அத்தியாயம் -5(2)
புகழேந்தி மாறவே இல்லை. எங்களை மீறி சென்றாய், அதனால்தான் அந்த வாழ்க்கை உனக்கு நீடிக்கவில்லை, நீயும் கஷ்ட படுகிறாய், சொத்து கேட்க வந்தாயா இப்போது என்றெல்லாம் தங்கையை பேசி விட்டார்.
கோவம் கொண்ட அனன்யா, “உங்க சொத்தை நீங்களே வச்சுக்கோங்க, மனுஷனா இருப்பீங்க கொஞ்சோண்டு பாசம் ஒட்டிக்கிட்டு இருக்கும்னு என் அம்மா தப்பா நினைச்சிட்டாங்க. வந்து பார்த்தாதான் தெரியுது நீங்கலாம் மனுஷர் இல்லைனு” என பேசி விட்டாள்.
ஆத்திரம் கொண்ட புகழேந்தி அவளை பாராமல் தன் தங்கையையே பார்த்து திட்டினார். பாக்யா அழ, செய்வதறியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தார் விஜயா.
குளித்து விட்டு வந்த அசோக் சத்தம் கேட்டு அவசரமாக கைக்கு கிடைத்ததை அணிந்து கொண்டு வெளியில் ஓடி வந்தான்.
“போதுமாம்மா, தெரிஞ்சுகிட்டியா இவரை பத்தி, நீ வீட்ட விட்டு வந்ததுதான் அவமானமாம், எப்படி பேசுறார் பார், நமக்குத்தான் இங்க நிக்கிறது அவமானம், வா போலாம்” என சொல்லி அம்மாவின் கையை பிடித்து இழுத்தாள் அனன்யா.
“வாய மூடிகிட்டு வெளில போ!” என கோவமாக இரைந்தார் புகழேந்தி.
“அப்பா என்னப்பா நீங்க?” என தந்தையை கடிந்து கொண்ட அசோக், முகம் வெளிறிப் போய் அழுகையோடு நின்றிருந்த அத்தையிடம் சென்று அவரின் கையை ஆறுதலாக பிடித்தான்.
அவனை தெரிந்தது போல அவர்கள் காட்டிக் கொள்ள முயலவில்லை. ஆனால் அசோக் அப்படி நிராதாரவாக அவர்களை நிற்க விடாமல், “நான்தான் வரவேணாம்னு சொன்னேனே அத்தை, அழாதீங்க, போலாம் வாங்க” என்றான்.
ஆகவே மகனுக்கு இவர்களை முன்பே தெரியும் என்பது புகழேந்திக்கு புரிந்து விட்டது. சரியான காரணம் சொல்லாமல் அடிக்கடி வெளியில் செல்லும் மகனையும் அழகான தங்கை மகளையும் பார்த்தவருக்கு பக் என்றானது.
மனைவியின் பக்கம் திரும்பியவர், “என்னடி என்ன… உனக்கும் தெரியுமா இது? ஓடிப் போனவ அவ மகளை வச்சு என் மகனை மயக்க திட்டம் போடுறாளா? நீயும் உடந்தையா?” என கத்தினார்.
அனன்யாவுக்கு மிகுந்த ரோஷமாகி விட்டது.
“என்ன வேணா பேசலாம்னு பேசாதீங்க, ஊர் உலகத்துல உங்க பையன்தான் வசதியான அழகான பையனா? வேற ஆள் இல்லயா? என்ன நினைச்சிட்டீங்க எங்களை பத்தி?” என அழுகையும் ஆத்திரமுமாக கேட்டாள் அனன்யா.
“ஏம் ப்பா சம்பந்தம் இல்லாம ஏதேதோ பேசுறீங்க?” என கடிந்த அசோக், அத்தையின் முகத்தை காண முடியாமல் சங்கட பட்டான்.
“அதுங்கள வெளில அனுப்பிட்டு உள்ள போடா முதல்ல” என மகனிடமும் சத்தம் போட்டார் புகழேந்தி.
அப்பாவை முறைத்த அசோக், உடனே காரெடுத்து வந்து அவர்களை ஏறும் படி சொன்னான்.
பார்த்திருந்த புகழேந்தி மனைவியை சத்தம் போட, அப்பாவை வந்து சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்த அசோக் காரை எடுத்து விட்டான்.
பேருந்தில் சென்று கொள்வோம் என அனன்யா சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை அவன். வழியெல்லாம் அமைதியாக அழுது கொண்டே வந்தார் பாக்யா.
மதுரைக்கு வெளியில் காரை நிறுத்தி தேநீர் வாங்கிக் கொடுத்தான்.
“உங்களை பார்த்த உடனே வரவேற்பு தருவார்னு எதிர் பார்த்திட்டு வந்தீங்களா, இல்லைதானே? அவந்திகா கல்யாணம் இருக்கும் போது அதை பத்தி மட்டும்தான் நினைக்கணும், இப்படி அழுது உடம்ப கெடுத்துப்பீங்களா?” என அத்தையை சமாதானம் செய்தான் அசோக்.
பாக்யாவிற்கும் அழுகை மட்டுப்பட்டது. பின் வேறு ஏதோ பேசி அத்தையின் மன நிலையை மாற்றினான். மன வருத்தம் இருந்த போதிலும் அழுகையை சுத்தமாக நிறுத்தி இயல்பாகி விட்டார் பாக்யா.
அவருக்கு போய் இப்படிப்பட்ட மகனா என நினைத்துக் கொண்டாள் அனன்யா. அவள் பக்கம் திரும்பியவன், “கொஞ்ச நேரம் விட்ருந்தேனா உங்கண்ணன் மண்டைய உடைச்சு விட்ருப்பாத்தை இவ, அவரை காப்பாத்ததான் உங்களை அங்கேருந்து அழைச்சிட்டு வந்தேன்” என்றான்.
அனன்யா முறைக்க, “இவ இடைல பேசப் போய்தான் அண்ணனுக்கு ரொம்ப கோவம் வந்திடுச்சு” என மகளை குறை சொன்னார் பாக்யா.
“உன்னை பேச பேச வேடிக்கை பார்க்க சொல்றியா என்னை?” என அதட்டினாள் அனன்யா.
“நான் விளையாட்டுக்கு பேசப் போய் அதை சண்டையா மாத்த கூடாது அத்தை. அம்மாவை பேசினா யாருக்கா இருந்தாலும் கோவம் வரதான் செய்யும், அப்பா வரம்பு இல்லாமதான் பேசிட்டார், விடுங்க” என அம்மாவுக்கும் மகளுக்கும் சமாதானம் செய்து வைத்தான்.
அசோக்கின் முகத்தை காணாமல் வேறெங்கோ பார்த்த படி நின்றிருந்தாள் அனன்யா. அவளின் மனம் வெகுவாக காயப்பட்டு போனது என்பது இவனுக்கும் புரியத்தான் செய்தது. உடனே சரியாகி விடாதே, ஆகவே அதை பற்றி பேசாமல் விட்டான்.
அருகில் பேருந்து நிறுத்தம் இருக்க, “உனக்கு வேலை இருக்கும், அண்ணன் அண்ணிய திட்டினார்தானே, நீ வீட்டுக்கு போ ப்பா, நாங்க போயிக்குவோம்” என்றார் பாக்யா.
அசோக்குக்கும் அம்மாவை நினைத்து கவலை உண்டாக, அங்கேயே அவர்களை பேருந்து ஏற்றி விட்டு தன் வீட்டுக்கு புறப்பட்டான்.
டிராவல்ஸ் அலுவலகம் செல்லாமல் மகனின் வரவுக்குத்தான் காத்திருந்தார் புகழேந்தி. விஜயா மகளுக்கு அழைத்து சொல்லியிருக்க, நிரஞ்சனாவும் விதுரனும் வந்து விட்டனர்.
புகழேந்தி அழுத்தமான அமைதியோடு மகனை முறைத்து பார்த்தார். விஜயாதான், “என்னடா அவங்கள முன்னாடியே தெரியுமா? நீதான் இங்க வர சொன்னியா?” என கேட்டு ஆரம்பித்து வைத்தார்.
மகனின் பதிலுக்காக காதை தீட்டி வைத்திருந்தார் புகழேந்தி. ஸ்ருதியின் பெயரை எடுக்காமல், அவனே அவர்களை தெரிந்து கொண்டதாகவும், எப்போதாவது போய் பார்ப்பேன் எனவும் சொன்னான் அசோக்.
“உங்களுக்கும் தெரியும்தானே?” என கணவனிடம் குற்றம் சுமத்துவது போல கேட்டாள் நிரஞ்சனா.
“அடி ஏன் டி நீ வேற, உன் அண்ணன் எப்பவோ என்னை தள்ளி வச்சிட்டான், எனக்கு எதுவும் தெரியாது” என நண்பனை முறைத்துக் கொண்டே சொன்னான் விதுரன்.
“அவங்க திண்டுக்கல்லேருந்து வந்திருக்கிறதா அம்மா சொன்னாங்களே, ஸ்ருதிக்கு தெரியுமா?” என கேள்வி எழுப்பினாள் நிரஞ்சனா. என் தங்கையை ஏன் இழுக்கிறாய் என மனைவியிடம் கோவப் பட்ட விதுரன், அசோக்கை முறைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அப்பா என்ன சொல்வார் என அவரை பார்த்த படி நின்றிருந்தான் அசோக்.
“இனி திண்டுக்கல் பக்கம் போவ கூடாது நீ, உன் இஷ்டப்படி நடப்பேன்னா புள்ளைன்னு பார்க்க மாட்டேன், ஒழுங்கா இரு” என எச்சரிக்கை போல சொல்லி விட்டு அலுவலகம் கிளம்பி சென்று விட்டார் புகழேந்தி.
அம்மாவையும் தங்கையையும் உட்கார வைத்து அத்தையின் நிலையை விளக்கமாக எடுத்து சொல்லி, “பாவம்லம்மா, நாம்ம வீட்டு பொண்ணும்மா அவங்க, கண்ணு முன்னாடி கஷ்ட படும் போது எப்படி விட முடியும்?” எனக் கேட்டான்.
விஜயாவுக்கும் மனம் இளகத்தான் செய்தது, ஆனால் கணவனை மீறி எதுவும் செய்ய முடியாதே. என்ன சொல்வதென பார்த்தார்.
“சரிண்ணா, இது வரைக்கும் நீ ஹெல்ப் பண்ணின ஓகே, இப்போ அப்பா இவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா சொல்லும் போது என்ன செய்வ? அவரை எதிர்த்து எதுவும் செய்யக் கூடாதுதானே?” என்றாள் நிரஞ்சனா.
“உன்னை தனியா கவனிக்கலாம்னு இருந்தேன், எதுக்கு விதுவை கோவ படுத்துற மாதிரி பேசின? அவன் வேற சாமான்யமா இறங்கி வர மாட்டான்” என தங்கையை கடிந்தான் அசோக்.
“ஸ்ருதிக்கு தெரியாதுன்னு நீ சொல்லாத, நம்ப மாட்டேன் நான். அப்பா முன்னாடி கேட்ருக்காம தனியா கேட்ருக்கலாம் நான், சாதாரணமாதான் கேட்டேன், அவருக்கு இப்போல்லாம் நிறைய கோவம் வருது” என அலுப்பாக சொன்னாள் நிரஞ்சனா.
திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைய போகிறது, ஆனால் இன்னும் குழந்தைப்பேறு இல்லை. சென்ற மாதம் மருத்துவமனை சென்று பார்த்தும் விட்டனர், இருவருக்குமே எந்தக் குறையும் இல்லை என சொல்லி விட்டார் மருத்துவர்.
யாரும் குறையாக பேசவில்லை என்றாலும் குழந்தை இருந்தால் தன் மகளுக்கும் மருமகனுக்கும் அடிக்கடி சண்டை வராதோ என நினைத்தார் விஜயா. மகனுக்கு கூட ஸ்ருதியுடன் நடக்க வேண்டிய திருமணம் நடக்காமல், அதற்கு பின் கூட நல்ல வரன் அமைவதில் ஏதாவது தடங்கல் வந்த வண்ணம் இருக்க கலக்கமாக இருந்தது.
இந்த வீட்டில் பிறந்த பெண் கஷ்டத்தில் கண்ணீர் விடுவதால் அது இப்படி தன் பிள்ளைகளை பாதிக்கிறதோ என கூட எண்ணம் ஓடியது.
“நீ அவங்களுக்கு உதவுறது நிறுத்தாத, ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆகுற வரைக்குமாவது பார்த்துக்க, அப்பாவுக்கு சொல்லணும்னு இல்லை” இத்தனை வருடங்கள் கணவரை எதிர்த்து எதுவும் செய்திராத விஜயா மகனிடம் இப்படிதான் சொன்னார்.
நிரஞ்சனா வியப்பாக தன் அம்மாவை பார்க்க, “நானும் அதைத்தான் நினைச்சேன் மா, அத்தையோட பெரிய பொண்ணுக்கு கல்யாணம் வருது, நான் நடத்திக் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கேன் மா” என்றான் அசோக்.
“செய்டா” என அனுமதி தந்து விட்டார் விஜயா.
“ம்மா… அண்ணனை அப்பாகிட்ட நல்லா மாட்டி விட வழி பார்க்கிற நீ” என எச்சரிப்பது போல சொன்னாள் நிரஞ்சனா.
“என்னடி இப்போ, உம்மேல என்னதான் கோவம்னாலும் உனக்கொன்னுனா உன் அண்ணன் வருவானா மாட்டானா? அப்படி அவன் வந்து நிக்கலைனா உனக்கு எப்படி இருக்கும்? உன் அப்பா செய்ய தவறின கடமையை இவன் நின்னு செய்றான், அவ்ளோதான் புரிஞ்சுதா? நீ எதுவும் உன் அப்பாகிட்ட வத்தி வைக்காம இருந்தா சரிதான்” என சொல்லி மகளை துள்ளாமல் இருக்க செய்து விட்டார் விஜயா.
என்னவோ செய்து கொள்ளுங்கள் என விட்டு விட்டாள் நிரஞ்சனா.
அசோக் அலுவலகம் சென்று விட்டான். வேலையின் காரணமாக வேறு சிந்தனைகள் இல்லை. இரவில் உறங்கும் போதுதான் வீடு சென்றார்களா இல்லையா என அத்தை அறிவிக்கவே இல்லையே என நினைவு வந்தது.
நேரம் பத்தை கடந்திருக்க, அத்தை உறங்கியிருக்க கூடும் என்பதால் அனன்யாவுக்கு செய்தி அனுப்பி கேட்டான்.
‘வந்துவிட்டோம்’ என மட்டும் மொட்டையாக செய்தி அனுப்பியிருந்தாள்.
அப்பா பேசியதில் கோவமாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன், ‘அத்தை பொண்ணை சமாதானம் செய்ய என்ன செய்யணும் நான்?’ எனக் கேட்டு செய்தி அனுப்பி வைத்தான்.
‘குட் நைட்’ என செய்தி அனுப்பியவள் ஆஃப் லைன் சென்று விட்டாள். “சண்டைக்காரிக்கு கோவம் உச்சத்துல இருக்கு” என முணு முணுத்துக் கொண்டே படுத்து விட்டான் அசோக்.
தன் மாமா பேசியதை நினைத்து நினைத்து அனன்யாவுக்கு அவளை மீறிக் கொண்டு அழுகையாக வந்தது. அசோக்கின் நினைவை அடியோடு பிடுங்கி எறிந்து விட வேண்டும் என வைராக்கியமாக நினைத்துக் கொண்டாள்.