கண்ணே முத்து பெண்ணே 10

செல்வம் கடைய வெற்றி கரமாக திறந்துவிட்டான். ஒரு வாரம் ஆகிறது.

என்ன ஆட்களின் வருகை மட்டுமே குறை. ஹாஹா. வாடிக்கையாளர்கள் இல்லாமல் தொழில் எப்படி? படுத்து தான் கிடந்தது.

“நீங்க மட்டும் இல்லைன்னா ரொம்ப கஷ்டம்ண்ணா. வாங்கினது எல்லாம் வம்பா போயிருக்கும்” என்றான் சுப்பிரமணி. அண்ணனின் டீ பழக்கத்தை கொண்டு.

“கிண்டல் பண்ற. இருக்கட்டும்” செல்வம் சிரித்தபடி டீயுடன் அமர, “என்ன மாப்பிள்ளை?” என்று வந்தார் ஒன்றுவிட்ட மாமா கணேசன்.

“வா மாமா” என்று இருக்கையை காட்டியவன், தம்பியிடம் டீ எடுத்து வர சொன்னான்.

“இந்த டீ நல்லா இருக்கே” கணேசன் குடித்ததும் சொன்னார்.

“ஸ்பெஷல் டீ மாமா. புது கடைக்காக ரெடி பண்ணது. என்னோட தயாரிப்பு தான்” என்றான் செல்வம்.

“நினைச்சேன் மாப்பிள்ளை. டீ விஷயத்துல நீதானே ராஜா”

“மாமா. எனக்கு பிடிக்கும். கொஞ்சம் ஆர்வம் ஜாஸ்தி. அவ்வளவு தான்”

“கொஞ்சமா? உன் அம்மா பால் எல்லாம் இப்போ டீயா தான் உன் உடம்புல ஓடும்”

“அப்படி சொல்லாதீங்க மாமா. அம்மா பாலாவது என் உடம்புல ஓடட்டும்”

“என்ன மாப்பிள்ளை இது. விடுயா. ஆமா இது மட்டும் தானா, இல்லை இன்னும் நிறைய இருக்கா?”

“இருக்கே. மசால் டீயில் இருந்து எல்லாம் இருக்கு. அப்பப்போ வந்து குடிச்சு பாருங்க”

“வந்துட்டே இருன்னு சொல்ற. நல்ல தொழில்காரன் தான்யா நீ” என்ற கணேசன் அவன் தோள் தட்டி சென்றார்.

“கஸ்டமர்ஸ் எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க போல” என்று ரவி வர,

“அவர் ஒருத்தர் உங்களுக்கு கஸ்டமரா மச்சான்” மணி கேட்டான்.

“கூட்டமா வந்தா மட்டும் இல்லை தனியா வந்தாலும் அவர் கஸ்டமர் தான்டா”

“மச்சான். கடுப்பேத்தாதீங்க. இதுக்கு தான் அவனவன் வெளியூர்ல போய் பொழைக்கிறான். உள்ளூர்காரன் தண்ணி காட்டுறான். ஏதோ டவுனுக்கு வந்து போறவங்களால பொழப்பு ஓடுது”

“வருவாங்கடா” என்றவன் டீயுடன், பஜ்ஜியையும் சாப்பிட்டான்.

“நீயும் மாப்பிள்ளை பார்க்கிறேன்ற பேர்ல தினமும் வந்து பஜ்ஜி, டீ சாப்பிட்டு போற?” என்று குறும்புடன் சொன்னான்  செல்வம்.

“டேய் எந்த மீனிங்ல மாப்பிள்ளை சொல்ற?” ரவி சந்தேகமாக கேட்க,

“எல்லா மீனிங்லையும் நான் தாண்டி உனக்கு மாப்பிள்ளை” என்று அவன் கழுத்தோடு கட்டி சொன்னான் செல்வம்.

“என் அப்பாகிட்ட இருந்து என்னை அத்து விடுறதுலே குறியா இருக்கடா நீ? ஏற்கனவே கடை திறப்பு, இங்க வந்து போறதுன்னு மனுஷன் எக்கச்சக்க கடுப்புல தான் சுத்திட்டு இருக்கார்”

“சுத்தட்டும் சுத்தட்டும். காலம் முழுக்க இதுதான் அவர் தலையெழுத்துன்னா யார் என்ன பண்ணிட முடியும்?”

“என்னை விட்றா நீ? முதல்ல இதை சொல்லு அகிலன்கிட்ட பேசிட்டியா? மேல இருக்கிற ரெண்டு மாடிக்கு என்ன ஐடியா வைச்சிருக்க? வாடகைக்கு விடலாம் இல்லை”

“இல்லை. இருக்கட்டும்” என்றான்.

“வேறெதுவோ பிளான் வைச்சிருக்க போல. செய். உனக்கென்ன கேட்கிற நேரம் எல்லாம் பணம் அள்ளி கொடுக்க ஆள் ரெடியா இருக்கு”

“அண்ணாச்சி, என் மாமனார் போல சொல்ற?”

“அவங்களோட என்னை சேர்த்த கொன்னுடுவேன். அதென்ன மாமனார். நடக்காததை எல்லாம் பேசாத. உனக்கு விஷயம் தெரியுமா நேத்து நைட் அவங்களுக்கு செம டோஸ்” என்றான்.

“நடக்கிறதை, ஓடுறதை எல்லாம் நாங்க பார்த்துகிறோம். அவர் என் மாமனார் தான்.  நீ எதுக்கு டோஸ்ன்னு மட்டும் சொல்லு”

“மாமனாரா? அவர் உன் காலை எடுக்கிற வரை நீ  அடங்க மாட்ட போல. டோஸ் எதுக்குன்னா அண்ணாச்சி கடை திறக்கிறதுக்கு வரலை இல்லை. அதுக்கு தான். நான் சொல்லியும் நீங்க யாரும் போகலையா? அப்போ என் பேச்சுக்கு என்ன மரியாதைன்னு வாங்கிட்டார்”

“மச்சான் நீ இருக்கும் போது அவர் என்னை தொட்டுடுவாரா? அப்புறம் அவங்க இதை அமைச்சர்கிட்ட சொல்லியிருக்க மாட்டாங்களே?”

“மச்சானே முதல்ல இருந்தா தானே? வேற யார் அகிலன் தான் போட்டு கொடுத்தது”

“என் மச்சானை யார் என்ன பண்ணிட முடியும். மலையாட்டம் மாப்பிள்ளை நான் இருக்கும் போது? அந்த அகிலன் ஏன் இப்படி இருக்கான்?”

“மாப்பிள்ளை சும்மா இருந்தா மச்சானும் நலமா இருப்பான். அகிலனை பத்தி சாதாரணமா எடை போடாத. செய்ய வேண்டியதை சரியான நேரத்துல செய்வான். நீ வேணும்ன்னா பாரு இரண்டொரு நாள்ல அண்ணாச்சி படையோட வருவார்” என்ற ரவி கிளம்பிட, செல்வம் பெருமூச்சுவிட்டான்.

இதோ, இப்படி தான் இவர்கள் பேச்சு இருக்கிறது.

நாச்சி, இவன் பற்றி தனியாக பேச முடியாமல், வேறு பேச்சோடு பேச்சாக அசட்டு தனமாக, ஏதேதோ செய்து சமாளித்து கொண்டிருக்கின்றனர்.

நான் உண்மையிலே அவளுக்கு மேட்ச் இல்லையா? என் மாப்பிள்ளையே என்னை ஏத்துக்கலைன்னா அவர் எப்படி ஏத்துப்பார்?

‘எனக்கு அவ வேணும், நான் விட மாட்டேன், நீங்க எப்படி அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம், நான் இருக்கேன் இல்லை’ என்று சண்டை கூட போட முடியாது.

ரவி அவனின் அப்பா போல் இடையில் ஒன்று பேசி, இப்போது மாற்றி பேசி என்றெல்லாம் அவன் செய்யவில்லை.

முதலில் இருந்தே இது சரிப்பட்டு வராது, வேண்டாம் என்று தான் சொல்லி கொண்டிருக்கிறான். அப்படி இருக்க அவனிடம் போய் என்னவென்று கேட்க? போங்கடா என்றிருந்தது.

மறுநாள் காலையிலே ரவி சொன்னது போல, அண்ணாச்சி தன் ஆட்களுடன் கடைக்கு வந்திறங்கிவிட்டார்.

“நானும் பஞ்சாயத்துக்கு தான் கிளம்பிட்டு இருந்தேன் அண்ணாச்சி” என்றான் செல்வம்.

ஒரேடியாக அவரிடம் முறித்து கொள்ளவில்லை. பழையபடி பஞ்சாயத்துகளுக்கு சென்று கொண்டு தான் இருந்தான்.

“எல்லாம் ஒண்ணா போயிடலாம்ன்னு தான் செல்வா. எங்க உன் ஸ்பெஷல் டீயை எல்லோருக்கும் கொடு” என்றார்.

செல்வா அசையவில்லை. மணி மேற்பார்வையில் ஆட்கள் கொண்டு வந்து கொடுத்தனர்.  அண்ணாச்சி முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டார். அவர் எதிர்பார்த்தது வேறு. நடப்பது வேறு.

“டீ நல்லா இருக்கு தலை” ஆட்கள் பாராட்டினர்.

அண்ணாச்சிக்கும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “உண்மையிலே ரொம்ப நல்லா இருக்கு செல்வா” என,

“அப்புறம் என்ன இனி நம்மளோட எல்லா மீட்டிங்குக்கும் செல்வா டீ தான்” என்றான் ஒருவன்.

“ஆ.. ஆமா. செல்வா டீயே சொல்லிடலாம்” என்று அண்ணாச்சியும் சொல்ல, மீட்டிங் மட்டுமில்லாமல் விருந்து, விழாக்களுக்கும் செல்வாவிடமே வருவதாக சொன்னார்கள்.

செல்வம் தலையசைத்து ஏற்று கொண்டான். அங்கிருந்து அப்படியே எல்லோரும் கிளம்ப, நாராயணன் நேரே அங்கு வந்திருந்தார்.

பஞ்சாயத்து முடிய, “உன் பொண்ணு விஷயம் என்னாச்சி” என்று இருவர் மட்டும் காரில் இருக்க கேட்டார் அண்ணாச்சி.

“இந்த மாசம் எந்த நல்லது பேச முடியாது. அதான்” என்று நாராயணன் சொல்ல,

“சீக்கிரம் பேசி முடிச்சிடு. செல்வா. என்னமோ கொஞ்சம் வித்தியாசமா தெரியுறான். முன்ன மாதிரி இல்லை” என்ற அண்ணாச்சியின் பார்வை தொலைவில் இருந்த செல்வாவிடம் நிலைத்தது.

நடுவில் பைக்கில் அவன் அமர்ந்திருக்க, சுற்றி அத்தனை ஆட்கள். இவன் என்னமோ சொல்ல, அப்படி ஒரு சிரிப்பு சத்தம்.

“முன்னமும் பசங்க அவன்கிட்ட இப்படி தான் இருப்பாங்க. ஆனா இப்போ என்னமோ அவன் கொஞ்சம் மேல போன மாதிரி. விட கூடாதுன்னு பார்த்தா அமைச்சர் வேற தொல்லை பண்றார்”

“இவனோட கடை திறப்பு விழாவுக்கு நாம போகலைன்னா அவருக்கு என்ன? அவ்வளவு பேசுறார்” நாராயணனும் கடுகடுத்தார்.

“அவன் மேல நல்ல எண்ணம், பரிதாபம். எதாவது ஒரு வாய்ப்பு சிக்காமலா போயிடும். பார்த்துக்கலாம் விடு” என்றார் அண்ணாச்சி.

மேலும் சில வாரங்கள் கடந்துவிட்டது. நாச்சி இப்போது தான் ஊருக்கு வருகிறாள். ஆர்வத்தில் சுற்றாக இருந்தாலும் பரவாயில்லை என்று செல்வாவின் டீ கடை வழியே வந்தாள்.

மெல்ல வந்து, எதிர்புறம் காரை நிறுத்தி கொண்டாள். கண்கள் செல்வாவை தேடி சுற்றிய போதும், கடையையும் பார்வையிட்டாள்.

ஆட்கள் ஓரளவில் காண முடிந்ததில் பெண்ணுக்கு மகிழ்ச்சி. செல்வாவின் பைக் வெளியே இருக்க, மும்முரமாக தேடி கண்டுகொண்டாள்.

போனில் பேசியபடி உள்ளிருந்து வந்தவன், வாடிக்கையாளர் ஏதோ கேட்க, போனை வைத்து பதில் சொன்னான். அங்கும், இங்கும் நடந்தான். ஆட்களிடம் பேசினான்.

மணியிடம் ஏதோ சொல்லி சிரித்ததில், நாச்சியின் உதடுகளிலும் புன்னகை வந்து ஒட்டி கொண்டது.

இரண்டொரு நிமிடங்களில் செல்வாவின் உள்ளுணர்வு அவனை சுற்றம் பார்க்க சொல்லி உந்தி தள்ளியது.

‘அவளா இருப்பாளோ’ என்று சுழன்ற அவனின் கண்கள் முத்து பெண்ணின் காரை கண்டுகொண்டது.

நிலைத்த கண்களில் முறைப்பு சேர்த்து கொள்ள, “கண்ணடியை இறக்கு” என்பதாய் விரலசைத்தான்.

நாச்சி செய்யவில்லை. அவன் படிகளில் இறங்க ஆரம்பிக்க, முத்து பெண் கார் எடுத்து கிளம்பிவிட்டாள்.

ஊருக்கு வந்ததும் வம்பை ஆரம்பித்து வைக்க வேண்டுமா?

செல்வாவோ, அவளுக்கு போன் செய்ய பிளாக் செய்து வைத்திருந்தாள்.

“ண்ணா அண்ணி தானே அது?” மணியும் கவனித்து கேட்க,

“அவளே தான். முகத்தை கூட காட்டாம போறா” பல்லை கடித்து கொண்டான்.

மறுநாள் செல்வம் வெளியே சென்று கடைக்கு வர நேரம் ஆகிவிட்டது. “அண்ணாச்சி என்னமோ புதுசா வேலை கொடுத்துட்டே இருக்கார்” என்றபடி வந்தவன், “டேய் என்னடா இது?” என்றான்.

“என்னங்கண்ணா என்னை கேட்கிறீங்க?” மணி புரியாமல் நின்றான்.

“நீங்க தான் வாங்கியிருப்பீங்கன்னு செட் பண்ண சொல்லிட்டேன்” என, செல்வத்தின் புருவங்கள் சுருங்கியது.

பில் போடும் இடத்திற்கான அத்தனையும் பக்காவாக அங்கிருந்தது. தனி கேபின், சேர், சிஸ்டம், பிரிண்டர், டேபிள் வரை எல்லாம்.

செல்வம் இதை எல்லாம் பின்னால் பார்த்து கொள்ளலாம் என்று விட்டு வைத்திருந்தான்.

“இவளை” புரிந்ததும் உடனே தன் போன் எடுத்தவன், தலையில் தட்டி மணியின் போனில் இருந்து அவளுக்கு அழைத்தான்.

ம்ஹூம். பதிலே இல்லை. இவன் தான் ஒரு கட்டத்தில் கடுப்பாகி போனை தூக்கி போட்டான்.

அவளை பார்க்க சொல்லி உந்தும் மனது, வேணாம் நொந்து தான் போவ என்றும் தடுத்தது. ‘ச்சு. எதாவது ஒண்ணை சொல்லி தொலை’ என்று தன்னையே திட்டி கொண்டான்.

‘ரவியும் வரலை. தங்கச்சி வந்திருக்கான்னே வர மாட்டான். இந்த அண்ணாச்சியும் அவர் பங்காளி பேச்சை கேட்டு வேணும்ன்னே வேலை கொடுத்து அனுப்புறார். அப்படியென்ன பண்ணிடுவேன். அவளை தூக்கிட்டா ஓடிடுவேன். எல்லாம் ரொம்ப பண்றாங்க’ செல்வம் அவனின் வேலைகளை பார்க்க போய்விட்டான்.

இரவு அண்ணாச்சி அவனை வர சொல்ல, செல்வம் காலையில் வருவதாக சொன்னான். ‘இவர் நைட்ல கூப்பிட்டாலே வில்லங்கமா தான் இருக்கும்’

அவனின் மனது சரியாக தான் சொன்னது என்பதை மறுநாள் அண்ணாச்சி நிரூபித்தார். “அமைச்சர் உனக்கு இந்த வேலை கொடுத்திருக்கார்” என்றார்.

“அந்தாள் உள்ளூர் நிரூபர். சரியான கேடி. எல்லா பக்கமும் நியூஸ் தெரிஞ்சு வைச்சுக்கிட்டு, சம்மந்தப்பட்ட ஆளை மிரட்டி காசு பார்க்கிறது தான் அவன் வேலை. போன வாரம் நம்ம பக்கம் சம்பவம் ஒன்னு நடந்துச்சு. அவன் அதை வைச்சு மிரட்டுறான்”

“இதுல நான் என்ன செய்யணும்?” செல்வம் புரியாமல் பார்த்தான்.

“அந்த நிரூபரை கொஞ்சம் தட்டணும்” என்றார் அண்ணாச்சி.

“நானா?”

“நீ தான் செல்வா. அமைச்சர் செய்ய சொல்லியிருக்கார்”

இவனுக்கு என்னமோ நம்பிக்கை வர மாட்டேன் என்றது.

“அவர் பார்வை வட்டத்துல விழுந்தா இதெல்லாம் தான் செல்வா. நீ என்ன நினைச்ச? சும்மா அவ்வளவு பெரிய சொத்தை நீ தொழில் பண்ண தூக்கி கொடுப்பாங்களா?”

“நான் இந்த மாச வாடகை அனுப்பிட்டேன் அண்ணாச்சி” என்றான் செல்வம் அழுத்தமாக.

“ஆஹ். அனுப்புனியா. அது இருந்தா என்ன? அமைச்சருக்கு செய்ய மாட்டியா?” அண்ணாச்சி விடாமல் கேட்டார்.

“நான் இந்த வேலை எல்லாம் செய்றது இல்லைன்னு உங்களுக்கு நல்லா தெரியும் அண்ணாச்சி”

“இப்படியே இருந்தா எப்படி செல்வா? என்னமோ நீ செய்யணும்ன்னு விருப்பப்படுறார். சும்மா செய். கொஞ்சம் கொஞ்சமா மேல வந்திடலாம். யார் கண்டா எனக்கு மேலயும் போலாம்”

செல்வா பதில் சொல்லாமல் அவரை பார்த்தே நின்றான். ‘என்ன சிக்க வைக்க பார்க்கிறார்’

‘நீ தொழில் லைனுக்குள்ள போயிட்டா உசந்திடுவ. அப்படி எல்லாம் உன்னை விட மாட்டேன். நீ அடியாளா போயிரு. அதான் உனக்கு சரி. எனக்கும் வசதி’ அண்ணாச்சி அவரின் வேலையை காட்ட ஆரம்பித்தார்.

“இன்னும் ஒரு மணி நேரத்துல நம்ம குடோன்க்கு வரான். பேசி முடிச்சாகணும். நேத்து நைட்டே முடிக்க வேண்டியது, நீ வர மாட்டேன்னுட்ட. அவன்கிட்ட ரொம்ப கேட்டு தான் இப்போ வர சொல்லியிருக்கோம். இப்போவே முடிச்சிடு செல்வா. இல்லைன்னா விஷயத்தை கக்கிருவான்” என்றவர்,

“டேய் செல்வா கூட போங்க. அவன் சொல்றதை செய்ங்க. நம்ம வழிக்கு வரலை, ஆள் ஒரு மாசத்துக்கு எந்திருக்க கூடாது. பார்த்துக்கோங்க” என்று அவரின் ஆட்களிடம் சொன்னார்.

“தல கிளம்பலாமா?” என்று ஆட்கள் செல்வத்தின் பின் நின்றனர்.

“இல்லை அண்ணாச்சி. நான் போகலை” என்றான் செல்வா.

“என்ன தம்பி அண்ணாச்சி சொல்றதையே மறுத்து பேசுற. கிளம்பு, கிளம்பு போ” என்று அவரின் ஆட்களிடம் இருந்து குரல் வந்தது.

செல்வா அசையாமல் நின்றான். “நேரமாச்சு பாரு செல்வா. நீ தான் முன்ன நின்னு முடிக்கணும். எடுத்ததும் பெரிய வேலை தான் வந்திருக்கு. போ. டேய் கூட்டிட்டு போங்கடா” என்று ஆட்களிடம் சொன்னவர், அவர் நிற்காமல் உள்ளே சென்றுவிட்டார்.

நின்றால் செல்வா மறுத்துவிடுவான் என்ற கணக்கு. வீட்டுக்கு வந்து நன்றாக சாப்பிட்ட அண்ணாச்சி, நாராயணனுக்கு அழைத்தார்.

“கிளம்பிட்டானா?” அவரிடம் உற்சாகம்.

“கிளம்பி தான் ஆகணும் நாராயணா. அப்படி எல்லாம் நம்ம மேலேற விட்டுடுவோமா?”

“எதுக்கும் அவனை பாலோ பண்ணிக்கோ. விஷயம் நடக்கலை அமைச்சர்கிட்ட நாம மாட்டுவோம்”

“நாம ஏன் மாட்டுறோம்? இவன் போகலைன்னா இவன் தான் பதில் சொல்லணும். கட்சி மேலிடத்துகிட்டேயே சிக்குவான்” என்றார் அண்ணாச்சி.

“ஒருவேளை அமைச்சர்கிட்ட பேசிட்டா”

“பேச முடியாது. அகிலன் மட்டும் தான் ஒரே வழி. இப்போ இரண்டு பேரும் முக்கியமான மீட்டிங்ல இருக்காங்க. போன்ல பிடிக்க முடியாது. சந்தர்ப்பத்துக்கு காத்திருந்து தானே பொறி வைச்சோம். ஒரே நேரத்தில இரண்டு எதிரியும் ஒழிஞ்சாங்க” என்றார் அண்ணாச்சி வினயத்துடன்.

செல்வம் வெளியே வர, கார் அவன் முன் நின்றது. முன்பக்க கதவை திறந்துவிட்டவர்கள், “தல உன்னோட பஞ்சாயத்து ஸ்டைலே எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இனி நீ தான் எங்களுக்கு பாஸ். இனிமேல் பாருங்க சும்மா வியாபாரம் பிச்சுக்க போகுது” என்று ஆர்பரித்தார்கள்.