“அடேங்கப்பா!! இவ்வளோ பெரிய அழகான வீட்டிலா, இல்ல இல்ல மாளிகையிலா, நீ வேலை செய்ற”, என, ஊட்டி குளிரில் நடுங்கிய படி வாயைப் பிளந்தான் முரளி.
“ஏன்…, நீ மட்டும் என்ன…, நம்ம மணிமேகலை அம்மாகிட்ட டிரைவரா வேல செய்ற. என்ன விட, நீ தான் கொடுத்துவைத்தவன்”, என்று சலித்துக்கொண்டாள் பூஜா.
“அதுவும் உண்மைதான், ஆனால் பூஜா… இந்த வீட்டின் எஜமானரை, நான் பார்க்கனுமே. நானும் உன்னோட வரட்டுமா”, என்று ஆசையாய் முரளி வினவ,
“ஒரு மாத காலமா, மூன்று வேளை சமைக்கும், சமையல் காரியான நானே, அதிகபட்சம் ஐந்து முறைதான் அவங்கள பார்த்திருப்பேன். இதுல நீ எங்க பாப்பது, வீணா கனவு காணாத, போய் வேலையப் பாரு”,
“ஏன்… அவங்க அவ்வளோ பிசியா”, என்று விடாமல் வினவினான் முரளி.
அவனது எண்ணம், அந்த வீட்டின் முதலாளியை பற்றி அறிந்து கொள்வதை விட, கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், பூஜாவிடம் சற்றுநேரம் எதையாவது உரையாடிக் கொண்டு, அவளருகே இருக்க வேண்டும் என்பதுதான்.
அதை அறியாத பூஜா, அவன் கேள்விக்கு விடை சொல்ல ஆயத்தமானாள்.
“அவங்க பெயர் அனு, என்னவிட மூன்று வயது தான் அதிகம் இருக்கும் முரளி” …
“ஆனால்… என்ன கவலையோ தெரியலை…, அவங்க அறையை விட்டு வெளிய வரவே மாட்டாங்க. முன்பெல்லாம் ‘என்ன சமைக்க வேண்டும்ன்னு’ கேட்க அவங்க அறைக்கு போவேன்”…
“நான் அடிக்கடி வருவது பிடிக்கலை போல, ‘மெனு எழுதி இதை பின்பற்று, இதுக்காக நீ மாடி ஏறி, என் அறைக்கு வரவேண்டாம்’, என்று கனிவாக சொல்லிட்டாங்க”, என பூஜா கூற,
முரளி, எதையுமே கவனிக்கவில்லை… அவளையே பார்த்துக் கொண்டு, அசையாமல் நின்றான்.
“நான் இங்க சமைக்கர உணவு, தீர்ந்ததே இல்லை முரளி. அவங்க சரியா உண்பதே கிடையாது”, என்று விடாமல் பேசிக்கொண்டே போனாள் பூஜா.
அதுவரை அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், நேரமாவதை உணர்ந்து,
“போதும் தாயே… போதும், ஒற்றை கேள்விக்கு இவ்வளவு பெரிய கதையா”, என்று, புன்முறுவலிட்டான் முரளி.
“நீதான கேட்ட”, என்று முறைத்தாள் பூஜா…
“சரிமா… இதேபோல எல்லாரிடமும், அவங்ளைப் பற்றி உளறாத. அது அவங்க பர்சனல்”, என்று கூறிவிட்டு,
“நான் வருகிறேன்”, என்று கையசைத்து விட்டு கிளம்பினான் முரளி.
‘பைத்தியக்காரன்…. இனிமேல் இவனிடம் பேசவே கூடாது’, என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே நகர்ந்தாள் பூஜா.
இதுபோல் அவள் பலமுறை நினைத்ததுண்டு. ஆனால் கடைபிடித்தது தான் இல்லை.
எப்போதும்போல், வாட்ச்மேனுக்கு காலை வணக்கம் சொல்லிவிட்டு, ஆனந்தமாக… மனதில் தோன்றிய பாடல் ஒன்றை தனது இனிய குரலில் பாடிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் பூஜா.
“வா பூஜா, முதலாளி அம்மா காபி கேட்டாங்க. அவங்க அறைக்கு போய் கொடுத்துடு”, என்றாள், அந்த வீட்டில் பணிபுரியும் ரஞ்சினி.
“நிஜமாவா… அவங்க கேட்டாங்ளா!!!”, என்று ஆனந்தமாய் வினவினாள் பூஜா.
“எனக்கும் ஆச்சரியமா தான் இருக்கு, நல்ல காப்பியா போடு, அப்படியே எனக்கும் கலந்து வை”, என்றாள் ரஞ்சினி.
ரஞ்சினியின் வேலை என்னவென்றால், ‘அந்த வீட்டில் பணிபுரியும் சமையல்காரி, பால்காரன் தோட்டக்காரன், வாட்ச்மேன், என அனைவரையும் கண்காணிப்பது, சம்பளம் கொடுப்பது’.
அனைத்திற்கும் மேலாக, ‘முதலாளியம்மா என்ன செய்கிறார்கள், என்று அன்றாடம் வேவு பார்த்து, தான் அறிந்ததை தனது முதலாளியான அனுவின் வீட்டாருக்கு உரைப்பதே ஆகும், முக்கியமாக அனுவின் அண்ணியிடம்’.
இதையெல்லாம் அறிந்து கொண்ட பூஜாவிற்கு, ரஞ்சினியின் மேல் நல்ல அபிப்ராயம் கிடையாது.
ஏனெனில், அனு ஒரு நாள் எதேச்சையாக, புதிதாய் வந்த பேப்பர்காரனிடம் உறையாட, அதை தவறாக அனுவின் வீட்டில் உரைத்தாள் ரஞ்சினி.
பின்னர் பூஜா, அது பேப்பர்காரன் தான் என்று, நிரூபித்த பின்னரே… அவளது செய்தி தவறு, என்பதை அங்கு தெரியப்படுத்தினாள் ரஞ்சினி.
‘தெரிந்தே இப்படி என்றால், இன்னும் தெரியாமல் என்னவெல்லாம் சொல்லி இருப்பாரோ’ என்பது பூஜாவின் எண்ணம்.
ரஞ்சினி உரைத்தபடி, ஒரு நல்ல காப்பியை எடுத்துக் கொண்டு அனுவின் அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தாள் பூஜா…
பால்கனியில் அமைதியாய் அமர்ந்து கொண்டு, எதையோ வரைந்து கொண்டிருந்தாள் அனு ..
அந்த பால்கனி விசாலமாக இருந்தது. சுற்றிலும் ரோஜா வண்ண மலர்கள், நல்ல முறையில் பராமரித்தால் அழகாய் பூத்து குலுங்கின. வண்ண மயமான ரோஜாக்களின் இடையே, அழகிய பூ போல் தென்பட்டாள் அனு…
அவள் முகம் எப்போதும் போல, வாடி இருக்க…
கண்ணாடி போல், பளபளக்கும் அவள் முகத்தில், கருவளையம் உருவாகத் தொடங்கி இருந்தது.
கண்கள் சோர்வாக இருந்தன,…
“காலை வணக்கம் மா…, காபி”… என்று நீட்டினாள் பூஜா.
“தேங்ஸ்”, என அனு காப்பியை பெற்றுக்கொள்ள,
பூஜா… அந்த பால்கனிக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால், அந்த வண்ணமயமான அழகிய ரோஜாக்களையும், அறை முழுவதும் சுவரில் தொங்க விட்டிருந்த வண்ண ஓவியங்களையும், ஆசையாய் பார்த்துக் கொண்டு நின்றாள்.
“உன் பெயர்”, என்று அனு, தனது மென்மையான குரலில் வினவ,
“பூஜா மா…. உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்”, என்று, தனது பேச்சைத் துவங்கினாள்.
பூஜாவிடமிருந்த, ஏதோ ஒன்று அவளை ஈர்க்க, அது வரை யாருடனும் பேச மறுத்த அனு,
“முதல்ல அமரு, பிறகு கேளு”.. என்று தனக்கு எதிர்ப்புறம் இருந்த நாற்காலியைக் காட்டினாள்.
“பரவாயில்லை மா”, என்று கீழே அமர போன பூஜாவை,
“நீ சேரில் அமர்ந்தா, கேள்வி கேட்கலாம். இல்லைன்னா, சமையல் அறைக்கு திரும்பிடலாம்”, என்று கட்டாயப் படுத்தி, தனக்கு சமமாய் அமர வைத்தே, உரையாடலை துவங்கினாள் அனு.
“நான் இங்க வந்து ஒரு மாதம் ஆச்சு. ஆனா இதுவரை நீங்க இந்த அறையிலேயே இருப்பது ஏன்…. வெளியே வரலாமே”, என பூஜா கேள்வியாய் பார்த்தாள்.
இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்த அனு,
“அத அப்பரமா சொல்றேன், உனக்கு இந்த பூக்கள் பிடிச்சிருக்கா” என்று பூக்களின் மீதே கண் வைத்திருந்த பூஜாவிடம் வினவினாள்.
“ஆமா மா, ரொம்ப அழகா இருக்கு”, என அவள் கூற,
“உனக்கு பிடிச்சத எடுத்து வெச்சுக்கோ”, என்றாள் அனு, சிறு புன்னகையுடன்.
இதற்காகவே காத்திருந்தவள் போல, அனு கூறி முடிப்பதற்குள்,
“தேங்க்ஸ்மா”, என்று எழுந்து சென்று, தமக்கு பிடித்த வெள்ளை மற்றும் மஞ்சள் நிற ரோஜாவை பறித்து, தனது நீளமான கூந்தலில் சொருகிக்கொண்டாள் பூஜா.
“மிக்க நன்றி மா”, என்ற பூஜாவின் ஆனந்தத்தை கண்டு தானும் மகிழ்ந்த அனு,
“இனிமே தினமும் நீயாவே காலை காபி கலந்து கொண்டு வா, சரியா”,என்றாள்.
“கண்டிப்பா மா”, என்று அவள் கூற,
“தினமும் உனக்கு பிடித்த பூவையும் எடுத்து வெச்சுக்கோ” என்று புன்னகைத்தாள் அனு.
மிகுந்த மகிழ்ச்சியுடன், வாய்நிறைய சிரித்துக் கொண்டு, வெளியேறிய பூஜா… வாசலருகே ரஞ்சினியை பார்த்து எரிச்சலுற்றாள்.
‘எப்போதும் இவளுக்கு இதே வேலையா போச்சு’, என்று நினைத்துக் கொண்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் பூஜா.
நாட்கள் ஓடின… அனு, பூஜாவிடம் ஓரளவுக்கு சினேகமானாள்.
அதன் பலனாய், மூன்று வேளையும் பூஜாவின் கட்டாயத்தில் கொஞ்சம் உணவை சுவைத்தாள்.
ஊமையோ என்று நினைக்கும் அளவிற்கு அமைதியாய் இருந்த அனு, இப்போது கொஞ்சம் பேச துவங்கினாள்.
பூஜாவின் கலகலப்பான குழந்தை குணத்தினால், அனுவின் மனம் லேசானது. ஆனால், அது வெகு காலம் நீடிக்கவில்லை.
தொடரும்…