கண்ணே முத்து பெண்ணே 9

செல்வத்தை தன் ஆள் அகிலனிடம் அறிமுகம் செய்து வைத்த அமைச்சர், பார்ட்டியை தொடங்கிவிட்டார்.

எல்லாரும் கையில் கிளாஸுடன் மிதக்க, அகிலனும் எடுத்து கொண்டு வந்தான்.

செல்வம் அவனுக்காக வந்த சோடாவை மறுத்துவிட, “இப்படி வாங்க” என்று அவனை தனியே அழைத்து கொண்டு வந்தான் அகிலன்.

இருவரும் ஓர் இருக்கையில் அமர, அண்ணாச்சி பார்வை இவர்களையே தொடர்ந்தது.

அகிலன் அவரை திரும்பி பார்க்க, அவர் சட்டென தன் பார்வையை மாற்றிகொண்டார்.

“செல்வா. சரியான முடிவு. சூப்பர் மூவ்” என்றான் அகிலன் அவனை பாராட்டி.

“இது உங்களுக்காக” என்று கிளாஸை உயர்த்தி காட்ட,

“என்னை உங்களுக்கு முன்னாடியே  தெரியுமா?” என்று செல்வம் கேட்டான்.

“ரவி என் பிரெண்ட்” என்று அகிலன் முடித்துவிட்டான்.

செல்வம் புரிந்ததாய் தலையசைக்க, “அந்த கட்டிடத்தை ரெடி பண்ண எவ்வளவு பணம் வேணும்ன்னு பார்த்து சொல்லுங்க. செட்டில் பண்றேன்” என்றான் அகிலன்.

செல்வம் கேட்டுக்கொள்ள, அக்கம் பக்கம் பார்த்த அகிலன், செல்வத்தை ஒட்டி அமர்ந்தான்.

செல்வம் என்னடா இது என்பது போல அவனை பார்த்து, நகர்ந்து கொள்ள, “அட கிட்டேயே இருங்க பாஸ்” என்றான் அவன்.

“எதுக்கு?”

“சீக்ரெட்”

“பரவாயில்லை. இப்படியே சொல்லுங்க” என்று இடைவெளியை கடைபிடித்தான். ஆள் தண்ணியில் வேறு மிதக்கிறதே.

“டாப் மோஸ்ட் சீக்ரெட்” என்றவன், செல்வத்தின் கால்களை உரசியபடி அமர,

“யோவ் என்ன பண்ற நீ?” என்றான் செல்வம் கடுப்பாக.

“என்ன செல்வா” அவன் புரியாமல் கேட்க,

“ஆம்பிளை தொடையோட இன்னொரு ஆம்பிளை தொடை உரசுறதுக்கு கும்பி பாகம் தண்டனையே மேல்” என்றான் முகம் சுளித்து.

“ம்ப்ச். இதுவா?” என்று சாதாரணமாக சொன்னவன், இன்னும் நகராமல் இருக்க,

“நீ உண்மையிலே ரவி ப்ரெண்டா?” என்று சந்தேகமாக கேட்டான்.

“பக்கா ப்ரெண்ட்ஸ் நாங்க, என்ன இப்படி கேட்கிறீங்க?”

“ம்ப்ச்” என்றபடி அவன் நெற்றி தொட்டு பின்னால் தள்ளியவன், தானும் எழுந்து கொண்டான்.

“பாஸ் என்ன பண்றீங்க?” என்று அகிலன் அவனின் கை பிடிக்க,

“இல்லை இது சரிப்பட்டு வராது, நான் கிளம்புறேன்” என்றான் செல்வம்.

“அச்சோ உங்களோட. எனக்கும் ஒரு ஆம்பிளையோட கற்பை சூறையாட எந்த ஆசையும் இல்லை. உட்காருங்க இப்படி” என்றான் அவன்.

“அப்படி என்ன சீக்ரெட்”

“இப்போ சொல்ல மூட் போச்சு”

“ஏன் உரசிட்டு உட்கார்ந்தா தான் மூட் வருமா உனக்கு?”

அகிலன் அவனை முறைத்தவன், “எவ்வளவு பெரிய ஜீனியஸ் தெரியுமா நான்?” என்றான்.

“ஜீனியஸா இருந்தா இப்படி எல்லாம் இருக்குமோ?” என்று கேட்டான் செல்வம்.

“செல்வா” என்று பல்லை கடித்தவன், “உட்காருங்க இப்படி. ஆஹ்ன் தள்ளி தான். உங்க இத்து போன கற்பு மேல எனக்கு எந்த இண்டெர்ஸ்ட்டும் இல்லை” என்றவனை கண்களை சுருக்கி பார்த்தபடியே அமர்ந்தான் செல்வம்.

“உங்க பேர்ல இருக்கிற ப்ரோபர்டி யாரோடதுன்னு நினைச்சீங்க?” என்று கேட்டான்.

“அமைச்சரோடது தானே”

“இல்லை. வருங்கால CM வோடது. எங்க அடுத்த CM கேண்டிடேட்” என்றான்.

செல்வத்திற்கு அதிர்ச்சியே. “என்ன. அவரோடதா?”

“ஆமா. அவருக்கு கட்டம் கட்டி தான் இவ்வளவும். அமைச்சர் சொன்னது கவனிக்கலையா எங்களை முடிச்சிருப்பானுங்கன்னு. நம்ம அமைச்சர் மூலமா தான் நிறைய சொத்து வாங்குவாங்க. இவருக்கு பல பினாமி. ஆனா அமைச்சரே அவருக்கு பினாமி” என்றான்.

“அண்ணாச்சி, அவருக்கு தெரியாதா?” செல்வம் புருவம் சுருக்கி கேட்டான்.

“யாருக்கும் தெரியாது. எனக்கும், அமைச்சருக்கு மட்டும் தான். உங்களுக்கு எதுக்கு சொல்றேன்னா, இனி கேஸ் பத்தி நீங்க கவலையே பட வேண்டியது இல்லைன்னு தான். தைரியமா இறங்கி தொழில் பண்ணுங்க. பார்த்துக்கலாம்” என்றான்.

செல்வத்திற்கு நடப்பது எல்லாம் ஆச்சர்யமே. அவன் மேல் இவ்வளவு பெரிய ஆளின் கை இருக்கிறதா?

“ஆனா ஒன்னு பாஸ். நீங்க ரொம்ப உண்மையா இருந்துட்டீங்க. இல்லை இந்நேரத்துக்கு இவங்களே உங்களை முடிச்சு விட்டிருப்பாங்க. தப்பிச்சீங்க, போங்க” என்று விடைபெற்றான்.

செல்வம் கிளம்புவதை கவனித்திருந்து அமைச்சரிடம் வந்த அண்ணாச்சி, “செல்வா இப்போ தான் நம்ம வட்டத்துக்குள்ள புதுசா வந்திருக்கான். அவனை நம்பி எப்படி தலைவரே அந்த சொத்தை ஒப்படைக்கிறது?” என்று கேட்டார்.

“செல்வா நல்ல பையன்னு நீ தானே சொன்ன?” அமைச்சர் கேட்க,

“நல்ல. நல்லவன் தான் தலைவரே. அது, பெரிய சொத்து, அதான்”

“நம்மளை மீறி அவன் என்ன பண்ணிட முடியும்? எங்களுக்காக ரொம்பவே  கஷ்டப்பட்டுட்டான் பாவம். அதுல வர வருமானத்தை எடுத்திட்டு போகட்டுமே இப்போ என்ன?”

“நாம ஜஸ்ட் இடம் தான் கொடுக்கிறோம். உழைப்பு அவன் தான் போடணும். திறமை இருந்தா ஜெயிச்சு மேல வரட்டுமே” என்று முடித்துவிட்டார் அமைச்சர்.

“நாம சொன்னது நமக்கே வருது” நாராயணனிடம் புலம்பியபடி கிளம்பினார் அண்ணாச்சி.

“அகிலன் தம்பி. நீ விசாரிச்ச தானே செல்வத்தை பத்தி. அண்ணாச்சி என்னமோ ரொம்ப யோசிக்கிறார்” என்று அவனிடம் கேட்டார் அமைச்சர்.

“தலைவரே. இத்தனை வருஷம் எல்லாம் அவர் கட்டுப்பாட்டுல இருந்தது. இப்போ கை மாறவும்”

“புரியுது. புரியுது. அதுக்காக நாம ஒருத்தரை மட்டுமே நம்பிட்டு இருக்க முடியுமா? செல்வா மாதிரி விசுவாசமா, நம்பிக்கையான ஆள் கிடக்கிறது எல்லாம் குதிரை கொம்பு. கிடைக்கும் போதே பிடிச்சு உள்ள போட்டா தான் உண்டு” என்றார் அமைச்சர்.

அகிலன் தனக்குள் சிரித்தபடி நகர்ந்துவிட்டவன், தள்ளி வந்து ரவிக்கு அழைத்தான்.

“செல்வா எதாவது கேட்டானா? வேணாம்ன்னு வந்துடலையே?” என்று ரவி கேட்க,

“சரியா கேட்டுட்டு போயிருக்கான். இனி அவன் மேல வந்திடுவான். நான் பார்த்துகிறேன்” என்றான் அகிலன்.

“தேங்க்ஸ்டா. நாச்சியை வைச்சு அவன் லைப்ல விளையாடவும் ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்தது. இனி பார்த்துக்குவான்” என்று வைத்தான்.

பொருளாதார ரீதியாகயாவது அவன் வளரட்டும் என்று ஆசுவாசம் கொண்டான்.

செல்வா அடுத்து நாட்களை கடத்தவில்லை. மறுநாளே அந்த கட்டிடத்திற்கு சென்றான். அதற்கான ஆட்களை வைத்து பணம் எவ்வளவு தேவை என்று கணக்கிட்டு கொண்டான்.

அகிலனுக்கு அன்றே அழைத்து பேசியவன், பணம் கைக்கு கிடைத்ததும் வேலையை ஆரம்பித்துவிட்டான்.

கீழே அவன் கடைக்கு முதலில் வேலைகளை முடித்தவன், கொஞ்சம் பெரிய அளவிலே கடை திறக்க ஏற்பாடு செய்தான்.

டீ மட்டுமில்லாது, அந்தந்த நேரத்துக்கு ஏற்றது போல உணவு பொருட்களையும் புதிதாக சேர்த்து கொண்டான்.

பணம் தாராளமாக புரள, வேலையும் விரைவாகவே முடிந்துவிட்டது. கடை திறப்பிற்கு அமைச்சரை அழைக்க, அவர், “நான் வேணாம். எல்லோருக்கும் சொன்ன மாதிரி ஆகிடும். நீயே திறப்பா. இப்போ என்ன?” என்றார்.

செல்வமோ, “நான் அண்ணாச்சியை கூப்பிடுறேன்” என்றான்.

“பாரு அவனுங்க இவன் மேல வயிறு எரியுறானுங்க. இவன் நன்றி உள்ள பையன் அவங்களை கூப்பிடுறேன்னு சொல்றான்” என்று அண்ணாச்சி அங்குள்ளவர்களிடம் சொல்லி கொண்டார்.

செல்வம் கடை திறப்பு விழாவிற்கான பத்திரிக்கையுடன் அண்ணாச்சியை பார்க்க சென்றான்.

அண்ணாச்சிக்கு கொட்டிவிட முடியாத கடுப்பு. நாராயணனுக்கு பார்த்து நான் எனக்கே ஆப்பு வைச்சுகிட்டேனோ என்றிருந்தது.

அமைச்சர் வேறு கடை திறப்பு பற்றி சொல்லியிருக்க, செல்வமும் பத்திரிக்கையை அவருக்கு கொடுத்தான்.

“டீ கடை தானே செல்வா? அதுக்கெல்லாம் நான் வரணுமா?” என்றார் அண்ணாச்சி.

செல்வம், “நீங்க சொல்றது சரி தான் அண்ணாச்சி. உங்க லெவெலுக்கு இல்லை. புரியுது” என்று கிளம்பிவிட்டான்.

அண்ணாச்சி அவன் மீண்டும் கூப்பிடுவான் என்று எதிர்பார்த்திருக்க, அவனோ டக்கென கிளம்பிவிட்டான்.

“அப்படி யாரை வைச்சு கடை திறக்கிறான்னு நானும் பார்க்கிறேன்” என்று அண்ணாச்சி பொறுமி கொண்டார்.

செல்வம் அன்று காலை சென்னைக்கு வந்துவிட்டான். அவனின் முத்து பெண்ணை பார்க்க.

அவளின் இருப்பிடம் கேட்க, போன் செய்தால் நம்பரை மாற்றி விட்டிருந்தாள். செல்வத்திற்கு சட்டென ஒரு கோவம்.

பொறுத்து கொண்டு சுப்பிரமணிக்கு அழைத்து பேசினான். “ண்ணா அண்ணியை பார்க்க போயிருக்கியா? சொல்லவே இல்லை. இதோ இப்போவே அண்ணி அட்ரஸ் கண்டுபிடிச்சுட்டு போன் பண்றேன்” என்று வைத்தான்.

சில நிமிடங்களில் அட்ரஸ் வந்துவிட, செல்வம் அங்கு சென்றான். அபார்ட்மெண்ட் ஒன்றில் இருந்தாள்.

அவளின் புது எண்ணையும் மணி அனுப்பியிருக்க, போன் செய்தான். இவனின் நம்பர் தான் நாச்சிக்கு தெரியுமே?

எடுக்கவில்லை பெண். “கீழ தான் இருக்கேன்” என்று மெசேஜ் அனுப்பினான் செல்வம்.

அடுத்த நொடி கால் வந்துவிட்டது. “இங்க. இங்க என்ன பண்றீங்க” அவள் படபடத்தாள்.

“கீழ வா முதல்ல. பேசிட்டு நான் கிளம்பனும்” என்று வைத்துவிட, நாச்சி விரைவாக அவன் முன் நின்றாள்.

“திரும்ப ஏன் இப்படி? கிளம்பிடுங்க” என்றாள் நாச்சி.

“கிளம்ப தான் போறேன். ரொம்ப துரத்தாத” என்றவன், கடை திறப்பு விழாவிற்கான பத்திரிக்கையை அவளிடம் கொடுத்தான்.

முத்து பெண்ணால் மறுக்க முடியவில்லை. வாங்கி கொண்டவள், கண்களில் மகிழ்ச்சி மின்ன, ஆர்வத்துடன் பிரித்து பார்த்தாள்.

“சம்பிரதாயமா என்னை கூப்பிட வந்திருக்கீங்களா?” என்று அவனை நிமிர்ந்து பார்த்து கேட்க,

“பத்திரிக்கை காட்ட தான் வந்தேன்” என்றான் அவன்.

பெண்ணின் முகம் சுருங்கி விட, செல்வம் உதட்டுக்குள் புன்னகை ஒளிந்து கொண்டது.

“பார்த்துட்டேன். கிளம்புங்க” என்றாள் முசுட்டு முகத்துடன்.

“ஏன் இப்போவும் யாராவது என்னை அரெஸ்ட் பண்ணிடுவாங்கன்னு பயப்படுறியா?”

“ச்சு. என்ன பேசுறீங்க. விட்டேன்னு சொல்லுங்க. மூணு முறை சொல்லுங்க” என்று நின்றாள்.

“நான் வந்ததே உனக்கு பிடிக்கலை. இப்போ என்ன?”

“ம்ப்ச்” நாச்சி நெற்றியை தேய்த்து கொண்டாள்.

செல்வம் அவளின் கை பிடித்து கீழிறக்கியவன், “எப்படி இருக்க?” என்று கனிவாக கேட்டான்.

அதில் ஓர் நொடி தடுமாறி கலங்கி கொண்டு வந்த கண்களை சிமிட்டி சமாளித்தபடி, “நல்லா இருக்கேன்” என்றாள்.

“சரி. நான் கிளம்புறேன்” செல்வம் சொன்னான்.

உள்ளுக்குள் அல்லாடும் அவளை மேலும் வறுத்தும் எண்ணம் இல்லை. அவன் வாழ்வில் ஒரு நல்லது நடக்கும் போது அவளிடம் சொல்லாமல், அவளை பார்க்காமல் செய்ய மனம் வரவில்லை. அதனாலே அவளை தேடிக்கொண்டு வந்துவிட்டான்.

“நாளைக்கு திறக்கிறோம். டீ கடை மட்டுமில்லை. ஸ்னேக்ஸ் போலவும் வைக்கிறோம். பார்ப்போம்”

“அதெல்லாம் ஜெயிச்சிடுவீங்க”

“அது உன்னை முதல் முறை பார்த்தப்பவே தோணுச்சு” என்றான்.

“நம்பிட்டேன். வேணாம்ன்னு விறைச்சிட்டு இருந்தவர் தானே?”

‘இப்போ வேணும்ன்னு ஏங்கிட்டு நிக்கிறேன்’ தனக்குள்ளே சொல்லி கொண்டான்.

“நீ வர முடியாது. வரவும் மாட்டேன்னு தெரியும். உன்னை போர்ஸ் பண்ணலை. போட்டோஸ் அனுப்புறேன்” என்றான்.

“உங்க பேமிலில வராங்க இல்லை”

செல்வம் தோள் குலுக்கினான். “இனி தான் சொல்லணும். ஆனா. ச்சு விடு” என்றான்.

அதிலே அவர்கள் வர மாட்டார்கள் என்பது நாச்சிக்கு புரிந்து போனது. தானும் அவனுடன் இருந்து எடுத்து கட்டி செய்ய முடியாததில் அளவில்லா வருத்தமே.

தனியா நிற்கிறார்! அடைத்த தொண்டையை செருமிகொண்டாள்.

இருவரும் பிரிய மனதில்லாமல் நின்றனர். செல்வம் அவளின் கையை பற்றி அழுத்தி கொடுத்தவன், தலையசைப்புடன் கிளம்பினான்.

அன்று மாலை செல்வம் தன் வீட்டிற்கு சென்றான். நீண்ட வருடங்களே ஆகிறது இங்கு வந்து.

குடும்பமாயிற்றே! அவர்களை விட்டு விடும் எண்ணம் அவனுக்கு எப்போதும் இருந்ததில்லை இப்போதும் தேடி கொண்டு வந்தவனை, “வா” என்று அழைக்க கூட அங்கு யாருக்கும் விருப்பமில்லை.

சொந்த குடும்பத்திற்கே பத்திரிக்கை வைத்து அழைத்தான். தண்டபாணிக்கு மகிழ்ச்சியே, காட்டிக்கொள்ள தயக்கம்.

அண்ணா, அண்ணி முறைக்கு வாங்கி வைத்து கொண்டனர் அவ்வளவு தான். வெளியூரில் இருக்கும் அக்காவிற்கு போன் செய்து அழைக்க, அவளும் “ம்ம்” என்றதோடு முடித்து கொண்டாள்.

தண்ணீர் கூட கொடுக்காத தன் வீட்டை கசந்து போன மனதுடன் பார்த்தான். அவனின் அறை, அவன் வளர்ந்த இடம் எல்லாம் வெகு அந்நியமாக இருந்தது.

போட்டோவில் இருக்கும் அம்மாவை மட்டும் நொடி அதிகமாக பார்த்து வெளியே வந்துவிட்டான்.

இனி இங்கு வரவே கூடாது என்ற தீர்மானத்துடன்.

சுப்பிரமணி வீட்டினருக்கு, நெருங்கிய சொந்தங்களுக்கு அழைப்பு விடுத்தான்.

கடை திறப்பு நாளும் வந்தது. அவ்வளவு பெரிய கட்டிடத்தின் முன் மூவர் மட்டுமே இருந்தனர். வேறு யாரும் வரவில்லை.

இவனால் அவர்களுக்கு பிரச்சனை வந்துவிடும் என்ற பயம் போல. கடந்து போக ஆரம்பித்தான்.

தன்னை மாற்றி கொண்டால் ஒழிய, இங்கு வாழ முடியாது என்ற நிதர்சனம் உரைத்தது. நிச்சயம் செல்வம் இனி மாற்றி கொள்வான்.

விளக்குகளால் ஜொலித்த கடையை நிதானமாக பார்வையிட்டான்.

உள்ளுக்குள் என்னமோ செய்தது. ரிப்பன், விளக்கு எல்லாம் தயாராக இருக்க “ண்ணா. ஆரம்பிக்கலாமா?” என்றான் சுப்பிரமணி.

“இரு மாப்பிள்ளை போட்டோ எடுக்கலாம்” என்று ரவி கேமரா எடுக்க,

“நீங்களும் வாங்க” என்றான் செல்வம்.

“நாங்க எதுக்குடா?”

“ண்ணா. நீயே ஆரம்பி”

“ம்ப்ச் வாங்கடா” என்றவன் அவர்களின் மறுப்பை கண்டுகொள்ளாமல்,  மூவருமாக தான் கடையை திறந்தனர். மூவருமாக தான் விளக்கும் ஏற்றினர்.

ஒரு திரியை மட்டும் செல்வம் தனியே ஏற்றினான்.

அந்த ஒளி அவனின் முத்து பெண்ணுக்கானது என்பதை அவன் புன்னகை சொன்னது.