“வீட்டுக்கு அழைத்து போ… உன் அண்ணனிடம் அறிமுகம் செய்து வை…” என நண்பர்களாகப் பழகிய காலம் முதலே கேட்டுக்கொண்டே இருக்கிறாள். கேட்டுக்கொண்டு என்பதை விடவும் நச்சரித்துக் கொண்டே இருப்பாள்.
இப்பொழுது அதுவாக நேரம் அமைந்து வந்திருக்கச் சந்தர்ப்பத்தை நழுவ விடுவானா என்ன? அதுவும் முத்தாய்ப்பாய் அவளும் இப்பொழுது சென்னையில் தான் இருக்கிறாள்.
தென்னரசு மீண்டும் சத்யாவைத் தேடி வந்தவன், “மேலே அந்த பொண்ணோட திங்க்ஸ் எல்லாம் ரெடியா எடுத்து வைக்க சொல்லு… மேலே இருக்க வேறொரு ரூமில் தங்க வைக்கலாம்” என்று சொல்ல,
“அண்ணா அது தான் அவளே இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாளே… அதுக்குள்ள என்ன?” என்றான் அலட்சியமாக.
அவன் புரியாமல் ஏறிட, “சாருக்குன்னு ஒரு ஸ்பேஸ் இருக்கு. அதுல நுழையாம இரு…” என்று அழுத்தமாகச் சொல்ல, அவனுக்கும் அது புரியுமே! ச்சே! அண்ணனுக்கு தெரியாம இந்த வேலையை செஞ்சிருக்கக் கூடாது என மீண்டுமொருமுறை தன்னையே நொந்து கொண்டான்.
“இப்பவே போன் பண்ணி சொல்லறேன் ண்ணா. அப்பறம் சிசிடிவியை கொஞ்ச நேரம் ஆப் பண்ணிட்டு ரூமை மாத்திடலாம்” என்று சொல்ல, அதன்படி ஏற்பாடு செய்தார்கள்.
தாரா திடீரென்று வீட்டிற்கு ஆள் வந்ததில் கொஞ்சம் மிரண்டு தான் போனாள். இன்னும் ஒரு நாள் தாக்குப் பிடித்திருந்தால், அவள் பாட்டிற்கு இந்தியாவை விட்டு கிளம்பிச் சென்றிருக்கலாம். இப்பொழுது கையைப் பிசைந்தபடி அவர்கள் சொல்வதை செய்தவளுக்கு, இன்று மட்டும் தன்னை வீட்டை விட்டு அனுப்பாமல் இருந்தால் சரி என்கின்ற கவலை.
வேறொரு அறையில் அவளை மாற்றிவிட்டு வெளியேறும் போது சத்யாவிடம் மட்டும் மென்குரலில், “நான் இன்னு மாத்திரம் இவ்விடே நிக்கட்டே?” என்றாள் பாவமாக.
அது கஷ்டமாயிற்றே என்று எண்ணியவன், பாவமாக தன் முகத்தைப் பார்த்து கேட்பவளிடம் உண்மையையும் சொல்ல முடியாமல் தடுமாற, “இன்னத்தேக்கு மாத்திரம் சத்யன்” என்றாள் மீண்டும் கெஞ்சுதலாக. கண்களில் கண்ணீர் தழும்பி நின்றிருந்தது. முகத்தில் பெரும் கலக்கம்.
அவளின் பயந்த குரலும், கலக்கமும் சற்று தள்ளி நின்றிருந்த தென்னரசுவுக்கும் கேட்டது தான். ஆனால், இதில் அவன் செய்வதற்கும் ஒன்றும் இல்லையே என்று அமைதியாக நின்று கொண்டான்.
“சாரி தாரா. இங்கே வேற பிரச்சினை. அதுனால தான்… ஆனா உனக்கு நாளைக்கு விடியாக்காலையில பிளைட் தான? இன்னும் ஒரு நாள் மட்டும் சமாளிச்சுக்க. ப்ளீஸ்… இங்கே இனியும் என்னால எதுவும் செய்ய முடியாது…” என்று சத்யா சொல்ல,
அவளுக்கு பயத்தில் வெடவெடத்துப் போனது. ஆனாலும் யார் என்றே தெரியாதவர்கள் இத்தனை தூரம் அடைக்கலம் தந்ததே பெரிது என்று புரிந்து கண்களை இறுக மூடி திறந்து, “குழப்பமில்ல…” என்று தொடங்கியவள், ஒரு நொடி நிதானித்து, “புரியுது சத்யன். பரவாயில்லை… நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி. எப்பவும் இதை மறக்க மாட்டேன்…” என்று சோர்ந்த குரலில் தமிழில் சொல்லி முடித்தாள்.
அவளுக்கு மலையாளத்தோடு தமிழ், ஹிந்தி மொழிகளும் தெரியும். என்ன இயல்பாக மலையாளத்தில் பேச்சைத் தொடங்கி விடுவாள். உணர்ச்சிவசப்படும் போதும் பெரும்பாலும் மலையாளம் தான் வரும்.
அவள் முகத்தை பார்க்கவே சத்யாவுக்கு பாவமாகத் தான் இருந்தது. ஆனால், அண்ணனிடம் இதைக்குறித்து பேசும் தைரியம் இல்லையே! பேசினாலும் அவன் ஒத்துக்கொள்வது சந்தேகம் தான்… அதனால் தாராவிற்கு நம்பிக்கையளிக்கும் விதமாக ஒரு வார்த்தையும் அவனால் சொல்ல முடியவில்லை. ஒன்றும் பேசாமல் தலையசைத்து விடை பெற்றான்.
டைனிங் டேபிளில் அமர்ந்து, காவலர்கள் அனைவரும் தேநீர் பருகி கொண்டிருந்தனர்.
ஆதியின் ஆட்கள் சற்றுத் தள்ளி நின்றிருக்க, “சார் நம்மளை வெச்சு காமெடி தானே பண்ணறாங்க…” என ஏட்டு மீண்டும் இன்ஸ்பெக்டரை சீண்ட,
“உனக்கு எல்லாம் ராஜன்னு பேர் வெச்சதுக்கு பதிலா டாச்சர்ன்னு பேர் வெச்சிருக்கலாம். கொஞ்ச நேரம் உன் திருவாயை மூடு…” என இன்ஸ்பெக்டர் விவேக் சீறினான்.
பாவம் அவனும் அவன் கீழே வேலை பார்ப்பவர்களிடம் மட்டும் தான் சீற முடிகிறது. எத்தனையோ கனவுகளுடன் காவல்துறை சீருடையைப் போட்டவன், அந்த உடைக்கு உண்டான மரியாதையும் தெரியாமல், நிமிர்ந்து நிற்க தைரியமும் இல்லாமல் இடையில் கிடந்து அல்லாடுகிறான்.
ஏட்டு ராஜனுக்கு இன்ஸ்பெக்டரின் மூக்கு உடைபடும்போதெல்லாம் அப்படி என்னதான் ஆனந்தம் வருமோ! அவனுக்கு அப்படி ஒரு குதூகலமாக இருக்கும். “இல்லை சார் உங்க ரேஞ்சு தெரியாம… இவனுங்க ரொம்ப பண்ணறானுங்க…” என்று மீண்டும் ராஜன் சொல்ல, அவன் நக்கல் செய்கிறானா என்று வழக்கம் போல அவனை கவனித்து பார்த்த விவேக்கிற்கு ஒன்றும் விளங்க வேறு இல்லை.
“ஆனா நல்லா பேசறய்யா நீயு… வேலை ஏதாவது சொன்னா மட்டும் ஒன்னுக்கும் ஆக மாட்டேங்கிற… வேலைன்னு சொல்லிட்டா ஆளு சிட்டா பறந்துடற…” என விவேக் பேச, ராஜனின் முகத்தில் ஈயாடவில்லை.
இதற்கு முன்னால் இருந்த இன்ஸ்பெக்டர் எல்லாம் இப்படி வேலை வாங்க மாட்டார்கள். இந்த விவேக் கொஞ்சம் கெடுபிடியாக இருப்பது தான் அவருக்கு எரிச்சலே!
“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? நீங்க சொன்னீங்கன்னு தானே விடியக்காலை எல்லாரும் கிளம்பி வந்திருக்கோம்…” என இளித்தபடி பேச,
“நடிக்காதையா… அந்த பிரதாபன் உன்கிட்டயும் பேசி இருக்கான்னு எனக்கு தெரியும்…” என்று விவேக் முகதாட்சண்யமின்றி சொல்லிவிட,
‘இவரு என்னடா இதெல்லாம் நேரடியா பேசறாரு?’ என்று பதற்றத்தோடு எழ போன ராஜனைப் பார்த்து, “எங்க எந்திரிக்கிற? உட்காரு. சாப்பாடும் போடுவாங்க. சாப்பிடாம இங்க இருந்து நகர முடியாது…” என்றும் சொல்ல, அவன் பே என்று பார்த்தான்.
விவேக் கணித்தது போல, கொஞ்ச நேரத்தில் அங்கு உணவு பதார்த்தங்களும் நிறைய, ஆச்சரியமாக இன்ஸ்பெக்டரை நிமிர்ந்து பார்த்தவன், பேசாமல் உணவை உண்ண தொடங்கி விட்டான். எப்படியும் ஆதியின் ஆட்கள் சாப்பிடாமல் எழ விட மாட்டார்கள் என புரிந்திருந்தது.
விவேக்கிற்கு சூழல் எல்லாம் புரிகிறது தான். பிரதாபன் உள்ளே என்ன தேட சொல்கிறான் என்றுதான் புரியவில்லை. ஆனால், இங்கு வந்தபிறகு தான் புரிந்தது அது ஆதீஸ்வரனுக்கும் புரியவில்லை என்று! ஆனாலும் உள்ளே தேட என்ன உள்ளே நுழைய கூட அனுமதிக்கவில்லை. அவனுடைய ஆளுமையான பார்வையும், பேச்சும் அப்படியே விவேக்கை கட்டிப் போட்டு விட்டது.
அவனது ஆட்கள் உள்ளே சென்று என்னவோ தேடும்போதே, ஒருவித ஆர்வம் இருந்தது தான். ஆனால், அடுத்து ஆதியின் தம்பி வந்துவிட்ட பிறகு தேடுதல் வேட்டை நின்றதோடு, வேறு சில பேச்சுவார்த்தைகளும் அவர்களுக்குள்ளாக நடக்க, ஆதீஸ்வரனுக்கு எதுவோ தெரிந்து விட்டது என இவனுக்கும் புரிந்திருந்தது.
வெகுநேர காத்திருப்புக்கு பிறகு இவர்களை உள்ளே அழைத்தபோதே கண்டிப்பாக வேலையை செய்ய விடமாட்டார்கள் என்ற அனுமானத்துடன் தான் வந்தான். அவன் எண்ணியது போலவே தேநீர், உணவு என்று உபசரிக்க, அடுத்து என்ன என்றொரு ஆர்வமும், சுவாரஸ்யமும் வந்திருந்தது உண்மை.
இப்பொழுது கடமையை செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கமும் கோபமும் இருக்கிறது தான்! ஆனால், அது ஒன்றும் கடமையும் இல்லையே! உண்மையிலேயே கம்பிளைண்ட் வந்து காவலுக்கு வரவில்லையே! ஏதோ ஒரு அரசியல்வாதி, அவனின் செல்வாக்கிற்காக செய்ய வந்த வேலை… அதை லாவகமாகத் தடுக்கும் மற்றொரு அரசியல் பிரமுகர். இந்த ஆடு, புலி ஆட்டத்தில் தேவையில்லாமல் சிக்கி கொண்டோமே என்று எரிச்சலாக இருந்தாலும், ஆதியின் மீது ஒரு இம்பிரஷன் வந்திருந்தது.
என்ன எதையும் முகத்தில் பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை. கூட இருப்பவர்கள் கவனித்து விடுவார்களே… அதில் விவேக்கிற்கு உடன்பாடில்லை.
“எப்படி சார் சரியா கண்டுபிடிச்சீங்க? இவங்க வேணும்ன்னே நம்மளை வேலை செய்ய விடாம தடுக்கிறாங்க சார்…” ராஜன் மீண்டும் பொங்கினான்.
அவனுக்கு ஒத்து ஊதுவது போலவே, “அதே தான்யா நானும் நினைக்கிறேன்… இரு அவரு வரட்டும் ஏதாவது பண்ணலாம்” என்று பொறுப்பாகச் சொல்ல,
‘இந்த ஆளு வாங்கி திங்கறதுக்கும் சரிப்பட்டு வர மாட்டான். நிமிந்து நிக்கிறதுக்கும் சரிப்பட்டு வர மாட்டான்’ என அவனை மனதிற்குள் வறுத்தெடுத்தார் அந்த ஏட்டு ராஜன்.
ஆதீஸ்வரனோ, அறையில் சிறிது நேரம் படுத்திருந்தவன், சட்டென்று எதையோ யோசித்தவனாய் தென்னரசுவுக்கு அழைத்து, “யாரெல்லாம் வராங்கன்னு சத்யா கிட்ட விவரம் வாங்கிக்க…” என்று சொல்ல, “வாங்கிட்டேன் சார்… மொத்தம் ஒன்பது பேரு… அஞ்சு பொண்ணுங்க… நாலு பசங்க… இதுல ஆறு பேரு தான் சத்யா பிரண்ட்ஸ் சார்… மீதியெல்லாம் ஏதோ கனிகா அண்ட் அவங்க பிரண்ட்ஸ்ன்னு சொல்லறான்” என்றான் தயக்கமாக.
சத்யாவின் செயலில் பல்லைக் கடித்தவன், ‘இப்ப கண்டிக்க முடியலைன்னதும், உடனே வேலையை காட்டறான். இவனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து இந்த பாட்டி கெடுத்து வெச்சிருக்காங்க’ என்று அவரையும் மனதிற்குள் வறுத்தெடுத்தான்.
பாட்டி மட்டுமில்லை, சத்யாவிற்கு இவனும் அதிகம் தான் செல்லம் தருவான் என்பதை யோசிக்க மறந்தான் போல!
வரவிருக்கும் விருந்தாளிகளின் செய்கையில் இவன் வாழ்க்கையே தலைகீழாக மாறும் என்று புரியாமல், இப்போதைய பிரச்சினைக்குத் தீர்வு யோசித்துவிட்ட மனநிலையில் கொஞ்ச நேரம் தன்னை மறந்து கண் அயர்ந்தான் ஆதீஸ்வரன்.