என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -5
அத்தியாயம் -5(1)
அனன்யாவை அருகில் உள்ள கிளினிக் அழைத்து சென்று காண்பித்து சிகிச்சை செய்து, பயப்பட ஒன்றுமில்லை என உறுதி படுத்திக் கொண்ட பிறகுதான் நிம்மதியடைந்தான் அசோக்.
தங்கையை இன்னும் காணவில்லையே என கைப்பேசிக்கு அழைத்து விட்டாள் அவந்திகா. பயமுறுத்தாமல் விவரத்தை சொல்லி, “அம்மாகிட்ட சொல்லாத, கொஞ்ச நேரத்துல வந்திடுவேன்” என மட்டும் சொன்னாள் அனன்யா.
அன்னயாவின் தந்தை தேள் கடித்துதான் இறந்து போனார். அந்த பயத்தில்தான் அசோக்கிடம் எச்சரிக்கை செய்ய கூட பேச்சு வராமல் அவளே தேளை அப்புற படுத்தியிருந்தாள். அக்காவிடம் பேசி விட்டு அசோக்கை பார்க்க அவன் அமைதியாக அவளையே பார்த்த வண்ணம் நின்றிருந்தான்.
“விஷமெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டாங்களே அப்புறம் என்ன?” எனக் கேட்டாள்.
“தேளை புடிச்சு தள்ளினதுக்கு என்னை புடிச்சு தள்ளியிருக்கலாம் நீ” என்றான்.
“நல்ல வாயப்ப மிஸ் பண்ணிட்டேன் போலயே, இப்ப வேணும்னா பிடிச்சு தள்ளி விடவா?” எனக் கேட்டாள்.
அவன் சரி என தலையசைத்து சிரிக்க, “அப்படிலாம் செய்ய முடியாது என்னால” என்றவளின் குரலில் தெரிந்த எதுவோ அவனை குழப்பமாக்கியது. ஆனால் அவள் அவனை யோசிக்க விடாமல் அவசரப் படுத்தி அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
அவளுடன் வீட்டுக்கு வருவதாகத்தான் இருந்தான், அவளுக்கு நடந்ததை மறைத்து அம்மாவிடம் பொய் சொல்ல சங்கடப் படுவான், அம்மாவும் பயந்து போவார் என்பதால் தெரு முனையிலேயே பைக்கை நிறுத்த சொல்லி இறங்கிக் கொண்டாள்.
“எப்படி இருக்குன்னு நைட் ஒருமுறை போன் பண்ணி சொல்றியா?” எனக் கேட்டவன் கையோடு அவளது கைப்பேசி இலக்கத்தையும் பெற்றுக் கொண்டான்.
“சரி சொல்றேன், இதையே நினைச்சிட்டு இருக்காதீங்க” என சொல்லி கிளம்பி விட்டாள்.
இரவு வீடு வந்த சமரன் பின் பக்கத்தில் பாத்திரங்கள் எல்லாம் இருப்பதை கண்டு விட்டு அசோக்கிற்கு அழைத்தான். நடந்தவை எல்லாம் அவன் சொல்ல, “இங்க எப்படிடா தேள் வந்துச்சு?” என கேட்டான்.
“அங்கதான் அந்த தேள் சுத்திட்டு இருக்கும், நீயே விசாரிச்சு தெரிஞ்சுக்க” என கடுப்படித்தான் அசோக்.
“போடா இடியட்!” என திட்டியவன் அனன்யாவுக்கு ஒன்றுமில்லையே என்பதை உறுதி படுத்திக் கொண்டு வைத்தான். அடுத்த நாளே விஷப் பூச்சிகள் வராமல் தடுக்க மருந்து அடிக்க ஏற்பாடு செய்து விட்டான்.
அன்னயாவின் நலன் விசாரிக்கவென அவளுக்கு அழைத்த அசோக், அதன் பின் அடுத்த நாளும் அழைத்து பேசினான். அவனது பேச்சில் அக்கறையை தாண்டி வேறு எதுவும் கிடையாது. இவளுக்குத்தான் அவனுடன் பேசுவது காற்றில் மிதப்பது போன்ற உணர்வை தந்தது.
இவளுக்கு சரியானதும் அழைப்பதை நிறுத்திக் கொண்டு விட்டான். எந்த பேச்சாக இருந்தாலும் அத்தையோடு மட்டும்தான். மனம் சுணங்கினாலும் இதுதான் சரி என மனதை தேற்றிக் கொண்டு விட்டாள் அனன்யா.
அனன்யாவுக்கு தேர்வுகள் ஆரம்பித்தன. அத்தை மூலம் அறிந்து கொண்டவன் வாழ்த்து கூறி குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான். பார்த்த உடன் அவளது முகம் வெளிச்சமாகி விட்டது. சற்று நேரம் அளவுக்கு மீறி உற்சாகமாக இருந்தாள்.
அனன்யாவுக்கு தேர்வுகள் முடிந்த சமயம் அவந்திகாவுக்கு ஒரு வரன் அமைந்தது. பெயர் மணிகண்டன், அவளை விட பத்து வயது கூடுதல், பள்ளிப் படிப்பு வரைதான் கல்வித் தகுதி. அவனது சிறு வயதில் தந்தை இறந்து போயிருக்க குடும்பத்தை கவனிக்க படிப்பை விட்டு விட்டானாம். சொந்தமாக சைக்கிள் ஷோ ரூம் வைத்திருக்கிறான்.
பெண் பார்க்க வந்த அன்று அவந்திகாவிடம் தனிமையில் பேசினான்.
ஒரு அக்கா இரண்டு தங்கைகள் என மூன்று உடன்பிறப்புகள், மூவருக்கும் திருமணம் முடித்து ஆசுவாசம் அடையும் போது வயது ஓடியிருந்தது. அவனது அம்மா அவனுக்கு திருமணத்தை முடித்து விட வேண்டும் என முனைப்பாக இருக்கிறார்.
அவன் பேசிய விதம் அவந்திகாவுக்கு பிடித்திருந்தது. பேச்சில் உண்மை மட்டுமே தெரிந்தது.
“என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா? நான்… நான்…” என்றவள் தயக்கத்தோடு, “நிறைய பேர் வந்து பார்த்திட்டு பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க, அதான்…” என்றாள்.
“யாருக்கு யாருன்னு முடிவாகியிருக்கும் போது…” என்றவன் குரலை செருமிக் கொண்டு, “மத்தவங்களுக்கு பிடிக்கலைன்னு சொல்றத நினைச்செல்லாம் வருத்த படுவீங்களா என்ன? எனக்கு உங்களை பிடிச்சிருக்கு, என்னை பிடிச்சிருக்கான்னு யோசிச்சு சொல்லி விடுங்க, நீங்க சொல்றதுதான் முடிவு” என சொல்லி விட்டான்.
மணிகண்டன் எந்த முடிவும் இல்லாமல் அம்மா அழைத்ததற்காகத்தான் பெண் பார்க்க வந்தான். ஆனால் இப்போது அவனது உள்ளுணர்வு சொன்னது, தனக்கானவள் இவள்தான் என. அவளின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பேச்சும் சாந்தமான முகமும் அவனை வெகுவாக கவர்ந்தன.
பிடித்திருக்கிறது என அவனிடம் சொல்ல அவளுக்கு அத்தனை தயக்கம். தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள். யோசிக்க சொன்னதற்கு தலையாட்டுகிறாள் போலும் என நினைத்து அவனும் சென்று விட்டான்.
ஒன்றும் சொல்லாமல் போனவன் சென்ற திசையை ஏமாற்றத்தோடு பார்த்தவளை மட்டும் அப்போது கண்டிருந்தான் என்றால் நிச்சயமாக அள்ளி அணைத்துக் கொண்டிருப்பான்.
அம்மாவிடம் எந்த தயக்கமும் இன்றி இந்த இடத்தையே முடிக்கும் படி சொல்லி விட்டாள் அவந்திகா. ஆனால் பாக்யாவுக்கு மிகுந்த யோசனை.
“எல்லாரும் என்னை புடிக்கல, வேணாம்னு சொல்லும் போது இவர்தானேம்மா பிடிச்சிருக்குன்னு சொல்றார். பத்து வயசு வித்தியாசம்தானே, எனக்கு பெருசா தெரியலை, படிப்பு இல்லைனா என்ன? பண்பா இருக்கார். தனியா பேசும் போது எந்த உண்மையும் மறைக்காம வெளிப்படையா பேசினார். எனக்கு பிடிச்சிருக்கு” என சொல்லி விட்டாள்.
மகளின் குரலே அவளது பிடித்தத்தை சொல்ல, சின்ன மகளை பார்த்தார் பாக்யா.
“அக்கா சொல்றது சரிதானேம்மா, ரொம்ப நல்ல மாதிரியா தெரியுறார், சொந்தமா ஷோ ரூம் இருக்கு, என் கண்ணுக்கும் அவர்கிட்ட எந்த குறையும் தெரியலை” என அனன்யாவும் தன் சம்மதத்தை சொன்னாள்.
உடனே அசோக்கிற்கு தெரியப்படுத்தினார் பாக்யா. அவன் சொன்ன தரகர் பார்த்த இடம்தான், ஆயினும் அவனுக்கு திருப்தியில்லை. தரகரிடம் வேறு இடம் பார்க்க சொல்கிறேன், எங்களுக்காக பார்த்துக் கொண்டு சொல்லாதே என அவந்திகாவிடம் சொன்னான்.
“நிஜமா மனசுக்கு பிடிச்சு போய்தான் சம்மதம் சொன்னேன்” என அவனிடமும் உறுதியாக சொன்னாள் அவந்திகா. பின்னர்தான் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தனர்.
பையனை பற்றி நன்கு விசாரித்து விட்டான் அசோக். அனைவரும் மிகவும் நல்ல விதமாகவே சொன்னார்கள்.
மணிகண்டன் சொல்வதுதான் அங்கு எல்லாம். பெண் கொடுத்தால் போதும், வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, என் மனைவிக்கு தேவையானவை நானே செய்து கொள்வேன் என அவன் சொல்லவும்தான் அசோக்கிற்கு அவந்திகாவின் முடிவு பற்றி முழு திருப்தி.
தினமும் இரவில் அவந்திகாவிடம் சில நிமிடங்களாவது பேசி விடுவான் மணிகண்டன். அவளும் அவனது அழைப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தாள், மலர்ச்சியோடு காணப் பட்டாள். அக்காவிற்காக மகிழ்ச்சி அடைந்தாள் அனன்யா.
அப்படி இருக்க இன்னொரு பிரச்சனை ஆரம்பமானது. அவந்திகாவுக்கு கன்னிகாதானம் கண்ணப்பனும் அவரது மனைவியும் செய்வார்கள் எனதான் இருந்தார் பாக்யா.
இப்போது அவர்களின் பெண்ணுக்கும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர். அவளுக்கு திருமணம் வந்தால் அவளுக்குத்தான் கன்னிகாதானம் செய்ய வேண்டுமாம், ஒரு வருடத்தில் இருவருக்கு கன்னிகாதானம் செய்வது சம்பிரதாயம் இல்லையாம். கண்ணப்பனின் மனைவி இப்படித்தான் முட்டுக்கட்டை போட்டார்.
கண்ணப்பன் அவரது தங்கை மற்றும் தங்கையின் கணவரை வைத்து செய்து கொள்ளலாம் என தீர்வு சொல்லி விட்டார். அனன்யாவின் அத்தை வீட்டுக்காரர் முன்கோபி, தேவையில்லாமல் ஜம்பமாக நடந்து கொள்பவர். தாரை வார்க்க ஒத்துக் கொண்டாலும் திருமண ஏற்பாடுகளில் நிறைய தலையீடுகள் செய்தார்.
அவரை விட சிறியவனான அசோக்கால் அதிகம் எதிர்த்து பேச முடியவில்லை, கண்ணப்பனும் அவரை அனுசரித்து போங்கள் எனதான் அறிவுரை சொன்னார்.
குடும்பத்தில் பெரிய விஷேஷம் நடக்க இருக்க, இன்னும் அண்ணன் குடும்பத்திடம் நல்ல உறவு வாய்க்கவில்லையே என பாக்யாவிற்கு முன்பிலிருந்தே கவலைதான். இப்போது அண்ணன் உடன் நின்றிருந்தால் நாத்தனார் வீட்டுக்காரரை எல்லாம் எத்தனை சுலபமாக சமாளித்திருக்கலாம் என எண்ணம்.
“இந்த நேரத்துல எந்த ரிஸ்க்கும் எடுக்காதீங்க அத்தை, அப்பாலாம் மாறவே மாட்டார். உங்க நாத்தனார் ஹஸ்பண்ட்லாம் பெரிய விஷயம் இல்லை, சமாளிச்சுக்கலாம், கல்யாணத்தை நான் நல்ல படியா நடத்தி தருவேன்” என சொல்லி அத்தையை சமாதானம் செய்து வைத்திருந்தான் அசோக்.
ஆனாலும் அவருக்கு மனம் கேட்கவில்லை. இளமையில் அவருக்கிருந்த வீம்பு இப்போது தளர்ந்து போயிருந்தது.
தன் காலத்துக்கு பிறகு தன் பெண்களுக்கு உறவுகள் அதிகம் இருந்தால் நல்லதுதானே. அண்ணனுக்கு அப்போது என் மேல் கோவம், இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் மனம் மாறாமலா இருக்கும்? பிற்காலத்தில் அசோக்கின் உறவு கூட நீடிக்க வேண்டுமானால் அண்ணன் அண்ணியுடன் உறவை சுமூகமாக்கிக் கொள்ளத்தானே வேண்டும், அண்ணனுடன் சமாதானமாக ஒரு முறை முயன்று பார்த்தால்தான் என்ன? என யோசனை.
தன் மனக்கிடங்கை அன்னயாவிடம்தான் பகிர்ந்து கொண்டார். அசோக்கை போலவே அவளுக்கும் இதெல்லாம் சரி வரும் என தோன்றவில்லை. பாக்யாவோ விடாமல் புலம்பிக் கொண்டே இருக்க, அவரை பார்க்கவே அவளுக்கு பாவமாக இருந்தது.
ஒரு நாள் அம்மாவின் புலம்பல் மிகவும் அதிகமாக இருக்க, ‘சரி வா, உன் அண்ணன் வீட்டுக்கு போய் வருவோம்’ என அம்மாவை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள் அனன்யா.
பேருந்தில் செல்லும் போது அசோக்கிடம் சொல்லலாம் என அனன்யா சொன்னதற்கு பாக்யா ஒத்துக் கொள்ளவில்லை.
“அவன் வேணாம்னுதான் சொல்வான், நாம போய்டலாம்” என உறுதியாக சொல்லி விட்டார்.
இப்போது இருக்கும் புகழேந்தியின் வீடு பாக்யாவிற்கு புதிதுதான். பேச்சுவாக்கில் வீடிருக்கும் இடம் பற்றியெல்லாம் அசோக் சொல்லியிருக்க, அதை வைத்து விசாரித்து சென்று விட்டனர்.