செல்வம் கிளம்பி கொண்டிருக்க, அரக்க பறக்க ஓடி வந்தான் ரவி.
“மாப்பிள்ளை. நானும் வரேன். போயிடலாம்” என்று நின்றான்.
செல்வத்துக்கு யோசனை. எதற்கு வர சொல்லியிருப்பார்கள் என்ற அனுமானம் உண்டு.
அங்கு ரவி வருவது, அவனுக்கு எந்தளவு பாதுகாப்பு என்று செல்வத்திற்கு தெரியவில்லை.
எனவே, “நீ வேணாம் மச்சான். நான் பார்த்துகிறேன்” என்றான்.
“இல்லை. நான் வரத்தான் செய்வேன். நீ கிளம்பு. நான் கார் ஸ்டார்ட் பண்ணி வைக்கிறேன்” என்று சென்றான் ரவி.
முடிவோடு வந்திருக்கிறான் என்று தெரிந்தது. சரி கிட்ட போய் இவனை நிறுத்திக்கலாம் என்ற எண்ணத்தில் செல்வம் அவனுடன் கிளம்பினான்.
சுப்பிரமணி அவர்களை வழியனுப்ப வர, செல்வம் காரை விட்டு இறங்கி தம்பியிடம் வந்தவன், “பார்த்துக்கோ” என,
மணியும் எப்போதும் போல், “சரிண்ணா. நீ பார்த்து போய்ட்டு வா” என்றான். எங்கு செல்கிறான் என்றெல்லாம் தெரியாது.
செல்வம் நொடி தம்பியை பார்த்து, சட்டென அணைத்து கொள்ள, “என்னண்ணா. ண்ணா” என்று மணி புரியாமல் விழித்தான்.
“சும்மாடா. நீ பார்த்துக்கோ. பத்திரம்” என்று செல்வம் கிளம்ப, மணிக்கு சந்தேகம் வந்துவிட்டது.
உடனே அண்ணனுக்கு போனில் அழைக்க, செல்வம் தலையில் தட்டி கொண்டான். அவனை கலவர படுத்திட்டோமோ?
“என்னடா. வேலை எதுவும் இல்லையா? நான் கிளம்பினதும் போன் எல்லாம் வருது. எனக்கு தான் கூப்பிட்டியா? வந்து பேசிக்கிறேன் உன்னை” என்று அதட்டி பேச, மணி கொஞ்சம் தெளிந்தான்.
“ஒன்னுமில்லைண்ணா. அது பால் கணக்கு செட்டில் பண்ணனும் அதான்” என்றான் தம்பி.
“ஏன் உனக்கு தெரியாதா. பண்ணுடா” என்று வைத்துவிட்டான்.
அவர்கள் ஊர் எல்லைக்குள் கார் செல்ல, முத்து பெண் உள்ளுக்குள் குடைந்தாள். அவளை சென்று பார்க்க எல்லாம் முடியாது. பார்த்தால் கிளம்ப கூட மாட்டான்.
ரவி தான் பதட்டத்துடன் கார் ஓட்டி கொண்டிருக்க, “நீ இறங்கு நானே ஓட்டிக்கிறேன்” என்றான் செல்வம்.
“நீ வாயை மூடு. நானே பார்த்துகிறேன்” என்று கத்தினான் ரவி.
“என்னடா குரல் ஏறுது” செல்வம் கேட்க,
“பேசாத. நீ பண்ண ஆகாத வேலையை கண்டுபிடிச்சுட்டாங்களோன்னு இருக்கு” ரவி கொஞ்சம் அச்சத்துடனே சொன்னான்.
“கண்டுபிடிச்சிருப்பாங்க. ஆனா எதுன்னு தான் தெரியலை”
“எதுன்னா, அப்போ நிறைய பண்ணியிருக்கியா?” ரவி திகிலாக கேட்க,
“முன்னாடி பார்த்து கார் ஓட்டுடா. என் பொண்டாட்டிக்கு புருஷன் ரொம்ப முக்கியம்” என்றான் செல்வம்.
“நாச்சி” என்று தங்கையை நினைத்து அண்ணன் இன்னும் கவலை கொண்டான்.
“அவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் என்கூட இருக்க தேவையில்லை. நான் இறங்கிக்கிறேன்” என்று செல்வம் ஓடும் காரின் கதவை திறக்க போக,
“டேய். டேய். நான் இனி வாயை திறக்கவே மாட்டேன். நீ மிரட்டாம வாடா” என்று ரவி பாதையில் கவனம் வைத்தான்.
அடுத்த ஓரிரு மணியில் அகிலன் சொன்ன இடத்துக்கு நெருங்கிவிட்டனர். “நிறுத்து. டீ குடிச்சிட்டு போலாம்” என்று செல்வம் சொல்ல, ரவியும் நிறுத்தி இறங்கினான்.
இருவரும் டீ குடித்து முடிய, “நான் பார்த்துகிறேன். நீ ஊருக்கு போய் சேரு” என்று அங்கிருந்த ஆட்டோவில் சட்டென்று கிளம்பிவிட்டான் செல்வம்.
“மாப்பிள்ளை. மாப்பிள்ளை, டேய்” என்று ரவி கத்தியதெல்லாம் வீண்.
இவன் தனியே சென்றால் உள்ளே விட கூட மாட்டார்கள் என்று புரிந்து கொண்ட ரவி, அங்கேயே காத்திருக்க ஆரம்பித்தான்.
அவர்களின் கட்சியின் தலைமை அலுவலகம். தொண்டர்கள் அதிகளவில் இருக்க, பேச்சு சத்தத்துடன் அந்த இடமே பரபரப்பாக இருந்தது.
செல்வத்திற்கு சொன்னபடி, பொறுப்பாளரை தேடி சென்றான். அவர் இவனை மேலும் கீழும் பார்த்து, கட்டிடத்தின் மேல் மாடிக்கு அழைத்து சென்றார்.
“இங்க இருங்க” என்று ஓர் அறையை திறந்துவிட்டவர், அதோடு கிளம்பிவிட்டார்.
செல்வம் காத்திருக்க ஆரம்பித்தான். மணி நேரங்கள் கடந்தது. தண்ணீர் இருக்க குடித்து தொண்டையை நனைத்து கொண்டான்.
இடையில் இரண்டொரு முறை முத்து பெண்ணிடம் இருந்து மெசேஜ் வந்தது.
மணி சொல்லியிருப்பான் போல. “எங்க போயிருக்கீங்க. அண்ணாவும் போன் எடுக்கலை” என்று அனுப்பியிருந்தாள்.
“வந்து சொல்றேன். நீ பார்த்து வீட்லே இரு” என்று அனுப்ப,
“என்ன, ஏன் வீட்லே இருக்கணும்? ஏதாவது விஷயமா? நீங்க முதல்ல எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க” படபடப்பு கொண்டாள் பெண்
“நான் வந்து சொல்றேன்னா சொல்லுவேன். பொறுமையா இரு” என்று அனுப்பிவிட்டான்.
முத்து பெண்ணுக்கு மனது கேட்கவில்லை. சில நிமிடம் சென்று கணவனுக்கு அழைக்க, “இப்போ தான் பேச கூப்பிடுவா, இத்தனை நாள் ஊமை படம் ஓட்டிட்டு, போடி” என்று எடுக்கவில்லை.
எடுத்து என்ன சொல்ல என்ற யோசனை. “போன் எடுங்க” என்று மெசேஜ் வர,
“நாச்சி. இருன்னா இருக்கணும்” என்று அழுத்தமான குரலோடு நோட் அனுப்பியவன், அதோடு போனை தள்ளி வைத்தும்விட்டான்.
மாலையும் ஆகிவிட, கட்சி அலுவலகத்திலே அந்ததந்த நேரத்துக்கு உணவு, டீ குடித்து அந்த அறைக்கே திரும்பினான்.
இருளும் சூழ்ந்து, அலுவலகமும் அடங்க ஆரம்பித்தது. இரவுகள் அவனுக்கு எப்போதும் கசப்பையே பரிசளித்திருக்க, தானே ஒரு டென்க்ஷன்.
‘என்னால முடியும். சமாளிக்க முடியும்’ தனக்கு தானே மந்திரம் போல் சொல்லிக்கொண்டான்.
சாமானியனுக்கும், சாம்ராஜ்யத்துக்குமான வித்தியாசம் நன்றாக தெரிந்தவன்.
தைரியம் மட்டுமே இப்போது கை கொடுக்கும் என்பதிலும் உறுதி கொண்டவன்.
வெளியே ஏதோ பேச்சு சத்தம் கேட்க, மொபைல் எடுத்து நேரம் பார்த்து கொண்டான்.
“தம்பி உங்களை வர சொன்னாங்க” என்று ஆள் வர, செல்வம் மூச்சை இழுத்துவிட்டு சென்றான்.
பெரிய அலுவலக அறை காலியாக இருக்க, “இங்க” என்ற குரலில் திரும்பி பார்த்தான்.
நடுவயதில் வெள்ளை வேட்டி, சட்டையில் பளிச்சென இருந்தார். முதன் முறை நேரில் பார்க்கிறான்.
அதிகாரத்திற்கான தோரணையில் இருந்தவருக்கு,”வணக்கம்” என்று கை குவித்தான்.
“உட்காருங்க” என்று இருக்கையை காட்ட, மறுத்து நின்றான்.
அவருடன் இருந்த உதவியாளன், ஏதோ சொல்ல கேட்டு கொண்டார்.
செல்வத்திற்கு அந்த அமைதி, அறை, எதிரில் இருக்கும் ஆள் எல்லாம் மாயை போல் தான் இருந்தது.
திடமாக நின்றவனை பார்த்தபடி அவரின் இருக்கைக்கு சென்ற தலைமை, “ஏன் சொத்து வேணாம்ன்னு நினைச்சீங்க?” என்று முதல் கேள்வி கேட்டார்.
“என்னோட விருப்பம் இல்லாம நடக்கிற விஷயங்கள். எனக்கு நான் மட்டும் தான். இதுல எல்லாம் தலை கொடுக்கிற அளவும் நான் இல்லை சார்” என்றான் செல்வம்.
“என்ன சொல்லி உங்களை உள்ள இழுத்து விட்டாங்க” அவர் கூர்மையாக கேட்க,
“நானும் என் மனைவியும் காதலிச்சோம். அவளை கல்யாணம் பண்ணிக்க கேட்டப்போ வைச்ச நிபந்தனை” என்றான் செல்வம்.
“ஓஹ்” என்றவர் அவரின் உதவியாளரை பார்க்க, “இவரோட மாமனார் தான் நாராயணன்” என்றார் அவர்.
புரிந்தது எனும் விதமாக தலையசைத்தவர், “இப்போவும் அவர் பொண்ணை நம்ம அமைச்சர்” என்று நிறுத்த, உதவியாளர் ஆமாம் என்றார்.
“உங்க மனைவிக்காக இந்த முறையும் ஒத்துக்கிட்டிருக்கீங்க. ஆனா ஏன் வெளியே லீக் பண்ணீங்க?” என்று கேட்டார்.
இவர்களின் உளவுதுறை பற்றி செல்வத்திற்கு நன்றாக தெரிந்து தானே இருந்தது. அதிர்ச்சி எல்லாம் இல்லை. எதிர்பார்த்து செய்தவை தான் எல்லாம்.
எனவே, “இது ரொம்ப பெரிய பொறுப்பு. கட்டாயத்துல செய்றது? இதே அண்ணாச்சின்னா உங்களுக்காக உயிரை கூட கொடுப்பார். எனக்கு வரதை விட அவர் கைக்கு போனா இன்னமுமே பாதுகாப்புன்னு நினைச்சு தான்” என்றான்.
“அவர்கிட்ட இருக்கிறதை விட, உன்கிட்ட இருக்கிறது சேஃப் தான் செல்வம்” என்றார் தலைமை.
“அண்ணாச்சி பின்னாடி நிறையவே அடிப்பார். கூட அவருக்கு இந்த ரிஸ்க் எல்லாம் கூடாது. தெரிஞ்சு தானே அவரை சிக்க வைச்ச?” அவர் மிதப்பாக கேட்டுவைத்தார்.
செல்வம் மௌனம் காத்தான். “உன்னை செஞ்சதுக்கு அவருக்கு செஞ்சுட்ட. ஆனா நீ எனக்கு பண்ணது தப்பு. லீக் ஆன விஷயம் பெருசா போயிருந்தா” அவர் கேட்டு நிறுத்த,
“நான் தான் திரும்ப மாட்டியிருப்பேன். கடைசி வரையிலும் கூட” என்றான் செல்வம் நிமிர்வாகவே.
தலைமையிடம் லேசான புன்னகை.”எங்க பேர் நிச்சயம் வெளியே வராதுன்னு தெரியும். ஆனாலும் இது தப்பு. என்ன பண்ணலாம்?” அவனிடமே தீர்ப்பை கேட்க,
செல்வம் நொடி யோசித்து, “திரும்ப உங்க கண் பார்வையிலே படாத தூரம் என்னை தள்ளி வைச்சிடுங்க சார்” என்றான்.
கனமான அமைதியை தொடர்ந்து, செல்வத்தை பார்த்திருந்த தலைமை “ஹாஹா” என்று நன்றாகவே சிரித்துவிட, அவரின் உதவியாளரும் செல்வத்தை மெச்சுதலாக பார்த்து வைத்தான்.
“அதாவது நீ திரும்ப என்னை பார்க்கவே கூடாதுன்னு சொல்ல வர” அவர் மிச்சமிருந்த சிரிப்புடனே கேட்க.
“இல்லை, இல்லை சார். உங்களை இவ்வளவு கிட்டக்க பார்க்கிறது எல்லாம் பெரிய விஷயம். நான் போய்” செல்வம் மறுக்க,
“நீ கேடி தான்யா. உனக்கான தண்டனையை முடிவு பண்ணிட்டேன்” என்றார் அவர்.
செல்வம் என்னெவென்று கேட்க கூட செய்யாமல் நிற்க, “நீ தான் அந்த தொகுதிக்கான கணக்கு வழக்கு எல்லாம் பார்க்க போற” என்றார்.
“நானா” செல்வத்திற்கு திகைப்பே. “எனக்கு, நான் கணக்குல கொஞ்சம் வீக் சார்” செல்வம் சொல்ல,
“யார் நீயா? அண்ணாச்சி கணக்கை பைசல் பண்ணதிலே தெரியுது” என்றவர், “இனி உன் பேருக்கு எந்த சொத்தும் வராது. பினாமிங்க உன் பொறுப்பு. வருமானமும் உன் பொறுப்பு. அகிலன் சொல்லுவான். ப்ரெண்டு தானே. பார்த்துக்கோ” என்று முடித்துவிட்டார்.
இதுவுமே செல்வத்துக்கு வேண்டாம் தான். ஆனால் அண்ணாச்சி போன்றோரை சமாளிக்க நிச்சயம் தேவைப்படும். அதோடு மறுக்கும் வாய்ப்பும் அவனுக்கு இருப்பதாக தெரியவில்லை. அதுவும் ஒரு காரணம்.
“சரிங்க சார்” என்றான்.
“அப்புறம் இனி மூணு மாசத்துக்கு ஒருமுறை நேர்ல வந்து என்கிட்ட கணக்கு கொடுத்துட்டு போ” என்றார் விஷமத்துடன்.
செல்வம் லேசாக சிரித்தவன், “வரேன் சார்” என்று கிளம்பினான்.