சில நொடிகள் தான். என்ன நடந்தது என்று உணர்வதற்கு முன்பே செல்வத்தை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி இருந்தார்கள்.
நாச்சி பதறி போய் அவர்களை நெருங்க, செல்வம் கண்களாலே அவளை அதட்டி தள்ளி போக சொன்னான்.
அதெப்படி? பெண் அவனின் எச்சரிக்கையை மீறி, போலீசிடம் சென்றுவிட்டவள், “எதுக்கு அவரை அரெஸ்ட் பண்றீங்க?” என்று கேட்டாள்.
“நீங்க யாரு அவருக்கு?” அவர்களிடம் இருந்து கேள்வி பிறக்க,
செல்வம் வாய் திறப்பதற்குள், நாச்சி “அவரோட பியான்சி” என்றிருந்தாள்.
செல்வம் கோவத்தில் அவளை முறைக்க, “உங்க டீடையில்ஸ் கொடுங்க” என்று அவளின் பெயர், போன் நம்பர், விலாசம் எல்லாம் வாங்கி கொண்டவர்கள்,
“நாங்க இவரை வேலூர் போலீஸ் ஸ்டேஷன் தான் கூட்டிட்டு போறோம். அங்க வந்து பேசிக்கோங்க” என்று செல்வமுடன் கிளம்பிவிட்டனர்.
செல்வம் அவளை பின்னாடி வராத என்று கண்களால் எச்சரித்து செல்ல, நாச்சி அப்படியே நின்றுவிட்டாள். நிமிடம் தான். தெளிந்து காருக்கு ஓடி வந்தவள், அண்ணனுக்கு அழைத்தாள்.
“சரி பதட்டபடாத. நான் பார்த்துகிறேன்” என்றான் ரவி.
“என்ன, எதுக்கு அவரை அர்ஸ்ட் பண்றாங்க?”
“அது அப்புறம் சொல்றேன். நீ அங்கேயே இரு. ஊருக்கு வந்திடாத”
“நான் கிளம்பிட்டேன்” என்றாள் தங்கை.
“நாச்சி என்னை டென்சன் பண்ணாத. அவனை அப்படி எல்லாம் விட்டுட மாட்டேன். நீ வராத அவ்வளவு தான்” என்று அண்ணன்காரன் சீறினான்.
“நீ விட்டுடவும் முடியாது. என்னை எதுக்கு வராத சொல்ற? உண்மையை சொல்லு நீங்க எதுவும் அவரை சிக்க வைச்சிருக்கீங்களா?” நாச்சி சந்தேகத்தோடு கேட்டாள்.
“அவனை யார் போய் அந்த சொத்தை எழுதிக்க சொன்னது. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டானா ராஸ்கல்”
“எந்த சொத்து?” நாச்சிக்கு பயம் விழுந்தது. தொண்டை வறண்டு, தள்ளாடி போனாள்.
“இப்போ நான் உன்கிட்ட பேசுறதா? இல்லை அவனுக்கு தேவையானதை பார்க்கிறதா?” ரவி எரிந்து விழுந்தான்.
“என்னை வைச்சு தானே அவரை லாக் பண்ணியிருக்கீங்க, அப்போ எனக்கு நீ பதில் சொல்ல தான் வேணும்”
“என்னை இதுல இழுக்காத. உன்னால தான் அவன் மாட்டுனான், இது உண்மை” என்று போனை வைத்துவிட்டான்.
நாச்சிக்கு நெஞ்சோடு, தொண்டையும் அடைத்து கொண்டது.
செல்வம் வருவதற்குள் ரவி போலீஸ் ஸ்டேஷனில் இருந்தான். பேச அனுமதி கேட்க, மறுத்துவிட்டனர்.
லாயர் வந்தும் செல்வத்தை நெருங்கவே விடவில்லை. போராடி தான் அனுமதி கிடைத்தது. ஓரிரு நிமிடமே.
“நைட் நீ உள்ள தான் இருக்கணும். காலையில கோர்ட்ல ஜாமீன் வாங்க முடியுமான்னு பார்க்கலாம்” என்றான் ரவி.
“என்ன கேஸ்?” செல்வம் கேட்க,
ரவிக்கு ஐய்யோ என்று வந்தது. “ஏண்டா இப்படி பண்ண? என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் இல்லை” கோவமாக அவனின் தோளில் இரண்டு மூன்று அடி போட்டுவிட்டான்.
செல்வம் பார்த்தே இருக்க, “சொத்து அபகரிப்பு” என்றான்.
“ஓஹ்” புரிந்ததாய் தலையாட்டினான். அவ்வளவு தான் நேரம் முடிந்து போனது.
செல்வத்தின் வீட்டினர்க்கு விஷயம் தெரிந்தும் யாரும் வரவில்லை. தண்டபாணியை அவரின் பெரிய மகன் பிடித்து கொண்டான். சுப்பிரமணியை ஓரிடத்தில் மறைத்து வைத்திருந்தான் ரவி.
நாச்சி ஊருக்கு வந்துவிட, நாராயணன் மகளை அடிக்கவே போய்விட்டார். “உன்னால தான் அவன் உள்ள இருக்கான். நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா மொத்தமாவே அவன் உள்ள இருந்துக்க வேண்டியது தான். பார்த்துக்கோ” என்றார் மிரட்டலாக.
நாச்சிக்கு தைரியம். அதெப்படி இவர் பண்ணிட முடியும்? எங்களுக்கு சட்டம் தெரியும் என்றே நினைத்தாள்.
ஆனால் அவளின் தைரியம் எல்லாம் அடுத்தடுத்த நாளிலே காணாமல் போனது.
கோர்ட்டில் செல்வத்திற்கு ஜாமீன் கொடுக்க முடியாது என்றுவிட்டனர். திறமையான வக்கீல் தான் ரவி பிடித்திருந்தான். அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பதினைந்து நாள் காவலில் இருக்க வேண்டும் என்றனர். விசாரணை நடக்கும் என்றனர்.
வருமானவரி துறையில் இருந்து பல துறைகள் அதிகாரிகள் செல்வத்தை விசாரிக்க வேண்டும் என்றனர்.
நாச்சி விடுமுறை எடுத்து கொண்டாள். எவ்வளவு முயன்றும் அவனை பார்க்க கூட அனுமதி கிட்டவில்லை.
“சொத்தை மிரட்டி வாங்கிற அளவு நீங்க பெரியாளா? இத்தனை கோடி சொத்து வாங்க பணம் ஏது? யார் உங்க பின்னாடி இருக்கா?”
“கொள்ளையடிக்கிறியா? ரவுடியா நீ? கட்ட பஞ்சயாத்து ஆளா? பினாமியா நீ? யாருக்கு பினாமி? சொன்னா உன்னை விட்டுடுவோம். இல்லை காலத்துக்கும் ஜெயில் தான்” என்று பலவகை கேள்விகள், மிரட்டல்கள்.
ஒரு கட்டத்தில் உடம்பில் காயங்கள் கணக்கில்லாமல் விழுந்தது.
செல்வத்தின் நெருங்கிய வட்டத்தையும் விசாரணைக்கு அழைத்தனர். குடும்பத்தினர் எங்களுக்கும், அவனுக்கும் சம்மந்தமே இல்லை என்றுவிட்டனர்.
சுப்பிரமணியை கண்டுபிடித்து அதிகமாக நெருக்கினர். அவன் தான் சாட்சி கையெழுத்து இட்டிருந்தான். எதிர் பக்கம் வேறு யாரோ.
அண்ணாச்சி, நாராயணனையும் உள்ளே இழுத்தனர். எனக்கு எதுவும் தெரியாது என்று இருவரும் சாதித்துவிட்டார்கள்.
ரவி, முத்து நாச்சியையும் கூட விசாரணைக்கு அழைத்தனர். “ஒரு வார்த்தை விட்டாலும் அவன் உள்ளேயே இருக்க வேண்டியது தான். பார்த்துக்கோங்க” என்று மிரட்டி அனுப்பி வைத்தார்கள் அண்ணாச்சியும், நாராயணனும்.
“நீங்க தான் அவருக்கு பணம் கொடுத்ததா? உங்களை தான் அவர் கட்டிக்கிறதா சொல்லியிருக்கீங்க” என்று முத்து நாச்சியை குடைந்தனர்.
“கட்டிக்கிறது உண்மை தான். ஆனா பணம் இல்லை” என்றாள் கனத்த நெஞ்சத்துடன்.
இருவரின் பண பரிவர்த்தனை சரியாக இருக்க, ஒரு வாரமாக அலையவைத்து விட்டனர்.
செல்வத்தின் காவல், விசாரணை எனும் பெயரில் சில மாதங்களாக நீண்டது.
கசக்கி பிழிந்துவிட்டனர். தூக்கம், பசி எல்லாம் செல்வத்திற்கு கனவாகி போனது. ஒவ்வொரு முறையும் அவன் கோர்ட்டுக்கு வரும் போது, நாச்சி உடைந்து போனாள்.
ஆளே சுத்தமாக மாறி போனான். உடம்பில் சதை எங்கு என்று தேட வேண்டியிருந்தது. இடையில் இரண்டு, மூன்று முறை மருத்துவமனை வாசம் வேறு.
நாச்சி அவளின் வட்டத்தில் கூட போராடி பார்த்துவிட்டாள். “மேடம் நீங்க இதுக்குள்ள போயிடாதீங்க. அப்புறம் உங்க மேல அவங்க கண்ணு விழுந்திடும். பெரிய விஷயம் இது. பெத்த ஆளுங்க சம்மந்தம் பட்டது” என்று இவளை எச்சரித்தனர்.
மாதங்கள் சில கடந்த பின்னும் செல்வத்தை வெளியே எடுக்க அண்ணாச்சி முனைப்பு காட்டவில்லை.
“ஒரு வருஷமாவது அவன் உள்ள இருக்கணும்” என்ற நாராயணனின் பேச்சு அவள் காதில் விழுந்தது.
நாச்சி துணிந்து முடிவெடுத்தாள். இதை விட்டால் வேறு வழியும் இருப்பதாக தெரியவில்லை. அதற்கான செயலில் அவள் இறங்க, நாராயணனுக்கு எப்படி தான் தெரிந்ததோ?
“அவனை மொத்தமா முடிக்க பார்க்கிறியா?” என்று மகளின் முன் வந்து நின்றார்.
“இந்த கிறுக்கு தனத்தை நீ பண்ணா, அவனோட நீயும் உள்ள போகணும்”
“பரவாயில்லை” என்றாள் பெண். “என்னை வைச்சு தானேப்பா அவரை உள்ளே இழுத்தீங்க. எத்தனை நாள் ஆச்சு. முடியலைப்பா. மனசு ரொம்ப குத்துது” என்றாள் தொண்டையை அடைத்த துக்கத்துடன்.
“நீ உன் பணத்துல வாங்கினதா சொன்னாலும், லஞ்ச புகார் தான் உன் மேல வரும். அவ்வளவு பணம்”
“இருக்கட்டும்ப்பா. லஞ்சம் வாங்கினதா இருக்கட்டும்” அவள் தயாராகிவிட்டாள்.
ரவி தங்கையை தனியே அழைத்து வந்தவன், “இது சரிவராது. நீ அப்பாகிட்ட பேசு” என்றான்.
“அவர் செய்ய மாட்டார்ண்ணா. நான் உள்ள போனா அவர் செய்வார்”
“நீ மாட்டினா அவராலும் செய்ய முடியாது. கேஸ் திசை மாறி போயிடும். அமைச்சர் ப்ரீயாகிடுவார். இரண்டு பேரும் உள்ள இருக்க வேண்டியது தான். அவனை மட்டும் எப்படி விடுவாங்கன்னு நினைக்கிற?”
நாச்சியின் கடைசி நம்பிக்கையும் அறுந்து போனது. “வேற வழியே இல்லையாண்ணா?” தங்கை கேட்க,
“இத்தனை மாசம் அலைஞ்சும் உனக்கு அது புரியலையா? நாம நினைச்சது போல இது சாதாரண கேஸ் இல்லை. அரெஸ்ட் பண்ணது மிரட்டி சொத்து வாங்கினான்னு. ஆனா விசாரணை எல்லாம் அவ்வளவு பணம் உனக்கு எங்கிருந்து வந்ததுன்னு தான்” என்றான் அண்ணன்.
“என்னால தானேண்ணா எல்லாம்”
“நீயும் ஒரு காரணம் அவ்வளவு தான். புரியலையா? செல்வத்துகிட்ட அந்த சொத்து இருந்தா பாதுகாப்பு. கூட வேற யாரும் அவனை மாதிரி தாக்கு பிடிச்சிருப்பாங்களா? முதல் நாளே பயந்து போய் இவங்களை கை காமிச்சிருப்பாங்க”
“அவரும் பண்ணியிருக்க வேண்டியது தானே? ஏன் பண்ணலை?” நாச்சி ஆதங்கப்பட்டு கொண்டாள்.
ரவி அதற்கு பதில் சொல்லாமல், “அப்பாகிட்ட பேசு. போ” என்றான்.
இறுதியில் நாச்சி செல்வத்திற்காக அவளின் அப்பாவின் கை பிடித்தாள்.
“அவரை வெளியே கொண்டு வந்துடுங்க” என்றாள் கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன்.
“ஏங்க. அவ தான் கேட்கிறா இல்லை, செய்ங்க. அந்த பாவம் நமக்கு வேணாம்” என்றார் அவரின் மனைவி.
“சரி வெளியே எடுக்கிறேன். ஆனா உன் மக இனி அவன் பக்கமே போக கூடாது” என்று நிபந்தனை விதித்தார்.
நாச்சி இதை எதிர்பார்த்தே இருந்தாள். கோவம் கொதித்து கொண்டு வந்தது. “நீங்களா இப்படிப்பா? அவரை சிக்க வைச்சு என்னை கண்ட்ரோல் பண்ண பார்க்கிறீங்க” என்று கேட்டாள்.
“ஆமா அப்படி தான். நீ பிடிவாதமா நின்ன, விட்டா அவனோட போயிருப்ப. அதுக்கு தான் இந்த செக்”
“நீங்க மாட்ட கூடாதுன்னு அவரை மாட்டிவிட்டிருக்கீங்க. நீங்க தான் உள்ள போயிருந்திருக்கணும். உங்க ஆளுங்க எல்லாம்”
“அது அவனுக்கு தெரியாதே. அப்பறம் எப்படி எங்களை சொல்வான்?” என்றார் நாராயணன்.
செல்வத்திற்கு எதுவும் தெரியாது என்பது தான் இவர்களின் பலமே.
ரவி “அவனுக்கு தெரியும்” என்றான்.
நாராயணன் அதிர்ந்து போனார். “என்னடா சொல்ற?” என்று கேட்டார்.
“நான் தான் சொன்னேன். எதுக்கு உள்ள இருக்கோம்ன்னே தெரியாம நரகத்துல இருக்கான். எப்படி விட சொல்றீங்க?” என்று கத்தினான் மகன்.
செல்வத்தின் உடல் நிலை மிகவும் மோசமாக, ரவி போராடி அவனை சந்தித்தான். யாருக்கும் தெரியாமல் ஒரு அதிகாரி மூலம் மருத்துவமனையில் பார்த்தான். எல்லாம் சொன்னான்.
கண்களுக்கு கீழ் கருவளையம் வந்து, உயிரற்ற கண்களுடன் படுத்திருந்தவனை பார்த்ததும் ரவி தன்னை மீறி அழுதான். “மாப்பிள்ளை மாப்பிள்ளை” என்றான்.
செல்வத்திற்கு பேச்சே இல்லை. பேசி பேசி ஓய்ந்திருந்தான். ரவி ஒரு முடிவோடு, அக்கம் பக்கம் பார்த்தபடி மெல்ல செல்வத்திடம், “அந்த சொத்து யாரோடது தெரியுமா?” என்று கேட்டான்.
“நம்ம ஊர் மினிஸ்டரோட பினாமி சொத்துடா அது. அதை போய்”
“கொஞ்சம் கெஸ் பண்ணேன் மச்சான்” செல்வம் வாய் திறந்தான்.
“அப்பறம் ஏண்டா?” ரவி அங்கலாய்த்தான்.
“இவங்களே நேர்ல போகாம ஆளைங்களை விட்டு மிரட்டி தான் அந்த சொத்தை வாங்கினாங்க. சொத்துக்கு சொந்தக்காரன் அப்போ பயந்து ஓடிட்டு, இப்போ எதிர்கட்சிக்காரனோட சேர்ந்துக்கிட்டு கேஸ் கொடுத்துட்டான்” என்றான் ரவி.
“இரண்டு நாள் முன்னாடி, வெள்ளிக்கிழமை தான் எனக்கு இப்படின்னு நியூஸ் வந்துச்சு. முன்ன சொத்து எழுதிகிட்டவன் சுத்தமா ஸ்ட்ராங் இல்லை. கண்டிப்பா அப்பாவை கை காமிச்சிடுவான்னு தான் அண்ணாச்சிகிட்ட போனோம். அவர் பிளான் பண்ணி உன் தலையில மொளகா அறைச்சிட்டார்”
“அந்த அமைச்சர் இந்த பக்கம் கூட திரும்ப மாட்டார். இவங்களுக்கும் அவர் தான்னு தெரியும். தெரிஞ்சும் உன்னை தான் குடையறானுங்க. உன் வாயால அவர் பேரை சொல்ல வைக்க தான் இந்த பாடு” என்றான்.
புரிஞ்சது எனும் படி செல்வம் தலையாட்டினான்.
மகன் சொல்ல சொல்ல நாராயணன் திகைத்து போனார். சில மணித்துளி தான், “அப்படியே அவன் சொன்னாலும் நிரூபிக்க ஆதாரம் இல்லை” என்றார் மனிதர்.
“நீங்க, அண்ணாச்சி அவன்கிட்ட பேசினது எல்லாம் வீடியோவோட இருக்கு. நாச்சிக்காக. அவ பேர் வெளியே வர கூடாதுங்கிறதுக்காக அமைதியா இருக்கான்” என்றான் ரவி.
“சரி அப்படியே இருக்கட்டும். இப்போ உன் தங்கச்சி அவனுக்காக என்ன செய்றான்னு பார்க்கலாம்” என்றார் மனிதர்.
ரவி, தங்கையிடம் வந்தவன், “இது நம்மால ஹாண்டில் பண்ண முடியாது. அந்த அமைச்சர் மனசு வைக்கணும். அதுக்கு இவங்க சொல்லணும். புரியுதா?” என்றான்.
நாச்சி வெடித்து வந்த அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
“எனக்கு வாய் திறந்து சொல்லணும்” என்றார் தந்தை.
நான் தைரியசாலி தான் என்ற அவளின் ஆணிவேர் அங்கு அறுந்து விழுந்தது. அவளின் பலத்தை அவளின் தந்தையே உடைத்திருந்தார். நெஞ்சம் இறுகி விம்மி வலிக்க, வலிக்க, “சரி” என்றாள் முத்து நாச்சி.
“மாற கூடாது. மாறவும் முடியாது. அவன் மேல் அந்த கேஸ் காலத்துக்கும் இருந்தே இருக்கும்” என்ற கட்டளையுடன் நாராயணன் கிளம்பி சென்றார்.