அத்தியாயம் -14(2)

காலையிலிருந்து ஏற்பட்ட சிறு பிரிவும் இப்போது ஏற்பட்ட அந்த நெருக்கமும் ஒருவர் மற்றவரை மனதாலும் தேகத்தாலும் தேட வைத்தது.

அத்துமீறல்கள் அரங்கேறிக் கொண்டிருக்க, திடீரென அவள்தான் நினைவு வந்தவளாக, “இன்னும் நாம சாப்பிட வரலைன்னு அத்தை பார்த்திட்டு இருப்பாங்க” என மெல்லிய குரலில் சொன்னாள்.

“அப்படியா நாம இன்னும் சாப்பிடலையா? ரூம் விட்டு போகணுமா நாம?” அவளிடமிருந்து முகத்தை உயர்த்தி தாபம் குறையாத பார்வையோடு பாவமாக கேட்டான்.

அவனது கன்னங்களை பிடித்து கிள்ளியவள், “சாப்பிட்டு இங்கதான் வரப் போறோம்” என்றாள்.

மனமே இல்லாமல் விலகினான் அவன். அவள் எழுந்து ஆடையை சரி செய்து கொண்டு அவனை பார்த்தாள். அவனும் சட்டைப் பொத்தான்களை போட்டுக் கொண்டே எழுந்தான்.

உணவு மேசையில் இவர்களின் வருகைக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தார் விஜயா.

“இன்னும் நீ சாப்பிடலையா ம்மா?” எனக் கேட்டுக் கொண்டே அமர்ந்தான் அசோக்.

“உன் அப்பா கூடவே சாப்பிட்டேன், உங்களை காணோமேன்னு பார்த்திட்டு இருந்தேன். எல்லாம் எடுத்து வச்சிட்டுத்தான் தூங்க போகணும்” என்றார்.

தான் பார்த்துக் கொள்வதாக அனன்யா சொல்லிக் கொண்டிருக்க, மகனை பார்த்து விட்டு திடீரென தடுமாற்றமாக சிரித்த விஜயா, “சரிம்மா, நான் தூங்க போறேன்” என சொல்லி வேகமாக அங்கிருந்து சென்று விட்டார்.

“என்ன அனு, அம்மா ஏன் திடீர்னு ஏதோ மாதிரி ஆகி ஓடியே போயிட்டாங்க?” எனக் கேட்டான் அசோக்.

‘அதானே’ என்ற யோசனையோடு கணவனை பார்த்தவள் வெட்க சிரிப்போடு, அவனது இடது காதோரம் தலை முடியில் சிக்கியிருந்த மல்லி மொட்டையும், சட்டை பாக்கெட்டில் தலை நீட்டிக் கொண்டிருந்த இன்னொரு மல்லி மொட்டையும் கையில் எடுத்து காட்டினாள்.

திகைத்தவன், “வெளில வரும் போது என்னை ஒழுங்கா பார்க்க மாட்டியா நீ?” எனக் கேட்டான்.

“நீங்க ரூம்ல செஞ்ச வேலைல உங்க மூஞ்ச பார்க்கிற அளவுக்கு இல்லை நான், இனிமே நீங்களே உங்களை கண்ணாடில பார்த்துக்கோங்க” என்றாள்.

“நல்ல வேளை அப்பா இல்லை, ஒழுங்கா பாரு, இன்னும் வேற என்னெல்லாம் உன்கிட்டேருந்து என்கிட்ட வந்திருக்கு” என கேட்டு, அவள் பக்கமாக நன்றாக திரும்பினான்.

அவளும் அவனை நன்றாக ஆராய்ந்து பார்த்து விட்டு, “வேற ஏதும் இல்லை” என்றாள்.

“நல்லா பாரு, வேற எதுவும் இல்லயா?” என மையலாக கேட்டான்.

இல்லை என்பது போல குழப்பத்தோடு தலையாட்டினாள் அவள்.

“தப்பாச்சே… அசோக் நீ சரியில்லடா!” என அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டவன், அவளை பார்த்து, “சீக்கிரம் சாப்பிடு” என சொல்லி அவனது சாப்பாட்டை முடித்துக் கொண்டான்.

“என்ன அவ்ளோதானா சாப்பாடு? ஒழுங்கா சாப்பிடுங்க”

“ம்ஹூம், நான் சாப்பிட நீ இருக்கியே, வயிறு ஃபுல் கட்ட மாட்டேன்” என அவளை ரசனையாக பார்த்துக் கொண்டே அவன் சொல்ல, குப் என சிவந்த முகத்தோடு தட்டை பார்க்க குனிந்து விட்டாள்.

இப்படியே விட்டால் சரியாக சாப்பிட மாட்டாள் என உணர்ந்து, சாதாரணமாக வேறு ஏதோ பேசி அவளை இயல்பாக்கி சரியாக சாப்பிட வைத்தான்.

படுக்கைக்கு வந்த பின் சொன்னது போலவே அவளுடையது அனைத்தையும் அவனுடையதாக மாற்றிக் கொண்டான்.

அசோக், அனன்யா இருவரும் தேனிலவுக்காக ஷில்லாங் வந்திருந்தனர். மேகக் கூட்டமும் மலை முகடுகளும் நீல வானமும் தெரியும் வண்ணமிருந்த ஹனி மூன் சூட் புக் செய்திருந்தான் அசோக். இரண்டு நாட்கள் இங்கு இருந்து விட்டு டார்ஜிலிங், சிம்லா என செல்வதாக திட்டம்.

அனன்யாவின் முதல் விமானப் பயணம், நடைமுறைகள் ஏதும் அவளுக்கு தெரியவில்லை. ஒன்றும் தெரியவில்லை என திட்டுவானோ என லேசாக பயம் கூட இருந்தது. இது கூட தெரியாதா என விளையாட்டாக கூட கேட்டிருக்கவில்லை அவன்.

அவள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டான், பொறுமையாக சொல்லிக் கொடுத்தான். கனிவாக நடந்து கொண்டான், கைக்குள்ளேயே அவளது கையை வைத்துக்கொண்டான்.

மேகப் பொதிகளை அருகில் பார்த்துக் கொண்டே அவனருகில் பயணித்தது அவளது மனதையும் அந்த மேகக் கூட்டங்கள் இடையே மிதப்பதை போலவே உணர வைத்தது.

மதுரையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து கவுஹாத்திக்கும் விமான பயணம். அங்கிருந்து ஷில்லாங் வர கார் ஏற்பாடு செய்திருந்தான். தங்கும் விடுதியை வந்தடையும் போது மாலையாகி விட்டது.

அறைக்குள் நுழைந்த உடன் ‘அப்பாடா’ என படுக்கையில் விழுந்து விட்டாள். அவளருகில் படுத்தவன், “டயர்ட் ஆகிட்டியா?” என விசாரித்தான்.

“பின்ன, நைட் சரியா தூங்கல, காலைல சீக்கிரம் எழுந்தாச்சு. ரொம்ப நேரம் டிராவல். ஏன் உங்களுக்கு டயர்ட் ஆகலையா?”

“அப்படி ஒன்னும் தெரியலை அனு. உன் கூட இருந்தா எப்பவும் ஒரு எனர்ஜி இருந்திட்டேதான் இருக்கு” என்றான்.

தலையை அவனது மார்புக்கு மாற்றிக் கொண்டவள் கண்களை மூடிக் கொண்டாள். அவனும் கண்களை மூடிக் கொண்டே அவளின் தலை வருடி விட்டான். அரை மணி நேரத்துக்கு பின் எழுந்து கொண்டனர். வெந்நீரில் குளித்து ஆடை மாற்றி சாப்பிட சென்றனர்.

நிறைய தேனிலவு கொண்டாடும் தம்பதிகளை காண முடிந்தது. அவர்களின் நெருக்கமும் முகங்களில் தெரிந்த வெட்கம் கலந்த மலர்ச்சியும் ரசித்து பார்த்த அனு தன் கணவனை பார்த்து சிரித்தாள்.

“என்ன அனு?” எனக் கேட்டான்.

“இல்லை, நம்மளையும் இப்படி யாராவது பார்ப்பாங்கதானே? எனக்கு என்னவோ போல இருக்கு” என சொல்லி, அவன் தோளில் தலை சாய்த்தாள்.

“நீ ஏன் மத்தவங்கள பார்க்கிற?”

“அதானே” என்றவளின் பார்வை அடுத்து அவனை தவிர வேறெங்கும் செல்லவில்லை.

குளிரில் அதிகம் பசிக்கவில்லை. அளவாக சாப்பிட்டு அறைக்கு திரும்பி விட்டனர். இனிமையாக கழிந்தது இரவுப் பொழுது.

அடுத்த நாள் யானை அருவிக்கு சென்றனர். பார்க்க அத்தனை ரம்மியமாக இருந்தது. புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். உமியம் ஏரிக்கு சென்று படகு சவாரி செய்தனர். மாலையானதும் அறைக்கு திரும்பினர்.

அடுத்த நாள் இரண்டு மணி நேரங்கள் பயணம் செய்து சிரபுஞ்சி சென்றனர். பூமியின் ஈரமான அந்த தளம் உள்ளத்தில் இதம் பரப்பியது. அங்கிருந்த அருவியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

மாசு கலக்காத இயற்கை சூழலில் மனம் விரும்புபவர் பக்கத்தில் இருக்கும் போது சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வுதானே தோன்றும்? இருவரும் அந்த மன நிலையில்தான் இருந்தனர்.

அசோக் அனன்யாவின் தோளில் சாய்ந்து, “செம ஃபீல் இல்ல அனு?” எனக் கேட்டான்.

“ஆமாம் மழை இருந்தா இன்னும் நல்லா இருக்கும்?” என்றாள்.

“மழை இல்லாமலே சில்லுன்னுதான் இருக்கு. இன்னும் சில்லுனு வேணுமா உனக்கு?” என அவன் கேட்டதற்கு சிரிக்க மட்டும் செய்தாள்.

“எப்பவோ ஒரு நாள் இங்க சுத்தி பார்க்க வர்றோம், நமக்கு இடம் புதுசா இருக்கு ரசிக்கிறோம் போயிடுறோம். இங்கேயே இருக்கிறவங்கள நினைச்சு பார்த்தியா அனு? அடிக்கடி மழை, நல்ல குளிர் இதுல வாழுறது சவாலான விஷயம்தான் இல்லை?” எனக் கேட்டான்.

தலையாட்டிக் கொண்ட அனன்யா, “இவங்களுக்கு பழகிப் போயிருக்கும்ங்க. இங்க விட்டு வேற எங்கேயும் வர சொன்னா வந்திடுவாங்களா? இதுதான் இவங்களுக்கு ரொம்ப பிடிச்ச இடமா இருக்கும்” என்றாள்.

“ம்ம்… லைஃப் அதுதான் அனு. தவிர்க்க முடியாத நேரத்துல நடக்கிறதை ஏத்துக்கணும். கடவுளுக்கு தெரியும் யாருக்கு என்ன கொடுக்கணும்னு” என்றான்.

“அப்படியா? என்ன தத்துவம் பேசுற மாதிரி இருக்கு” என கிண்டலாக கேட்டாள்.

“இல்லை அனும்மா, இதுதான் ஃபேக்ட். என்னை எடுத்துக்க, மூனு வருஷத்துக்கு முன்னாடி யாரு இந்த உலகத்துல அதிக வலியோட இருக்கான்னு என்னை கேட்டா என்னைத்தான் சொல்லியிருப்பேன்” என அவன் சொல்லவும், அன்றைய அவனது நிலையை எண்ணி வருத்தம் அடைந்தாள்.

அவளின் கன்னங்களை பிடித்து கொஞ்சியவன், “நான் எப்பவோ சரியாகிட்டேன். முகத்தை நல்லா வை” என்றான்.

“அப்படி நடக்கலைனா இன்னிக்கு நான் உங்க லைஃப்ல இல்லைல?”

“இன்னிக்கு நீ என் கூட நிக்கிறீல்ல… இதுதான் நிஜம். என் லைஃப் லாங் நீ மட்டும்தான்” என அவன் சொல்ல, ஆமோதிப்பாக தலையாட்டிக் கொண்டாள்.

“ஸ்ருதி சமர் ரெண்டு பேரால நான் பாதிக்க பட்டேன்னு என் அப்பாக்கு அவங்கள பிடிக்காது. ஆனா ஸ்ருதிதான் உன்னை எனக்கு காமிச்சு கொடுத்தா. நம்ம கல்யாணம் நடக்க அவ்ளோ சப்போர்ட் பண்ணினா. ஸ்ருதியை லவ் பண்ணினதை முன்னாடியே என்கிட்ட சமர் சொல்லலைன்னு அவன் மேல கூட அப்போ கோவம் இருந்தது. அவன்தான் உனக்கு அண்ணன் மாதிரி இருந்து எல்லாத்தையும் பார்த்துகிட்டான். என் மாமா… அவர் பொண்ணு கல்யாணத்தை கூட அவரால நடத்த முடியலை, என் கல்யாணத்தை ஒரு குறை சொல்ல முடியாம, எந்த பிரச்சனையும் இல்லாம செமையா நடத்தி வச்சார்” என அமைதியாக அவன் சொல்ல, அவளும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

“எல்லாருக்கும் ஏதாவது கட்டத்துல எதிர்பாராத ஏதாவது நடக்கும் அனு. அங்கேயே தேங்கிட கூடாது. மூவ் ஆன் பண்ணிடனும். நான் மூவ் ஆன் பண்ணினதாலதான் என்னோட ஜர்னில உன்னை சந்திக்க முடிஞ்சது. நீ எனக்கு கிடைச்சது…” என்றவன் சற்று உணர்ச்சி மிகுதியில் அவளது கையை இறுகப் பற்றிக் கொண்டான்.

“அசோக்…” தவிப்பாக அழைத்தாள்.

“என் லைஃப் பார்ட்னர் பத்தி பெருசா ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. என்னை நேசிக்கிறவளா இருக்கணும்னு நினைச்சிட்டே இருப்பேன். ஃபைனலி அப்படி ஒருத்தி எனக்கு கிடைச்சிட்டா” என்றான்.

“என்னை முதல்ல பிடிக்காதுதானே? சும்மா ஏதாவது பேசக்கூடாது” என வம்பாக சொன்னாள்.

“பிடிக்காதுன்னு இல்லை அனு. நீ ரக்கட் பொண்ணுன்னு நினைச்சேன்”

“ஓ அப்புறம் நான் ரொம்ப ஸாஃப்ட்டா மாறிட்டேனா?”

இல்லை என தலையாட்டியவன், “இந்த ரக்கட் பொண்ணத்தான் எனக்கும் பிடிச்சது” என்றான். அந்த வாக்கியம் சொல்லும் போது அந்த குரலில் தெரிந்த உண்மையிலும் பெருமையிலும் அவளின் மனம் நிறைந்து போனது.

“தேங்க்ஸ் என்னை லவ் பண்ணினத்துக்கு, தேங்க்ஸ் என்னை உனக்கானவனா சூஸ் பண்ணினத்துக்கு, தேங்க்ஸ் எனக்கே எனக்கா என்கிட்டேயே வந்ததுக்கு” என சொல்லி, கைப்பிடிக்குள் இருந்த அவளின் கையை எடுத்து வந்து நெஞ்சத்தில் வைத்து அழுத்திக் கொண்டான்.

அவனது பிடியில் இல்லாத இன்னொரு கையால் அவனது இடையில் சுற்றிக் கொண்டவள் அவனோடு அணைவாக நின்று கொண்டாள்.

அசோக் அனன்யா இருவரின் காதலும் அவர்களை சுற்றி அரணாக நின்றிருந்தது.

நிறைவடைந்தது.