எண்ணிவிடும் நாட்களே மிச்சமிருக்க, செல்வம் அடுத்து என்ன செய்ய என்று பார்த்து கொண்டிருந்தான்.
பத்திர பதிவுக்கு தேவையான அத்தனையும் அகிலன் தான் செய்து கொண்டிருக்க, செல்வம் அதில் மெல்ல உள் நுழைந்தான்.
“இதுக்கு என்ன பண்ற, யாரை கேட்கிற, எவ்வளவு பணம்?” என்று அத்தனை கேள்விகள்.
ஒருவேளை இவன் பயப்படுறானோ என்று நினைத்த அகிலன்,”உனக்கு ஒரு பிரச்சனையும் வராதுடா. எல்லாம் பக்காவா தான் பண்றோம்” என்றான்.
“இந்த சொத்து வாங்க டீ கடை இருக்கிற கட்டிடத்தை அடமானம் வைச்சதா பேப்பர் ரெடி பண்றோம். பணம் எங்கிருந்து வந்ததுன்னு யாரும் உன்னை கேள்வி கேட்க முடியாது” என்றான் விளக்கமாக.
“பேங்க்லவா?” செல்வம் கேட்க,
“இல்லை, வட்டி கொடுக்கிற ஆளுங்க இருக்காங்க. அப்படின்னா தான் டம்மியா ரெடி பண்ண வசதி. கூட அவனும் பணம் கொடுக்கிறதில்லை, நாமளும் வாங்கிறதில்லை. நம்ம சொத்து தானே நமக்குள்ளே கை மாத்த போறோம்” என்றான் அகிலன்.
“ம்ம். சரி. பத்திர பதிவுக்கு ஆளுங்க யார் வரா?” என்று விசாரித்தான்.
“எப்படியும் நம்ம ஆளுங்க மட்டும் தான். ஏன் உனக்கு யாரும் வரணுமா? ரவி, ரவியை எதிர்பார்க்கிறியா?”
“இல்லை. அவனை இதுல இழுக்காத”
“அப்புறமென்ன அவன்கிட்ட அவ்வளவு பேசியிருக்க? அவனோட அப்பாவை மீறி தான் உனக்கு எல்லாம் செஞ்சான். தனியா செய்ற அளவு அவனுக்கு சுதந்திரம் எல்லாம் நாராயணன் கொடுக்க மாட்டார். இன்னைக்கு நாளைக்கு கூட பணம், சொத்து எல்லாம் அவர் கண்ட்ரோல் தான். தெரியுமில்ல” என்றான் அகிலன்.
செல்வம் புருவத்தை நெரித்தவன், “நானும் அவனும் டவுசர் காலத்துல இருந்து இப்படி தான். நீ முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு, யார் யார் வராங்கன்னு லிஸ்ட் கொடு” என்றான்.
அகிலன் ஆட்களை சொல்ல தொடர்ந்த பேச்சு அதை ஒட்டி சென்றது. அந்நேரம் நாச்சி வேகமாக அவர்களிடம் வந்தவள், “அப்பாக்கு ஆக்சிடெண்டாம்” என்றாள் கலங்கிவிட்ட கண்களுடன்.
“ஒன்னுமிருக்காது. நீ தைரியமா இரு” என்று மனைவியை தோளோடு அணைத்து கொண்ட செல்வம், ரவிக்கு அழைத்தான். “ஆமாடா. இந்த ஹாஸ்பிடல்ல இருக்கோம். நீ நாச்சியை கூட்டிட்டு வா” என்று வைத்துவிட்டான் ரவி.
மூவருமாக மருத்துவமனை செல்ல, அழுது கொண்டிருந்த கமலாவிடம் சென்றாள் நாச்சி. ரவி இவர்களிடம் வந்தவன், “அப்பாவா தான் போய் டெம்போல போய் பைக்கை விட்ருக்கார். அந்த ரெஸிஜிஸ்ட்ரேஷன் நிக்கிறதுக்காக” என்றான்.
செல்வம் தலையில் அடித்து கொண்டவன், “உன் அப்பா எப்போவும் இப்படி தானா? இல்லை இப்போ மட்டும் இப்படியா?” என்று கேட்டான்.
“சும்மா இருடா. நீ வேற. நல்ல அடி, என்ன சொல்ல போறாங்களோன்னு இருக்கு” என்று ரவி மருத்துவரை தேடி சென்றான்.
“நல்ல மாமனார் இல்லை உனக்கு” அகிலன் சொல்ல,
“ரொம்ப நல்ல்ல மாமனார்” என்றான் செல்வம்.
அவருக்கான வைத்தியம் முடிய, “பயப்படுற அளவு ஒன்னுமில்லை. கால் சரியாக இரண்டு வாரமாவது ஆகும், பார்த்துக்கோங்க” என்றார் மருத்துவர்.
வீட்டினரும் சென்று நாராயணனை பார்த்தனர். கமலா கணவர் கை பிடித்து கண்ணீர் விட, “என்னப்பா?” என்று மகள் அவரின் அடிபடாத தோளை பிடித்து கொண்டாள்.
“எனக்கு ஒன்னுமில்லை. இது சரியாகிடும். நீ அழுகுறதை நிறுத்து. அவ்வளவு எல்லாம் இல்லை” என்று மனைவி, மகளிடம் சொன்னார்.
ரவி தான் அவரை கண்டனமாக பார்த்திருந்தான். அம்மாவும், தங்கையும் வெளியே செல்ல காத்திருந்து, “ஏன்ப்பா?” என்று கோவம் கொண்டான்.
“உங்களுக்கு அந்த ரெஜிஸ்ட்ரேஷன் நடக்க வேணாம்ன்னா வேற எதாவது பார்த்திருக்கலாம். இப்படி யாராவது ரிஸ்க் எடுப்பாங்களா?” என்று நொந்து கொண்டான்.
“அவங்களை பத்தி உனக்கு தெரியாது. நீ இதை விட்டு அகிலன்கிட்ட பேசு. ரெஜிஸ்ட்ரேஷனுக்கு நான் வர முடியாதுன்னு சொல்லு” என்றார்.
“நீங்களே சொல்லுங்க. வெளியே தான் இருக்கான்” என்று அகிலன், செல்வத்தை உள்ளே அழைத்தான்.
நாராயணன் மிகவும் முடியாதவர் போல், “ரொம்ப அடி. பேச கூட முடியலை. தலை எல்லாம் சுத்துது. யாரும் தெளிவா தெரியலை” என்றார்.
நண்பர்கள் முகம் பார்த்து கொண்டதுடன், ரவியை கடுப்புடன் முறைத்தனர். “இவ்வளவு நேரம் உங்க பேச்சு வெளியே வர கேட்டுச்சு” என்று அகிலன் சொல்லிவைத்தான்.
“அது. மகனை பார்த்ததும். பாரு கை கூட அசைக்க முடியலை. டாக்டர் ஒரு மாசத்துக்கு ஹாஸ்பிடலை விட்டு நகர கூடாது சொல்லிட்டாங்க” என்றார்.
அகிலன் அவரை கூர்மையாக பார்க்க, “ம்ம்ஹமா. முடியலை. வலிக்குது. டாக்டரை கூப்பிட்டு மருந்து கேளுடா ரவி” என்றார் முக்கி முனகி.
“அப்போ உங்களால ரெஜிஸ்ட்ரேஷனுக்கு வர முடியாது போலயே” அகிலன் அறியாதவன் போல் கேட்க,
“ஆமா. ஆமா, அதே தான்” என்றார் நாராயணன் வேகமாக.
“ஆஹ்ன், சத்தம் நல்லா வருதே இப்போ”
“அது. வலிக்கு தான். கை நடுங்குது” என்று விரல்களை வேறு இஷ்டத்துக்கு ஆட்டி வைத்தார்.
‘இவர் பர்பாமென்ஸ் பார்க்கிறதுக்கு நான் அமைச்சர்கிட்ட பேச போயிடலாம்’ அகிலன் முனகி வெளியே செல்ல, ரவி மாப்பிள்ளையின் தோளை இடித்தான்.
வந்ததில் இருந்து வாயே திறக்காமல் வேடிக்கை பார்த்திருந்த செல்வத்திடம், “பேசுடா” என்று வாயசைத்தான் ரவி.
“ஆஹ்ன். என்ன சொன்ன கேட்கலை” என்று செல்வம் புருவம் தூக்கினான்.
“அது, அப்பா எப்படியிருக்கார் கேட்டியா. அவர் ஓகேடா” என்றான் ரவி தானே.
“ஓகே இல்லை. நல்லாவே இருக்கார். நீ வா போய் டீ குடிச்சிட்டு வரலாம்” என்று ரவியை இழுத்து கொண்டு வெளியே செல்ல, நாராயணன் கடுப்பாக மருமகனை பார்த்திருந்தார்.
“என்ன, என்னடா என்னமோ உள்ள சொன்ன?” என்று செல்வம் மச்சானிடம் பாய்ந்தான்.
“விசாரிக்கணும் இல்லைடா. வேடிக்கை பார்க்கவா வந்த”
“ஆமா அதுக்கு தான் வந்தேன். ஆனா ஒர்த் இல்லை. உன் அப்பா நடிப்பு பிலோ ஆவ்ரேஜ்” என்றான் செல்வம் கேலியாக.
“என்னடா நக்கலா? உனக்காக தானே”
“கொன்றுவேன் உன்னை. வாயை மூடிடு” என்றான் செல்வம் கொதிப்பாக.
“எனக்காகன்னு பூ சுத்தின மச்சான்னு கூட பார்க்க மாட்டேன். அவர் எனக்காக என்னென்ன பண்ணியிருக்கார்ன்னு நான் சொல்லவா?”
“அது, மாப்பிள்ளை”
“அவர் பொண்ணுக்காக கம்பு சுத்திட்டு இருக்கார், அவ சந்தோஷமா இருக்கிறதுக்காக தான் இதெல்லாம். இன்னொரு முறை எனக்காகன்னு சொன்ன பார்த்துக்கோ” என்று மிரட்ட,
“சரிடா. நான் இனி பேசலை” என்று ரவி வாய் மூடி கொண்டான்.
“என்ன உங்களுக்குள்ள பிரச்சனை?” என்று நாச்சி அவர்களை பார்த்தபடியே வந்தவள் அண்ணனிடம் கேட்டாள்.
அம்மாவை சாப்பிட வைத்து அழைத்து வர, கமலா கணவரிடம் சென்றுவிட்டார்.
“நீ சாப்பிட்டியா?” என்று செல்வம் கேட்க, இல்லை என்று தலையசைத்தவள், கேள்வியான பார்வையை விலக்கவில்லை.
அகிலன் போன் பேசி முடித்து வந்தவன், “உங்க அப்பா தியாகம் வேஸ்ட்டா போச்சு” என்றான் ரவியிடம்.
நாச்சிக்கு அப்போது தான் புரிய, அண்ணனை கலக்கத்துடன் பார்த்தவள், “ண்ணா, அப்படியா?” என்று கேட்டாள்.
“ஆமா” என்றவன், “அப்பாவை பத்தி தெரியும் இல்லை. நமக்காக உயிரை கொடுப்பார்”
“ஆமா உங்களுக்காக மத்தவங்க உயிரையும் எடுப்பார். எனக்கு எடுத்த மாதிரி” என்றான் செல்வம் இடையிட்டு.
நாச்சி அமைதியாக இருக்க, ரவி தான் நண்பனை கடுப்பாக பார்த்தான். “என்ன, என்ன பார்வை. உன் அப்பான்னா, பில்ட் அப்பை கொடுக்காம வேலையை பாருடா. எதுக்கும் ஸ்டெக்ச்சருக்கு இப்போவே சொல்லி வைச்சிரு” என்ற செல்வம்,
“வா நாம சாப்பிட போலாம்” என்று மனைவியை அழைத்தான்.
“ஹலோ சார் நாங்களும் இன்னும் சாப்பிடலை” என்றான் அகிலன்.
“நீங்க உங்க பெஸ்ட் ப்ரெண்டு கூட போய் கொட்டிக்கோங்க சார்” என்று மனைவி கை பிடித்து சென்றுவிட்டான்.
“அவன் பொண்டாட்டி இருக்கிறதால எப்படியும் என்னை கூப்பிட மாட்டான். ஆனாலும் என் அப்பா அவளை பொண்ணு கேட்டதுக்கு நான் என்ன பண்ணுவேன். இன்னமும் கை வலிக்குது” என்று அகிலன் புலம்பினான்.
“அவன் அப்படி தான். நீ சொல்லு. இதுக்கு வேற வழியே இல்லையா? செல்வம், அவனை ஏண்டா இதுல இழுக்கிறீங்க? அவனை விட்டா வேற ஆளே இல்லையா உங்களுக்கு?” என்று ரவி எரிச்சல் கொண்டான்.
“அவன் உண்மையா இருந்ததை பார்த்துட்டாங்க. எப்படி விடுவாங்க? நானும் நிறைய குழப்பி பார்த்தேன். ஆனா மசியலை” என்றான் அகிலன் தோள் குலுக்கி.
நாராயணன் மகன் வந்து சொல்லவும் சோர்ந்து தான் விட்டார். “நான் பேசாம இருந்திருக்கலாம். அண்ணாச்சியை பண்றேன்னு என் மகளுக்கு பண்ணிட்டேன்” என்று அவ்வளவு புலம்பல்.
செல்வம் இதை எல்லாம் தலையில் ஏற்று கொள்ளாமல், மனைவியை வீட்டுக்கே அழைத்து வந்து சாப்பிட வைத்து கொண்டிருந்தான். நாச்சிக்கு நடப்பதில் உணவு இறங்குவேனா என்றது. கணவனுக்காக இரண்டு வாய் சாப்பிட்டவள், மீதியை அவனுக்கே ஊட்டிவிட்டாள்.
“எதுக்கு இப்போ முகத்துல இவ்வளவு சுருக்கம்? நான் தான் சொல்லிட்டேன் இல்லை நான் பார்த்துகிறேன்னு. அப்புறம் என்ன? அவர் பொண்ணு மாதிரி இருக்காத. செல்வத்தோட முத்தா இரு. அப்போ தான் பள பளன்னு ஜொலிப்ப” என்றான்.
கணவன் மீதுள்ள நம்பிக்கையில் குறையில்லயே. ஆனாலும் மனம் சமன்படவில்லை.
அப்பாக்கு எல்லாத்திலும் அவசரம், அன்னைக்கும் அண்ணாச்சி பேச்சை கேட்டு இவரை மாட்டிவிட்டார். இன்னைக்கும் அடிபட்டு படுத்திருக்கார். என்ன பண்றார். மகளாக அவரை நினைத்து அவ்வளவு கவலை.
“என்ன, என்மேல நம்பிக்கை இல்லையா? இன்னமும் முகம் வாடுது” கணவன் குதித்தான்.
முத்து பெண் கணவனை முறைத்தவள், நன்றாக வெய்ட் கொடுத்தே அவன் மடி மேல் பொத்தென அமர்ந்தாள்.
“ஆஹ்” என்று அலறினாலும், அவளை பாதுகாப்பாக தன்னோடு சேர்த்து பிடித்து கொண்டான்.
அவனின் முத்து பெண்ணோ கணவனின் பின் முடியை வலிக்க இழுத்து பிடித்தவள், அவன் கூர் மூக்கை பதம் பார்த்தாள்.
“ஸ்ஸ். ஏண்டி” என்றவன் அவளின் தோளிலே மெதுவாக தேய்த்து கொண்டான்.
‘பின்ன எப்போ பார்த்தாலும் சம்மதம் இல்லாம பேசுறது? என் கவலை என்ன, இவர் குதிக்கிறது என்ன?’ என்று இன்னமும் அவனின் தோளிலும் கடித்து வைத்தாள்.
“உன் அப்பாவை பேசுனதுக்கா இந்த கோவம்?” செல்வம் மீண்டும் தப்பாய் கேட்க, முத்து பெண் காண்டாகி அவனை கீழே தள்ளி அடி வெளுத்துவிட்டாள்.
அதெல்லாம் செல்வத்துக்கு வலிக்க வேண்டுமே. மனைவியை இன்னும் வாகாக தன் மேல் அமர வைத்தவன், தலைக்கு கை கொடுத்து அவளின் கோவத்தை ரசிக்க ஆரம்பித்துவிட்டான்.
“இவரை” என்று அவன் நெஞ்சிலே பல்லை பதித்துவிட, அதுவும் தான் கணவனுக்கு ஜாலியாகி போனது.
“உங்களை எப்படி தான் வலிக்க வைக்கிறது?” என்று அவனிடமே கண்களால் கேட்டு வைத்தாள்.
“நீ என்னோட இருந்து, என்ன பண்ணாலும் எனக்கு வலிக்காது” என்றான் அவன்.
அவனின் மனைவி நொடி பேச்சற்று, அவன் மேலே படுத்துவிட்டாள். அவனை இறுக்கமாக அணைத்தும் கொண்டவளை, செல்வம் சுகமாக சுமந்தான்.
மருத்துவமனையில் நாராயணனை ஒரு வாரம் இருக்க சொல்லிவிட, நாச்சி அன்று பகலில் இருக்க, கமலா இரவில் இருந்தார். ரவி அங்கேயும், தொழிலையும் பார்த்து கொண்டான்.
முத்து பெண் அப்பாவுடன் இருக்க, செல்வம் அவளை பார்க்க அடிக்கடி போய் வந்தான். விட, கூப்பிட, இடையில் டீ குடிக்க, சாப்பிட என்று எல்லாவற்றுக்கும் போனான்.
“நானே பார்த்துகிறேன்” என்று நாச்சி சொன்னாலும் கேட்க மாட்டான்.
“கடையில் இருந்து என்ன பண்ண போறேன்” என்பவன், ஒரு நேரம் கூட மாமனாரை விசாரிக்க மாட்டான்.
நாராயணனுக்கு அவன் வராமல் இருந்தால் கூட ஒன்றுமில்லை. ஒருநாளில் அத்தனை முறை வந்தும் அவரை திரும்பி கூட பார்ப்பதில்லை.
இதில் நர்ஸ் ஒருவர், “மருமகனுக்கு உங்க மேல ரொம்ப பாசம் போல. மகனை விட இவர் தான் வரார். கொடுத்து வைச்சவர் நீங்க” என்று சொல்ல, நாராயணன் அவரை பார்த்த பார்வையில அவருக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.
“இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு இந்த முறை முறைக்கிறார். ஒருவேளை அடிபட்டது ஏதும் பிரச்சனையாகி இருக்குமோ” என்று யோசித்து கொண்டே சென்றார்.
“இப்படின்னு தெரிஞ்சிருந்தா வண்டியில போய் விழுந்திருக்க மாட்டேன். எல்லாம் என் நேரம்” என்று மனைவியிடம் கடுப்படிக்க, கமலா மீறி வந்த வார்த்தைகளை முழுங்கி கொண்டார். அடிபட்டிருக்கிறார் பாவம் என்ற எண்ணம் தான்.
இரண்டு நாளில் பத்திரபதிவு எனும் நிலை. நாச்சி கணவன் மீதுள்ள நம்பிக்கையில் தைரியமாக இருக்க, செல்வத்துக்குள் கர்வமே.
என்னை நம்ப ஒருத்தி! இவளுக்காக அவன் அதை செய்தான்.
ஆட்கள் மூலம் பத்திரபதிவு பற்றி கசியவிட்டான். அதுவும் அவனை இன்றளவும் விசாரிக்கும் துறைக்கு.
ஏற்கனவே அவன் மேலான குற்றம் அப்படியே இருக்க, புதிதாக மற்றொன்று எனவும், திரும்ப செல்வத்தின் மீது அவர்கள் பார்வை விழுந்தது.
அதிகாரிகள் நேரே பத்திர பதிவு அலுவலகத்துக்கு வந்து விசாரிக்க, தகவல் அமைச்சருக்கு சென்றுவிட்டது.
“இதென்னடா புது தலைவலி? அது என்னன்னு சீக்கிரம் பாரு” என்று அகிலனை முடுக்கிவிட்டார்.
அவனும் உறுதி செய்து கொண்டவன், “உண்மை தான். நாளைக்கு அவன் பேர்ல ரெஜிஸ்ட்ரேஷன் நடந்தா நிச்சயம் பெருசாவே வெளியே வரும். மீடியா வரைக்கும் போகலாம்” என்றான்.
“இப்போ என்ன செய்ய? எல்லாம் ரெடியா இருக்கே, பத்திர பதிவு நடக்கலைன்னா அதுக்கும் கேள்வி வருமே” அவர் தலையை பிடிக்க, அகிலனுக்கு அழைத்தான் செல்வம்.
“செல்வா கூப்பிடுறான்” அகிலன் சொல்ல,
“எடுத்து பேசு. பயப்படுவான். நாம இருக்கோம்ன்னு சொல்லு” என்றார்.
அகிலன் எடுக்க, “தெரிஞ்சுதா?” என்று கேட்டான் செல்வம்.
“ம்ம். நீ பயப்படாத பார்த்துக்கலாம்” அகிலன் சொல்ல,
“பக்கத்துல அமைச்சர் இருக்காரா, நான் சொல்றதை மட்டும் கேளு. பத்திர பதிவு நடக்கணும். ஆனா என்மேல இல்லை. அண்ணாச்சி பேர்ல” என்றான் செல்வம்.
“என்ன சொல்ற?” அகிலன் தன்னை மீறி குரல் உயர்த்திவிட்டான்.
அமைச்சர் பார்வை விழுக, “கத்தாத, நான் சொல்றதை அமைச்சர்கிட்ட சொல்லு. சாட்சி கையெழுத்துக்கு அண்ணாச்சியை தான் சேர்த்திருக்கோம். அதை இப்போ பயன்படுத்திக்கலாம்” என்றான் செல்வம் அழுத்தமாக.
“அது எப்படி முடியும்?” அகிலன் மெல்ல கேட்க,
“முடியணும். என்ன பண்ணுவியோ தெரியாது. அண்ணாச்சி தான் சொத்து வாங்குறார். நான் சாட்சி கையெழுத்துன்னு பத்திரத்தை மாத்து. என்னென்ன செய்ய முடியுமோ செய், இந்த கேடி தனம் உங்களுக்கு அத்துப்படி ஆச்சே. உங்களுக்கா தெரியாது.” என்று வைத்துவிட்டான்.
அகிலனுக்கு அதிர்ச்சி மறைந்து, நல்ல ஐடியா என்றே தோன்றிவிட்டது. அமைச்சர் கேட்க, “பயப்படுறான். விசாரணைக்கு போறேன்னு சொல்றான். அதான்” என,
“என்ன பண்ணி இதை மறைக்கிறது?” அமைச்சர் யோசிக்க,
“எனக்கு ஒரு வழி தோணுது. சரியா வந்தா பண்ணலாம்” என்றான் அகிலன்.
அவர் என்னவென்று கேட்க, செல்வம் சொன்னதை அவனதாக சொன்னான். “இப்போ இதை விட நல்ல வழி இல்லை. அண்ணாச்சி நம்ம ஆளு. அவரை பார்த்துக்கலாம்” என்றான் அகிலன்.
“இதுலயும் நிறையவே ஓட்டை இருக்கு. ஆனா மொத்தமா மாட்டுறதுக்கு இது பரவாயில்லை. உள்ள ஆளுங்க பேப்பரை கொடுக்கலை. நாளைக்கு வரேன்னு அதிகாரிங்க போயிருக்காங்க. அதுக்குள்ள எல்லாத்தையும் மாத்திடணும். நிச்சயம் கண்டுபிடிச்சிடுவாங்க தான். ஆனா இப்போதைக்கு இது தான் சரி” என்றான் மேலும்.
அவரின் ஆட்கள் மூலம் கூடுமானவரை முயற்சிக்கலாம். இதுவே சரி என்று தோன்றிவிட, உடனே அதற்கான வேலையில் எல்லாம் இறங்கினர். மறுநாள் அண்ணாச்சி ஜெக ஜோதியாக ஆர்ப்பாட்டமாக வந்திறங்க, நாராயணன் கட்டுகளோடு பரிதாபமாக வந்தார்.
அண்ணாச்சிக்கு உள்ளே செல்லும் வரை விஷயம் சொல்லாமலே, பத்திரத்தை நீட்டினர். அவர் அதிர்ந்து போய் மறுக்க, அமைச்சரின் ஒற்றை போனில் கையெழுத்து இட்டு தலை தொங்கி போய் வந்தார்.
நாராயணனுக்கு ஏக குஷி. உற்சாகமாக சொத்தை மாற்றி கொடுத்தார்.
செல்வம் சாட்சி கையெழுத்திட்டதோடு நடப்பதையும் சாட்சியாக தான் பார்த்திருந்தான்.