செந்நிறபூமி -17

வடிவரசி கையை அறுத்து கொண்டதும் அங்கிருந்த அனைவரும் ஓடி வர அதற்குள் வடிவரசி மயங்கி இருந்தாள். 

அதே சமயம் முத்துலெட்சுமி சங்கரன் இருவரும் வந்து விட ரத்த சிந்த கிடந்த தன் மகளை கண்டு பதறியவர்கள் அவளை தூக்கினர். 

முத்துலெட்சுமியோ ஆத்திரம் தாங்காமல்.,”என் மகளை என்ன பண்ணீங்க உங்களை எல்லாம் போலீஸ் ல புடிச்சு கொடுத்து விட்டு தான் மறு வேலை …. எவ்வளவு தைரியம் இருந்திருந்தா என் மகளை இப்படி ஆக வச்சிருப்பீங்க “என்று கத்த அக்கம் பக்கத்தினரோ முத்துலெட்சுமியை சத்தமிட்டனர் .

“இங்க பாரு லெட்சுமி நாங்களும் இங்கன தான் இருந்தோம் உன் மக தான் வந்து கத்துச்சு தானாவே கையை அறுத்துக்கிச்சு… அவங்க எதுவும் பேசலை… இங்கன சத்தம் போட்டுகிட்டு இருக்காம போய் உன் மவளை ஆஸ்பத்திரியில் சேரு அம்புட்டு தான் ….”என்க

சங்கரன் தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து ரத்தம் வரும் இடத்தில் கட்டி விட்டு சித்திரை செல்வியை கோபத்துடன் பார்த்து விட்டு.,”என் மவளுக்கு ஏதாவது ஆச்சு உங்க ஒருத்தரையும் சும்மா விட மாட்டேன்”என்றவர் கார் வந்ததும் வடிவரசியை மருத்துவ மனைக்கு தூக்கி சென்றனர். 

அவர் பின்னாலேயே அக்கம் பக்கத்தில் இருந்த சில ஆண்களும் தனஞ்செயனை அழைத்து கொண்டு சென்றனர். 

பக்கத்தில் இருந்த மருத்துவரிடம் செல்ல அவரோ உடனேயே சிகிச்சையை துவங்க…. ரத்தத்தை சுத்தப்படுத்தி விட்டு அங்கே மருந்திட்டு கட்டு கட்டினார். 

அதற்குள் சங்கரனும் முத்துலெட்சுமியும் அங்கே வந்த தனஞ்செயனை பிளுபிளுவென பிடித்துக் கொண்டனர் .

“இந்தாப் பாரு டா .. நீ எதுக்கு இங்க வந்த… ??என் மக உயிரோட இருக்காளா இல்லை செத்துட்டாளா னு பார்க்க வந்தியா…??” என்று கத்தினார். 

“மாமா தேவை இல்லாம பேசாதீங்க உங்க மகளா வந்து பிரச்னை பண்ணி அவளே கையை அறுத்துக்கிட்டதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது “என்றான் அவனும் கோபம் குறையாமல். 

அதற்குள் வெளியே வந்த மருத்துவரோ .,”ஏன் சார் இதை வீட்டிலேயே கையை நல்லா கழுவி விட்டுட்டு ஆயின்மெண்ட் போட்டு விட்டு கட்டி இருந்தா ரெண்டு நாள் ல சரி ஆகியிருக்கும் இதுக்கு போய் இத்தனை பேர் வங்திருக்கீங்க… ?? என்ன முத்துலெட்சுமி மா உங்க மக தான் ஏற்கனவே இது போல பண்ணி இருக்கே…நான் அப்பவே சொன்னேன் தானே…. அந்தப் பொண்ணு எங்க காயம் பட்டா ஒண்ணும் ஆகாதோ அங்க தான் கிழிச்சுக்குதுனு… இதோட நானே நாலு தடவை கட்டு போட்டு விட்டு இருக்கேன்… இதென்ன வியாதியோ சும்மா கையை அறுத்துக்கிட்டு, தான் நினைச்சதை சாதிக்கிற வியாதி… இன்னொரு தடவை உங்க பொண்ணு இதே மாதிரி பண்ணா நானே போலீஸ் ல புகார் கொடுத்திடுவேன்…. “என்றார் கடுமையாக. 

முத்துலெட்சுமிக்கு முகம் வெளிறிப் போனது. சங்கரனோ ஊரார் முன்பாக தன் மகளின் செயலால் கூனி குறுகி நின்றார். 

தனஞ்செயனோ எரிச்சலாக “கேட்டுக்கிட்டிங்களா அவர் சொன்னதை… நல்லா சொல்லுங்க டாக்டர்… அப்பவாவது புரியுதானு பார்க்கலாம்… இங்கப் பாருங்க மாமா உங்க மகளால தான் என் கல்யாணம் தடைபடுது…. உங்கப் பொண்ணு கிட்ட நான் வெவரமா சொல்லிட்டேன்…. சூரியாவை தான் நான் விரும்புறேன்… அவளை தான் கட்டிக்குவேன் னு…. நான் சொல்றதை கொஞ்சம் கூட கேட்காம இவளா ஒரு கல்யாணப் பத்திரிக்கை அடிச்சு அதை கொண்டு போய் சூர்யா கிட்ட காட்டி பிரச்சினை பண்ணிட்டு வந்திருக்கா… அது மட்டுமில்லாமல் என் கூட சூர்யா பேச வரும் போதெல்லாம் இவ வலுக் கட்டாயமாக வந்து என் கிட்ட பேசறதும் வழியறதும் பண்ணி எங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை கொடுத்துக்கிட்டே இருக்கா… இன்னொரு தடவை இதே மாதிரி கிறுக்குத்தனம் பண்ணா…. ஸ்டேஷன் ல கம்ப்ளைன்ட் தர்றதை தவிர வேற வழியே இல்லை பார்த்துக்கங்க”என்று எச்சரித்து விட்டு சென்றான் தனஞ்செயன். 

அவனோடு வந்திருந்தவர்களும் முணுமுணுத்து கொண்டே கிளம்பினர். 

சங்கரனோ கோபத்துடன் தன் மனைவியை முறைத்து விட்டு .,”இது எனக்குத் தேவையா  முத்து? உன் மகளுக்கு அறிவே கிடையாதா…? ம்ம்ம் இவளுக்கு என்ன குறைச்சல் னு இவன் பின்னாடி திரியுறா…. இதோப் பாரு இன்னைக்கு சொல்றது தான் வடிவு இனி வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. மலரு கல்யாணத்தை இன்னும் ஒரு வாரத்தில் முடிக்கலாம் னு இருக்கேன் அடுத்து வர்ற முகூர்த்தத்தில் வடிவுக்கு கல்யாணம்” என்று விட்டு காரில் அமர்ந்து கொண்டார்.

“ச்சே இவளால என் பேரு கெட்டுப் போகுது… மடச்சி வீட்டுக்கு வரட்டும் கவனிச்சுக்கிறேன்”என்று பொருமியபடி கண்கள் மூடி படுத்திருந்த வடிவரசியின் தலையில் தட்டி “எழுந்து தொலை வீட்டுக்கு போகலாம்”என முறைத்தபடியே கூறினார். 

“அவளோ மம்மி எனக்கு “எனும் போதே,  முத்துலெட்சுமி கோபமாக “மம்மி அம்மினு சொல்லிக்கிட்டு கொஞ்சு… தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுறேன் …வா உன் அப்பன் எவனாவது கிறுக்கனா பார்த்து கட்டி வைப்பாரு… கட்டிக்கிட்டு அடிமையா கெட “என்று திட்டிக்கொண்டே அவளை தூக்கி நிறுத்தி இழுத்து சென்றார். 

வடிவரசியோ சற்று பயத்துடனேயே தான் சென்றாள். அவள் வீட்டிற்கு சென்றதுமே பளாரென அறைந்து விட்டார் சங்கரன். 

“வீட்டை விட்டு வெளியே போ உன் காலை ஒடைச்சு அடுப்புல வச்சிடுறேன்… போனா போவுது னு செல்லம் குடுத்தா தலைக்கு மேல ஏறியா ஆடுற… திமிரு, எல்லாம் கேட்டவுடனேயே கெடைக்குது இல்ல, அந்த திமிரு.இங்கப் பாருடி இவ இனிமே வெளியேப் போறதை கண்டேன் இனி உனக்கு விழும் சாத்து. பார்த்துக்க “என்று முத்துலெட்சுமியை மிரட்டி விட்டு சென்றார்.

“பாரும்மா எப்படி அடிக்கிறாரு னு “என்று கன்னத்தை பிடித்து கொண்டு தன் அன்னையிடம் ஆதரவிற்கு செல்ல முத்துலெட்சுமி வேறு பட்டென்று அடித்து விட்டு.,”உன் அப்பா இதுவரை என்னை ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை இப்ப டி போட்டு பேசிட்டு போறாரு… இது எனக்கு தேவையா…. இங்கப் பாரு எந்த பைத்தியக்காரத்தனமும் செய்யாம இருந்தா உனக்கு தனஞ்செயனோட நல்ல மாப்பிள்ளையா பார்த்து வைப்பேன்…. இல்லையா உங்க அப்பன் சொன்ன எவனையாவது கட்டிக்கிட்டு கஷ்டப்படு”என்று விட்டு உள்ளே சென்றார். 

வடிவரசியோ அழுது கொண்டே உள்ளே செல்ல அங்கே அவளது கைபேசி அழைத்தது.

சிறிது நேரம் பேசி விட்டு வைத்தவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

 

*********

இங்கே தனஞ்செயனோ சித்திரை செல்வியிடம் நடந்ததை கூறினான்.

அவரோ முகவாயில் கை வைத்தபடி .,”அந்தப் புள்ளைக்கு எம்புட்டு ஆங்காரம் பார்த்தியாடா தம்பி. இது மாதிரியா நடந்துக்குவா சரி விடு எல்லார் முன்னாடியும் அவ அப்படி நடந்துக்கிட்டதும் நல்லதுக்கு தான்…. இனிமே ஏதாவது பிரச்சினை பண்ணா ஊர்க்காரவுகளே பார்த்துக்கிடுவாங்க”என்றார்.

“அதுவும் சரிதான் மா… சரி மா நான் போய் சமையலுக்கு பக்கத்துல இருக்கிற மண்டபத்துக்கு எல்லாம் சொல்லிட்டு வரேன். நீ அப்பா கூட போய் துணி எடுக்குறியா? இல்ல வெற்றியை கார் எடுத்துக்கிட்டு வர சொல்லவா?” என்று கேட்டான். 

“நீ காரை எடுத்துக்கிட்டு வரச் சொல்லுயா நானு மரகதம் ஆச்சி மலரு தினகரன் அஞ்சு பேரா போய் துணி எடுத்துட்டு வந்திடுறோம். எளிமையா எடுத்துக்கலாம்… நம்ம பாக்யா கல்யாணத்தப்ப சிறப்பா செய்வோம்… இல்ல சிவா கல்யாணத்துக்கு எல்லாருக்கும் துணி எடுப்போம் “என்றார் சித்திரை செல்வி. 

வெற்றிக்கு தனஞ்செயன் அழைத்ததும் , அவனோ., “வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம்டா காலையில வெள்ளென போயிட்டு வந்துடலாம் சாயங்காலத்துல போனா இருட்டிக்கும் பணம் நகையோட வரும் போது பயந்து பயந்து வரணும்”என்றான். 

தனஞ்செயனுக்கும் அதுவே சரியெனப் பட்டது. 

செல்வியிடம் விஷயத்தை கூறி விட்டு தூர் வாரும் இடத்திற்கு கிளம்பினான். 

**********

“வாடா புது மாப்ள… என்ன இந்த பக்கம்…. வேலை முடிஞ்சது டா… இனி நாளைக்கு தான்… பொழுது போயிடுச்சு,  இனிமேல் பயலுகளை இருட்டுல வேலை பார்க்க வைக்கிறது தப்பு அதான் அனுப்பி வச்சுட்டோம்…. “என்றான் வெற்றி. 

“சும்மா தான் டா வந்தேன்… பரவாயில்லை டா இவ்வளவு தூரம் தூர் வாறிட்டிங்க…  என்னடா இவ்வளவு மரம் குவிஞ்சு கிடக்கு… ?? இந்த வீரப்பூர் திருவிழால வெறகை வித்து ஒரு அமவுன்ட் பார்த்திடலாம்டா”என்றான் தனஞ்செயன். 

“ம்ம்க்கும் நம்ம ஊர் பொம்பளைக கிட்ட இந்த வெறகு கெடக்கும்னு நினைக்கிற… வாய்ப்பே கிடையாது பங்கு. நீ வேணுன்னா பாரு காலையில இந்த எடம் (இடம் ) எவ்வளவு சுத்தமா இருக்கும் னு பாரு “எனும் போதே சில பெண்கள் கயிறு அரிவாளுடன் வந்தனர்.  

“அங்கப் பார்த்தியா இல்லையா ஆரம்பிச்சுட்டாங்க “என வீரமலை சொல்ல தனஞ்செயன் சிரித்துக் கொண்டான். 

சிவாவோ வேலை முடித்து விட்டு வந்தவன்… “தனா நான் தோப்புக்கு போயிட்டு வரேன் அம்மா கிட்ட சொல்லிடு…” என்று வண்டியை எடுக்க

“டேய் இவ்வளவு நேரம் இங்க வேலை பார்த்துட்டு இப்ப எதுக்கு தோட்டத்துக்கு வேற போறேங்கிற… பேசாம வந்து ரெஸ்ட் எடு வா….” என வலுக்கட்டாயமாக அழைத்து சென்றான் தனஞ்செயன். 

“டேய் அவளை ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுறேன் டா” என்றவன், “ஆமா பணம் வாங்கிட்டு வந்துட்டாரா அவரு…!!”

“அதெல்லாம் காலையிலேயே வாங்கிட்டார்…  உன் பணத்தை அம்மாட்ட குடுத்துட்டாரு… வழக்கம் போல வெட்டி செலவு பண்ணாம ஏதாவது உருப்படியா பண்ணுடா…”  என்றான் தனஞ்செயன்.

“எல்லாம் எங்களுக்கு தெரியும் போடா ..!!”என்றவன் அறைக்குள் சென்றான்.

சற்று நேரத்தில் செல்வியிடம் பேசிக் கொண்டே தன் தந்தை கொடுத்த பணத்தை வாங்கி கொண்டான்.

“ஏய்யா தம்பி பாக்கி போன் பண்ணா டா …!!”

“அட ஆமாம்மா போன வாரமே ரெக்கார்டு நோட்டு வாங்க பணம் கேட்டுச்சு…  சரி நான் போயிட்டு வாங்கி குடுத்துட்டு வரேன்…  நீ என்ன பண்ற, நாளைக்கு  மட்டன் எடுத்து சுக்கா பண்ணி வை, கடையில செஞ்சது 150ரூ சொல்லுவான் நல்லா இருக்குமோ என்னவோ,  நீ ரெடி பண்ணு…!! டேய் தனா ஒரு கிலோ வாங்கிட்டு வந்து குடுடா இதோ வரேன்..” என்று வண்டியை கிளப்பினான். 

“ஏன் மைனரு எங்கேப் போறீங்க…??” 

“ம்ம்ம் குத்தகை பணத்தை பொண்டாட்டி கிட்ட தான் தரனும் னு கருப்பு சொல்லி வளர்த்திருக்காரு அதான் போறேன்… “

“ஏலேய் எம்மவனை நானே பேர் சொல்லி கூப்பிட்டது இல்ல நீ கூப்பிடுற…??” எகிறினார் வேலுத்தம்பி. 

“அதுக்கெல்லாம் ஒரு முக ராசி வேணும்…  நாங்க யாரையும் பேர் சொல்லி தான் கூப்பிடுவோம், என்ன செல்வி ..?? வரட்டா…!! அப்புறம் உன் மவளுக்கு சுடிதார் எடுக்கப் போறேன் அப்படியே உனக்கு ரெண்டு எடுத்துக்கிட்டு உன் கணவருக்கும் ரெண்டு  ஜீன்ஸை எடுத்துட்டு வரவா ..!!”என்று கிண்டல் செய்தான். 

“போடா போக்கத்தவனே…  எப்ப பார்த்தாலும் கிண்டலு தான்  … போ போய் அந்த புள்ளைக்கு நல்ல சீலையா நாலு எடுத்து குடுத்துட்டு வா… “என்று மகனை அனுப்பி வைத்தார் செல்வி . 

*********

மலர் தனது பெட்டியில் இருந்த நகை சேமிப்பு பணம் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். 

“ஏட்டி இப்ப எதுக்கு இதெல்லாம் எடுத்து வைக்கிற? ” என்று செண்பகவல்லி ஆச்சி கேட்டிட மலர்,”சூர்யாவுக்கு அக்கா மொறைக்கு ஏதாவது செய்யணுமே ஆச்சி அதான் எவ்வளவு இருக்கு…. என்னனு பார்க்கிறேன்…. பேங்கில் ஒரு நாற்பதாயிரம் இருக்கும்… ஆனா அது பிக்ஸட் டெபாசிட் ல கெடக்கு…. தனியா வச்சிருக்கிற பணத்தில் பத்தாயிரம் தான் இருக்கு அது மோதிரம் எடுக்க பத்தாதே… அதான் வீட்ல எவ்வளவு வச்சிருக்கேன் னு பார்க்கிறேன்…. “என்றபடி பணத்தை எடுத்து எண்ணினாள். 

“ஏட்டி என் பேரு ல கெடக்கே அதை எடுத்து வாங்குடி…. அதுவும் நீ போட்டு வச்சதும் இந்த முதியோர் பணமும் தானே வருது… அதை எடுத்தா சரியா இருக்கும் ல”என்றிட மலர் யோசனையாக திரும்பியவள் . 

“அதெல்லாம் வேணாம் ஆச்சி… நாளைக்கு உனக்கு ஏதாவது ஒண்ணுனா செலவு பண்ண அடுத்தவங்களை எதிர்பார்க்க கூடாது.. உன் பேர்ல பணம் கெடந்தா அதை எடுத்து உரிமையா உனக்கு செய்ய வேண்டியதை செய்வோம்ல…. என்ன தான் பெரியம்மா , பெரியப்பா வூடு இருந்தாலும் அவக கிட்ட இருக்கும், இல்லாம போகும்… கடைசி நேரத்தில் கடன் வாங்க வைக்க கூடாது ஆச்சி… வாழ பணம் தேடுறோமோ இல்லையோ, சாவுக்கு பணம் தேடி வைக்கணும் இல்லாட்டி… செத்த பொறவும் கண்டவன் கிட்ட திட்டு வாங்க வேண்டியது வரும் இது தேவையா சொல்லு…” என்றாள் நிதானமாக. 

“வனக்கெழவி மாதிரி பேசுததை பாரு…. அது சரி ல வேதா மவன்னா கொறைவா என்ன… அவளுக்கு இருக்கிற அறிவுல வீரத்துல அரைவாசி இல்லாம போவுது “என்று தன் மகளின் பெருமை பேசினார் செண்பகவல்லி ஆச்சி. 

“ஆமா ஆமா உன் மவளுக்கு அறிவு ,வீரம், எல்லாம் பெருசு தான் அதான் பெத்த மவளை இந்த பொல்லாத உலகத்துல பெத்துப் போட்டு உசுரை விட்டுச்சாக்கும்”என்று நொடித்துக் கொண்டாள். 

சற்று தளுதளுத்த குரலில்… “என்னல பண்ணறது… அவ சொல்லு தாங்காத உத்தமி அது தான் பொசுக்குனு உசுரை போக்கிப்புட்டா.”என்றார்.

“ஆமா போ… அது போய் சேர்ந்திடுச்சு ஆனா என்னைய இல்ல தவிக்க விட்டு போயிருக்கு… ஒரு நாளையில் நிம்மதியான தூக்கம் இல்ல. அம்மாவோட அரவணைப்பு இல்ல… எப்போ எவன் வந்து நடு வீட்டுல குதிப்பான்னு பயத்துலயே வாழ்ந்து இப்ப தான் இந்த வீட்டுக்கு வந்த பிறகு தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்… அம்மா வாழ்ந்த வீடுனு ஒரு திருப்தி… இங்க என் அம்மா நிறைஞ்சு இருக்கிறதா தோணும்… அம்மா பாசத்துக்கு ஏங்கியே என் வாழ்க்கை போயிருக்க வேண்டியது…. நீ இருந்ததால தான் அந்த குறை இல்லாம இருந்திருக்கேன்.நீயும் இல்லாட்டி என் வாழ்க்கை அந்த முத்துலெட்சுமி கூட சீரழிஞ்சு சின்னாபின்னமாகி இருக்கும் இல்ல”என்று ஆழ்ந்த பெருமூச்செறிந்தபடி பேசினாள். 

செண்பகவல்லி ஆச்சிக்கு நெஞ்சு கனத்தது. கண்களில் நீர் ததும்ப பேசினார். 

“அவ விதி ல… பெத்தப்புள்ள கூட வாழ கொடுத்து வைக்கலைனு நினைச்சுக்க.. சரி போ.அதான் உனக்கு னு ஒரு மவராசன் இருக்கானே… என்னை விட நூறு மடங்கு அதிக பாசம் வச்சு பார்த்துக்கிடுவான்… “என்றார். 

மலருக்கு முகம் மலர்ந்தது .

இவர்கள் உரையாடல் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சிவாவிற்கு மலரின் நிலை நன்றாகவேப் புரிந்தது . 

அவளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தன் மனதில் உறுதி எடுத்துக் கொண்டவன் கதவை தட்டினான். 

“யாரு ல அது… இந்நேரத்தில்… ??”என்று செண்பகவல்லி கேட்க..

 “அப்பாயி நான் தான்… கதவைத் திறந்து வெளியே வா “என்று சொல்லவும்..

செண்பகவல்லி நமட்டுச் சிரிப்புடன் “நான் தான் னா யாரு… சொர்க்கத்துக்கு போன என்னை கட்டுனவரா… !! “என்று கேட்க மலர் சிரித்தபடி,”சும்மா இரு ஆச்சி”என்றாள். 

“கெழவிக்கு நக்கலைப் பார்த்தியா “என்று முணுமுணுத்தவன் .,”ஹான்… உன்னை கட்டுன என் பாட்டன் உன் ரோதனை தாங்காம தான் அங்கப் போய் நிம்மதியா இருக்காரு… நான் உன் பேத்தியோட புருஷன் வந்து கதவைத் தெறக்குறியா… இல்ல… நான் இப்படியே போகவா ??”என்றான். 

“அட இருங்க மைனரே அதுக்குள்ள கோவம் வருதாக்கும் “என்று விட்டு கதவைத் திறந்து விட அவனோ “இந்த பணத்தை உன் பேத்தி கிட்ட குடுத்து நாளைக்கு துணி எடுக்க போகையில பொடவை எடுத்துக்க சொல்லு… நாளைக்கு எனக்கு இங்க ஆத்துவாரியில வேலை இருக்கு…. “என்றான் பணத்தை செண்பகவல்லியின் கையில் திணித்தபடி.

“ஆச்சி ஒரு நிமிஷம் நிக்க சொல்லு…. இந்த பணம் ஏது சக்தி.?எப்படி இவ்வளவு பணம் “என்று அழுத்தமாக கேட்டவளிடம் பதிலிறுத்திடாது…

“அப்பாயி… இந்தப் பணம் நெலத்தை குத்தகைக்கு விட்டதுல வந்த என் பங்கு பணம் தான்… திருச்சி லால்குடி ல இருக்க வயல் பாதி என் பேரில் தான் இருக்கு… அதை அங்கப் போய் பார்க்க முடியாது னு குத்தகைக்கு விட்டு இருக்கோம்… எப்போதும் வாங்குற பணத்தை எல்லாம் முக்கால் வாசி வெட்டியா செலவு பண்ணிடுவேன்… இந்த தடவை அம்மா கிட்ட குடுத்துட்டு… இது உனக்காக எடுத்து வச்சேன். அதுவும் எங்க அம்மா கிட்ட சொல்லிட்டேன் போதுமா வெளக்கம்.? எப்ப பார்த்தாலும் தப்பாவே நினைக்க வேண்டியது”என்றான் எங்கோ பார்த்தபடி . 

“சரி சரி நம்புறேன்…. அப்புறமா ஃபோன் பண்றேன்”என்றாள். 

அங்கிருந்து கிளம்பியவன் மனமோ மகிழ்வில் நிறைந்திருக்க, மலரோ சிரித்தபடியே அவன் போகும் திசையை பார்த்து கொண்டிருந்தாள்.