பகுதி -10

தனஞ்செயன் அவசரகதியில் முத்துலெட்சுமியையும் சங்கரனையும் சந்திக்க வந்திருந்தான். 

முத்துலெட்சுமி ஆர்வத்துடன் தனது வருங்கால மாப்பிள்ளையை வரவேற்றார்.

“வாங்க தம்பி என்ன திடீரென இந்த பக்கம்?” என்றவாறு காஃபியை கொடுத்து விட்டு அமர்ந்தார். சித்திரைசெல்வி உள்ளே நுழைந்தார். 

“ஏய்யா வந்து எம்புட்டு நேரம் ஆச்சு வந்த விஷயத்தை சுருக்குனு சொல்லிட்டு வரமாட்ட, “என்று தன் மகனை பார்வையால் அடக்கியவர் முத்துலெட்சுமியிடம் .,”அது ஒண்ணும் இல்ல அண்ணி முகூர்த்த புடவை எடுக்க போகணும் இங்க தகவல் சொல்லிட்டு என்னைக்கு போகலாம் னு கேட்டுட்டு வாப்பான்னு சொன்னேன், அதுக்கு இந்த முழுங்கு முழுங்குறான், சரி சொல்லுங்க என்னைக்கு எடுக்க போகலாம்.”என்று கேட்க ,

முத்துலெட்சுமி வாயெல்லாம் பல்லாக .,”அதுக்கென்ன இன்னைக்கே நல்ல நாளு தான் போயிட்டு வருவோம், “என்றிட தனஞ்செயனுக்கு கோபம் கோபமாக வந்தது. இருப்பினும் அமைதி காத்தவன் சட்டென்று எழுந்து .,”நீங்க பேசிட்டு இருங்க நான் வரேன் “என்று வெளியே செல்ல, போகும் வழியிலேயே வடிவரசி தனஞ்செயனை பார்த்து விட்டாள். 

தொலைவில் சூர்யா வருவதை அறிந்து கொண்டவள் வேகமாக தனஞ்செயன் அருகில் சென்று, “மாமா என்ன வந்ததும் கிளம்பிட்டிங்க வாங்க வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்”என கையைப் பிடித்து அழைக்க, சூரியா இந்த காட்சியை கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டுச் சென்றாள். 

அவள் போவதை உணர்ந்த தனஞ்செயனோ கடுப்பாக கையை உதறியவன் “இதோப் பாரு வடிவரசி உன்னை எனக்கு பிடிக்கலை இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க’னு சொல்ல தான் உன் அப்பா அம்மாவை பார்க்க நான் வந்தேன், அவங்க கிட்ட சொல்ல முடியலை, இப்போ நேரடியாக உன் கிட்ட சொல்றேன் தயவு செஞ்சு உன் மனசுல ஆசையை வளர்த்துக்காத நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது,” என அழுத்தமாக உரைத்து விட்டு சென்றவனை, ரசனையுடன் பார்த்தவள்.,”நீ எனக்கு வேணும் னு முடிவு பண்ணி நாள் கணக்கு ஆகிடுச்சு தனஞ்செயன், உனக்காகவோ உன் பணத்துக்காகவோ இல்லை. , ,அவ ஒருத்திக்காக எவ்வளவு தூரம் நான் அவளால கஷ்டப்பட்டேனோ அதை விட பல மடங்கு துக்கத்தை அவ அனுபவிக்கனும், அதுக்கு நான் என்ன வேணும்னாலும் செய்வேன், “சூளுரைத்து சென்றாள் வடிவரசி. 

வீட்டிற்கு வந்த சூரியாவிற்கு மனம் ரணமாகி இருந்தது. 

‘அவர் இடம் கொடுக்காமலா அவ அவரை கையைப் பிடித்து அழைச்சுட்டு போவா அவ, ‘மனதில் பல எண்ணங்கள் ஓட தனஞ்செயன் மீண்டும் வந்தால் பேசிடக் கூடாது, வேண்டாம் நாம் இங்கிருந்தால் தானே பேசிடுவார், கல்லூரியில் படிக்கும் வேலை இருக்கிறது “என்று சில நாட்கள் விடுதியில் தங்கிடுவோம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் சூரியகாந்தி. 

நினைத்ததை போலவே திருச்சியில் உள்ள தனது கல்லூரி விடுதியில் ஏதேதோ காரணங்களை கூறி தங்கி கொண்டாள் . 

மலர் எவ்வளவோ தடுத்தும் அவள் கேட்டபாடு தான் இல்லை, தனஞ்செயனுக்கு இவ்விடயம் தெரிந்திட அவனோ கடுப்பாக, சூரியாவிற்கு அலைபேசியில் அழைக்க , அது எப்போதோ உயிரை விட்டிருந்தது.

“ச்சே இவ வேற புரிஞ்சுக்காம பண்றா, “என புலம்பியவன் அந்த கோபத்தை தன் அன்னையிடம் காட்டினான். 

“உங்களை பொண்ணு பார்க்க சொல்லி நான் கேட்டேனா, என் மனசில் என்ன இருக்குனு கேட்காம ஏன் மா இப்படி பண்றீங்க எனக்கு வடிவரசியை பிடிக்கலை, இந்த கல்யாணத்தை நிப்பாட்டுறியா இல்ல நான் ஊருக்கு திரும்பி போகவா, போனா வரவே மாட்டேன் மா அப்புறம் பார்த்துக்கிடுங்க “என தீர்மானமாக உரைத்தவனை கண்டு பயந்து போனார் சித்திரை செல்வி.

“ஏ தம்பி பூ வச்ச பொறவு இப்படி பேசாதய்யா, அவளும் குணமான பொண்ணுதாம்யா நீ கட்டிக்கிட்ட பெறகு உனக்கு ஒத்தாசையா இருப்பா “என்று சொல்ல அவனோ விடாப்பிடியாக மறுத்து விட்டான்.

“இந்தாரும்மா என் முடிவு இதுதான் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது , இந்த கல்யாணத்தை நிறுத்திடு அம்புட்டு தான்” என்று விடுவிடுவென்று வெளியேறினான் தனஞ்செயன். 

“ஏன் மாமா இப்படி பண்றான் இவன்,முகூர்த்த புடவை எடுக்க நாளைக்கு போகலாம் னு இருக்கையில இம்சை பண்றானே அவன் அப்பா வேற பத்திரிக்கை அடிக்க குடுத்துட்டாரு, நான் என்ன செய்ய,? சங்கரன் பொண்டாட்டி என்ன ஆஞ்சு புட மாட்டாளா,!! நான் இவனை மதிக்காம அன்னைக்கே பொடவை, தாலி, எல்லாம் எடுத்து வந்திருக்கனும் “என்று கண்ணீர் சிந்திட ,வேலுத் தம்பியோ .,”விடு மருமவளே அவன் திரும்பி வரட்டும் நான் பேசுறேன் “என சித்திரை செல்வியை சமாதானம் செய்தார் வேலுத்தம்பி .

“என்னவோ இந்த கல்யாண பேச்சை எடுத்ததிலிருந்தே நம்ம வீட்டு நிலைமை சரி இல்லை, நீ எந்த பொண்ணை பார்த்தாலும் கட்டிக்கிறேன்னு சொன்னவன் இன்னைக்கு மொரண்டு பிடிச்சுக்கிட்டு திரியுறான் அப்படி எவளையாவது விரும்பி இருந்தா சொல்லி தொலைச்சுருந்தா அவளையே பார்த்துக் கட்டி வச்சிருப்பேனே, இப்ப இவன் வேண்டாம் னு சொன்னா சின்னவன் கல்யாணமும் இல்ல நின்னு போவும், நான் என்னத்த சொல்றது “என்று புலம்பிட கருப்பசாமி உள்ளே நுழைந்தார்.

“என்ன செல்வி உன் கூட நெதமும் ராவடியா இருக்குது உன் புலம்பலு தெருமொனை வரை கேட்குது என்ன தான் உன் பிரச்சினை,”என தன் மனைவியை கடிந்து கொண்டார் கருப்பசாமி. 

“ஏன் சொல்ல மாட்டீக ?? நீங்க பெத்த புள்ளைக உங்க கிட்ட வந்தா சொல்றானுவ, என் கிட்ட இல்ல மல்லுக்கு நிக்குறானுக உங்க பெரிய மவனுக்கு அந்த முத்துலெட்சுமி மவ வேண்டாமாம், கல்யாணத்தை நிறுத்திடுங்க இல்லன்னா துபாய்க்கே திரும்பி போயிடுவேன் னு வம்பு வளர்த்துகிட்டு சாப்பிடாம போறான்,!! இவன நம்பி போய் உன் பொண்ணு வேண்டாம்னு சொன்னா முத்துலெட்சுமி சின்னவன் கல்யாணத்தையும் சேர்த்து நிறுத்திப்புடுவா என்ன செய்ய???”என்று சொல்ல கருப்பசாமி யோசித்து கொண்டிருந்தார்.

அன்றைய பொழுதே தனஞ்செயனை பற்றி யோசித்து கொண்டிருக்க, வெகுநேரம் கழித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தனர் அவனின் பெற்றோர். 

“சரி செல்வி முடிவா போய் சங்கரன் கிட்ட பேசிட்டு வந்திடுவோம் புடிக்காத கல்யாணத்தை பண்ணி வச்சு அப்புறம் ரெண்டு பேரும் சண்டை போட்டு விட்டு கெடக்குறதுக்கு இப்பவாவது சொன்னானே னு சந்தோஷப்பட்டுக்கிட வேண்டியது தான் “என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கருப்பசாமி.

பொன்னுசாமி வீட்டில் மரகதம் புலம்பிக் கொண்டிருந்தார். 

“கல்யாணம் ஆனா கூட உங்களை விட்டு போக மாட்டேன் னு சொன்னவ இப்ப நாலு நாள் ஆச்சு ஹாஸ்டலுக்கு போய், எம்புட்டு சொல்லியும் கேட்காம இங்க இருக்கிற காலேசுக்கு விடுதியில் தான் தங்குவேன் னு அடம் பிடிச்சு போயிருக்கா, !! பெத்தவரு நீங்க ஒரு வார்த்தை மிரட்டி இருக்க வச்சிருக்கலாம்ல,” என்றார் மூக்கை உறிஞ்சிக் கொண்டு. 

“ஏன் மரகதம் என்னம்மோ நான் வேணும்னே என் மகளை ஹாஸ்டல் அனுப்பின மாதிரி பேசுற, அது தான் பயணம் செய்ய களைப்பா இருக்கு , வூட்டுக்கு வந்து படிக்க முடியலை மார்க் கொறையுது னு சொல்லுச்சு அதுக்கு தானே அனுப்பி வச்சேன், நம்ம புள்ள தனியாவா இருக்கு அங்கேயும் பிள்ளைக இருக்காக தானே அதுவும் பொம்பளை பிள்ளைக மட்டும் தங்கியிருக்க எடம், நம்ம கருப்பசாமி மக பாக்யா கூட தங்கி இருக்கு, நான் பார்த்துக்கிறேன் மாமா னு சொல்லவும் தானே நம்பி அனுப்பி இருக்கேன், நாளைக்கு போய் நம்ம தீனாவை ஒரு எட்டு பார்த்துட்டு வரச் சொல்லு, இல்ல நீயும் கூடப் போறதா இருந்தா போயிட்டு வா, அத்தையும் வேணும்னா தொணைக்கு அழைச்சுக்க, “என்றார். 

மரகதத்தின் முகம் மலரவும் செண்பகவல்லி சிரித்தபடியே .,”அவ வூட்டோட கெடந்தா பொழுதோட சண்டை வளர்க்க வேண்டியது, அவ இல்லைன்னதும் மவளை தேடுதோ ஏட்டி உன்னைய என்னல செய்றது, ஏம்ல காதுல விழுகுதா நான் பேசுதது, அடி ஆத்தே அவ சத்தமில்லாமல் போறதை பாருங்க மருமவனே, !!!”என்று சொன்ன செண்பகவல்லியை பொய்யாய் முறைத்து விட்டு.,”நீ தான் மகளை பார்க்காம புருஷன் போனாலும் அந்த ஊரை விட்டு நீ வர மாட்ட நானும் அப்படியே இருக்க முடியுமா???”சலித்து கொண்டார் மரகதம். 

“ஆமாம்ல என் புருஷன் வாழ்ந்த ஊரு தான் எனக்கு பிடிக்கும் , நீ இந்த மணப்பாறையை விட்டு வந்திடுவியா இங்க தான் தண்ணி கிடைக்காம அல்லாடுறியே என் ஊருக்கு வர்றது தானே ல ??? “என்று வம்பளந்தார் செண்பகவல்லி. 

இருவரும் பேசிக் கொண்டிருக்கையிலேயே பனிமலர் உள்ளே நுழைந்தாள். 

“ஏ ஆச்சி உன் சத்தம் பொடக்கால வரை கேட்குது என்ன தான் பேசுவீக,” என கேட்டவளை .,

“வால புதுப்பொண்ணு, . ஏம்ல முகூர்த்தத்துக்கு சீலை எடுக்கப் போறேன் னு உன் சின்னாயி காரி அளந்தா பொறவு ஏம்ல போவலையாம், “என கேட்டதும் .,”அதெல்லாம் எனக்குத் தெரியாது ஆச்சி அவிக எனக்கு தகவலா சொல்றாக, கட்டளை தான் போடுதாக நான் அந்த வூட்டு பக்கமே போறதில்லை அதுலயும் அந்த மார்டன் பொண்ணுக்கு நம்மளை கண்டாலே ஆவாது, பொறவு அங்க என்ன வேலை, .”என்றாள் பனிமலர். 

“அடியே கோட்டித் தனமா பேசாத, அந்த ஊடு உனக்கு பாத்தியப்பட்டது அவளுவ கொழிக்கிறாளுவ , நீயும் விட்டுட்டு கதை பேசுறவ, படிச்சவ பேசுத பேச்சால இது, இந்நேரம் அவளுவ பொடணியில தட்டி தொரத்திட்டு நீ உட்கார்ந்து ஆட்சி பண்றதில்லை “என கேட்ட செண்பகவல்லியை முறைத்தவள்.,

“ஏ ஆச்சி ,பெத்தவரே சொந்தமில்லைனு ஆயிட்டாரு. அவரு சம்பாதிச்ச சொத்தா சொந்தமாகப் போவுது, நான் அவங்க சொத்துக்காக இந்த கல்யாணத்தை ஏத்துக்கிடலை. என் பாட்டனுக்காக தான் ஒத்துக்கிட்டேன்”என்றாள். 

“அது சரி “என மீண்டும் பேசப் போன செண்பகவல்லியிடம்.,

“ம்மா புள்ளை கிட்ட நச்சு நச்சுனுட்டு, நீ வா மலரு , பெரியப்பன் சோளக்கருது வாங்கியாந்தாரு வேக வச்சேன் வந்து சாப்பிடு”என மரகதம் அழைத்து கொண்டு சென்றார். 

*********

சிவசக்தி மலருக்கு அழைத்தான். 

சோளக்கருதை ஒவ்வொரு முத்துக்களாக சாப்பிட்டு கொண்டிருக்க மலரின் எண்ணிற்கு அழைப்பு வந்ததும் அதை எடுத்து பார்த்தவளுக்கு முகம் மலர்ந்தது .

“டீச்சரம்மா என்ன பண்றீங்க, ??” 

“சோளக்கருது சாப்பிடுறேன், என்ன விஷயம் ??”

“ஓஓஓ நடத்துங்க நடத்துங்க ஆமா உனக்கு என்ன கலர் பிடிக்கும், ??”

“ஏன்??”

“ப்ப்ச் சொல்லு மலர், !!”

“எனக்கு இளஞ்சிவப்பு தான் பிடிக்கும் “என்று ஒற்றை வரியில் பதில் அளித்திட 

“கொஞ்சம் நிறைய தான் பேசேன் பனி, “

“எனக்கு இவ்வளவு தான் பேச முடியும். உனக்கு பிடிக்கலைனா பேசாத “என்று இணைப்பை துண்டித்து விட்டாள். 

“ப்ப்ச் இவ ஏன் தான் இப்படி பண்றாளோ தெரியலை, இவளுக்கு நம்மளை பிடிச்சிருக்கா பிடிக்கலையானு கூட தெரியலை”என்று புலம்பி தவித்தவன், மீண்டும் மலருக்கு அழைப்பு விடுக்க அதே நேரம் சங்கரன் தன் வீட்டு வேலையாளை விட்டு மலரை அழைத்து வர சொல்லி இருந்தார்.

மலர் கைபேசியை வைத்து விட்டு கிளம்பிட, அது அடித்து கொண்டே இருந்தது. 

“என்னடா ஏன் ஃபோனை தூக்கி போடப் போற?”என்று கேட்டபடி வெற்றி வர 

அவனோ எரிச்சலாக ,”ப்ப்ச் ஏதாவது ஒரு விஷயம் கொஞ்சம் கோபமா கேட்டுட்டா உடனே கோவிச்சுக்கிறாடா, கொஞ்சம் நல்லா தான் பேசேன் பனி’னு கேட்டுட்டேன் உடனே கோவப்பட்டு ஃபோனை எடுக்காம படுத்துறா,” என்றான். 

“விடு மச்சான் கல்யாணத்திற்கு முன்னாடி அதிகம் பேச வேணாம்’னு நினைச்சிருக்கும் கல்யாணம் முடிஞ்சதும் உன் கூடவே தானே இருக்க போகுது, பேசு யார் வேண்டாம் னு சொன்னது, இப்ப வா முருகன் அண்ணே உன்னை வர சொல்லுச்சு, ஏதோ செடி வைக்கணுமாம், அது தான் பொழப்பத்த வேலை பார்க்குதுன்னா நீயும் கூட்டு சேர்ந்திருக்க, என்னம்மோ மழை பேஞ்சு அப்படியே வளர்ந்து நிக்கிறா மாதிரி”என்று சலித்தவனை பார்த்து விட்டு 

“இதுவும் உன் அருமை தங்கச்சிக்காக தான், அவளுக்கு பிடிக்குது செய்றேன்”என்றான் சிவா. 

“ஓஓஓ அப்போ மலருக்கு பிடிச்சதுனா என்ன வேணும்னாலும் செய்வ, நாளைக்கே நம்ம நட்பு ,உறவு வேண்டாம் னு சொன்னா விட்டு போயிடுவ அப்படி தானே!”என்று கிண்டலுக்காக வெற்றி கேட்கவும் சிவாவிற்கு கோபம் வந்து விட்டது. 

“டேய் இனி ஒரு முறை இது போல பேசாத, அவ்வளவு தான் சொல்லிட்டேன், என் பனிக்கு அப்படி ஒரு எண்ணம் வரவே வராது, அப்படியே வந்தாலும் நான் சொல்றதை புரிஞ்சுப்பா “என்று கூறி விட்டு வண்டியை எடுத்து கொண்டு சென்றான். 

வீரமலை வெற்றியின் மீது கை போட்டு.,”ஏன் டா அவனை கோவப்படுத்துற ?”என்றான். 

“ப்ப்ச் எனக்கு அந்த பொண்ணு மேல நம்பிக்கையே வரலைடா ஏதோ ஒட்டாத மாதிரியே பேசுது ,நடந்துக்கிது, இதோ நம்ம வடக்கு தெரு காரன் சீனுவை எடுத்துக்க, அவன் லவ் பண்ற பொண்ணு கிட்ட லவ் சொல்லி ஒரு வாரம் தான் ஆகுது, ஆனா இதோட நாலு தடவை தியேட்டர் கூட்டிட்டு போயிட்டான், பொழுதனைக்கும் ஃபோன் ல கடலை போடுறான், ஆனா இவனைப் பாரு,. அஞ்சு நிமிஷம் ரெண்டு பேரும் பேசினாலே அதிசயம் தான், நேரில் பார்த்தாலும் ஏதோ தெரிஞ்சவங்களை பார்த்து சிரிக்கிற மாதிரி ஒரு சிரிப்பு அவ்வளவு தான், இதுக்கு பேரு காதலா, எனக்கென்னமோ அந்த பொண்ணு இவனை விரும்புதுங்கிற நம்பிக்கையே இல்லை மச்சான்,அவன் மனசு கஷ்டப்பட கூடாதுன்னு தான் நான் எதுவுமே சொல்றதில்லை. ரெண்டு பேருக்கும் கல்யாணம் வேற பேசி முடிச்சுட்டாங்க, அதான் அமைதியா போறேன்”என தன் மனதில் இருந்தவற்றை ஒளிவு மறைவு இல்லாமல் கூறினான் வெற்றி. 

“அதான் கல்யாணம் பேசி முடிவு பண்ணியாச்சு இல்ல சிவா நினைச்சது நடந்திடுச்சு அப்புறம் என்ன விடு “என்று சமாதானம் செய்தான் வீரமலை. 

“அதனால தான் டா நானும் அமைதியா இருக்கேன் இல்லாட்டி அந்த பொண்ணு வேண்டாம்டா’னு சொல்லி இருப்பேன்”என்று சொல்லி விட்டு இருவரும் நகர்ந்தனர். 

இங்கே முருகன் சிவாவிடம் பேசிக் கொண்டிருந்தார். 

“தம்பி உன் வயலுக்கு ஓரக்கால்ல இந்த நாலு மரத்தையும் நட்டு விடு, கொஞ்ச நாளைக்கு தண்ணி விட்டா போதும் துளிர்த்து வந்துட்டா நல்ல நிழலா இருக்கும் நிலத்தடி நீரையும் தாங்கி பிடிக்கும், வருஷத்துக்கு ஒரு முறை நீ மரத்தை வெட்டி பயன்படுத்திக்கலாம், தீக்குச்சி செய்ய இந்த மரத்தை வாங்கிப்பாங்க, வருமானம் கிடைக்கும்”என்று சொல்ல சிவாவோ வெற்றி பேசிய எரிச்சலில் இருந்தவன் முருகனிடம் வேண்டாம் என்று மறுத்தான். 

“முருகன் ண்ணே அதெல்லாம் வேண்டாம் ண்ணே, அதை கவனிச்சிட்டு இருக்க முடியாது , எனக்கு வேலை இருக்கு வரேன் ண்ணே வேற எங்கேயாவது மரம் நட போறியா கொண்டு வந்து விடுறேன் மத்தபடி இந்த வேலை எல்லாம் எனக்கு சொல்லாத “என்றவன் போய் விட்டான். 

“இந்த காலத்து பயலுகளுக்கு இதோட அருமை கொஞ்சமும் தெரியறதில்லை “என்று சலித்துக் கொண்டு தன் மரக் கன்றுகளை வேறெங்கு நடலாம் என்ற யோசனையுடன் அங்கிருந்து சென்றார் முருகன். 

**********

நாட்கள் கடக்கவே கருப்பசாமி சித்திரைசெல்வியுடன் முத்துலெட்சுமியை காண வந்திருந்தார். 

“என்ன அண்ணா திடுதிப்பென்று வந்து நிற்கிறிங்க, ஏதாவது முக்கியமான விஷயம் பேசனுமா ???”என்று கேட்க 

தயங்கியபடி சித்திரைசெல்வி தான் ஆரம்பித்தார். 

“அது வந்து முத்து, நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க “எனும் போதே மலர் பின்வாசல் வழியாக வந்து நின்றாள். 

“தனாவுக்கு வடிவரசியை கட்டிக்க இஷ்டமில்லையாம் அதனால ??”

“அதனால, .அதனால என்ன அண்ணி சொல்ல வாறீக, ம்ம்ம் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க னு சொல்ல வாறீகளா நீங்களா தான் பொண்ணு கேட்டு வந்தீங்க, இப்ப இப்படி சொல்றீங்க இதுனால அந்த கல்யாணம் மட்டுமா நிற்கும் ரெண்டு கல்யாணமும் சேர்த்து தான் நிற்கும் “என்றவரை இடைமறித்து,

“சிவாவுக்கு மலரை கட்டிக்க விருப்பம் தான் தனா தான் பிரச்சினை பண்றான், பிடிக்காதவனுக்கு கட்டி வச்சு பிள்ளை வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்க வேண்டாம் னு சொல்றேன், நம்ம வடிவு இருக்க அழகுக்கு எப்பேர்ப்பட்ட மாப்பிள்ளையும் கிடைப்பான், என் மவனுக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான்னு நினைச்சுக்கிறேன்”என்றார் செல்வி. 

“அண்ணி இந்த சமாதானம் எல்லாம் எனக்கு வேண்டாம், பூவு வச்சு உறுதி பண்ணது நீங்க, நீங்க தான் உங்க மகனை சம்மதிக்க வைக்கணும் எல்லாரும் பிடிச்சா கல்யாணம் பண்ணிக்கிறாங்க, ஏன் நான் எல்லாம் ரெண்டாந்தாரமா வாக்கப்பட்டு நல்லா வாழலை, பிள்ளை பெத்துக்கிடலை, இது எனக்கு பிடிக்காத கல்யாணம் தான் ஆனாலும் கட்டு செட்டா வாழறேனா இல்லையா?, அது மாதிரி உங்க பையனுக்கும் என் மகளை பிடிக்கும், இப்ப உறுதி செஞ்ச கல்யாணத்தை இப்படியே நடத்துங்க இல்லையா ரெண்டு கல்யாணத்தையும் சேர்த்து நிறுத்திடுங்க. நான் என் மகளை உங்க பெரிய மவனுக்கு தர்றதால தான் மலரை உன் சின்ன மவனுக்கு கட்டி வைக்க சம்மதிச்சேன், இல்லாட்டி வெட்டியா ஊர் சுத்துறவனுக்கு எவளாவது பொண்ணு குடுப்பாளா?, பொழுதனைக்கும் பொளிகாளையாட்டம் சுத்துற வெட்டிப்பயலுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைப்பேனா?, ஏதோ என் மக அங்க இருந்தா நாளைக்கு மலர் கஷ்டப்பட்டாலும் அவ ஒத்தாசையா இருப்பா னு தான் ஒத்துக்கிட்டேன், ஊரை சுத்திட்டு அலையிறவனுக்கு பொண்ணு கொடுக்கணும் னு எந்த அவசியமும் இல்லை, ஒண்ணு ரெண்டு கல்யாணத்தையும் சேர்த்து வைப்போம் இல்லையா சின்னவனுக்கும் பொண்ணு கிடையாது, ரெண்டுல ஒரு முடிவு எடுத்துட்டு காலையில பதிலை சொல்லுங்க பத்திரிக்கை அடிக்க கொடுக்கணும்,”என்று விட்டு .,”என்னங்க நான் சொல்றது சரி தானே, ???”என தன் கணவரையும் கூட்டு சேர்த்தார் முத்துலெட்சுமி. 

சங்கரனும் .,”இதோப்பாருங்க மாமா முத்து சொல்றது நூத்துக்கு நூறு சரி , நீங்க தான் இனி முடிவு சொல்லணும், எனக்கே உங்க சின்ன மகனுக்கு மலரை கட்டி வைக்க விருப்பம் இல்லை, இருந்தாலும் கட்டி தர சம்மதிக்கிறேன் னா அதுக்கு காரணம் தனா வெளிநாட்டுல இருக்காப்ல, நாளைய பின்ன தம்பியையும் அழைச்சுட்டு போய் சம்பாதிக்க வைப்பாருனு நம்பிக்கையில தான் ஒத்துக்கிட்டது, அட தனாவே சொல்லலைனாலும் வடிவு சொல்லி போக வைக்கும் இல்லையா, தான் அக்கா கஷ்டப்பட விடாது வடிவரசி, இதுவே தனாவுக்கு வேற ஒரு பொண்ணை கட்டி வச்சா அந்த புள்ள வந்து சொல்லுமா உங்க தம்பியை வெளிநாட்டுக்கு கூட்டிப் போங்க அவங்க கஷ்டப்படுறாங்கனு, சொல்லும் மா சொல்லுங்க தான் முன்னேறி வர்றதை தான் பார்க்கும், கட்டி வச்சா ரெண்டு பொண்ணையும் கட்டி கொடுக்கிறோம் இல்லையா நீங்க வேற இடம் பார்த்துக்கங்க “என சங்கரன் சொன்னதும் தலை கவிழ்ந்து கருப்பசாமியும் சித்திரை செல்வியும் வெளியேறினர் .

“முத்து நான் பஞ்சாயத்து ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வரேன் மலர் வந்தா அந்த பணத்தை எடுத்து குடு, அதுக்கு பிடிச்ச நகையை போய் வாங்கிக்கட்டும் “என்று கூறி விட்டு வெளியேறினார். 

“சரி சரி “என்று சொன்னவர் பின் வாசலை பார்த்திட அங்கே மலர் நின்றதைக் கண்டதும் உள்ளூர மகிழ்ந்து அவளிடம் சென்றார். 

மலரை அழைத்து ஏதேதோ பேசிட அவளின் முகம் வெளிறியது. 

அவளும் பதிலுக்கு முத்துலெட்சுமியை எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்றவள் கருப்பசாமியின் வீட்டு வழியாக சென்றிட அவர்களின் வாக்குவாதமும் சிவாவின் கத்தலும் நன்றாக கேட்டது.

அதை எல்லாம் கேட்டவளுக்கு மனம் நொந்து போனது. மனதில் ஒரு வைராக்கியத்துடன் அங்கிருந்து சென்று விட்டாள். 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஒரு வாரம் கடந்திருந்தது. சிவா அழைத்தாலும் மலர் சரியாக பேசுவதில்லை ஏன் சுத்தமாக ஒதுக்கி விட்டாள் என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு அவனிடம் ஒதுக்கம் காட்டினாள். 

இங்கே சிவசக்திபாலனுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான் , ஏற்கனவே வீட்டில் வேறு சண்டை பிடித்து தோட்டமே கதி என்று கிடக்கிறான் இதில் மலர் வேறு ஒதுக்கம் காட்டிட அவனது பொறுமை உறுதி எல்லாம் உடைந்து போனது. 

இது வேலைக்கு ஆகாது என்று எண்ணியவன் மலர் பள்ளி செல்லும் போது இடைமறித்தான். 

நடந்து சென்றவளின் குறுக்கே வண்டியை நிறுத்தி விட்டு அவளை முறைத்தபடியே நின்றிருந்தான். 

“என்ன வேணும், ??”அவளும் பதிலுக்கு முறைத்து விட்டு கேட்க 

“என்ன வேணுமா ஏன் உனக்கு தெரியாது,? ஏன் மலர் ஃபோனை எடுக்கலை எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்க நீ, !!. பைத்தியம் பிடிக்க வைக்காத மலரு,!! நான் என்ன பண்ணிட்டேன் னு பேச மாட்டேங்கிற நீ பதில் சொல்லி தான் ஆகணும் மலரு “என்று அவளது கரத்தினை பற்றி கொண்டு விட மறுத்தான். 

“நீ கையை விடு பாலா என் கிட்ட பேச உனக்கு ஒண்ணும் இல்ல இனி என் முன்னாடி வராத நான் ஏன் இப்படி சொல்றேன்னு நீயே உட்கார்ந்து யோசி உனக்கே புரியும்”என்று நகர்ந்தவளை விடாமல் பிடித்தவன் .,”ஓஓஓ ஓஹோ இப்ப புரியுது நீ ஏன் என்னை ஒதுக்கி வைக்கிறன்னு, நீயும் அவங்களை மாதிரி நினைச்சுட்ட இல்ல, ம்ம்ம் சரி மா உங்க விருப்பம் போல உங்க கண்ணு முன்னாடி நான் வரலை “என்று அவளது கையை உதறி விட்டு வண்டியை எடுத்து கொண்டு சென்றான் கோபமாக. 

“மன்னிச்சிடு பாலா “என்று கண்கள் மூடி திறந்தவள் தன் கண்ணீரை கீழே விழ விடாது துடைத்து கொண்டு சென்றாள். 

இங்கே முத்துலெட்சுமியோ தன் மகளிடம் தனஞ்செயன் அவளை திருமணம் செய்ய மறுத்த விஷயத்தை கூற அவளோ இது எதிர்பார்த்தது தானே என்பது போல கேட்டுக் கொண்டிருந்தாள். 

“ஏய் என்னடி நான் பாட்டுக்கு சொல்லிட்டு இருக்கேன் நீ இப்படி கல்லாட்டம் உட்கார்ந்து இருக்க,” என்றதும் சட்டென சிரித்து கொண்டே .,”மம்மி நீங்க என்ன அவங்களுக்கு பதில் சொன்னீங்க என்று கேட்டாள். 

“நான் ரெண்டு கல்யாணத்தையும் நிறுத்திடுவேன் னு மிரட்டி இருக்கேன் “என்றார். 

“ஓஓஓ சரி சரி நீ கவலையை விடு நான் பேசிக்கிறேன் “என சொல்லி விட்டு கணிணி வகுப்பிற்கு கிளம்பினாள்.  

போகும் வழியிலேயே தனஞ்செயனை கண்டவள் வண்டியை நிறுத்தி விட்டு அவன் முன்பு நின்றாள். 

“என்ன வேணும் வடிவரசி ??”என்று வெறுமையாக கேட்டவனிடம் .,”ஏன் மாமா என்னை வேண்டாம் னு சொன்னீங்க ?? நான் என்ன அசிங்கமாவா இருக்கேன் இல்ல உங்க மனசுல வேற யாரும் இருக்காங்களா,??”என்று நேரடியாக கேட்க அவனோ கோபத்துடன் .,”ஆமா என் மனசில் ஒருத்தி இருக்கா நான் அவளை தான் கட்டிப்பேன் உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லை”என்று சொல்லவும் வடிவரசியோ கண்களில் நீருடன் .,”இதோப்பாரு மாமா நானா உன்னை மனசுல நினைக்கலை உங்க வீட்டில் வந்து பொண்ணு கேட்டு பூ வச்ச பிறகு தான் நான் உங்களை மனசுல நினைச்சேன் இப்ப நீங்க மாத்தி பேசுறது சரி இல்லை நீங்க மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்கலை அப்புறம் நான் தற்கொலை பண்ணிக்குவேன் உங்களை மிரட்டலை மாமா நான் உண்மையாகவே சொல்றேன்”என்று சொல்லவும் தனஞ்செயன் அரண்டு போனான்.

ஏனெனில் வடிவரசியின் பிடிவாத குணம் அறிந்தவன் அவன் கண்டிப்பாக அவள் சொன்னதை செய்திடுவாள் என்ற பயமும் எழுந்தது தனஞ்செயனுக்கு. 

வடிவரசி சொல்லி விட்டு சென்றவள் வன்மமாக சிரித்தபடியே சென்றாள். 

தோப்பு வீட்டில் சிவா விட்டத்தை பார்த்து கொண்டிருந்தான். வெற்றியும் வீரமலையும் உள்ளே வந்தவர்கள் .,”டேய் என்னடா பண்ற, வீட்டுக்கும் போகாம எங்களையும் பார்க்க வராம கல்யாணம் வேற பேசி முடிச்சுட்டாங்க நீ என்ன நினைச்சுட்டு இருக்க ???”என்று சத்தமிட்டான் வெற்றி. 

“ஆமா இங்க இருக்கிற லட்சணத்தில் கல்யாணமே நடக்காது போல, பேசி முடிச்சுட்டாங்களாம் அட போடா!!”என்று சலித்துக் கொண்டான் சிவா. 

“ஏன் டா ??”என்றவனிடம்.,”ப்ப்ச்,மலர் என் கிட்ட பேசியே பத்து நாட்கள் ஆச்சு மச்சான், வீட்டுல என்னடான்னா நான் வெட்டியா சுத்துறேன்’னு முத்துலெட்சுமி அத்தை அசிங்கமா பேசிடுச்சுனு எங்கப்பன் என்னை கத்திட்டு போறாரு, நான் என்னம்மோ வேணும்னே வேலைக்கு போகாம ஓபி அடிக்கிறேன்’னு நினைக்கிறாங்க”என்றவன் அமைதியாக படுத்திருந்தான். 

நாட்கள் செல்லச் செல்ல இப்பிரச்னை ஒரு முடிவுக்கு வருவது போல தெரியவில்லை.  

இந்த நிலையில் சங்கரன் வீட்டிற்கு நான்கு மகிழுந்து சிமெண்ட் தரையை தேய்த்தபடி வந்து நின்றது. 

கவுன்சிலர் ராஜேந்திரன் வந்திறங்க, சங்கரனுக்கு தலைகால் புரியவில்லை. 

“முத்து முத்து சீக்கிரம் வா யார் வந்து இருக்கிறானு பாரு, ஐயா வாங்க வாங்க உங்க வரவை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானே வந்திருப்பேனே நீங்க இவ்வளவு தூரம் சிரமப்பட்டு “என்றவரை தடுத்து .,”யோவ் சங்கரா எதுக்கு பதட்டப்படுற வா வா உள்ள வா நான் நல்ல விஷயம் பேச தான் வந்திருக்கேன்”எனும் போதே கையில் தட்டுடன் இரு பெண்மணிகளும் அவர்களுடனேயே சங்கரபாண்டியும் கீழே இறங்கினான். முத்துலெட்சுமி ஆர்வத்துடன் அவர்களை உள்ளே வரும்படி அழைத்து சென்றார். 

….தொடரும்