அத்தியாயம் -13(3)
மாடியேறும் போது அசோக்கின் இடுப்பை கிள்ளிய சமரன், “ஜுரம் கண்ட சொங்கி ஒருத்தன் சுத்திகிட்டு இருந்தான் பார்த்தியாடா புது மாப்ள?” என கிண்டல் செய்தான்.
“நான்தான் புது மாப்ளன்னு காதல் கால் கிலோ என்ன விலைன்னு கேக்குற காக்கி சட்டைக்கு தெரிஞ்சா சரிதான், போடா” என சொல்லி நண்பனின் பிடரியில் தட்டினான் அசோக்.
அவர்களை தேடிக் கொண்டு வந்த விது, “அடச்சீ, எல் கே ஜி பசங்க கணக்கா கை நீட்டிக்கிட்டு என்னடா பழக்கம் இது? என்னை மாதிரி டென்ஷன் பண்ணாம கல்யாணம் பண்ணாம எப்ப என்னாகுமோன்னு டென்ஷன் பண்ணியே கல்யாணம் பண்ணிக்கிறது, எனக்குன்னு வந்து வாச்சீங்களே! வந்து தொலைங்கடா” என செல்ல சிடு சிடுப்போடு சொல்லி அவர்களின் நடையை துரிதப் படுத்தினான்.
லதாவும் ஸ்ருதியும் அனன்யாவை அழைத்துக் கொண்டு மாடிக்கு வந்தனர். நிச்சயப் பத்திரிகை போலவே எழுதி வாசித்து விட்டார் செல்வராஜ். அவரே கையில் தட்டு எடுக்க, தள்ளி நின்றிருந்த புகழேந்தி அப்படியே நின்றிருந்தார்.
செல்வராஜ் விதுரனுக்கு கண் சாடை காட்ட அவன் போய் புகழேந்தியை கையை பிடித்து அழைத்து வந்தான். சபை நாகரீகம் என்பதை விட மகன் விஷயத்தில் மறுப்பு சொல்லி முறுக்கிக் கொள்ள மனமில்லாமல் அவரே தட்டை வாங்கி மனைவியையும் அருகில் நிறுத்திக் கொண்டார்.
பெண் தரப்பில் கண்ணப்பனும் அவரது மனைவியும் தட்டை வாங்கிக் கொண்டனர். பாக்யாவின் நாத்தனார் வீட்டில் இறுதி நேரத்தில் சொல்கிறீர்கள் என கோவம் கொண்டு வரவில்லை. பாக்யாவும் பின்னர் சமாதானம் செய்து கொள்ளலாம் என விட்டு விட்டார்.
அசோக்கையும் அனன்யாவையும் அருகருகே அமர வைத்தனர். பெண்ணுக்கு பூ வைத்து விட்டு கழுத்துக்கு நகை போட்டு விட்டாள் நிரஞ்சனா. அனைவரும் நலங்கு செய்தனர்.
அப்போதும் புகழேந்தியை இழுத்து வர வேண்டியதாக இருந்தது, ஆனால் மறுக்காமல் நலங்கு செய்து ஆசீர்வதித்தார். மகனிடம் தெரிந்த மகிழ்ச்சியில் அவரும் உள்ளுக்குள் நெகிழ்ந்து போனார், ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
அசோக், அனன்யா இருவரும் அனைவருக்கும் பொதுவாக விழுந்து வணங்கி ஆசி பெற்று எழுந்தனர்.
அப்போதுதான் நினைவு வந்தவராக, “மோதிரம் மாத்திக்கட்டும் ரெண்டு பேரும்” என்ற செல்வராஜ் தான் வாங்கி வந்திருந்த மோதிரங்களை எடுத்தார்.
அசோக்கின் முகத்தை பார்த்து விழித்தாள் அனன்யா. அவனும் மழுப்பலாக சிரித்துக் கொண்டே விழிக்க, “அதெல்லாம் எப்பவோ மாத்திகிட்டாங்க, என்னை கேட்காம ஏம்ப்பா வாங்குனீங்க?” என அப்பாவின் காதில் சொன்னாள் ஸ்ருதி.
சங்கடமாக அனைவரையும் பார்த்த செல்வராஜ், “இன்னொரு கை சும்மாதானே இருக்கு, வாங்கின வரை மாத்திக்கோங்க, அப்புறம் கழட்டி வச்சிடலாம்” என்றார்.
“சும்மா என்ன மாமா எல்லாருக்கும் மோதிரம் வாங்குறீங்க, செயின் வாங்கிட்டு வந்து மாத்திக்க சொல்லியிருக்கலாம்தானே?” என்றாள் நிரஞ்சனா.
“ஏன் உன் அடுத்த பர்த்டேக்கு செயின் வேணுமா?” என ஸ்ருதி கேட்க, “அதெல்லாம் போன வருஷமே வாங்கியாச்சு. இந்த வருஷம் பெருசா ஏதாவது கேட்பேன், என் மாமா நான் வாங்கிப்பேன், உனக்கென்ன?” என்றாள் நிரஞ்சனா.
சமரனும் விதுரனும் சலிப்பான சிரிப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே தங்கள் மனைவிகளை தங்களிடம் இழுத்து நிறுத்திக் கொண்டனர்.
அசோக்கும் அனன்யாவும் பெரியவர்கள் முன்னிலையில் மீண்டும் ஒரு முறை மோதிரம் மாற்றிக் கொண்டனர். ஜோடிப் பொருத்தத்தை கண்டு மனதிற்குள் திளைத்தார் விஜயா. தன் மகனின் வாழ்வு மலர்ந்து விட்டதே என இறைவனுக்கு நன்றி சொன்னார்.
இரண்டு பந்திகளில் இளையவர்கள் தவிர அனைவரும் சாப்பிட்டு விட்டனர். கடைசி பந்தியில் அசோக், சமரன், விதுரன், மணிகண்டன் ஆகிய நால்வரும் அவரவர் இணைகளுடன் சாப்பிட அமர்ந்தனர்.
கிண்டல் கலாட்டாக்களில் புரையேறிக் கொள்ளாமல் எப்படி உண்டு முடித்தனர் என்பது பெரிய ஆச்சர்யத்திற்குரிய விஷயம்தான்.
புகழேந்திக்கு அங்கு பொருந்தி இருக்க முடியவில்லை, தங்கை இந்த சின்ன குடித்தனத்தில் இருக்கிறாளே எத்தனை கஷ்டம் அனுபவித்திருப்பாள், இத்தனை வருடங்களாக அப்படி என்ன சாத்தான் வந்து புகுந்திருந்தது என் மனதில்? கஷ்ட காலத்தில் துணை நிற்காமல் போனேனே என்ற குற்ற உணர்வும், சரி செய்ய முடியுமா நான்? எதுவும் செய்தால் ஏற்றுக்கொள்வாளா எனவும் சிந்தனையுமாக இருந்தார்.
தன் அக்காவின் கணவரை கவனித்துக் கொண்டே இருந்த செல்வராஜ், சமரனின் வீடு சென்று ஓய்வெடுக்கலாம் என அழைக்க, “வேணாம் நான் கிளம்பறேன்” என நின்றார். அவர் மட்டும் தனியாக சென்றால் நன்றாக இருக்காது என்பதால் விஜயாவையும் அவரோடு அனுப்பி வைத்து விட்டார்.
செல்வராஜும் லதாவும் தங்கள் பேரனோடு மகள் வீட்டுக்கு சென்று விட்டனர். இரவில்தான் மதுரை புறப்படுவதாக ஏற்பாடு.
கண்ணப்பனும் அவரின் குடும்பத்தினரோடு கிளம்பி விட்டார். பாக்யா அறையில் ஓய்வாக படுத்து விட்டார்.
மாடியில் சாப்பாடு முடிந்து புகைப்படம் எடுக்கும் படலம் ஆரம்பமாகியிருந்தது.
“ஒரு ஃபோட்டோகிராஃபர் வரவச்சு எடுக்கிறது விட்டுட்டு ஏன்டா இப்படி?” கேமராவும் கையுமாக நின்ற விதுரனிடம் கேட்டான் சமரன்.
“சும்மா பொண்ணு பார்க்கன்னு என்கிட்ட சொல்லிட்டு எங்கேஜ்மெண்ட்டையே முடிச்சிட்டாங்க, தெரிஞ்சிருந்தா கூட்டிட்டு வந்திருக்க மாட்டோமா?” எனக் கேட்ட விது, மணமாக போகும் இளஞ்ஜோடியை ஒன்றாக நிற்க சொன்னான்.
இப்படி நில் அப்படி நில் என விது அவர்களை வெட்கப்பட வைத்து ஒரு வழி செய்தான். அசோக்கை அனன்யாவின் பக்கவாட்டு பகுதியில் நெருங்கி நிற்க சொன்னான் விது. வெட்கப்பட்டுக் கொண்டே அவ்வாறு நின்றனர்.
அனன்யாவின் அருகாமையில் தன்னிலை மறந்த அசோக் மனதை அடக்க இயலாமல் அவளின் கன்னத்தோடு கன்னம் உரச, அவள் சங்கடமாக விலக தலையில் தட்டிக் கொண்டே அனைவருக்கும் முதுகு காண்பித்து திரும்பிக் கொண்டான்.
கேமராவால் தலையில் தட்டிக் கொண்ட விது வேறெங்கோ பார்த்து சிரிக்க, “அவங்கள வெட்க பட வச்ச உன்னையவே வெட்க பட வச்சான் பாரு அங்க நிக்கிறான்டா அசோக்” என கிண்டல் செய்தான் சமரன்.
அங்கிருந்து எப்படி தப்பிக்க என மிரண்டு போனாள் அனன்யா.
“புலிய மான் ஆக்காதீங்க ப்பா” என சொல்லிக் கொண்டே வந்து நின்று ஸ்ருதிதான் நிலைமையை சமாளித்து நிச்சயமானவர்களை வித விதமாக புகைப்படம் எடுக்க உதவினாள்.
நிரஞ்சனா கணவனின் காதில் ஏதோ சொல்ல, சமரன் ஸ்ருதி மற்றும் மணிகண்டன் அவந்திகா ஜோடிகளையும் புகைப்படம் எடுக்கிறேன் என மொட்டை மாடியை வெட்க மாடியாக மாற்றினான் விது.
ஐயையோ ஆளை விடுங்கள் என மனைவியோடு கீழே ஓடி விட்டான் மணிகண்டன்.
ஸ்ருதி தன் கணவனிடம் ரகசியமாக ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, தங்களுக்குத்தான் ஸ்கெட்ச் போடுகிறாள் என புரிந்து கணவனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு கீழே சென்று விட்டாள் நிரஞ்சனா.
“நாமளும் போலாம் க்கா” என்றாள் அனன்யா.
“நாங்க போறோம் அனன்யா, நீங்க கொஞ்ச நேரம் கள்ளக்காதல் பண்ணிட்டு வாங்க” என ஸ்ருதி சொல்ல, “அக்கா!” என அலறினாள் அனு.
சமரன் தலையில் அடித்துக் கொண்டே பேயறைந்தது போல நின்றிருந்த அசோக்கிடம், “கல்யாணத்துக்கு முன்னாடி கள்ளத்தனமா லவ் செய்றதைதான் இப்படி உளறிட்டா” என விளக்கம் சொன்னான்.
“ஆமாம், ஹைபர் ஆகி உளறிட்டேன்” என அசடு வழிந்தாள் ஸ்ருதி.
“ம்ம்… சொல்லிட்டு இங்கேயே நிக்க கூடாது, வா நாம போவோம்” என சொல்லி மனைவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டான் சமரன்.
“அச்சோ யாருமே இல்லை, நாமளும் போயிடலாம்” என்றாள் அனன்யா.
அவள் கையை பிடித்துக் கொண்ட அசோக், “ரொம்ப நேரமா நினைச்சிட்டே இருந்தேன், இப்போதான் நேரம் வாய்ச்சிருக்கு” என சொல்லி அவளின் காதோரமாக, “திருஷ்டிக்காக வச்சு விட்டேன், அது கூட அழகா இருந்தா என்ன செய்வேன்?” எனக் கேட்டு காது மடலுக்கு கீழே அவன் வைத்து விட்ட திருஷ்டி பொட்டுக்கு பக்கத்தில் முத்தமிட்டான்.
அவனை நேராக பார்த்தவள் தோள்கள் இரண்டிலும் கை வைத்து எம்பி அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.
அவர்களின் அடுத்த முத்த பரிமாற்றத்தில் செவ்வானம் வெட்கி சிரித்தது.