மலரிடம் பேசி விட்டு விமான நிலையத்திற்குள் சென்றான் சிவா.
வெற்றியும் வீரமலையும் நண்பனை அணைத்துக் கொண்டே.,”நீ இல்லாம எப்படி இருக்க போறோம் னு தெரியலை மாப்ள.. விடிஞ்சதும் உன்னைத் தான் தேடுவோம்”என கண்களில் நீர் ததும்ப சொல்ல, அவர்களை இறுக அணைத்துக் கொண்டவன்.” ரெண்டு வருஷம் தான் மச்சான். பல்லை கடிச்சுட்டு நாட்களை கடத்தனும்.. அப்பப்ப வீட்டுப் பக்கம் போயிட்டு வாங்கடா. அம்மா ரேஷனுக்கு போகணும் னு சொன்னா கொஞ்சம் செஞ்சு குடுங்கடா. பனியை அப்பப்ப பார்த்துக்கங்க டா.. வெற்றி, ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும் போது தனியா வருவா.. நீ தான் டா கொஞ்சம் வீட்டுக்கு கொண்டு வந்து விடணும்.”என்றவன். “அப்படியே முருகன் அண்ணன் ஏதாவது வேலை சொன்னா செஞ்சு குடுங்கடா. அப்புறம் அந்த பயலுவலுக்கு பேட் பால் எல்லாம் வாங்கி குடுத்துடுங்க டா. பணம் அனுப்பி வைக்கிறேன்.. அப்புறம் மச்சான் கொஞ்சம் பார்த்துக்கங்க டா. அப்படியே பாட்டனுக்கு அப்பப்ப மூக்குப் பொடி வாங்கி குடுத்துடு டா பாவம் ரொம்ப தேடுவாரு “என்று புலம்பி தள்ளி விட்டான் சிவசக்திபாலன்.
“எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் மாப்ள நீ நேரத்துக்கு சாப்பிடு.. உடம்பை பார்த்துக்க. தனா ண்ணா பார்த்துக்க ண்ணா. அடிக்கடி ஃபோன் பண்ணு மச்சான். ரொம்ப இருக்க முடியலைனு தோணுச்சுனா நீ வந்திடு மாப்ள. இங்க ஏதாவது வேலை தேடிக்கலாம். உடம்பை பார்த்துக்கடா “என்று நண்பனுக்கு ஆயிரம் அறிவுரை சொல்லி பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தனர்.
இயந்திரப் பறவை அந்த சுதந்திரப் பறவையை ஏற்றிக் கொண்டு உயரப் பறந்தது நீலவானில்.
**********
சித்திரை செல்வியோ மூக்கை உறிஞ்சிக் கொண்டு புலம்பிக் கொண்டிருந்தார்.
“வேலை செஞ்சாலும் செய்யாட்டாலும் வீட்டையே சுத்தி சுத்தி வருவான். அவன் இல்லாம வெறிச்சோடி கெடக்கு.. நான் கூட அவன் இப்படி அழுத்தமா மாறுவான்னு நம்பல மாமா. பாருங்களேன் அவன் பொண்டாட்டிக்கு ஒரு அவமானம் னு சொன்னதும் .. வேலைக்கு கிளம்பிட்டான். .. நான் அப்படி திட்டுவேன், அவங்க அப்பா திட்டுவாரு காதுலையே வாங்க மாட்டான். இப்ப பாரு எப்படி கிளம்பி போயிருக்குதுன்னு ஏன் மாமா இந்நேரம் போயிருப்பாங்களா . இல்ல நேரமாகுமா ??”என்றார்.
“அட மருமவளே, நீ ஏன் தான் இப்படி இருக்கியோ தெரியலை இந்த தனா போனப்ப அப்படி தான் புலம்பின இன்னைக்கு சிவா கிளம்பியதும் ஆரம்பிச்சுட்டியா.. உனக்கு மட்டுமா கவலை எங்களுக்கு இல்ல.. விடுத்தா இன்னும் ரெண்டு வருஷம் தானே பொசுக்குனு ஓடிப் போகும்.. நீயே புலம்பினா அந்த சின்னப்பிள்ளைக ரெண்டும் என்ன செய்யும் சொல்லு. போ போய் செத்த ஓய்வெடு “என்று விட்டு கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டார் வேலுத்தம்பி அவருடைய வருத்தத்தை வெளிக்காட்டாமல்
மலர் முகமெல்லாம் அழுது அழுது வீங்கி இருந்தது. அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.
இங்கே சூர்யாவிற்கும் அதே நிலை தான் என்றாலும் அவளுக்கு தனாவுடன் தொலைபேசி பேச்சுக்கள் மட்டும் தான் என்பதால் பெரிதாய் அவளை இவ்விஷயம் பாதிக்கவில்லை.
மலருக்கு எப்போதும் சிவாவின் இருப்பு தெரிந்து கொண்டே இருக்கும். அவன் பார்க்கவில்லை என்றாலும் மலரின் கண்ணில் தென்படும் தூரம் தான் அவனது இருப்பு இருக்கும். அதனாலேயே அவளால் பிரிவை தாங்கிக் கொள்ள இயலவில்லை.
விமானத்தில் பறந்தவனுக்கு மனம் என்னவோ மலரை சுற்றி தான் வந்தது. கண்களின் ஓரம் நீர் துளிர்த்திருந்தது .
தனஞ்செயனுக்கு வேறு இடத்தில் இருக்கை கிடைத்திருக்க தினகரனுக்கும் சிவாவிற்கும் அருகருகே இருக்கை பதிவு செய்யப்பட்டு இருந்தது.
சிவாவின் கண்ணீர் துளியை கண்ட தினகரனோ அவனை தட்டி எழுப்பினான்.
“மச்சான் அழறியா. டேய் என்னடா இது சின்னப் பிள்ளை மாதிரி. விடு டா கொஞ்ச நாளைக்கு தானடா “என்று சமாதானம் செய்தான்.
கண்களை அவசரமாக துடைத்தவன், “இல்ல மாப்ள. அது அம்மாவை விட்டுட்டு தனியா எல்லாம் வர மாட்டேனா. கொஞ்ச நேரம் நான் இல்லைனாலும் உடனே தேடிக்கிட்டு வந்திடும், இல்லாட்டி ஃபோன் பண்ணி எங்க இருக்குன்னு கேட்டுடும். இப்ப எப்டி சமாளிக்க போகுதோ தெரியலை. அப்புறம் பனி. பனி இங்க வந்ததிலிருந்து சுத்தி சுத்தி வருவேனா. அவ எப்படி தெரியுமா.?? நான் இருக்கேனா இல்லையா னு திருட்டு தனமாக பார்த்திடுவா. அதுவும் கொஞ்ச நாளா அவளோடு நெருங்கி பழகிட்டேனா அதான் கஷ்டமா இருக்கு மாப்ள. “என்றான்.
“புரியுது டா என்னப் பண்றது.??. சம்பாதிக்கனுமே வேற வழி இல்லை..நாம குடும்பத்தை பிரிஞ்சு அவங்க சந்தோஷத்துக்காக உழைக்கிறோம் ஆனா வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு என்ன தோணும். வெளிநாட்டு ல கை நிறைய சம்பளம் குடும்பமும் சந்தோஷமா இருக்கும். அவனுக்கென்ன வாழ்வு னு பேசுவாங்க ஆனா இங்க நாம வெயில் மழை பார்க்காம ஒண்டி குடித்தனம் மாதிரி ஒரு ரூம்ல பத்து பேர் னு தங்கி வாழற கஷ்டம் நமக்கு தான் தெரியும். உடம்பு சரியில்லை னா ஒரு சுடுதண்ணி வச்சு தர கூட ஆள் இருக்காது. சரி உள்ளூரிலேயே ஏதாவது செஞ்சு பொழைக்கலாம்னா வருமானம் பத்தாது. என்ன பண்றது ..?? இப்படி தான் வெளிநாட்டுக்கு போறவனோட பொழப்பெல்லாம் இருக்குது. ஆனா இந்த படத்தை பார்த்து விட்டு எல்லோரும் வெளிநாட்டு வாழ்க்கைனா சொகுசா இருக்கிறதா நினைச்சுக்கிறாங்க “என்றான் பெருமூச்செறிந்தபடி.
விமானப் பயணம் பேச்சினூடே சென்றது.
********
தூத்துக்குடி சென்ற வடிவரசிக்கு சங்கரபாண்டியின் வீட்டில் ஏகபோக வரவேற்பு அதாவது அடித்து விரட்டாத குறை தான் இருவரையும் . கூட வந்த ராஜேந்திரன் மனைவிக்கும் விழுந்தது திட்டு. அவரோ கோபத்துடன் நாலு வார்த்தை திட்டி விட்டு கிளம்பி விட்டார்.
வடிவரசிக்கோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. வீடெல்லாம் அரண்மனை போன்று தான் இருந்தது ஆனால் சங்கரபாண்டி தனக்கு பெற்றவர்கள் இல்லை என்று தான் சொல்லி திருமணம் செய்து இருந்தான்.
ஆனால் அவனது பெற்றோர் இருந்தனர். கூடவே இரு அக்காக்களும் திருமணமாகி வீட்டோடு இருந்தனர். ஒரு அண்ணனும் தான் அவனுக்கும் திருமணம் ஆகியிருந்தது.
“ஏன் டா நாங்க உனக்கு என்ன குறை வச்சோம்னு இப்படி சொல்லாம கொள்ளாம எவளையோ கல்யாணம் பண்ணி இழுத்துட்டு வந்திருக்க .?”என்று கத்தினார் அவனது தாயார்.
சங்கரபாண்டியோ சற்றும் திமிர் குறையாமல் .,”ஆமா ஆமா முப்பத்தி ரெண்டு வயசு ஆம்பளைக்கு கல்யாணம் பண்ணி வைக்க உங்களுக்கு தோணி இருந்தா, நான் ஏன் நீங்க செத்துட்டிங்கனு சொல்லி கட்டிக்கிட்டு வாரேன்.. நானே நான் நினைச்சவளை கட்டாம . இவளை தலையில கட்டி இருக்கேனேன்னு வெசனத்துல கெடக்கேன் நீங்க வேற கேள்வி கேட்டுக்கிட்டு..இப்ப ஆரத்தி எடுத்து உள்ள கூப்பிடப் போறிகளா இல்லையால. இல்ல பங்க பிரிங்கல நான் என் சோலியை பார்த்துக்கிட்டு கெளம்புறேன். “என்று மிரட்டல் விடுத்தவன் அவனது அக்காவை பார்த்து .,”ஏன்ல என் மொகரையில என்ன எழுதி இருக்குன்னு அப்படி பார்க்குறீக. போய் ஆரத்தி எடுத்துட்டு வால. நீ போய் என் ரூமை ரெடி பண்ணு போ ல..”என்று சத்தமிட்டான்.
வடிவரசியோ தேமே என்று முழித்து கொண்டு நிற்க, எல்லோரும் அங்கிருந்து போய் விட்டனர். சிறிது நேரத்தில் ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்ப சங்கரபாண்டி தன் அறைக்கு சென்றான்.
வடிவரசி அங்கேயே நின்றாள்.
சங்கரபாண்டியின் அக்காவோ அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு “ஆமா எந்த ஊரு ல நீ. இந்த கோட்டிக்காரன் கிட்ட எப்புடி சிக்குன.?”என்று கேட்க வடிவரசி எல்லாவற்றையும் கூறி முடித்தாள்.
எல்லாவற்றையும் கேட்டு விட்டு “அந்த டீச்சரு புள்ள தங்கச்சியால நீ.!! அது சரி அந்த புள்ள வேணாம்னு சொல்லுச்சே, நீயும் சொல்லி இருக்க கூடாது.. ” என்று நொடித்து கொண்டு சென்றாள் அவனது அக்கா.
சங்கரபாண்டியோ.,”ஏலே புதுப் பொண்ணு உள்ள வால “என்று கத்த, சத்தம் கேட்ட திசையைப் பார்த்து ஓடினாள்.
“ஒனக்கு வெத்தலைபாக்கை வச்சு அழைக்கணுமோ. கதவை அடைச்சுட்டு உள்ள வா. “என்றதும் கதவை சாத்தி விட்டு உள்ளே வந்தாள்.
வந்தது தான் தாமதம் அவளை முரட்டுத்தனமாக ஆக்கிரமித்து கொண்டான்.
மறுநாள் காலையில் எழுந்தவளுக்கு உடலெல்லாம் அடித்துப் போட்டது போல வலித்தது. காலை மணி பதினொன்று முப்பதை தொட்டிருந்தது.
வடிவரசிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
தனது பெட்டி அங்கு ஓரமாக கிடக்க அதிலிருந்த துணியை எடுத்து கொண்டு குளித்து விட்டு வரவும் சங்கரபாண்டி கண் விழிக்கவும் சரியாக இருந்தது.
“என்னல நல்ல தூக்கமோ. புருஷன் காரன் லேட்டா எழுந்தா நீயும் அப்ப தான் எழுவியோ .? நாளைக்கெல்லாம் நாலு மணிக்கு எழுந்துக்கிற.. இல்ல. அம்புட்டு தான்.ஏதோ நேத்து நல்லா ஒத்துழைச்சியேன்னு ஒன்னை விடுதேன் போ.. “என்றவன் எழுந்து சென்றான்.
வெளியே வந்தவள் திருதிருவென்று விழிக்க சங்கரபாண்டியின் அன்னையோ அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு. “இது தான் கண் விழிக்கிற நேரமோ.. இந்தா பாருட்டி இது மாதிரி எழுந்துக்கிறது எல்லாம் இங்க ஆவாது. ஒழுங்கா நாளையில இருந்து காலையில விடிய கருக்கல்ல எழுந்து பொழைப்பை பார்க்கிற வழியைப் பாரு”என்று விட்டு.,”என்ன வளர்ப்போ என்ன சனமோ ???”என திட்டிக்கொண்டே சென்றார்.
வடிவரசிக்கு இப்போதே பயமாக இருந்தது. ‘அவசரப்பட்டு விட்டோமோ..!!’ என ஒரு நிமிடம் தோன்றியது.
“அம்மோ சோத்தை போடு ஹார்பருக்கு போவோனும். இன்னைக்கு வர லேட் ஆவும். அவளுக்கு என்ன பண்ணனும் , என்ன பண்ண கூடாதுனு எல்லாம் சொல்லிக் கொடு. நாளையில இருந்து அவளே கஞ்சி காய்ச்சி வைக்கனும். ஏ அரசி புரிஞ்சுதால. மதனி அவளுக்கு சொல்லுங்க. “.என்று விட்டு போய் விட்டான்.
வடிவரசிக்கு சங்கரபாண்டி வீட்டு பழக்க வழக்கங்கள் எல்லாம் அவனது அண்ணி ஒவ்வொன்றாக கூறினாள்.
“இங்கப் பாருமா இவங்க எல்லாம் இப்படி தான் பேசுவாங்க. அத்தை கொஞ்சம் வெடுக்குனு பேசுவாக ஆனா நல்ல மாதிரி. இங்க ஒரு வீட்டுல இருந்தாலும். தனித்தனி சமையல் தான். அவங்க அக்காங்க கூட தனி சமையல் தான் ஆனா ஒழைக்கிறது எல்லாம் ஒரு எடத்துல தான். மாமனார் தனித்தனியா பணம் கொடுத்திடுவாரு. அவருக்கு ஊருக்குள்ள நல்ல பேரு உண்டு, ஆனா அதை கெடுக்கிறதே உன் புருஷன் தான் அதனால தான் அவருக்கு இதுவரை கல்யாணம் பண்ணி வைக்க அவங்க நெனைக்கவே இல்லை.. ஆனா நீ வந்து மாட்டிக்கிட்ட.!! என்னடா வீட்டுக்கு வாழ வந்தவ கிட்ட இப்படி தப்பா சொல்லுறாங்களேனு நினைக்காத. பாண்டி தம்பியை பத்தி நல்ல விதமா சொல்லி நீ நாளைக்கு ஏமாந்துடக் கூடாது அதனால தான் எல்லாம் சொல்லிபுட்டேன் இதை சொல்ல சொன்னதே நம்ம மாமனார் தான் அப்புறம் உன் அப்பா அம்மாவை வந்து , அவங்க கிட்ட பேச சொல்லு. இனிமே அந்த தம்பி நல்லா பொழைக்கிறது உன் கையில் தான் இருக்கு. “என்று பதமாக எடுத்து கூறினார் அவனின் அண்ணி.
ஆனால் வடிவரசி தான் புரிந்து கொண்டாளா என்று தெரியவில்லை. அவரிடம் பேசி விட்டு அறைக்குள் சென்றவள், முத்துலெட்சுமிக்கு அழைத்து ஓவென்று கதறி அழுதாள்.
முத்துலெட்சுமிக்கு பயம் பீடித்துக் கொண்டது தன் மகளை நினைத்து.
“அச்சோ தங்கம் அழுவாதடி நான் அப்பா கிட்ட பேசி உன்னை வந்து கூட்டிட்டு போறேன் “என சமாதானம் செய்தார்.
*********
துபாய் வந்து இறங்கியாயிற்று எல்லாம் முறைப்படி செய்து முடித்து வேலையிலும் சேர்ந்து விட்டான் சிவசக்திபாலன். சூப்பர்வைஸராக தன் பணியை துவங்கியிருந்தான். தனா, தினகரன், சிவா, மூவருக்குமே பணியிடம் வேறு வேறு இருப்பினும் தங்குமிடத்திற்கு பொதுவான இடமாக அமைந்தது அவர்கள் செய்த புண்ணியம். தனாவும், தினகரனும் சமையல் செய்ய வெற்றியின் தந்தை மற்ற வேலைகளை செய்வார். சிவா புதிது ஆகையால் வேலை செய்ய விடுவதில்லை அவர்கள்.
தண்ணீர் சேரவில்லை அவனுக்கு. உணவுப் பழக்கமும் வேறாக இருந்திட, கொஞ்சம் தடுமாறித் தான் போனான் சிவா. காலநிலை மாற்றம் தண்ணீர் உணவு மாற்றம் எல்லாம் சேர்ந்து அவனுக்கு உடல் உபாதைகளையும் காய்ச்சலையும் உண்டாக்கியிருந்தது.