“இப்போ வந்த நாச்சிக்காக என்கிட்ட பேச முடியுது. எனக்காக என்கிட்ட பேச முடியாது இல்லை”
“உன்கிட்ட என்னன்னு பேச சொல்ற? என்னை படின்னு தலைப்பாடா அடிச்சுகிட்ட நான் கேட்கலை. நல்ல வேலைக்காவாவது போன்னு சொன்ன, அதையும் கேட்டுக்கலை. அட்லீஸ்ட் அண்ணாச்சி கூடவாவது சேராதன்னு சொன்ன, இப்போ வரையும் அவர்கூட தான் இருக்கேன். அப்புறம் என்னன்னு உன்கிட்ட பேச?”
“சரி இப்போ சொல்றதையாவது கேட்டுப்பியா?” ரவி கேட்க,
“தெரியலை” என்றான் செல்வம்.
“உஷாரு”
“என்ன மச்சான், கேட்டேனே?” செல்வம் அவன் பக்கம் திரும்பி அமர்ந்து எதிர்பார்ப்போடு பார்த்தான்.
ரவிக்கு அவனின் எதிர்பார்ப்பில் மனது சோர்ந்தது. இவனிடம் என்ன பேசுவது, எப்படி சொல்வது என்று திணறினான்.
செல்வம் தோளை குலுக்கியவன், “வேணாம்ன்னு சொல்ல போனவனை யோசிக்க வைச்சிட்டா, கொஞ்சம் ஆசையும் வர வைச்சுட்டா!” என்றான்.
ரவிக்கு மனம் கனத்து தான் போனது. “புரிஞ்சுக்கோ மாப்பிள்ளை. உங்க இரண்டு பேர் நல்லதுக்காக தான் வேணாம்ன்னு சொல்றேன்”
“அதுக்கு நீங்க அண்ணனை அண்ணிகிட்ட பேச அனுப்பியே இருக்க கூடாது”
“அண்ணியா. டேய்”
“மச்சான் மேட்டருக்கு வாங்க”
“வெளுத்திடுவேன். உங்க நொண்ணன் இப்படி ஒரேடியா குப்புறக்கடிச்சு விழுவான்னு எனெக்கென்ன தெரியும்”
“அண்ணி ரொம்ப ஸ்ட்ராங்க். அவங்களை சமாளிக்க முடியாம தானே இதெல்லாம்” மணி கண்டுகொண்டவனாக கேட்டான்.
ரவி, “அது. அதெல்லாம் இல்லையே. வீட்ல கொஞ்சம் அப்பா செல்லம் அவ, அப்பாக்கு அவ மேல எக்கச்சக்க பெருமை. படிப்பு, வேலை குணம்ன்னு எல்லாம். ஆனா இப்போ இவன் விஷயத்துல தான் என்னமோ? இப்போவரை இந்த மாதிரி எல்லாம் பண்ணதே இல்லை. அப்பா அவளுக்கு பெரிய சம்மந்தம் பார்க்க, அவ இவனை கை காட்டுறா”
“அண்ணிக்கு நல்லவங்களை கண்டுபிடிக்க தெரியுது”
“எங்க அப்பா அப்படி நினைக்கலை. இவன் தான் ஏதோ பண்ணி அவரோட மக மனசை கலைச்சிட்டான்னு நினைக்கிறார்”
“உனக்கும் தானே என்மேல அந்த கோவம் இருக்கு” செல்வம் கேட்க,
“ரொம்ப பண்ணாதடா. நீ அப்படி இல்லைன்னு எனக்கு தெரியும்” என்றான் ரவி.
“அப்புறம் எதுக்கு வேணாம்ங்கிறீங்க” மணி கோபத்துடன் கேட்டான்.
“சரி வராதுடா. எங்க அப்பா, அவர். ம்ப்ச்”
“நீயும் நான் அவளுக்கு பொருத்தமில்லைன்னு தானே சொன்ன” செல்வம் சொல்ல,
“டேய் நான் அவளுக்கு அண்ணன்டா, அவ லைப் மேல எனக்கு அக்கறை இருக்காதா? க்கும். நீ உங்க வீட்ல கூட இப்போ இல்லை. இங்க இந்த டீ கடைல இருக்க. நான் வசதி கூட எங்களுக்கு சமமா வேணும்னு சொல்லலை. ஆனா இருக்க வீடு கூட இல்லாம”
“போதும்டா” செல்வம் அடைத்த மனதுடன் நிறுத்தினான். தயங்கியதும் இதற்கு தானே? ஆனாலும் நண்பனே சொல்லும் போது நிச்சயம் ஆழமாகவே வலித்தது.
“மச்சான். நீங்களா இப்படி, உங்ககிட்ட சத்தியமா நான் இதை எதிர்பார்க்கலை” மணிக்கு அவ்வளவு வருத்தம்.
“மணி. ஏண்டா, என் தங்கச்சிக்கு நான் நல்லது நினைக்க கூடாதா? செல்வம்.. இவன் நல்லவன்டா, ஆனா அது மட்டுமே தகுதின்னு ஆகிடாது. கொஞ்சமாவது பணம், படிப்பு, வேலைன்னு. மூணுமே இல்லேன்னா கூட ஓகே, ஏதாவது ஒன்னு கூட இல்லைன்னா எப்படி?”
செல்வத்திற்கு இது பழகியது தான். இதற்காக எல்லாம் அவன் வருத்தம் கொண்டதும் இல்லை. இந்நாள் வரை. ஆனால் இன்று, இந்த நொடி?
அவள் மேல் கொண்ட சிறு ஆசை, ஏக்கம் எல்லாம் முளைத்த வேகத்திலே வாடியும் போகுமா?
“மாப்பிள்ளை” ரவி அவனை தொட வர, நான் ஓகே என்று கை காட்டி தலை அசைத்தான்.
அதிலே அவன் நிலை புரிந்து கொண்ட ரவிக்கும் வேதனையே. சரியாக அவன் தங்கை அவனை போனில் அழைத்தாள்.
எடுக்காமல் விட, திரும்ப அழைத்தாள். ரவி போன் எடுக்க, “உன் ப்ரெண்ட் ஒன்னுமே சொல்லாம போயிட்டார்” என்றாள் அவள் எடுத்ததும்.
பக்கத்திலே இருந்த செல்வத்திற்கும் அவள் குரல் நன்றாகவே கேட்டது.
“நாச்சி. இதென்ன? பேச கேட்ட, அவனும் வந்தான். ஒன்னுமே சொல்லாம போயிட்டான்னு பிடிக்கலையா இருக்கும்”
“இல்லை அவருக்கு பிடிச்சிருக்கு”
செல்வத்திற்கு அவளில் பதிலில் கொஞ்சம் ஜெர்க்கென்று ஆனதுடன், தன்னை கண்டுகொண்டதில் ஆச்சரியமும்.
ரவி அவனை கவனித்தவன், “நாச்சி. ஒருத்தர் வேணாம்ன்னு சொன்னா விலகி போறது தான் சரி” என்றான் அழுத்தமாக.
அது தனக்கும் என்பது செல்வத்திற்கு நன்றாகவே புரிந்தது.
“அவர் வேணாம்னு எல்லாம் சொல்லிட்டு போகலை”
“நாச்சி. நான் சொல்றேன், இது சரி வராது, ஒழுங்கா இதெல்லாம் விட்டுட்டு வேலையை பாரு”
“ஒழுங்கான்னா. என்ன சொல்ல வர இப்போ நீ” நாச்சி குரல் பாய்ந்து வந்தது.
“வேலையை பாருன்னு சொன்னேன். உனக்கு எப்படி லைப் செட்டில் பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்”
“எனக்கு நீ இன்னமும் ஒழுங்கா சொன்னதுக்கு பதில் வரலை. அப்படி ஒழுங்கில்லாம நான் என்ன பண்ணிட்டேன். அவரோட ஓடியா போயிட்டேன், இல்லை திருட்டு தனமா கல்யாணம் பண்ணிக்கிட்டேனா?”
“நாச்சி”
“ஒழுங்கா இருக்க போய் தான் என் விருப்பத்தை உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன். உங்க சம்மதத்தை கேட்டுட்டு இருக்கேன்”
“நாச்சி. பொருந்தாத பேச்செல்லாம் பேசாத”
“எனக்கு பொருந்துதா இல்லையான்னு நான் தான் சொல்லணும்”
“அண்ணனா நானும் சொல்லலாம். நீ போனை வை. நான் வீட்டுக்கு வந்து பேசிக்கிறேன்” என்று வைத்துவிட்டவன்,
“மாப். செல்வா அவளோட பிடிவாதத்துல தான் உன்னை பேச சொன்னேன். ஆனா நீ. சரி விடு. இத்தோட இதை முடிச்சிக்குவோம். நான் கிளம்புறேன்” என்று கிளம்பிவிட்டான்.
“என்னண்ணா இது?” மணி அங்கலாய்த்து கொண்டான்.
“படிப்பில்லை, பணமில்லை, வேலையில்லை, வீடில்லை, குடும்பமும்மில்லை. எதுவுமே இல்லை என்கிட்ட. அவன் சரியா தான் சொல்றான் மணி”
“ண்ணா”
“உண்மையை ஒத்துக்கணும் சுப்பு. ஒண்ணுமில்லாதவனுக்கு கல்யாணம் எல்லாம் கேட்குதா?”
“ண்ணா என்ன பேசுற நீ? உன் பங்கு சொத்து அப்படியே தானே இருக்கு. பெரியப்பாகிட்ட கேட்டு”
“கேட்டு. அது என்ன என்னோடதா? நான் சம்பாரிச்சுதா? ஏதோ எங்க தாத்தா சேர்த்து வைச்சு போயிட்டார். அந்த வீட்ல என் அம்மா மட்டும் தான் எனக்குன்னு இருந்தது. அவங்களே இல்லன்னும் போது அந்த வீடும் எனக்கு இல்லாம தான் போயிடுச்சு”
அண்ணாச்சி போன் வர, “இது ஆறாவது போன்ண்ணா” என்றான் மணி.
“இவர் ஏன் இப்படி விடாம துரத்துறார்ன்னு தெரியலை மணி” என்றவன் போன் எடுக்க உடனே நேரில் வர சொன்னார் மனிதர்.
இருவரும் கிளம்பி செல்ல, “என்ன முடிவு எடுத்திருக்க” என்று கேட்டார். உடன் நாராயணனும் இருந்தார்.
“இது சரி வராது அண்ணாச்சி” என்றான் செல்வம்.
“என்ன சரி வராது?”
“எல்லாம் பண்ணிட்டு இப்போ வந்து சரி வராதுன்னு சொல்ற? உன் வேலை எல்லாம் இங்க காட்டாத” நாராயணன் எகிறினார்.
செல்வத்திற்கு இப்போது கோவம் வந்துவிட, “என்ன வேலை. ஆஹ்ன் என்ன வேலையை காட்டிட்டாங்க?” என்று கேட்டான்.
“நாராயணா. இருப்பா பேசலாம்” அவரை அடக்கினார் அண்ணாச்சி.
“செல்வா கோவப்படாத. அங்க அவர் பொண்ணு நிலையா நிக்கிறதுல கொஞ்சம் கோவம் அவருக்கு. நீ எனக்கு சொல்லு ஏன் சரி வராது”
“எதுவுமே தான் அண்ணாச்சி. உங்களுக்கு தெரியாதா, என்கிட்ட எதுவும் இல்லை”
“அது தான் விஷயம்ன்னா நாம அதை உடனே சரி பண்ணிடலாம்” அண்ணாச்சி சட்டென உற்சாகம் கொண்டுவிட்டார்.
செல்வமும், மணியும் அவரை வித்தியாசமாக பார்க்க, நாராயணன் அவரை கண்களால் அதட்டினார்.
“அது. நாராயணனுக்கு..க்கும். அவர் பொண்ணு எனக்கும் பொண்ணு மாதிரி தானே, அதான். நீ சொல்லு, உனக்கு அதான் குறைன்னா நாம சரி பண்ணிடலாம்” என்றான் அண்ணாச்சி சுதாரித்து.
“வேணாம் அண்ணாச்சி. விட்டுடுங்க”
“அங்க. அவர் பொண்ணு உன்னை தான் கட்டுவேன்னு நிக்கிறா”
“அதெல்லாம் இவங்க பார்த்துப்பாங்க”
“செல்வா நான் தான் சொல்றேன்ல. அவர் பொண்ணுக்கு அவங்கன்னா, உனக்கு நான் இல்லையா, உனக்காக நான் பார்க்க மாட்டேனா? நீ இப்படி வா, வந்து உட்காரு” என்று அவனை தன் பக்கத்திலே அமர வைத்து கொண்டார்.
“நானே பேச வர போய் தான் இவன் இவ்வளவு பண்றான். என் பொண்ணை வேணாம்ன்னு சொல்ற அளவுக்கா துரை இருக்கார்? கோபுரம் நிழல் பட கொடுத்து வைச்சிருக்கணுமே தவிர, கோபுரமே வேணும்ன்னு வேலை பார்த்துட்டு இப்போ என்ன?” நாராயணன் மட்டம் தட்ட பார்த்தார்.
“நான் யார்ங்கிற தெளிவு எனக்கு இருக்க போய் தான் என் எல்லையில நிக்க பார்க்கிறேன். உங்க கோபுரத்தை நீங்களே வைச்சுக்கோங்க. நிழல் கூட எனக்கு வேணாம்ன்னு தான் சொல்றேன்” என்றான் செல்வமும் கோவமாக.
“நாராயணா. நீ பேசாம இருப்பா. நீயும் உன் மகளுக்காக தான் செல்வத்துக்கிட்ட வந்திருக்க, மறந்திடாத” என்று அதட்டலிட்ட அண்ணாச்சி,
“செல்வா அவரை விடு, நீ விஷயத்துக்கு வா. ஏன் சரிவராதுன்னு சொல்ற. உன் அம்மா எங்களுக்கு ஒன்னுவிட்ட தங்கச்சி. முதல்ல எல்லாம் சரிசமமா தான் இருந்தோம். இப்போ எங்க புத்தியால மேல வந்திருக்கோம் அவ்வளவு தான். மத்தபடி நீயும் எங்களுக்கு உறவு தான், அதனால தான் என்கூடவே உன்னை வைச்சுகிட்டேன்”
“அதென்ன ஒன்னுமில்லை சொல்ற, உனக்கும் சொத்து இருக்கு தானே, என்ன உங்கப்பா தர மாட்டேங்கிறாரா சொல்லு, அவரை ஒரு கை பார்த்துடலாம்”
“அண்ணாச்சி. அவரை எதுக்கு இதுல இழுத்துகிட்டு, சொத்து எல்லாம் பேச வேணாம்”
“சரி விடு. உனக்கு அது வேண்டாம்ன்னா நாம வேற செய்யலாம்”
“இல்லை அண்ணாச்சி, நான் தான் சொல்லிட்டேனே. வேணாம்ன்னு”
அண்ணாச்சி, நாராயணன் முகம் பார்த்து கொள்ள, மணி இடையிட்டு, “அண்ணனுக்கு இஷ்டம் அண்ணாச்சி. ரவி மச்சான் தான் வேண்டாங்கிறாங்க” என்றுவிட்டான்.
“அவ்வளவு தானே. ரவியை நான் பார்த்துகிறேன். நாம மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்த்துக்கலாம்” அண்ணாச்சியிடம் மகிழ்ச்சி.
செல்வத்திற்கு ஏனோ மனது ஒன்றவில்லை. எங்கோ இடறியது. அதனாலே அவன் முடிவிலே நிற்க, அண்ணாச்சி பேசியது எல்லாம் அவன் காதிலே ஏறவில்லை.
பெரியவர்கள் திணற, மணி அண்ணனை தனியே அழைத்து வந்தவன், நாச்சியை நினைவு படுத்தினான்.
“அவங்களுக்கு உன்னை பிடிச்சிருக்கு. அண்ணி ரொம்ப நல்ல மாதிரியா இருக்காங்க. கண்டிப்பா உன் லைஃபை அவங்க மாத்தி வைச்சிடுவாங்க, நீயும் குடும்பம், குழந்தைங்கன்னு சந்தோஷமா இருக்கலாம், யோசிண்ணா”
“உனக்காக வீட்டை எதிர்த்து அவங்க போராடும் போது நீ இப்படி பண்ணலாமா? முதல்ல தான் பிடிக்கலை, இப்போ பிடிக்கும் போதும் வேணாம்ன்னு சொல்றது தப்புண்ணா. அவங்களுக்காக, உனக்காக சரி சொல்லுண்ணா, பார்த்துக்கலாம்” என்றான்.
ரவி பேச்சில் தனக்குள்ளே புதைத்து வைத்த விருப்பத்தை, மணி தோண்டி மேலேற்றிவிட்டான். செல்வத்திற்கு திரும்ப நாச்சி மீதான தன் சிறு ஆசை முளைவிட்டது.
நான் எப்படின்னு தெரிஞ்சு தானே விருப்பம் வைச்சிருக்கா. நான் ஏமாத்தலை தானே? இப்போ என்ன அவளுக்காக என் தகுதியை கொஞ்சம் வளர்த்திட்டு கூட கல்யாணம் பண்ணிக்கலாமே?
சட்டென ஒரு வெளிச்சம். முகமும் மலர்ந்து கொண்டது.
அண்ணாச்சியிடம் சம்மதம் சொல்லிவிட்டான். அண்ணாச்சி இவனை கட்டியணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.
நாராயணன், “நாளைக்கு காலையில ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்துடு” என்றார்.
ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு ஏன்? செல்வம் கேள்வியாக பார்த்தான்.