அத்தியாயம் -13(2)
அடுத்த நாள் காலை பதினோரு மணி அளவில் பாக்யாவின் வீட்டிற்கு வந்து விட்டனர் அசோக் குடும்பத்தினர். வீட்டில் இட வசதி இருக்காது என்பதால் மாடியில் ஷாமியானா பந்தல் போட்டு ஏற்பாடு செய்திருந்தான் சமரன். அனைவரும் நேராக மாடிக்குத்தான் சென்றனர்.
அறையில் ஸ்ருதியும் அவந்திகாவும் சேர்ந்து அனன்யாவுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.
இதுவரை நிரஞ்சனா அனன்யாவை கண்டது இல்லையே, ஆகவே தன் வருங்கால அண்ணியை காண அண்ணனை துணைக்கு அழைத்தாள்.
“இப்ப எப்படி வர்றது நிரூ? நீ போய் பாரு, ஸ்ருதி அங்கதான் இருக்கா போல” என அசோக் சொல்லியும் கேளாமல், “நீ வந்து இன்ட்ரோ கொடு” என சொல்லி அண்ணனை கீழே வர சொல்லி இழுத்தாள்.
பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, எப்படி அவர்களை கடந்து செல்ல என தயங்கினான் அசோக். சமரனும் விதுரனும் தாங்கள் சமாளித்துக் கொள்வதாக சொல்லி அவர்களை கீழே அனுப்பி வைத்தனர்.
பாதி திறந்திருந்த அறைக் கதவை தட்டினான் அசோக். எட்டிப் பார்த்த ஸ்ருதி, “பொண்ணை காட்ட மாட்டோம், போ இங்கேருந்து” என பொய்யாக அதட்டல் போட்டாள்.
சிறு சிரிப்புடன் அசோக் உள்ளே வர, “நீ என்ன காட்டுறது, நாங்களே பார்த்துப்போம்” என சொல்லிக் கொண்டே அண்ணனின் பின்னால் வந்தாள் நிரஞ்சனா.
நீல வண்ண பட்டுப் புடவையில் அலங்காரத்தில் கண்களை பறிக்கும் அழகோடு இருந்தாள் அனன்யா. அவளது புடவையின் வண்ண சட்டை அணிந்து அதே நிற கரை கொண்ட வேஷ்டி அணிந்திருந்தான் அசோக்.
தங்கையை அனன்யாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் சாதாரணமாக பேசிக் கொண்டனர்.
ஸ்ருதி ஏதோ அவனிடம் கேட்க, அவனது பார்வையோ மனம் விரும்புவளிடம் மட்டுமே இருக்க பதிலே சொல்லவில்லை அவன்.
ஸ்ருதி இடுப்பில் கை வைத்து அவனை முறைக்க, கேலியாக சிரித்தாள் நிரஞ்சனா.
அனன்யா கண்களால் அவனை கண்டிக்க, சுற்றம் உணர்ந்தவனுக்கு மற்ற பெண்கள் முன்னிலையில் தடுமாறாமல் இயல்பாக நிற்கவே பெரும் பாடாகிப் போனது.
அனன்யாவையும் அவளை கண்ட பின் அண்ணன் முகம் ஜொலிப்பதையும் கண்ட நிரஞ்சனாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“கண்ணாலேயே முழுங்காத அசோக்” என ஸ்ருதி கிண்டல் செய்ய, “ஹையோ அங்க மட்டும் என்னவாம் ஓரக் கண்ணாலேயே என் அண்ணனை காலி பண்ணிட்டு இருக்காங்க” என்றாள் நிரஞ்சனா.
“பொண்ணை தேடி நீங்கதான் வந்தீங்க, நாங்க ஒன்னும் உன் அண்ணனை தேடி வரலை” என்றாள் ஸ்ருதி.
“யார் சொன்னா? என் அண்ணனை பார்க்கணும்னு இங்க வர சொன்னதே உங்க பொண்ணுதான். போனா போகுது, பொண்ணு மூக்கால அழுகுதேன்னு வந்தோம் நாங்க” என்றாள் நிரஞ்சனா.
“உன் அண்ணனுக்குத்தான் சளி காய்ச்சல் இருமல்னு மூக்கால ஊத்துது, எங்க பொண்ணு கன் பாடி” என்றாள் ஸ்ருதி.
“ஓ கன் பாடியாமில்ல! ஏது ஏகே 47ஆ இல்லை…” என்ற நிரஞ்சனாவுக்கு வேறு ரக துப்பாக்கிகளின் பெயர்கள் நினைவு வராமல் உதவிக்கு அண்ணனை பார்த்தாள்.
“போதும் நிரூ, இத்தோட உங்க ‘நீயா நானா’ ஷோவை முடிங்க. உங்க போட்டியில நானும் அனுவும்தான் டேமேஜ் ஆகுறோம்” என்றான் அசோக்.
“என்ன நாத்தனாரே உங்க தோல்வியை ஒத்துக்குறீங்களா? பொண்ணுதான் கெத்துன்னு சொல்லிட்டு தோப்புக்கரணம் போட்ருங்க. விட்டிடுறோம்” என்றாள் ஸ்ருதி.
விளையாட்டு பேச்சுதான் என்றாலும் முகத்தை சுருக்கினாள் நிரஞ்சனா. நிலவரம் கலவரம் பக்கம் போவதை உணர்ந்த அசோக், “நாம போலாம் நிரூ” என்றான்.
“போண்ணா” என சொல்லி நிரஞ்சனா வெளியேற போக, “உன்னை தேடுறாங்க டா அசோக், டைம் ஆகுது பார், வா” என வந்து நின்றான் சமரன்.
சமரனை பார்த்த நிரஞ்சனா, “கன்ஸ் பேர் எல்லாம் சொல்லு, சீக்கிரம்” என்றாள்.
“ஏன் நிரஞ்சனா?” என அவன் குழப்பமாக கேட்க, ஸ்ருதி நமட்டு சிரிப்போடு பார்த்திருந்தாள். ஏதோ விளையாட்டு போல என நினைத்தவன், “பிஸ்டல், ரிவால்வர், மெஷின் கன்…” என வரிசையாக சொல்லிக் கொண்டே போக, “ஐயோ இத்தனை சொன்னா எப்படி, மறந்து போகுது” என்றாள் நிரஞ்சனா.
“அடியே அண்ணி! போதும், விளையாட்ட வினை ஆக்காத. விடு” என ஸ்ருதி சொல்ல, விடாமல் நிரஞ்சனா முறுக்கிக் கொண்டு பேச, இப்போது ஸ்ருதியும் புடவை முந்தானையை அள்ளி சொருகிக் கொண்டு பேசலானாள்.
இரண்டு பெண்களையும் எப்படி சமாளிக்க என சமரன் விழிக்க, அவந்திகா வேடிக்கை போல பார்த்திருந்தாள்.
திடீரென சமரன், “ஏய் எங்க பொண்ணையும் மாப்பிள்ளையையும் காணோம்?” எனக் கேட்ட பின்னர்தான் இரு பெண்களின் வாய்களும் ஓய்ந்தன.
அறையிலிருந்து வெளியேறிய சமரன் அவர்களை தேட பின்கட்டிலிருந்துதான் பேச்சுக்குரல் கேட்டது.
“இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாம…” என சிரிப்போடு சலித்துக் கொண்ட சமரன் யாரையும் அவர்களிடம் விடவில்லை.
“டைம் ஆகுதுன்னு நீதான சொன்ன?” என்றாள் நிரஞ்சனா.
“ஆனா ஆகுது, போ மேல போய் சமாளி, இவங்கள ஸ்ருதியும் நானும் அழைச்சிட்டு வர்றோம்” என சொல்லி மற்ற இரண்டு பெண்களையும் மேலே அனுப்பி விட்டான்.
“என்ன சமர் இது?” என கடிந்தாள் ஸ்ருதி.
“இதெல்லாம் ப்ரீஸியஸ் மொமெண்ட்ஸ் ஸ்ருதி. நண்பனா இது என்னோட கடமை” என அவன் சொல்லவும் முறைப்பும் சிரிப்புமாக தள்ளிப் போய் அமர்ந்து கொண்டாள் ஸ்ருதி. சமரனும் தள்ளிப் போய் மனைவியின் அருகில் நின்று கொண்டான்.
“தேட போறாங்க அசோக், போலாம்” என சொல்லிக் கொண்டிருந்தாள் அனன்யா.
“ம்ம்… எவ்ளோ அழகு, நான் தனியா ரசிக்காம போனா இந்த அழகுக்கு என்ன மதிப்பு இருக்கு சொல்லு?” எனக் கேட்ட அசோக், ஒற்றை விரல் கொண்டு அவளின் முகத்தை தொட நெருங்கினான்.
அவள் ஓரடி பின்னடைய, “ஹும்… ரொம்பத்தான், இப்ப போய் என்ன பண்ணிடுவேன்?” எனக் கேட்டான்.
கோவப் பட்டு விட்டானோ என அனன்யா தவிப்பாக பார்க்க, அப்படியெல்லாம் இல்லை, சாதாரணமாகத்தான் இருந்தான்.
“ஆச்சுவலி என்னென்னமோ செய்யதான் தோணுது. சூழ்நிலை கையையும் வாயையும் கட்டிப் போட்டுடிச்சு” என்றான்.
வாய் ஓயாது பேசும் தன்மை கொண்ட அனன்யா பேச்சு வராமல் வெட்கம் கொண்டு தலை தாழ்த்தி நின்றாள்.
ஒரு கையால் அவளது முகத்தை நிமிர்த்தி, இன்னோரு கையின் விரல் கொண்டு அவளது கண் மையிலிருந்து கொஞ்சம் எடுத்தவன், கன்னத்தில் வைக்க போனான்.
“ஸ்ருதி அக்காக்கு தெரிஞ்சு போகும், ஓட்டியே ஒரு வழி பண்ணிடுவாங்க” என சிணுங்கினாள்.
“சரி யாரும் அவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாத இடத்துல வச்சி விடுறேன்” என்றவன் அவளது காது மடலுக்கு கீழ் திருஷ்டி பொட்டு வைத்தான்.
“எல்லாரும் பார்க்கிற மாதிரிதான் திருஷ்டி பொட்டு வைப்பாங்க” என கிண்டலாக சொன்னாள்.
“ம்ம்… அது நீ வச்சுக்க. இது என் கண் படாம இருக்க. இந்த பொட்டு எனக்கு தெரியும்” என்றான்.
சமரனின் கைப்பேசி சத்தமிட்டது. நிரஞ்சனாதான், “இதுக்கு மேல சமாளிக்க முடியாது, அழைச்சிட்டு வா” என்றாள்.
சமரன் அப்போதும் அவர்களை அழைக்காமல் போக, கணவனை முறைத்து விட்டு எழுந்தாள் ஸ்ருதி. மனைவியை தடுத்தவன், “உரிமையா லவ் பண்றது எப்பவும் செய்யலாம், இப்படி கள்ளத்தனமா இப்ப செஞ்சாதானே ஸ்ருதி? அவனா அழைச்சிட்டு வருவான். நீ வேணா வா, நாமளும் லவ் பண்ணுவோம்” என்றான்.
“நாம லவ் பண்றோம்தானே சமர்?” எனக் கேட்டவளை அருகில் இழுத்தவன், “இப்படி கள்ளத்தனமா செய்யணும்” என சொல்லி, வேகமாக அவளின் இதழ்களில் இதழ்களால் தீண்டி விடுவித்தான்.
அசோக்குடன் வந்த அனன்யா சமரனையும் ஸ்ருதியையும் கண்டு விட்டு அவர்களை எதிர்கொள்ள வெட்கப்பட்டு அசோக்கின் முதுகின் பின்னால் மறைந்தாள். ஸ்ருதி அவளுக்கு முன் சமரனின் முதுகின் பின் ஒளிந்திருந்தாள்.
நண்பர்கள் இருவரும் அசடு வழிய சிரித்துக் கொண்டனர். சமரன் தலையை கோதிக் கொள்ள, அசோக் வலது கையால் இடது பக்க தோளை தடவிக் கொண்டே வேறெங்கோ பார்த்தான்.
“என்ன செய்றீங்க? பாரு ஜிவினே அழ ஆரம்பிச்சிட்டான்” என சொல்லிக் கொண்டே வந்த லதா, நால்வரின் முகங்களையும் பார்த்து விட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே பேரனை மகளின் கையில் தந்தார்.
“அசோக்கை அழைச்சிட்டு போ சமர், நாங்க அனன்யாவை அழைச்சிட்டு வர்றோம்” என சொல்லி ஆண்களை மேலே அனுப்பி வைத்தார்.