கண்ணே முத்து பெண்ணே 8

மகள் இங்கு இருப்பாளோ என்ற சந்தேகத்திலே கோவிலில் இருந்து கிளம்பி வந்த நாராயணனுக்கு நாச்சி அங்கு தான் இருந்ததில் எதையும் யோசிக்காமல் காரை நிறுத்திவிட்டார்.

அவரை தொடர்ந்து மற்றவர்களும் நிறுத்தி இறங்கிவிட,  நாராயணன் ம்ப்ச் என்று தலையில் தட்டி தன்னை சமாளித்து கொண்டார்.

எல்லோரும் உள்ளே வந்துவிட, “பொண்ணு இங்க தான் இருக்கா” என்றார் பெண்மணி ஒருவர்.

“ஆ.. ஆமா மழைக்கு நின்னுருப்பா” என்றார் நாராயணன்.

செல்வம், நாச்சிக்கு இடையில் சென்று நின்று கொண்ட ரவி, “என்ன நாச்சி இது? இங்க ஏன் வந்த? ” என்று மென்குரலில் தங்கையை கடிந்தான்.

“நல்லதா போச்சு. பொண்ணையும் பார்த்த மாதிரி ஆச்சு. டீயும் குடிச்ச மாதிரி ஆச்சு” என்ற பெரியவர்,

பாய்லரிடம் நின்ற மணியிடம், “தம்பி எல்லோருக்கும் டீ போடுப்பா” என்றார்.

அண்ணனை தான் பார்த்தான் தம்பி. இறுக்கைகளில் எல்லோரும் செட்டில் ஆக, நாராயணன் மட்டும் நின்று கொண்டார்.

செல்வம் சொல்லாமல் டீ போட மாட்டேன் என்பது போல மணி இருக்க, நாராயணன் கோவம் அவரின் உடல் மொழியில் தெரிந்தது.

“டேய் ப்ளீஸ்டா” ரவி நண்பன் பக்கம் சாய்ந்து மெல்ல கேட்டான்.

“இங்க வந்ததுக்கு தானே உன் தங்கச்சியை திட்டுன. இப்போ நீங்க எல்லாம் என்ன இதுக்கு இங்க இருக்கீங்க. கிளம்புங்க” என்றான் செல்வம்.

ரவி நொந்து போனவன், “தெரியாம பண்ணிட்டேன்டா. என் அப்பா வேற மலை ஏறுறார். தேவையில்லாத பிரச்சனை வேணாம்டா” என்றான்.

நாச்சியை உத்து உத்து பார்த்து கொண்டிருந்த மாப்பிள்ளையை பார்த்த செல்வம், “நானே டீ போடுறேன்” என்று சென்றான்.

‘என்ன பிளான்ல போறானோ தெரியலையே’ ரவி தனக்குள் முனகினான்.

நாச்சியை அடைகாத்து நின்றிருந்த நாராயணனுக்கு தான் முதல் டீ வந்தது. மணி கொடுக்க மறுத்தவரை. “அட சும்மா குடிங்க. மழைக்கு நல்லா இருக்கும்” என்ற பெரியவரின் பேச்சில் பல்லை கடித்தபடி எடுத்து கொண்டார்.

மற்றவர்களுக்கும் டீ சென்றது. மாப்பிள்ளை பையனுக்கும் மட்டும் செல்வம் தானே எடுத்து சென்று கொடுத்தான்.

ரவி அவனை திகில் கலந்த சந்தேகத்துடன் பார்க்க, “கல்யாண பொண்ணு தான் டீ கொடுக்கணும்ன்னு இல்லை மச்சான். கல்யாண பொண்ணோட புருஷன் கூட கொடுக்கலாம்” என்றான் இவனிடம் மட்டும்.

ரவிக்கு குடித்த டீ தலைக்கு ஏற, “பார்த்து குடி மச்சான்” என்று சொல்லியபடி தலையில் தட்டினான் செல்வம்.

“சொந்த காரங்களா தம்பி நீங்க” என்று பெரியவர் கேட்க,

“ஆமாங்க. ரொம்ப நெருங்கின சொந்தம். மாப்பிள்ளை, மச்சான்” என்றான் செல்வம்.

நாராயணன் டீயை விட அதிகம் கொதித்தார். நாச்சிக்கு இவர் ஏன் இப்படி பண்றார் என்றிருந்தது.

“ஓஹ் மாமா மச்சான் சொந்தமா? அதுசரி இனி என் மகன் தான் அவருக்கு மாப்பிள்ளை தம்பி” பையனின் அம்மா சொல்ல,

“அப்படியா மச்சான்” என்று ரவியிடம் கேட்டான் செல்வம்.

“ஆ. அது. சர்க்கரை கொஞ்சம் கொடுடா” என்றான் ரவி பேச்சை மாற்றியபடி.

“இதோ கொடுக்கிறேன்” என்றவன் ரவியின் கண் முன்னே உப்பை கையில் அள்ளி எடுத்து வந்து கொட்டினான்.

“டேய்” ரவி சன்னமாக அலற,

“குடி மச்சான்” செல்வம் பாசமாக பார்த்து வைத்தான்.

“செத்துடுவேன்டா”

“சாவு”

“எனக்கும் கொஞ்சம் சர்க்கரை கொடுங்க” மாப்பிள்ளை பையன் கேட்க,

செல்வம் கொடுக்கவா என்பது போல ரவியை புருவம் தூக்கி பார்த்தான். “இது. இது வேணாம்ங்க. இந்த சர்க்கரை கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு” என்றவன்,

“மணி அவருக்கு வேற சர்க்கரையை கொண்டு வந்து கொடு” என்றான்.

“அப்புறம் பொண்ணை இங்க வைச்சே பார்த்தாச்சு. டீயும் குடிச்சாச்சு. பொண்ணும், பையனும் உங்க விருப்பத்தை சொன்னா மேற்கொண்டு பேச வசதியா இருக்கும்” என்று கேட்டார் பெரியவர்.

நாராயணன், “என் பொண்ணுக்கு பிடிச்சிருக்கு. மேற்கொண்டு பேச வேண்டியதை நாளைக்கு வீட்ல வைச்சு பேசிக்கலாம்” என்றார்.

நாச்சிக்கு அதிர்ச்சி எல்லாம் இல்லை. தந்தை இப்படி சொல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.  “அப்போ நாங்க கிளம்புறோம். நாளைக்கு எந்நேரம்ன்னு சொல்லுங்க. வரோம்” என்று பையன் வீட்டினர் கிளம்பிவிட்டனர்.

இவர்கள் மட்டும் இருக்க, நாராயணன், “டீ குடிச்சதுக்கு காசு” என்று செல்வத்திடம் நீட்டினார்.

செல்வம் அவரை வெகு நிதானமாக பார்த்தபடி கைகளை பேண்ட் பேக்கெட்டில் விட்டவன், “இருட்டுக்குள்ள வைச்சு சம்மந்தம் பேசின உங்க முன்னால் மாப்பிள்ளைக்கு இந்த உரிமை கூட தர மாட்டீங்களா மாமா? டீ, இடம், என் சர்வீஸ் எல்லாம் இலவசம்” என்றான்.

நாச்சி, ரவி இருவரும் கண்களை விரித்து கொள்ள, நாராயணனுக்கு அந்த இடமே தகித்துவிட்டது.

“டேய்” என்று கர்ஜித்து அவனை நெருங்கிவிட்டவரை,

“ப்பா. ப்பா, என்ன பண்றீங்க?” என்று மகன் பிடித்து கொண்டான்.

“பார்த்து பேசு. திரும்ப உள்ள போயிடாத” என்றார் விரல் நீட்டி மிரட்டலாக.

“நான் நடக்காததை சொல்லலை. நீங்களும் என் முன்னால் மாமா தான். அப்புறம் உள்ள போறது வைச்சு எல்லாம் மிரட்டாதீங்க. ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேன்” என்றான் செல்வம்.

“என்னடா பண்ணிடுவ?” நாராயணன் குதித்தார்.

செல்வம் அதற்கு பதில் சொல்லவில்லை. மெலிதாக உதட்டை வளைத்து சிரித்தவன், விசிலடித்தபடி நாச்சியை கடந்து உள்ளே சென்றான்.

நாராயணன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் தன் குடும்பத்தை அழைத்து கொண்டு கிளம்பியவர், உடனே அண்ணாச்சியையும்  பார்க்க சென்றார்.

“என்ன பண்ணிட்டு இருக்க நாராயணா?” அண்ணாச்சி இவரை சத்தம் போட்டார்.

“அவன் அமைதியா விலகிறான்னா விட்டுடணும். சீண்டி பார்க்க கூடாது”

“அண்ணாச்சி அவன் என்னை மிரட்டுறான்னு சொல்லிட்டு இருக்கேன்”

“அவன் என்ன பண்ணிட முடியும்? நீ எதுக்கு முதல்ல அவன் கடையில வைச்சு பொண்ணு பார்த்த? கூறு இருக்கிறவன் இந்த வேலையை செய்வானா?”

“என் பொண்ணு அங்க இருந்தான்னு தான், பிளான் பண்ணி எல்லாம் நடக்கலை”

“அவன் வெளியே வந்து இத்தனை நாள் ஆச்சு, இப்போவாரை உன் பொண்ணை தேடி அவன் போகலை தானே. உன் பொண்ணு தான் அவனை தேடி போயிருக்கா”

“அவளும் மழைக்கு தான்”

“தெரியுது இல்லை, அதை அப்படியே விட்டிருக்கணும்”

“அப்போ அவன் பேசினது சரின்னு சொல்றீங்களா?”

“நாம பண்ணதை எல்லாம் மறந்துட்டியா நாராயணா. அவன் பண்ண நினைச்சா?

“பண்ணிடுவானா அவன்”

“மத்ததை சொல்லலைன்னாலும்,  உன் பொண்ணுகூட நாம சம்மதம் பேசினதை சொன்னாலே போதும்”

நாராயணன் அமைதியாக, “புரியுது இல்லை. அவளுக்கு நீ கல்யாணம் பண்ணனும்ன்னு நினைச்சா இவன் பக்கம் திரும்பாம இரு” என்றார்.

“மாப்பிள்ளை வீட்ல கூடி வந்தா சீக்கிரம் நாள் குறிச்சிடு. தலைவர் கண்ணு இவன் மேல விழுது. கூட்டிட்டு வர சொல்லி கேட்டுட்டே  இருக்கார்” என்றார் அண்ணாச்சி. நாராயணனும் யோசித்தார்.

“என்னண்ணா இது அண்ணாச்சி உங்களை கூப்பிடாம இருக்கார்?” என்று கேட்டான் மணி.

“இவர் இங்க நடந்ததை கண்டிப்பா போய் சொல்லியிருப்பாரே”

“அவர் கூப்பிட மாட்டார் மணி. சீக்கிரம் அவளுக்கு நாள் குறிக்க தான் பார்ப்பாங்க” என்றான் செல்வம்.

“உனக்கு, நீ ஓகேவாண்ணா” மணி வருத்தமாக கேட்டான்.

“எனக்கென்னடா?” என்ற செல்வம் அடுத்த வேலையை பார்க்க போய்விட்டான்.

அந்த மாதத்தில் கட்சி கூட்டம் ஒன்று இவர்கள் தொகுதியில் ஏற்பாடு ஆனது. செல்வம் அதில் பெரிதாக பங்கெடுக்கவில்லை.

எல்லோருக்கும் வேலை கொடுத்த அண்ணாச்சியும் இவனை அழைக்கவில்லை. பஞ்சாயத்துக்களுக்கு மட்டும் சென்று கொண்டிருந்தான்.

கட்சி கூட்டமும் நடந்து முடிய, அந்த அமைச்சர் மட்டும் அவரின் விசுவாசிகளுடன் அங்கேயே தங்கியவர், “அந்த பையனை வர சொல்லு” என்றார் அண்ணாச்சியிடம்.

பங்காளி நாராயணனின் முகத்தை பார்த்த அண்ணாச்சி, தெரிந்திருந்தாலும், “யார் தலைவரே” என்று கேட்டார்.

“என்னப்பா அண்ணாச்சிக்கு  வயசு ஏறுது போலயே, எல்லாம் மறந்திடுறார். அவன் தான்யா”

“ஹான், செல்வமா? அவன் கட்சி கூட்டத்துக்கு எல்லாம் வர்ரதில்லை தலைவரே, அரசியல் ஆர்வம் இல்லை அவனுக்கு”

“அட யார்யா நீ? நான் என்ன கட்சிக்கு ஆள் சேர்க்கவா கூப்பிடுறேன். எப்போ கேட்டாலும் எதாவது ஒன்னு சொல்ற.  அவனை பார்க்கவே விட மாட்டேங்கிற. டேய் நீ செல்வத்தை வர சொல்லு” என்று வேறு ஒருவருக்கு சொன்னார்.

அண்ணாச்சி மறுக்க முடியாமல் நிற்க, செல்வம் வந்துவிட்டான்.

“வணக்கம் தலைவரே” என்றான் அமைச்சரிடம்.

“அடடே வாப்பா.. வாப்பா. நீதான் செல்வமா? உட்காரு” என்று சேரை காட்டினார்.

“இருக்கட்டும் தலைவரே” என்று நின்று கொண்டான்.

மரியாதை தெரிஞ்சவன் தான். “தம்பிக்கு சரக்கு எடு” என்க,

“இல்லை தலைவரே. பழக்கம் இல்லை” செல்வம் மறுத்துவிட்டான்.

“வேற சிகரெட். இதுவும் வேண்டாமா? என்னய்யா இவ்வளவு நல்ல பிள்ளை எப்படி தாக்கு பிடிச்சான்?” அவன் தோள் தட்டியபடி கேட்டார்.

“போட்டு பிழிஞ்சிடுவாங்களே தலைவரே. வலுவான பையன் தான். அண்ணாச்சி இந்த மாதிரி பசங்களை எல்லாம் நீங்களே வைச்சுகிட்டா நாங்க  என்ன பண்றது?” என்று அவரின் வலது கை கேட்டார்.

“அயோ அப்படி எல்லாம் இல்லை. அவனுக்கு கட்சி ஆர்வம் இல்லை அதான்”

“நாம என்ன கட்சி வேலை மட்டுமா வைச்சிருக்கோம். நீ சொல்லு செல்வா? உன்கிட்ட கேட்க சொல்லியிருந்தேனே, என்ன யோசிச்சிருக்க. பணமா, வேலையா? என்ன வேணும்”

“அதெல்லாம் எதுவும் வேணாம் தலைவரே” என்றான் செல்வம்.

“அட கேளுப்பா. உனக்கு செய்யாம? எவ்வளவு பெரிய விஷயத்தை பண்ணியிருக்கன்னு உனக்கு தெரியாது. நீ மட்டும் வாயை திறந்திருந்தா எங்களை மொத்தமா முடிச்சு விட்டிருப்பானுங்க”

“எல்லாம் தெரிஞ்சும் சொத்தை உன்பேருக்கு எழுதிகிட்டதே பெருசு. அதுல இத்தனை மாசம் தாக்கும் பிடிச்ச பாரு. சாதிச்சுட்ட செல்வா” என்றார் அமைச்சர்.

செல்வம் திரும்பி பங்காளிகளை  தான் பார்த்தான். நாச்சி எனும் பெண்ணை வைத்து இவர்கள் செய்த உள்குத்து வேலை எல்லாம் அமைச்சருக்கு தெரியாது போலயே.

இருவரும் இவனின் பார்வையை கவனிக்காதது போல ஏதோ பேசினர்.

“தம்பி டீ கடை தான் வைச்சிருக்கு தலைவரே”

“அப்படியா? என் தொழில் ஏதும் பார்த்துக்கிறியா?”

“இல்லை வேணாம். விஷயம் வெளியே கசிஞ்சா பிரச்சனை” என்றான் செல்வம்.

“அது என் பிஸ்னஸ்ன்னே யாருக்கும் தெரியாது. ஆனாலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். நீயே சொல்லு. யோசிக்காத செல்வா. கேளு.”

அண்ணாச்சி, நாராயணனை பார்த்த படியே, “மெயின்ல கடை வைச்சுக்க உங்க அனுமதி கிடைச்சா போதும்” என்றான் செல்வா.

பங்காளிகள் இருவரும்  அவனின் சாதுர்யத்தில் கொஞ்சம் அசந்து தான் போயினர்.

“எங்க. அந்த கட்டிடத்திலவா?” அமைச்சர் கேட்டார்.

“அவ்வளவு பெரிய கட்டிடத்தை அப்படியே விட்டா வீணா போயிடும். மத்தவங்க கண்ணையும் உறுத்தும்” என்றவன், “உங்களுக்கு வேண்டாம்ன்னா வேணாம். நீங்க கேட்க சொன்னதால கேட்டுட்டேன்” என்றான் செல்வா.

“செல்வம் சொல்றது சரி. அதை மெயின்டைன் பண்ணியே ஆகணும். தொழில் நடக்கிறது தான் சரி. யாரோ ஒருத்தருக்கு கொடுக்கிறதுக்கு செல்வாவுக்கு கொடுக்கலாம். அவர் தொழில் பண்ணிக்கட்டும்” என்றான் இளைஞன்

அண்ணாச்சிக்கு ஜீரணிக்க முடியவில்லை. “அது ரொம்ப பெரிய இடம் தலைவரே” என,

“மொத்த இடத்துக்கும் என்ன வாடகையோ அதை நான் கொடுத்திடுறேன்” என்றான் செல்வம். அமைச்சருக்கு அவனை பிடித்து போனது.

“அதுல உனக்கு நிறைய வேலை  இருக்கும் செல்வா. நீதான் பார்த்துக்கணும். வாடகை பேச்செல்லாம் பேசாத” என்றவர்,  அவரின் சொத்தை நிர்வாகம் செய்யும் அந்த இளைஞன், அகிலனை அறிமுகம் செய்தார்.

“இனி இவன் கூட டீலிங் வைச்சுக்கோ. உன் போன் நம்பரை செல்வாகிட்ட கொடு” என்றுவிட்டார்.

அண்ணாச்சிக்கு மொத்தமும் வெந்து போனது. அவரிடம் கூட அகிலனின் நம்பர் இல்லை. அமைச்சரின் மூளை அகிலன்.

“செல்வா இப்போதான் வெளியே வந்திருக்கான். உடனே அங்க கடை வைக்கிறது சரிப்பட்டு வராது தலைவரே” என்றார் அண்ணாச்சி.

“சொத்தே அவன் பேர்ல தான் இருக்கு. அவன் கடை வைச்சா என்ன?”

“இல்லை தலைவரே அந்த கேஸ்”

“நாம எதுக்கு இருக்கோம்? பார்த்துக்கலாம்” என்றுவிட்டார்.

செல்வாவிற்கு அண்ணாச்சியின் முயற்சிகளும் புரிந்தது, நாராயணனின் இருண்டு போன முகமும் தெரிந்தது.

உதட்டை வளைத்தவன், “வருமானம் வர ஆரம்பிச்சதும் உங்களை வந்து பார்க்கலாம் இல்லை அண்ணாச்சி” என்று கேட்டான்.

அவன் கேட்டதே அண்ணாச்சிக்கு முதலில் புரியவில்லை. தன் பங்காளியை பார்க்க அவரின் முகத்தில் அப்படி கொதிப்பு.

‘இவன் ஏன் சூடுறேறான்?’ யோசித்த அண்ணாச்சிக்கு பளீரென மின்னல் வெட்டியது. உடன் வேர்த்தும் போனது.

“அந்த கட்டிடத்தில் வருமானம் வர வைத்துவிடு. என் பெண்ணை உனக்கு தருகிறேன்” என்ற சவாலை தானே செல்வாவிற்கு கொடுத்தார் நாராயணன். அதில் தானே அவனை சிக்கவும் வைத்திருந்தார்கள்.

அதை இப்படி பொதுவில், எல்லோரும் இருக்கும் போது செல்வம் கேட்பான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதிலும் அமைச்சரின் பார்வை கேள்வியாக இவரை மொய்த்ததில் முகத்தை துடைத்து கொண்டார்.

“என்னங்க அண்ணாச்சி. வந்து பார்க்கலாம் தானே? மாமா. நீங்க சொல்லுங்க” என்று பங்காளிகள் இருவரையும் அழுத்தமாக பார்த்தபடி கேட்டான் செல்வம்.

முத்து பெண்ணின்  பெயர் இவன் வாயில் இருந்து எப்படி வராதோ அப்படி நாராயணனும் உயிரே போனாலும் மகளின் பெயரை இங்கு சொல்ல மாட்டார் என்று தெரிந்து தானே செல்வம் அவர்களிடம் கேட்டதே!

“என்ன வருமானம்? விஷயம் என்ன செல்வா?” என்று இவனிடம் கேட்டார் அமைச்சர்.

“அண்ணாச்சி என்கிட்ட ஒரு டீல் பேசினார். அதான் முடியவும் வரவான்னு கேட்டேன்” என்றான் செல்வம்.

“என்ன டீல்?” அமைச்சரின் பார்வை சந்தேகமாக அண்ணாச்சியின் மேல் படிந்தது. உள்ளுக்குள்ளாக ஏதும் வேலை பார்த்திருப்பானோ என்ற அவரின் சந்தேகம் பார்வையில், அண்ணாச்சி சுதாரித்து கொண்டார்.

“அது. அது செல்வாகிட்ட ஒரு பஞ்சாயத்து முடிக்க சொல்லி சொல்லியிருந்தேன் தலைவரே. அதான் முடியவும் வந்து பார்க்க கேட்கிறான்” என்றார் அண்ணாச்சி.

“டீலிங். வருமானம்ன்னு”

“அது ஒரு கட்ட பஞ்சாயத்து. டீல் தான் பேசி முடிக்கணும். அதுல நமக்கு வர லாபம், லாபத்தை தான் வருமானம்ன்னு சொல்றான்”

“ஓஹ். டீலிங், வருமானம்ன்னு நிறைய பார்க்கிற போல” அமைச்சர் ஒருமாதிரி கேட்டார்.

“என்ன தலைவரே நம்ம தொகுதி டீலிங்ன்னா உங்களுக்கு பங்கில்லாம போகுமா? அதெல்லாம் வந்திடும்” என்றார் அண்ணாச்சி.

“வந்து தானே ஆகணும். அகிலன் அது என்னன்னு பார்த்து அண்ணாச்சிகிட்ட வாங்கிடு” என்றார் மனிதர்.

“இவருக்கு இப்போ கொடுத்துதான் ஆகணும். என் பணம் போச்சு” என்று பங்காளியிடம் புலம்பினார்  அண்ணாச்சி.

“நான் அவனை பத்தி சொன்னப்போ என்னமோ பேசின. அனுபவி” நாராயணன் கடுப்பாக சொல்லி கொண்டார்.

இருவரையும் பார்த்த செல்வத்தின் உதடுகளில் தாராள புன்னகை.