காவியத் தலைவன் – 1
“கணபதியே வருவாய், அருள்வாய்…
கணபதியே வருவாய், அருள்வாய்…”
தெருமுனை விநாயகர் கோயிலிலிருந்து வந்த பாடலை கேட்டவாறே, காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் செல்ல தொடங்கினான் ஆதீஸ்வரன்.
ஆளும்கட்சியில் எம்.பி., பதவியில் இருக்கிறான். முப்பதின் ஆரம்பத்திலேயே இந்த பதவியை அடைந்திருந்தான். இந்த உயரம் அடைய அவன் போட்ட உழைப்பு ஏராளம். அவன் கடந்து வந்த பாதையும் மிகவும் கடினமானது. அதன் பயனாய் அவன் சம்பாதித்த நல்ல பெயரும் அதிகம். அதேசமயம் எதிராளிகளும் அதிகம்.
எப்படியும் நள்ளிரவிற்குள் வந்துவிட வேண்டும் என்று திட்டமிட்ட பயணம், எதிர்பாராத வேலைகளின் இடையூறினால், விடியற்காலையில் தான் வீடு வந்து சேர முடிந்திருக்கிறது. இனி ஓய்வெடுக்கக் கூட நேரமின்றி அடுத்த வேலையைப் பார்க்க ஓட வேண்டும் என்று நினைக்கையிலேயே ஆதிக்கு அலுப்பாக இருந்தது.
கடந்த சில நாட்களாய் அவனுக்கு நிறைய வேலைகள், மன உளைச்சல்கள். இன்னும் எந்த பிரச்சினையும் தீர்ந்த பாடில்லை. என்ன செய்வது, எப்படி சமாளிப்பது என ஒன்றும் புரியாமல் ஒருவித அழுத்தத்தோடும், கடந்த ஒரு வாரமாக அலைந்து திரிந்த சோர்வோடும் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
வாயிலில் நின்றிருந்த வாட்ச்மேன் வேகமாக ஓடிவந்து, “சார் தம்பி வந்துட்டு போனாரு…” என பவ்யமாகச் சொல்லவும், விருட்டென்று திரும்பியவனின் அனல் பார்வை, ‘ஏன் அவனை உள்ளே விட்டாய்?’ என்று கேட்டு எரித்தது. அவனின் கட்டளையை மீறினால் தண்டனை கடுமை என்று தெரிந்தும் இந்த வாட்ச்மேன் செய்து வைத்த வேலையால் அடக்க முடியாத கோபம் ஆதிக்கு.
அந்த பார்வையில் நடுங்கியபடி, “அது… நீங்க வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டேன் சார்… அப்பவும் கேட்காம…” தன் இக்கட்டான நிலையைப் புரிய வைக்க முடியாமல் திணறினார் அவர்.
“ஷட் அப் அண்ட் கெட் லாஸ்ட்…” என்று அவன் அடிக்குரலில் சீறியதில், விழுந்தடித்துக் கொண்டு ஓடியவருக்கு, தன் வேலை நிலைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை.
இப்பொழுது ஆதீஸ்வரனின் முழு கோபமும் அவன் தம்பி சத்யேந்திரனின் மேல் திரும்பியது. அவன் இப்பொழுது உறக்கத்தில் இருப்பான் என்று நன்கு தெரிந்திருந்தும், அதைப் பொருட்படுத்தாமல், வீட்டின் கதவை வேகமாக திறந்தபடியே, கைப்பேசியில் தன் தம்பிக்கு அழைப்பு விடுத்தான்.
சத்யேந்திரன் சென்னையில் இருக்கும் பிரபல கல்லூரியில் எம்.பி.ஏ., படித்துக் கொண்டிருக்கும் மாணவன்.
அதிகாலையில் வந்த அண்ணனின் அழைப்பில் பதறியடித்துக்கொண்டு எழுந்த சத்யாவிற்கு, ‘போச்சு… அந்த வாட்ச்மேன் போட்டு தந்துட்டான் போல… இத்தனை நாளா சொல்லாம, ஏன் இப்ப போயி உளறி வெச்சான்னு தெரியலையே…’ என்று மனம் பதறியது. இன்னும் அண்ணன் சென்னைக்கு விஜயம் தந்த விஷயம் தெரியாது பாவம்.
அண்ணன் கேட்டால், “சும்மா தான் வந்தேன்” என சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என எண்ணியபடியே பவ்வியமாக அழைப்பை ஏற்று, “ஹாய் ண்ணா… குட் மார்னிங்…” என்றான் பயத்தைக் குரலில் காட்டிக் கொள்ளாமல்.
“என்ன செஞ்சு வெச்சிருக்க சத்யா?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டவனின் கோபத்தில் சத்யாவிற்கு ஒரு நொடி திக்கென்று ஆனது.
சமாளித்து, “இல்லைண்ணா… ஜஸ்ட் ஒரு விசிட்” என தொடங்கியவனின் குரலில், “ஷட் அப்…” என கத்தியிருந்தான் ஆதி.
இங்கே இவனுக்கு இதயம் மத்தளம் கொட்ட, ஆதியோ, “இங்கே முக்கியமான வேலையா இருக்கேன். என்னைத் தேடி வர கூடாதுன்னு உன்னை நிறைய முறை எச்சரிச்சிருக்கேன்” என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்.
“ஐ க்நோ ண்ணா… சாரி…” என்றவனுக்கு குரலே வரவில்லை.
“இதுவே பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்டா இருக்கட்டும். வை போனை…” என்று கடுப்பாக சொல்லிவிட்டு, இளையவன் பேச வருவதைக் கூட கேட்காமல் கைப்பேசி அழைப்பை துண்டிக்க, ‘அண்ணா எப்ப சென்னை வருவீங்க?’ என்று கேட்க நினைத்தவனின் கேள்வி அவனுள்ளேயே அடங்கியது.
“ச்சே! எல்லாம் இந்த கனிகாவால வந்தது… அவளுக்கு உதவி செய்ய போயி இப்படி மாட்டிக்கிட்டேன். ஐயோ அண்ணன் சென்னை வரதுக்குள்ள அவர்கிட்ட விஷயத்தை சொல்லணுமே…” என வாய்விட்டே புலம்பி கொண்டான்.
கனிகா உதவி கேட்டபோது ஒத்துக்கொண்டே இருக்கக்கூடாதோ என காலம் கடந்து வருந்தினான்.
ஆதியின் கோபத்தை மேலும் கிளறவென்றே அவனது கைப்பேசி பிரதாபனின் பெயரைத் தாங்கி அலறியது. இந்த ஆளு எதுக்கு இப்ப கூப்பிடறான் என கடுப்பாக எண்ணியபடியே, அலைபேசியை வெறித்துப் பார்த்திருக்க, கைப்பேசி சிணுங்கி அடங்கி இரண்டாம் முறை ஒலித்தது.
ஆதி அழைப்பை ஏற்று அமைதியாக இருக்க, “என்ன ஆதீஸ்வரன் சௌக்கியமா இருக்கீங்களா?” என்று கேட்ட நக்கல் குரலில் எதுவோ அவனுக்குச் சாதகமாக அமைந்து விட்டது என்று புரிந்தவன் தன் புலன்களை கூர்மையாக்கினான்.
“பதிலையே காணோமே ஆதீஸ்வரன்… சௌக்கியமான்னு கேட்டேன்” என்று மீண்டும் சீண்டினான் எதிரில் பேசியவன்.
ஆதியின் மூச்சுக்காற்றில் உஷ்ணம் கூடியது.
“கோபமா இருக்கீங்க போலவே…” மீண்டும் நக்கல் செய்தான் பிரதாபன்.
“ஆதி இதுவரைக்கும் பொண்ணுங்க விஷயத்துல சொக்கத்தங்கம்ன்னு பேரு எடுத்து இருக்கீங்க… இப்படி ஒரு அரசியல்வாதியை பார்க்கிறதே அபூர்வம் தெரியுமா… என்னவோ நீங்க சௌக்கியமா இருந்தா சரி தான்…” என்று மீண்டும் படுநக்கலாக பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, ஆதியின் புருவங்கள் முடிச்சிட்டது.
கதவை திறந்து வீட்டின் உள்ளே தான் வந்திருந்தான். இன்னும் அறைக்குக் கூட போகவில்லை. இப்பொழுது பிரதாபனின் பேச்சில், நிதானமாக வீட்டை நின்ற இடத்திலிருந்தே அலசினான். கீழ்த்தளத்தில் எதுவும் தவறாகப் படவில்லை.
ஆனாலும் பிரதாபன் மீண்டும் மீண்டும் கேட்ட சௌக்கியமா உறுத்திக் கொண்டே இருந்தது.
எப்பொழுதும் இது போல நீண்ட நாட்கள் வெளியில் அலைந்து திரிந்து வந்தால், வீடு வந்து சேர்ந்ததும் தன் அறைக்குத் தான் ஓடுவான். இன்று என்னவோ அதில் ஓர் தயக்கம். அவன் உள்ளுணர்வும் அவனை எச்சரித்து அங்கேயே அவனை நிறுத்தியது.
அடுத்த நிமிடம், அவன் உதவியாள் தென்னரசுக்கு அழைப்பு பறந்தது. “சீக்கிரமா நமக்கு நம்பிக்கையானவங்க கொஞ்ச பேரோட வீட்டுக்கு வந்து சேரு. அவசரம். டோன்ட் டிலே…” என்றான் கட்டளை குரலில்.
இப்பொழுது தான் சென்னைக்கே திரும்பி இருக்கிறான். அதற்குள் இப்படி சொல்கிறான் என்றால், பிரச்சினை பெரியது என்று புரிந்தவன், “டென் மினிட்ஸ்ல இருப்பேன் சார்” என்றிருந்தான் அவனும்.
அதற்குள் வாட்ச்மேன் தன் வேலை மேல் இருந்த பயத்தில், சத்யேந்திரனுக்கு அழைத்து இங்கு நடந்ததை எல்லாம் சொல்லிப் புலம்பி இருக்க, “ஐயோ…” என்று அலறியவனோ அடித்துப் பிடித்து இங்கு வருவதற்கு புறப்பட்டிருந்தான்.
அண்ணனுக்கு அழைத்துச் சொல்ல வேண்டும் தான், ஆனால் என்னவோ அதற்கு அவனுக்கு துளியும் தைரியம் வேறு இல்லை. நேரில் சென்று எப்படியாவது பேசி, நிலைமையை விளக்கிச் சொல்ல வேண்டும் என்று வேகமாக வண்டி ஓட்டி வந்து கொண்டிருந்தான். அதனால், இங்கு வரவிருக்கும் பின்விளைவுகளைப் பற்றி அறியாமல்.
பிரதாபன் என்ன திட்டமிட்டிருக்கிறான் என்று புரியாமல், ஆதீஸ்வரன் பெரிதாகக் குழம்பி போனான். ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தபடியே ‘பொண்ணுங்க விஷயம், சௌக்கியமா’ என்று பிரதாபன் விட்ட வார்த்தைகளை வைத்து என்னவாக இருக்கும் என்று மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தான். என்னவோ அவனுக்குள் நெருடிக்கொண்டே இருந்தது. இன்னதென்று சரியாக எதுவும் பிடிபட மறுத்தது.
அவன் யோசனையைத் தடை செய்வது போல, அடுத்த சில நிமிடங்களில் வாசலில் அழைப்பு மணியின் ஓசை கேட்க, கதவைத் திறந்தவன் அங்கிருந்த காவலர்களைப் புரியாமல் பார்த்தான்.
“எஸ்… என்ன விஷயம்?” என்று ஆளுமையாகக் கேட்க,
“சார் உங்களை டார்கெட் பண்ணி இருக்கிறதா இன்பர்மேஷன் வந்தது…” என்று வந்திருந்த இன்ஸ்பெக்டர் தொடங்கவும், அழுத்தமாக அவர்களைப் பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை.
“உங்களை காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணினோம் சார்…” என தயக்கமாக இழுத்தான் அந்த இன்ஸ்பெக்டர்.
“நான் இன்னைக்கு சென்னை வர பிளான் யாருக்கும் தெரியாது…” என்றான் ஆதீஸ்வரன் அழுத்தமான குரலில்.
“சார் நீங்க சென்னை வந்துட்டதா தகவல் வந்தது…” என்று எச்சில் கூட்டி விழுங்கினான் இன்ஸ்பெக்டர். என்னவோ அவனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
“நான் வீட்டுக்கு வந்த வெறும் பத்தே நிமிஷத்துல… அதுவும் இந்த விடியக்காலையில… காவல்துறை செயல்பாட்டை நினைச்சு எனக்கு புல்லரிக்குதுன்னா பாருங்களேன்…” ஆதீஸ்வரன் நக்கலாகச் சொல்லிக் கொண்டிருக்க, அங்கு தென்னரசு அவர்கள் ஆட்களுடன் வந்து சேர்ந்திருந்தான்.
“சார் என்ன ஆச்சு?” காவலாளிகளை ஆராய்ச்சியாகப் பார்த்த வண்ணம் தென்னரசு ஆதியின் அருகில் வந்து விசாரிக்க, அவன் அழுத்தமாக இன்ஸ்பெக்டரை பார்த்தான்.
“அது சாருக்கு ஆபத்து இருக்குன்னு போன் வந்தது… அதுதான் வீட்டைச் சோதனை போடலாம்ன்னு…” மென்று விழுங்கினான் அவன்.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… கூப்பிடறேன்” என ஆதியின் அழுத்தமான குரலுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் தன் ஆட்களோடு கொஞ்சம் தள்ளி நின்று கொண்டான் அந்த இன்ஸ்பெக்டர்.
“என்ன சார் இது?” தென்னரசு புரியாமல் கேட்க, ஆதி, “என்ன பிளான்னு தெரியலை…” என்றான் புருவத்தை நீவியவாறு.
“என்ன ண்ணா… இவனுங்க காலங்கத்தால வந்திருக்காறானுங்க… என்னவோ ராங்கா படுதுண்ணா” என்று துள்ளினான் அவர்கள் பக்க ஆள் ஒருவன்.