மலருக்கும் சங்கரபாண்டிக்கும் திருமணம் என்று சங்கரபாண்டிக்கு தகவல் கூறி விட்டு முத்துலெட்சுமியை அழைத்தார் சங்கரன்.

“முத்து வரும் போது அவரையே ஐயர் தாலி எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்… வெளியே விஷயம் ஒரு பயலுக்கும் தெரியக் கூடாது…  மலரை வரவைக்கறது எப்படி னு எனக்கு தெரியும்… போய் சோத்துக்கு ஆக வேண்டிய வேலையை பாரு…  நான் ஒரு எட்டு மண்டபம் வரைக்கும் போயிட்டு வரேன்…” என்றார்.

“இப்போ எதுக்கு அங்கன…?”

“நான் என்ன சீராடவா  (உறவு வைத்துக் கொள்ள) போறேன்.. போய் நிலவரத்தைப் பார்த்துட்டு நம்ம மேல சந்தேகம் வராத அளவுக்கு பார்த்து பேசிட்டு வரேன் இல்லன்னா தேவை இல்லாம பிரச்சினை வரும். அவருக்கு மாத்திரை கலந்து தூங்க வச்சிடு புரியுதா?” என்றவர் துண்டை எடுத்து தோளில் போட்டபடி கிளம்பினார் மண்டபத்திற்கு.

“அவளுக்கு கல்யாணம் னா நான் ஆக்கி கொட்டனுமோ தேவை தானா எனக்கு கவுன்சிலர் மட்டும் ஆகாம இருக்கட்டும் அப்புறம் இருக்கு இந்த மனுசனுக்கு” என்று புலம்பியபடி உள்ளே சென்று பொன்னருக்கு கொடுக்கும் கஞ்சியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார் முத்துலெட்சுமி.

பொன்னர் உறங்கிய நேரம் தாண்டி சற்று நேரத்தில் சங்கரபாண்டி வந்து விட்டான்.

ராஜேந்திரன் மனைவி மற்றும் இன்னும் சில பேரை மட்டும் இழுத்துக் கொண்டு வந்திருந்தான். 

முத்துலெட்சுமி வாயெல்லாம் பல்லாக வரவேற்க, சங்கரபாண்டி உள்ளே நுழையும் போதே வடிவரசி சாப்பிட்ட தட்டுடன் வெளியே வந்தாள்.

சங்கரபாண்டி அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு அமர, அருகிலிருந்தவனோ ,” ஏண்ணே இதான் அண்ணியா அம்சமா இருக்குண்ணே … “

“ஏல செத்தமூதி இது பொண்ணு இல்ல நீ மலரு புள்ளைய பார்த்தது இல்லையா.. உடன்குடி ல டீச்சரா இருந்தாளே அவ தான் ல… இவ யார் னு தெரியலை ஒரு வேளை இந்த அம்மா மவளா இருக்கும் “என்றான் சங்கரபாண்டி.

“ஓஓஓ சரி சரி ண்ணே ஆனாலும் இந்த புள்ள சோக்கா தான் இருக்குண்ணே… உன் கண்ணாலம் முடிஞ்சதும் உன் மச்சினியை எனக்கு கட்டி வச்சுடு ண்ணே காலம் முழுசும் உன் காலடியில் கெடக்கேன்…” என்றான்.

“செவுள்ளையே ஒண்ணு விட்ருவேன் ல….  ஏன் என் மச்சினியை நான் கட்டிக்கிடுத மாட்டேனோ ஒண்ணுக்கு ரெண்டு ஒரம்பரைக்கு(உறவுமுறை ) மூணு னு கட்டுவேன் ல” என்றான் வேகமாக.

சொன்னவனுக்கு முகம் வாடிப் போனது.

“ஆனாலும் நீ வெவரமான ஆளு தான் ண்ணே… அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் கட்டிக்கிட பாக்கியே…” என்றான் தணிவாக

“அண்ணன் பவுசு அப்படி ல” என்று மீசையை முறுக்கி விட்டபடி வடிவரசி போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“அது என் மக தம்பி “என்றார் முத்துலெட்சுமி.

“ஹான் ஹான்… ஆமா மாமா எப்போ வருவாரு…? இவகளுக்கு தங்க எடம் தயாரா…?எனக்கு எந்த ரூம்பு” (ரூம் ) என்றபடி வடிவரசியின் அறைக்குள் நுழைந்து விட்டான்.

வடிவரசி அமர்ந்திருந்தவள் சட்டென எழுந்து கொண்டாள்.

ஆறடி உயரத்தில் கருப்பசாமி கோயில் சிலை போல மீசையை முறுக்கி விட்டபடி கடா காப்பும், தங்க சங்கிலியும் மின்ன வந்தவனைப் பார்த்து ஒரு கணம் மிரண்டு தான் போனாள்.

“ஏம்ல உன் அக்காள கட்டிக்க போறவன் வந்திருக்கேன் செலையாட்டம் நின்னா என்ன அர்த்தம்…? மாமன் இந்த அறையில தான் ஒறங்கப் போறேன்…  நீ போய் உங்க ஆத்தாளோட படு போ”  என்று விரட்ட வடிவரசி தன் மிரட்சி பார்வையை மாற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எத்தனையோ பேரிடம் பேசி இருந்தாலும் அவர்கள் எல்லோரும் கனிவாய் பேசி தான் கேட்டிருக்கிறாள்…  ஏமாற்றிய கௌதமிலிருந்து சிவா தனா ஆகட்டும்  எல்லோரும் சற்று இலகுவாய் தான் பேசுவார்கள்.கௌதம் பேசும் போதே சர்க்கரை பாகாய் உருகிடுவான் அவனுக்கு காரியம் ஆக வேண்டுமே…  சிவா தன் அன்னை திட்டுவார் என்றே  சற்று தணிந்த குரலில் பேசுவான். முதல் முறையாக ஒருவன் மிரட்டி பேசுவதைக் கேட்கிறாள் அவனது உயரமும் எடையும் திகிலடிக்க வைத்தாலும்  முறுக்கேறி நின்றவனை பிடிக்க தான் செய்தது அவளுக்கு.

“நான் என் லேப்டாப்பை எடுத்துட்டு போயிடுறேன்” என்றாள் உள்ளே போன குரலில்.

“வெரசா எடுத்துட்டு கெளம்பு ல ஒறக்கம் வருது” என்றவன் பெட்டில் சரிந்து விட்டான்.

‘என்ன மனுசன் இவன் யார் னே தெரியாத வீட்டுக்குள்ள அவன் பாட்டுக்கு வந்து படுக்கிறான்’ என மனதில் திட்டியபடி வெளியேறினாள்.

“இவளும் நல்லா தான் இருக்கா, வார்டு மெம்பரு மப்பும் மந்தாரமுமா பொண்ணுகளை வளர்த்து வச்சிருக்காரு “என்றபடி உறங்கிப் போனான்.

இங்கு சங்கரன் ஒன்றும் தெரியாதவர் போல திருமண மண்டபத்தில் வந்து சிறிது நேரம் இருந்து விட்டு காலையில் வருவதாக கூறி விட்டு கிளம்பினார் .

சூரியகாந்தியை திருமணத்திற்கு முன் பார்க்க கூடாது என்று தடை உத்தரவு போட்டாயிற்று தனஞ்செயனுக்கு.பையன் முனகி தீர்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன் டா இந்த மாதிரி சம்பிரதாயம் எல்லாம் யார் டா கண்டு பிடிச்சது… ? ஸ்ஸ்ஸப்பா முடியலை எங்கம்மா இதுல உங்களை எனக்கு காவலா போட்டு போயிருக்குது வேற” வெற்றியைப் பார்த்து சலித்து கொண்டான்.

“ஏன் மாப்ள நாளையில இருந்து நீ தான் பார்க்க போற ஏன் அவசரம் நல்லா தூங்கி எந்திரி மாப்ள அப்புறம் மண்டபத்தில் தாலி கட்டுற நேரம் தூங்கிடப் போற” என்றபடி போர்வையை விரித்தான் வெற்றி.

“அடப் போங்கடா” என்றவன் படுத்து விட அவனவளோ கையில் மருதாணி இட்டுக் கொண்டிருந்தாள்.

“ஏம்ல இந்த மருதாணி நம்ம மரத்துல எவ்வளவு தழைஞ்சிருக்கு அதை அரைச்சு வைக்கக் கூடாது இது ஏதோ சுண்டல் மடிக்கிற காகிதம் மாதிரி கூம்பாச்சியா இருக்கு இதை பிதுக்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க” என்று செண்பகம் கூற மலர் சிரித்தபடி,” ஆச்சி இது கோன் இதுல தான் பூ மாதிரி டிசைன் எல்லாம் போட முடியும்” என்றாள்.

“அது என்ன டிசைனோ நல்ல வட்ட வட்டமாக உள்ளங்கையில் வச்சு மேல விரலுக்கு தொப்பி போட்ட மாதிரி வச்சா தான் அழகா இருக்கும்…இதைப் பார்த்தா கோழி…. “எனும் போதே சூரியகாந்தி வாயைப் பொத்தினாள்.

“அம்மாயி இதுக்கு மேல ஒரு வார்த்தை சொல்லிடாத… அப்புறம் சாப்பிடும் நேரம் எல்லாம் அந்த நினைப்பாகவே இருக்கும் “என்றாள் பட்டென்று.

“அடி போடி… அதைப் பார்த்தா கோழி போடுறது மாதிரி தான் இருக்கு.மலரு நீ இதுதான் போடப் போறியா..?” என்று கேட்க பின்னால் இருந்து பதில் வந்தது.

“அப்பாயி டீச்சரம்மாவுக்கு ஸ்பெஷல் கையால் அரைச்சது தான் போடனும்…”என்றபடி சிவா நின்றிருந்தான்.

மருதாணி பசுமையாய் அரைக்கப்பட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து வந்திருந்தான். “பாக்யா கிட்ட ஏற்கனவே அரைக்க சொல்லிட்டேன்” என்றான் சிரிப்புடன்.

“இது எல்லாம் நீ செய்யனுமா… கிண்டல் பண்ணுவாளுக போ” என்று சொல்ல

அவனோ உதடு மடித்து சிரித்தபடி,” என் மலருக்கு கை சிவந்தாலும் கன்னம் சிவந்தாலும்  சந்தோஷத்தில் மனசு சிவந்தாலும் அதுக்கு காரணம் இந்த சிவனேஷா தான் இருக்கனும் போட்டுக்க…” என்றவன்,” இல்ல மாமன் வச்சு விடவா ?” என்றான் அவளை ரசித்தபடி.

” அச்சோ நீ போ முதல்ல இதுக்கே வம்பு பண்ணுவாங்க” என அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள்.

“சிவந்ததும் நான் தான் பார்ப்பேன்” என்று விட்டு செல்ல பாக்யாவும் சூர்யாவும் மலரை ஒரு வழி ஆக்கி விட்டனர் கிண்டல் செய்து.

          
அதிகாலைப் பொழுது அழகாய் புலர்ந்திட மணமக்கள் தங்கள் இணையப் போகும் தருணம் எண்ணி நாணத்தில் சிவந்திருக்க அவர்களின் வெட்க சிவப்பை தன்னுள் ஏந்தி உதித்திருந்தான் செந்தணல் மேனியன் . சமையல்கூடம் பல வித உணவுகளால் மணமணத்திட வாசலில் வைத்திருந்த வாழைமரம் வந்தவர்களை வரவேற்க குலைகளை தாழ்த்தி நின்றது பட்டுத் துணி விரித்த மேஜையில் சிறு கற்கண்டு அடங்கிய தட்டும் பன்னீர் ரோஜாக்களை ஏந்திய தாம்பூலமும் வீற்றிருக்க… வந்தவர்களை நறுமணத்துடன் வரவேற்பேன் என்ற ரீதியில் சந்தனக் கும்பாவும்  சந்தனமும் குங்குமமும் சிறு கிண்ணியில் அங்கே இடம் பிடித்திருக்க…பளபளப்பான நெகிழிப்பையில் அடைக்கப்பட்ட  நிஜாம் பாக்கு பச்சை பசலேன வெற்றிலையுடன் ஜொலித்தது. இரு நாற்காலிகள் போடப்பட்டு அங்கே இளம் பெண்கள் இருவர் நின்றிருந்தனர் கூடவே மாப்பிள்ளை வீட்டாரும் மணப்பெண் குடும்பத்தையும் உறவினர்களையும் வரவேற்க பட்டுடுத்தி நின்றனர் முகமெல்லாம் புன்னகையுடன் …
மணமகன் அறையில் தனஞ்செயன் தயார் ஆகிக் கொண்டிருக்க சிவா அவனுக்கு கைக்கடிகாரத்தை மாட்டி விட்டு கொண்டிருந்தான். 
“டேய் நீ தான் டா மாப்ள மாதிரி டிப்டாப்பா இருக்க… பேசாம ரெண்டு மேடையா போட்டு ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா வச்சுக்கிடலாம் “என்று கிண்டல் செய்தான் தனஞ்செயன்.

“போடா நானெல்லாம் என்னா மாதிரி கொள்கையோட இருக்கேன் இப்பவே கல்யாணம் பண்ண சொல்ற… ம்ம்ம் அப்புறம் என் டீச்சருக்கு கோவம் வந்திடும் டா…. “என்றான்.

அண்ணன் தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தபடி இருக்க மாப்பிள்ளையை புரோகிதர் அழைத்தார். அதே நேரத்தில் பொன்னர் வீட்டிற்கு வரச் சொன்னதாக மலரை சங்கரன் வீட்டின் வேலையாள் மருது வந்து அவளை அழைத்து சென்றான். செண்பகவல்லி ஆச்சியிடம் மட்டும் விஷயத்தை கூறி விட்டு கிளம்பினாள்.

மணமகள் அறையிலோ சூரியா தயார் ஆனாள். இடையிடையே பாக்யாவிடம் பேசிக் கொண்டிருந்தவள் தனதன்னை வரவும்.,”ம்மா எங்க ம்மா மலர் அக்கா இந்தா வரேன் னு சொல்லிட்டு போனுச்சு இன்னும் வரலை…” என்று கேட்க

மரகதமோ ,”உன் பாட்டன் தான் டி வேதா நகையை வந்து வாங்கிட்டு போன்னு சொல்லி ஆள் அனுப்பி இருந்தாரு அதான் அந்த வீட்டிற்கு போயிட்டு வரேன்னுட்டு போனது இன்னும் வரலை நான் யாரையாவது விட்டு பார்க்க சொல்றேன்… சரி சரி சீக்கிரம் ரெடி ஆகுங்க ஐயர் வந்துட்டாரு… “என்று விட்டு போனார் மரகதம்.

சூரியாவிற்கு சற்று பதட்டமாக தான் இருந்தது. 
செண்பகவல்லி ஆச்சியோ வாசலையே பார்த்துக் கொண்டிருக்க, பொன்னர் வெற்றியுடன் வந்திறங்கினார். அவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செண்பகவல்லி

ஆச்சியோ ….”இதென்ன இவர் இங்க வர்றாரு அப்ப மலரை ஏன் வர சொன்னாரு ??”என்ற குழப்பத்துடன் வேக நடை போட்டு பொன்னரிடம் செல்ல “அட ஏன் செண்பா இம்புட்டு வேகம் மெதுவா வா நான் உள்ள தானே வரேன் “என வெற்றியின் கைப்பிடித்து நடந்து வந்தவர் சொல்ல .,”ஏண்ணே மலரை நீங்க வரச் சொன்னதா அந்த மருது பய கூட்டிட்டு போயிருக்கான் நீங்க இங்க வார்றிகளே மலரு எங்க நடந்து வர்றாளா???”என்று கேட்டார்.

“நான் வர சொன்னேனா… அட இல்லையே செண்பா… நான் இங்க வந்து பார்த்துக்கலாம் னு வந்தேன்… வீட்ல சங்கரனும் முத்துலெட்சுமியும் தான் இருந்தாவ… “என்றவர் விழி விரித்து… “வேணும்னு மலரை அங்க வர வச்சு இருப்பானோ அவன்… எய்யா வெற்றி நீ போய் சிவாவை கூட்டிக்கிட்டு ஒரு எட்டு வீட்டுல போய் பார்த்துட்டு வா… “என்று பதற்றமடைந்தார். 

செண்பகவல்லிக்கோ பயம் பிடித்துக் கொண்டது. மனமோ ஏதோ தவறு நடக்கப் போவதாக அசரீரி கூறியது. 

அவர்கள் உள்ளே செல்லவும் தனஞ்செயன் சூரியகாந்தியின் கழுத்தில் மூன்று முடிச்சு போடவும் சரியாக இருந்தது. உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்த திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

தனஞ்செயன் அருகிலிருந்த சிவாவோ மலரை தேடியபடியே நின்றிருக்க,  வெற்றி அவனிடம் வந்தவன் பொன்னர் கூறிய விடயத்தை கூற அதிர்ந்து போனான் சிவா. 

“இவளை யாரு சொல்லாம கொள்ளாம போக சொன்னது… சரி மாப்ள நீ வண்டி சாவியைக் குடு ஏதாவது னா ஃபோன் பண்றேன் நீ இங்க கவனிச்சுக்க “என்று சொல்ல

“சரி மச்சான் பத்திரம் நீ அரை மணி நேரத்தில் வரலைனா நான் ஃபோலீஸோட மலர் அப்பன் வீட்ல தான் டா நிப்பேன்”என்று வெற்றி உறுதியாக கூற அவனும் சரி என்று கிளம்பினான்.

*******

இங்கே மலரோ மருதுவோடு வந்தவள் .,”பாட்டா எங்க ஏன் கதவு சாத்தி இருக்கு… “என்று குழப்பமாக கேட்க மருதுவோ.,”எனக்குத் தெரியாது பாப்பா… உன்னை கூட்டிட்டு வரச் சொல்லி உங்க அப்பா தான் சொன்னாரு… நானும் உன்னை அழைச்சுட்டு வந்தேன் “என்று சொல்லும் போதே முத்துலெட்சுமி மலரின் கதவைத் திறந்து அவள் கையைப் பிடித்து உள்ளே இழுத்தார். 

அதில் அதிர்ந்தவளோ சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கையை உதற அங்கே மணமேடை அமைக்கப்பட்டு அங்கே சங்கரபாண்டி ஐயர் கூறிய மந்திரங்களை உச்சரித்து கொண்டிருந்தான்.

அன்று சங்கரபாண்டியுடன் வந்த இரு பெண்மணிகளும் மலரை வலுக் கட்டாயமாக அழைத்து செல்ல கையை உதறிக் கொண்டு தன்னை விடுவிக்க முயல அங்கு வந்த சங்கரனோ .,”இதோப் பாரு மலரு சும்மா அடம் பிடிக்காம மணமேடையில வந்து உட்காரு… இன்னைக்கு உனக்கும் சங்கரபாண்டிக்கும் கல்யாணம் நடந்தே ஆகணும்…. அவன் கிட்ட போட்ட சபதத்தில் நான் ஜெயிச்சே ஆகணும் … “என்று பல்லை கடித்தபடி பேசினார்.

சங்கரபாண்டியோ” மாமா சீக்கிரம் அவளை வரச் சொல்லுங்க… இல்ல இங்க எத்தனை தலை உருளும் னு எனக்கே தெரியாது ல …. ஏத்த அவளை என்ன மெல்ல இழுத்துட்டு வாறீக… வெரசா இழுத்துட்டு வாங்கல… நல்லா செம சோறு திங்குதீக (சாப்பிடுவது) ல “என்று உறுமியவனை முறைத்தபடியே மனதில் வசைபாடினர்.

“என்னம்மோ இவன் சோறு போட்டு வளத்தா மாதிரி மெரட்டுதான்… எல்லாம் என் புருஷனால வந்த வெனை”என்று கவுன்சிலர் ராஜேந்திரன் மனைவி புலம்பியபடி மணமேடையில் மலரை மடக்கென்று அமர வைத்தார். ராஜேந்திரன் சென்னைக்கு செல்வதாக கூறி விடவும் அவரது மனைவியை வம்படியாக தான் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் சங்கரபாண்டி.

அவனிடம் கொட்டிக் கிடக்கும் பணத்திற்கும் அவனது தந்தையின் ஆள்பலத்திற்கும் பயந்தே ராஜேந்திரன் தன் மனைவியை வேறு வழியின்றி அவனோடு அனுப்பி இருந்தார். 

சங்கரபாண்டியோ மலரைப் பார்த்து ஈஈஈஈ என்று இளித்தான்.

“என்னல சண்டிராணி சொன்ன மாதிரி செஞ்சோம் ல…. இன்னும் அஞ்சு நிமிஷத்தில் நீ என் பொஞ்சாதி இப்ப என்னல செய்யப் போற…. “என்று மிரட்ட

மலரோ அவனை அசராது பார்த்தவள்… “உன்னால முடிஞ்சா கட்டுல தாலியை… கோட்டிப்பயலே… என்னல மணமேடையில் உட்கார வச்சுட்டா உன் பொஞ்சாதி ஆகிடுவேனால…நீ என்னை நெருங்க கூட முடியாதுல அப்படியே நீ தாலி கட்டுன அடுத்த நிமிஷம் அதை அறுத்து எறிஞ்சுட்டு உன் கொரவளையை ( குரல்வளை )அறுக்கவால …. ம்ம்ம்… சொல்லு”என்று உறுமிட,

அவனோ இன்னும் “உன் திமிரு அடங்கலையாட்டி… என் சீம சிறுக்கி… யோவ் அய்யரே குடுய்யா தாலியை”என்று ஐயரிடம் இருந்து பிடுங்கினான்.

….. தொடரும்