என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -13
அத்தியாயம் -13(1)
இப்படி ஒருவர் மற்றவரின் அணைப்பிலேயே இருந்து விட மாட்டோமா எனதான் காதலர்கள் இருவருக்கும் ஆசை. அத்தகைய உரிமை இன்னும் கிடைக்கவில்லையே. அசோக்தான் அவளிடமிருந்து முதலில் விலகினான்.
“ஒரு ஜுரத்துக்கு இப்படி ஆள் மாறிப் போயிட்டீங்களே?” என கவலையாக கேட்டாள் அனன்யா.
“ஜுரத்தால எந்த பாதிப்பும் இல்லை, நீ கூட இல்லன்னுதான்” என்றவன் அவளது கையை பிடித்துக்கொண்டான்.
“உங்கப்பா என்னதான் சொல்றார்?” எனக் கேட்டாள்.
தன் அப்பா சொன்னதை மறைக்காமல் சொன்னவன், “இவ்ளோ தூரம் வந்தவர் இன்னும் கொஞ்சம் நம்ம பக்கம் வந்திடுவார்னு நம்பிக்கை இருக்கு. பார்ப்போம்” என்றான்.
“அதான் ஒத்துக்கிட்டாரே, கல்யாணம் பண்ணிப்போம்” என்றாள்.
“ஏய் என்ன சொல்ற? அவர் என்ன சொன்னாருன்னு உனக்கு புரியலையா? அவர் நடத்தி வைக்காம நாமளே கல்யாணம் பண்ணனும்னா எப்பவோ செஞ்சிருக்கலாம் அனு. கொஞ்ச நாள் பொறுமையா இரு” என்றான்.
“வருஷக் கணக்கா கூட நான் காத்திட்டு இருப்பேன். உங்களால முடியலை, உங்க கஷ்டத்தை என்னால பார்க்க முடியலை. அம்மாகிட்ட பேசிக்கலாம், எப்படியாவது கல்யாணம் நடந்தா போதும்” என்றாள்.
“நீ எனக்காக பார்த்து இப்படி சொல்றதுல சந்தோஷம் அனு. ஆனா நீ கேட்ட மாதிரி அவரே வந்து பொண்ணு கேட்டு நம்ம கல்யாணத்தை நடத்தி வைப்பார். ம்ம்ம்… வா ஃப்ரண்ட்ல பார்க்கலல்ல இன்னும், அங்க போவோம்” என சொல்லி, பின் பக்கத்திலிருந்து சுற்றிக் கொண்டு வீட்டின் முன் பக்கம் வந்தனர்.
அனன்யா வேண்டாம் என சொல்லியும் கேளாமல் அவளது கையை பிடித்துக்கொண்டே நடந்து வந்தான் அசோக்.
புகழேந்தியின் கார் உள்ளே வர, தொடர்ந்து செல்வராஜின் காரும் வந்தது. அசோக் அனன்யாவின் கையை விடவே இல்லை.
மகனை முறைத்துக் கொண்டே இறங்கினார் புகழேந்தி.
“அவரை கோவ படுத்தணும்னு முடிவு பண்ணிட்டு இப்படி நிக்கிறானாம்மா?” என மகளிடம் கேட்டுக் கொண்டே இறங்கினார் செல்வராஜ்.
“அட நீங்க வேறப்பா, அனன்யா கோவப்பட்டு மாமா மண்டைய உடைச்சி விட்டுட்டானா… அதான் அவன் அப்பா ஸேஃப்டிக்காக அவ கையை புடிச்சிருக்கான்” என அப்பாவிடம் ரகசியமாக சொன்னாள் ஸ்ருதி.
“உள்ள நாங்க பெரியவங்க பேசும் போது ஏதாவது சொல்லி வைக்காத ஸ்ருதி, உம்மேல கோவத்துல இருக்கிறவர் ஏதாவது சொல்லிடுவார், அப்புறம் நானும் அப்பாவும் கோச்சுக்கிட்டு கிளம்பிடுவோம்” என மகளை எச்சரித்தார் லதா.
ஸ்ருதி வீட்டினரை பார்த்து விட்டு, “ப்ளீஸ் விடுங்க அசோக்” என கெஞ்சலாக சொல்லி, தன் கையை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள் அனன்யா.
அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றான் அசோக். யாரிடமும் எதுவும் பேசாமல் முறுக்கிக் கொண்டு உள்ளே வந்தார் புகழேந்தி.
அண்ணனை கண்ட பாக்யா பயத்தோடு எழுந்து நிற்க, “உட்காரும்மா” என்றார் செல்வராஜ்.
பாக்யா உட்கார தயங்க, லதாவும் விஜயாவும் அவரின் ஆளுக்கொரு பக்கத்தில் வந்து நின்று அமர வைத்தனர். புகழேந்திக்கு எரிச்சலாக இருந்தாலும் மகனை நினைத்துக் கொண்டு அமைதியாக ஓரமாக கிடந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
ஸ்ருதி தன் மகனை நிரஞ்சனாவிடம் விட்டு வந்திருந்தாள். பதற்றமாக இருந்த அனன்யாவை தன்னருகில் நிற்க வைத்துக்கொண்டாள்.
“உடம்பு பரவாயில்லையா அசோக்? வா வந்து என் பக்கத்துல உட்காரு” என சொல்லி அசோக்கை தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார் செல்வராஜ்.
“நாள் போக போக அசோக்குக்கு வயசு குறைஞ்சிட்டு போகும்னு நினைக்குறீங்களா மாமா?” எனக் கேட்டார் செல்வராஜ்.
அனைவரது முன்னிலையிலும் ஏதோ தாக்குவது போல மச்சினர் இப்படி பேசுவது பிடிக்கவில்லைதான், ஆனால் அவரது கேள்வியில் உண்மை இருக்கிறதே. வள வள என பேச்சை வளர்க்க விரும்பாத புகழேந்தி, “அவன் இஷ்ட படியே நடக்கட்டும், நீங்க முன்ன நின்னு பாருங்க, இதை பேசத்தானே கூப்பிட்டீங்க. பணத்தை பத்தி கவலை படாம எல்லா ஏற்பாடும் செய்யுங்க, எனக்கு வேலை கெடக்கு” என சொல்லி எழுந்தார்.
“இப்படி பட்டும் படாம பேசாதீங்க மாமா. முதல்ல உட்காருங்க” என குரல் உயர்த்திதான் சொன்னார் செல்வராஜ்.
“சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், என்னை ஆள விடுங்க” என கோவத்தில் பட படத்தார் புகழேந்தி.
அக்கா கணவரின் அருகில் சென்று அவரை பிடித்து “அட உட்காருங்கன்னா…” என சொல்லிக் கொண்டே இருக்கையில் அமர வைத்தார் செல்வராஜ்.
எதுவும் சொல்ல முடியாமல் பற்களை கடித்துக் கொண்டும் மனைவியை முறைத்துக் கொண்டும் இருந்தார் புகழேந்தி.
“நாள் ரொம்ப தள்ள வேணாம், நாளைக்கு முறையா பொண்ணு கேட்டு வருவோம் பாக்யா. ரெண்டு மூனு தேதி குறிச்சுக்கிட்டு வர்றோம். உன் முதல் மாப்பிள்ளையை வீட்லேருந்தும் வர சொல்லு. என்னிக்கு தோது படும்னு சொன்னீனா அன்னிக்கு கல்யாணம் வச்சுக்கலாம்” என பாக்யாவுக்கு சொல்வது போல அனைவருக்கும் அறிவித்தார் செல்வராஜ்.
“நாளைக்கு தட்டு மாத்திடலாமா தம்பி?” என எடுத்துக் கொடுத்தார் விஜயா.
“ஆமாம், தட்டு மாத்தி நிச்சய பத்திரிகை மாதிரியும் எழுதிடுவோம்” என்ற செல்வராஜ், “என்ன பாக்யா சரிதானே? உன் பக்கத்திலிருந்து நாளைக்கே வர சொல்ல முடியும்தானே? பிரச்சனை இல்லையே?” எனக் கேட்டார்.
பாக்யாவுக்கு தன் கணவர் வீட்டு சொந்தங்கள் உடனடியாக வர ஏதும் சொல்லக்கூடும் என்ற கணிப்பு இருந்தது. ஆனாலும் அவர்கள் வரவில்லை என்றாலும் மூத்த மாப்பிள்ளை கண்டிப்பாக வருவார், பெண் வீட்டு சார்பில் சமரன் நிற்பான் என தெரியும். மகளின் வாழ்வுதான் முக்கியம், சொந்தங்கள் வராமல் போனாலும் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தவர் சரி என அண்ணனை பார்த்துக் கொண்டே சொன்னார்.
“உன் அண்ணனை ஏன் பார்க்கிற? அவர் ஏதும் சொல்லலைன்னா? அசோக்கோட தாய்மாமன் நான்தான், பெத்தவங்களுக்கே இல்லாத உரிமை எனக்கு இருக்கு அவன் மேல. பேருக்கு தாய்மாமன் இல்லை நான், நல்ல படியா நான் நடத்திக் கொடுப்பேன் கவலை படாத” என புகழேந்தியை இடித்து கூறுவது போல சொன்னார் செல்வராஜ்.
சத்தமில்லாமல் அங்கிருந்து எழுந்து செல்ல பார்த்தார் புகழேந்தி.
“நீங்களே நினைச்சாலும் இன்னொரு முறை உங்க தங்கச்சி கூட பொறக்க போறது இல்லை மாமா. இத்தனை வருஷம் ஆகியும் இவ்ளோ வீம்பு பார்ப்பீங்களா? ஒரு வார்த்தை நாளைக்கு வர்றோம்னு சொல்லிட்டு கிளம்புங்க” என்றார் செல்வராஜ்.
‘இவர் என்ன எனக்கு கட்டளை போடுவது, நான் என்ன அதை கேட்பது’ எனதான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றார் புகழேந்தி.
“அப்பா… எனக்காக சொல்லுங்கப்பா” என கெஞ்சலாக சொன்னான் அசோக்.
மகனின் குரலில் அவரின் உள்ளம் இளக ஆரம்பிக்க, “அப்பா…” என மீண்டும் அழைத்தான் அசோக்.
தானாக புகழேந்தியின் பார்வை தங்கையிடத்தில் சென்றது. ஆனால் உடன்பிறப்பின் கண்களை சந்திக்க முடியவில்லை. வயது கூடி ஓய்ந்து போய் தெரியும் பாக்யாவின் தோற்றம் அவரின் உள்ளத்தை நோக செய்தது. இன்று மகனுக்காக விட்டுத் தர நினைக்கும் நான் அன்று தங்கைக்காகவும் பார்த்திருந்தால் அவளும் நன்றாக வாழ்ந்திருப்பாளோ என காலம் கடந்து நினைவு வந்தது.
குரலை செருமிக் கொண்டவர், “நாளைக்கு பொண்ணு கேட்டு வர்றோம்” என சொல்லி, அவ்விடத்தில் நிற்காமல் வெளியேறி விட்டார்.
பாக்யாவுக்கு அவரை மீறி அழுகை வந்தது. அம்மாவின் பின்னால் வந்து நின்று தோள்களை பற்றிக் கொண்டாள் அனன்யா. மகளின் கையை பிடித்துக்கொண்டவர் தன்னைத்தானே திடப் படுத்திக் கொண்டார்.
“அசோக் உடம்பு இன்னும் சரியாகலையே தம்பி” என கவலையாக கேட்டார் விஜயா.
“ம்மா நான் நல்லா இருக்கேன், எனக்கு ஒன்னுமில்லம்மா” என அசோக் சத்தமாக சொல்ல, அனைவரும் சிரித்தனர். அவனும் அசடு வழிய நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டு சிரித்தான்.
அசோக்கிடம் வந்த செல்வராஜ், “என்னடா கல்யாண மாப்ள, தேதி வைக்க போறோம். அதுக்குள்ள உடம்ப தேத்து” என்றார்.
“மேரேஜ்க்கு மாமா ஓகே சொன்ன செகண்ட்டே நல்லா தேறிட்டான் ப்பா அவன்” என்றாள் ஸ்ருதி. அவளை நன்றியாக பார்த்தான் அசோக்.
“சமருக்கு அப்பா பார்த்த பொண்ணுங்க இடத்தை எல்லாம் கலைச்சு விட எவ்ளோ ஹெல்ப் பண்ணின, ஏதோ என்னால முடிஞ்சது” என ஸ்ருதி கூற, அவளையும் மருமகனையும் முறைக்க முயன்று தோற்ற செல்வராஜ் அசோக்கை செல்லமாக அடித்து சிரித்தார்.
அசோக் அனன்யாவை பார்க்க மனதின் மகிழ்ச்சி முகத்தில் பிரதிபலிக்க நின்றிருந்தாள். இரண்டு கண்களையும் சிமிட்டி, ‘அவ்வளவுதான், விரைவில் கல்யாணம்’ என பார்வையால் சொன்னான் அசோக். லேசாக தலையை மேலும் கீழுமாக ஆட்டி சிரித்தாள் அனன்யா.