ரகுநந்தன்- தேவநந்தனா வின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்க, திருமணத்தை தொடர்ந்து மணமக்கள் குணசேகரனின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். எதிர்பாராத திருமணம் என்பதால் வரவேற்பை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று மாப்பிளை வீட்டினர் சொல்லிவிட, அதற்குமேல் அங்கு யாரும் எதுவும் பேச முடியாமல் போனது.
குணசேகரனின் வீட்டில் நடந்தது எதுவும் நினைவில் இல்லாதது போல் சாவித்ரி நடந்து கொண்டார். வந்தவர்களை விழுந்து விழுந்து அவர் கவனித்து கொண்டிருக்க, முத்து மாணிக்கத்தின் வீட்டினர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
பெண் மாப்பிளைக்கு கொடுப்பதற்காக அவர் வெள்ளிக்கிண்ணத்தில் பாலும், பழமும் கொண்டு வர, அந்த ரகுநந்தன் கையில் கூட வாங்கவில்லை. அவரை கவனிக்காதவன் போல் அவன் அமர்ந்திருக்க, “மாப்பிளை..” என்று அவனை அழைத்திருந்தார் சாவித்ரி.
அப்போதும் இறுக்கமான முகத்துடனே அவரை நிமிர்ந்து பார்த்தவன் “எனக்கு பால் பிடிக்காதுங்க.. வாழைப்பழமும் சாப்பிட மாட்டேன்.” என்று முடித்துக் கொண்டான்.
சாவித்ரிக்கு முகத்தில் அடித்தது போல் ஆகிவிட, ரகுநந்தனின் பெரியம்மா சாவித்ரியின் கைகளில் இருந்த தட்டை தான் வாங்கி கொண்டவர் “இதெல்லாம் சடங்கு ரகு.. இப்படி பட்டுன்னு பிடிக்கல சொல்வியா.. வாயை திற..” என்று அதட்டி அவன் வாயில் ஊட்டிவிட, முறைப்புடனே வாங்கி கொண்டான்.
அவன் அருகில் அமர்ந்திருந்த தேவநந்தனாவுக்கும் அவரே ஊட்டிவிட, அமைதியாக வாயைத் திறந்து வாங்கி கொண்டாள். சுந்தராம்பாளின் குடும்ப உறவுகள் பலரும் வீட்டில் நிறைந்திருக்க, முத்துமாணிக்கத்தின் சார்பாக அவரின் தம்பி குடும்பமும், அவர் மனைவியின் அக்காவும் அவரின் மகள் மீனாவும் மட்டுமே அங்கு இருந்தனர்.
மற்றவர்கள் திருமண மண்டபத்தில் இருந்தே ஊருக்கு கிளம்பி இருந்தனர். பெண் வீடு அருகில் இருப்பதால் முதலில் அங்கு வந்தவர்கள் அன்று மதியமே ஊருக்கு புறப்படுவதாக இருந்தது. சுந்தராம்பாளின் சொந்தங்களுக்கு தாங்கள் இத்தனை பேர் இருக்க, யாரையும் கேட்காமல் சுந்தராம்பாள் இப்படி ஒரு முடிவெடுத்ததை பற்றி லேசான மனத்தாங்கல் தான்.
பேச்சு வாக்கிலும் அதை காட்டிக் கொண்டே இருக்க, சுந்தராம்பாள் தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தார். அவரின் அனுபவத்தில் இவர்கள் அனைவரை பற்றியும் அவருக்கு நன்கு தெரிந்தே இருக்க,அவர்களின் இந்த தேன் தடவிய பேச்சுக்கள் எரிச்சலை கொடுத்தது அவருக்கு.
அதுவும் ரகுவின் குடும்பத்தினர் வேறு அங்கிருக்க, அவர்கள் காதில் எதுவும் தவறாக விழுந்து விட்டால் காலத்திற்கும் பேச்சாக மாறிவிடும் என்பதால் பேத்தியிடம் ரகுவை அவள் அறைக்கு அழைத்து செல்லுமாறு கூறிவிட்டார். அவள் தயக்கமாக பார்க்க ரகு உடனே எழுந்துவிட்டான்.
அவனுக்கு இப்படி அனைவரின் முன்பாகவும் காட்சி பொருளாக அமர்ந்திருப்பது ஒருவித சங்கடத்தை கொடுத்துக் கொண்டிருக்க, பாட்டி சொன்னதே போதும் என்று எழுந்துவிட்டான். அதற்குமேல் வேறு வழியில்லாமல் போக, நந்தனாவும் அவனுடன் தன்னறைக்கு செல்ல படியேறினாள்.
இன்னும் அவள் இந்த வீட்டிற்கு வந்தது முதல் தந்தையுடன் பேசவே இல்லை. அவரும் அவளின் அருகில் வராமல் போக்கு காட்டிக் கொண்டிருக்க, சாவித்ரி தான் அவளை கவனித்துக் கொண்டிருந்தார். இருவரும் அவர்கள் அறைக்கு செல்லவும் சுந்தராம்பாள் தன் உறவுகளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவர் “சாவித்ரி.. வந்தவங்களுக்கு சாப்பிட கொடுத்து பலகாரம் எல்லாம் கட்டிக்கொடு.. ராத்திரிக்கு ஊருக்கு கிளம்பிடுவாங்க இல்ல..” என்றுவிட்டு தன்னறைக்கு சென்றுவிட்டார்.
ரகுநந்தன் மாடியில் இருந்த நந்தனாவின் அறைக்கு வந்தவன் அந்த அறையை சுற்றி பார்வையை ஓட்ட, அறையின் ஒவ்வொரு மூலையிலும் பணம் விளையாடி இருந்தது. அவள் ஒருத்திக்கு அந்த அறை மிக மிக அதிகம். அதுவும் அங்கிருந்த பொருட்களும் விலையுயர்ந்ததாகவும், ஆடம்பரம் மிக்கனவாகவும் இருக்க ரகுவால் அங்கு பொருந்த முடியாமல் போனது.
அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தவன் கண்களை மூடி பின்னால் சாய்ந்து கொண்டான். நந்தனா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவனையே பார்த்து நிற்க, அவளுடைய அறையிலேயே ஒருவித அசௌகரியதோடு நின்றாள் அவள்.
ரகு சிறிது நேரத்திற்கு பின்பே அவள் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தவன் “என்ன..” என்று கேட்க, ஒன்றுமில்லை என்பது போல் தலை மட்டும் வேகமாக அசைந்தது. அவளையே ஒரு நொடி பார்த்தவன் என்ன நினைத்தானோ “எதுக்கு இத்தனை நகையை அள்ளி கொட்டி இருக்காங்க.. முதல்ல இதையெல்லாம் கழட்டி வை.. இந்த புடவையையும் மாத்து..” என்று எரிச்சலாக மொழிய, அவன் குரல் முற்றிலும் புதியது அவளுக்கு.
இதுவரை அவளிடம் யாரும் இந்த தொனியில் பேசி கேட்டதே இல்லை அவள். அவள் பாட்டியும் சரி, தந்தை, சிற்றன்னையும் சரி “தேவாம்மா..” என்று அவள் பெயருக்கு கூட வலிக்காத அளவுக்கு அத்தனை இனிமையாக தான் அழைப்பார்கள் அவளை. ஆனால் அதை யோசித்துக் கொண்டு நிற்க இது நேரமில்லையே..
இந்த நகைகள் அவளுக்கும் தான் உறுத்திக் கொண்டே இருக்கிறதே. அந்த அறையின் ஒருபுறம் இருந்த குளியலறைக்கு சென்றவள் அதோடு இணைந்திருந்த மற்றொரு அறையில் தன் நகைகளை கழட்டி அங்கிருந்த அலமாரியில் பத்திரப்படுத்தினாள்.
தான் அணிந்திருந்த சேலையையும் கழட்டி மடித்து அங்கிருந்த ஹேங்கரில் மாட்டியவள், ஒரு குளியலை முடித்து சாதாரண சேலைக்கு மாறிக் கொண்டாள். ஆனால் அந்த சாதாரண சேலையின் விலையே ஆயிரங்களில் தான் இருக்கும். ரகு வீட்டில் அவன் அம்மாவிடமோ, சித்தியிடமோ அந்த சேலையை கொடுத்தால் அவர்கள் அதை வெளியில் அணிந்து செல்ல எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
அவள் வெளியே வந்த போது ரகுவும் அதையே நினைக்க, அவள் தலைமுடியை கொண்டையை போல் சுருட்டி ஏதோ செய்திருந்தாள். முகத்தின் ஒப்பனைகள் எல்லாம் கலைந்திருக்க, இப்போதுதான் அவளின் உண்மையான அழகு வெளிப்பட்டது. அவள் சுருட்டி வைத்திருந்த தலைமுடி அவிழ்ந்து விழ அவள் இடையை தாண்டியது நீளமான கூந்தல்.
ரகு அவளின் முடியை சவுரி என்று நினைத்திருக்க, இந்த நீளமான தலைமுடி அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் முகத்தை துடைத்துக் கொண்டு கட்டிலுக்கு அருகில் இருந்த டேபிளில் இருந்து ஒரு கிளிப்பை எடுத்து மாட்டி தன் கொண்டையை மீண்டும் சரி செய்து, நெற்றியில் பொட்டை ஒட்டிக் கொண்டு நிமிர , இப்போது அடுத்து என்ன என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.
மனம் முழுவதும் ஒருவித தவிப்பு நிறைந்திருக்க, யாரோ ஒருவன் தன் அறையில் அமர்ந்து கொண்டு தன்னை கண்ணெடுக்காமல் பார்ப்பது வேறு ஒரு வித அவஸ்தையை கொடுத்தது. அழுத்தமாக அவன் அமர்ந்திருந்த விதமும், அவன் குரலும் லேசான அச்சத்தையும் கொடுத்திருக்க உணர்வுகளின் கலவையாக நின்றிருந்தாள் அவள்.
ரகு அவளையே பார்த்திருந்தவன் நேரத்தை திரும்பி பார்க்க, இன்னும் ஒருமணி நேரம் இருந்தது அவர்கள் ஊருக்கு கிளம்புவதற்கு. தான் நினைப்பதை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் “இங்கே வந்து உட்கார்..” என்றான் அவளிடம்.
தேவாவும் அமைதியாக வந்து அமர “இந்த கல்யாணம் உனக்கு எவ்ளோ ஷாக் ன்னு எனக்கு தெரியாது… ஆனா எனக்கு ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு.. இது சரியா வருமா ன்னு கூட தெரியல எனக்கு… எங்க வாழ்க்கை வேற, உன்னோட வாழ்க்கை முறை வேற.. எந்த அளவுக்கு ஒத்து வரும்ன்னு தெரியல..
“இதையெல்லாம் ஏற்கனவே நானே உன் பாட்டிகிட்ட சொல்லிட்டேன்.. எதையுமே காதுல வாங்காம என் அப்பாவை சரிக்கட்டி என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்காங்க… அப்படி என்ன நம்பிக்கையோ அவங்களுக்கு…”
“ஓகே.. இப்போ அதெல்லாம் பேசி எதுவும் ஆகப்போறது இல்ல.. எனக்கு நீ என்னோட மனைவியா மட்டும் எங்க வீட்டுக்கு வந்தா போதும்.. உன் அப்பாவோட சொத்து, அவரோட அந்தஸ்து எதையும் நீ உன்னோட தூக்கிட்டு வரக்கூடாது..”
“உன் நகையெல்லாம் கூட இங்கேயே இருக்கட்டும்.. அப்புறம் எடுத்துக்கறதா சொல்லிடு..நாம இன்னும் ஒருமணி நேரத்துல இங்கிருந்து கிளம்பிடுவோம்.. உனக்கு இங்கே ஏதாவது முடிக்க வேண்டிய வேலை இருந்தா முடிச்சிக்கோ… ஆனா ஒரு மணி நேரம் கழிச்சு நீ என்னோட கிளம்பி இருக்கணும்.. நீ மட்டும்.. புரியுதா..” என்று அவன் அழுத்தமாக கேட்க, அவனின் அந்த குரலில் கண்கள் கலங்கிவிட்டது அவளுக்கு.
தலையே நிமிராமல் தலையசைத்து தன் புரிதலை வெளிப்படுத்தியவள் “நான் இப்போ போட்டுட்டு இருக்க இந்த நகைங்க மட்டும் இப்படியே இருக்கட்டும் ப்ளீஸ்.. நீயெங்கே எதுக்கு இப்படி சொல்றிங்க எனக்கு புரியல. ஆனா இதுவும் இல்லாம நான் கிளம்பினா என் அப்பா தாங்கவே மாட்டாங்க..” என்று அவள் மெல்லிய குரலில் அவள் கூற
“உன் அப்பா இதைவிட அதிகமா முழுங்கிட்டு உட்கார்ந்து இருக்காரு…அதெல்லாம் ஒன்னும் ஆகாது..” என்று மனதில் நினைத்துக் கொண்டவன் வெளியே சம்மதமாக தலையசைத்தான்.
இன்னும் ஒருமணி நேரத்தில் கிளம்ப வேண்டும் என்று அவன் சொன்னதே மனதில் ஓடிக் கொண்டிருக்க, மெல்ல தன் அறையை விட்டு வெளியே வந்தவள் பாட்டியின் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அவரின் மடியில் படுத்துக் கொண்டவள் அவரை வயிற்றோடு கட்டிக் கொள்ள, என்ன என்று கேட்ட பாட்டியிடமும் “ஒன்றுமில்லை..” என்று தலையாட்டி விட்டாள்.
அடுத்த ஒருமணி நேரமும் வேகமாக பறந்துவிட, ரகு கீழே இறங்கிவிட்டான். அங்கு அமர்ந்திருந்த தன் உறவுகளை பார்த்தவன் தன் சித்தப்பாவிடம் “கிளம்பலாம் சித்தப்பா..” என்றுவிட, அவனை ஒன்றும் சொல்லமுடியாமல் சற்று தள்ளி அமர்ந்திருந்த குணசேகரனிடம் சென்றார் அவர்.
அவர் குணாவிடம் எதுவோ கூற அவர் அதிர்ச்சியாக பார்த்தவர் மறுப்பாக ஏதோ கூற தயங்கி கொண்டே ரகுவின் முகம் பார்த்தார் அவன் சித்தப்பா வேலு. ரகு இளகாமல் நிற்க “அண்ணன் ஏற்கனவே வீட்டுக்கு கிளம்பிட்டாங்க.. அவசரகல்யாணம் இல்லையா, ஊர்ல தாக்கல் சொல்ல சொல்லி இருக்கு.. எல்லாரும் காத்திட்டு இருப்பாங்க.. மறுவீட்டுக்கு வரத்தானே போறாங்க.. அப்போ இங்கே தங்க வச்சு அனுப்புங்க மச்சான்..” என்று அவர் தன்மையாகவே கூற, அதற்க்கு மேல் குணாவால் என்ன பேச முடியும்.
அதற்குமேல் வேலைகள் வேகவேகமாக நடக்க, மாடியிலிருந்து இறங்கி வந்த மகளை கண்ட குணசேகரன் அதிர்ந்து தான் நின்றார். இன்று தான் திருமணம் முடிந்தது என்பதற்கு எந்த அடையாளமும் இல்லாமல், தான் வாங்கி கொடுத்த நகைகளை கூட அணிந்து கொள்ளாமல் இப்படி வந்து நிற்பவளை கண்டு அவர் கொதித்து போக, ஆத்திரம் மொத்தமும் அன்னையின் மீது தான் திரும்பியது.
அவர் கோபமாக அன்னையை பார்க்க, சுந்தராம்பாள் பேசக்கூட ரகுநந்தன் ஒத்துக்கொள்ளவில்லை. அவன் முடிவில் நின்றவன் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான். அவன் வீட்டினர் முன்னால் பெரிய காரில் கிளம்பி இருக்க, அவனது காரில் மனைவியை அழைத்துக் கொண்டு புறப்பட்டான் ரகுநந்தன்.
வீட்டினரிடமும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. “போய் வருகிறேன்” என்று மொட்டையாக தகவல் மட்டுமே சொல்லியவன் கிளம்பி இருந்தான். நந்தனா காரில் முன்பக்கம் அமர்ந்து இருந்தவள் அவள் குடும்பத்தை திரும்பி பார்த்துக் கொண்டே வர, கேட் கண்ணை விட்டு மறைந்தும் கூட தன் வீட்டின் ஞாபகமே.
ரகுநந்தனின் சொந்த ஊர் வானூர் கிராமம். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் அமைந்திருந்தது. அதுதான் அவர்களின் பூர்வீகம். அவர்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயக்குடும்பமாக இருக்க, நிலம், நீர் என்று அவர்களும் சற்று வசதிபடைத்தவர்கள் தான்.
என்ன அவர்கள் வாழ்க்கைக்காக சொத்து சேர்த்தவர்கள். குணசேகரன் சேர்த்த சொத்துகளுக்காக வாழ்வை அமைத்து கொண்டவர். அவருடன் ஒப்பிடும்போது இவர்கள் சற்றே வசதி குறைவு தான். ஆனால் அதற்கே அவர் இவர்களை ஒன்றுமில்லாதவர்கள் என்று நினைக்க, ஆரம்பத்தில் இருந்தே அவரை பிடிக்காது ரகுநந்தனுக்கு.
இத்தனைக்கும் அவரை மொத்தமாக ஒரு இரண்டு முறை தான் பார்த்திருப்பான் அவன். அதற்கே அவரை பிடிக்காமல் போய்விட, இன்று விதியின் பயனால் அவரின் மருமகன். அவ யோசனைகளில் மூழ்கியவனாக வண்டியை செலுத்திக் கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருந்தவள் கண்களை மூடிக் கொண்டு சாய்ந்து இருந்தாள்.
“நல்லது தான்” என்று எண்ணிக் கொண்டவன் நிம்மதியாக வீட்டை வந்து அடைய, அங்கு அவன் தங்கை தயாராக நின்றாள். கையில் ஆரத்தி தட்டோடு நின்றிருந்தவள் தன் அண்ணனுக்கும்,அண்ணிக்கும் ஆரத்தி எடுக்க, அவள் கேட்காமலே தட்டில் காசை போட்டவன் மனைவியை கையை பிடித்து அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
ரகுவின் அன்னை பார்வதி மருமகளை கையை பிடித்து அழைத்துக் கொள்ள, அவரின் மகிழ்ச்சி அவர் கண்களில் தெரிந்தது. சற்றே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார் அவர். ரகு அவரை முறைத்தவன் “சந்திரன் எங்கேமா.. சொந்த தம்பி கல்யாணத்துக்கு கூட வர முடியாத அளவுக்கு வேலை பார்க்கிறானா அவன்?? என்று சத்தம் போட
பார்வதி அவனை பாவமாக பார்த்தவர் “எதுக்குடா வந்ததும் வராததுமா கத்தி கூச்சல் போடற.. அவன் இன்னும் வீட்டுக்கு வரல, வரவும் நீயே கேட்டுக்க..” என்றவர் மருமகளை அழைத்துக் கொண்டு பூஜையறை சென்றார். அவளை விளக்கேற்றி சாமி கும்பிட வைத்தவர் வெளியே அழைத்து வர, இங்கும் இருவரையும் ஒன்றாக அமர்த்தி உறவுப்பெண்கள் பால் பழம் கொடுத்தனர்.
இப்போது ரகு மறுக்காமல் வாங்கி கொண்டதோடு குடித்து விட்டு மனைவியிடமும் நீட்ட, தேவா அந்த பால் டம்ளரை கையில் வாங்கி கொண்டாள். இவர்கள் குடித்து முடிக்கும் நேரம் தன் மனைவியோடு வீட்டிற்குள் நுழைந்தான் ராமச்சந்திரன்.
உள்ளே நுழையும்போதே தேவாவை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தாள் அவன் மனைவி சஞ்சனா. தேவாவுக்கு அவர்கள் யாரென்றே தெரியாமல் போக, சாதாரணமாக தான் பார்த்திருந்தாள். ஆனால் கையில் குழந்தையோடு எதிரில் நின்றவள் “என்னத்தை.. பணத்தை பார்த்ததும் பேசி வச்சதெல்லாம் மறந்துடுச்சு போல.. அதெப்படி மனுஷங்க இப்படி இருக்காங்களோ.. பணம் ன்னு சொல்லிட்டா எப்படி இருந்தாலும் கட்டிக்கலாம் போல..” என்று ஏளனமாக கூறிவிட
தேவநந்தனா ஏதோ தவறானவள் போன்ற அர்த்தத்தை கொடுத்தது அவள் பேச்சின் தொனி. தேவாவுக்கு கண்களில் மளமளவென்று கண்ணீர் இறங்கிவிட, சட்டென தலையை குனிந்து கொண்டாள்.
ஆனால் ரகுநந்தன் எதையும் கண்டுகொள்ளவே இல்லை. அவன் தங்கையிடம் “வானதி.. அண்ணியை ரூம்க்கு கூட்டிட்டு போ..” என்று கூறியவன் அவள் எழுந்து கொள்ளவும், “நான் கடைக்கு போயிட்டு வந்துடறேன்மா..” என்று விட்டு கிளம்பி விட்டான்.
அவன் கண்டுகொள்ளாமல் போனதில் இன்னுமின்னும் ஒடுங்கி போனாள் நந்தனா.. அவன் ஒரு வார்த்தை கூட மறுத்து பேசாமல் சென்றதில் அவனும் அப்படிதான் நினைக்கிறான் என்று தன்னையே வாட்டிக் கொண்டவள் தனக்குள் சுருண்டு கொள்ள ஆரம்பித்தாள்.