என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -14

அத்தியாயம் -14(1)

அசோக் அனன்யா திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. செல்வராஜ் முன் நின்று பிரமாதமாக கல்யாணத்தை நடத்தி தந்திருந்தார்.

பாக்யாவையும் மதுரையிலேயே இவர்களின் வீட்டுக்கு அருகிலேயே குடி பெயர கேட்டிருந்தனர்தான். அவர் மறுத்து விட்டார்.

“இப்ப நான் நல்லாத்தானே இருக்கேன்? எம் பொண்ணுங்க ரெண்டு பேருமே வந்து போக இந்த வீடுதான் சௌகரியம். அனன்யாவோட பெரியப்பா, ஸ்ருதி எல்லாரும் பக்கத்துலதானே இருக்காங்க, எனக்கு தனியா இருக்க எந்த பயமும் இல்லை. முடியாத காலத்துல பார்த்துக்கலாம்” என முடிவாக சொல்லி விட்டார்.

புகழேந்தி ஓரிரு வார்த்தைகள் தங்கையிடம் பேச ஆரம்பித்திருக்கிறார். வெகு காலம் தங்கையை தனியே விட்டு வைக்க வேண்டாம், தன்னருகில் அழைத்துக் கொள்ள வேண்டுமென அவரும் நினைத்திருக்கிறார்.

“உன் தங்கச்சிக்குத்தான் அத்தை வீட்டுக்கு வந்து போக தூரம், நீ பக்கத்துலதானே இருக்க, அடிக்கடி போய் பார்த்துக்க” என மணிகண்டன் அவந்திகாவிடம் சொல்லியிருந்தான். அனுசரணையான கணவன் மீது அவளுக்கு காதல் மிகுந்து போனது.

திராவக வீச்சில் கைது செய்யப் பட்டிருந்தவனுக்கு தண்டனை உறுதியாகி விட்டது. முக்கிய சாட்சியாக இருந்தது அனன்யாதானே, ஆகவே கவனமாக இருக்கும் படி சொல்லியிருந்தான் சமரன். குற்றவாளி சம்பந்த பட்டவர்களை புகழேந்திக்கு தெரியும்.

“என் வீட்டு பொண்ணுகிட்ட வம்பு வைக்க இங்க எவனுக்கும் தைரியம் இல்லை, அப்படி ஏதாவது ஆனா ஒரு கை பார்த்திடுறேன்” என புகழேந்தியே பேசவும் அனைவருக்கும் ஆச்சர்யம்தான்.

“எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுவார், ஆனா என்கிட்ட மட்டும் பேச மாட்டார்” என கணவனிடம் புலம்பினாள் அனன்யா.

“எல்லாம் சட்டு சட்டுன்னு மாறாது அனு. உங்க ரெண்டு பேருக்கும் எப்படி ஒத்து போகுமோன்னு நிறைய கவலையா இருக்கு. அப்பாகிட்ட மரியாதை குறைவா பேசிடக் கூடாது, சரியா” என மனைவியிடம் எச்சரிக்கை செய்தான் அசோக்.

அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள, “உன்னை சண்டைக்காரின்னு சொல்லலை அனு, ஆனா சில சமயம் உன் கண்ட்ரோல் இல்லாம துடுக்கா பேசிடுவ நீ. அதுக்காக சொன்னேன். எங்க என்கிட்டயே கோச்சுப்பியா?” என பேசி சமாதானம் செய்தான்.

மனைவியிடம் சொன்னது போலவே தந்தையிடமும் அவள் வருந்தும் படி நடந்து கொள்ளக் கூடாது என சொல்லியிருந்தான்.

நிஜத்தில் புகழேந்தியும் சரி அனன்யாவும் சரி அசோக்கை மட்டுமே மனதில் வைத்து, அவனுக்காக தங்கள் கோவத்தையும் துடுக்குத் தனத்தையும் ஒதுக்கி வைத்து ஒருவர் மற்றவரை காயப்படுத்தி விடாமல் இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தனர். அப்படியே அவர்களை மீறி ஏதாவது நடந்தாலும் நிச்சயம் அசோக் சமாளித்து விடுவான்.

மறுநாள் அதிகாலையில் புது மணத் தம்பதிகள் இருவரும் தேனிலவுக்கு செல்ல இருந்தனர்.

மஞ்சள் நிறப் புடவையில் தலையில் வைத்திருந்த மல்லிச் சரம் தோள்களில் வழிய பர பரப்பாக பேக் செய்து கொண்டிருந்தாள் அனன்யா.

அன்று காலையில்தான் நிரஞ்சனா கருவுற்றிருப்பதாக செய்தி கிடைத்திருக்கவும் அசோக் தவிர மற்றவர்கள் அப்போதே அவளை பார்த்து வந்திருந்தனர். அவன் அலுவலகத்தில் இருந்ததால் இப்போது நேராக அவளைத்தான் பார்க்க சென்றிருந்தான்.

கணவன் வருவதற்குள் பேக்கிங் வேலை முடித்து விட்டால் அவனோடு நேரம் செலவழிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் வேகமாக இயங்கி கொண்டிருந்தாள் அனன்யா.

என்னவெல்லாம் எடுத்து வைக்க வேண்டும் என உள்ளே ஓடிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது கணவனின் நினைவுகள்தான்.

ஒரு வாரமாக மறு வீட்டு விருந்து, உறவுகளின் விருந்து, கோயில் வழிபாடு என இவளோடுதான் இருந்தான். நாளையிலிருந்து பத்து நாட்கள் ஊரில் இருக்கப் போவது இல்லை என்பதால் இன்றுதான் அலுவலகம் பக்கம் தலை காட்ட போயிருந்தான்.

திருமணத்திற்கு பின் அவனில்லாத முதல் பகல் பொழுது, மதிய உணவுக்கு வந்திருந்தாலும் உடனே சென்றிருந்தான். ஆகவே அவனது வரவை அவளின் மனம் ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டே இருந்தது.

அவனோடு கூடியிருந்த பொழுதுகள் அவள் முகத்தில் ரகசிய சிரிப்பை வரவழைத்தது. சாந்தி முகூர்த்தம் அன்று அயர்வில் இவள் உறங்கிப் போய் விட்டாள். அதிகாலையில் விழித்தவள் தன்னருகில் படுத்திருந்தவனை குற்ற உணர்வோடு பார்த்துக் கொண்டே எழுந்து ஓய்வறை சென்று விட்டு வர அவனும் எழுந்திருந்தான்.

எதுவும் செல்லாமல் அவன் குளித்து விட்டே வர, “சாரிங்க” என்றாள் அவள்.

“எது எந்த நேரத்துல நடக்கணும்னு விதிச்சிருக்கோ அப்போதான் நடக்கும் அனு” என சொல்லி அவனுடன் இழுத்துக் கொண்டவன்தான்.

அவளது ஆடைகளை திருடியவன் முத்தங்கள், வெட்கங்கள், தயக்கங்கள் என அனைத்தையும் திருடி இறுதியில் அவளையும் எடுத்துக் கொண்டான்.

இனிய அயர்வோடு அவன் மார்பில் ஒன்றிப் போய் படுத்திருந்தவள், “எப்படிங்க ஆரம்பிச்சது, எப்படி உங்களோட…” வாக்கியத்தை நிறைவு செய்யாமல் வெட்கமும் கேள்வியுமாக அவன் முகத்தை பார்த்தாள்.

“இப்படித்தான்…” என அவன் செயல்களில் காட்டியதும் மீண்டும் அவள் மயங்கியதும்… அந்த நாளின் நினைவில், “திருடன்!” என இப்போது வாய் விட்டே செல்லமாக திட்டியவள், பேக் செய்திருந்த ஆடையை கப்போர்டில் வைத்து விட்டதை உணர்ந்து தலையில் தட்டிக் கொண்டு சிரித்தாள்.

தங்கையை பார்த்து விட்டு அசோக் கிளம்ப, “என் கார் சர்வீஸ்க்கு போயிருக்குடா, உன் கார் வேணும், உன்னை வீட்ல ட்ராப் பண்ணிடுறேன், கடை வரைக்கும் போகனும் நான்” என விதுரனும் அவனுடன் கிளம்பினான்.

“சாப்பிட்டு போங்க” என்றாள் நிரஞ்சனா.

“அதுவும் சரிதான், நீயும் சாப்பிட வா” என நண்பனையும் அழைத்தான் விது.

“இல்லை பசியில்லடா, நீ மெதுவா கடைக்கு போயிக்க, உன் கார் வர்ற வரை என்னோடது இங்கேயே வச்சுக்க. நான் நடந்து போயிக்கிறேன்” என அசோக் சொல்லவும் கிண்டலாக சிரித்தான் விது.

“டேய் போடா!” என சின்ன வெட்கத்தோடு சொன்னான் அசோக்.

அண்ணனை மகிழ்ச்சியாக பார்த்திருந்த நிரஞ்சனா, “அண்ணனை வீட்ல விட்டுட்டு சாப்பிட வாங்க” என கணவனிடம் சொன்னாள்.

“பக்கத்துல இருக்க வீடுதானே, அவன் சாப்பிட்டு கிளம்பட்டும்” என சொல்லி நடந்தே புறப்பட்டு விட்டான் அசோக்.

பத்து நிமிடங்கள் நடந்தால் அவனது வீடு வந்து விடும். இப்போது அந்த பத்து நிமிடங்கள் பல மணி நேரம் போல மலைப்பை தர, மனைவியை பார்க்கும் ஆவலில் காரிலேயே போயிருக்கலாம் என தோன்றியது. இப்படியான சிறு பிள்ளைத்தனமான தன் எண்ணவோட்டத்தை நினைத்து சிரித்துக் கொண்டே நடந்தான்.

அனன்யாவின் கழுத்தில் தாலி அணிவித்த அந்த நொடி, அவனுள் ஏற்பட்ட அந்த பரவசம் இப்போதும் அவனால் உணர முடிந்தது. தன் கைத்தாலியை அவள் ஏற்றுக்கொண்ட அந்த கணத்தில் கலங்கிய அவளின் கண்களும் துடித்த அவளது இதழ்களும் பின் அவளிடம் முகிழ்ந்த அந்த சிறு புன்னகையும் அவனது மனதில் பதியம் போட்ட காட்சியாக பதிந்திருந்தது.

ஒரு வார காலமாக அவளுடன் இருக்கிறான்தானே? தன் மீது அவளுக்கு எத்தனை ஆசை, மயக்கம் என்பதை எல்லாம் அனுபவித்து உணர்கிறானே?

அளவுக்கு மீறி தன்னை ஒருத்தி விரும்புகிறாள் என்பதும் தன் மீது அவள் அத்தனை காதல் வைத்திருக்கிறாள் என்பதும் அவனது உள்ளத்தை விம்ம வைத்தது.

இத்தனை அழகானதா வாழ்க்கை? அவள்தான் என் வாழ்க்கையை அழகாக்கினாள் என்ற நினைவோடு அவளுக்கு அழைத்தான்.

அழைப்பு ஏற்கப் பட்டதுமே, “இன்னும் லேட் ஆகுமா?” எனதான் ஏக்கத்தோடு கேட்டாள்.

“ம்… ஆமாம் அனு, நிரூவை பார்த்திட்டு திரும்ப ஆஃபீஸ் போக வேண்டியதாகிடுச்சு. ஒரு மணி நேரத்துல வந்திடுவேன்” என்றவனுக்கு அங்கே அவளின் முகம் சுருங்குவதை இங்கே உணர முடிந்தது.

“இதை சொல்லத்தான் கூப்பிட்டீங்களா?” எனக் கேட்டாள்.

“ஆமாம், அப்படியே உன்கிட்ட பேசணும் போல இருந்தது”

“பேசுற நேரத்துல சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வாங்க”

“வேலை பார்த்திட்டே இருக்கேன், பேசிட்டே இருந்தீனா சீக்கிரம் முடிச்சிடுவேன்”

“பேசிட்டே எப்படி வேலை பார்ப்பீங்க? லேட்தான் ஆகும், நான் வைக்கிறேன்” என்றவள், குரலை குழைத்து “சீக்கிரம் வாங்க” என சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அறைக் கதவை திறந்து கொண்டு அவன் வந்து தன் முன்னால் நிற்கவும் மலர்ந்த முகத்தோடு அவனை நெருங்கி அணைத்துக் கொண்டாள்.

அவனும் அணைத்துக் கொண்டவன், “எப்படி சீக்கிரம் வந்தேனா?” எனக் கேட்டான்.

“ம்ம்… நான் வர சொன்னதும் எப்பவும் இப்படி வந்து நின்னா நல்லாதான் இருக்கும்” என்றாள்.

“அப்போ இன்னிக்கு மாதிரியே வீட்டுக்கு பக்கத்துல நான் இருக்க நேரமா பார்த்து வர சொல்லு” என்றான்.

“எனக்கு தெரியும் நீங்க விளையாடுறீங்க, சீக்கிரம் வந்திடுவீங்கன்னு”

“ம்ஹூம்? எப்படி அனு?”

“எனக்கிருக்க ஸேம் ஃபீலிங்ஸ்தானே உங்களுக்கும் இருக்கும்?”

“அப்படியா? எனக்கு எந்த ஃபீலிங்ஸும் இல்லியே, உனக்கு என்ன ஃபீலிங்ஸ்?” என அவன் கேட்க, அவனிடமிருந்து செல்லக் கோவத்தோடு விலகியவள், படுக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.

“டின்னர் இன்னும் முடிக்கல, அதுக்குள்ள பெட்’க்கு கூப்பிடற” என சொல்லிக் கொண்டே அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான்.

“இன்னிக்கு அதெல்லாம் ஒன்னும் இல்லை, காலைல சீக்கிரம் எழுந்திரிக்க முடியாது. சாப்பிட்டு தூங்கிடலாம்” என கண்டிப்போடு சொன்னாள்.

“இதான் உன் ஃபீலிங்ஸா அனு?”

“ம்ம்… எனக்கு இப்படி உங்க பக்கத்துல…” என்றவள் அவனை கட்டிக் கொண்டு, “இப்படி இருந்தா போதும்” என்றாள்.

“இந்த மஞ்சக் காட்டு மைனா என் பக்கத்துல இப்படி இருந்தா ஒன்னும் பண்ணாம…” என்றவன் குரலை இழுத்து, “ஒன்னுமே பண்ணாம… தூக்கம் எங்கேருந்து வரும் எனக்கு?” எனக் கேட்டான்.

“லேட்டா தூங்கினா எந்திரிக்க முடியாதுங்க”

“எவடி இவ? எனக்கு தூக்கமே வராதுங்கிறேன்” என்றவன் அவளை படுக்கையில் சாய்த்தான். அடுத்து வந்த சில நிமிடங்கள் தங்களை மறந்து போயிருந்தனர் இருவரும்.