என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -4
அத்தியாயம் -4(1)
கண்ணப்பன் வீடு இருக்கும் பக்கத்து தெருவிலேயே பாக்யா குடும்பத்துக்கு வீடு பார்த்து கொடுத்து விட்டாள் ஸ்ருதி. முன்னர் இருந்த வீட்டிற்கு கொடுத்ததை விட அட்வான்ஸ் தொகை அதிகம்தான், தொகையை அத்தையிடம் குறைவாகவே சொல்ல வைத்து மீதமுள்ளதை அவருக்கு தெரியாமல் அசோக்கே கொடுத்து விட்டான்.
பழைய வீட்டில் இருந்த போது, மேகா மீது திராவகம் வீச வந்தவனை அடையாளம் தெரியவில்லை என அனன்யாவை சொல்லும் படி வீடு தேடி வந்து சொன்னார்கள்தான். முதல் முறை என்பதால் மிரட்டாமல் பணம் தருகிறோம் என ஆசை காட்டித்தான் பேசினார்கள்.
அனன்யா வீட்டில் இல்லை அந்த சமயம், ஆகவே அவளிடம் கேட்டு பார்க்கிறேன் என நல்ல விதமாகவே பேசி அனுப்பி விட்டார் பாக்யா. ஆனாலும் பயந்து போய் விட்டார்.
அக்கம் பக்கத்தினர் கூட அவர்கள் சொல்வது படி நடந்து கொள்ளுங்கள், இல்லையென்றால் வீண் பிரச்சனை, நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் என்றெல்லாம் பயப் படுத்தினார்கள்.
உடனே சமரனுக்கு அழைத்து சொல்லி விட்டார். வீடு வந்தவர்களை தனது ஸ்டேஷன் வரவழைத்து அரை நாள் காக்க வைத்து, “ஆசிட் வீச வந்தவனுக்கு துணையா உள்ள போகணும்னு எவனுக்கெல்லாம் ஆசை இருக்கோ அவனுங்க மட்டும் தாராளமா அந்த வீட்டு பக்கம் போங்க” என மிரட்டி அனுப்பி வைத்தான் சமரன்.
தற்போதைக்கு அமைதியாக இருப்பார்கள் என்றாலும் கேஸ் முடிவதற்குள் ஏதாவது செய்ய பார்க்கலாம் என சந்தேகம் கொண்டான் சமரன். ஆகவே அவனுக்குமே அனன்யா குடும்பம் அங்கிருந்து வீடு மாற்றிக் கொண்டு வருவதுதான் நல்லது என தோன்றி விட்டது. ஆகையால் நாள் கடத்தாமல் புதுக் குடித்தனத்திற்கு மாறி விட்டனர்.
இங்கு வந்த பிறகு இரண்டு முறை வந்து பார்த்து சென்றிருந்தான் அசோக். அவன் வந்த சமயம் அனன்யா வீட்டில் இருந்திருக்கவில்லை. அவன் வந்தான் என அறிந்ததும், ‘அடடா நான் இல்லையே!’ எனதான் அவளுக்குள் நினைப்பு ஓடியது. அதன் பின், ‘ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது?’ என தன்னை தானே நொந்து கொள்ளவும் செய்தாள்.
இடையில் ஒரு இடத்தில் அவந்திகாவை பெண் பார்த்து சென்றிருந்தனர். இன்னும் சரியான பதில் சொல்லவில்லை. பாக்யாவுக்கும் அவர்களே பேசுவார்கள் என்ற நம்பிக்கை விட்டுப் போனது. ஆகவே வேறு இடம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அன்று மாலையில் அசோக் வந்தான், உடன் ஒரு நாயோடு. பெரிய மகளோடு கோயிலுக்கு சென்றிருந்தார் பாக்யா. அனன்யா வீட்டுக்கு விலக்கு என்பதால் செல்லவில்லை.
“இதென்ன புது கெஸ்ட் எல்லாம் அழைச்சிட்டு வந்திருக்கீங்க?” என நாயை பார்த்துக் கொண்டே கேட்டாள்.
“கெஸ்ட்லாம் இல்ல, இனிமே இங்கதான் இருக்க போறார் ராம்போ” என்றான்.
அனன்யா கேள்வியாக பார்க்க, “வீட்டு காவலுக்கு அனன்யா. ரொம்ப ஃபெரோசியஸ் டாக்” என்றான்.
அனன்யா திகைப்பாக பார்க்க, “எதிரிங்களைதான் அட்டாக் பண்ணும், முதலாளிக்கு ரொம்ப நன்றியா இருக்கும். கோம்பை வகை, பயமில்லாம இருக்கலாம் நீங்க” என்றான்.
அனன்யா பயமாக பார்க்க, “ஆரம்பத்துல மிங்கில் ஆக கஷ்டமா இருக்கும், இதை உங்க கூட நல்லா பழக்கி விட கொஞ்ச நேரத்துல ஆள் வருவார். அவர் நம்பர் தர்றேன் வச்சுக்கோங்க, விவரம் சொல்லி இதை விட்டுட்டு போகத்தான் நான் வந்தேன்” என்றவன் நாயை வெளியில் இருந்த தூணில் கட்டிப் போட்டான்.
அவளுக்கும் இது சரியான ஏற்பாடாகவே இருந்தது. தங்களுக்காக பார்த்து பார்த்து செய்பவனை இமை சிமிட்டாமல் பார்த்த படி நின்றிருந்தவள் அவன் நிமிரவும் தடுமாற்றத்தோடு பார்வையை திருப்பினாள்.
“எங்க அத்தை அவந்திகாலாம்?”
“கோயிலுக்கு போயிருக்காங்க, வாங்க… உள்ள வாங்க, இப்போ வந்திடுவாங்க” என்றாள்.
“டைம் இல்ல அனன்யா, இன்னொரு நாள் வர்றேன்” என்றவன் கிளம்புவதிலேயே இருக்க அவள் விடவில்லை. வற்புறுத்தி உள்ளே வரவழைத்து விட்டாள்.
“ஒரு வாய் காபி தண்ணி கூட ஊத்தாம என் அண்ணன் மகனை அனுப்பி வச்சியான்னு கேட்டு நைட்டு எனக்கு சாப்பாடு கூட போடாம விட்ருவாங்க உங்கத்தை” என்றாள்.
“ஐயையோ… வெறும் தண்ணி கூட கொடுங்க போதும், காபி தண்ணிலாம் வேணாம்” என்றான் அவன்.
“பாவமாதான் இருக்கீங்க, காபியே போட்டு எடுத்திட்டு வர்றேன்” என சொல்லி சமையலறை ஓடிச் சென்றாள்.
அவனும் வந்த உடனே எப்படி செல்வது, மரியாதையாக இருக்காது, ஒரு வேளை அத்தை வந்து விட்டால் பார்த்து விட்டே செல்லலாம் என கருதி தன் நேரத்தை இவர்களுக்காக ஒதுக்கி அங்கேயே இருந்தான்.
அவன் அவள் தந்த காபியை பருகிக் கொண்டிருக்க, வெளியில் பழங்கள் விற்று செல்வது காதில் விழுந்தது. வெளியில் ஓடினாள் அனன்யா. காபி குவளையோடு இவனும் சென்றான்.
அக்காவுக்காக கொஞ்சம் கவனித்து இவள்தான் இதெல்லாம் செய்கிறாள். பார்த்து பார்த்து பழங்கள் வாங்கினாள். நாவல் பழம் ஒன்றை சுவைத்துப் பார்த்து, “பரவாயில்ல நல்லாருக்கு” என சொல்லி ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்தாள்.
“எவ்ளோ நேரம்மா, வேற இடத்துக்கு வியாபாரத்துக்கு போக வேணாமா நான்?” என சலித்தான் பழக்காரன்.
“வச்சிருக்கிறது எல்லாம் ஓட்டை ஒடசல், அவசரத்துக்கு என் தலைல கட்டிட்டு போலாம்னு நினைச்சீங்களா? வெயிட் பண்ணுங்க” என அவள் சொல்ல, ‘அது சரி’ என்பது போல சலிப்பாக பார்த்தான் பழக்காரன்.
ஒரு வழியாக வாங்கி முடித்தவள் வழக்கம் போல பேரம் பேச ஆரம்பித்தாள்.
‘ரோட்ல நின்னுகிட்டு என்னா அழிச்சாட்டியம் பண்றா?’ என நினைத்த அசோக் அவனையறியாமல் சிரித்தான்.
பழக்காரனுக்கும் இல்லாமல் அவளுக்கும் இல்லாமல் இடையில் ஒரு தொகை பேசி முடித்தவள் பணம் எடுப்பதற்காக உள்ளே சென்றாள். அசோக்கே பணத்தை கொடுத்து விட, “பாப்பாவை நல்லா ட்ரைன் பண்ணி வச்சிருக்கீங்க சார், திண்டுக்கல்லையே பத்து ரூவாக்கு வாங்கிடும்” என்றான் பழக்காரன்.
“ஆமாம் குட்டி பாப்பாதான் அவங்க, அந்த பாப்பா வர்றதுக்குள்ள கிளம்புங்க” என அசோக் சொல்ல, “ஆமாம் சார், ஓடியே போயிடுறேன்” என சொல்லி விரைந்து விட்டான் பழக்காரன்.
அவன் பணம் கொடுத்தது அறிந்த பின் கடிந்து கொண்டாள். கண்டு கொள்ளாதவன், “இவ்ளோ பேசணுமா? அவன் நல்லா கடுப்பாகிட்டான்” என்றான்.
“ஆனா ஆவுறான், அம்மா கால் கடுக்க நின்னு தொண்டை வலிக்க கத்தின்னு சம்பாதிக்கிற பணம். ஒரு ரூபா மிச்சம் பிடிக்க ஒரு மணி நேரம் பேசணும்னாலும் பேசுவேன்” விளையாட்டாக சொல்லி சென்றவள் அவனது மனதை பாதித்தாள்.
உண்மைதானே. அவர் ஒருவரின் வருமானத்தில் குடும்பம் நடத்த வேண்டும் என்றால் சிக்கனம் இல்லாமல் எப்படி?
மீண்டும் உள்ளே வந்தார்கள். “நீங்க கோயிலுக்கு போகலையா? சாமி மேல எல்லாம் நம்பிக்கை இல்லையோ?” எனக் கேட்டான்.
“எங்களுக்கு எல்லாம் இருக்கிற ஒரே நம்பிக்கை கடவுள்தான், நிறைய நம்பிக்கை இருக்கு” என்றாள்.
“அப்புறம் ஏன் போகல?”
“நான் போயிருந்தா யாரு உங்களை வரவேற்கிறது?” என அவள் கேட்க, உரிமையாக முறைத்தான் அசோக்.
பழங்கள் எடுத்துக் கொண்டு அவள் சமையலறை செல்ல, “எனக்கு தரப் போறீங்கன்னா வேணாம். காபி குடிச்சிட்டு அந்த டேஸ்ட் நாக்குல இருக்கு, இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே இருக்கட்டும்” என்றான்.
அவளும் வற்புறுத்தவில்லை. அவன் நேரத்தை பார்க்க, “அம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன், இல்லைனா லேட் பண்ணிடுவாங்க” என சொல்லி கைப்பேசியை எடுத்தாள்.
“வேணாம் அனன்யா, நானும் பார்த்திட்டு போலாம்னுதான் இருந்தேன். எப்பவாவது வெளில போறவங்க, ரிலாக்ஸா வரட்டும், நான் கிளம்புறேன்” என சொல்லி வெளியிலும் வந்து விட்டான்.
அதற்குள் பாக்யாவும் அவந்திகாவும் வந்து விட்டனர். நாயை பார்த்து விட்டு அவர்களும் முதலில் பயந்தார்கள். விவரம் சொல்லி அவர்களையும் ஏற்றுக்கொள்ள செய்தான். அத்தை அவனுக்கு திருநீறு வைத்து விட்டார்.
இன்னும் பத்து நிமிடங்கள் அங்கேயே இருந்து அத்தையிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுத்தான் கிளம்பினான்.
“எங்க தாத்தா இப்படித்தான் ரொம்ப அனுசரனையா இருப்பாராம், அசோக்கும் அப்படித்தான் போல” என மகள்களிடம் சிலாகித்துக் கொண்டார் பாக்யா.
அதன் பிறகு அசோக்கால் இங்கு வர முடியவில்லை. கைப்பேசி வாயிலாக அத்தையிடம் பேசிக் கொள்வான்.
விரைவிலேயே ராம்போ தன் புதிய முதலாளி குடும்பத்துடன் நன்றாக பழகி விட்டது. வெளியாட்கள் யார் வந்தாலும் ராம்போவிற்கு பயந்து தள்ளி நின்றுதான் பேசுவார்கள். வீட்டினர் யாராவது வந்து அமைதி காக்க சொன்னால்தான் அமைதியடையும்.
தன் வீட்டிற்கு ஒரு முறை அனைவரையும் அழைத்து சென்று விருந்து வைத்தாள் ஸ்ருதி. நான் தனியாகத்தான் இருக்கிறேன், அடிக்கடி வாங்க என அவந்திகா, அனன்யா இருவருடமுமே கேட்டுக் கொண்டாள் ஸ்ருதி.
அதிலிருந்து இரு பெண்களில் யாரையாவது ஒருவரையோ அல்லது இருவரையுமோ ஸ்ருதியின் வீட்டில் அடிக்கடி பார்க்கலாம். பாக்யாவின் பெண்களை விரைவாகவே தனக்கு தோழிகளாக்கிக் கொண்டாள் ஸ்ருதி.
அப்படி ஒரு முறை அவந்திகா அங்கு சென்றிருந்த போது ஸ்ருதியின் பெற்றோர் வந்திருந்தனர். யாரென கேட்டதற்கு, என்ன சொல்ல என ஒரு நிமிடம் ஸ்ருதிக்கு யோசனைதான்.
இன்னும் புகழேந்தி மாமாவுடன் உறவு சீராகாத நிலையில் இவளை பற்றிய உண்மையை தெரிந்து கொண்டால் பெற்றோரின் நிம்மதி போய் விடுமோ என நினைத்து, தெரிந்த பெண் என மட்டுமே சொல்லியிருந்தாள் ஸ்ருதி.
அவந்திகாவுக்கு நல்ல வரன் அமையவில்லையே என்ற கவலையை தவிர பெரிதான மாற்றங்கள் இன்றி நாட்கள் ஓடின.
ஸ்ருதிக்கு வளைகாப்பு எல்லாம் முடிந்திருந்தாலும் சமரனை விட்டு செல்லாமல் அவனுடன்தான் இருந்தாள். அவளது அம்மா லதா இங்கு வந்து தங்கிக் கொண்டார்.
திராவகம் வீசியது தொடர்பாக கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருந்தது. அனன்யா கோர்ட் செல்ல வேண்டிய அன்று துணைக்கு அசோக் வந்திருந்தான். அவளே எதிர்பார்க்கவில்லை. அவள் சாட்சி சொன்ன பிறகு பத்திரமாக வீட்டில் விட்டு விட்டுத்தான் கிளம்பினான்.