என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -6

அத்தியாயம் -6(1)

மூன்று மாதக் குழந்தையோடு கணவனின் வீடு வந்து விட்டாள் ஸ்ருதி. குழந்தைக்கு ‘ஜிவின்’ என பெயரிட்டிருந்தாள். மனைவியும் மகனும் வருவதால் அன்று விடுப்பு எடுத்திருந்தான் சமரன்.

இன்னும் இரண்டு மாதங்கள் இரு என சொன்னாலும் பெண் கேட்க மாட்டாள் என்பதால் குழந்தையை எவ்வாறு பேணுவது என நன்றாக சொல்லிக் கொடுத்து, அவள் கையாளும் விதத்தில் திருப்தியடைந்த பின்னர்தான் மகள் இங்கு வர சம்மதித்திருந்தார் லதா.

செல்வராஜ், லதா தம்பதிகளுக்கும் கூட பாக்யா பற்றிய விவரம் தெரிய வந்திருந்தது. ஸ்ருதி விஷயத்தில் ஏற்கனவே புகழேந்தி கோவத்தில் இருக்க, பாக்யாவிடம் வெளிப்படையாக உறவு கொண்டாட முனையவில்லை. ஆனால் மகளை மருமகன் வீட்டில் விட வந்த இன்று மகள் கேட்டுக் கொண்டதன் பெயரில் பாக்யாவை பார்க்க சென்றனர்.

அவந்திகாவின் திருமணம் சமீபத்தில் இருப்பதால் இரண்டு வாரங்கள் விடுப்பு எடுத்திருந்தார் பாக்யா. அனன்யாவுக்கும் தேர்வு முடிவுகள் வந்திருத்தன. நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாள். அக்காவின் திருமணத்துக்கு பின் வேலை தேடலாம் என இருக்கிறாள்.

பாக்யாவின் இன்றைய நிலையை நினைத்து செல்வராஜுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது.

‘உன் கணவர் இறந்தது எனக்கு தெரியாது, அப்போதே தெரிந்திருந்தால் உன் அண்ணனுக்கு தெரியாமலாவது உதவியிருப்பேன்’ என ஆதங்கமாக சொன்னவர் ‘தனியாக இருந்தே இரண்டு பெண்களை வளர்த்து ஆளாக்கி விட்டாய்!’ என பெருமையாகவும் சொன்னார்.

திருமணத்திற்கு பத்திரிகை வைப்பேன், கண்டிப்பாக வர வேண்டும் என கேட்டுக் கொண்டார் பாக்யா.

“வரக் கூடாதுன்னு எல்லாம் எங்களுக்கு எண்ணம் இல்லை ம்மா, உன் பெரியப்பா ஒருத்தர் மேலூர்ல இருக்கார் தெரியும்தானே, அவர் பேத்திக்கும் அன்னிக்குத்தான் கல்யாணம். உன் அண்ணன் போவார், நாங்க போகலைனா ஏன்னு கேள்வி வரும், இப்பவே முறைச்சுக்கிட்டு திரியறவர் அப்புறம் என்ன செய்வார்னு தெரியாது. ஆனா கண்டிப்பா இன்னொரு நாள் வர்றோம்” என்றார் செல்வராஜ்.

அவரது நிலையையும் புரிந்து கொண்ட பாக்யா மேற்கொண்டு வற்புறுத்தவில்லை. லதாதான், “நாங்க வரலைனா என்ன, ஸ்ருதி அவ வீட்டுக்காரரோட வருவா” என சமாதானமாக சொன்னார்.

இவர்கள் வந்த உடனே எப்படி பேசுவார்களோ நடந்து கொள்வார்களோ என யோசித்த அனன்யாவுக்கு இப்போது இவர்களை மிகவும் பிடித்து விட்டது.

குழந்தையை பார்க்க மாலையில் செல்லலாம் என பாக்யா சொல்லியும் கேளாமல் பெண்கள் இருவரும் அப்போதே அவர்களுடனே கிளம்பி விட்டனர்.

இவர்கள் வீட்டுக்குள் நுழைகையில் கையில் மகனை அணைவாக பிடித்த படி சோஃபாவில் அமர்ந்திருந்தான் சமரன்.

சிரிப்பும் தலையசைப்புமாக அவர்களை வரவேற்றவன் உடனே உதட்டில் விரல் வைத்து சத்தம் செய்யாதீர்கள் என சாடை காட்டவும் செய்தான். மகன் உறங்குகிறானாம்.

“தூங்குற புள்ளைய படுக்க போடாம நீ ஏன் கைல வச்சிருக்க? ஸ்ருதி என்ன செய்றா?” எனக் கேட்டுக் கொண்டே சமரின் அருகில் அமர்ந்தார் செல்வராஜ்.

“மெல்ல பேசுங்க மாமா” என சமர் சொல்லிக் கொண்டிருக்க, சமையலறையிலிருந்து மிக்சி ஓடும் சத்தம் கேட்டது. அவன் தன் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டே எரிச்சலோடு சமையலறையை நோக்க, தொடர்ந்து குக்கர் விசிலும் கேட்டது.

சிணுங்கிய மகனை நோக்கி குனிந்த சமரன், “ஒன்னுமில்லடா கண்ணா, அப்பா இருக்கேன் பாருங்க” என சமாதானம் செய்ய, சிரித்துக்கொண்டே தன் மகளை காண சென்றார் லதா.

குழந்தை நன்றாக விழித்துக் கொண்டு அழ, செல்வராஜும் சிரித்தவர், “உன் ஸ்ருதிதான் காரணம், போ போய் அவகிட்ட கோவப்படு” என கிண்டலாக சொன்னார்.

“நாங்க வந்திருக்கும் போது தூங்கினா எப்படி, குழந்தையை கொடுங்க ஸார்” எனக் கேட்டு அழும் குழந்தையை தூக்கிக் கொண்டாள் அனன்யா. பின் அவள் வசம்தான், அவந்திகா சற்று நேரம் இருந்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டாள். அனன்யாவுக்கு இன்னும் குழந்தையை பிரிய மனம் வராததால் அங்கேயே இருந்தாள்.

செல்வராஜ் ஓய்வெடுக்க அறைக்கு சென்று விட்டார். லதாவும் ஸ்ருதியும் சமையலில் ஈடுபட்டிருந்தனர். அவ்வப்போது மகனுக்கு பசியாற்ற மட்டும் செய்தாள் ஸ்ருதி.

ஹாலில் படுக்கை போட்டு அதில் குழந்தையை கிடத்தி விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள் அனன்யா. சமரனும் அங்குதான் சோஃபாவில் அமர்ந்திருந்தான்.

ஸ்ருதி மற்றும் குழந்தையின் சாமான்கள் அனைத்தையும் அவர்கள் வந்த காரின் டிக்கியில் அடைக்க முடியவில்லை. ‘முக்கியமானதை மட்டும் எடுத்து செல், மிச்சத்தை பின் நான் எடுத்து வருகிறேன்’ என சொல்லியிருந்தான் விதுரன்.

அசோக் அவனது அத்தையை சந்தித்தது பற்றியெல்லாம் தன்னிடம் எதுவுமே சொல்லவில்லை என்ற கோவத்தில் அவனிடம் சரியாக பேசுவதில்லை விதுரன். அசோக்கிற்கும் நண்பனை சமாதானம் செய்ய சரியான நேரம் வாய்க்கவில்லை.

அன்று நேரம் இருக்கவும் காண சென்றிருந்தான். ஒரு வழியாக விது கொஞ்சமாக இறங்கி வந்தான்.

 பேச்சு வாக்கில் ஸ்ருதியின் சாமான்கள் இங்கு இருப்பதை விது சொல்லவும், “நான் இன்னிக்கு ஃப்ரீதான், நான் கொண்டு போய் கொடுக்கிறேன்” என கிளம்பி விட்டான். அவனுமே ஒரு முக்கிய வேலையாக அத்தையை காண வேண்டும் எனதான் இருந்தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான்.

அவந்திகாவின் திருமணம் வரை அப்பாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை அசோக். ஆகவே மிகவும் அத்தியாவசியம் என்றால் மட்டும் அப்பா நம்பும் படியாக ஏதாவது காரணத்தை கண்டுபிடித்து பொய் சொல்லி விட்டு அத்தை வீட்டிற்கு வருவான். இப்போது விஜயாவின் ஆதரவும் மகனுக்கு இருக்க, மகன் சரியாக இருக்கிறான், தேவையில்லாத உறவுகளோடு பழகுவதில்லை என நம்பிக் கொண்டிருந்தார் புகழேந்தி.

இப்போதும் ‘ஸ்ருதி வீடு வரை செல்ல வேண்டும், எனக்கு அதிக வேலை அதனால் அசோக் செல்கிறான்’ என புகழேந்திக்கு அழைத்து சொல்லியிருந்தான் விது. ஸ்ருதி என்றாலே பிடிக்காது என்றாலும் தன் மாப்பிள்ளை உதவி என சொல்கையில் மறுக்க முடியாமல் மகன் திண்டுக்கல் செல்ல அனுமதி தந்து விட்டார்.

சமரனின் வீட்டின் உள்ளே வந்த அசோக்கின் பார்வையில் விழுந்தாள் குழந்தையோடு இருந்த அனன்யா. பார்த்த நொடியிலேயே இன்று எப்படியாவது இவளை சமாதானம் செய்து விட வேண்டும் என முடிவு கட்டி விட்டான்.

“வாடா என்ன திடீர்னு சொல்லவே இல்லை” என சமர் வரவேற்பு கொடுக்கவும், “ஏன் சொல்லாம வந்தா விரட்டி விட்ருவியா?” எனக் கேட்டான் அசோக்.

நிமிர்ந்து பார்த்த அனன்யாவின் இதயம் ஒரு நொடி நின்று பின் துடித்தது. அவள் மதுரை சென்று விட்டு வந்த பிறகு அசோக்கை தவிர்க்க ஆரம்பித்து விட்டாள். இவன் இவளது வீடு செல்லும் நேரமெல்லாம் ‘வாங்க’ என் அழைப்பதோடு சரி, வேலை இருக்கிறது என சொல்லி வெளியில் சென்று விடுவாள், அல்லது தலை வலிக்கிறது என சொல்லி அறைக்குள் முடங்கிக் கொள்வாள்.

அனன்யாவின் ஒதுக்கம் அப்பட்டமாக இவனுக்கும் தெரிகிறதுதான், கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

இப்போதும் “வாங்க” என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டாள் அனன்யா.

“ஆஹா குட்டி பாஸ் சமத்தா உங்கிட்ட அடைக்கலம் ஆகிட்டாரா? சாமான்யமா யார்கிட்டேயும் போக மாட்டாரே” எனக் கேட்டுக் கொண்டே அவளது அருகில் அமர்ந்தான் அசோக். அவனுடைய அருகாமையில் அவளது இதயம் எம்பிக் குதித்து தரையில் விழாத குறைதான்.

“டேய் டேய் ஹேண்ட் வாஷ் பண்ணிட்டுதான் புள்ளைய தூக்கணும், சொல்லிட்டேன்” என்றான் சமர்.

நண்பனை முறைத்தாலும் குழந்தையை தூக்கவெல்லாம் இல்லை அசோக். எழுந்து போய் சோஃபாவில் நண்பன் பக்கத்திலேயே அமர்ந்து விட்டான்.

விதுரனை சமாதானம் செய்தது, எதற்காக இங்கு வந்தேன் என்பதை எல்லாம் தோழனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அசோக். ஸ்ருதியும் லதாவும் வந்து அவனிடம் பேசி விட்டு சென்றனர்.

அனன்யாவின் பார்வை அவனிடம் செல்லவே இல்லை. அவளின் மனதில் இருப்பதெல்லாம் சமரனுக்கு தெரியா விட்டாலும் அசோக்கிடம் நல்ல மாதிரியாக கல கலப்பாக பேசுவாள் என தெரியும். இப்போது அவள் அமைதியாக இருக்கவும் அசோக்கிடம் கண்களால் ‘என்ன?’ என இரகசியமாக கேட்டான்.

“என் அப்பா பேசினத்துக்கு நான் என்னடா செய்வேன்? வேணும்னே அவாய்ட் செய்றா, நீயே கேளுடா அங்க” என வெளிப்படையாக சொன்னான் அசோக்.

அவள் விலுக் என நிமிர்ந்து பார்க்க, “ஏம்மா இவன் என்ன பண்ணுவான், பாவம் இவன்கிட்ட பழம் விட்ரு” என சிரித்துக் கொண்டே சொன்னான் சமர்.

“அப்படிலாம் இல்லை ஸார், நான் எப்பவும் போலதான் இருக்கேன்” என்றாள்.

“எனக்கே தெரியுதே, நீ நார்மலா இல்லைனு. உன் மாமா பேசினத வச்சு இவனை அவாய்ட் பண்ணாத, எப்பவும் போல இரு” என சமர் சொல்ல, தலையாட்டிக் கொண்டாள்.

“ஹப்பா என்னா பவ்யமா நடத்துக்கிறா உங்கிட்ட? போலீசுக்கு இவ்ளோ மரியாதையா என் அத்தை பொண்ணுகிட்ட! தெரிஞ்சிருந்தா…” என அசோக் சொல்லிக் கொண்டிருக்க, “தெரிஞ்சிருந்தா மட்டும்?” என கிண்டலாக கேட்டான் சமர்.

“தெரிஞ்சிருந்தா ஸ்கூல் டைம்ல ஃபேன்சி ட்ரெஸ் காம்படீஷன்ல போலீஸ் வேஷம் போட்ருந்தப்போ எடுத்த ஃபோட்டோவை இவளுக்கு காட்டியிருப்பேன்னு சொல்ல வந்தேன்டா” என்றான் அசோக்.

நண்பனின் வயிற்றில் செல்லமாக குத்திய சமர், “எது உருண்டை மூஞ்சும் தொப்பை வயிறுமா நீ இருந்தப்போ யூனிஃபார்ம் ஷர்ட் போட்டு பட்டன் பிஞ்சு போச்சே அப்போ எடுத்த ஃபோட்டோவா?” எனக் கேட்டான்.

சமரனை குனிய வைத்து அவனது முதுகில் அடி வைத்தவன், “போதும்டா ராஸ்கல்! அவ ஏற்கனவே நல்லா ஓட்டுவா என்னை, நீ தனியா வேற கன்டெண்ட் தர்றியா?” என சொல்லிக் கொண்டே அனன்யாவை பார்த்தான்.

குழந்தையின் மீதே பார்வையை வைத்திருந்தவள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“ஸ்ருதி இங்க வா, உன் புருஷர் என்னை டேமேஜ் பண்றார், வந்து என்னன்னு கேளு” என அசோக் சத்தமிட, கையில் கரண்டியோடு வந்த ஸ்ருதி, “அப்பா தூங்கிட்டு இருக்கார், ஏன் சவுண்ட் போடுற, அமைதியா இரு” என அதட்டினாள்.

“போனா போகுதுன்னு உன் சாமான் எல்லாம் தூக்கிட்டு வந்தா நல்லா இருக்கு உன் மரியாதை, கோவமா இருக்கேன் நான்” என்றவன் ஸ்ருதியை எரிச்சல் படுத்த வேண்டுமென சமரனின் தொடையில் வலிக்க கிள்ளினான்.

அருகில் வந்த ஸ்ருதி, அத்தை மகனின் தோளில் கரண்டியால் ஒரு அடி வைத்து முறைத்தாள். அந்த கரண்டியை பிடுங்கிய அசோக், சமரனை அடிக்க பார்க்க, சட் என கரண்டியை மீண்டும் தன் வசப் படுத்தினாள் ஸ்ருதி. அதில் கரண்டியில் இருந்து எதுவோ அசோக்கின் வலது கண்ணில் தெறித்து விட்டது.

“ஆ…” என சொல்லி அசோக் கண்ணை கசக்கவும் குழந்தையை படுக்கையில் கிடத்தி வேகமாக அவனிடம் வந்து நின்றாள் அனன்யா.

‘என்ன விளையாட்டு இது?’ என சமரன் மனைவியை கடிந்து கொண்டிருந்தான்.

 கண்ணை கசக்கிய அசோக்கின் கையை விலக்கி விட்டு, என்னவென பார்த்து விட்டு உள்ளே ஓடி சென்று பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வந்து கண்ணை கழுவ வைத்தாள் அனன்யா.

குழந்தை பசிக்கு அழ, அதை கூட கவனிக்க மறந்து அனன்யாவை பார்த்த படி நின்றிருந்தாள் ஸ்ருதி. அசோக்கிற்கு ஒன்று எனவும் அதற்கான அவளது துடிப்பும் பரிதவிப்பும் வேகமும் ஸ்ருதிக்கு வித்தியாசமாக பட்டது.

குழந்தையை தூக்கி மனைவியின் கையில் கொடுத்த சமரன், “அவனை நான் பார்த்துக்கிறேன், நீ ஜிவினை பாரு” என சொல்லி அறைக்கு அனுப்பி வைத்தான்.

அசோக்கிற்கு பெரிதாக ஒன்றுமில்லை. தண்ணீரால் கழுவவும் சரியாகி விட்டது. “என்னடா புல் தடுக்கி பயில்வான்!” என அவனது தோளில் வேகமாக தட்டினான் சமர். உரமேறிய கையின் அடி வலித்து விட முகத்தை சுருக்கினான் அசோக்.

“அச்சோ ஸார், இவ்ளோ வேகமா அடிச்சா வலிக்காதா? மெதுவா ஸார்” என்றாள் அனன்யா.

நெற்றி சுருக்கி அவளை பார்த்த சமரன் ஒரு புன்னகை மட்டும் செய்தான்.