆகிடுச்சு நான் நாளைக்கு கூப்பிடுறேன்” என்று இணைப்பை துண்டித்தான்.
“ம்ம்ம் சரி”என்று வைத்து விட்டாள்.
மனம் நிறைந்திருந்தது அவளுக்கு.
*********
தனஞ்செயன்,”புத்தகத்துக்குள்ளையே தலையை விட்டுட்டு இருக்காம கொஞ்சம் உங்களையும் கவனிங்க மேடம்.. நான் வரும் போது நம்ம வீட்டு கதவை எடுத்துட்டு கொஞ்சம் பெருசா நிலைப்படி வைக்கிற அளவுக்கு குண்டாகி இருக்கணும் “என்க
சூரியாவோ .,”ம்ம்ஹ்ஹூம் மாமா “என்று சிணுங்கினாள்.
“சரி ரொம்ப சிணுங்காத மா தாயே சீக்கிரம் தூங்கு “என்று சிறிது நேரம் பேசி விட்டு இணைப்பைத் துண்டித்தான்.
“இவ வேற சிணுங்கி சிணுங்கி நம்மளை வேலை பார்க்க விடாம கெடுக்கிறா” என்று புலம்பிக் கொண்டான் தனஞ்செயன்.
**********
முத்துலெட்சுமியும் சங்கரனும் தூத்துக்குடிக்கு சங்கரபாண்டி வீட்டிற்கு வந்திருந்தனர்.
“ஏங்க ஒரு பொண்ணை கட்டி கொடுக்குறோம் னா அந்த வூட்டை பத்தி விசாரிக்க மாட்டியளா … இல்ல மாப்ளைய பத்தியாவது விசாரிக்க மாட்டியளா… என்ன பெத்தவக நீங்க…. ம்ம்ம்… சரி கட்டி தான் குடுத்தீகளே… அந்தப் புள்ளைய கொண்டு வந்து விட்டுட்டு வீடு வாச எப்படி இருக்குனு பார்க்க வேணாமா…. பிள்ளைய கட்டிக்கிட்டு போய் எங்கேயாவது வெலை பேசி வித்துருந்தா… என்ன பண்ணி இருப்பீக….?? பெத்தவகளுக்கு ஒரு சூதானம் வேணாம்…. இங்க என் வூட்ல மருமவளா இருக்கும் போது பதனமா தான் இருக்கணும்…. நல்லா வேலை வெட்டி செய்யணும்… காலையில நேரமே எழுந்துக்கணும் பொட்டபிள்ளைக… அது தான் என் வூட்டு பிள்ளைகளுக்கு நாங்க சொல்லி கொடுத்து வளர்த்திருக்கோம்…. எங்களுக்கு வந்த மூத்த மருமவ அப்படி தான் இருக்கு ….. உங்க மக மொதோ நாளே 12 மணிக்கு எழுந்திருச்சு வருது….” என்றார் சற்று காட்டமாக
“அதெல்லாம் என் பொண்ணு சரியா செய்யுமுங்க சம்மந்தி … ஏதோ அலைச்சல் அதனால அசதில தூங்கி இருக்கும் நான் சொல்லி புரிய வைக்கிறேன் சம்மந்தி… அது வந்து மாப்ள தம்பி நீங்க இல்ல னு சொல்லி இருந்தது நமக்கு தெரிஞ்ச கவுன்சிலர் அண்ணன் வந்து பொண்ணு கேட்கவும் எதுவும் விசாரிக்காம போயிட்டேன் எங்க தப்பு தான்…. இருந்தாலும் அந்த பையன் அப்படி சொன்னதும் தப்பு தானுங்களே”என்றார் சங்கரன்.
“சரி சரி விடுங்க நடந்தது நடந்து போச்சு இனி பேசி ஆகப் போறது ஒண்ணுமில்ல … மறு வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வாங்க , அப்புறம் இங்க எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வச்சுக்கலாம் அன்னைக்கு வந்து நீங்க செய்ய வேண்டிய சீர்வரிசையை செஞ்சுட்டு போங்க…. உங்க சனத்துல யாருக்கு சொல்லணுமோ சொல்லி அழைச்சுட்டு வரலாம்”என்றார்.
எல்லாவற்றிற்கும் சரி என்று தலையாட்டி விட்டு வடிவரசியிடம் பேசி கொண்டிருக்க , அவளோ தன்னை உடனே அழைத்து செல்லும்படி அழுது ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தாள் .
“சரிடி அழுவாத… மறு வீட்டுக்கு வரும் போது… கொஞ்ச நாளைக்கு இருந்துட்டு வருவ… வீடு வாசல் எல்லாம் நம்மளுதை விட பெரிய இடம் டி… கொஞ்சம் அனுசரிச்சு போனா எல்லாம் உனக்கு தான்… சரியா கொஞ்சம் பொறுத்துக்கடி என் தங்கம் இல்ல , அப்பா மட்டும் இவங்க தயவால கவுன்சிலர் ஆகிட்டாரு அப்புறம் வச்சு மிரட்டிக்கலாம் இவனை நீ கவலைப்படாதே செல்லம்”என்று சமாதானம் செய்து விட்டு கிளம்பினர் சங்கரன் முத்துலெட்சுமி இருவரும்.
வடிவரசிக்கு சங்கரபாண்டியை நினைத்து பயம் தான் அதிகமாகி இருந்தது. சங்கரபாண்டி ஹார்பரில் இருந்து வந்தான்.
வடிவரசியின் பெற்றோரைக் கண்ட சங்கரபாண்டி .,”வாங்க என்ன உங்க மவ ஒப்பாரி வச்சு வரவச்சாளாக்கும்… என்னல சொன்ன என்னைய பத்தி அடிச்சு புடிச்சு ஓடி வந்திருக்காவ… ஹான் “என்று மிரட்ட ,
சங்கரனோ பதமாக “அட என்ன மாப்பிள்ளை நீங்களே மனசு சங்கடப்பட்டு ஏதோ பெரிய மனசு பண்ணி என் சின்ன மகளை கட்டி இருக்கீங்க…. அவ என்ன சொல்லப் போறா…???? உங்களைப் பத்தி நல்ல விதமா தான் சொல்லுச்சு பாப்பா… ஏன் மாப்ள உங்க அப்பா அம்மா இருக்காங்க னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல… இப்படி சொல்லாம விட்டுட்டீங்களே… சரி விடுங்க உங்களுக்குள்ள என்ன பிரச்சினையோ தெரியல… அதுல தலையிடலை நாங்க… உங்களை மறு வீட்டுக்கு அழைக்க வந்தோம் மாப்ள “என்றார் நைச்சியமாக.
அவனோ “என்னல அரசி போவலாமா”என்று மீசையை முறுக்கி விட அவளோ தலையை மட்டும் ஆட்டினாள்.
“சரி சரி வர்றோம் இன்னும் ரெண்டு நா கழிச்சு தான் வர முடியும்..”. என்றான்.
சத்தமின்றி இருவரும் கிளம்பினர்.
********
கருத்தம்பட்டி முழுவதும் வடிவரசிக்கு அவசரமாக திருமணம் முடிந்தது பற்றி தான் பேச்சாக இருந்தது.
மலருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க இருந்த செய்தி அப்படியே அமிழ்ந்து போயிருந்தது.
திருமணம் ஜாதகத்தில் உள்ள தோஷத்தால் அவசரமாக முடித்து விட்டதாகவும் விருந்தை விமரிசையாக செய்யவிருப்பதாக எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தார் முத்துலெட்சுமி.
கருப்பசாமி குடும்பத்தை சங்கரன் அழைக்க அவர் அமைதியாக சென்று விட்டார். பொன்னுசாமிக்கு எந்த வித அழைப்பும் விடுக்கவில்லை சங்கரன்.
விருந்திற்கு வந்த சங்கரபாண்டியின் கண்களோ மலரைத் தேடியது .
“வாங்க பாட்டா… என்ன இவ்வளவு தூரம்… எதுக்கு அலையிறிக??”என்றபடி அவரது கைப்பிடித்து தூக்கி உள்ளே அழைத்துச் சென்றாள்.
“அங்கன ஏதோ விருந்து வச்சிருக்கானாம்… அதான் நமக்கு அங்க என்ன வேலைனு இங்க வந்துட்டேன் ஒரு கருப்பட்டி காபி போடும்மா… ஆமா நீ ஏன் பள்ளிகூடத்துக்கு போகாம இருக்க ??”என்றார்.
“நாளையில இருந்து தான் பாட்டா ஸ்கூலு, இருங்க சாப்பிடுற நேரத்தில் ஏன் காபி குடிச்சுக்கிட்டு… சாப்பாடு ரெடி பண்ணிட்டேன் நீங்களும் தாத்தாவும் சாப்பிடுங்க… அத்தைக்கும் மாமாவுக்கும் சாப்பாடு கொண்டு போய் கொடுத்திட்டு வரேன் “என்று விட்டு மதிய உணவை பரிமாறினாள்.
பொன்னரிடம் சிறிது நேரம் பேசி விட்டு செல்விக்கு சாப்பாடு கொண்டு செல்ல அங்கே சங்கரபாண்டி நின்றிருந்தான்.
“வால என் சண்டிராணி… உன்னைய பார்க்க தான் தூத்துக்குடியில் இருந்து வந்து கெடக்கேன்…. கல்யாணம் ஆகிட்டோ…. ம்ம்ம் யாரு அந்த எலும்பா ஒரு பய வந்தானே அவனா ல …. ஏட்டி ஒருத்தன் ஒனக்காவ ஒன்னை கட்டனும்னு கொக்காட்டம் ஒத்த காலுல நிக்கான் நீ பகுமானமா வேற எவனையோ கட்டுவியோ ….. என் தலையிலையால அடிக்க…. மாமன் காட்டுற பவுசு ல ஓ குறுக்கெலும்பை ஒடைக்கேன்டி “என்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவளை விரட்ட அங்கே வெற்றி வீரமலையுடன் வந்து நின்றான்.
“நீ போம்மா இந்த பொறுக்கிப்பயலை நான் பார்த்துக்கிறேன்..”என்று அருகிலிருந்த தென்னை மர கிளையை எடுத்தவன் .,”ஊரு விட்டு ஊரு வந்து யார் வூட்டு பிள்ளையை வெரட்டுற…? செவுளை பேத்து கையில கொடுத்திடுவேன்… என் வூட்டு பிள்ளையை நினைப்ப இனி நினைப்ப… வந்தோமா மாமனாரு வீட்டுல கறிக்கஞ்சியை குடிச்சோமான்னு சத்தமில்லாமல் போயிடனும்… மகனே ஏதாவது இன்னொரு முறை சளம்பிக்கிட்டு திரிஞ்ச… நடக்க காலு இருக்காதுடியோய் …. இருந்து இருந்தும் பிடிச்சிருக்காரு பாரு அந்தாளு உன்னை மாப்ளைனு”என சங்கரபாண்டியை இருவரும் சேர்ந்து அடித்து துரத்தினர்.
“நீ போ மலரு…. இவனுக்கெல்லாம் பயந்து கெடக்காத… ஒரு வார்த்தை சொல்லு பிடிச்சு உள்ள தள்ளிடலாம்… “என்று வீரமலை சொல்ல
மலரோ.,” வேணாம் அண்ணா இவனெல்லாம் எவ்வளவு அடி வாங்கினாலும் திருந்த மாட்டான்… நீங்க இதை சிவா கிட்ட சொல்ல வேணாம்…. இங்க வந்த பிறகு சொல்லிக்கலாம்… வீணா மனசு கஷ்டப்படுவாரு”என்றதும் சரி என்று சம்மதித்தனர்.
**********
நாட்கள் காற்றாய் பறந்திருக்க… சிவா கருத்தம்பட்டியை விட்டு சென்று ஒரு வருடம் ஆகி இருக்க . மலர் சிவாவின் காதல் கைபேசி வழியாக வளர்ந்திருந்தது.
மலர் இனி பள்ளிக்கு செல்லவில்லை என்று கருப்பசாமியிடம் அனுமதி வாங்கி சிவாவிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பண்படுத்தி காய்கறி தோட்டம் அமைத்திருந்தாள்… ஒரு பகுதியில் பன்னீர் ரோஜாவும் அதே இடத்தில் சிவா நட்டு வைத்திருந்த செங்காந்தள் மலரும் செடியாய் வளர்ந்திருந்தது.
தண்ணீருக்கு பஞ்சமாதலால் வறட்சியை தாங்க கூடிய பருத்தியை மானாவாரி பயிராக விதைத்திருந்தாள்.
தோட்டத்தில் இருந்த சில களைச் செடிகளை அகற்றி கொண்டிருக்க சிவா அழைத்திருந்தான்.
“பனி மா என்ன பண்றீங்க…. மாமா சம்பளம் அனுப்பிட்டேன்… அப்புறம் கூடவே ஒரு பார்சலையும் அனுப்பி இருக்கேன்…. வாங்கி வச்சுக்க நான் சொல்லும் போது பிரிச்சா போதும்” என்றவன்,” சரி காசு கம்மியா இருக்கு நைட் பேசணும் வச்சிடுறேன் “என அவசரமாக இணைப்பை துண்டித்தான்.
“அப்படி என்ன அனுப்பி இருப்பான்… ??”என்று யோசித்தபடியே நடக்க, வடிவரசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாள்.
வயிறு சற்று மேடிட்டு இருந்தது. ஆனால் ஆள் சற்று மெலிந்து போயிருந்தாள். பழைய படோபகாரம் எதுவுமின்றி எளிமையான புடவையில் வந்திருந்தாள். அவளெதிரே வந்த பெண்ணொருத்தி நலம் விசாரித்திட்டாள் .
நின்று பதில் அளித்து விட்டு செல்ல மலருக்கே ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் பழைய வடிவரசியாக இருந்தால் பதில் அளித்திருக்க மாட்டாள்.
*********
மழை அடித்து பெய்து கொண்டிருந்தது.
பகல் வேளையை இருளாக காட்டியிருந்தது அவ்வளவு மழை பெய்து இருக்க இரவுப் பொழுதில் தான்
மழை சற்று விட்டு இருந்தது.
ஊரில் உள்ள இளைஞர்கள் சிறுவர் சிறுமியர் என அத்தனை பேரும் வேகமாக செல்ல மலர் புரியாது விழித்தவள் என்னவென்று விசாரிக்க அவர்கள் ஆத்துவாரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றனர்.
“ஆத்துவாரில என்ன ??”என்று யோசித்து கொண்டிருக்கும் போதே முருகனின் மனைவி கமலா ஓடி வந்தார்.