செல்வம் காரின் வேகத்தை கூட்டினான். சென்னையை நெருங்கும் நேரம், “அமைச்சர் எங்க இருக்கார்ன்னு விசாரி” என்றான் செல்வம்.
அதன்படி அவர் இருக்குமிடம் சென்று சேர்ந்தனர். “நீ கார்லே இரு” என்று ரவியிடம் சொல்லிவிட்டு செல்வம் இறங்க,
“இல்லை செல்வா. நானும் வரேன்” என்றான் ரவி.
“சரி நீயே போ. நான் கார்ல இருக்கேன்” என்று செல்வம் திரும்ப அமர்ந்து கொண்டான்.
“டேய் ஏண்டா இப்படி பண்ற, உனக்கு ஒரு பாதுகாப்பு”
“அதான் அத்தனை மாசம் போலீஸோட பாதுகாப்பு கொடுத்தீங்களே? பத்தாதா உனக்கு?” என்று கேட்டுவைத்தான் செல்வம்.
“பழசை எடுத்து போட்டு பேசுற. பார்த்துகிறேன், நீயே போ” என்று ரவி அமைதியாகிவிட, செல்வம் மூச்சை நன்றாக இழுத்துவிட்டு கொண்டு உள்ளே சென்றான்.
ரவிக்கு அச்சமாக இருந்தது. நாச்சி கிடைத்துவிட வேண்டும் என்ற வேண்டுதலுடன், செல்வம் பற்றிய கவலையும் சேர்ந்து கொண்டது.
அவர்கள் பற்றி ரவிக்கு தெரியும். சாதாரண காரியம் இல்லையே இது. செல்வம் தானே சென்று வேறு தலையை கொடுக்கிறான், என்ன செய்வார்களோ என்ற அச்சம் கொண்டான்.
இதில் நாராயணன் வேறு போன் செய்து கொண்டே இருக்க, நிம்மதியா பயப்பட கூட விடமாட்டார் போல.
“ப்பா ப்ளீஸ். நானே கூப்பிடுவேன். அவன் இப்போதான் உள்ள போயிருக்கான். என்ன பண்ணுவாங்கனு பயந்து போய் உட்கார்ந்திருக்கேன். நீங்களும் படுத்தாதீங்க” என்று வைத்துவிட்டான்.
அமைச்சரின் முன்னிருந்தான் செல்வம். பார்க்கவே சிடுசிடுவென்று தான் இருந்தார் மனிதர்.
“என்ன செல்வா. பார்க்கணும்ன்னு கேட்டியாமே?” அவர் கேட்க,
“அது கொஞ்சம் பர்சனலா பேசணும்” என்றான் செல்வம் மற்றவர்களை பார்த்து.
அமைச்சர் அவனை கேள்வியாக பார்த்து எல்லோரையும் அனுப்ப, அகிலன் மட்டும் தேங்கி நின்றான்.
“அவர் பத்தி நீ என்ன பேசணும்” டக்கென அவரிடம் ஒரு ஆக்ரோஷம்.
செல்வமே அவரின் இந்த கோவத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதை அவர் முன் வெளிப்படுத்தாமல், தைரியமாக நிமிர்ந்து நின்றபடியே, “அவர் பத்தின்னா அவர் இல்லை. அவரோட பொண்ணை பத்தி தலைவரே. முத்து நாச்சி. அவங்க தான் நான் கட்டிக்க போற பொண்ணு” என்றான்.
“நாங்க இரண்டு பேரும் காதலிக்கிறோம். நாராயணன் மாமா எனக்கு ஒன்னுவிட்ட சொந்தம். எனக்கு கொடுக்க அவர் விரும்பல. சொல்லிக்கிற அளவு நானும் இல்லையே. அதான்”
“இதுல நான் என்ன செய்யணும்” அமைச்சர் தெரியாதவர் போல் கேட்டார்.
“எனக்காக அவர்கிட்ட கொஞ்சம் பேசணும். என் வீட்ல இருந்து எனக்கு யாரும் வரமாட்டாங்க. அந்த கேஸ்ல மாட்டுனதில் இருந்து, என்னை நம்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதான்”
“அண்ணாச்சியை கூப்பிட வேண்டியது தானே”
“அவங்க இரண்டு பேருக்கும் ஏதோ சண்டை போல தலைவரே. அவர் வரமாட்டார்” செல்வம் சொல்ல,
“இது எப்போ?” அமைச்சர் புருவங்கள் சுருங்கியது. “நீ கொஞ்சம் வெளியே இரு செல்வா. நான் கூப்பிடுறேன்” என்றவர் அகிலனிடம். “என்ன அகில் நடக்குது?” என்று விசாரித்தார்.
“நானும் அதை பத்தி பேசத்தான் இருந்தேன் தலைவரே. இரண்டு பேருக்குள்ள சண்டை. அண்ணாச்சியை மிரட்ட தான் நாராயணன் சும்மா அவர் ஆள்கிட்டே விலை கேட்டிருக்கார். ஆனா அண்ணாச்சி இதுதான் சமயம்ன்னு அந்த ஆளு மூலமா நம்மகிட்ட வத்தி வைச்சிட்டார். இதனால அவருக்கு ஒரு கல்லுல இரண்டு மாங்காய்” என்றான்.
“இன்னொருத்தர் யார்?”
“செல்வா தான் தலைவரே. அண்ணாச்சிக்கு இவங்க லவ் பண்றது தெரியும். ஏற்கனவே அவருக்கு செல்வா மேல பொறாமை. இப்போ நாராயணனும், அவனும் ஒண்ணா சேர்த்துட்டா அவர் இடம் காலியாகிடும்ன்னு பயந்திருப்பார்” என்றான் அகிலன்.
“அண்ணாச்சி சரியான கேடியா இருக்கார். அந்த பொண்ணை தூக்கினா செல்வம் வந்து நிற்பான்னு சொன்னான். இவனும் வந்துட்டான். சரி நம்ம வேலையை பார்ப்போம். செல்வாவை வரச்சொல்லு” என்றார்.
செல்வம் வர, “உட்காரு செல்வா” என்று தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டார்.
“உனக்காக நான் நாராயணன்கிட்ட பேசுறேன் செல்வா. அதுக்கு முன்னாடி வேற ஒரு முக்கியமான விஷயம்” என்றார்.
“சொல்லுங்க தலைவரே”
“அது நாராயணன் பத்தி. அவன் தான் நம்ம மெயின் பினாமி” என்றார் செல்வா காதில்.
செல்வம் புதிதாக கேள்விப்படுவது போல் ஏகப்பட்ட அதிர்ச்சி அடைய, “ஆனா இனி அவனை நம்ப கூடாதுன்னு தெரிஞ்சிடுச்சு, பங்காளி சண்டையில நம்ம மடியில கை வைக்கிறாங்க. அதை பின்னாடி பார்ப்போம். இப்போ விஷயம் நாராயணன்கிட்ட இருக்க சொத்தை வேற ஒரு நம்பிக்கையான ஆள்கிட்ட சேர்க்கணும்” என்று நிறுத்தினார்.
எதாவது செக் வைப்பார் என்று தெரியும். இதை எதிர்பார்ப்பார் என்று செல்வம் நினைக்கவில்லை. மெகா ரிஸ்க் இது!
“தெரியாத ஆள்கிட்ட போறது, புதுசா ஆள் பிடிக்கிறதுனு எல்லாம் ஒத்துவராது. அதான் நம்ம பையன் நீ இருக்கிற இல்லை. நம்ம செல்வாவை விட யார் கிடைச்சிட போறா? என்ன சரிதானே அகில்?” அமைச்சர் சிரித்தபடி கேட்க,
“அது தலைவரே. இப்போ தான் உள்ள போய்ட்டு வந்தான். திரும்ப அவன் பேர்ல சொத்துன்னா, அதுவும் நிறைய மதிப்புள்ள சொத்துங்கன்னா சந்தேகம் வரும். திரும்ப விசாரணைன்னு போனா மாட்டிக்க வாய்ப்பு அதிகம்.” என்ற அகிலன் இதை தவிர்க்கவே முயன்றான்.
“எனக்கும் அதெல்லாம் தெரியாதா? உடனே எல்லாம் யார் செய்ய போறா? கொஞ்சம் கொஞ்சமா மாத்தலாம். அதான் இப்போ தொழில் வேற பண்றான். சுலபமா கணக்கு காட்டிடலாம்” என்றார் மனிதர்.
எல்லாம் குள்ள நரிகளே! செல்வம் மறுக்க முடியாதபடி அவனின் முத்து பெண் இடையில் நின்றாள்.
“இல்லை தலைவரே. அவ்வளவு பெரிய பொறுப்பை செல்வம் கையில கொடுக்கணுமான்னு யோசனையா இருக்கு” மெல்ல அவரின் காதில் சொன்னான் அகிலன்.
“இப்போ கொஞ்ச நாளா தான் செல்வத்தை தெரியும். நம்பிக்கையா இருப்பானான்னு”
“இவனை விட நம்பிக்கையான ஆளை நீ பிடிச்சிடுவியா? பார்த்த இல்லை எத்தனை மாசம் உள்ள இருந்தும் ஒத்தை வார்த்தை விடலை. கூட நாம என்ன இவனை மட்டும் நம்பியா இருப்போம். இவனுக்கே வேவு பார்க்க ஆள் இருக்கும். அப்புறம் என்ன பார்த்துக்கலாம் விடு” என்றுவிட்டார் அமைச்சர்.
முடிவெடுத்துவிட்டார் என்று புரிந்து கொண்டான் அகிலன். “செல்வாவுக்கு எல்லாம் சொல்லிடு. நான் இப்போ வந்திடுறேன்” என்று சென்றார்.
அவரை பொறுத்தவரை, நாச்சி அவர் கட்டுப்பாட்டில் இருப்பது பற்றி செல்வா தெரிந்து வந்தாலும், தெரியாம வந்தாலும் அவருக்கு கவலையில்லை. செக் வைச்சாச்சு. பொண்ணு வேணும்ன்னா இதான் டீல் என்றபடி இருந்தார் மனிதர்.
இருவர் மட்டும் இருக்க, “அண்ணாச்சி வேலையை பார்த்துட்டார்” என்றான் அகிலன்.
“நாராயணன் கார்ல இவ இருக்க, அமைச்சர் யோசிச்சார். அண்ணாச்சி தான் அவரை தூக்கறதை விட, மகளை தூக்கினா நிறைய லாபம்ன்னு பத்த வைச்சுட்டார். என்னாலயும் உங்களுக்கு சொல்ல முடியலை” என்றான்.
“கெஸ் பண்ணேன். ஆனா இதை எதிர்பார்க்கலை” என்றான் செல்வம்.
“பினாமிக்கு எல்லாம் கேரண்டி கிடையாது. உறுதியா மாட்டிக்கிற சூழ்நிலை வந்தா உன்னை நீயே முடிச்சுக்கோ, உன் பேமிலிக்கு தேவையானதை நாங்க பண்ணிடுறோம்ன்னு விலகிடுவாங்க. இது தான் எழுதப்படாத சட்டம்” அகிலன் சொல்ல,
செல்வமிடம் விரக்தி புன்னகை. “மனுஷனுக்கு வாழுற ஆசை மட்டும் வந்துற கூடாதுடா” என்றான்.
அகிலன் வருத்தத்துடன் நண்பனை தோளோடு அணைத்து கொண்டான்.
செல்வம் “சரின்னு சொல்லிடு” என்றான்.
“பொறுடா. பார்க்கலாம்”
“வேற வழி இருக்குன்னு உனக்கு தோணுதா?”
இல்லை என்று தலையசைத்த அகிலன், “அந்த அண்ணாச்சியை மட்டும் விட கூடாதுடா” என்றான் கோவமாய்.
“முதல்ல அவளை வெளியே எடுப்போம். அவர்கிட்ட பேசு போ” என்றான்.
அகிலன் சென்று சொல்ல, அமைச்சர் புன்னகை முகமாக வந்து செல்வத்தை அணைத்து கொண்டார். “சிறப்பான முடிவு. இனி பாரு நீ எங்க போக போறேன்னு” என்றார்.
“செல்வத்து கூட சாப்பிட ஏற்பாடு பண்ணு” என்றார்.
இவன் மறுக்க, அமைச்சர் விட வேண்டுமே. டேபிளில் அத்தனை உணவும். பெரிய விருந்தே. செல்வத்தின் தொண்டையில் அத்தனை முட்கள். ஒரு.. ஒரு வாய் உணவும் முட்களை கிழித்து, வலி கொடுத்தே தொண்டைக்குள் இறங்கியது.
சாப்பாடும் மனுஷனை கொல்லும் என்று அன்று தான் செல்வம் உணர்ந்துகொண்டான்.
அமைச்சர் அவனை வாசல் வரை வந்து வழி அனுப்பினார். உடன் இருந்த ஆட்கள் தானே அவனுக்கு மரியாதை கொடுத்து கார் கதவை திறந்துவிட்டனர்.
அவ்வளவு நேரம் பயத்தில் வேர்த்திருந்த ரவி இவனுக்கு கிடைத்த மரியாதையில் வாய் பிளந்தான். “என்னடா மச்சான் மாயம் இது? நாச்சியை விட்டுட்டாங்களா?” என்று கேட்டான்.
“அவளே போன் பண்ணுவா” என்றான் செல்வம்.
அதேபோல அடுத்த சில நொடிகளில் அவளிடம் இருந்து போன் வந்தது. “நான் இந்த இடத்தில இருக்கேன்” என்றாள்.
சிட்டியை தாண்டி ஏதோ ஒரு கிராமத்துக்கான வழி. நண்பர்கள் அங்கு சென்று சேர, நாச்சி மட்டும் அவளின் காரில் இருந்தாள்.
ரவி வேகமாக தங்கையிடம் செல்ல, அவளும் தளர்ந்து போனவளாய் வந்து அண்ணனின் தோள் சாய்ந்து கொண்டாள்.