அத்தியாயம் -2(2)
சற்று நேரம் அவரை நிதானத்திற்கு கொண்டு வருவதில் பதற்றமடைந்து விட்டனர் மூவரும். அடிக்கடி இப்படித்தான் இரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படுவதாக சொன்னார் பாக்யா. மருத்துவமனை வரவும் மறுத்து விட்டார்.
அவரிடம் ஆறுதலாக பேசியவன், “அவந்திகாவுக்கு நல்ல இடமா பாருங்க அத்தை, செய்முறை பத்தி யோசிக்காதீங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“ஐயையோ அசோக், அதெல்லாம் வேணாம் ப்பா” என பதறினார் பாக்யா.
“இவ்ளோ டென்ஷன் ஆகுற அளவுக்கு எதுவும் இல்லை, நீங்களும் அந்த வீட்டு பொண்ணுதான் அத்தை, உங்களுக்கு உரிமை இருக்கு” என்றான்.
“அதெல்லாம் வேணாம்னுதானே வெளில வந்திட்டேன், திரும்ப அங்கேருந்து வாங்கினா நல்லா இருக்காது ப்பா, எனக்கு எந்த உரிமையும் வேணாம். என்னால முடிஞ்சத செஞ்சு என் பொண்ணுங்களை பார்த்துக்குவேன்” என்றவர் குரலில் உறுதியும் தன்மானமும் நிறைந்து போயிருந்தது.
“சரி அதுபத்தி அப்புறம் பேசலாம், அவந்திகாவுக்கோ அனன்யாவுக்கோ இந்த இடம் வேணாம். நல்ல தரகர் வச்சு பார்க்கலாம், நான் ஏற்பாடு பண்றேன்” என்றான்.
அதற்கு மறுப்பு சொல்லவில்லை பாக்யா. ஆனால் தன்னால் என்ன முடியும் என்பதை சொல்லி, “அதுக்கு கொஞ்சம் கூட குறைச்சன்னா பரவாயில்லப்பா, ரொம்ப எதிர்பார்த்தா என்னால முடியாது” என்றார்.
அசோக்கிற்கு பாவமாக போய் விட்டது என்றால் அனன்யாவுக்கு ரோஷமாகி விட்டது.
“என்னம்மா இப்படிலாம் சொல்ற, எதுவும் வேணாம் பொண்ணு மட்டும் போதும்னு எவனும் வர மாட்டானா? ஆம்பளைங்களே இல்லயா இந்த உலகத்துல?” என ஆதங்கமாக கேட்டாள்.
மகளின் பேச்சில் அலுப்பாக தலையை பிடித்துக் கொண்டார் பாக்யா.
அவந்திகாவை அழைத்து கைப்பேசி எண் பகிர்ந்து கொண்ட அசோக் கிளம்ப எத்தனித்தான். சாப்பிட்டு போகலாம் என பாக்யா சொல்ல, மறுத்து செல்வதை காட்டிலும் உணவருந்தினால் தன்னை நெருக்கமாக உணர்வார்களோ என்ற எண்ணத்தில் சரி என சொல்லி விட்டான்.
பாக்யாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. தன் கவலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அசைவம் ஏதாவது செய்யலாம் என தயாரானார். சின்ன மகளிடம் பணம் எடுத்து நீட்டி மார்க்கெட் சென்று வரும் படி கூறினார்.
அவள் அம்மாவை முறைக்க, “செய்றதெல்லாம் செஞ்சிட்டு என்னடி பார்வை, அவன் கிளம்பினதும் வச்சுக்கலாம் நம்ம சண்டைய, போ” என அதட்டல் போட்டார்.
பையையும் பணத்தையும் வெடுக் என பிடுங்கிக் கொண்டவள் டங் டங் என காலடிகள் எடுத்து வைத்து வெளியே செல்ல நடந்தாள். பாக்யா சமையலறை சென்று விட்டார்.
இவர்களுக்கு சிரமம் தருகிறோமோ என சங்கடம் கொண்ட அசோக், வெளியே வந்தான். காலணி அணிந்து கொண்டிருந்தவளிடம், “நடந்தா போக போறீங்க?” எனக் கேட்டான்.
“இல்ல பறந்துதான் போறேன்” என்றாள்.
“ஏன் என்கிட்ட இவ்ளோ கோவம்? என்னங்க பண்ணினேன் நான்?” என மென்மையான குரலில் கேட்டான்.
பதிலுக்கு சண்டை போட்டாலோ இல்லை அவளை போலவே ஏறுக்கு மாறாக பதில் தந்திருந்தாலோ ஒரு கை பார்த்திருப்பாள்தான். ஆனால் அவனது இந்த அமைதியான அணுகுமுறை அவளை வாயடைக்க வைத்து விட்டது.
யோசித்து பார்த்தால் இவனிடம் கோவம் கொள்ள என்ன காரணம்? அம்மா வீட்டை விட்டு வெளியேறிய போது சிறு குழந்தையாக இருந்திருப்பான். இப்போது கூட அவனாகத்தான் தேடி வந்திருக்கிறான். இதற்கு பின் வேறு காரணம் இருக்கலாம் என அவளுக்கு சந்தேகம் இருந்த போதும் அப்படி எதுவும் அவன் பேசவோ நடக்கவோ இல்லையே. அவனது கண்களில் கல்மிஷத்தை காண முடியவில்லையே.
ஆனாலும் நல்ல விதமாக அவனோடு பேச முடியவில்லை. மீண்டும் ஒரு முறை, “என்ன கோவம் அனன்யா எம்மேல?” எனக் கேட்டான்.
பதில் சொல்லத் தெரியாதவள், “அதெல்லாம் இல்ல” என சொல்லி அங்கிருந்து சென்று விட்டாள்.
ஹால் வந்தவன், “நான் போய் வாங்கிட்டு வந்திருப்பேனே அத்தை, அவங்கள எதுக்கு அனுப்புனீங்க?” என சமையலறை எட்டிப் பார்த்து கேட்டான்.
அங்கிருந்து எட்டிப் பார்த்த பாக்யா, “உன்னை விட ஆறு வயசு சின்னவப்பா அவ, மரியாதை எல்லாம் வேணாம் சாதாரணமா பேசு” என்றார்.
அவன் சிரிக்க, “அவளே போகட்டும் இங்க எங்க வாங்கணும்னு உனக்கு இடம் தெரியாதில்ல ப்பா” என சொல்லி தலையை உள்ளே இழுத்துக் கொண்டார் பாக்யா.
டிவி ஓடிக் கொண்டிருந்தாலும் அங்கு அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இதோ வந்து விடுகிறேன் என சொல்லி வெளியே வந்தவன் பைக் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். மாக்கெட் எங்கு இருக்கிறது என விசாரித்து வந்து கொண்டிருக்க வழியில் தென் பட்டாள் அனன்யா.
அவளருகில் வந்து பைக்கை நிறுத்தியவன், “ரொம்ப தூரமா, வாங்க பைக்ல போலாம்” என்றான்.
“வேணாம் வேணாம், பக்கம்தான் நடந்தே போயிப்பேன்” என்றாள்.
“யாரும் எதுவும் சொல்வாங்களோ… ஸாரி, நீங்க போங்க” என்றான்.
“யாரு என்ன சொல்வா என்னை பத்தி? எனக்கு உங்களோட வரணும்னு தோணல, வரலை” என்றவள் அவனை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தாள்.
‘என்ன பேசினாலும் ஏன் எகிறி எகிறி பேசுறா?’ என நினைத்துக்கொண்டே அவளுக்கு முன் மார்க்கெட் சென்று விட்டான்.
வவ்வால் மீனும் இறாலும் வாங்கியவள் பேரம் பேசிக் கொண்டிருந்தாள். பேரம் படியாமல் போக, “ஏம்மா உசுர வாங்குற, இந்தா ஓசியில வாங்கிட்டு கிளம்பு” என இரைந்தாள் மீன் விற்பனை செய்யும் பெண்.
“ஓசில கேட்டேனா நான்? இன்னிக்கு மார்க்கெட்விலை என்னவோ அதுக்குத்தான் கேட்குறேன். ஞாயித்து கிழமையானா மட்டும் நாலு மடங்கு விலை வச்சு விப்பீங்களா க்கா?” என இவளும் பதிலுக்கு பேசினாள். தள்ளி போகவும் மாட்டேன் என நின்றாள். இங்கு வருபவர்கள் அடுத்த கடைக்கு செல்லவும் அவள் சொன்ன தொகை வாங்கிக் கொண்டே கொடுத்து விட்டாள் விற்பனை செய்பவள்.
“க்ளீன் பண்ணி தாக்கா” என அனன்யா கேட்க, ஒரு முறைப்புடனே, “தள்ளி நில்லு, யாவாரம் ஆனதும் சுத்தம் பண்றேன்” என்றவள் அடுத்து உள்ளவர்களை கவனிக்க ஆரம்பித்து விட்டாள். அவர்களுக்கெல்லாம் நேரம் கடத்தாமல் அவள் சுத்தம் செய்ய சண்டை போட ஆரம்பித்து விட்டாள் அனன்யா.
நிஜமாகவே அசோக்கிற்கு எரிச்சலாக வந்தது. ‘அத்தைக்கு இப்படியா ஒரு பெண் இருக்க வேண்டும்? வாயாடி வாயாடி!’ என மனதில் நினைத்துக் கொண்டவன் அவளிடம் சென்றான். சமாதானம் செய்யும் விதமாக, “விடுங்க அனன்யா கிளம்பலாம்” என்றான்.
“கூட்டிட்டு போ சார் முதல்ல” என கடுப்படித்தாள் விற்பனை செய்பவள்.
சுத்தம் செய்து தராமல் நகர மாட்டேன் எனும் விதமாக அனன்யா நின்று கொள்ள, கூடுதலாக பணம் கொடுத்து சுத்தம் செய்ய வைத்து அங்கிருந்து அவளை அழைத்து வருவதற்குள் அசோக்கின் விழிகள் பிதுங்கி தரையில் விழாத குறையாகிப் போனது.
“நான்தான் பேசிட்டு இருக்கேன்ல, உங்களை யாருங்க பணம் கொடுக்க சொன்னது?” எனக் கேட்டாள்.
“ஏன் இப்படி இருக்கீங்க?” சலிப்பாக கேட்டான்.
நின்று விட்டவள், “எப்படி இருக்கேன்?” என்றாள்.
ஐயையோ வாயை கொடுத்து மாட்டிக் கொண்டோமே என அவன் பார்க்க, “சொல்லுங்க, எப்படி இருக்கேன் நான்?” என்றாள்.
“அது… கொஞ்சம் பொறுமையா இருக்கலாம். யார் என்னன்னு பார்க்காம எல்லா இடத்திலேயும் பேசுறீங்க, பார்க்க நல்லா இல்லைங்க, அதான் சொன்னேன்” என்றான்.
“என் வீட்ல அம்மாவும் அக்காவும்தான். அக்கா வாயில்லா பூச்சி, அம்மா அவ அளவுக்கு மோசம் இல்லைனாலும் தைரியம்னு சொல்லிக்க முடியாது. வீட்ல ஒருத்தராவது வாயை தொறந்து சத்தமா பேசலைனா எங்க தலைல மொளகா அரைச்சிட்டு போயிடுவாங்க. பார்க்கிறவங்களுக்கு நல்லா இல்லைனா போகுது, நான் இப்படித்தான்” என்றவள் வாழை இலை வாங்கும் கடைக்கு சென்று விட்டாள்.
அதன் பின் இவன் வருகிறானா இல்லையா என்றெல்லாம் அவள் பார்க்கவே இல்லை. அவனுக்கும் அவள் பின்னால் செல்ல விருப்பமில்லை. ‘அதிகப்படி, மரியாதை தெரியாதவள், அலட்சியம் செய்கிறாள் என்னை’ என்றெல்லாம் அவளை பற்றி அவனது எண்ண ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
உணவு நேரம் வரும் வரை அப்படியே சுற்றிக் கொண்டிருந்தான். பாக்யா சாப்பிட வர சொல்லி அழைக்கவும் நிறைய பழ வகைகள் வாங்கிக் கொண்டு அத்தையின் வீடு சென்றான்.
கார சாரமான சுவையான சாப்பாடு. பார்த்து பார்த்து கவனித்தார் பாக்யா. அவந்திகா அவ்வப்போது பார்வைக்கு தட்டுப்பட்டாலும் அனன்யாவை காணவில்லை. அறையில் இருக்கிறாள் போலும் என நினைத்துக் கொண்டவன் அவள் இல்லாமல் இருப்பதையே ஆசுவாசமாக உணர்ந்தான்.
கிளம்பும் போதும் அனன்யாவை தேடவில்லை. அவளை அழைக்கிறேன் என அத்தை சொன்னதற்கும் தடுத்து விட்டவன் கிளம்பி விட்டான்.
இவ்வளவு தூரம் வந்து விட்டு சமரன் வீடு செல்லாமல் போவதா என நினைத்து நண்பனுக்கு அழைத்தான். அவர்கள் வெளியில் சென்றிருப்பதை அறிந்து கொண்டவன் தான் திண்டுக்கல் வந்தது பற்றி ஒன்றும் சொல்லாமல் சாதாரணமாக அழைத்ததாக சொல்லி மதுரைக்கே புறப்பட்டு விட்டான்.
நல்ல தரகரிடம் அவந்திகா பற்றிய விவரங்கள் சொல்லி மாப்பிள்ளை பார்க்க சொன்னான். அத்தையால் செய்ய முடிந்தவற்றை மட்டும் சொல்லி, “ஆனா அது பத்தி எதுவும் பேசிக்க வேணாம், கூட என்ன கேட்டாலும் அத்தைக்கு தெரியாம நான் செய்றேன், எந்த குறையும் இல்லாம நல்ல இடமா இருக்கணும்” எனவும் சொன்னான்.
அத்தை பற்றி அப்பாவிடம் சொல்லலாமா என யோசனை. அவரின் மனநிலை எப்படி இருக்கும் என அறிவதற்காக அவரிடம் மறைமுகமாக பேசிப் பார்த்தான். அவரின் கோவத்தில் சொல்லாமல் விடுவதே நல்லது என்ற முடிவுக்கு வந்து விட்டான்.
அம்மாவிடம் சொல்வதால் மட்டும் என்ன நடக்க போகிறது, அப்பாவை மீறி அவரால் ஏதும் செய்ய இயலாது, அப்படியே அத்தையிடம் அம்மா பழகினாலும் பின் எப்போதாவது அப்பாவுக்கு தெரிய வந்தால் அவ்வளவுதான் என பயந்து அம்மாவிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.
சில நாட்களில் பாக்யாவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அவர் சொன்ன செய்தியில் திகைத்துப் போனவன் உடனே வருவதாக சொல்லி வைத்தான்.
அவனது நெஞ்சம் பட படப்பாக இருந்தது. அனன்யாவை நினைத்து கவலையாகி போனான்.